http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 8

இதழ் 8
[ ஃபிப்ரவரி 15 - மார்ச் 14, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

ஈன்ற பொழுதினும் பெரிதுவந்தோம்
முப்பெரும் விழா நிகழ்வுகள் - 1
மத்தவிலாசப் பிரகசனம் - 5
நாளிதழ்களில் வரலாறு டாட் காம்
சீவரமுடையார் குடைவரையும் கல்வெட்டுகளும்
பழுவூர் - 1
கல்வெட்டாய்வு - 6
இராஜராஜரின் வெற்றிகள்
கட்டடக்கலைத் தொடர் - 7
யாழ் என்னும் இசைக்கருவி - ஒரு பார்வை
நார்த்தாமலையை நோக்கி...
அழிவின் விளிம்பில் ஒரு அரிய வரலாற்றுப் பெட்டகம்
Genesis of Vimana in Pallava Art
சங்கச்சாரல் - 7
இதழ் எண். 8 > பயணப்பட்டோம்
நார்த்தாமலையை நோக்கி...
ச. கமலக்கண்ணன்
'குன்றுகள் தாலாட்டும் கற்கோவில்கள்'. நார்த்தாமலையைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், தனது 'தமிழ்நாட்டுக் கலைக்கோயில்கள்' புத்தகத்தில் திரு. தேவமணி ரஃபேல் அக்கட்டுரைக்கு வைத்திருக்கும் இந்தத் தலைப்புதான் நினைவுக்கு வரும். பொன்னியின் செல்வன் குழுவினருடன் சென்ற இரண்டாம் யாத்திரையின்போது ஒருமுறையும், கோகுல் இந்தியாவுக்கு வந்த போது அவருடன் புதுக்கோட்டைக்குச் சென்ற போது, கீரனூரைத் தாண்டியவுடன் திடீரென்று எல்லோரது மனதிலும் 'நார்த்தாமலையைப் பார்த்துவிட்டுச் செல்லலாமே' என்ற எண்ணம் தோன்றிய போது இரண்டாவது முறையும் என ஏற்கனவே பார்த்திருந்தாலும், டாக்டர் கலைக்கோவனுடன் மீண்டும் ஒருமுறை பார்க்கப்போகிறோம் என்றதும் நெஞ்சில் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கத்தான் செய்தன. சீனிவாச நல்லூரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது நாளை எங்கு செல்லலாம் என அவரிடம் ஆலோசித்த போதுதான் இந்த முடிவை எடுத்தோம். இருப்பினும், வீட்டிற்குச் சென்ற பிறகு ஏ.எஸ்.ஐ மக்களுடன் பேசி, நாளை காலை அங்கு காப்பாளர்கள் யாராவது இருப்பார்கள் என உறுதி செய்தபிறகு நம் முடிவை உறுதி செய்து கொள்ளலாம் என அவர் சொன்னதும், ஏ.எஸ்.ஐ யிடமிருந்து நல்ல பதிலாக வரவேண்டுமே என்று அடித்துக் கொண்ட மனம் இரவு 9 மணிக்கு டாக்டர் வீட்டிற்கு இரவு உணவுக்குச் சென்ற போது அந்த நல்ல செய்தி காதில் தேன் போல வந்து பாய்ந்ததும்தான் நிம்மதியடைந்தது. எந்த ஒரு இடத்தையும், என்னதான் நாம் தனியாகப் பார்த்தாலும், வேறு எவர் துணையுடன் பார்த்தாலும், அல்லது அவ்விடத்தைப் பற்றிய புத்தகங்களைத் துணைக்கு வைத்துக் கொண்டு பார்த்தாலும், அது யானையைப் பார்த்த குருடர்கள் கதையாகத்தான் இருக்கும் என்பது டாக்டருடன் சென்ற பயணங்களின் வாயிலாக நாங்கள் அறிந்து கொண்ட உண்மை. ஏன் பார்த்த இடங்களையே மீண்டும் மீண்டும் பார்க்கிறீர்கள்? வேறு புதிய இடங்களைப் பார்க்கலாமே என நண்பர்களும் உறவினர்களும் கேட்கும் போது, புன்னகை கலந்த மவுனத்தையே பதிலாகத் தந்து வந்திருக்கிறேன். ஏனெனில், அந்த இடங்களை அவர்கள் டாக்டர் கலைக்கோவனுடன் சென்று பார்த்தாலன்றி அந்தப் பரவச அனுபவங்களை விளங்கிக் கொள்ள இயலாதல்லவா? அதனால்தான். உண்மையிலேயே, அவருடன் சேர்ந்து பார்க்கும்போது ஏற்படும் சந்தோஷமும், கிடைக்கும் மனநிறைவும், கற்றுக்கொள்ளும் விஷயங்களும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. அப்படிப்பட்ட பயணங்களில் ஒன்றுதான் சென்ற ஜூலை 11-ம் தேதி நான், லலிதா, லாவண்யா, கிருபா மற்றும் எஸ்பி ஆகியோர் கலைக்கோவன் மற்றும் நளினி ஆகியோருடன் நார்த்தாமலைக்குச் சென்றது.

