http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 114

இதழ் 114
[ டிசம்பர் 2014 ]


இந்த இதழில்..
In this Issue..

ஓவியம்
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 8
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 8
Makeup of Dancers from Sangam Age to Cholas
தலைச்சங்காடு தட்சிணபுரீசுவரர்
தேடலில் தெறித்தவை - 18
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 7
திருப்பணியை எதிர்நோக்கும் சோழர்காலத் திருக்கோயில்
இராமாயணக் காற்று
இதழ் எண். 114 > கலையும் ஆய்வும்
திருப்பணியை எதிர்நோக்கும் சோழர்காலத் திருக்கோயில்
கி.ஸ்ரீதரன்
கும்பகோணம் - காரைக்கால் சாலையில் ஆண்டலாம்பேட்டை என்ற ஊரிலிருந்து தெற்கே 2 கி.மீ தொலைவில் பவுண்டரீகபுரம் என்ற ஊர் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. இவ்வூரில் உள்ள அழகிய சிற்பங்களுடன் காட்சிதரும் சோழர்காலக் கோயில் சோமநாதசுவாமி திருக்கோயில் என அழைக்கப்படுகிறது.

கோயில் அமைப்பு:

கிழக்கு நோக்கிய திருக்கோயில். கோயிலுக்கு முன் பலிபீடமும் நந்திமண்டபமும் காட்சி தருகிறது. கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம் என்ற அமைப்புகளுடன் காட்சி தருகிறது. மகாமண்டபத்திற்குள் நுழைவதற்குப் பக்கவாட்டில் படிக்கட்டுகள் உள்ளன.



மகாமண்டபத்தை ஒட்டித் தெற்குநோக்கி அம்பாள் சன்னிதி உள்ளது. அம்மன் ஜடாமகுடம் அணிந்து தனது நான்கு கரங்களில் மேலிரு கரங்களில் அட்சமாலையும், தாமரை மலரைத் தாங்கியும், கீழிரு கரங்களில் அபய-வரத முத்திரை தாங்கி அன்பர்களுக்கு அருள்புரியும் அழகிய வடிவினைக் காணலாம். அம்மன் சன்னிதி கருவறை விமானத்தில் செடிகொடிகள் வளர்ந்து எப்பொழுது இடிந்து விழுமோ என்ற கவலையை ஏற்படுத்துகிறது.



மகாமண்டப நுழைவாயிலின் வலப்புறம் அதிகார நந்தியின் வடிவமும், இடதுபுறம் சிவபெருமான் அர்ச்சுனனுக்குப் பாசுபதம் வழங்கும் கதையை நினைவூட்டும் வகையில் கிராதார்ஜுன வடிவத்தையும் தேவகோட்டங்களில் காணலாம்.

சூலக்கல்:

மேலும் நுழைவு வாயிலின் அருகே சூலக்கல் ஒன்று காணப்படுகிறது. பொதுவாக இத்தகைய கற்கள் சிவன் கோயில்களுக்கு அளிக்கப்பட்ட நிலங்களில் நடப்பட்டிருக்கும். இங்கு காணப்படும் சூலக்கல்லில் சூலமும், அதன் மேற்புறம் சூரியன் - சந்திரன் வடிவமும் சூலத்தின் கீழ்ப்பகுதியில் பன்றியின் வடிவமும் புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகிறது. சாளுக்கிய மன்னர்களும் விஜயநகர மன்னர்களும் (வராகத்தை) பன்றியை அரசு இலச்சினையில் கொண்டிருந்தனர்.



இக்கோயிலில் கல்வெட்டுகள் ஏதும் காணப்படவில்லை. தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தின் அதிட்டானப் பகுதியில் மட்டும் கல்வெட்டு காணப்படுகிறது. அதுவும் முழுமையாக இல்லை. கட்டடக்கலை, சிற்பக்கலையின் அடிப்படையில் இக்கோயில் முதலாம் குலோத்துங்கசோழன் காலத்தைச் சேர்ந்ததாகக் கொள்ளலாம். இவன் சுங்கம் தவிர்த்த சோழன், சோழன் திரிபுவன சக்கரவர்த்தி என்றெல்லாம் சிறப்புப் பெயர் பெற்றவன். கீழைச் சாளுக்கிய மன்னனாகிய இராஜராஜ நரேந்திரனின் புதல்வன். இவனுடைய தாய் கங்கைகொண்ட சோழன் புதல்வியாகிய அம்மங்கைதேவியார் ஆவார். கீழைச் சாளுக்கிய மரபைச் சேர்ந்த மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலில் காணப்படும் சூலக்கல்லில் பன்றி (வராகம்) அரச சின்னம் இடம்பெற்றிருக்க வாய்ப்பு உள்ளதாகக் கருதமுடிகிறது.



