http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 82

இதழ் 82
[ அக்டோபர் 16 - நவம்பர் 17, 2011 ]


இந்த இதழில்..
In this Issue..

வாழ்க்கையா? தொழில்நுட்பமா?
சிங்கப்பெருமாள் கோயில் குடைவரை
திருவரங்கம் கோயிலில் மூன்று புதிய கல்வெட்டுகள்
செருவென்ற சோழனின் செப்பேடுகள் - 3
வ.உ.சிதம்பரனாரின் ஆளுமைத்திறன்
புத்தகத் தெருக்களில் - நானும் 'சோழநிலா'வும்
இதழ் எண். 82 > இலக்கியச் சுவை
புத்தகத் தெருக்களில் - நானும் 'சோழநிலா'வும்
ரிஷியா

"திருச்சிற்றம்பலமுடையான் பெருமான் நம்பிப் பல்லவராயன்" - முன்னொரு காலத்தில் இந்தப் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் சோழநாடு பெருமையுடன் தலை வணங்கியது; பாண்டியநாடு அமைதியாய் அடங்கியது; சிங்களநாடோ நடுநடுங்கியது. எத்தனை தமிழர்கள் இவரை அறிவார்கள் இந்நாளிலே?

பல்லவராயன்பேட்டைக் கல்வெட்டு சொல்லும் கதையை நாவலாக்கி மகிழ்ந்தவர் கவிஞர் மு.மேத்தா. அவரின் முதல் வரலாற்று நாவல்தான் "சோழநிலா". நாவல் பிறந்த கதை என்ற அத்தியாயத்தில் கவிஞர் வினவுகிறார். "கதை சரித்திரமாக இருப்பதைவிட, சரித்திரமே கதையாக இருப்பது சுவையானதுதான்". உண்மை அழகாகவும் இருப்பது உன்னதமல்லவா?"

உண்மை அழகாய் ஒளிர்ந்தது, தியாகமாய் மிளிர்ந்தது, வீரமாய் எழுந்தது அன்றொரு நாள் நம் சோழநாட்டில். பாண்டிய மண்ணில் அரியணைப்போட்டி. குலசேகரனா? வீரபாண்டியனா? கைமாறிக் கொண்டேயிருந்தது பாண்டியரின் புகழ்பெற்ற வீர அரியணை. இதில் சிங்கள அரசிற்கு 'இங்கிருந்து' தூதுபோகிறார்கள் (இன்றுபோல் அன்றும்). மீனை விழுங்குவது வெகு சுலபம். முதலில் மீனை விழுங்கிவிட்டு அடுத்துப் புலியை அடித்துக் கொல்லலாம் என்று புறப்பட்டு வருகிறார்கள் இலங்காபுரித் தண்டநாயகனும், ஜெகத்விஜயத் தண்டநாயகனும்.

தமிழ்மண்ணில் அந்நியர் தலையிடல், குறுக்கீடு, அன்று நிகழ்ந்தவை தமிழக வரலாற்றின் கறைபடிந்த பக்கங்கள். நாட்டுப்பற்று மிக்க "பெருமான் நம்பிப் பல்லவராயன்" வீரத்துடன் விரட்டியடிக்கப் புறப்படுகிறான் அந்தச் சிங்களப்படையை. நடந்தது என்ன?

பல்லவராயனின் உண்மை ஊழியனாய் மானவர்மன். யார் இந்த மானவர்மன்? உங்களுக்கு விளங்கும் கதையின் முடிவில். கங்கச் சிற்றரசன் ஆதவமல்லன் சோழப் பேரரசுக்கு உட்பகையாய் விளங்குகிறான். அவன் சிந்தனைக் கீற்றில் ஒன்று என் போன்றோரைப் பெருமிதம் கொள்ளச் செய்தது. அந்த வரிகள் - "காவிரிக் கரையில் வளர்ந்த பெண்களுக்கே குறும்பும், நெஞ்சுரமும் கொஞ்சம் அதிகம்தான்". சபாஷ் கவிஞரே! அருமை. மிக்க அருமை. உண்மையும் அதுவே.

மோகனவல்லி, ஆடற்கணிகை; ஆகவமல்லனின் நாயகி. உடலால் களங்கப்பட்டாலும், தன் தாய்நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்கிறாள். இவளை உண்மையாய் நேசிக்கும் கங்கவீரன் இளந்தேவன்.

சோழநாட்டுத் தனாதிகாரி வேதவனமுடையான், பல்லவராயனின் மறுபதிப்பாய்ச் சோழநிலாவில் மட்டுமல்ல, சோழரின் வீரவரலாற்றிலும் உலா வருகிறார். புகழ்மிக்க சோழர் அரியணை ஏறக் காத்திருக்கும் இளம்பிள்ளை குலோத்துங்கன். அவன் தங்கை தியாகவல்லி. ஒருமுறை, சிவனடியாராய் மாறுவேடத்தில் உலாவும் பராக்கிரமபாகுவைச் சந்தித்து, அவன் கிளப்பிவிடும் பொய்யால் தன் வளர்ப்புப் பாட்டனான பல்லவராயனைச் சந்தேகிக்கிறாள். ஆனால், குலோத்துங்கனின் மன உறுதி எல்லாச் சோதனைகளையும் வெல்லச் செய்கிறது - அவன் பாட்டன் சோதனையையும் உட்பட.

