http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 11

இதழ் 11
[ மே 15 - ஜூன் 14, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

புதியன விரும்பு
பகவதஜ்ஜுகம் - 2
பேய்த்தொழிலாட்டி
யாவரே எழுதுவாரே?
பழுவூர்-4
கட்டடக்கலைத் தொடர் - 9
வெளிச்சத்திற்கு வராத உறவுகள்
கல்வெட்டாய்வு - 9
மைக்கேல் லாக்வுட்டுடன் ஒரு சந்திப்பு
Gopalakrishna Bharathi - 2
சங்கச்சாரல் - 10
இதழ் எண். 11 > கதைநேரம்
(பரிவிராசகர் நுழைகிறார்)

<பரிவிராசகர்> : சாண்டில்யா! சாண்டில்யா!

(சுற்றிப் பார்த்துவிட்டு) இப்படித்தான் இவன் மறைந்து போவான். அறிவற்று இருட்டில் வாழ்பவனாயிற்றே. ஏனென்றால் :

மூப்பின் பயனால் பிணியின் சுரங்கம் இவ்வுடலம் மறைந்துறையும்
தீமை விளிம்பில் உழலுவது; திரைகளுக்கீடு தரும் ஆற்றங்கரை மரம்
போலும் முன்வினையால் மறுவுடலாய் வந்தாலும், அழகொடு இளமை
ஏமாந்து குற்றமெனும் சவக்குழிக்கே குருடாய் ஏகிச் செல்பவன் மனிதன்.

அதனால் இந்த அப்பாவியை நொந்து கொள்ளுவதால் பயனில்லை. இன்னும் ஒரு தடவை அழைப்போம்.

சாண்டில்யா! சாண்டில்யா!

(சாண்டில்யன் வருதல்)

<சாண்டில்யன்> : காக்கைக்கு மிஞ்சிய பலியுணவால் வாழ்ந்த ஒரு குடும்பத்தில் நான் பிறந்தேன். புனிதப் பூணூல் அணிந்து எங்கள் அந்தணத்தன்மையில் நாங்கள் பெருமை கொண்டிருந்தோம். இரண்டாவது, எங்கள் வீட்டில் உணவில்லாதபடியால் நான் பசியுடன் இருந்தேன். காலை நேரமாவது உணவு கிடைக்கும் என்ற நினைவால் புத்த மதத்திற்கு மதம் மாறிப்போனேன். இன்றும் அந்த அயோக்கியர்கள் ஒருவேளை மட்டும் உண்ணுகிறபடியால் பசியாறாமல் இருந்து அந்த மதத்தையும் விட்டுவிட்டேன். அங்கியைக் கிழித்தேன். திருவோட்டையும் உடைத்தேன். குடையை மட்டும் விடாமல் வெளியேறினேன். மூன்றாவது, இந்த நீசப் பண்டிதனின் பாத்திரங்களைச் சுமக்கின்ற கழுதையாக மாறிவிட்டேன்.

இந்த சாமி எங்கே போனாரோ? ஓ... இப்படித்தானிருக்கும். எந்த உட்பூச்சு ஆசாமி காலை உணவுக்காகத் தானே யாசிக்கப் புறப்பட்டு விட்டாற்போல் தெரிகிறது. அப்படியானால் இந்த சாமியை தூர இடத்தில்தான் தேடணும். (கடந்து நின்று பார்த்தவண்ணம்) இதோ ... ஆண்டவர் ... (நெருங்கி) மன்னிக்க வேண்டும். மன்னிக்க வேண்டும். ஆண்டவரே மன்னிக்க வேண்டும்.

<பரிவிராசகர்> : சாண்டில்யா! பயப்படாதே; பயப்படாதே!

<சாண்டில்யன்> : ஆண்டவனே! இன்பத்துக்கே இடமறிந்து முடிவில்லாத விழாக்களையுடைய இந்த உலகத்தில் நீங்கள் யாசிக்கும் முறைதான் என்ன?

<பரிவிராசகர்> : கேள்.

வசைகேட்டும் வாடாதே இவ்வுலகமிசை வாழ எது வேண்டும் அதுமட்டில் யாசித்து;
வருகவலை கருத்து எனும் இவை துறந்த உலகின்வழி;
மிக வாழவாழியினுள் அச்சுறுத்தும் ஜந்துவையும் கருதுதலை இல்லாத ஒருவனென
அப்பால் நான் அசைந்தசைந்து செல்லுகிறேன்.

