http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 122

இதழ் 122
[ ஆகஸ்ட் 2015 ] பதினொன்றாம் ஆண்டு நிறைவு மலர்


இந்த இதழில்..
In this Issue..

வள்ளுவத்தில் மதலை
தெரிவதும் தொடர்வதும் வரலாறுதான் வாருணி
சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில், இலால்குடி
To Sacred Shrines.. with Sacred Hymns..- 3
புகைப்படத் தொகுப்பு - திருச்சிராப்பள்ளி இலளிதாங்குரம்
இலளிதாங்குர பல்லவேஸ்வர கிருகம்
Rituals, Special occasions and Festivals at the Temples of Thiruchirappalli District - Part II
சிராப்பள்ளி தொட்டியம் சாலையில் சில கண்டுபிடிப்புகள்-5
காஞ்சிபுரம் தெற்கிருந்த நக்கர் திருக்கோயில்
முசிறியின் பண்டமாற்று வணிகம்
இதழ் எண். 122 > கலையும் ஆய்வும்
இலளிதாங்குர பல்லவேஸ்வர கிருகம்
ச.சுந்தரேசன்
திருச்சிராப்பள்ளிக்கு நான் வரும் ஒவ்வொரு முறையும் உச்சிப் பிள்ளையார் கோயில் எனது பயணத் திட்டத்தின் இறுதி இடமாக அமைவது வழக்கம். வெளிச்சம் மறைந்து விடுமே என்ற துரித கதியில் மலைப் படிகளில் ஏறி தாயுமானவர் சன்னிதியில் சிறிது நேரம் ஆசுவாசம் செய்து சன்னதியின் எதிரிலுள்ள படி வரிசையின் கடைசி படியில் கால் வைக்க யத்தனிக்கும் வேளை காவேரியின் குளுமையைச் சுமந்து கிழக்கிலிருந்து வரும் சில்லென்ற காற்று உடலைத் தழுவிச் செல்லும் போது மனம் ஊன்மத்தமாகும். கால்கள் வசமிழந்து மேலே செல்லவே விரையும். அந்நேரம் தாயுமானவர் சன்னதி கடந்து மேலே செல்லும் போது இடைப்பட்ட பகுதியில் என்ன இருக்கிறது என்பதை உணர இயலாத மனநிலை அமைந்து விடுவது வழக்கம்.


மலைக்கோட்டை திருக்கோயில்கள் நுழைவாயில்


ஆம்..1990 ஆம் ஆண்டு முதல் பலமுறை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு சென்றிருந்த போதிலும் இது தான் வாடிக்கையாக இருந்து வந்தது. டாக்டர் அவர்கள் குடைவரைகளை எனக்கு அறிமுகப்படுத்திய பின்னரே மகேந்திரவர்மரின் அற்புதமான குடைவரை ஒன்று இங்கிருப்பதை அறிந்து கொண்டேன்.

பல்லவர் குடைவரைகளுக்கும், பாண்டியர் போன்ற பிற மரபு மன்னர்களின் குடைவரைகளுக்கும் உள்ள பொதுவான வேறுபாடு ஒன்றினை நான் உணர்ந்திருக்கிறேன். நெடியதொரு குன்றின் பாறைச்சரிவு சிறிது முன்னோக்கி இழுக்கப்பட்டு தரை மட்டத்தைத் தொடும் இடத்தில் பல்லவர்களின் பெரும்பாலான குடைவரைகள் அமைந்திருக்கும். குடைவரையின் அருகாமையில் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் ஏதோ ஒன்று இருக்கும். பிற மரபு மன்னர்களின் குடைவரைகள் பெரும்பாலும் குன்றின் மேல் அமைந்திருக்கும்.

குடைவரை அகழ்வில் தனக்கென்றொரு பாணியை உருவாக்கிய மகேந்திரரே சிறிது மாறுபட்டு மலை மேல் ஒரு குடைவரையை செய்வித்தது அவரது பன்முக அறிவாற்றலைக் காட்டுகிறது.

