http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 137

இதழ் 137
[ செப்டம்பர் 2017 ]


இந்த இதழில்..
In this Issue..

கதவுகள் திறந்து கருணையோடு காத்திருந்தது வரலாறு
TEMPLES IN AND AROUND THIRUCHIRAPPALLI - 9
திருவலஞ்சுழி - ஸ்வேத விநாயகர் - அமைவிடம்
புள்ளமங்கையில் நெடியோன் சிற்பம்
பொழில்சூழ் திருப்புள்ளமங்கை வளாகம்
நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்! - 1
புள்ளமங்கை - திருவாலந்துறையார் கோயில் - 3
ஒரு கல் மண்டபம் எனும் திருக்கழுக்குன்றம் குடைவரை
கலியாப்பட்டி ஆய்வுப்பயணம்
வெகுமக்கள் இலக்கியத்தில் தமிழ் இலக்கணம் - 2
இதழ் எண். 137 > கலைக்கோவன் பக்கம்
கதவுகள் திறந்து கருணையோடு காத்திருந்தது வரலாறு
இரா. கலைக்கோவன்

 



அன்புள்ள வாருணிக்கு,



நலந்தானே?



ஆகஸ்டு 27 ஞாயிறன்று நானும் நளினியும் சிங்களாந்தபுரம் சென்றிருந்தோம். பேராசிரியர் முனைவர் அர. அகிலாவின் ஆய்வியல்நிறைஞர் ஆய்வு மாணவி சீதா அங்குள்ள அமரசுந்தரேசுவர நாயனார் கோயிலை ஆய்வுக்கு எடுத்துள்ளார். அதன் கட்டடக்கலை, சிற்பச் செறிவு, கல்வெட்டுகள் குறித்த வழிகாட்டலுக்காக என்னையும் நளினியையும் அகிலா களத்திற்கு அழைத்திருந்தமையால் அந்தப் பயணம் அமைந்தது. சிராப்பள்ளித் துறையூர்ச் சாலையில் 40 கி. மீ. தொலைவிலுள்ள காளிப்பட்டி அருகே இடப்புறம் திரும்பும் சாலையில் 1 கி. மீ. சென்றால் சிங்களாந்தபுரம். 'சிங்களாந்தகன்' என்ற முதலாம் இராஜராஜரின் பொருளார்ந்த விருதுப் பெயரையேற்று அமைந்த சோழர் கால வணிக நகரம்தான் சிங்காளந்தகபுரம். ஆம், இன்றைய சிங்களாந்தபுரம் கல்வெட்டுகளில் சிங்களாந்தகபுரமாகவே அழைக்கப்படுகிறது.



கடந்த இரண்டு திங்கள்களாகவே அகிலாவும் அவரது மாணவியும் அமரசுந்த நாயனார் கோயிலில் களஆய்வுகள் நிகழ்த்தி அங்கிருக்கும் அனைத்துக் கல்வெட்டுகளையும் படித்துப் படியெடுத்துள்ளனர். 1943-44ஆம்ஆண்டுக் கல்வெட்டறிக்கையில் இங்குப் படியெடுக்கப்பட்டனவாய் பத்துக் கல்வெட்டுகளின் சுருக்கங்கள் (226-235) பதிவாகியுள்ளன. அவற்றுள் காலத்தால் பழைமையானது முதலாம் இராஜேந்திரரின் 5ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு. கரிகாலக்கன்ன வளநாட்டின் கீழிருந்த வள்ளுவப்பாடி நாட்டில் இணைந்திருந்த சிங்களாந்தகபுரத்தின் நகரத்தார், இக்கோயில் இறைவிக்கு முதலாம் இராஜேந்திரர் பிறந்த சித்திரைத் திருவாதிரையை ஒட்டி, (தேவர் திருவவதாரஞ் செய்தருளின திருநாள் சித்திரைத் திருவாதிரை) ஏழு நாள் விழா எடுத்த செய்தி அக்கல்வெட்டில் பதிவாகியுள்ளது. 



கல்வெட்டறிக்கையிலுள்ள பத்துக் கல்வெட்டுகளின் பாடங்களையும் படிக்க மேற்கொண்ட முயற்சியில் கூடுதலாகப் பத்துப் புதிய கல்வெட்டுகளைக் கண்டறிந்துள்ளார் அகிலா. அவற்றைச் சரிபார்க்கவும் கட்டடம், சிற்பம் சார்ந்த சில ஐயங்களை விவாதிக்கவுமே நானும் நளினியும் சிங்களாந்தகபுரம் சென்றோம். 