மகாமண்டப தேவகோட்டங்களில் ரிஷபாரூடர், அர்த்தநாரீசுவரர், சரசுவதி, லட்சுமி, கங்காதரமூர்த்தி, சந்திரசேகரர், பிட்சாடனார், பைரவர், துவாரபாலகர் ஆகிய தெய்வ வடிவங்கள் அழகிய சிற்பங்களாகக் காட்சி தருகின்றன. சரசுவதி, லட்சுமி வடிவங்களில் தலைக்கு மேலே குடை காட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் பல சிற்பங்களின் கைகள் உடைக்கப்பட்டிருப்பதைக் காணும்பொழுது கண்ணில் நீர் பெருகுகிறது.



கங்கைகொண்ட சோழபுரம் கோயில் போன்று சண்டேசுவர அனுக்கிரகமூர்த்தி சிற்பமும் மகாமண்டபத்தில் காணப்படுகிறது. சிவபெருமான் அங்கே தேவியுடன் அமர்ந்திருப்பார். ஆனால் இக்கோயிலில் சிவபெருமான் மட்டும் அமர்ந்து சண்டேசுவரருக்கு சண்டீசபதம் அளிக்கும் காட்சியை அழகிய சிற்பவடிவில் காணலாம். சிவபெருமான் தலைக்கு மேலே குடை காணப்படுகிறது. சிவபெருமான் காலின் கீழே சண்டேசுவரர் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். இந்தச் சிற்பத்தையும் விட்டுவைக்கவில்லை. கைகளை உடைத்திருக்கின்றனர். மகாமண்டப தேவகோட்டங்களுக்கு மேலே 'சாலை' வடிவக் கட்டட அமைப்பு காட்டப்பட்டுள்ளது. சில தேவகோட்டங்களின் மேற்புறம் மகரதோரணம் அழகிய சிற்ப வேலைப்பாட்டுடன் காட்சி தருகிறது. இரு தேவகோட்டங்களின் இடையே காணப்படும் 'கும்பபஞ்சரம்' என்ற அழகிய சிற்ப வேலைப்பாட்டுடன் காட்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது. மகரதோரணம் நடுவே சிவபெருமானின் அழகிய சிற்பவடிவங்களையும் காணமுடிகிறது.

கருவறை:

கருவறையில் சிவபெருமான் லிங்கவடிவிலே காட்சிதருகிறார். கருவறை நுழைவு வாயிலில் காணப்படும் துவாரபாலகர் வடிவங்களும் சிறப்பானவை. தலையில் அணிந்திருக்கும் கரண்டமகுடத்தின் உச்சிப் பகுதியில் திரிசூலம் காணப்படுகிறது. மேலும் தலைக்குமேலே பிரபை போன்று அழகிய சிற்ப வேலைப்பாட்டுடன் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது.



கருவறையின் தேவகோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா வடிவங்கள் காணப்படுகின்றன. கருவறை விமானம் செங்கல், சுதைச் சிற்பங்களுடன் காட்சி தருகிறது. இருநிலை விமானம். கருவறை விமானச் சுதைச் சிற்பங்கள் நாயக்கர்காலக் கலைச்சிறப்புடன் காட்சி தருகிறது. விமானத்தின் மீதும் செடிகொடிகள் வளர்ந்துள்ளன.

தற்போதைய நிலை:

இவ்வூர் தற்பொழுது பவுண்டரீகபுரம் என அழைக்கப்பட்டாலும் இவ்வூருக்கு 'ஏனாதிமங்கலம்' என்ற பெயரும் உண்டு என அறியப்படுகிறது.



கோயிலின் கருவறை விமானத்தின்மீது செடிகொடி, புற்கள் வளர்ந்துள்ளன. மகாமண்டபத்தின் மேற்பகுதியிலும் செடிகள் வளர்ந்துள்ளதால் கட்டடப்பகுதிகள் கீழே விழுந்துள்ளன. மகாமண்டபத்தின் உட்புறத்தில் தரை கீழே இறங்கியுள்ளதால் மண்டபத் தூண்களில் சில சற்று சாய்ந்து காணப்படுகின்றன.

சோழர்காலக் கோயிலின் தற்போதையநிலை மிக்க வருத்தத்தையும் கண்ணீரையும் வரவழைக்கிறது. எனினும் ஊர்மக்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். கலையழகு மிக்க சிற்பங்களுடன் காணப்படும் பவுண்டரீகபுரம் சோழர்காலக் கோயிலைப் புனரமைத்து, திருப்பணி செய்யப்படவேண்டும் என்பதே ஊர்மக்களின் விருப்பமாக உள்ளது.

குறிப்பு:

1. Later chola temples - S.R.Balasubramaniyam, Page 154-156.
2. திருக்கோயில் ஆய்வுக்கு உதவியவர்: திரு. சாமிநாதன், கோனேரிராஜபுரம்.this is txt file�
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.