இலளிதாங்குரம் குடைவரை

மகேந்திரரின் விருதுப் பெயர்களில் ஒன்றான “இலளிதாங்குரன்” எனும் பெயரால் இலளிதாங்குர பல்லவேசுவர கிருகம் என இக்குடைவரை அழைக்கப்படுகிறது. இந்தியத் தொல்பொருள் அளவீட்டுத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.


குடைவரை முகப்பு


தாங்குதளம்

இக்குடைவரை தாயுமானவர் சன்னதியிலிருந்து உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் வழியில் இடப்புறத்தே அமைந்துள்ளது. பெரிய அளவான ஜகதியின் மீது எண்பட்டைக் குமுதம் வடிக்கப்பட்டுள்ளது. குமுதத்தின் மேற்பரப்பு குடைவரை முகப்பிற்கு முன்னுள்ள தரையாக அமைக்கப்பட்டுள்ளது. தாங்குதளத்தின் மையப்பகுதியில் குடைவரையை அடைய ஏதுவாக உள்ள மூன்று படிகளின் இருபுறமும் யாளிமுக பக்கச் சுவர்களால் அணையப்பட்டுள்ளன.

முகப்பு

தென்திசை நோக்கியமைந்துள்ள குடைவரையின் முகப்பினை நான்கு முழுத்தூண்களும், கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் உள்ள பக்கவாட்டுத் தூண்கள் அரைத்தூண்களாக அமைந்துள்ளன. பேரளவிலான முழுத்தூண்கள் சதுரம், கட்டு, சதுரம் வடிவில் உள்ளன. அரைத்தூண்கள் சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பில் அல்லாமல் நான்முக அரைத்தூண்களாக உள்ளன.

முழுத்தூண்களின் கீழ்ச்சதுரங்களின் நாற்புறமும் வட்டமான தாமரைப் பதக்கங்கள் வடிக்கப்பட்டுள்ளன. மேற்சதுரங்களில் கொடிக்கருக்கு, மகரம், யாளி, அன்னம் போன்ற வடிவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. முழுதூண்களின் தென்முகங்களில் மகேந்திரரின் விருதுப் பெயர்கள் கல்வெட்டுக்களாய் உள்ளன.

அரைதூண்கள் பதக்கங்கள் இன்றி காணப்படுகின்றன. கிழக்கு மற்றும் மேற்கு முகங்களில் மகேந்திரர் கல்வெட்டுக்களும், மேற்கு முகத்தில் பாண்டிய மாறன்சடையரின் கல்வெட்டும் காணப்படுகின்றன. தூண்கள் ஆறின் மீதும் எழும் கனமான தரங்கப் போதிகைகள் வளைந்து உத்திரம் தாங்குகின்றன. போதிகையின் தரங்கச் சுருள் வடிவினூடே மையத்தில் கொடிக்கருக்குப் பெற்ற பட்டையொன்று வடிக்கப்பட்டுள்ளது. உத்திரத்தின் மீது மிகத் தெளிவாக வடிக்கப்பட்ட வாஜனம் ஓடுகிறது.

முகமண்டபம்

முகப்புத் தூண்களுக்கும், மண்டபத்தில் அமைந்துள்ள இரண்டாம் வரிசைத் தூண்களுக்கும் இடையில் உள்ள பகுதி முகமண்டபம் ஆகும். முகமண்டபத்தின் கிழக்குச் சுவரில் கருவறை அமைந்துள்ளது. மேற்குச் சுவரின் அழகிய வேலைப்பாடமைந்த தளத்தின் மீது எழில்மிகு கங்காதரரின் வடிவம் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

கருவறை

இக்கருவறையின் தாங்குதளம் பாதபந்த தாங்குதளம் ஆகும். தாங்குதள உறுப்புகளான ஜகதி, எண்பட்டைக் குமுதம், கம்புகளணைந்த பாதங்களுடன் கண்டம், பட்டிகை ஆகியவற்றை முழுமையாகக் கொண்டு விளங்க்கும் இத்தாங்குதளத்தின் நடுப்பகுதியில் கருவறையை அடைய மூன்று படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படிகளின் இருபுறமும் பிடிச்சுவர்கள் உள்ளன. கீழ்ப்படி சந்திரக்கல் ஆகும்.