"கண்ணின் வலிமையும் ஆற்றலும் ஒரு பொருளின் வெளித்தோற்றத்தைக் காட்டுவதோடு முடிந்து போய் விடுகிறது. ஆனால், மனத்தின் வலிமையோ அந்தப் பொருளின் வெளித்தோற்றத்தையும் துளைத்துக் கொண்டுபோய், அதன் உள்ளுக்குள் இருக்கும் உண்மையை உணர்த்தும்வரை தொடர்கிறது." - சத்தியமான சொற்கள்.

வீரபாண்டியனுக்காக வரிந்துகொண்டு வந்தது சிங்களப்படை. வழக்கம்போல் வரலாற்றில் கைவைத்தல், பொய்ப் பரப்புரை, போர்க்காலச் சதி அனைத்தும் இன்றுபோல அன்றும் நிகழ, தொண்டி, பாசிபட்டணத்தில் சோழ மறவர் படை பின்வாங்குகிறது. போருக்குப் பின் நிகழ்ந்தவை பற்றி இலங்கை வரலாறு ஒன்று சொல்ல, தமிழக வரலாற்றில் எந்த ஆதாரமும் இல்லை. சிங்கள வரலாறு சொல்வது உண்மையென்றால் அங்கே இதுபற்றிக் கல்வெட்டுகள் இருக்கவேண்டும். ஆனால், சான்றுகள் அங்கும் இல்லை. அப்புறமென்ன, புத்தம் சரணம் கச்சாமி, பொய்யே சரணம் கச்சாமி.

இதோ அந்த நாடகம் வசனமாய்,

"ஜெகத்விஜயா! பாண்டிய வீரர்களைச் சோழ வீரர்களாக மாற்றி ஈழத்திற்கு அனுப்பி வைப்பதாலும், பராக்கிரமபாகுவே சோழ அரசன்(?) என்ற முத்திரையுடன் நாணயம் வெளியிடுவதாலும் சிங்களத்து மக்களிடன் என்ன ஏற்படும்?

முட்டாள்தனமான மகிழ்ச்சி ஏற்படும்.

சரித்திரத்தில் என்ன விளைவு உண்டாகும்?

பொய்யான ஒரு செய்தி அழியாத உண்மையாகிவிடும்."

அடடா! கவிஞரே!! நீர்தான் சிங்கள அறிவாளிகளை எவ்வளவு நன்றாய் அறிந்து வைத்துள்ளீர்?

பல்லவராயன் இறந்து விட்டார் போன்ற போர்க்காலச் சதிகள் பலவற்றை முறியடித்து வெல்கிறது சோழப் புலிப்படை. இரண்டு இலங்கை தண்டநாயகர்களின் தலையும் மதுரைக்கோட்டை வாயிலில் காட்சிப் பொருளாக வைக்கப்பட, குலசேகரன், பாண்டிய மன்னன் என்று முடிசூடிடத் தமிழகத்தில் அமைதி திரும்புகிறது. விக்கிரமன் - தியாகவல்லி திருமணத்தால் சோழர் பாண்டியர் உறவு பலப்பட, மோகனவல்லியின் உயிர்த் தியாகத்துடன் கதை நிறைவு காண்கிறது.

"ஒரு தேசத்தின் சரித்திரம் ஆயிரக்கணக்கான வீரபுருஷர்களின் தியாகத்தாலும், ஆயிரமாயிரம் அபலைகளின் கண்ணீராலும்தான் உருவாக்கப்படுகிறது" - பல்லவராயனின் கூற்று உண்மையின் உரைகல்.

மோகனவல்லியின் மரணத்தால் கலங்கும் இளந்தேவனை ஆற்றுப்படுத்திவிட்டுப் பல்லவராயர் என்ற வீரசோழப்புலி விடைபெறுகிறது தன் கடமையாற்ற. "கடமைகளை முடித்துக் காரியங்களைச் சாதிப்பதற்கே காலம் போதாதிருக்கும்போது, நினைத்து நினைத்து உருகவும் நெஞ்சம் கலங்கிக் கண்ணீர் வடிக்கவும் நேரம் ஏது?"

காலம் நடக்கிறது, அன்றுபோல் இன்றும். வரலாறு திரும்பும் காலம் வரும். வந்தே தீரும்.

சில எண்ணத் தூறல்கள்:-

1. "சோழநிலா" மிகவும் அருமையான நாவல். பிரபலங்களை வாசிப்பதைவிட மு.மேத்தா போன்றோரை இரசிக்கலாம்.

2. ஈழத்துப் பாடுகளை நினைக்கும்பொழுது நெஞ்சு பொறுக்குதில்லையே. எனவே ஒரு கவிதை.
கருங்குதிரையும் செண்பகக் குருவிகளும்
செங்காந்தள் பூக்களும் வினவுகின்றன
உந்தன் கல்லறையில் வேறொருவன்
உறங்கிக் கிடப்பதா?
உந்தன் கனவையும், இலட்சியங்களையும்
வேறொருவன் சுமப்பதா?
எப்போது மீண்டும் எழுந்து வருவாய்?
காத்திருக்கின்றது ...
ஈழத்துக் காற்றும், மண்ணும்
இந்தக் காவிரிப் பெண்ணும்.

3. வரலாற்றில் பல்லவராயன் போன்றோர் நிறையவே உள்ளனர். அவர்களை எல்லாம் கதைமாந்தர்களாய் நாம் சந்திக்கலாம் நமது டாட் காம்மில்.

4. எங்கெல்லாம் பௌத்தம் கடைபிடிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் மனிதம் அழிக்கப்படுகின்றது. மனித உரிமைகள் நசுக்கப்படுகின்றது. இதைத்தானோ அந்தப் புத்தன் போதனை செய்தான்? Organized religion is organized evil என்பது வரலாறு காட்டும் வாழ்வியல் பாடமாகும்.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.