http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 11

இதழ் 11
[ மே 15 - ஜூன் 14, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

புதியன விரும்பு
பகவதஜ்ஜுகம் - 2
பேய்த்தொழிலாட்டி
யாவரே எழுதுவாரே?
பழுவூர்-4
கட்டடக்கலைத் தொடர் - 9
வெளிச்சத்திற்கு வராத உறவுகள்
கல்வெட்டாய்வு - 9
மைக்கேல் லாக்வுட்டுடன் ஒரு சந்திப்பு
Gopalakrishna Bharathi - 2
சங்கச்சாரல் - 10
இதழ் எண். 11 > பயணப்பட்டோம்
மைக்கேல் லாக்வுட்டுடன் ஒரு சந்திப்பு
ச. கமலக்கண்ணன்
சனிக்கிழமை, மார்ச் 19, 2005.

"ஹலோ கமல், இன்னிக்கு காலையில டாக்டர். கலைக்கோவன் போன் பண்ணியிருந்தார். போன வாரம் திருவலஞ்சுழியில படிச்ச கல்வெட்டை இது வரைக்கும் யாரும் படிக்கலையாம். நாமதான் அதை முதன்முதலில் படிச்சு வெளியிடப்போறோம். வாழ்த்துக்கள்ன்னு சொன்னார். வர்ற சனி, ஞாயிறு போய் முழுசாப் படிச்சுடலாம்."

இலாவண்யா இத்தகவலைத் தொலைபேசியில் தெரிவித்ததும் தலைகால் புரியவில்லை. ஆஹா! 'என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே! என்று பாடிக்கொண்டே வீட்டை விட்டுக் கிளம்பினேன். அப்போ 'சனிக்கிழமை MS வகுப்புக்கு வரமுடியாதுன்னு ஆஷா மேடமுக்கு போன் செய்யணும், புது வீட்டுக்கு டைல்ஸ் அடுத்த வாரம் வாங்கி அனுப்பறேன்னு அப்பாவுக்கு சொல்லணும், ஆபீஸ் பாய்கிட்ட இரயில் டிக்கெட் பதிவு பண்ண பணம் குடுக்கணும்' எனப் பொற்கிழிக்குக் கனவு காணும் தருமி போலப் பட்டியலிட்டுக் கொண்டே அலுவலகத்துக்குள் நுழைந்தேன். வருகை நேரத்தைப் பதிவு செய்து கொண்டிருந்த போதே, தோளின் மீது ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்த்தால், என் மேலதிகாரி. 'என்னய்யா? காலையிலேயே இவ்வளவு சந்தோஷமா இருக்கே! என்ன விஷயம்?' என்றார். அவரிடம் வரலாறு.காம், திருவலஞ்சுழிக் கல்வெட்டு, இலாவண்யா போன் என எல்லா விஷயங்களையும் விளக்கிக் கொண்டிருந்தால் அன்றைய பொழுது ஓடிவிடும். உருப்படியாக எந்த வேலையையும் செய்ய முடியாது. எனவே, 'இந்த வீக் எண்ட் ஊருக்குப் போறேன் சார்!' என்றேன் சுருக்கமாக. 'சரி! போக வேண்டிய ஊருக்கெல்லாம் இந்த வாரமே போயிட்டு வந்துடு. அடுத்த வாரம் வேற ஊருக்குப் போகவேண்டும்.' என்றார். அடுத்த வாரம் தஞ்சாவூர் போகத் திட்டமிட்டிருந்தது இவருக்கு எப்படித் தெரிந்தது? என யோசித்தவாறே அவரைப் பார்த்தேன். 'என்ன முழிக்கறே? அடுத்த வாரம் நியூ யார்க் ஆபீஸ் போகணும். புது ப்ராஜெக்ட்ல மூணு மாசம் டிரெயினிங். அமெரிக்காவில போய் ஜாலியா இருந்துட்டு வா!' என்றார். 'என்னது, ஜாலியா? அடப்பாவி மனுஷா! கட்டடக்கலையையும் கல்வெட்டையும் விட்டுட்டு எப்படிய்யா மூணு மாசம் ஜாலியா இருக்கிறது? போன வருஷம் போனப்பவே ரொம்பக் கஷ்டப்பட்டு இருந்தேன். இந்த வருஷம் வரலாறு.காம் வேற கூடச் சேர்ந்துடுச்சு. என மனதுக்குள் நினைத்துக் கொண்டே, சார்! அதெல்லாம் முடியாது. Personal commitments நிறைய இருக்கு, வேற யாரையாவது அனுப்பிடுங்க என்றேன்." எவ்வளவு போராடியும் மனிதர் விட்டுக்கொடுக்கவில்லை. கடைசியாக, மூன்று மாதங்களை ஒரு மாதமாகக் குறைக்கச் சம்மதித்தார். சரி, என்ன செய்வது, நடப்புகளைத் தொலைபேசியில் விசாரித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். அலைபாயும் மனத்தை அமைதிப் படுத்த, அவ்வப்போது மரத்தடி.காமில் கதைகளையோ அல்லது வரலாறு.காமிலுள்ள பழைய கட்டுரைகளையோ படிப்பது வழக்கம். அப்படி மேய ஆரம்பித்தபோது, மத்தவிலாசப் பிரகசனம் கண்ணில் பட்டது. உடனே, மூளைக்குள் பல்பு எரிந்தது. நியூ யார்க்கிலிருந்து பாஸ்டன் போய், மைக்கேல் லாக்வுட்டைச் சந்தித்தால் என்ன? உடனே, லாக்வுட்டுக்கு அப்பாயின்மெண்ட் கேட்டு மின்னஞ்சல் அனுப்பு என மூளை கட்டளையிட, கைகள் செயல்படுத்தத் தொடங்கின. என்னைச் சந்திக்க ஆர்வமாக இருப்பதாக அடுத்தநாளே மறுமொழி வந்தது. ஆஹா! 'இதைத்தான் ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன் என்பார்கள்' என்று லலிதா மெயில் அனுப்பியிருந்தார். சரி! லாக்வுட்டின் கணிப்பொறியில் Mac OS இருப்பதால், online-ல் வரலாறு.காம் படிக்க முடியாது. ஆகவே, அவருக்கு வரலாறு.காம் அச்சுப்பிரதி, பல்லவர்கள் மீது பற்றுக் கொண்டவர் என்பதால் டாக்டர். கலைக்கோவனின் அத்யந்தகாமம், என இன்னொரு பட்டியல் தயாரானது. இருப்பினும் அத்யந்தகாமம் கடைசி நேரத்தில் விட்டுப்போய் விட்டது.

