http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 102

இதழ் 102
[ டிசம்பர் 2013]


இந்த இதழில்..
In this Issue..

2013 ஆண்டிற்கான மாமன்னன் இராஜராஜன் விருது
Thirumeyyam - 8
மாமண்டூர் நரசமங்கலம் குடைவரைகள் - 01
ஒரு கல், ஒரு கண்ணாடி
மரபுக் கட்டடக்கலை - 02
தனித்து விடப்பட்ட சோழர் காலத் திருமால்
விட்டலாபுரம் விட்டல கிருஷ்ணன் திருக்கோயில்
ஆலமர் செல்வன் பெற்ற கொடை
இதழ் எண். 102 > கலையும் ஆய்வும்
தனித்து விடப்பட்ட சோழர் காலத் திருமால்
ஸ்தபதி வே.இராமன்
தமிழகம் சிற்ப்பக்கலை வளம் கொழிக்கும் திருநாடு. நாடெங்கிலும் பல்லாயிரக்கணக்கான திருக்கோயில் கட்டடங்களையும், அவற்றில் செதுக்குவித்த எண்ணற்ற சிற்பங்களையும் நாம் இன்றும் காணலாம். அவையெல்லாம் தமிழ்ச் சமுதாயத்தின் உயர்ந்த லட்சிய வாழ்க்கையையும், பண்பாட்டுச் சிறப்புக்களையும், கலை நுட்பங்களையும் வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன.

திருக்கோயிலும் சிற்பமும் தமிழர்களின் கலையுணர்விற்கு எடுத்துக்காட்டுக்களாக விளங்குகின்றன. இத்தகைய கலையுணர்வால் இறைவனுக்கு பல திருவுருவங்களை கண்டு, அவற்றை சிற்ப ஆகம நூல்மரபுபடி உருவாக்கி அவைகளை திருக்கோயில்களில் அமைத்து பெருமைப்பட்டனர் நம் முன்னோர். எழுப்பிய கோயில்களின் புறச்சுவர், மாடங்கள், தூண்கள், மண்டபங்கள் கோபுரங்கள் முதலான இடங்களில் அளவில் சிறியதும், பெரியதுமான சிற்பங்களை அமைத்தனர்.

உடலும் உயிரும் இயங்கினால் தான் உயிரோட்டம் இருக்க முடியும் அதுபோல தான் கோயிலும் சிற்பமும் ஒன்றுடன் ஒன்று பிணைந்து திகழ்கிறது. சிற்பம் இல்லாத கோயில்களை காண இயலாது. இச்சிற்பங்கள் அழகுக்காக நிறுத்தப்படுவதில்லை. அவை வழிபாட்டின் ஒர் அங்கம். அரிய தத்துவங்களை காட்டிடும் உருவங்கள்.

போரில் வீரமரணம் அடைந்த வீரனுக்கு நடுகல் நட்டு பெயரும் பீடும் எழுதி வணங்கியதை இலக்கியங்கள் கூறுகின்றன. நடுகல் வழிபாடாக தொடங்கி பின்னர் பத்தினி தெய்வத்திற்குக் கல்லில் உருவம் செய்யுமளவிற்கு சிற்பக்கலை வளர்ச்சியடைந்தது. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமீதம், வெகுளி, உவகை போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையில் சிற்பியர் தாம் படைக்கும் சிற்பங்களில் கலைநுணுக்கம், கற்பனைத் திறன் சிறக்க அமைத்து கலையை வளர்த்தனர்.

திருச்சி மாவட்டம், குளித்தலை வட்டம், குழுமணி இனுங்கூர் சாலையில் நங்கவரம் எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர் அமைந்துள்ளது. சுந்தரரேசுவரர் என்று இன்றைய மக்களால் வணங்கப்பெறும் பராந்தகன் (907-955) காலத்திய இக்கோயில் காவிரியின் தென்கரையில் அமைந்த தேவதான நங்கை பிரமதேயமான அரிஞ்சிகை சதுர்வேதிமங்கலமென்று அழைக்கப்பட்டது. கோயிலின் பெயர் மறவனீசுவரம் ஆகும்.

இத்திருக்கோயில் கல்வெட்டு பரகேசரிவர்மன் பராந்தகனுடைய பத்தாம் ஆண்டில் செம்பியன் இருக்குவேளான பூதி பராந்தகனார் தேவியார் சோழப் பெருந்தேவியார் தமது பிறந்த நாளில் சூரிய கிரகணம் நேர்ந்தமையால் 1080 கழஞ்சு (ஒரு கழஞ்சு – 5.33 கிராம்) பொன்னைப் பூஜைக்கும், நைவேத்தியத்திற்கும், விழாவுக்கும் முதலாக நிவந்தம் செய்தார் என்ற செய்தியை தருகின்றது.

பராந்தகன் 34-ஆம் ஆண்டில் கண்டராதித்தன் தேவியரான பராந்தகன் மாதேவடிகள் செய்த விளக்குத் தானம் குறிப்பிடப்படுகிறது. மேலும் இக்கோயிலைச் சேர்ந்த ஆதிசண்டேசுவரர் தேவகன்மிகளும் கோயில் கண்காணி செய்வாரும் கோயிலோடு பணித்தொடர்புடைய கொல்லர்க்கும் தச்சர்க்கும் இறையிலியாக நிலமளித்தனர். திருவிழா நடக்கும் பத்து நாட்களும் சிறப்புச் சோறு வழங்கப்பட்ட அரிய செய்தியையும் அறிய தருகிறது.



