http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 23

இதழ் 23
[ மே 16 - ஜூன் 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு
வரலாற்று வரைவுகள்
பழுவூர் - 11
வரலாற்றின் வரலாறு - 3
நங்கவரம் சுந்தரராஜப் பெருமாள் கோயில் கட்டமைப்பும் கல்வெட்டுகளும்
தன்னிகரில்லாத தமிழ்
Perspectives On Hindu Iconography
சத்ருமல்லேஸ்வராலயம் - I
சிகரத்தை நோக்கி...
கடல்மல்லை ஜப்பானிலிருந்தால்...
Links of the Month
சங்கச் சிந்தனைகள் - 10
இதழ் எண். 23 > இலக்கியச் சுவை
சங்கச் சிந்தனைகள் - 10
கோகுல் சேஷாத்ரி
உலகம் ஒரு மயக்கம்


ஜனகரின் சபை அறிவாளிகளாலும் தர்க்கவாதிகளாலும் என்று அழைக்கப்படவர்களாலும் நிரம்பி வழிந்தது. எள் போட்டால் எண்ணை வந்துவிடும் என்பதைப்போன்ற கூட்டம்.

ஜனகர் என்றதும் இராமாயண ஜனகரை நினைத்துக்கொண்டு விடாதீர்கள். இவர் உபநிடத கால ஜனகர். ஒரு அரசர். இராஜரிஷி. ஞானி. இவருடைய அரசவையில்தான் பல்வேறு தர்க்கங்கள் நிகழும். உண்மைகளும் ஞான தரிசனங்களும் அலசி ஆராயப்படும். பாரத தேசமெங்கிலுமிருந்த ஞானவான்கள் தேனீகளாகி ஜனகரின் சபையே தேடிச்செல்வது வழக்கம்.

ஆன்று வழக்கத்திற்கு அதிகமாகவே கூட்டம் சேர்ந்திருந்ததற்குக் காரணம் இருந்தது. ஜனகர் ஒரு தர்க்கப் போட்டி அறிவித்திருந்தார். தர்க்க வாதத்தில் ஜெயிப்பவர்களுக்கு தங்க உறையிட்ட கொம்புகளுடன் ஆயிரம் பசுக்கள் தானமாக அளிக்கப்படும்.

அக்காலத்தில் தர்க்கவாதம் என்பது மிகுந்த மரியாதையாடும் பரஸ்பர நல்லெண்ணத்தோடும் நடைபெற்றது. வாதத்தில் தோற்பவர்கள் வெற்றிபெற்றவர்களின் சீடர்களாகிவிடுவது வழக்கம். அங்கு காழ்ப்புணர்வில்லை. கசப்பில்லை. உண்மையை அறியும் நாட்டம் மட்டுமே இருந்தது. இத்தகைய விவாதங்கள் அரிய பதிவுகளாக உபநிடதங்கள் வழி நமக்குக் கிடைத்துள்ளன.

பசு என்பது செல்வம். ஆநிரைகள் நிறைய வத்திருப்பவன் அக்காலத்தில் செல்வந்தனாகக் கருதப்பட்டான். ஆயிரம் பசுக்கள் என்பது மிகப்பெரிய செல்வம்.

சலசலவென்று சப்தித்துக்கொண்டிருந்த சபை சட்டென்று மெளனமாகியது. சபையினுள் ஒரு ரிஷி தன் சீடர்களுடன் நுழைந்துகொண்டிருந்தார். யாக்ஞவல்கியர் என்பது அவர் பெயர். பாரதம் உருவாக்கிய ஞானவான்களில் தனித்துவம் மிக்கவர். உபநிடதங்களில் பக்கம் பக்கமாக இவரது ஞான ஊற்று பொங்கிப் பெருகி வழிகிறது. அக்காலத்தில் மிகவும் மதிக்கப்பட்டவர்களுள் யாக்ஞவல்கியரும் ஒருவர். ரிஷிகளும் முனிபுங்கவர்களும் கூட்டங்கூட்டமாகத் திரிந்த அந்த நாட்களிலேயே ஒருவர் பெரிதும் மதிக்கப்படுகிறாரென்றால் அவரது ஞானம் எத்துணை மதித்துப் போற்றப்பட்டிருக்கவேண்டும் ?