<சாண்டில்யன்> :

ஐயனே நின் ஆசியின்றி அப்பனென்று அண்ணனென்று
மெய்யாகவே ஆருமில்லை எந்தனுக்கு
ஆயினும் நின் புண்ணியத்தின் பாதையினை நண்ணியல்ல;
உய்யவொரு உணவில்லாக் காரணந்தான்
இங்கே நான் வந்தனனே இவ்வழிக்கே.

<பரிவிராசகர்> : சாண்டில்யா! என்ன இது? இப்படிப் பேசுகிறாய்?

<சாண்டில்யன்> : பொய் சொன்னால் கருமங்கள் வந்தடையும் என்று ஆண்டவரே சொல்லவில்லையா?

<பரிவிராசகர்> : பிறகென்ன? மாயையை மெய்யென்று பிறழக் கொண்டதால் வந்த பந்தங்கள்தான் இவை. ஏனென்றால்:

ஆசைகளை உள்ளடக்கி வாஞ்சையுடன் கடமைகளை
வகையுடனே முடித்திடினே வரும் வரமாம் கனியதனை
அவர்க்கெனவே இறைவருமே அந்தம் வரைப்பேணி வைப்பார்.

<சாண்டில்யன்> : அந்தக் கனி எப்போ கிடைக்கும்?

<பரிவிராசகர்> : பற்றின் மீது பணத்தின் மீது அசட்டை உணர்வைப் பெறும்போது.

<சாண்டில்யன்> : அதை எப்படிப் பெறுவது?

<பரிவிராசகர்> : பந்தம் அறுத்து.

<சாண்டில்யன்> : ஆண்டவனே, அப்படியானால் மறுபடியும் வினவுகிறேன். பந்தமறுப்பதா? அது என்ன?

<பரிவிராசகர்> : அதுதான் நடுநிலைமை. விருப்புக்கும் வெறுப்புக்கும் ஊடான ஒரு நடுவழி. அதாவது :

வாழ்வெனினும் தாழ்வெனினும் ஒன்றாகட்டும் ஆபத்தோ
ஆனந்தமோ அசைவற்றிரு. பற்று பகை இரண்டினையும்
ஒன்றென்று அறிந்தார்க்கு அந்நிலையே பந்தமின்மை.

<சாண்டில்யன்> : அப்படியும் உண்டோ?

<பரிவிராசகர்> : இல்லாததைச் சொல்லமாட்டோமே!

<சாண்டில்யன்> : அதை அடைவது கூடும் என்கிறாரா ஆண்டவர்?

<பரிவிராசகர்> : அதில் சந்தேகமா?

<சாண்டில்யன்> : பொய், இது பொய்.

<பரிவிராசகர்> : அது எப்படி?

<சாண்டில்யன்> : அது மெய்யானால் ஆண்டவர் என் மீது ஏன் கோபங்கொள்கிறார்?

<பரிவிராசகர்> : நீ படிக்காத காரணத்தால்தான்.

<சாண்டில்யன்> : நான் படிக்கிறேன், இல்லாவிட்டால் இல்லை. எல்லாவற்றையும் துறந்த உமக்கு அதைப்பற்றி என்ன கவலை?

<பரிவிராசகர்> : இல்லை. அது அப்படி இல்லை. (தனது கைத்தடியால் அடித்து விடுகிறார். பிறகு தனது முறையற்ற செயலுக்காக சிரித்துச் சமாளிக்கிறார்.) சீடனாகும் ஒவ்வொருவனுக்கும் அடிபடுவது விதிமுறைக்கு அப்பாற்பட்டதல்ல. அதனால் கோபக்குறி ஒன்றுமின்றி உன்னை அடித்துவிட்டேன்.

<சாண்டில்யன்> : அழகு! அழகு! கோபமில்லாமலேயே ஆண்டவன் என்னை அடிக்கிறார். விடுங்கள் அந்தக் கதையை. யாசகத்துக்கு நேரம் வந்தது.

<பரிவிராசகர்> : முட்டாள். மதியங்கூட ஆகவில்லை. உலக்கையை ஒதுங்க வைத்து, உலை நெருப்பை அணைத்த பிறகு வீட்டுக்காரர்கள் சாப்பிட்ட பிறகுதான் சரியான நேரம். அதனாலே அதோ சோலை ... அங்கே போய் இளைப்பாறலாம்.

