http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 158

இதழ் 158
[ செப்டம்பர் 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

துடி, தமருகம், உடுக்கை
மாமல்லபுரம் குடைவரைகள் - ஒப்பாய்வு -3
சேக்கிழான் செல்வனும் மூன்று விழாக்களும்
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 7
நண்பருமாய் நல்லாசிரியருமாய்
இதழ் எண். 158 > பயணப்பட்டோம்
நண்பருமாய் நல்லாசிரியருமாய்
ச. கமலக்கண்ணன்
"சென்னை, செங்கற்பட்டுப் பகுதிக் கோயில்களுக்குக் களப்பயணங்களுக்குச் செல்லும்போதெல்லாம் அவர் வீடுதான் எனக்கும் என் மாணவர்களுக்கும் சரணாலயம். எப்போது போனாலும் எத்தனை பேருடன் போனாலும் எவ்வளவு நாள் தங்கினாலும் முதல்நாள் போலவே அன்புகாட்டும் அவரது உள்ள விரிவுக்கு இணையே கிடையாது. என்னைப் போலவே என் மாணவர்களையும் நேசித்து அன்புகாட்டும் அந்தப் பேருள்ளம் எத்தனை பேருக்கு வரும். என்னைச் சார்ந்தவர்கள், சூழ்ந்தவர்கள் அனைவருக்குமே அரசுவும் உறவுதான். அவரது அன்பு அத்தகையது."

இந்த அன்பு மழையில் நனையவியலாமல் அதற்குள் ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. 06-செப்-2020 அன்று முனைவர் இரா. கலைக்கோவன் அவர்கள் முனைவர் மா. ரா. அரசு அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்த செய்தியைப் பகிர்ந்தபோது உண்மையிலேயே உள்ளம் வாடித்தான் போனோம். அப்போது வெளியான வரலாறு.காம் இதழில் கலைக்கோவன் அவர்கள் எழுதிய கட்டுரையில்தான் மேற்கண்ட வரிகளைக் கூறியிருந்தார். கலைக்கோவனின் மாணவர்கள் என்பதாலேயே அரசு அவர்களின் நேசிப்புக்கு ஆளாகும் தகுதியும் எங்களுக்கு இயல்பாகவே கிடைத்துவிட்டது.

ஏப்ரல் 2003ல்தான் அரசு சார் எங்களுக்கு அறிமுகமானார். ஆனால் அடுத்தமுறை சந்திக்கச் செல்லும்போதே எங்களைப் பற்றிக் கலைக்கோவன் அவர்கள்வழி முழுவதுமாக அறிந்து வைத்திருந்தார். அன்று சந்திப்பு முடிந்து விடைபெறும்போது அதற்குச் சிலமாதங்கள் முன்பு வெளியாகியிருந்த “வ.உ.சி வளர்த்த தமிழ்" என்ற அவரது நூலை அன்பளித்தார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த வ.உ.சி அறக்கட்டளைப் பொழிவில் அரசு சார் ஆற்றிய உரையின் நூல்வடிவம்.

இப்போது முகநூல் விவாதக் களமாக இருப்பதுபோல் அந்தக் காலகட்டத்தில் யாஹூ முதலான மடலாடற்குழுக்களும் பின்னர் வலைப்பூக்களும் புகழ்பெற்றிருந்தன. பொன்னியின் செல்வன் யாஹூ குழுமம் மட்டுமின்றி மரத்தடி, ராயர் காபி கிளப், தினம் ஒரு கவிதை போன்ற குழுக்கள் இலக்கிய ஆர்வலர்களுக்குப் பயனுள்ளதாய் விளங்கியது மட்டுமின்றிப் படைப்புத் திறனை வளர்க்கவும் உதவின. அதில் ஒருவர் வ.உ.சி அவர்கள் தமிழில் வடமொழி கலந்து எழுதுவதை ஆதரித்தவர் என்று கூறியிருந்தார். அப்போது அதைப்பற்றிப் பெரிதாக ஏதும் யோசிக்காமல் ஏதோவொரு செய்தி என்ற அளவிலேயே கடந்து போயிருந்தேன். அரசு சார் கொடுத்த நூல் இச்சம்பவத்தை நினைவூட்டி அது உண்மைதானா என்று அறியும் ஆவலையும் தோற்றுவித்தது.