நியூயார்க்கை அடைந்து அவரிடம் தொலைபேசியபோது, சந்திக்கும் நாள், இடம் போன்றவை உறுதி செய்யப்பட்டு, பேருந்து நிலையத்துக்கே வந்து அழைத்துச் செல்வதாகக் கூறினார். அவரது வீட்டில் ஒரு நாள் தங்கிச் செல்லுமாறும் கேட்டுக்கொண்டார். வழக்கமாக அமெரிக்கர்கள் வீட்டில் தங்கச் சொல்வது மிக அரிது. இவர் இந்தியாவில் நெடுங்காலம் இருந்ததால் விருந்தோம்பும் பண்பு நிறைய இருக்கிறது. சொன்னபடியே, பாஸ்டன் பேருந்து நிலையத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே வந்து காத்திருந்தார். இதற்கு முன்னர் ஒருவரையொருவர் பார்த்ததில்லை என்றாலும், கண்டுபிடிக்க அதிக சிரமம் கொடுக்காமல், அவரது Pallava Art புத்தகத்தைக் கையில் வைத்திருந்தார். அப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறோம் என்ற உணர்வே இல்லாமல், நெடுநாட்கள் பழகியது போல் பேசினார். பாஸ்டனிலிருந்து அவர் வசிக்கும் இடமான மில்டனுக்கு 20 நிமிட இரயில் பயணம். பாஸ்டன் இரயில் நிலையத்திலேயே எங்களது சுவாரசியமான உரையாடல் ஆரம்பித்து விட்டதால், பேச்சு சுவாரசியத்தில் தவறான இரயிலில் ஏறி, இரண்டு மணிநேரம் அங்கும் இங்கும் சுற்றி, பிறகு அவரது வீட்டை அடைந்தோம்.

இங்கு மைக்கேல் லாக்வுட்டைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம்.

அமெரிக்கரான இவர் பிறந்தது மதுரையில். அப்போது இவரது தந்தை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவர் பள்ளிப்படிப்பைக் கொடைக்கானலில் முடித்து விட்டு, பட்டப்படிப்பைத் தொடர அமெரிக்காவுக்குச் சென்று விட்டார். தத்துவ இயலில் Ph.D முடித்தபின், தாம்பரத்திலுள்ள சென்னை கிறித்தவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிய அழைப்பு வந்தபோது, மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் இந்தியாவுக்கு வந்தார். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் அங்கு தத்துவ இயல் பேராசிரியராகப் பணியாற்றினார். ஒரு தத்துவ இயல் பேராசிரியருக்கு வரலாற்றார்வம் எப்படி வந்தது? இதோ! அவரது வார்த்தைகளிலேயே!


சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் பணிபுரிந்தபொழுது, நாங்கள் ஒரு குழுவாக இருந்தோம். நான், கிஃப்ட் சிரோமணி, தயானந்தன், விஷ்ணுபட் ஆகியோர். கிஃப்ட் சிரோமணியிடமிருந்துதான் பல்லவர் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டேன். அவர் இப்போது இல்லை. 1988லேயே இயற்கை எய்திவிட்டார். அவர் இருந்தவரை நாங்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரஇறுதியிலும் ஏதாவது பல்லவர் தலங்களுக்குச் செல்வது வழக்கம். வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பாகப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் மூலமாகத்தான் இந்த ஆர்வம் தொற்றிக்கொண்டது. நான் பிறந்தது மதுரையில். மீனாட்சியம்மன் ஆலயத்திற்கு எதிரிலிருக்கும் மிஷன் ஆஸ்பத்திரியில். ஆகவே, மீனாட்சியம்மன் அருளால்தான் இந்திய வரலாற்றை நேசிப்பதாக நண்பர்கள் நகைச்சுவையாகக் கூறுவது உண்டு.


பல்லவ மன்னர்களிலேயே இவர் அதிகம் நேசிப்பது முதலாம் மகேந்திரவர்மரைத்தான். அவரைப்பற்றி நிறைய ஆய்வுகள் செய்துள்ளார். இதற்கு முன்பு டாக்டர் கலைக்கோவன் அவர்கள் மகேந்திரரைப் பற்றிப் பல உயர்வான செய்திகளைச் சொல்லியிருக்கிறார். சிவகாமியின் சபதத்தில் வருவது போல அவர் ஒரு சகலகலா வல்லவர். குறிப்பாக, மகேந்திரரின் விருதுப்பெயர்கள் ஒவ்வொன்றும் வெறும் கற்பனையாகப் புனையப்பட்டவை அன்று. ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட பொருள் உண்டு. அப்பொருள் உணர்த்தும் குணம் உண்மையிலேயே வாய்க்கப்பெற்றவர் மகேந்திரவர்மர். உதாரணமாக, மாமண்டூர்க் கல்வெட்டில் தக்ஷிணச்சித்திரம் என்ற நூலுக்கு உரையெழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓவியக்கலையைப்பற்றி சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ஒரு நூலுக்கு உரையெழுத, வெறும் சமஸ்கிருதப் புலவராக இருந்தால் மட்டும் போதாது. ஓவியக்கலையிலும் மிகுந்த தேர்ச்சி வேண்டும். ஆக, சித்திரக்காரப்புலி என்பது எவ்வளவு பொருத்தமான பெயர்! இவர் இசைக்கலையிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர் என்பதற்கும் மாமண்டூர்க் கல்வெட்டிலேயே சான்று உள்ளது. மகேந்திரரின் மனைவி பாடுவதில் வல்லவர். அவரது குரலுக்குப் பொருந்தும் விதமாக, இசைக்கருவிகளில் மாற்றங்கள் செய்ததாகக் கூறுகிறது. மைக்கேல் லாக்வுட் இவரைப்பற்றிக் கூறுகையில், ஒரு சமஸ்கிருத நாடகத்தில் ஒரு மன்னர் 100 ஆண்டுகளும் 10 நாட்களும் உயிர் வாழ்ந்ததாகக் குறிப்பு வருகிறது. அவர் ஏன் மகேந்திரராக இருக்கக்கூடாது? மாமல்லபுரம் சிற்பங்கள் ஏன் இவர் மேற்பார்வையில் செதுக்கப்பட்டிருக்கக்கூடாது? என்கிறார். ஆனால் இவற்றிற்குத் தக்க ஆதாரம் எதுவுமில்லை. தன்னுடைய ஒரு அனுமானம்தான் எனவும் ஒப்புக்கொள்கிறார். போதிய ஆதாரங்கள் கிடைக்காத நிலையில், மனம்போன போக்கில் முடிவுகளைத் தீர்மானித்து விட்டு, அதை நியாயப்படுத்த அந்தக் கோணத்தில் சான்றுகளைத் தேடும் ஆய்வாளர்கள் மத்தியில் உண்மையையும் கற்பனையையும் பிரித்துப்பார்க்கத் தெரிந்த இவர் மிகுந்த பாராட்டுக்குரியவர். மகேந்திரரின் விருதுப்பெயர் பற்றிய ஆராய்ச்சியிலும் அத்தகைய தவறு நிகழ்ந்திருப்பதாகக் கூறுகிறார்.


காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலிலிருந்து நான்கு தூண்கள் சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றில் மகேந்திரரின் பதினாறு விருதுப்பெயர்கள் வெட்டப்பட்டுள்ளன. அதில் ஒன்று சித்திரக்காரப்புலி. இவ்விருதுப்பெயர் மூன்று இடங்களில் காணப்படுகின்றன. திருச்சிராப்பள்ளி லளிதாங்குர பல்லவேசுவரகிருகத்தில் இது தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு இடங்களான காஞ்சிபுரம் மற்றும் பல்லாவரம் குடைவரைகளில் இது பல்லவ கிரந்தத்தில் காணப்படுகிறது. மகேந்திரரின் இன்னொரு விருதுப்பெயர் குஸஞானா. சமஸ்கிருதத்தில் குஸ என்றால் புல் என்று பொருள். குஸஞானா என்றால் புல்லைப்போன்ற கூர்மையான அறிவுடையவன் என்பதாகும். ஆனால் தொல்லியல் துறையைச் சேர்ந்த நமது நண்பர் திரு டி.வி.மகாலிங்கம் அவர்கள், பல்லவர் கல்வெட்டுகள் என்ற தமது புத்தகத்தில், குஸ என்பதைக் குச என்று படித்துவிட்டு, குச என்றால் பெண்களின் மார்பகம். குசஞானா என்றால் பெண்களைப் பற்றி நன்கு அறிந்தவன் என்கிறார். சமஸ்கிருதத்தில் ஒரு எழுத்து மாறினால் பொருளே மாறிவிடும். மிகவும் அரிதாக, சூத்ரதாரா என்ற விருதுப்பெயர் பல்லவ நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. சோழர் நாணயத்தில் மன்னரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை.


டாக்டர் கலைக்கோவன் மகேந்திரர் குடைவரைகளைப் பற்றிய புத்தகம் ஒன்றை எழுதிக் கொண்டிருப்பதாகவும், அதன் கடைசி அத்தியாயத்தில் மகேந்திரரின் குணாதிசயங்களைப் 'பேரறிவாளன்' என்ற பெயரில் எழுதிக் கொண்டிருப்பதாகக் கூறியதும், தான் எழுதியுள்ள 'Metatheater and Sanskrit Drama' என்ற நூல் பயனுள்ளதாக இருக்கும் என்றும், அதிலுள்ள தகவல்கள் ஏதாவது உபயோகமாக இருந்தால் தயங்காமல் எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறினார். ஏற்கனவே, மகேந்திரரின் இரு நாடகங்களான மத்தவிலாசப்பிரகசனம் மற்றும் பகவத்தஜ்ஜுகம் ஆகியவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். நமது வரலாறு.காம் இதழ்களில் இந்த இரு நாடகங்களை வெளியிட உரிமை கொடுத்தவரும் இவர்தான். மகேந்திரரின் நாடகங்கள் அவரது வாழ்வில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் சிலவற்றை உள்ளடக்கியது. அதாவது, கதை நிகழ்ந்த காலம் மகேந்திரர் வாழ்ந்த காலம் எனக் கூறலாம். காஞ்சிபுரத்தில் உள்ள சுரகரேசுவரர் கோயிலிலுள்ள ஒரு சிற்பத்தொகுதியில், மத்தவிலாசத்தில் வரும் ஒரு காட்சி செதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நாடகத்தின் கடைசியில் வரும் ஒரு காட்சியும், அவரது வாழ்வுடன் பொருந்தி வருவதாக லாக்வுட் கூறுகிறார்.