தொலைவில் நீலவானப் பின்னணியில் மஞ்சு சூழ் மலைகள், கண்ணுக் கெட்டியவரை பசுமை நிறைந்த வயல்கள் எனத் தன் வடக்கிலும் மேற்கிலும் இயற்கை தழுவ ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருந்தது அந்தக் கோயில். எளிய நுழைவாயில். ஏகாந்தமான வளாகம். உள்ளிலும் வெளியிலும் மரங்கள். சுகமான காற்று. கிளிகளும் மைனாக்களும் மனிதத் தொல்லையில்லாது குடியிருக்கும் கோயில் அது என்பதை உள்நுழையும்போதே அவற்றின் சங்கீதக் கூச்சல்கள் எங்களுக்கு உணர்த்தின.



நளினியும் அகிலாவும் கல்வெட்டுகளில் மூழ்க, நான் கட்டடம், சிற்பம் எனப் பயணித்துப் பின் அவர்களுடன் இணைந்தேன். நளினி சொன்னார், 'பெருமண்டபத்தில் நான்கு தூண்களிலும் கல்வெட்டுகள் உள்ளன. இரண்டுதான் படியெடுக்கப்பட்டுள்ளன. இரண்டு புதியவை. அம்மன் கோயிலிலும் புதிய கல்வெட்டுடன் ஒரு தூண் உள்ளது.' அக்கல்வெட்டுகளின் பாடங்களைப் பார்த்துத் தூண்களையும் பார்த்தேன். 



கல்வெட்டுகள், அத்தூண்களை வள்ளுவப்பாடி நாட்டான் நூற்றுக்கால் மண்டபத்தின் தூண்களாக அடையாளப்படுத்தின. ஒரு தூண் சிறுகண்ணனூரைச் சேர்ந்த ஊரன் சொக்கன், பெருமாள் சக்கரவர்த்தி, ஊரன் சிரன், தெற்றி ஆகியோர் செய்தளித்தது. மற்றொரு தூண், அரைசில் அஞ்சாத கோபாலனின் கொடை. இன்னொரு தூணின் கல்வெட்டுப் பெரிதும் சிதைந்துள்ளதால் ஒருவர் பெயர் மட்டுமே படிக்குமாறு இருந்தது. நான்காம் தூண் அரசமீகாம சோழன், குஞ்சரமல்ல சோழக்கோன், பெரியநாட்டுக் கோன் ஆகியோரால் அளிக்கப்பட்டது. அம்மன் கோயில் தூண் குன்றணிநல்லூர் செல்வநம்பி, பெரியகோன் உள்ளிட்டார் வழங்கியது. திருப்பணியின்போது இத்தூண்களில் நான்கு வடிவம் மாற்றப்பட்டன. ஒன்று மட்டுமே பழைய பெருமாளாய் உள்ளது.



தூண்களின் கல்வெட்டுகள் சுட்டும் 'வள்ளுவப்பாடி நாட்டான் நூற்றுக்கால் மண்டபம்' ஏற்கனவே நான் அறிந்திருந்த பெயராகும். இலால்குடி சப்தரிஷீசுவரர் கோயிலில் நாங்கள் ஆய்வுமேற்கொண்ட போது கோயில் வளாகத்தின் வசந்தமாளிகை, வெளிச்சுற்று, உள்சுற்று, நடராசர் மண்டபம் ஆகியவற்றின் தூண்கள் சிலவற்றில் கல்வெட்டுப் பொறிப்புகளைக் கண்டு, அவற்றைப் படித்துப் படியெடுத்தோம். அவற்றுள் சில பதிவானவை, சில புதியன. அவற்றின் பாடங்கள் தந்த தெளிவில் 2016இல் நாங்கள் வெளியிட்ட 'தவத்துறையும் கற்குடியும்' என்ற எங்கள் ஆய்வு நூலில் (ப. 91), 'அமரசுந்தர நாயனார் கோயிலும் நூற்றுக்கால் மண்டபமும்' என்ற தலைப்பில் சில கருத்துக்களைப் பதிவு செய்தோம்.