வீட்டுக்கு வந்தவுடன் நூலைப் படித்துப் பார்க்கையில் இரண்டாவது அத்தியாயத்திலேயே (வ.உ.சியும் தனித்தமிழும்) இதுபற்றிய விளக்கம் இருந்தது. தனித்தமிழ் ஆதரவாளரான வ.உ.சி வடமொழியை ஏன் ஏற்றுக்கொண்டார் என்ற விளக்கம் அவர் மீதான மதிப்பைக் கூட்டியது. முடிந்தவரை தனித்தமிழில் எழுதவேண்டும். ஆனால் படிப்பவர்கள் புரிந்துகொள்ள எளிதாக இருக்க வடமொழிச் சொற்கள் சிலவற்றைப் பயன்படுத்தவேண்டி இருந்தால் பயன்படுத்துவதில் தவறில்லை என்பதுதான் வ.உ.சியின் நிலைப்பாடு என்பது புரிந்தது. 1915லேயே சுப்ரமணிய சிவம் இத்தகைய தனித்தமிழ்ச் சிந்தனையை இதழ்களில் பயன்படுத்துவது குறித்த விதையை ஊன்றியிருக்கிறார். அதற்குக் காரணமாக அமைந்தது சுதேசமித்திரன் இதழில் பயன்படுத்தப்பட்டுவந்த ஆங்கிலம் கலந்த தமிழ்நடை. அப்போது சுதேசமித்திரன் இதழில் எழுதிவந்த 'பாரத புத்ரன்' என்பவருக்கும் வ.உ.சி மற்றும் சிவத்துக்கும் இடையில் நடந்த சொற்போர் பற்றி மிகத் தெளிவாக இந்நூலில் விளக்கியுள்ளார். 'பாரத புத்ரன்' என்ற புனைபெயரில் அப்போது எழுதியது பாரதியாரா என அடுத்த சந்திப்பில் வினவியபோது, வேறொரு நபர் (பெயர் சொன்னார், ஆனால் அது இப்போது நினைவில் இல்லை) என்றும் பாரதியார் அப்போது சுதேசமித்திரனில் பணிசெய்யவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.

இவ்வாறு ஏற்பட்ட நெருக்கத்தால் வரலாறு.காமின் அரையாண்டு நிறைவுவிழாவுக்குத் தஞ்சைக்கு அழைத்திருந்தோம். கரந்தைக் கல்லூரியில் பணிபுரிந்தபோது கலைக்கோவன் அவர்கள் பெரியகோயிலுக்குச் செல்லும்போதெல்லாம் அவரும் மாணவர்கள் சூழ வருவதைப்போல் எங்கள் விழாவுக்கும் மாணவர்கள் புடைசூழ வந்திருந்தார். நாங்கள் செய்திருந்த தங்குமிட ஏற்பாட்டைக்கூடத் தவிர்த்துவிட்டுத் தம் மாணவர் திரு. செந்தில் அவர்களின் இல்லத்திலேயே தங்கினார். விழா முடிந்து சென்னை திரும்பும்போது தொடர்வண்டியில் வெவ்வேறு கருத்தியல்கள் கொண்ட நண்பர்கள் இடம்பெற்றிருந்த குழுவுடன் அவரும் உரையாடியது சுவையாக இருந்தது. மாற்றுக்கருத்துக் கொண்டோரையும் எவ்வாறு அரவணைத்து அணுகுவது என்பதும் அவர்களை ஊக்குவித்து எந்தத் தடையுமின்றி அவர்கள் கூறும் கருத்துக்களையும் கேட்டு மதிப்பளிப்பது எப்படி என்பதும் நன்றாகப் புரிந்தன.

2008ல் ஐராவதி வெளியீட்டு விழாவுக்கு அவர் உதவியதைப் போலவே 31-அக்-2015 அன்று திருச்சிராப்பள்ளி டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் ஆய்விதழான வரலாறு-25 வெள்ளி இதழ் வெளியீட்டு விழாவுக்கும் அவர் பெரிதும் துணைநின்றார். இதழை வெளியிட அழைத்திருந்த முனைவர் அவ்வை நடராசன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. விழாவில் வாழ்த்துரை வழங்கிய அரசு சாரால் நெருங்கிய உறவினரின் உடல்நலக்குறைவு காரணமாக அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்தில் கலந்துகொள்ள இயலவில்லை. கலைக்கோவன் அவர்கள் அடிக்கடி கூறும் “எங்கள் வீட்டுக்கு இளையபிள்ளை ஆனாலும் குடும்பத் தலைவர் போன்றவர்" என்ற கூற்றை நேரடியாக உணர்ந்த நேரம் அது.

அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது குடும்பத்துக்குச் செய்யவேண்டிய கடமை என்று அவர் கருதியிருந்த ஒரு செயலுக்கு ஒருவகையில் நான் துணைநின்றது அவரிடம் பெற்றவைக்காக ஓரளவுக்கு நன்றிக்கடன் செய்யும் விதமாக அமைந்து நிறைவைத் தந்தது என்றாலும் அவர் பெற்றெடுக்காத பிள்ளையாக என்னை அவையத்து முந்தியிருக்கச் செய்தவற்றுக்கு நிச்சயம் ஈடாகாது.