முதலாம் மகேந்திரவர்மர் பல நாடகங்களை எழுதியிருந்தாலும், மத்தவிலாசப் பிரகசனமும் பகவதஜ்ஜுகமும் தலைசிறந்ததாகக் கருதப்படுகின்றன. மகேந்திரரின் தந்தை சிம்மவிஷ்ணு, பல்லவர்களுக்கு அடங்கியிருந்த கங்க நாட்டின் இளவரசன் தாமோதரனைத் தன் அரசவைக்கு அழைத்து வந்து தன்னுடன் வைத்துக்கொண்டார். சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமை கொண்டிருந்த தாமோதரனைத் தன் மகன் போலவே கருதி வளர்த்து வந்தார். அதாவது தாமோதரனும் மகேந்திரரும் ஒன்றாகவே வளர்ந்து வந்தனர். அவரிடமிருந்துதான் மகேந்திரர் சமஸ்கிருதத்தையும் நகைச்சுவை நாடகங்கள் எழுதும் கலையையும் கற்றிருக்க வேண்டும். மகேந்திரரின் இளமைக்காலத்தில் எழுதப்பட்ட பல அங்கத நாடகங்கள் ஒரு இளைஞரால் எழுதப்பட்டவை என்பதைத் தவிர வேறெந்த ஆசிரியர் குறிப்பும் இல்லாமலேயே இருக்கின்றன. இதை மகேந்திரரும் தாமோதரனும் சேர்ந்தே எழுதியிருக்கவேண்டும் என்பது எனது கருத்து. மத்தவிலாசத்தில் வரும் பைத்தியக்காரன், மக்கள் தன்னைத்தான் பைத்தியக்காரன் என்று அழைக்கிறார்கள் என அறியாமல் வேறு யாரோ ஒரு பைத்தியக்காரன் இருப்பது போல் தேடுவான். நகரின் எல்லையிலுள்ள சுவருக்குப் பின்னால் ஒளிந்திருப்பதாகத் துறவி ஒருவர் பொய் சொல்வார். அதைநம்பிச் சுவரை நோக்கி ஓடுவான். சாளுக்கியர்கள் காஞ்சிபுரத்தின் மீது படையெடுத்து வந்தபோது, கோட்டையை விட்டு யாரும் வெளியே வராததைக் கண்டு, மகேந்திரர் காஞ்சியின் எல்லைச்சுவருக்கு வெளியே ஒளிந்து கொண்டிருப்பார் எனச் சாளுக்கிய மன்னன் புலிகேசி எள்ளி நகைக்கிறான். என் பார்வையில், மகேந்திரர் அவனைக் கேலி செய்வது போல், மத்தவிலாசத்தில், பைத்தியக்காரன் தான் சுவருக்குப் பின்னால் ஒளிந்திருப்பவனைத் தேடுவான் எனப் புலிகேசியைப் பைத்தியக்காரனாகச் சித்தரித்திருப்பார்.


மகேந்திரர் நிச்சயம் விசித்திரசித்தர்தான். இல்லாவிட்டால், கோயில் என்றாலே செங்கல் பாதி மரம் பாதி கலந்து செய்த கலவைதான் என்று இருந்த நிலையை மாற்றி, என்றும் அழிவில்லாத இறைவனுக்கு என்றும் அழிவில்லாத கருங்கல்லில் கோயில் எடுப்பிக்கத் தோன்றியிருக்குமா? அல்லது அவ்வாறு எடுத்ததை உலகறிய அங்கே கல்லிலே வெட்டியும் இருக்க முடியுமா? மண்டகப்பட்டு, தளவானூர், மாமண்டூர், பல்லாவரம், அப்பப்பா! எத்தனை முயற்சிகள்! எத்தகைய கட்டடக்கலை அறிவு! அவற்றுக்குக்கூடத் தன் விருதுப்பெயர்களையே சூட்டி மகிழ்ந்த அழகு! சத்ருமல்லேசுவராலயம், லளிதாங்குரம், அவனிபாஜனம், இப்படிப் பலப்பல. தொடக்க காலங்களில் சோழர் மற்றும் பாண்டியர் கல்வெட்டுகளைப்போல் நிவந்தங்களைப் பற்றிய குறிப்பாக இல்லாமல், அவரது விருதுப்பெயர்களையே வெட்டியிருக்கிறார். மாமண்டூரில் காணப்படும் கல்வெட்டு அவரது இசையறிவை வெளிப்படுத்துகிறது. சரி! அவரது கல்வெட்டுகள் என்ன மொழியில், என்ன எழுத்துருவில் அமைந்துள்ளன? இந்திராணி எழுத்து முறையில் என்றார் லாக்வுட். என்னது! இந்திராணியா? பிராமி கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்ன இந்திராணி? அப்படியானால் வராகி, கௌமாரி, மகேஸ்வரி, சாமுண்டி எல்லாம் கூட இருக்கிறதா என்ன? இதோ! இதற்கு அவரது பதில்.


