http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 2

இதழ் 2
[ செப்டம்பர் 15 - அக்டோபர் 14, 2004 ]


இந்த இதழில்..
In this Issue..

கல்வெட்டுகளைக் காப்பாற்றுவோம்
எஸ்.ஜே சூர்யாவுக்கு ஒரு கண்டனம்
கதை 1 - சேந்தன்
புதிரான புதுமை
கந்தன் குடைவரை
கட்டடக்கலை ஆய்வு - 2
கருங்கல்லில் ஒரு காவியம் - 2
இது கதையல்ல கலை - 2
'MS - a life in music' - ஒரு விமர்சனம்
இராகமாலிகை - 2
சங்கச்சாரல் - 2
கோச்செங்கணான் காலம்
இதழ் எண். 2 > பயணப்பட்டோம்
கருங்கல்லில் ஒரு காவியம் - 2
கோகுல் சேஷாத்ரி

தளிச்சேரிக் கல்வெட்டு

அந்த மதிலின் ஓரத்தில்தான் இராஜராஜனின் மிகப் புகழ்பெற்ற தளிச்சேரிக் கல்வெட்டு உள்ளது. அந்த மதில் சுவரின் பக்கம் முழுவதையும் ஆக்கிரமித்துக்கொண்டு 55 மீட்டர் நீளத்தில் நீண்டு விரியும் ஒரே கல்வெட்டு.

தளிச்சேரிக் கல்வெட்டு


இந்த ஒரே ஒரு கல்வெட்டை டாக்டரும் மா.இராசமாணிக்கனார் வரலாற்று மைய ஆய்வாளர்களும் ஆராய்ந்து தளிச்சேரிக் கல்வெட்டுக்கள் என்றதொரு அற்புதமான புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள்.

இராசராசேச்சுரத்தில் பணியிலமர்த்தப்பட்ட நானூறு தளிச்சேரிப் பெண்டிர், அவர்தம் வீட்டிலக்க எண்கள், பெயர்கள், எங்கெங்கிருந்து தருவிக்கப்பட்டனர், யார் என்ன செய்ய வேண்டும், பணிக்கு ஒருவர் வராதுபோக நேர்ந்தால் வேறு ஒருவரை எப்படிப் பணியிலமர்த்துவது என்று பல்வேறு விஷயங்களைப் பற்றியும் மிக மிக தீர்க்கமாகவும் நுணுக்கமாகவும் தெளிவாகவும் பேசும் இந்தக் கல்வெட்டு ஒன்றைக்கொண்டே இராஜராஜனின் நிர்வாகத்திறமையை கணித்துவிடலாம். அத்தனை நேர்த்தி!

இந்தக் கல்வெட்டின் மூலம் சாதாரணர் என்று கருதப்படும் பலரையும் சரித்திரத்தில் இடம்பெறச் செய்துவிடுகிறான் அந்தப் பேரரசன்! எத்தனை பெரிய மனது! சாதாரணமாய் எல்லாக் கோயில்களிலும் நிவந்தம் கொடுப்பவர்கள் பெயர்கள் மற்றும் அதில் சம்மந்தப்பட்டவர் பெயர் இருக்குமேயன்றி இப்படிப் பணிபுரிபவர் பெயரெல்லாம் எழுதப்பட்டிருக்காது... தளிச்சேரிக் கல்வெட்டு ஒரு அபூர்வமான விஷயம்.

மேலும் தனது இருபத்தியொன்பதாம் ஆட்சியாண்டில் இப்படியொரு தெளிவான நிர்வாக ஏற்பாட்டை கல்வெட்டாக மன்னன் பொறிக்கச் சொன்னதற்கு மற்ற காரணங்களும் இருந்திருக்கலாம். தன் காலத்திற்குப்பின் நிர்வாகக் கோளாறு ஏற்பட்டு தட்சிண மேரு விடங்கர் வழிபாட்டிற்கு எந்த இன்னலும் வந்துவிடக்கூடாது என்று நினைத்திருக்கலாம் என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது.



ஒருவழியாய் இராஜராஜன் திருவாயிலுக்குள் நுழைந்தோம்.

வாயிலின் உள்பக்க மதிலிலும் பல புராணக் காட்சிகள். விளக்குவதற்கு நேரமில்லையாதலால் வேகவேகமாய் நடந்தோம்.

பொறியியல் நுட்பம்

வாயிலின் உள்பக்கத்தில் அமைந்த கருங்கல் ஒன்றில் அபூர்வமான விஷயத்தை டாக்டர் காட்டினார்.