அவரது குடும்ப உறவுகள் அனைவரையும் ஒருசேரச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கியது அரசு-70 பிறந்தநாள் விழா. அப்போது தயாரிக்கப்பட்ட மலருக்குக் கட்டுரைகளை வழங்கும் வாய்ப்பு எனக்கும் லலிதாராமுக்கும் கிடைத்தது. விழாவில் அவரது நண்பர்கள், மாணவர்கள், உறவினர்கள் என அவருடன் தொடர்புடைய ஒவ்வொரு தரப்பிலும் மிகச் சிறந்தவர்களைப் பேசவைத்து அவரது பன்முக ஆற்றலை வெளிக்கொணரும் விதமாகக் கச்சிதமாக விழா வடிவமைக்கப்பட்டிருந்தது. கலைக்கோவன் அவர்கள் அரசு சாரிடம் அடிக்கடி வைக்கும் வேண்டுகோளான இதுவரை ஆய்வு செய்து வைத்துள்ளவை எல்லாவற்றையும் நூலாக்கம் செய்யும் பணியை இவ்விழாவிலும் வேண்டுகோளாக வைத்தார். உறவாய்ச் சூழ்ந்து உதவும் இயல்பே இதற்குத் தடையாக இருப்பதையும் நயம்பட எடுத்துக்கூறி, அவர் நூலாக்கம் முடியும்வரை உறவுகள் அதற்குத் துணைநிற்கவும் வேண்டினார். இருப்பினும் காலத்தின் கணக்கு வேறாக இருந்தது.

விழாமலரில் அவரது உறவுகள் அவரவர் பார்வையில் எழுதியிருந்த கட்டுரைகள் அதுவரை அறிந்திராத பல்வேறு குணநலன்களை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. குறிப்பாக அவரது புதல்வர் செழியனின் கட்டுரை. ஒவ்வொரு ஆணுக்கும் தந்தை என்பவர் ஒவ்வொரு வயதிலும் வெவ்வேறு தோற்றம் காட்டும் விந்தையானவர். குழந்தைப் பருவத்தில் முன்மாதிரியாகக் கொண்டு, பதின்பருவத்தில் நெருக்கம் குறைந்து இருபதுகளில் அவரைப் பல விஷயங்களில் முந்தப்போகிறோம் என்றெண்ணி முப்பதுகளின் இறுதிகளில் அவரது மேன்மையை உணர்பவர்களே அதிகம். செழியனின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் “எந்த உறவானாலும் அவரவருக்கென்று ஒரு தனிப்பட்ட ஸ்பேஸ் இருக்கவேண்டும்" என்று அரசு சார் கருதியதுதான் உறவினர்களையும் நண்பர்களையும் மாணவர்களையும் அவர்பால் ஈர்த்து நேசிக்க வைத்தது என்றால் மிகையில்லை. மகன் அல்லது மகளின் அனைத்துக் கிடக்கைகளும் எண்ணங்களும் ஒளிவுமறைவின்றிப் பெற்றோருக்குத் தெரிந்தாக வேண்டும் என்ற எண்ணமில்லாத பெற்றோருக்குப் பிறந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இப்படி அவரைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டே செல்லலாம் என்றாலும், அவரது நினைவேந்தல் நிகழ்ச்சியில் திரு. இளங்கோ குமணன் அவர்கள் (தற்போது வெளியாகியிருக்கும் சிவகுமாரின் சபதம் திரைப்படத்தில் தாத்தா வரதராஜன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்) சொன்ன ஒரு கருத்து அவை எல்லாவற்றையும் தொகுத்து ஒரே வரியில் சொல்வது போல அமையும். அரசு சார் அவர்களின் வாழ்க்கையில் வந்து சென்றவர்களில் பெரும்பாலானோர் நிச்சயம் அவருடன் தத்தம் தனிப்பட்ட விஷயங்களில் ஒன்றையாவது பகிர்ந்திருப்பார்கள். தனிப்பட்ட விஷயங்களை எல்லோரிடமும் அவ்வளவு எளிதாகப் பகிர்ந்துவிட முடியாது. சுயநலம் மிகுந்த கலியுகத்தில் எந்தத் தகவலை யார் எப்போது எப்படிப் பயன்படுத்துவார்கள் எனக் கூறமுடியாது. ஆனால் தம்மிடம் பழகுவோர்க்கு அரசு சார் அத்தகைய நம்பிக்கையை ஏற்படுத்துவார் என்பதுபோல "யாரை எடுத்துக்கொண்டாலும் அவருக்கும் அரசு சாருக்கும் மட்டுமே தெரிந்த இரகசியம் ஒன்று நிச்சயம் இருந்தே தீரும்" என்ற குமணன் அவர்களின் வரிகளையே முத்தாய்ப்பாகக் கூறி, இதுகாறும் நம் கண்முன் நின்று வயது வேறுபாடின்றி நண்பராய்ப் பழகியவரும் தக்க நேரத்தில் தக்க அறிவுரை கூறும் மந்திரியாய் வழிகாட்டியவரும் தேவை அறிந்து உரியன கற்பிக்கும் ஆசிரியராய் இருந்தவர் இனிக் காணவியலாத நிலையில் நம்முடன் உடன்வருவார் என்றெண்ணி மீதமுள்ள நாட்களைக் கழிப்போமாக!
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.