கி.மு இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு பிராமி எழுத்துரு இரண்டு விதமாக வளர ஆரம்பித்தது. வடக்கே மௌரிய சாம்ராஜ்யத்தில் ஒரு மாதிரி - அசோகன் பிராமி, தெற்கே தமிழ்நாட்டில் ஒரு மாதிரி - தமிழ் பிராமி. எழுத்துக்களைப் பொறுத்தவரை இரண்டுக்கும் பெரிய அளவில் வேறுபாடு இல்லையென்றாலும், தமிழ் பிராமியில் ழ்,ள்,ற்,ன் ஆகிய நான்கு எழுத்துக்கள் மிகுதியாக இருந்தன. கிட்டத்தட்ட கி.மு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி நான்காம் நூற்றாண்டு வரை தனித்தனியாக வளர்ச்சி பெற்று வந்தன. அதன் பின் அசோகன் பிராமி கிரந்தமாகவும், தமிழ் பிராமி வட்டெழுத்தாகவும் மாற்றம் பெற்றன. பல்லவர்களின் ஆட்சிமொழி சமஸ்கிருதமாக இருந்ததால் கோயில்களில் காணப்படும் அரசர்களின் கொடைகளைப் பற்றிய கல்வெட்டுகள் பல்லவ கிரந்தத்தில் பொறிக்கப்பட்டன. சிம்மவிஷ்ணுவின் தந்தை சிம்மவர்மரின் காலத்தில் தமிழில் கல்வெட்டுப் பொறிப்பதாக இருந்தால் வட்டெழுத்தை உபயோகித்திருக்கலாம். ஆனால், சமஸ்கிருதக் கல்வெட்டில் தமிழ் வார்த்தைகளை வெட்டப் பல்லவ கிரந்தத்தையே பயன்படுத்தினர். அந்த நான்கு எழுத்துக்களை மட்டும் வட்டெழுத்திலிருந்து எடுத்துக் கொண்டனர். பல்லவர்களின் சமஸ்கிருதக் கல்வெட்டுக்களைப் படிக்கும்பொழுது மிகவும் வியப்பாக இருக்கும். பல்லவ நாட்டு மக்கள் சமஸ்கிருதத்தில் நாட்டிலேயே சிறந்த புலமை என்று சொல்லுமளவுக்கு மிகுந்த அறிவு பெற்றிருந்தனர். இடையில் வட்டெழுத்து என்னவானது? அது ஒருபுறம் தென் தமிழ்நாட்டில் - பாண்டிய நாட்டில் - வளர்ந்து வந்தது. அப்போது கோயில்களில் கல்வெட்டுகள் வெட்டப்படாததால் நடுகற்களில் மட்டும் வட்டெழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. தமிழ்நாட்டில் முதல் நடுகல் சிம்மவிஷ்ணு காலத்தியது. கி.மு 500ல் மனிதர்களைப் பற்றியல்லாமல், ஒரு கோழிச்சண்டையைப் பற்றிய நடுகல். திரு ஐராவதம் மகாதேவன் தனது புத்தகத்தில் விரிவாக விளக்கியுள்ளார். அதன் பிறகு மகேந்திரவர்மர் வரையில் நிறைய நடுகற்கள் கிடைத்துள்ளன. முதன்முதலில் முதலாம் மகேந்திரவர்மர்தான் தமிழில் கல்வெட்டுக்களைச் செதுக்கினார். பிரம்மாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்துமுறையைப் பிரம்மாவின் பெண்வடிவமான பிராமி என்ற பெயரில் அழைப்பதால், மகேந்திரர் அறிமுகப்படுத்திய எழுத்துமுறையை அவரது பெண்வடிவமான இந்திராணி என்று அழைப்பதுதானே பொருத்தம்? உண்மையிலேயே அப்படி எந்த எழுத்துமுறையும் இல்லை. நண்பர்களுடன் பேசும்பொழுது பேச்சு சுவாரசியத்துக்காக இப்படிக் குறிப்பிடுவதுண்டு.


கல்வெட்டு எழுத்துமுறையைப் பற்றி இவ்வளவு சொல்கிறாரே, கல்வெட்டுகளைப் படிக்கும் அளவுக்குத் தமிழ் தெரியுமா இவருக்கு? மெதுவாகப் பேசினால் புரிந்து கொள்ளும் அளவுக்கே தெரியும். திரு. விஷ்ணுபட் அவர்கள்தான் கிரந்தக் கல்வெட்டுகளைப் படித்துக் கூறுவார். படிக்கத்தான் முடியாதே தவிர, பிழையில்லாமல் படியெடுத்துச் சரியான பொருளில் புரிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளது.


