http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 105

இதழ் 105
[ மார்ச் 2014]


இந்த இதழில்..
In this Issue..

அமுது - ஒரு வரலாற்றுப் பார்வை
Gokarneswara - 3
Chola Ramayana 12
ஆய்வுப் பாதையில் ஆங்காங்கே - 3
பெரும்பேறூர் தான்தோன்றீசுவர சுவாமி திருக்கோயில்
நன்னிலம் மதுவனேசுவரர் கோயில்
தேடலில் தெறித்தவை - 11
ஊழி நான்முகன்
இதழ் எண். 105 > கலையும் ஆய்வும்
பெரும்பேறூர் தான்தோன்றீசுவர சுவாமி திருக்கோயில்
கி.ஸ்ரீதரன்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மதுராந்தகம் வட்டத்தில் அமைந்துள்ள ”பெரும் பேர் கண்டிகை” என்ற கிராமம் ஒரு ”கோயில் நகரமாக” விளங்குகிறது. சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அச்சரப்பாக்கம் ஊர் அருகே அமைந்துள்ள இவ்வூரில் பல திருக்கோயில்கள் அமைந்து மக்களால் போற்றி வணங்கப்படுகின்றன.


திருக்கோயில் விமானம்


இவ்வூரின் வடமேற்கில் அமைந்துள்ள ஏரியின் அருகே வரலாற்றுச் சிறப்பு மிக்க தான்தோன்றீசுவரசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இறைவன் சுயம்பு வடிவமாக மணலால் ஆன லிங்கத்திருமேனியாக விளங்குவதால் செம்பு கவசம் அணிவிக்கப்பட்டு அபிடேக வழிபாடுகள் நடைபெறுகின்றன. கோயிலில் அம்மன் “தடுத்தாட்கொண்ட நாயகி” என்ற பெயருடன் மேலிரு கரங்களில் அங்குசம் – பாசம் தாங்கியும், கீழிரு கரங்களில் அபய – வரத முத்திரைத்தாங்கி அருள்புரியும் கோலத்தில் காணலாம்.


சண்டிகேசுவரர்


திருக்கோயில், கருவறை, அர்த்த மண்டபம், முன் மண்டபம் ஆகிய அமைப்புகளுடன் விளங்குகிற்து. முன் மண்டபத்தில் விநாயகர், முருகன், அம்பாள், பைரவர், சண்டிகேசுவரர் ஆகிய தெய்வத்திருமேனிகள் வழிபடப்பெறுகின்றன. வழிபாட்டில் உள்ள சண்டிகேசுவரர் திருமேனி சோழர் காலத்தைச் சேர்ந்த உருவ அமைப்புடன் விளங்குகிறது.

இக்கோயில் சோழர் காலப்பணியாக விளங்கினாலும் திருக்கோயில் கட்டட அமைப்பில் பிற்கால திருப்பணியால் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் காணமுடிகிறது. ஆனால் கல்வெட்டுகளைத் தெளிவாகக் காண்பது ஆறுதலாக உள்ளது.

நுழைவு வாயில்

இறைவன் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருந்தாலும் நுழைவு வாயில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. நுழைவு வாயிலின் நிலைக்கால் அழகிய சிற்ப-கொடிக்கருக்கு வேலைப்பாட்டுடன் விளங்குகிறது. நிலைக்காலின் அடிப்பகுதியில் இரண்டு நந்தி வடிவங்கள் நுழைவு வாயிலை நோக்கி செதுக்கப்பட்டுள்ளது தனிச் சிறப்பாக விளங்குகிறது. நுழைவு வாயிலின் அருகே இடப்புறம் சுவரில் வில் ஏந்திய கண்ணப்ப நாயனாரின் புடைப்புச் சிற்பம் அரிய கலைப் படைப்பாய் விளங்குகிறது.

கண்ணப்ப நாயனார் சிற்பம்



குலோத்துங்கர் கல்வெட்டு


கல்வெட்டுகள்

இக்கோயில் வீரராஜேந்திரன் (1063 – 1070) முதலாம் குலோத்துங்க சோழன் (1070 – 1120), இரண்டாம் ராஜராஜன் (1146 – 1163) ஆகியோரது காலத்து ஐந்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பலி பீடத்திலும் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது.