பட்டிகையின் மேற்புறத்தில் கருவறை வாயிலின் இருபுறத்திலும் சிற்பச் செழுமையுடன் பக்கத்திற்கு இரண்டு நான்முக அரைத்தூண்கள் உள்ளன. இவ்விரு அரைத்தூண்களின் இடைப்பட்ட சுவர்ப்பகுதியில் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு வாயிற்காவலர்கள் உள்ளனர்.

இந்நான்கு அரைத்தூண்களின் மேலுள்ள தரங்கப் போதிகைகள் தமது விரிகோணக் கைகளால் உத்திரம் தாங்குகின்றன. உத்திரத்தின் மீது வாஜனமும், வலபியும் அமைந்துள்ளன. முழு வடிவிலான கபோதத்தின் முகப்பில் உள்ள மூன்று கூடுகளில் கந்தர்வத் தலைகள் காட்டப்பட்டுள்ளன.

கங்காதரமூர்த்தி புடைப்புச் சிற்பம்

முகமண்டபத்தின் மேற்குச் சுவரில் பூப்பதக்கங்களாலும், தாமரையிதழ்களாலும் அலங்கரிக்கப்பட்ட தளமொன்றின் மீது அழகு மிளிரும் கங்காதரமூர்த்தி சிற்பம் இடம் பெற்றுள்ளது.


கங்காதரர் சிற்பத் தொகுதி


தளத்தின் மீது சிவபெருமான் தனது இடக்கால் பாதத்தினை சமத்தில் நிறுத்தி, உயர்த்திய வலக்கால் பாதத்தினை முயலகனின் உயரத் தூக்கிய இடது உள்ளங்கை மீதும், தலை மீதும் வைத்து நிமிர்ந்து நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். வலது முன் கை படமெடுத்த பாம்பின் வாலைப் பிடித்திருக்க, வலப் பின் கை சடைமகுடத்திலிருந்து சடைப்பிரிகள் இரண்டினைப் பிரித்தெடுக்கிறது. சிவபெருமானின் இடது பின் கை அக்கமாலை ஏந்த இடது முன் கை தொடையில் படிந்துள்ளது. சடைப்பிரிகள் தோள்களில் படர நீள்செவியில் மகர குண்டலங்கள். உதரபந்தம், தோள்வளகள், கைவளைகள், மோதிரங்கள் அணியப் பெற்றுள்ள அய்யனின் மார்பில் சரப்பளி தவழ்கிறது.

சிவபெருமானின் வலப்புறம் கங்கையும், கங்கைக்கு எதிரே நாய் போன்ற உருவ அமைப்புடைய விலங்கொன்றும் காட்டப்பட்டுள்ளது. இறைவனின் இருபுறத்திலும் தலையருகே இருவரும், இடுப்பருகே இருவரும், காலருகே இருவரும் வடிக்கப்பட்டுள்ளனர்.

கங்காதரர் புடைப்புச் சிற்பம், இந்திய சிற்பக்கலையின் மணி மகுடம் என்றால் அது மிகையாகாது.

அர்த்தமண்டபம்

இரண்டாம் வரிசைத் தூண்களுக்கும், குடைவரையின் பின்சுவருக்கும் இடைப்பட்டப் பகுதி அர்த்தமண்டபம் ஆகும். இது முகமண்டபத்தின் அகலத்தில் மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது. இக்குடைவரை அர்த்தமண்டபத்தின் அமைப்பு மதுரை மாவட்ட பாண்டியர் குடைவரைகளுள் ஒன்றான தென்பரங்குன்றம் குடைவரை அர்த்தமண்டபத்தினை ஒத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பின்வரும் சந்ததியினர் கண்டு மகிழ வேண்டும் என்று மனம் நெகிழ நமக்கு விட்டுச் சென்ற கலைபொக்கிஷத்தை நாம் அனைவரும் ஒருமுறை சென்று காண்போமே!!

நன்றி:

மு. நளினி, இரா. கலைக்கோவன்,
மகேந்திரர் குடைவரைகள்,
அலமு பதிப்பகம், சென்னை 600 014.
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.