கல்வெட்டுகளின் செய்தியையும் வரிகளையும் வெளியிடுகிறார்களே தவிர, படங்களை அதாவது பிரதியைப் (estempage) பெரும்பாலும் வெளியிடுவதில்லை. திரு நாகசாமி, தமிழ்நாடு தொல்லியல் துறையின் இயக்குனராக இருந்த பொழுது, மதுரை அருகிலிருக்கும் பூலான்குறிச்சியில் ஒரு கல்வெட்டு இருப்பதாக யாரோ ஒருவர் மூலமாக அறிந்து கொண்டு அதைப் பிரதியெடுக்கச் சென்றார். அது கி.பி நான்காம் நூற்றாண்டில் தமிழ் பிராமி வட்டெழுத்தாக மாறத் தொடங்கிய காலகட்டத்தைச் சேர்ந்தது. வழக்கமாக ஜனவரி/பிப்ரவரியில் சென்னை தீவுத்திடலில் நடைபெறும் அரசு கண்காட்சியில் தமிழ்நாடு தொல்லியல் துறைக்கு ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில், அந்தக் கல்வெட்டின் பிரதியைத் தொங்க விட்டிருந்தார்கள். அதை நான் புகைப்படமெடுத்ததை அறிந்த நாகசாமி, இரண்டு நாட்களுக்குப் பிறகு எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அப்புகைப்படத்தைத் தொல்லியல் துறையின் எழுத்து வடிவிலான முன் அனுமதியின்றி வெளியிடவோ பிரசுரிக்கவோ கூடாதென்று குறிப்பிட்டிருந்தார். சரியென்று நானும் வெளியிடவில்லை. அதை அவராவது வெளியிட்டாரா என்றால், அதுவும் இல்லை. இரண்டாவதாக மைசூரிலிருந்து மத்தியத் தொல்லியல் துறையைச் சேர்ந்தவர்கள் எடுத்த பிரதியும் வெளியிடப்படவில்லை. காரணம், துறையின் இயக்குனராக இருந்தவருக்குத் தமிழ் தெரியாது. மூன்றாவதாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு ஆய்வாளர் பிரதியெடுத்தார். அவர் பெயர் நினைவில்லை. திருச்சியில் ஒரு கருத்தரங்கில் சந்தித்தபொழுது அதை வெளியிட்டாரா எனக் கேட்டேன். இல்லையென்று வருத்தத்துடன் கூறினார். பிறகு 1988ல் நானும் விஷ்ணுபட்டும் ஆந்திராவில் கிருஷ்ணதேவராயர் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்குக்குச் சென்றிருந்தபொழுது, ஒருவர் மகேந்திரரின் செப்பேடு ஒன்றைக் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்தார். ஆந்திராவிலுள்ள ஏதோ ஒரு கோயிலின் கூரையில் தொங்கிக் கொண்டிருந்ததாம். அங்கிருந்தவர்கள் யாருக்கும் அதைப் பற்றித் தெரியவில்லை. அதன் பிரதியாவது வெளியிடப்பட்டதா? இல்லை. தற்போது தொல்லியல் துறையின் வசமிருக்கும் கோட்டை அருங்காட்சியகத்தில் இருக்கிறது. ஏன் பிரதிகள் வெளியிடப்படுவதென்றே தெரியவில்லை. கல்வெட்டின் வரிகளை வெளியிடும்போதே அதன் பிரதியையும் வெளியிட்டால், கல்வெட்டைப் படிக்கும்போது ஏதாவது தவறு நேர்ந்திருந்தால் அது மேலும் தொடராமலிருக்குமல்லவா?


ஏன் கல்வெட்டுப் படங்களை யாரும் வெளியிடுவதில்லை? மிகுந்த செலவு பிடிக்கும் விஷயம். புகைப்படத்துக்காகச் செலவிடும் தொகையை அடுத்த ஆய்வுக்குப் பயன்படுத்தலாமே என்றுதான் பெரும்பாலான ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் தனது Early tamil epigraphy புத்தகத்தில் படங்களை வெளியிட்டுள்ளார். SII மற்றும் ARE வெளியீடுகளுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கினாலும், மற்ற பிரச்சினைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வரலாறு பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. இந்த நிலையில் என்ன செய்ய? மாமல்லபுரத்தில் அகழாய்வு நடத்துவதற்கே சுனாமி வரவேண்டியிருக்கிறது. ஆமாம்! மாமல்லபுரத்தில் சுனாமி பல சிலைகளை வெளிப்படுத்தியுள்ளது என்கிறார்களே! உண்மையா அது?


ஏறக்குறைய உலகிலுள்ள அனைத்துத் தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் சுனாமிக்குப் பிறகு மாமல்லபுரத்தில் புதிய கட்டுமானங்கள் தென்பட்டதாகத் தெரிவித்தன. நான் இங்கே அமெரிக்காவில் இருக்கிறேன். ஒரு நாள் மாலை, அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றில் இதைப்பற்றிக் காட்டியதும் அதிர்ந்து போனேன். காரணம், ஏற்கனவே அவை வெளியே தெரிந்து கொண்டிருந்தவைதான். அவற்றை என் புத்தகங்களில் வெளியிட்டும் இருக்கிறேன். (புத்தகத்தைக் காண்பிக்கிறார்). நண்பர் கிஃப்ட் சிரோமணிதான் அருகில் நின்று கொண்டிருக்கிறார். அதன்பின் திரு ஐராவதம் மகாதேவன் மற்றும் தி இந்து ப்ராண்ட்லைன் நிருபர் திரு டி.எஸ்.சுப்ரமணியன் ஆகியோருக்கு இதைப்பற்றி எழுதியுள்ளேன். இந்தச் செய்தி தவறானதாகவே இருந்தாலும், நல்ல விளைவுகளைத்தான் ஏற்படுத்தியுள்ளது. மத்தியத் தொல்லியல் துறையும் கடற்தொல்லியல் ஆய்வாளர்களும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். அனைவரும் மிகுந்த ஆர்வமாயுள்ளனர். புதுடெல்லியில் சர்வதேசக் கருத்தரங்கும் இதையொட்டி நடைபெறுவது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.