வசந்தபவனில் பொங்கல் வடை சாம்பார் சாப்பிட்டது, குவாலிஸில் போகும்போது பொன்னமராவதி விஷயத்தில் இராம் எஸ்பியை வம்புக்கிழுத்தது, முந்தைய நாள் பேசிக்கொண்டிருந்த ஒரு விஷயத்துக்குச் செவ்விந்தியச் சோழன் என்று எஸ்பி கொடுத்த நெத்தியடி என விவரிக்க ஆரம்பித்தால் சொல்ல வந்த விஷயத்தைச் சொல்ல முடியாமல் போய்விடும். திருச்சி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையிலிருந்து நார்த்தாமலை செல்லும் பாதையில் வண்டி திரும்பியவுடன், இங்கே ஆதிச்ச நல்லூரை விடப் பெரியதொரு பெருங்கற்காலப் பண்பாடு உள்ளது எனக் கலைக்கோவன் தெரிவித்ததும், போகும்போது அதையும் பார்த்துவிட்டுப் போகலாமா என்ற கிருபாவின் கேள்விக்கு, 'தாராளமாகப் பார்க்கலாமே' எனத் தாராளமான பதிலைத் தந்தார். மண்சாலையில் சென்று கொண்டிருந்த வண்டி ஒரு ஓட்டு வீட்டின்முன் நின்றது. வீட்டை விட்டு வந்த பெரியவரிடம் ஏ.எஸ்.ஐ காப்பாளர்கள் யாராவது உள்ளனரா எனக் கேட்டு உறுதி செய்த பொழுது, முன்பு ஒரு முறை மாவட்ட ஆட்சியருடன் வந்தபோது, காலை 7 மணிக்கு இளநீர்க்காரன் கையில் அரிவாளுடன் வரவேற்புக் கொடுத்ததை டாக்டர் நினைவு கூர்ந்தார்.

கற்பாறைகள் ஆரம்பித்த பகுதியிலேயே வண்டியை நிறுத்திவிட்டு, குன்றின் மீது ஏற ஆரம்பித்தோம். வண்டியை விட்டு இறங்கியவுடனே, இராமின் தொலைநோக்கி மூலம் தூரத்திலிருந்த கற்றளியை அருகாமையில் ரசித்து ஆனந்தித்தோம். வழியில் நிழற்குடையால் பாதுகாக்கப்பட்ட ஒரு கல்வெட்டைப் படிக்க ஆரம்பித்தோம். குமிழியைப் பயன்படுத்தும் முறைகளை விவரிக்கும் முத்தரையர் கல்வெட்டான அதை முழுவதும் படித்து முடித்ததும் எஸ்பி எங்களைப் பெருமையுடன் பார்த்தார். பொன்னியின் செல்வன் குழுவினரின் முதல் யாத்திரைப் பயண ஏற்பாடுகளின் போது அவரைச் சந்தித்த பொழுது ரவிதாசன் உண்மைக் கதாபாத்திரமா அல்லது கல்கியின் கற்பனையா என்றே தெரியாமல் இருந்த எங்களுக்கும், இன்று ஒரு பழங்கல்வெட்டை முழுவதுமாகப் படித்து முடித்த எங்களுக்கும் இருந்த முன்னேற்றத்தைப் பார்த்து, உன்னால் முடியும் தம்பியில் வருவது போன்றதொரு மவுனப் புரட்சியை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் என டாக்டரைப் பாராட்டினார். குன்றின் கீழுள்ள சமவெளிப் பகுதியில் பல ஆண் மயில்களும் சில பெண் மயில்களும் கொண்ட கும்பலின் இன்ப அகவலை ரசித்தவாறே மேலே ஏற ஆரம்பித்தோம். குன்றின் நடுப்பகுதியில் உள்ள சுனையைத் தாண்டியதும், உலக அதிசயங்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத அந்த அற்புதம் கொஞ்சம் கொஞ்சமாகக் கண்முன்னே விரியத் தொடங்கியது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிற்பிகள் கட்டி முடித்ததும், அதைப் பார்வையிட வந்த மன்னன் இவ்வாறுதானே பரவசப்பட்டிருப்பான் என மனம் சந்தோஷத்தில் திளைத்தது.