யாக்ஞவல்கியர் ஒரு புன்னகையுடனே சபைக்குள் நுழைந்தார். அவரை எதிர்த்து யாராவது வெற்றி பெறுவதாவது ? நடக்காத காரியம். அவர் எழுந்து நின்றாலே எதிர்வாதம் செய்ய நினைப்பவர்கள் அடங்கி அமர்ந்துவிடுவார்கள்.

ஜனகன் தந்திரமான காரியம்தான் செய்திருக்கிறான் என்று நினைத்துக்கொண்டார் அவர். நேரடியாக நமக்குப் பசுக்களை தானம் செய்தால் மற்றவர்களின் பொறாமையை அது தூண்டிவிடும் என்பதால் போட்டி என்று ஒன்றை அறிவித்து அதன் மூலம் நமக்கு தானம் செய்ய நினைக்கிறான் போலும். ஜனகா ! உன் எண்ணத்தைப் புரிந்து கொண்டேன். எனக்கும் சீடர்கள் அதிகமாகிவிட்டார்கள். இந்த ஆநிரைச் செல்வங்கள் என் ஆசிரமத்தில் நன்கு பேணப்படும். வேத வேதாந்தங்களையும் உபநிடதங்களையும் என்னிடம் கற்க பல காத தூரம் கடந்து வரும் மாணவர்களுக்கு இந்த ஆவின் பால் அமிர்தமாக இருக்கும். நீ வாழ்க !

ஆயிரம் பசுக்களை நகருக்கு வெளியில் அமைந்துள்ள ஆசிரமத்திற்கு ஓட்டிச் செல்வதென்பது சாதாரண விஷயமல்ல. இப்போதே துவங்கினால்தான் இருட்டுமுன் பசுக்களை கொட்டிலில் சேர்க்கலாம். யாக்ஞவல்கியர் சற்றே குனிந்து அவருடைய பிரதம சீடன் காதில் முணுமுணுத்தார் :
" நீ பின்கொட்டிலுக்குச் சென்று நான் சொன்னதாகக் கூறி பசுக்களை ஆசிரமத்திற்கு அழைத்துப்போக முன்னேற்பாடுகளைச் செய்யலாம் !"

அவன் பணிந்து வணங்கி அவ்விடம் விட்டு அகன்றான்.

அவர் சபையில் நுழைந்ததும் ஜனகர் உட்பட அனைவரும் எழுந்து நின்றார்கள். பணிவும் அறிவும் நிரம்பிய ஜனகரிஷி அவரை இருகரம் கூப்பி வரவேற்றார் - "ஞானமே ஓருருவெனத் திரண்டு நிற்கும் யாக்ஞவல்கிய மஹரிஷிக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள் ! தங்கள் வருகையால் இந்தச் சபை பொலிவு பெற்றது ! இதோ இந்த ஆசனத்தில் அமர வேண்டும் !"

"ஹே ராஜன் ! நீ வாழ்க ! நின் கொற்றம் வாழ்க !" என்றபடி அவரை ஆசிகூறி அமர்ந்தார் முனிவர்.

அவருடைய வருகைக்காகவே அதுவரை காத்திருந்த ஜனகர் "போட்டி துவங்கட்டும் !" என்று அறிவித்தார்.

அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன் முதல் ஆளாக எழுந்து நின்றார் யாக்ஞவல்கியர்.

"என்னுடன் போட்டியிட எவராவது விரும்புகிறார்களா ?" என்றார் புன்னகையுடன். உண்மையில் அவர் போட்டியில் கலந்துகொள்வார் என்பதை எவரும் எதிர்பார்க்கவில்லை. ஏதோ பார்வையாளராக மட்டுமே வந்திருக்கிறார் என்று நினைத்தவர்களுக்கு அதிர்ச்சி ! லேசான சலசலப்பு சபை முழுவதும் பரவியது. "யாக்ஞவல்கியரும் போட்டியில் கலந்துகொள்ளப் போகிறார் என்பதனை முன்பே அறிவித்திருக்கலாமே - காசியிலிருந்து பத்து நாட்கள் பயணப்பட்டு வந்தது வீண் விரயம் !" என்று எவரோ முணுமுணுத்துத்தார்கள்.

