http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 13

இதழ் 13
[ ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

அள்ள அள்ளக் குறையா அட்சய பாத்திரம்
கல்வித் தலைமை
பகவதஜ்ஜுகம் - 4
கதை 5 - தேவதானம்
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே!
வாழ்க நீ தம்பி!
விடியலைக் கண்ட விட்டுப்போன தொடர்ச்சிகள்
கோயில்களை நோக்கி
2. வலம் வருவோம் வாருங்கள்

கட்டடக்கலைத்தொடர் - 10
திருநந்தி ஈஸ்வரம் - 1
சங்கச் சிந்தனைகள்-1
இதழ் எண். 13 > பயணப்பட்டோம்
திருநந்தி ஈஸ்வரம் - 1
லலிதாராம்
பெங்களூரை நினைக்கும் பொழுதெல்லாம் எனக்குத் திரிசங்கு சொர்க்கம்தான் நினைவில் வரும். நீங்கள் சோழ தேசத்தின் மேல் காதல் கொண்டவராக இருப்பின், நான் கூறுவது புரியும். உலக நாகரீகங்களின் உச்சாணிக் கொம்பைத் தொட்ட சோழர்கால நாகரீகத்தை இன்றும் பறை சாற்றும் சரித்திரச் சான்றுகளைக் காண வேண்டுமெனில், பெங்களூரிலிருந்து 6-7 மணி நேரப் பயணத்திலேயே அடைந்துவிட முடியும். அதற்காக நீங்கள் நினைத்த மாத்திரத்தில் குடந்தைக்கோ தஞ்சைக்கோ சென்றுவிட முடியுமா என்ன? மைசூரில் இருந்து புறப்படும் தஞ்சாவூர் எக்ஸ்ப்ரஸ்ஸில் மைசூர் கோட்டா, மாண்டியா கோட்டா போக எஞ்சியிருக்கும் சில இடங்களில் ஒன்றைப் பெறக் குறைந்த பட்சம் இரண்டு வாரம் முன்பே பதிவு செய்ய வேண்டியிருக்கும். இரயிலில் படுத்துக் கொள்ளும் சௌகரியத்தில் பாதியைத் தரும் செமி-ஸ்லீப்பர் பேருந்துகளுக்கு இரயில் கட்டணத்தைவிட இரு மடங்கு பணமளித்தாலும் ஒரு வாரம் முன்பே முன் பதிவு செய்ய வேண்டும். அப்படியும் சோழ தேசம் நம்மை அவ்வப்பொழுது முன் அறிவிப்பின்றி அழைக்கும். தஞ்சை இராஜராஜீஸ்வரத்தையோ, குடந்தை நாகேஸ்வரன் கோயிலையோ பார்க்கும் பொழுது எழும் மகிழ்ச்சியை நினைத்தால் இந்த இடர்களெல்லாம் தூசிற்குச் சமானம் என்று நாம் சோழ தேசத்தை நோக்கி பயணம் சென்றுவிடுவோம். திரும்பும் ஒவ்வொரு முறையும் உடல் அயர்ச்சியும் தூக்கக் கலக்கமும் தீர ஒரு வாரம் பிடிக்கும், அதுவும் அதற்குள் அடுத்த பயணம் வராமல் இருந்தால். நம் மனதைக் கொள்ளை கொண்ட சோழ தேசத்திலிருந்து அதிக தொலைவிலும் இல்லாமல், சௌகரியமாய் பயணம் செல்லக்கூடிய தூரத்திலும் இல்லாமல் இருக்கும் பெங்களூரைத் திரிசங்கு சொர்க்கத்திற்கு ஒப்பிடுவது நியாயம்தானே?

இந்தத் திரிசங்கு சொர்க்கத்தில் அல்லாடிக் கொண்டிருந்த பொழுது ஒரு நண்பர், 'நீ ஏதேதோ கோயிலுக்கு எல்லாம் போறியே, பெங்களூரிலிருந்து 50-60 கி.மீ தொலைவுல ஒரு பிரம்மாணடமான பழைய காலக் கோயில் இருக்கே, அங்க போய் இருக்கியா?' என்றார். அவர் கேட்டதுதான் தாமதம், 'அங்க கல்வெட்டு இருக்கா? சிற்பம் நிறைய இருக்குமா? முன்னாடி மண்டபம் இருக்கா? மண்டபத்துல சிலையெல்லாம் தொப்பையும் தொந்தியுமா இருந்துதா? பழைமை என்றால் எவ்வளவு பழைமை? கோயில் நோட்டிஸ் போர்டுல எதாவது தகவல் போட்டு இருந்தாங்களா?' என்றெல்லாம் நான் கேள்விக் கணைகளைத் தொடுக்க, கோயிலுக்குப் போகும் வழியைச் சொல்லி நண்பர் கழன்று கொண்டார்.

பழைமை என்றால் நமக்கெல்லாம் ராஜேந்திர சோழர் காலத்து கட்டுமானம் வரைதான் பழைமை. போனால் போவதென்று இராஜேந்திரருக்குப் பின் வந்த சோழரையும் சுந்தர பாண்டிய தேவரையும் வேண்டுமானால் அரை மனதுடன் சேர்த்துக் கொள்ளலாம். அதன் பின் எழும்பிய கட்டுமானங்கள் எல்லாம் நம்மைப் பொறுத்தவரையில் சமீபத்தியவைதான். இதைவுணரா நண்பர் ஏதோ விஜயநகரப் பேரரசின் காலத்தில் அமைந்த கோயிலையோ, நாயக்கர் காலக் கோயிலையோ குறிப்பிடுகிறார் என்று நினைத்திருந்தேன். வேலையேதுமில்லாதிருக்கும் ஏதாவது வார இறுதியில் போய் வரலாம் என்று எண்ணியிருந்தேன். அப்படியொரு சனிக்கிழமை உடனே வர பெங்களூரிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் பிரபல சுற்றுலாத் தலமான 'நந்தி ஹில்ஸை' நோக்கிப் பயணித்தேன்.

ஹெப்பால், தேவனஹல்லி எல்லாம் தாண்டி, பிரதான சாலையிலிருந்து இடப்புறம் செல்லும் சாலையில் சில கிலோ மீட்டர்கள் சென்றால், நந்தி மலையை ஏறுவதற்கு வேண்டி இடப்பக்கம் பிரியும் சாலையை அடைவோம். அச்சாலையில் திரும்பாமல் அதற்கு எதிர்புறம் உள்ள சாலையில் சிறிது தூரம் சென்றால் 'போக நந்தீஸ்வரர்' ஆலயத்தை அடையலாம். இந்நூற்றாண்டில் ஏற்பட்டிருக்கும் நுழைவாயிலுக்கும் கோபுர வாயிலுக்கும் இடைப்பட்ட இடத்தில் சாலையின் இரு மருங்கிலும் நன்றாகப் பராமரிக்கப்பட்டு வரும் புல்வெளி, அக்கோடை நாளுக்குக் குளிர்ச்சியாய் இருந்தது. கோடைக்கு இளைப்பாறாமல், கோபுரத்தை நோக்கி விரைந்தேன்.

கோபுரத்தின் அதிஷ்டானத்தின் அமைப்பு என்னைக் கோயிலுக்குள் செல்ல முடியா வண்ணம் தடுத்து நிறுத்தியது.

Ekaveeri


உபபீடம் போல அமைந்திருந்த பகுதியில் உபானமும், மஹாபத்மமும் அதன் மேல் எண்பட்டைக் குமுதமும் சற்றே பெரிய கண்டப் பகுதி போல ஒரு பகுதியும், அதற்கு மேல் கபோதமும் அமைந்துள்ளது. இதை உபபீடமெனக் கொண்டால் இதற்கு மேலுள்ள பகுதியை அதிஷ்டானமாகக் கொள்ளலாம். உப பீடத்தின் மேல் ஜகதி இருக்க, ஜகதிக்கு மேல் இருக்க வேண்டிய குமுதப் பகுதி அங்கில்லாதது குழப்பத்தில் ஆழ்த்தியது. ஜகதிக்கு மேல் பத்ம உபானமும், அதற்கு மேல் பட்டிகையும், பட்டிகைக்கு மேல் கண்டப் பகுதியும் அதற்கு மேல் கபோதமும், அதற்கு மேல் வேதிக் கண்டமும் வேதிகையும் இருக்கக் கண்டு இதை எந்த வகை அதிஷ்டானத்தில் சேர்ப்பது என்று குழம்பினேன். ஒருவேளை, இக்கோபுரத்தை அண்மையில் யாரேனும் பிரித்துக் கட்டியிருக்கக் கூடும், அப்பொழுது இந்த இடமாற்றம் நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு.

தொல்பொருள் ஆய்வுத்துறையின் பராமரிப்பில் இருக்கும் கோயில் என்பதை அறிந்ததும், 'இது பழமையான, முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாகத்தான் இருக்க வேண்டும்', என்ற எண்ணம் தோன்றினாலும், கோயிலினுள் நுழைந்ததும் கண்ணில் படும் விஜயநகர பேரரசின் காலத்து முக மண்டபம் என் எண்ணத்தைக் கொஞ்சம் மாற்றியது. கோயிலினுள் இருந்த பக்தர்கள் கூட்டமெல்லாம் முக மண்டபத்தில் இருக்கும் 'ஒரு பெண் கண்ணாடியில் முகம் பார்க்க்கும் சிற்பத்தைப்' பார்த்துப் பார்த்துப் பூரிப்பதைக் கண்டு எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

முகமண்டபத்தைக் கடந்ததும், மூன்று திருமுன்கள் இருப்பது தெரிந்தது. வடக்கில் இருக்கும் அருணாசலேஸ்வர் கோயில் விஜய நகரக் கட்டுமானம் போலல்லாவிடினும், அங்கிருக்கும் சிற்பங்கள் சோழர்காலச் சிற்பங்கள் போலில்லை. அத்திருமுன்னின் நுழைவாயிலிலிருந்த இசைக்கருவிகளை இனம் கண்டபின், தெற்கு நோக்கி நகர்ந்ததும், பேலூர் ஹலபேடு கோயில்களை ஒத்த ஹொய்சலர் காலத்துத் திருமுன் தெரிந்தது. அதற்குள் நுழைந்ததுதான் தாமதம். எனது கண்கள், அக்கோயிலுக்கு வடக்கில் இருக்கும் அருணாசலேஸ்வரர் கோயிலின் தெற்குச் சுவரை நோக்கிச் சென்றன. அச்சுவர்களில் கோட்டங்கள் நாம் எப்பொழுதும் காண்பது போலல்லாமல், சாளரத்தைப் போல் அமைந்திருக்கிறது. அவற்றில் இசைக்கருவிகளை இசைக்கும் கலைஞர்களின் சிற்பங்களும், நடனக் கலைஞர்களின் சிற்பங்களும் காட்டப் பட்டிருக்கின்றன. ஹொய்சலர் காலத்துத் திருமுன்னைச் சுற்றி வருகையில், அதற்குத் தெற்கில் இருக்கும் 'போக நந்தீஸ்வரர்' ஆலயத்தில் வடபுறச் சுவர் நம்மை ஈர்த்தது. அங்கும் இதே போல ஜன்னல் வடிவில் அமைந்த கோட்டங்களில் கலைஞர்கள் காட்டப்பட்டிருக்கிறார்கள். இச்சுவரில் அற்புதமான பூதவரியும் கண்களில் பட்டுவிட, அவ்வரியிலிருந்த ஒவ்வொரு பூதத்திடமும் குசலம் விசாரிப்பதில் பல கணங்கள் கழிந்தன. ஒரு முக முழவு, ஒரு கண் சிறு பறை, குட முழா போன்ற தாள வாத்திய கருவிகளும் இலை தாளம், செண்டு தாளம் போன்ற கஞ்சக் கருவிகளும், குழல், வீணை போன்ற இசைக்கருவிகளும் ஏராளமாய்க் காணக் கிடைக்கின்றன. குறிப்பாகக் கோயில் முழுவதும் பல குடமுழாக்கள் காட்டப்பட்டிருப்பதின் காரணங்களை ஆழ்ந்து ஆராய்தல் வேண்டும்.

(தொடரும்)
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.