 





 



 





 



சிங்களாந்தகபுரத்தில், 'அமரசுந்தரநாயனார்' கோயில் விளங்குவதைத் தவத்துறையும் கற்குடியும் எனும் நூலை எழுதிய காலத்தில் நாங்கள் அறிந்திருக்கவில்லை. என் ஆய்வின் தொடக்கக் காலத்தில், எண்பதுகளில், சிராப்பள்ளி மாவட்டக் கோயில்கள் அனைத்தையும் பார்க்கவேண்டுமென்ற நோக்கில் இந்தக் கோயிலையும் பார்த்திருந்தேனே தவிர, இக்கோயில் எக்காரணத்தாலோ எங்கள் ஆய்வுக்குட்படவில்லை. அதனால்தான், தவத்துறை ஆய்வின்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 'அமரசுந்தர நாயனார் கோயில் இன்று காணுமாறு இல்லை' என்ற பிழையான தகவலைப் பதிவுசெய்துள்ளோம்.



அருகிலுள்ள சிதைந்த அல்லது அழிந்த கட்டமைப்பின் பகுதிகளை, அதே ஊர்க் கோயில்களின் திருப்பணியின்போது பயன்படுத்திக் கொள்வது காலம் காலமாக இருந்துவரும் பழக்கம்தான். ஆனால் ஏறத்தாழ 70 கி. மீ. தொலைவிலுள்ள கோயில் வளாகத்தின் தூண்கள், அவ்வளவு தொலைவு பயணம் செய்து முற்றும் தொடர்பில்லாத மற்றொரு கோயிலின் திருப்பணியின்போது அதன் உள்பகுதிகளுக்குத் துணையாக முடியுமென்பது, இதுநாள்வரை நாங்கள் கருதிப் பார்க்காத விஷயமாகும். இனி, எதிர்காலத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் 'கருத்துக்கூறல்' அமையவேண்டுமென்ற தெளிவை, இந்த அனுபவம் உண்டாக்கியுள்ளது.



வாருணி, நான் வரலாற்றை இறையாகவே நினைக்கிறேன். காலமும் வரலாறும் கைகோர்க்கும்போதுதான் அந்த வடிவம் நிறைவடைகிறது. பிற்சோழர் காலத்தில் வள்ளுவப்பாடி நாட்டைச் சேர்ந்த யாதவப் பெருமக்கள் சிலர் தங்கள் உழைப்பாலும் உளமார்ந்த கொடைகளாலும் உருவாக்கிய 'அமரசுந்தர நாயனார் நூற்றுக்கால் மண்டபமான வள்ளுவப்பாடி நாட்டான் நூற்றுக்கால் மண்டபம்' இன்று பார்வைக்குக் கிடைக்கவில்லை என்றாலும், அந்த மண்டபத்தைத் தாங்கி நின்ற தூண்களுள் சிலவேனும் அவை இடம்பெற்ற சிங்களாந்தகபுரத்து அமரசுந்தர நாயனார் கோயிலில் எஞ்சியிருப்பதுடன், 70 கி. மீ. பயணித்த நிலையில் பாடல் பெற்ற இடமும் பல்லவ, பாண்டிய, சோழர்களின் தழுவலில் வளர்ந்த சிற்பச்செறிவும் கட்டடக்கலை நுணுக்கமும் வாய்ந்த இலால்குடி சப்தரிஷீசுவரர் கோயிலிலும் காட்சிதருவது, அவற்றை உருவாக்கிய உத்தம உள்ளங்களின் ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் காட்டுவதுடன், வள்ளுவப்பாடி நாட்டாரின் பெயரையும் அழுந்தப் பதிவுசெய்வதாக உள்ளது.



வரலாற்றின் வீச்சு எத்தகையது என்பதைப் பலமுறை நான் உணர்ந்திருக்கிறேன். நேரிய நேயத்தோடு நெருங்கும்போது தமக்குள் ஒளித்து வைத்திருக்கும் வரலாற்றுப் பொறிகளைப் பகிர்ந்துகொள்ளக் கோயில்கள் தவறுவதே இல்லை. இப்போதும் அப்படித்தான் வாருணி, 'காணுமாறு இல்லை' என்று இந்தக் கோயிலை எழுத்துக்களால் அழித்துவிட்டாயே கலை, இது நியாயமா என்று கேட்கவும் என் பிழையை நானே திருத்திக்கொள்ள வாய்ப்பளிக்கவுமே சிங்களாந்தகபுரத்து அமரசுந்தரர் கோயிலில், அந்தக் காலை நேரத்தில், கண்ணுக்கும் செவிக்கும் கருத்துக்கும் விருந்தளிக்க, எனக்காகக் கதவுகள் திறந்து கருணையோடு காத்திருந்தது வரலாறு. இப்போது சொல் வாருணி, வரலாறு கைப்பிடிக்கும் துணைதானே.



அன்புடன்,

இரா. கலைக்கோவன்

 


       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.