குன்றின் இறக்கத்தில் கற்றளியிலிருந்து கிட்டத்தட்ட ஐம்பதடி தூரத்தில் வசதியாக அமர்ந்து கொண்டே அந்த அதிசயத்தைப் பற்றிய டாக்டரின் விளக்கங்களை ஆர்வமுடன் கேட்க ஆரம்பித்தோம். நாங்கள் அமர்ந்திருந்த இடத்துக்கருகில் உள்ள கல்வெட்டு ஒன்று விஜயாலய சோழீசுவரம் என்ற பெயரைக் குறிப்பிட்டாலும், இங்குள்ள மூன்று ஈசுவரங்களில் எது விஜயாலயன் பெயர் கொண்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்பன போன்ற தகவல்களைக் கேட்டுப் பிரமிப்பில் ஆழ்ந்த போதுதான், ஒலிப்பதிவுக் கருவியை வீட்டில் மறந்து வைத்து விட்டு வந்ததன் பாதிப்பு புரிந்தது. சரி! உங்கள் நினைவுத்திறனுக்கு ஒரு சோதனை வைக்கிறேன் என டாக்டர் சொன்னதும், சொல்லுங்கள்! சொல்லுங்கள் என ஆர்வமாகச் சூழ்ந்து கொண்டோம். அதோ அந்த முதல் தளத்தின் கூரை உறுப்புகளில் நடுநாயகமாக ஆடல் புரிகிறாரே ஒரு பெண்மணி! அவளை இதற்கு முன் எங்கே பார்த்திருக்கிறீர்கள் என நினைவு கூரப் பணித்தார். வேறு ஏதாவது இடமாக இருந்தாலாவது ஞாபகம் வரத் தாமதமாகலாம். ஆனால், இராஜராஜேசுவரத்தையும் புள்ளமங்கையையும் அவ்வளவு சீக்கிரம் நினைவுப் பெட்டகத்தின் பின்வரிசைக்குத் தள்ளி விட முடியுமா, என்ன? இதைப் புள்ளமங்கையில் பார்த்திருக்கிறோமே என்று முண்டியடித்துக் கொண்டு வந்த பதிலைக் கேட்டு ஒரு சபாஷ் போட்டு விட்டு விளக்கவுரையை மேலே தொடர்ந்தார். தாங்குதளத்தின் உறுப்புகளான ஜகதி, எண்பட்டைக் குமுதம், கண்டப்பகுதி மற்றும் அதில் காட்டப்பட்டிருந்த அரைத்தூண்களின் பாதம் ஆகியவற்றைக் கொண்டு அந்தத் தாங்குதளம் பாதபந்த வகையைச் சேர்ந்தது என்ற முடிவுக்கு வந்தோம்.