முற்றும் அறிந்தவரும் முற்றும் துறந்தவருமான ஜனகரின் முகத்தில் மட்டும் கடைக்கோடியில் ஒரு சிறிய புன்னகை தோன்றி மறைந்தது.

எவரும் யாக்ஞவல்கியருக்கு பதில் சொல்லவில்லை. ஒட்டு மொத்த சபையும் தலைகுனிந்து நின்றது.

"மீண்டும் கேட்கிறேன் - எவருக்காவது என்னுடன் வாதம் புரிய விருப்பமுண்டா ? எவரும் இல்லையெனில் போட்டியை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் !"

சபையின் வலது கோடியில் சிறிய சலசலப்பு மூண்டது. கூட்டத்தை பிளந்துகொண்டு ஒரு பெண்மணி முன்வந்தாள்.

யாக்ஞவல்கியர் கண்களைச் சுருக்கி அந்தப் பெண்ணை நோக்கினார்.

விரித்து விடப்பட்ட கூந்தலின் ஒரு ஓரத்தில் ஜாதிச் சரம் தொங்கியது. எளிய ஒற்றை ஆடை. மேனியில் ஒரு மினுமினுப்பு. முகத்தில்..... அடடா, அந்த முகத்தில்தான் என்னவொரு கம்பீரம் ! கண்களில் தெறித்து விழும் கூர்மை - அவளைச் சுற்றி ஒரு ஞான இருப்பு கண்ணுக்குத் தெரியாத ஒளியாய்க் கவிந்து கிடந்தது (1)

(1) இதனை ஓஜஸ் என்று சமஸ்கிருதத்தில் குறிப்பிடுவார்கள்.

அவள் கடைவாயில் புன்னகை இருந்தது. பாரதப் பெண் ஞானியரில் முதல்வளாய் மூத்தவளாய் அந்த ஞான சூரியன் எழுந்து நின்றது.

யாக்ஞவல்கியருக்கு வியப்பு கலந்த ஆச்சரியம் ! பெண்கள் சபைகளுக்கு அவ்வளவாக வராத காலம் அது. அடுப்படிக்கும் வீட்டு வேலைகளுக்குமே அவர்களுக்கு நேரம் சரியாக இருந்தது. ஒரு வேளை ஏதோ தவறுதல் காரணமாக இந்தப் பெண் முன்வந்து நிற்கிறதோ என்று நினைத்தார் ரிஷி. ஆனால் ஜனகரின் முகம் முன்பைவிட பன்மடங்கு பிரகாசித்தது. வந்திருப்பது யார் என்பது அவருக்குத் தெரிந்து விட்டது.

"அம்மணி ! சற்று முன்னால் வருக !" என்று அவளை அழைத்தார் ஜனகர். அவளை இன்னாருடைய மனைவி என்று அறிமுகம் செய்தார். அவருக்கு அந்தப் பெண்மணி முன்பே பரிச்சயமாகியிருந்தாள். கார்க்கி என்பது அவளின் பெயர்.

"கார்க்கி ! கார்க்கி !" என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டார் யாக்ஞவல்கியர். இதென்ன கூத்து ? இந்தப் பெண் நிஜமாகவே நம்முடன் வாதம்புரிய வந்திருக்கிறதா என்ன ?

ஜனகர் எழுந்தார் - "அறிவில் சிறந்த கார்க்கியே ! தங்களின் வாதத்தைத் தொடங்கலாம் !"

கார்க்கி கரம் கூப்பினாள். "கூடியுள்ள ரிஷிகளுக்கும் அவர்களில் ஒரு சூரியனாக விளங்கும் யாக்ஞவல்கிய மஹரிஷிக்கும் அடியாளின் வணக்கம் ! உண்மையில் என்னுடைய கணவரே இந்தச் சபைக்கு வருவதாக இருந்தார். அண்டுர் வருகை எதனாலோ தாமதமாகிவிட்டது. அதனால் அவருக்கு பதிலாக நான் வாதத்தில் பங்கேற்க விரும்புகிறேன்.