UNESCO நினைவுச்சின்னமான மாமல்லபுரத்துக்கே இந்த நிலைமை என்றால், மற்ற இடங்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? நார்த்தாமலை அருகிலுள்ள பெருங்கற்காலப் பண்பாடு காலத்துச் சுடுகாடு போலத்தான். என்னதான் தொல்லியல் துறை சிறப்பாகச் செயல்பட்டு கலாச்சாரச் சின்னங்களைப் பாதுகாத்தாலும், உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் எதுவுமே சாத்தியம். இல்லாவிடில் மகேந்திரரின் பல்லாவரம் குடைவரைக்கு ஏற்பட்ட நிலைதான். அதைச்சுற்றிக் குடியிருந்த மக்கள் அதை ஒரு தர்காவாக மாற்றிவிட்டார்கள். டாக்டர். கலைக்கோவனின் மகேந்திரர் குடைவரைகள் புத்தகத்துக்குப் புகைப்படம் எடுக்கவே மாநிலத் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் திரு. அப்துல் மஜீது அவர்களை அழைத்துச் செல்ல வேண்டியதாயிற்று. இந்தக் குடைவரையை லாக்வுட் பார்த்திருக்கிறாரா? அவர் பார்க்கும்போது அது எப்படி இருந்தது?


இப்போது எதையுமே பார்க்கமுடியாவிட்டாலும், பல்லாவரம் குடைவரையில் ஒரு அதிசயம் இருந்தது. முகப்பிலுள்ள ஒரு தூண் மற்ற தூண்களைப்போல் சதுரம்-கட்டு-சதுரம் என்றில்லாமல், சதுரம்-கட்டு என்று மட்டுமே இருக்கிறது. பிரெஞ்சு அறிஞர் ஜூவோ துப்ரேயல் அவர்களின் புத்தகத்தில் அதன் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஒரு சிலர் அது வெட்டும்போது நேர்ந்த தவறு என்கின்றனர். ஆனால் சிற்பக்கலையில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களான பல்லவச் சிற்பிகள் இவ்வளவு பெரிய தவறைச் செய்வார்கள் என நான் நினைக்கவில்லை. மாறாக, மகேந்திரரின் விருதுப்பெயர்களைப் பொறிக்க அவ்வளவு பெரிய இடம் தேவைப்பட்டிருக்கலாம். இப்புத்தகம் எழுதப்பட்டது 1970களின் முற்பகுதியில். ஆனால் நான் பத்து வருடங்கள் கழித்துச் சென்று பார்த்தபொழுது, சதுரம்-கட்டு-சதுரம் என்றே இருந்தது. ஆனால் மற்ற தூண்களுக்கும் அதற்கும் சற்று வித்தியாசம் தெரிந்தது. அதற்கடுத்தமுறை சென்றபொழுது முற்றிலும் மறைக்கப்பட்டுக் கண்ணாடிகள் ஒட்டப்பட்டிருந்தன.


கடிகாரத்தைப் பார்த்தால், நியூயார்க்குக்குச் செல்லும் பேருந்து புறப்படும் நேரத்தைத் தொட்டிருந்தது. இன்னும் பல விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று ஆசைதான். ஆனால் திங்கட்கிழமை பங்குச்சந்தை ஆரம்பிக்கும் முன் முடிக்க வேண்டிய சில வேலைகளைக் காக்க வைத்து விட்டு வந்திருக்கிறேனே! அதற்காகத் திரும்பியே ஆகவேண்டிய கட்டாயம். வரும் டிசம்பரில்தான் லாக்வுட் சென்னை வருகிறாரே! அப்போது பிடித்துக்கொள்ளலாம் என்று மனதைத் தேற்றிக்கொண்டு விடைபெற்றேன். திரும்பவும் பேருந்து நிலையம் வரை வந்து பேருந்தில் ஏறி அமரும் வரை உடனிருந்துவிட்டுத்தான் கிளம்பினார். உரையாடலின் போது voice recorder-ல் பதிவு செய்ததை எல்லாம் கேட்டு முடித்து விட்டு ஜன்னலுக்கு வெளியே பார்த்தபோது ஒளிவீசும் நியூயார்க் பங்குச்சந்தைக் கட்டடம், 'போய் வேலையைச் சீக்கிரம் முடி!' என்று கட்டளையிடுவது போல் உயர்ந்து நின்றது.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.