<சாண்டில்யன்> : ஆ ... ஆஹா ... ஆண்டவனே, சபதம் முறித்துவிட்டார்.

<பரிவிராசகர்> : எப்படி?

<சாண்டில்யன்> : ஓய்வு எதற்கு? வாழ்வும் தாழ்வும் ஆண்டவனுக்கு ஒன்றுதானே?

<பரிவிராசகர்> : ஏனில்லை? வாழ்வும் தாழ்வும் என் ஆன்மாவுக்கு ஒன்றுதான். என்னுடைய உடலோடு கூடிய உயிர்தான் ஓய்வை நாடுகிறது.

<சாண்டில்யன்> : ஆண்டவனே, அதென்ன ஆன்மா என்பது? அதென்ன உடலோடு கூடிய உயிர்?

<பரிவிராசகர்> : கேள் :

ஆழுறக்கம் கொள்கையில் ஆகாசத்தும் எட்டிவிடும்
ஆன்மாவின் ஆதிக்கம்
உடலோடு உயிரென்றால் விதிவழியே உழன்றுவரும்
ஒரு மணல் பாண்டமாகும்.

<சாண்டில்யன்> : காலத்தைக் கடந்தது. அழிவில்லாதது. அரூபமானது. பிரிக்கமுடியாதது ஆன்மா எனப்படுவது. சிரிப்பது, சிரிக்கவைப்பது, உறங்குவது, உண்ணுவது, அழிவுக்கு இலக்கணமானது, உடலோடு கூடிய உயிர் என்பது.

<பரிவிராசகர்> : எதுவரை உன்னால் முடியுமோ அதுவரை புரிந்து கொண்டாய்.

<சாண்டில்யன்> : ஆஹா! அப்படி வாரும்! அகப்பட்டுக் கொண்டீர்.

<பரிவிராசகர்> : எப்படி?

<சாண்டில்யன்> : மறுபடியும் அதே பிரச்சினை. உடம்பின்றி ஒன்றுமில்லை.

<பரிவிராசகர்> : பேதா அபேதங்களைப் பிரதிபலிக்கும் உலக ஒழுக்கத்தைச் சொல்லிவிட்டாய். அதனால்தான் நாம் இப்படிச் சொல்லிக் கொடுத்தோம்!

<சாண்டில்யன்> : அது இருக்கட்டும். நீர் யார்?

<பரிவிராசகர்> : கேள் ...

நீரொடு காற்று ஒளி ஆகாயமென்று புகல்
உலகியல் கூறு எலாம்
அசைவாடும் வகையினிலே ஓரிடத்துக் கூடினவை
ஊறு ஒளி நாற்றமதை உள்ளபடி உணருபவை
விலங்கினமோ அன்றி அதை ஒத்து இங்கு உள்ள ஒரு
உறவினமோ மனிதனெனப்படுபவன் நான்.

<சாண்டில்யன்> : ஆஹா ... உம்மையே தெரிந்து கொள்ளவில்லை இதுவரை, உள்ளேயுள்ள ஆன்மாவைப்பற்றி எப்படித் தெரியப்போகிறது? (பார்த்து) ஆண்டவனே, இதோ சோலை.

<பரிவிராசகர்> : நீ முதலில் உள்ளே போ! இந்த தனிக்காட்டு செவ்வகத்தில் இளைப்பாறலாம்.

<சாண்டில்யன்> : ஆண்டவனே முதலில் நுழையட்டும். நான் பின்னாக வருகிறேன்.

<பரிவிராசகர்> : ஏன்?

<சாண்டில்யன்> : அதோ, அந்த அசோக மரத்தருகே புலி உண்டென்று என் அன்னை என்னை மிரட்டுவதுண்டு. ஆண்டவனே அதனால் மும்மே போகட்டும்.

<பரிவிராசகர்> : சரி, ஆகட்டும். (அவர்கள் நுழைகிறார்கள்)

<சாண்டில்யன்> : ஐயோ, புலி பிடித்துக்கொண்டதே! புலியின் பிடியிலிருந்து விடுவியுங்கள்! கிழித்துப் போடுகிறதே புலி. இரத்தம் வேறு கழுத்து வழியே சாடுகிறதே ...

(தொடரும்)this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.