கிழக்கு நோக்கிய பார்வையில் அமையும் இக்கோயிலின் கருவறை மேற்கு தேவகோட்டத்தில் மேற்கு நோக்கியதாய் நிறுத்தப்பட்டிருந்த பெருமாள் அந்நாளில் பூஜையும். வழிபாடும் கொண்டிருந்த தெய்வம், மக்களுக்கு நல்வழி காட்டிய தெய்வம் இன்று இக்கோயில் வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு நடை பாதையில் விளக்கு கம்பத்தினடியில் அமைதியாய் முழங்கால் வரை மண்ணில் புதையுண்ட நிலையில் தன் இடது கரத்தை இழந்தத நிலையிலும் தம் பொலிவினை இழக்காமல் தன்னந்தனியே காணப்படுகிறார்.

நீண்ட கிரீட மகுடம். மகுடத்தின் முகப்பும், பக்கங்களிலும் மலர்ந்த பூரிமங்கள் அலங்கரிக்கின்றன. நீள் செவிகளில் மகர குண்டலங்கள் வனப்பூட்டுகின்றன.

நீள் வட்டமுகத்தில், வில் போல் வளைந்த புருவங்களும் நீண்ட கண்களும் அழகு செய்கின்றன. நீள் நாசியும் அழகூட்டும் செவ்வாயும் சிதைந்தபோதிலும் வனப்புடன் திகழுகிறது. அகன்ற தோளும் நேர்த்தியாக செதுக்கப்பட்ட அங்கங்களும் அளவோடும். அழகோடும் வடிவம் பெறச் செய்துள்ளனர் சோழ சிற்பியர். சோழர் கலை முறையை எடுத்துக்காட்டும் வகையில் அங்கமும், ஆடை அணிகலன்களும் செதுக்கப்பட்டுள்ள முறையில் சிற்றுளியின் ஆற்றல், கலைத்திறன், கற்பனைத்திறன் சிறக்க காண முடிகிறது.

மார்பினை கண்டிகை, சரப்பளியும், தோள்களில் வாகுமாலையும் தோள்மாலையும் கரங்கில் காப்பும் உடலுக்கு அழகு சேர்க்கின்றன. முத்துக்கள் பதித்த முப்புரிநூல், இடது தோளிலிருந்து மார்பில் வனப்புடன் வீழ்ந்து கீழ் வயிற்றை அடைந்து பின்புறம் செல்கிறது. பூணூலில் காணும் பிரம்மமுடிச்சு சிதைக்கப்பட்டுள்ளது.

பெருமாளின் மேல்வயிற்றை கீர்த்தி முக அரைப்பட்டிகை, தாரகசும்மை, இடைக்கட்டு, இடுப்பிலிருந்து அடிவரை தொங்கும் ஆடையின் பொலிவு, தொடையின் திரட்சியை புலப்படுத்தும் வகையில் கவனமாக செதுக்கப்பட்டுள்ளது. இடையின் வல, இடப்புறம் முடிச்சுகளோடு கூடிய ஆடை கூட மேனியழகை மறைக்காமல் நன்கு புலப்படும் வகையில் கலைத்திறனோடு செதுக்கப்பட்டுள்ளதை நேரில் கண்டு மகிழலாம்.

நான்கு கரங்களில் வலது தன்கரம் அபயம் காட்ட, வலது மேற்கரத்தில் சக்கரமும், இடப்புறத்தில் சங்கும் இடம் பெற்றுள்ளன. இடது தன்கரம் தொடையில் வைத்த நிலை முன்கையும், இடது மேற் கரமும் சிதைக்கப்பட்ட போதிலும் கூட எழில் சிறக்க காணப்படுகிறது.

பெருமானின் சக்கரம் குறிப்பிடத்தக்க அமைப்பில் உள்ளது. இச்சக்கரமானது பல்லவர் சிற்பங்களில் செவ்வகத்தைக் கோணவாக்கில் நிறுத்தினார்போல் போன்ற வடிவமைப்பை ஒத்துள்ளது.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் தமிழகத்தை ஆண்ட பேரரசர்கள் தம் கலையுணர்வின் காரணமாக எழுப்பப்பட்ட கோயிலில் நிறுத்தப்பட்டிருந்த அழகு தெய்வத்தை வெயிலிலும், மழையிலும், காற்றிலும் தம் பொலிவினை இழக்கும் வகையில் நிலை நிறுத்தியிருக்கும் கொடுமை வேதனையளிக்கிறது.

ஊர் மக்களால் வழிபட்டு பெருமைப்பட்ட இத்தெய்வம் இன்று தன்னந்தனியே நிறுத்தப்பட்டு அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. இதனை புறம் தள்ளியவர்கள் யார்? அழிவிற்கு யார் காரணம்? இறையுணர்வும், கலையுணர்வும் கொண்ட நல்ல உள்ளங்கள் இச்சிற்பத்தை காப்பாற்ற முன்வர வேண்டும். நம் முன்னோர்கள் படைத்த கலைப்படைப்புகளை நாம் முறையாக பாதுக்காக்க வேண்டாமா? கலையென்பது குறிப்பிட்ட இனம், மதம், மொழி, இவற்றை தாண்டி எல்லா நாட்டினருக்கும் உரிமையுடையதாகும். இதனை இழக்கச் செய்யலாமா?

இச்சிற்பத்தை கருவூர் அரசு அகழ்வைப்பகம், அல்லது திருச்சி அரசு அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டுவது அவசியம். இல்லையேல் நாம் ஒர் அற்புதமான, கலை நுணுக்கமான சோழர் கலைச்சிற்பத்தை இழக்க நேரிடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா?... காலம் என்ன பதில் சொல்லப்போகிறதோ? this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.