அதற்குள், ஏ.எஸ்.ஐ ஊழியரின் உதவியால் மேலே ஏறுவதற்கு ஏணி தயாராகிவிடவே, ஒவ்வொருவராக முதல் தளத்தின் மீது ஏற ஆரம்பித்தோம். முதலில் ஏறிய பூங்குழலி, ஐயய்யோ!! இங்கே நிற்பதற்கே இடமில்லையே எனக் கீழே இருந்தவர்களைப் பயமுறுத்தினார். ஆனால் கலைக்கோவன், அதெப்படி? முதல் தளம் அனற்பிதாவாயிற்றே! எப்படி நிற்க இடமில்லாமல் போகும்? என வினவினார். அதாவது, அற்பிதா என்றால், ஒரு தளத்தின் கூரை உறுப்புகளுக்கு உட்பகுதியில் விமானத்தின் மையக் கட்டமைப்பினைச் சுற்றி வரமுடியாமல் வெளிப்புற உறுப்புகளுடன் சேர்ந்து அமைந்திருப்பது. அனற்பிதா என்றால், வெளிப்புற உறுப்புகளிலிருந்து விமானத்தின் மையக் கட்டமைப்பு சற்று உள்ளே தள்ளி இருக்கும் அமைப்பு. அதாவது பால்கனி போல. ஆமாம் சார். இடமிருக்கிறது என்று கூறி உள்ளே வசதியாக நின்று கொண்டு, கஷ்டப்பட்டு மேலே ஏறிக் கொண்டிருப்பவர்களைக் கிண்டலடிக்க ஆரம்பித்தார். ஏணியில்லாமல் இரண்டாவது தளத்துக்கு யாராவது ஏற முடியுமா என இராம் கேட்டு முடிப்பதற்குள், போன பிறவியில் கிளைக்குக் கிளை தாவிய அனுபவத்தைக் கொண்டு, சிலைக்குச் சிலை தாவி இரண்டாவது தளத்தின் மீது ஏறி நின்று கொண்டு கையை ஆட்டினார் கிருபா.





மேலே ஏறுவதற்கு முன்புவரை ஒரு சந்தேகம் இருந்தது. தரைத்தளம் சதுரமாக உள்ளது. உச்சித்தளம் வட்டமாக உள்ளது. சதுரம் எப்படித் திடீரென்று வட்டமாக மாறியது? இடையில் இருப்பது ஒரே ஒரு தளம். அந்த ஒரு தளத்தில்தான் தலைமைப் பொறியாளர் தனது திறமையைக் காட்ட வேண்டும். கங்கை கொண்ட சோழபுரத்தில் பத்துத் தளங்களுக்கு மேல் இருந்ததால், சதுரம் எண்கோணமாக மாறி, பின் வட்டமாக மாறுவதற்கு நிறைய இடமிருந்தது. ஆனால் இங்கு இருப்பதோ ஒரே ஒரு தளம். எப்படி அமைத்திருப்பான்? எந்த விதமான சூத்திரத்தை உபயோகப் படுத்தியிருப்பான்? எனப் புரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தோம். அந்த ஆவலே ஏணியின் வாயிலாகக் கஷ்டப்பட்டு மேலே ஏற உந்தித்தள்ளியது எனலாம். முதல் தளத்திற்குச் சென்றவுடன் கண்டு களித்தது, வியக்க வைத்த அந்த ஒப்பற்ற தமிழ் மூளையைத்தான். ஆம்! அங்கு நாங்கள் கண்டது நான்கு முனைகள் கொண்ட ஒரு வட்டம் அல்லது நான்கு வளைந்த பக்கங்கள் கொண்ட ஒரு சதுரம் போன்றதொரு அமைப்பை. வட்டத்துக்கும் சதுரத்துக்கும் நடுவிலான ஒரு interpolation point. சரி. உடனே இன்னொரு சந்தேகம் உதித்தது. பொதுவாகக் கட்டடங்கள் கட்டப்படும்போது, கீழ்த்தளத்தில் தூண்கள் மற்றும் சுவர்கள் உள்ள அதே இடத்தில்தான் மேல் தளத்திலும் தூண்கள் மற்றும் சுவர்கள் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால் இங்கு? சதுரமான அமைப்பிலுள்ள கீழ்த்தளத்தின் மீது எந்த தைரியத்தில் வட்டமும் சதுரமும் கொண்ட ஒரு அமைப்பை வைத்தார்கள்? தரைத்தளத்தின் கூரை எப்படித் தாங்கும்? அதற்கு மேல் இன்னொரு தளம் வேறு இருக்கிறதே? ஒருவேளை கூரை கருங்கற்களாக இருப்பதால் இது சாத்தியம்தானோ? என்றெல்லாம் மனம் சிந்தித்தது. அப்போது எங்கள் அலுவலக வரவேற்பறையில் எழுதி வைக்கப்பட்டுள்ள ஒரு வாசகம் சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வந்து போனது. There is another way of doing this! Find it out!! - இதுதான் அது. இதற்கு விடைதான் என்ன? கீழே சென்ற பிறகு கண்ட அந்தக் கண் கொள்ளாக் காட்சியைப் பிறகு விளக்குகிறேன். நீங்களும் சந்தோஷத்தில் மூழ்கித் திளையுங்கள்.

(தொடரும்)this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.