http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 11
இதழ் 11 [ மே 15 - ஜூன் 14, 2005 ] இந்த இதழில்.. In this Issue.. |
வாசகர்களுக்கு வணக்கம்.
அறிவியல், வணிகம், நுண்கலை முதலான அத்தனைத் துறைகளும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் மாறி வருகின்றன. 'என்றும் மாறாதிருப்பது மாற்றம் மட்டுமே' என்னும் வாக்கியம் வரலாற்றாய்வுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த எத்தனையோ இடங்கள், பல ஆய்வாளர்களின் ஆய்வுக்குப் பின்னும் பல புதிய தகவல்களை தகுந்தவருக்குத் தர வேண்டி காத்துக் கொண்டிருக்கின்றன. 'தகுந்தவர்' என்றால், 'எவர் தகுந்தவர்?' என்ற கேள்வியும் எழுகிறது. புதிய தரவகள் நமக்கு முகமன் கூற இரண்டே தகுதிகள்தான் தேவை. ஒன்று உணமையான உழைப்பு (sincerity), இரண்டாவது கண் திறந்து பார்ப்பது (observation). கண் திறந்து பார்ப்பதாவது? கண் திறவாமல் பார்க்கமுடியுமா? இது என்ன விநோதம்!, என்று உங்களுக்குத் தோன்றலாம். வரலாற்று ஆய்வு என்னும் துறையில் பல ஜாம்பவான்கள் தங்களது வாழ்வையே அர்ப்பணித்திருக்கிறார்கள். அவர்கள் கருத்துக்கள் பெரும்பாலும் சரியாக, நமக்கு வழிகாட்டியாக இருக்கின்றன. அக்கருத்துக்களை வழிகாட்டியாக மட்டுமே பயன்படுத்தி, கருத்தை கருத்தாக மட்டுமே கொண்டு, கருத்துக்குப் பின் இருக்கும் மனிதரோடு இணைத்துக் பார்க்காமல் நோக்குவதே, 'கண் திறந்து' பார்ப்பதென்பது. சென்ற சில மாதங்களில் மட்டும், மா.இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தின் உழைப்பால் உலகிற்கு கிடைத்த அரிய தகவல்களே மேற் சொன்ன கருத்திற்கு உதாரணங்கள். திருத்தவத்துறைக்கு (லால்குடி) அருகே இருக்கும் நகரில் கிடைத்த மஹாவீரர் சிற்பம், அந்த பிரதேசத்தில் சமண சமயமும் பரவியிருந்ததை பறை சாற்றுகிறது. திருத்தவத்துறை சப்தரிஷீஸ்வரர் கோயிலில் ஐய்யனார் என்று கொள்ளப்பட்டிருந்த சிற்பத்தை 'கண் திறந்து' பார்த்த பொழுது, தேவாரத்தில் அப்பர் 'காபாலி' என்றழைக்கும் சிவனின் உருவம் உலகுக்கு வெளிப்பட்டது. திருவலஞ்சுழியில், பாழடைந்த நிலையில் இருக்கும் வடக்கு கோபுர வாயிலில் இருக்கும்க் சிறு சிற்பங்களில் ஒன்று இறைவன் முன் உடுக்கையும், செண்டு தாளமும் முழக்கி தேவாரம் இசைப்பதைச் சித்தரிக்கிறது. கல்வெட்டு வழிச் செய்தியாக இருந்த தேவாரம் இசைக்கும் முறைக்கு சிற்பச் சான்றாக இது அமைகிறது. இதே கோயிலில் உள்ள க்ஷேத்ரபாலர் திருமுன்னில் இருக்கும் கல்வெட்டுகளில் இருந்து சுந்தர சோழரின் மனைவியான 'நக்கன் சிங்கமான வளவன்மாதேவி' வெளிச்சத்துக்கு வருகிறார். அங்கிருக்கும் மற்றொமொரு கல்வெட்டு 'பழையாறை' என்னும் அளவுகோல் இருந்ததைத் தெரியப்படுத்துகிறது. இக்கோயில்களெல்லாம் பல அறிஞர்கள் முன்பே ஆய்வு செய்த இடங்கள்தான். எத்தனையோ இலக்கியச் செம்மல்கள் ஆழ்ந்து முத்தெடுத்த தேவாரத்தில்கூட, இதுவரை உலகிற்கு தெரியாத சிவபெருமானின் மகளைப் பற்றிய செய்தி வரலாறு.காம்-இன் இவ்விதழில் முனைவர்.கலைக்கோவனின் கட்டுரை மூலம் வெளி வந்திருக்கிறது. பாரதி, 'சரித்திரத் தேர்ச்சி கொள்' என்பதை தவறாக புரிந்து கொள்ளாமல் இருக்க 'புதியன விரும்பு' என்று தெளிவுபடுத்தியிருக்கிறான். சரித்திரம் என்பது பல உயிர்களை பலி வாங்கிய போர்கள், பொங்கி ஓடிய ரத்த ஆறுகள், தகர்க்கப்பட்ட மாளிகைகள், உடைக்கப்பட்ட சிலைகள் பற்றி படிக்கும் படிப்பு அல்ல. பல நாகரீகங்களின் அமைப்பையும், அங்கு பரவி வளர்ந்த கலைகளையும், சமுதாய அமைப்பையும் பற்றி புதிய தகவல்களைத் தேடும் முயற்சி. தகவல்கள் காத்திருக்கின்றன, சரியான தேடல்களைத் தேடியபடி! --ஆசிரியர் குழு. பி.கு: சென்ற இதழில் வந்த கட்டுரைகளுக்குப் பின்னூட்டம் அளிக்க முயன்று அளிக்கமுடியாமல் போன வாசகர்களுக்கு வருத்தத்தினைத் தெரிவித்துக் கொள்கிறோம். பின்னூட்டப் பகுதி இப்பொழுது சரி செய்யப்பட்டுவிட்டது.this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |