http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 178

இதழ் 178
[ ஜூன் 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

சங்கப் பாடல்களில் பெண் தொழில்முனைவோர் - 3
Nitheeswarar temple of Srimushnam
கூரம் கோயில்களின் கல்வெட்டுகள்
திருவிளையாட்டம் மாடக்கோயில் - 2
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் - 5
ஜப்பானியப் பழங்குறுநூறு - 74 (கேட்டதும் கிடைத்ததும்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 73 (முகிலில் மறையும் மலர்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 72 (காதல்மொழிகள் கடலலை போலே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 71 (நெல்வழிசெல் இசை!)
இதழ் எண். 178 > கலையும் ஆய்வும்
சங்கப் பாடல்களில் பெண் தொழில்முனைவோர் - 3
மு. சுப்புலட்சுமி

ஆசிரியர்: www.glorioustamils.com; www.attraithingal.com
வலையொலி/ podcast- அற்றைத்திங்கள்…. வலையொலியில் தமிழொலி

சங்கப் பாடல்களில் கள் அடு மகளிர்/ அரியலாட்டியர்

இன்றும் நம் நாட்டின் பல மாநில அரசுகளுக்குப் பொருளீட்டும் களஞ்சியமாக உதவுவது மது விற்பனை. தென்மாநிலங்கள் ஐந்து மட்டுமே, நாட்டின் மொத்த மதுபானப் பயன்பாட்டில் 45 விழுக்காட்டைத் தொட்டுவிடுவதாக 2021ஆம் ஆண்டின் செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது.

இன்று அரசுப் பெட்டகங்களை நிரப்பும் தொழில்துறைகளில் ஒன்றில், தம் காலத்தில் சங்ககாலப் பெண்கள் எப்படி ஈடுபட்டார்கள் என்பது குறித்த சுவையான செய்திகளைத் தருவதே இப்பதிவின் நோக்கம். அன்றி, குடிப்பழக்கத்தை ஊக்குவிப்பதோ, அத்தொழில் செய்பவர்களைப் போற்றுவதோ அல்லது தாழ்த்துவதோ நம் நோக்கமல்ல. கள்ளின் சுவையை முதன்மைப்படுத்தாமல், கள் குறித்த செய்திகளின் இலக்கியச் சுவையில் மயங்கி வழங்கப்பட்டதுதான் இந்தப் பகிர்வு.

தத்தம் பகுதிக்குரிய மாவுச்சத்துடைய தானிய வகைகளைக் காய்ச்சி, புளித்துப் பொங்கவைத்து, வடிகட்டிப் போதையேறப் பருகுவது, பழமையான பண்பாடுகளின் பகுதிதான். இன்றும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜப்பானில் அரிசியையும், நேபாளம் பூடான் ஆகிய நாடுகளில் பார்லி அரிசியையும் பயன்படுத்தி மதுபானம் தயாரிப்பது வழக்கமாக உள்ளது. ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, பிளம் மிகுதியாக விளையும் மேற்கத்திய நாடுகளில் பழங்களைக் கொண்டு மது தயாரிக்கப்படுகிறது. பழந்தமிழர் அருந்திய கள்ளில் இருந்த இதுபோன்ற வகைப்பாடுகளையும் சங்க இலக்கியம் நமக்கு ஆவணப்படுத்துகிறது.அரியல், தேறல், தேன் தோப்பி, நறவு, மது என்று சங்கப்பாடல்களில், மயக்கந்தரும் கள்ளைக் குறிக்கும் சொற்கள் பலவுண்டு. நாம் இப்பதிவு முழுவதும் ‘கள்’ எனும் பெயரையே பயன்படுத்துவோம். நம் மண்ணுக்குரிய நெல்லரிசி மற்றும் தினையரிசியிலிருந்து கள், பனைமரத்து நுங்கின் கள், தென்னங்கள் தவிர, மூங்கில் குழாய்களுக்குள் அடைத்த நாட்பட்ட முதிர்ந்த கள், மலர்மொட்டுக்களிட்டுப் புளிக்கவைக்கப்பட்ட கள் என்று பல்வேறு வகைகளைப் பாடல்கள் சுட்டுகின்றன.

சுறுசுறுப்பாகச் சுற்றிவந்து, பொருளீட்டிப் பல பணிகளில் ஈடுபட்ட சங்ககாலப் பெண்களின் பன்முக ஆற்றலை எடுத்துக்காட்டும் மற்றுமொரு தொழில்தான் கள் விற்பனை. மூலப்பொருள் சேகரிப்பிலிருந்து இறுதிப்பொருள் நுகர்வோர் பயன்பாட்டுக்குக் கிடைப்பது வரையிலான பல்வேறு படிநிலைகளிலும், அந்தப் பெண்களின் உழைப்பே அனைத்தினும் விஞ்சி நிற்கிறது. கள் விற்பனையாளர்களாக அவர்களை நேரடியாகக் காட்டும் பாடல்கள் குறைவென்றாலும், அந்தப் பாடல்களிலும் அவையல்லாத வேறு பாடல்களிலிருந்தும் கிடைக்கும் தொடர்புடைய தகவல்கள் நம்மைக் கிரக்கத்தில் ஆழ்த்துவன.

எந்தெந்தப் பொருட்கள் கொண்டு கள் காய்ச்சினார்கள்?

அவையா அரிசி அம்களித் துழவை
மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றிப்
பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும்
பூம்புற நல் அடை அளைஇத் தேம்பட
எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி
வல்வாய்ச் சாடியின் வழைச்சு அற விளைந்த
வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி
தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர்

(பெரும்பாணாற்றுப்படை 275-282)

என்கிறது பெரும்பாணாற்றுப்படை.

குற்றாத அரிசியை அவித்துக் கூழாக்கி, அகன்ற தட்டில் பரப்பிக் காயவும் குளிரவும்விட்டு, பாம்பின் புற்றில் வாழும் கரையான் கூடுகளைப்போன்ற பொலிவுடைய முளையரிசிப் பொடியைக் கலந்து, வல்வாய்ச்சாடியில் -கனமான மூடியுடைய சாடியிலிட்டு, இரண்டு பகல்களும் இரண்டு இரவுகளும் வைத்து, வெந்நீரில் வடிகட்டி, விரல்களால் கலக்கிய இனிய மணமிகுந்த கள்ளை, சுட்ட மீன்களோடு மீனவர்கள் வழங்குவார்கள் என்று, கள்ளைக் காய்ச்சிப் புளிக்கவைத்த நீண்ட முறையை அழகாக இயம்புகிறார் கடியலூர் உருத்திரங் கண்ணனார்.

அடுத்து, மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் எழுதிய அகநானூற்றுப் பாடலைப் பாருங்கள்-

………………………………….முன்றில்
தேன் தேர் சுவைய திரள் அரை மாஅத்துக்,
கோடைக்கு ஊழ்த்த கமழ் நறுந்தீங்கனிப்,
பயிர்ப்புறுப் பலவின் எதிர்ச் சுளை அளைஇ,
இறாலொடு கலந்த வண்டு மூசு அரியல்
நெடுங்கண் ஆடு அமைப் பழுநிக், கடுந்திறல்
பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி

(அகநானூறு 348, வரிகள் 1-7)

தலைவி தோழியிடம் தலைவனின் நாட்டைப் பற்றிக் கூறுகிறாள். அவனுடைய நாட்டில், வீட்டு முற்றத்தில் பருத்துவளர்ந்த மாமரத்தில் விளைந்த தேன்போன்ற சுவையுடைய பழுத்த மாங்கனியை, ஒன்றுபோலச் சுளைகளும் ஒட்டும் தன்மையும் கொண்ட பலாவோடும் தேனோடும் கலந்து, கண்களையுடைய அசைந்தாடுகின்ற நீண்ட மூங்கில் குழாய்களில் நிரப்பி முதிரவைப்பார்கள். வண்டுகள் மொய்க்கும் அந்தக் கள், பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி - பாம்பின் சினத்தைப் போன்று அல்லது பாம்பு கொட்டியதுபோன்ற வீரியமானதாம். அந்தக் கள்ளைப் பெண்கள், கடவுளுக்குப் படைத்துப் பின் தம் கணவன்மாருக்குப் பருகத் தருவார்கள். அவர்களோ, அதைக் குடித்துவிட்டுப் பெரிய தினைப்புனங்களைக் காக்க மறந்து மயங்கிக் கிடப்பார்களாம்.

கள்ளின் மயக்கும் தன்மைக்குப் பாம்பின் கோபத்தை உவமையாகக் காட்டுவது போலவே, அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினியைப் பாடும் ஒளவையார், கள்ளினைத் தேளின் கடுப்போடு ஒப்பிடுகிறார்.

………………………………….நேர் கரை
நுண்ணூல் கலிங்கம் உடீஇ, உண்ம் எனத்
தேள் கடுப்பு அன்ன நாள்படு தேறல்
கோள்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ,
ஊண் முறை ஈத்தல் அன்றியும் கோள் முறை
விருந்து இறை நல்கியோனே

(ஒளவையார், புறநானூறு 392, வரிகள் 14-19)

‘வறுமையோடு அவரிடம் நான் சென்றபோது, அழகிய ஓரக்கரையுடன் சிறந்த நூலாலான ஆடையை உடுத்தக்கொடுத்து, தேள் கடுப்பு அன்ன நாள்படு தேறல்- தேள் கொட்டுவதற்கிணையான காட்டமுடைய நாட்பட்ட தேறலை, “உண்ணுங்கள் உண்ணுங்கள்,” என்று விருப்பத்துடன் வழங்கியதோடு, விருந்தோம்பும் முறை தவறாமல் மேலும் பல உணவுவகைகளை உண்ணக் கொடுத்தார்’ என்று, அரசரின் உயர்ந்த பண்பைப் போற்றுகிறார் ஒளவையார்.

கள்ளின் கிரங்கவைக்கும் தன்மைக்குச் சுருக்கென்று உடலுள் பாயும் பாம்பின் கடியையும் தேளின் கொட்டையும் உவமைப்படுத்தினர் புலவர்கள். காதலின்றிச் சங்கப்பாடல்கள் ஏது? அதனால்தான், ‘கள் களி செருக்கத்து அன்ன காமம் கொல் இவள் கண் பசந்ததுவே?’, என்று காதலில் கட்டுண்ட தலைவியின் மனநிலையை கள்ளுண்ட மயக்கத்தோடு ஒப்பிடுகிறார் அம்மூவனார் (நற்றிணை 20).

விருந்தோம்பலில் கள்

பழந்தமிழர் வாழ்வு குறித்த தனிப்பெரும் ஆவணமாக விளங்கும் சங்க இலக்கியங்கள், சங்ககாலத் தமிழர் வாழ்வுமுறையில் கள்ளுக்கு விருந்தோம்பலில் சிறப்பிடம் இருந்ததைக் காட்டுகின்றன. பண்டைத் தமிழகத்து மன்னர்கள், தம்மை நாடிவந்த புலவர்களுக்குப் பொருட்களுடன், உணவும் கள்ளும் அளவின்றி வாரி வழங்கியதை அறிகிறோம். மன்னர்கள் மட்டுமல்லாமல் நாட்டுமக்களும், தம் வீடுதேடிவரும் விருந்தினருக்கும் மன்னரை நாடிச்செல்லும் வழியில் தம் இல்லங்களில் களைப்பாறும் வறியவர்களுக்கும், வயிறுநிறைய உணவும் மனம் குளிர வீட்டில் காய்ச்சிய கள்ளும் அளித்தார்கள்.

‘இல் அடு கள்ளின் சில் குடிச் சீறூர்’ என்ற புறநானூற்றுப் பாடல்போல(329), இல்லங்களில் கள் காய்ச்சப்பட்டதை நிறைய பாடல்கள் கூறுகின்றன. இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் இயற்றிய சிறுபாணாற்றுப்படையில், ஓய்மான் நாட்டு மன்னன் நல்லியக்கோடனிடம் பரிசில் பெற்றுவந்த பாணன், குடும்பத்தோடு வந்த மற்றொரு பாணனை ஆற்றுப்படுத்துகிறான்.