அதாவது அந்தக்காலத்தில் மீட்டர் போன்றதொரு அளவையாக கற்களை அளக்கப் பயன்பட்டதொரு அளவு கல்லில் குறிக்கப்பட்டிருக்கிறது.

அந்தக் கால மீட்டர் அளவை


இதில் என்னை அயரவைத்த விஷயம் இக்காலத்தில் பொறியியல் படங்களில் (Engineering Drawings) பயன்படுத்தப்பட்டிருப்பதைப் போலவே அக்காலத்திலும் முனை (End Point) யை விளக்க பிளஸ் குறி போட்டிருந்ததுதான் ! அக்காலப் பொறியியல் நேர்த்தியை வியக்காமல் இருக்க முடியவில்லை - காலவெள்ளத்தில் எவ்வெவற்றையெல்லாம் இழந்து நிற்கிறோம் !

கருவறை விமானக் காட்சிகள்

கோயிலுக்குள் நுழைந்து சேனாபதி கிருஷ்ணன் இராமன் கட்டிய மதில்சுவற்றின் ஓரமாக கருவறை விமானத்தை சுற்றிவர ஆரம்பித்தோம்.

அங்கிருந்து பார்க்கையில் கேரளாந்தகன் திருவாயிலும் இராஜராஜன் திருவாயிலும் ஒருங்கே தெரிந்த காட்சி அற்புதமாயிருந்தது. அதனை கேமராவில் பத்திரப்படுத்திக் கொண்டோம்.

உள் மதிலின் வழியாகத் தெரியும் இரு திருவாயில்கள் - முன்னால் தெரிவது இராஜராஜன் திருவாயில்

மதிலைச் சுற்றிக் கொண்டு நடக்கையில் உட்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான லிங்கங்களைப் பற்றி கேள்வியெழுப்பினார் நண்பர். இதே போன்று பல கோயில்களிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதாக டாக்டர் பதிலளித்தார்.

ஒரு திருப்பதில் நின்றுகொண்டு "இங்கிருந்து பாருங்கள் - விமானம் என்னமாய் பயமுறுத்துகிறது!" என்றார் டாக்டர்.

பயம்தான்! பிரமிப்பு தரும் பயம்! இத்தனை பெரிதா? அதுவும் முழுக்கக் கருங்கற்களாலா? என்கிற ஆச்சரியம் தரும் பயம்.

கருவறை விமானம் - பயமுறுத்தும் பிரம்மாண்டம்


கீழே எங்குநின்று பார்த்தாலும் மேலே விமானத்தின் அடியில் தெரியும் கயிலாயக்காட்சி...

உன்னதமான படைப்பு.

மதிலின் நடுவில் தெரிந்த வழியாக வெளியே சென்று பின்புறப் பூங்காவை அடைந்தோம். இங்கே ஒரு பூங்காவை ASI நன்முறையில் பராமரித்து வருகிறது.

பூங்காவில் தண்ணீர் பலஇடங்களுக்கும் செல்வதற்குரிய வழிகள் முன்பே அமைக்கப்பட்டிருந்தனவாம். அவை சீராக்கப்பட்டு புற்கள் வளர்ந்து இடமே பசுமையாய் ஆரோக்கியதோடு இருக்கிறது.

பின்னழகு என்று சொல்வார்களே - அது இராஜராஜேஸ்வரம் விமானத்திற்கு மிக அதிகம் என்பதைக் கண்டோம். மறுபடியும் மதில் வாயில் வழியே கோயில் வளாகத்துக்குள் நுழைந்தோம்.

கல்வெட்டுப் படிப்பு

மறுபடியும் கல்வெட்டுக்களை படிக்கும் பணி ஆரம்பமாகியது.

கல்வெட்டுக்களை படிக்க முயலும் நண்பர்கள்


ஒவ்வொரு கல்வெட்டும் சீராகவும் நேராகவும் வெட்டப்பட்டிருக்கும் நேர்த்தியை என்னவென்று சொல்வது! அடியேன் புகைப்படமெடுப்பதில் தீவிரமாயிருந்தபடியால் கல்வெட்டுக்களை கடித்துத் துப்பும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவை தப்பித்தன.