என்னுடைய முதல் கேள்வி - உலகம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது ?"

யாக்ஞவல்கியர் முகத்தில் பெரிதாக புன்னகை அரும்பியது. இதுதானா உன்னுடைய கேள்வி ? என்பதைப்போன்ற ஒரு பார்வை.

"அம்மா ! உலகம் இறைவனால் தோற்றுவிக்கப்பட்டது !"

கார்க்கிக்கு சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது ! அனைவருக்கும் அதிர்ச்சி - முனிபுங்கவரான யாக்ஞவல்கியர் சொன்னதற்கா சிரிக்கிறாள் ? என்ன திமிர் ? ஆனால் ஜனகரின் முகத்தில் அந்த முதல் புன்னகை இன்னும் அப்படியே இருந்தது. பொறுத்திருந்து பார் என்பதாக....

"ரிஷியே ! தாங்களாகவே இப்போது ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டுவிட்டீர்கள் ! என்னுடைய இரண்டாவது கேள்வி - உலகைப் படைத்தது இறைவன் எனில் இறைவனைப் படைத்தது யார் ?"

யாக்ஞவல்கியர் திடுக்கிட்டார் ! அப்படியொரு கேள்வி அதுவரை அவரிடம் கேட்கப்பட்டதில்லை ! சற்று நேரம் யோசித்தார்.

"அம்மா - இறைவனை யாரும் உண்டாக்கவில்லை ! அவன் தானாகவே தோன்றினான் !"

"இறைவன் தானாகவே தோன்றினான் எனின் உலகமும் தானாகவே தோன்றியிருக்கக்கூடும் அல்லவா ? உலகம் இறைவனால்தான் தோற்றுவிக்கப்பட்டது என்பதை எதை வைத்துக் கூறுகிறீர்கள் ? இறைவனை யாரும் தோற்றுவிக்கவில்லை என்பதையும் என்ன காரண காரியங்களை வைத்துச் சொல்கிறீர்கள் ?

யாக்ஞவல்கியர் தாம் மிகப் பெரிய சிக்கலில் மிக எளிதாக மாட்டிக்கொண்டுவிட்டதை உணர்த்தார். "உலகமே ஒரு மாயை ! இறைவன் படைத்த மாயத் தோற்றம்" என்று சொல்லலாமா என்று பார்த்தார். அப்போது நீங்களும் நானும் மாயத் தோற்றமா ? என்று கேட்டு வேறுபல சிக்கல்களை கார்க்கி உண்டாக்கக்கூடும் என்பதால் அந்த யோசனையை நிராகரித்தார்.

சதுரங்கத்தில் எங்கு நகர்ந்தாலும் வெட்டப்படும் நிலையிலிருக்கும் இராஜாவின் நிலையை அவர் அப்போது அடைந்திருந்தார்.

இனி வேறு வழியில்லை. மேற்கொண்டு சிக்கலில் நம்மை நாமே ஆழ்த்திக்கொள்வதற்கு பதிலாக தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். பரவாயில்லை ! யாக்ஞவல்கியன் மிகவும் புத்திசாலித்தனமான ஒரு பெண்மணியிடம் தோற்றுப்போனான் என்பதாகவே இருக்கட்டும் ! இது நமக்கு ஒரு பாடம்.

அவர் தலையைக் குனிந்து நீண்ட நேரமாக நிற்பதைக் கண்ணுற்ற ஜனகருக்கு எல்லாம் புரிந்தது. அவருடைய புன்னகை அப்படியே நிரந்தரமாக உதட்டில் தங்கியது.

உலகைப் படைத்தது யார் ? உலகின் இயல்பு என்ன ? இறைவனுக்கும் உலகிற்கும் என்ன தொடர்பு ? இறைவன் உலகைப் படைத்தானா அல்லது மனிதன் இறைவனைப் படைத்தானா ? என்பது மனித குலத்தின் ஆதிநாட்களிலிருந்து கேட்கப்பட்டுவரும் கேள்விகளாகும்.