எயிற்பட்டினத்திற்குச் செல்லும் வழியில் பரதவர் இருப்பிடத்தைக் கடக்கையில்- ‘மாசறு திருமுகத்து நுதிவேல் நோக்கின் நுளைமகள் அரித்த பழம்படு தேறல் பரதவர் மடுப்ப’ (158-159) என்று சொல்கிறான். மாசற்ற அழகிய முகத்தில் கூரிய வேல்போன்ற கண்களையுடைய பரதவர் பெண் அரித்த பழைய கள்ளை, பரதவர் உங்களுக்கு வழங்குவார்கள். கள்ளை அந்த நெய்தல் நிலத்துப் பெண் எப்படி காய்ச்சினாளாம்? உயரமான ஒட்டகம் துயில் கொண்டதைப்போன்ற அலைகள் கொண்டு வந்து குவித்த, நறுமணமுடைய அகில் மரத்தின் விறகைக் கொளுத்தி அந்தப் பெண் கள் காய்ச்சினாள்.

கள் விற்பனை

பெண்கள் இல்லங்களில் கள்ளைக் காய்ச்சி, தாம் அரித்த பழம்படு தேறலை விருந்தினருக்கு அன்புடன் வழங்கியதோடு, விற்றும் பொருளீட்டியதை மூன்று பாடல்கள் காட்டுகின்றன. அரியல் பெண்டிர், அரியலாட்டியர், கள் அடு மகளிர் என்ற பெயர்களில் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

வேம்பற்றூர் குமரனார் இயற்றிய அகநானூற்றுப் பாடல், தலைவனைப் பிரிந்து தனித்திருக்கவியலாத தலைவி தோழியிடம் கூறுவதாக அமைந்தது. தலைவன் சென்ற வழியில், செங்கண் ஆடவர்கள் எய்த அம்பினால் மாண்டவர்களைப் புதைத்த இடங்களில் கோங்க மரங்கள் வளர்ந்திருக்கின்றன. அந்தச் செங்கண் ஆடவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

அரியல் பெண்டிர் அல்குல் கொண்ட
பகுவாய்ப் பானைக் குவி முனை சுரந்த
அரி நிறக் கலுழி ஆர மாந்திச்,
செரு வேட்டுச் சிலைக்கும் செங்கண் ஆடவர்

(வேம்பற்றூர் குமரனார், அகநானூறு 157, வரிகள் 1-4))

கள்ளை அரித்து விற்பனை செய்யும் அரியல் பெண்டிர், கள் நிரப்பப்பட்ட பெரியவாய்ப் பானையொன்றைத் தங்கள் இடுப்பில் வைத்துக்கொண்டு வருகிறார்கள். அந்தப் பெரியவாய்ப் பானையின் குறுகிய முனையிலிருந்து ஊற்றப்பட்ட, வடிகட்டப்பட்ட கெட்டியான கள்ளை வயிறுநிரம்பக் குடித்துவிட்டுப் போர்வெறியுடன் அம்பெய்து மற்றவர்களை வீழ்த்தியோர் அந்தச் செங்கண் ஆடவர்.

அடுத்து, மதுரை மருதன் இளநாகனாரின் அகநானூற்றுப் பாடலில், தலைவன் தன் நெஞ்சிடம் சொல்வதாக அமைந்தது. ‘என் நெஞ்சே, பொருளீட்டி வருவதற்காக நான் அவளைவிட்டுச் செல்கிறேன் என்று புரிந்துகொண்ட என் தலைவி, துணிவுடன் பிரிவை ஏற்றுக்கொண்டாள். அதையுணர்ந்த நீ வேண்டுமானால் அவளைப் பிரிந்து சென்றுவா.. நான் அவளை விடுத்துக் காட்டுப் பாதையில் வருவதாக இல்லை’, என்று கூறுகிறான். அந்தக் காட்டுப் பாதை எத்தகையது?