ஊர் பெயர்

இன்று இவ்வூர் “பெரும்பேர்” என அழைக்கப்பட்டாலும் கல்வெட்டுகளில் “பெரும்பேறூர்” என்றே குறிக்கப்படுகிறது. வீரராஜேந்திரன் சோழன் கல்வெட்டில் “பெரும்பேறூரான திரிபுவன நல்லூர்” என்று பெயரிட்டு அழைக்கப்பட்டதையும் அறிகிறோம். மேலும் இவ்வூரின் நுழைவுப்பகுதியில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயிலில் காணப்படும் 16 – ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் “பெரும்பேறு பாளையம்” என்று குறிக்கப்படுகிற்து.

மேலும் இவ்வூர் “ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து களத்தூர் கோட்டத்து தனியூர் ஸ்ரீ மதுராந்தக சதுர்வேதிமங்கலத்து தென் பிடாகை பெரும்பேறூர்” என்று ஊர் பிரிவு கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிற்து.

இறைவன்

இக்கோயிலில் எழுந்தருளி அருள்புரியும் இறைவன் பெரும்பேறூர் ஆளுடையார் ஸ்ரீ கரணீசுவரமுடையார் என்றும், திருத்தாந்தோன்றி மகா ஸ்ரீ கரணீசுவரமுடையார் என்றும் கல்வெட்டுகளில் பெயரிட்டு அழைக்கப்படுகிறார்.

கல்வெட்டுச் செய்திகள்:
1. வீரராஜேந்திரன் (1063 – 1070) – 7 வது ஆண்டு – 1070.

பெரும்பேறூரான திரிபுவன நல்லூர் திருத்தாந்தோன்றி மகா ஸ்ரீ கரணீசுவரமுடையார்க்கு மதுராந்தக சதுர்வேதிமங்கலத்து ஊர் சபை, இறை வழிபாட்டிற்காக இறையிலியாக நிலம் அளித்தது நிலத்தின் எல்லையைக்குறிக்கும் பொழுது இவ்வூரில் உள்ள ஏரி, அம்பலத்து தூம்பு, வாய்க்கால்கள் குறிக்கப்படுகிறது. வீர சோழ சேரி என்ற பகுதியும் கூறப்படுகிற்து.

2. முதலாம் குலோத்துங்க சோழன் (1070 – 1120) 9 – ஆம் ஆண்டு - 1079

பெரும்பேறூர் ஸ்ரீ கரணீசுவரமுடையார்க்கு செய்யூரைச் சேர்ந்த பள்ளி சக்தி அமரடி பேரரையன் என்பவன் விளக்கு எரிக்க பத்து பசுக்களை இக்கோயில் காணியுடைய சிவபிராமணர் வசம் அளித்த செய்தி கூறப்படுகிறது.


சண்டேசுவர ஓலை கல்வெட்டு


கல்வெட்டின் இறுதியில் திருவிளக்கு எரிக்க கடவோம் ஆனோம். இது பன்மாகேசுவர ரட்சை “சண்டேசுவரன் ஓலை சாகரம் சூழ் வையகத்தீர் கண்டீச்சரன் கருமமாராய்க பண்டேய் அறஞ்செய்தான் செய்தான் அறங்காத்தான் பாதம் திறம்பாமைச் சென்னி மேற் கொள்க” என முடிவடைகிறது. சிவாலயங்களுக்கு அளிக்கப்படும் தானங்களை கண்காணிப்பவராக சண்டிகேசர் விளங்குகிறார் அதனை “சண்டேசுவரன் ஓலை” என்பர். அதனைக் குறிக்கும் கல்வெட்டுத் தொடர் இக்கோயிலில் காணப்படுவது சிறப்பாகும்.

3. முதலாம் குலோத்துங்க சோழன் (1070 – 1120) 11 – ஆம் ஆண்டு – 1081

இக்கோயில் வழிபாட்டிற்காக மதுராந்தக சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி சபையினர் நிலம் இறையிலியாகவும், 12 கழல் பொன்னும் கொடுத்த செய்தி கூறப்படுகிறது.
4. இரண்டாம் ராஜராஜன் (1146 – 1164) - 18 – ஆம் ஆண்டு – 1164

கோயிலில் சந்தி விளக்கு ஒன்று எரிய அரும்பாக்கக்கிழான் காக்கு நாயகன் பெரியானேன் நான்கு பசுக்கள் அளித்த செய்தி கூறப்படுகிறது.

5. இரண்டாம் ராஜராஜன் (1146 – 1164) - 18 – ஆம் ஆண்டு – 1164

கோயிலில் நந்தா விளக்கு எரிப்பதற்காக நிலம் “திருநந்தா விளக்குப் பட்டியாக” தகடூர் நாட்டுத் தகடூர் கிழவன் திருவேகம்பமுடையான் நிலம் தானம் அளித்த செய்தி கூறப்படுகிறது.