இதனைத் தர்க்கரீதியாக எதிர்கொள்வது தவறாக முடியும். ஏனெனில் தத்துவ உலகில் ஒவ்வொரு பதிலும் மற்றொரு கேள்விக்கான வித்தாகும். ஒரு விடை ஓராயிரம் வினாக்களைத் தோற்றுவிக்கிறது. பக்கம் பக்கமாக தத்துவ நூல்களிருந்தும் சில எளிய கேள்விகளுக்குக்கூட நம்மால் திருப்தியான வகையில் விடை சொல்ல முடியவில்லை.

பகவான் புத்தர் இதுபோன்ற கேள்விக்கணைகளுக்கு பதில் சொல்வதைத் தவிர்த்தார் என்று கூறப்படுகிறது. கடவுளைப் பற்றி அவர் எதுவும் பேசவில்லை. ஏனெனில் அவரே இறைத்தன்மையின் இருப்பாக இருந்தார். கேள்வி - பதில் என்ற முடிவில்லாத சுழற்சியிலிருந்து சீடர்களை வெளியில் கொண்டுவருவதுதான் அவரது முறை. "நீயே உன் சொந்த ஞானத்தை அடைவாயாக !" என்பது அவரது உபதேசமாகும்.

சங்க காலத்திலும் இத்தகைய கேள்விகள் மனிதனின் மனத்தைக் குடைந்த வண்ணம் இருந்துள்ளன. இதற்குப் பல உவமைகளை மேற்கோள் காட்டலாம். கூரிய சிந்தனையுடையவரான தொல்காப்பியரின் மனத்தையும் இத்தகைய சிந்தனைகள் பின்னணியில் இருந்துள்ளன என்பது கீழ்கண்ட செய்யுளால் தெரிகிறது.



"நிலம், தீ, நீர், வளி, விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இரு திணை ஐம்பால் இயல் நெறி வழாஅமைத்
திரிவு இல் சொல்லொடு தழாஅல் வேண்டும்.."

(தொல்காப்பியம் / பொருளதிகாரம் - மரபியல் - எண் 1581)


இதில் மயக்கம் என்ற சொல்லாட்சி மிக அற்புதமானது. அழகானது.

பஞ்ச பூதங்களின் கூட்டுறவால் ஏற்பட்டுள்ள மயக்கமே இந்த உலகம். இது ஒரு தோற்றம். ஐம்புலக்களும் மூளைக்குக் கொண்டு சேர்க்கும் தோற்றம். ஒரு தேனியின் உலகமோ ஈக்களின் உலகமோ நாம் காண்பதைப்போல இருக்காது. ஏனெனில் அவற்றின் கண்கள் வேறு விதமாக அமைந்துள்ளன.

ஆக உலகம் வெறும் தோற்றமே. உண்மை இருப்பல்ல. ஒவ்வொரு பொருளும் அணுக்களின் கூட்டுறவு. நீங்கள், நான், மரம், செடிகொடிகள், கடல், மேகம், வானம்.... எல்லாம்....எல்லாம்..... வெறும் தோற்றங்களே. பாரதி இதனால்தான் "இவையெல்லாம் சொப்பனந்தானோ ?" என்று வியக்கிறார்.

உலகின் இந்த உண்மை இயல்பை அறிபவன் - உணர்பவன் அமைதியாகிவிடுகிறான். உலகின் சண்டை சச்சரவுகள், பூசல்கள், கோபதாபங்கள் எத்தனை முட்டாள்தனமானவை என்பது அவனுக்குப் புரிந்து விடுகிறது. ஒரு மெல்லிய மகிழ்ச்சியில் அவன் எப்போதும் புன்னகை பூத்தவனாக இருக்கிறான். அதிகத் துன்பமோ அதிக இன்பமோ அவனுக்குக் கிடையாது.

வாழ்வோடு இயைந்து சத்துவப் பாதையில் - மெதுவாக - இயல்பாக - தன்னுணர்வின் ஒளியோடு அவன் நடக்கிறான்.

இத்தகையவனை ஸ்திதப் பிரக்ஞன் என்று அழைக்கிறது பகவத்கீதை.

(மேலும் சிந்திப்போம்)

this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.