……………………………………எல்லுற
வரிகிளர் பணைத் தோள் வயிறு அணி திதலை
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில்
மகிழ்நொடை பெறாஅர் ஆகி, நனை கவுள்
கானயானை வெண்கோடு சுட்டி
மன்று ஓடு புதல்வன் புன்தலை நீவும்
அரு முனைப் பாக்கத்து அல்கி

(மதுரை மருதன் இளநாகனார், அகநானூறு, 245, வரிகள் 7-13)

‘மழை பெய்ய மறந்த வறண்ட மூங்கில் காடு அது; அங்கு, அம்புகள் ஏந்திய வலிமையான இளங்கொள்ளையர்கள் பாதையைக் கடந்து செல்லும் வணிகர்களை இரவில் கொல்லுவார்கள்; இரவு வேளையில் அவர்கள் தலைவனோ, பெண்கள் கள் விற்கும் வீடுகளுக்குச் செல்வான். கள் வாங்க மாற்றுப் பொருள் இல்லாமல் தவிப்பான்; பின், விளையாடிக் கொண்டிருக்கும் தன் மகனின் காய்ந்த செம்பட்டைத் தலையை நீவி, காட்டு யானைகளின் தந்தங்களை வைத்திருக்கும் இடத்திற்கு அனுப்பி எடுத்துவரச் செய்வான். அந்தத் தந்தங்களை அரியலாட்டியர் விற்கும் கள்ளிற்கு மாற்றாகக் கொடுத்துக் குடிப்பதே அவன் நோக்கம்,’ என்று தான் கடக்கவேண்டிய காட்டுவழியில் நாம் சந்திக்க விரும்பும் அரியலாட்டியை நமக்குக் காட்டுகிறான் அந்தத் தலைவன்.

கள்ளுக்குப் பண்டமாற்றாக யானைத் தந்தம் பெற்றதை இப்பாடல்மூலம் அறிகிறோம். அதேபோல், கள்ளுக்கு நெல்லை மாற்றாகப் பெற்றதையும் (நறவு நொடை நெல்லின் நாள் மகிழ் அயரும்; அகநானூறு 61) பசுவை மாற்றாகத் தந்ததையும் (ஆ தந்து நறவு நொடை தொலைச்சி, இல் அடு கள் இன் தோப்பி பருகி, பெரும்பாணாற்றுப்படை 141,142) சங்கப் பாடல்கள் காட்டுகின்றன.

கடியலூர் உருத்திரங் கண்ணனார், தொண்டைமான் இளந்திரையனைப் பாடும் பெரும்பாணாற்றுப்படையிலோ வேறொரு காட்சி. கடற்கரைப் பட்டினத்து மக்களின் விருந்தோம்பும் பண்பினைக் கூறுமிடத்தில், ஆசிரியர் கள் அடு மகளிரைக் காட்டுகிறார். வீட்டு முன்பகுதியில் அந்தப் பெண்கள் கள் காய்ச்சுகிறார்கள்.

பைங்கொடி நுடங்கும் பலர் புகு வாயில்
செம்பூத் தூஉய செதுக்குடை முன்றில்
கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய
வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின்
ஈர்ஞ்சேறு ஆடிய இரும்பல் குட்டிப்

(கடியலூர் உருத்திரங் கண்ணனார், பெரும்பாணாற்றுப்படை, வரிகள் 336-341)

கொடியசையும் அந்த வாயில்- ‘பலர் புகு வாயில்’ - பலர் வந்துபோகும் வாயில். தூய்மை செய்யப்பட்ட அந்த முற்றத்தில், சிவப்புநிறப் பூக்கள் சிதறிக் கிடக்கின்றன. கள் விற்பனை செய்யப்படும் அந்த இல்லத்தில், கள் அடு மகளிர், கள் காய்ச்சிய பானைகளைக் கழுவியூற்றிய நீரினால் ஏற்பட்ட சேற்றில் பன்றிக்குட்டிகள் விளையாடுகின்றன. அங்கு சென்றால், ஆண் பன்றியின் இறைச்சியோடு கடுத்த கள்ளைக் குறைவின்றிப் பெறலாம் என்று ஒரு பாணன் மற்றொருவனை வழிப்படுத்துகிறான்.

கள் விற்கப்படும் இல்லங்களின் கொடி பறக்கும் வாயில்கள்

கள்ளை வீட்டின் முன்பகுதியில் வைத்து விற்பனை செய்தார்கள் என்பதும் பலர் வந்துபோகும் அந்த வாயிலில், கொடிகள் பறந்து கொண்டிருந்ததையும் அறிகிறோம். கள்விற்கும் வீடுகளின் முன், கொடி பறப்பதை மேலும் சில இடங்களில் காணமுடிகிறது. அப்பாடல்களில், பெண்கள் கள்விற்பது நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை எனினும், சூழல் அதுவெனவே தோன்றுகிறது.