இக்கோயில் காணப்படும் கல்வெட்டுகளில் காலத்தால் முந்தையது வீரராஜேந்திரன் காலத்து கல்வெட்டாகும். எனவே இக்கோயில் இம்மன்னன் காலத்தில் கற்றளியாகப்பட்டு, பிற்காலச் சோழர்களால் போற்றப்பட்டது எனக் கருதலாம்.


கொற்றவை


சிற்பங்கள்

இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலில் வடமேற்கில் மகிடன் தலை மீது நின்ற வண்ணம் காட்சி தரும் துர்க்கையின் சிற்பத்திருமேனி மக்களால் சிறப்பாக வழிபடப்பெறுகிறது. புடைப்புச் சிற்பமாக விளங்கும் இத்திருமேனியில் அம்பிகை எட்டு கரங்களுடன் சக்கரம் – சூலம், வாள் – வில், குறுவாள் – கேடயம், மணி ஆகிய ஆயுதங்கள் தாங்கி காட்சி அளிக்கிறாள். அம்பிகையின் வாகனமாக மான் அமைந்துள்ளது மேலும் தனிச்சிறப்பு ஆகும். பல்லவர் காலக் கலை அம்சத்துடன் இத்திருமேனி விளங்குகிறது.


நந்தி



பிடாரி


கோயிலின் முன்பாக நந்தி மண்டபமும் பலி பீடமும் உள்ளன. பிரதோஷ வேளையின் போது நந்தியெம் பெருமானுக்கு சிறப்பு அபிடேகங்கள் நடைபெறுகின்றன. மேலும் அருகில் தென்புறத்தில் உள்ள மண்டபத்தில் பிடாரி காளிதேவியின் சிற்பத் திருமேனி வழிபாட்டில் உள்ளது. சண்டன் – முண்டன் ஆகிய இரு அசுரர்களை கால்களால் மிதித்த நிலையில், தனது எட்டு கரங்களில் சூலம், கத்தி-கேடயம், உடுக்கை - குறுவாள் முதலியன தாங்கி வதம் செய்யும் கோலத்தில் காட்சியளிக்கும் தேவி இன்று ரண பத்ரகாளி என்ற பெயரால் இன்று அழைக்கப்படுகிறார்.


சேட்டைதேவி


காளி தேவியின் அருகில் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் தனிச்சிறப்பு வாய்ந்த சேட்டை தேவி சிற்பத் திருமேனி உள்ளது. அமர்ந்த நிலையில் காணப்படும் தேவியின் தலைக்கு மேலே இருபுறமும் சாமரங்கள் காணப்படுகின்றன. காக்கைக் கொடியும், மாந்தி வழிபடும் காட்சியையும் காணலாம்.


தல விருட்சம்


கோயிலின் எதிரில் வடக்கு திசையில் பழமையான தலமரமாக ஆத்தி மரமும் அதன் கீழே சிவலிங்கமும் அதனைச் சுற்றி நான்கு நந்திகளும் காட்சி தருகின்றன. அகத்தியர் சந்நிதி என இதனை அழைக்கின்றனர். நந்தி திருமேனிகளைக் காணும் பொழுது இவை முன்னர் திருக்கோயில் விமானத்தில் இருந்திருக்கலாம் எனக்கருத முடிகிறது.


வாயிலில் நந்தி புடைப்புச் சிற்பம்


சிறிய கோயிலாக இருந்தாலும் கலை – வரலாற்றுச்சிறப்பு மிக்க கோயிலாக பெரும் பேறு தான்தோன்றீசுவரர் கோயில் விளங்குகிறது.

குறிப்புகள்:
1. தென்னிந்தியக்கல்வெட்டுகள் – தொகுதி – 7 - 481, 483, 484.
2. தென்னிந்தியக்கல்வெட்டுகள் – தொகுதி – 3 - 78, 84.
3. Inscriptions of the Madras Presidency - V.Rengacharya - 264 to 268 of 1901.
4. காஞ்சிபுரம் மாவட்டத் தொல்லியல் கையேடு – இரா. சிவானந்தம்.
தமிழக தொல்லியல் துறை வெளியீடு – 2008 – பக்கம் – 73.
5. ஆய்வுக்கு உதவியவர்: கோயில் குருக்கள் திரு.ஆர்.ரவிச்சந்திர சிவாச்சாரியார்.this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.