கல்வெட்டு விளக்கங்களை தன்னை மறந்து கேட்டுக்கொண்டிருக்கும் எஸ்.பி ஸார்

பின்னால் எடுத்த புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது இராஜராஜன் காலத்தில் உபயோகப்பட்ட டவல்லான் என்னும் அளவை பொறிக்கப்பட்ட கல்வெட்டு படத்தில் அகப்பட்டிருந்தது தெரிந்தது. அளவையை உபயோகிக்கும்போதும் சிவநாமம் உச்சரிக்கப்படவேண்டுமென்ற உயர்ந்த எண்ணம்!

"ஆடவல்லான் என்னும் மரக்காலளவு" என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டு



நாம் கொடுத்தனவும்கல்வெட்டு

இராஜராஜனின் மிகப் பிரபலமான நாம் குடுத்தனவும் கல்வெட்டைப் படித்தே ஆகவேண்டுமென்று ஒரு கோஷ்டி கொடியைப் பிடிக்க, மேற்குப் பகுதிக்குச் சென்றோம். அங்கே - கருவறையின் மட்டத்திற்கு சற்று கீழ் அழகாக வெட்டப்பட்டிருந்தது அந்த வரலாற்றுப் புகழ்பெற்ற கல்வெட்டு. இராஜராஜனின் மிக உத்தமமான மனதிற்கும் உயர்ந்த சிந்தனைக்கும் அந்த ஒரு கல்வெட்டு மட்டும் போதும்!

அந்தக் கல்வெட்டில் மன்னன் கீழ்க்கண்டவாறு சொல்கிறான் -

"நாம் கொடுத்தனவும் நம் அக்கன் கொடுத்தனவும் நம் பெண்டுகள் கொடுத்தனவும் கொடுப்பார் கொடுத்தனவும்...இந்தக் கல்லிலே வெட்டியருளுக என்று திருவாய்மொழிஞ்சருளி....."

அதாவது தட்சிண மேரு விடங்கர்க்கு யார் எந்தவிதமான காணிக்கை அல்லது நிவந்தம் செய்திருந்தாலும் - அது சிறியதோ பெரியதோ - கல்வெட்டில் பொறிக்கப்பட்டுவிட வேண்டும் ! அவருடைய பதவி ஒரு பொருட்டல்ல, அவர் அரசனுக்கு அணுக்கமானவரா, இல்லையா என்பது பொருட்டல்ல, சோழவம்சத்தை சேர்ந்தவரா இல்லையா என்பதும் ஒரு பொருட்டல்ல - அவர் யாராயிருந்தாலும் சரி, இறைவனுக்கு காணிக்கை கொடுத்தவர் என்கிற அளவில் அவர் பெயரும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுவிட வேண்டும் - அவ்வளவுதான் !

நமது இந்திய வரலாற்றை தலைகீழாகப் புரட்டிப் பார்த்தாலும் இப்படி தன்னைச் சேர்ந்தவர்கள், தான் முனைந்த காரியத்திற்கு உறுதுணையாய் நின்றவர்கள் என்று அனைவரையும் "கொடுப்பார் கொடுத்தனவும்" என்ற ஒரு பதத்தில் ஒருசேர உயர்த்திப்பிடித்த இன்னொரு மன்னனை காண்பது மிகக் கடினம் !

காலகாலங்களையெல்லாம் தாண்டி இந்த ஒரு கோயில் அழியாமல் நின்றதற்குக் காரணம் இராஜராஜன் என்கிற மாமன்னனின் மிக உயர்ந்த இந்த எண்ணம்தான் என்று உணர்ச்சிபொங்கக் குறிப்பிடுவார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.

இந்தக் கல்வெட்டுக்கு மேல்தான் பிரபலமான தொப்பிக்காரன் தலை அமைந்திருக்கிறது. இதனை தனியாக ஆய்வு செய்ய வேண்டுமென்று தெரிவித்தார் டாக்டரவர்கள். இது பிற்காலத்தியதாயிருக்கலாம் என்பது அவர் எண்ணம்.

கருவறை உள்சுவர் ஓவியங்கள்

நேரமாகிக் கொண்டிருந்தபடியால் சாந்தாரம் என்றழைக்கப்படும் கருவறை உள்மதில் ஓவியங்களை பார்த்து முடித்து விடலாமென்று கிளம்பினோம்.

இந்தப்பகுதி பொதுவாக எவருக்கும் திறந்து காட்டப்படுவதில்லை. டாக்டர் அவர்கள் இதில் ஆய்வுப்பணியை மேற்கொண்டுள்ளபடியால் அவரை சாக்கிட்டு நாங்களும் உள்ளே நுழைந்தோம்

(டாக்டரின் இந்த அற்புத ஆய்வைப்பற்றி பின்னர் காண்போம்)

this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.