கல்லாடனாரின் அகநானூற்றுப் பாடலில் (அகநானூறு 83), பொருளீட்டும் பொருட்டுத் தலைவியைப் பிரிந்த தலைவன், தொலைவிலுள்ள வேங்கட மலையைக் கடந்து சென்றாலும், தன் காதலியின் நற்பண்புகள் தன்னைத் தொடர்ந்து வருவதாக எண்ணி மகிழ்கிறான். வேங்கட மலையைக் கடக்கையில் காணும் காட்சியை விவரிக்கிறான். அங்கே, சில இளைஞர்கள் ஓர் ஆண்யானைக் கன்றைப் பிடிக்கிறார்கள். அதைக் கண்ட தாய் யானையோ அலறுகிறது.

நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்
நறவு நொடை நல் இல் புதவு முதல் பிணிக்கும்
கல்லா இளையர்
தாங்கள் பிடித்துவந்த யானையை, உயரமான கொடிகளசையும் பழைய ஊரில், கள் விற்கும் ஒரு வீட்டிற்கருகில் அவர்கள் கட்டிவைக்கிறார்கள்.

கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பட்டினப்பாலையிலோ, பூம்புகார் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களில் கொடிகள் பறக்கின்றன. அதேபோல், பலர் புகும் கள் விற்கும் இல்லத்தின் வாயிலிலும் கொடி பறக்கிறது (பலர் புகு மனைப் பலிப் புதவின், நொடைக் கொடியோடு; பட்டினப்பாலை, 179-180). மீனும் இறைச்சியும் பொரிக்கும் ஒலியும் அந்தக் கள்விற்கும் இல்லத்தில் கேட்கிறதாம்.

மதுரைக் காஞ்சியிலும், மதுரையின் தெருக்களில் பல்வேறு குழுக்கள் பல்வேறு கொடிகள் வைத்திருக்க, கள் விற்கும் கடைகளில் கொடி பறந்து, களிமயக்கத்தின் மகிழ்வைப் பறைசாற்றுகிறதாம்.

புகழ் செய்து எடுத்த விறல் சால் நன்கொடி
கள்ளின் களி நவில் கொடியொடு நன்பல
பல்வேறு குழூஉக் கொடி பதாகை நிலைஇ

(மாங்குடி மருதனார், மதுரைக் காஞ்சி, 371 – 373)

என்கிறது பாடல்.

ஆக, கள்ளைக் காய்ச்சி வடிகட்டி முதிரவைத்த சங்கப் பெண்கள், அதைத் தம் கணவன்மாருக்குப் பரிமாறினர்; வீட்டுக்கு வந்தவர்களுக்குக் கொடுத்து விருந்தோம்பினர்; வீட்டின் முன்பகுதியில் கடைவைத்து விற்பனை செய்தனர்; சந்தை மற்றும் வெளியிடங்களுக்குச் சென்றும் விற்றுப் பொருளீட்டினர். கள் விற்ற இல்லங்களைத் தேடிச்சென்று வாங்கிப் பருகிய மக்கள் களிப்பும், மயக்கமும் கொள்ள, மன்னரைக் காணச்செல்லும் வழியில் விருந்தோம்பிய வீடுகளில் உணவும் கள்ளும் கிட்டிய கலைஞர்கள் மனநிறைவு கொள்ள, கணவன்மார் மனைவி கையால் கள்ளருந்தித் தம் பணிகளை மறந்திருக்க, அரியலாட்டியரும் கள் அடு மகளிரும் தம் உழைப்பை மட்டுமே நம்பி இயங்கிக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.

அடுத்த பதிவில், மன்னர் முதல் எளியோர்வரை கஞ்சியிட்டு வெளுத்த ஆடைகளை விரும்பியுடுத்த, துவைத்துக் கொடுத்துத் தம்முழைப்பால் பொருளீட்டிய சங்கப்பெண்களைச் சந்திப்போமா?
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.