http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 24

இதழ் 24 [ ஜூன் 16 - ஜூலை 15, 2006 ]
குடவாயில் பாலு சிறப்பிதழ் ]


இந்த இதழில்..
In this Issue..

ஓய்வு ஏது ஐயா, உங்கள் பணிக்கு ?
எனக்கு இந்தியா வேண்டாம்!
Perspectives On Hindu Iconography
தட்சிண கயிலாயம்
எண்ணியிருந்தது ஈடேற...
உடையார்குடி கல்வெட்டு - ஒரு மீள்பர்வை
கபிலக்கல்
Links of the Month
சங்கச் சிந்தனைகள் - 11
இதழ் எண். 24 > அறிஞர் பக்கம்

(ஆசிரியரின் கபிலக்கல் என்னும் நூலில் வெளியாகியுள்ள கட்டுரை இச்சிறப்பு மலருக்காக அவரது அனுமதியுடன் வெளியிடப்படுகிறது)


நன்றி மறவாமை, உண்மை நட்பு ஆகியவைகளுக்கு இலக்கணமாக வாழ்ந்து வரலாறு படைத்த ஒருவரை கூறவேண்டும் என்று பட்டியல் இட்டால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சங்கப்புலவர் கபிலரின் பெயர்தான் முதற்பெயராக இருக்கும். தமிழக்கு வளம் சேர்க்க சங்கபுலவர்கள் பாடிய பாடலகளின் எண்ணிக்கையைத் தொகுத்து நோக்கும் போதும் கபிலர் ஒருவர் தான் 275 பாடல்களுக்கு மேலாக பாடி முதன்மை பெற்று திகழ்கிறார். அதில் 261 அடிகளை கொண்ட குறிஞ்சிப் பாட்டும் அடங்கும். அவர் கடையெழ வள்ளல்களில் ஒருவனும், முல்லைக்கு தேர் ஈந்தவனுமாகிய வேள் பாரியின் உற்ற நண்பராகத் திகழ்ந்தவர். பாரியின் இறப்புக்குப் பின் புகலிடம் இன்றித் தவித்த அவனுடைய மகளிர்க்குத் தந்தையாகவே பாசத்தைக் காட்டியதோடு, ஏற்ற மணவாழ்க்கையயும் அமைத்துத்தந்து, கடமை முடித்த உணர்வோடு செந்தழல் புகுந்து வானகம் அடைந்தவர். அவர் வாழ்வும் வாக்கும் மனிதநேயத்தின் வெளிப்பாடாகும்.

தமிழகத்தில் பிறமொழிகளின் ஆதிக்கம் விஞ்சும் போதெல்லாம தமிழர் வரலாறும் பண்புகளும் சிதைவுபெற்று வந்துள்ளன. கபிலரின் வரலாறும் அத்தாக்கத்திலிருந்து தப்பவில்லை. அவரது வாழவு காட்டும் இலக்கியச் சான்றுகளும் பிற தொன்மைத் தடயங்களும் பெற்ற அரிதாரப் பூச்சுகளே இதற்குச் சிறந்த சான்றுகளாக விளங்குகின்றன. காலவெள்ளத்தில் எத்தனை மாற்றங்களைப் பெற்றபோதும் உண்மை வரலாற்றில் ஒரிரு இழைகள் அறுந்துபடாமல் இன்னும் தொடர்வது வியப்பே!

புறநானூற்றில் காணப்படும் கபிலரின் பாடல்கள் பாரியின் வரலாறு, அவரது புதல்வியரின் அவலநிலை போன்றவற்றை எடுத்துக் கூறும்போதே அவரது வரலாற்றையும் உள்ளுறையாகக் காட்டி நிற்கின்றன. அப்பாடல்களுக்குப் பின்னவர்களால் எழுதப்பட்ட குறிப்புகளில் சில பிழைபடவும் மிகைபடவும் அமைந்திருக்க வாய்புகள் உள்ளன. காரணம் என்னவெனின் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் ஒவ்வொரு நூற்றாண்டிலும் குறைந்தது இருமுறையேனும் ஏடு பெயர்த்து எழுதியிருப்பார்கள். அப்போது பெயர்த்து எழுதுபவர்களின் இடைச்செருகலகளும் இடம்பெற இயலும்.

இவைதவிரக் கபிலரைப் பற்றிக் கூறும் நூல்களாகத் திருவாலவாயுடையார் திருவிளையாடல், ஹாலாஸ்யமஹாத்மயம் (வடமொழி நூல்) பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல்புராணம், கடம்பவனபுராணம், கபிலரகவல், சோழமண்டலசதகம், ஞானாமிர்தம், தமிழ்நாவலர்சரிதை தனிப்பாடற்றிரட்டு, விநோதமஞ்சரி, திருவள்ளுவர் கதை, பன்னிருபுலவர்சரித்திரம் முதலியன திகழ்கின்றன, இவையனைத்தும் பிற்காலாத்தில் எழுந்த நூல்களாதலால் உண்மை நிகழ்வுகளுக்கு முரணாகக்கற்பனை வளத்தோடு கூறப்படும் செய்திகளைத் தாங்கி நிற்கின்றன.

சோழர் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு பிற்காலப் பாண்டியர் ஆட்சி செய்யும் நாளில் (14ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில்) ஏற்பட்ட வடப்புலத்துக் கொள்ளையர்களின் சூறையாடகளும். மதுரையை ஆண்ட மாற்றார் சிலரின் கொடுங்கோன்மையும் தமிழகப் பண்பாட்டையும், கலைக்கோவில்களையும் வேரோடு சாய்த்தன. அந்த இருண்ட வேதனைக்குரிய காலம் மாறிய போது தமிழரல்லாத பிற தேயத்து மன்னர்களின் நல்லாட்சி இங்கு மலர்ந்த்து. அப்போது அவர்களது மொழியாதிக்கமும், பண்புகளும் இயல்பாகவே இந்த மண்ணில் கலந்த போது இங்கு மலர்ந்த இலக்கியங்களும் பிறவும் புதிய பரிணாமத்தோடு வளர்ந்தன. வட மொழிப் புராணங்களும், அவற்றின் தமிழாக்க நூல்களும் உதித்தன. அக்கால கட்டத்திற்குப் பின்புதான் கபிலர் வரலாறு மாறியது.

கபிலரகவல் எனும் நூல் கபிலரே கூறுமாறு அமைந்த ஒன்றாகும். அந்நூல் பகவன் என்ற உயர்குல முனிவன் ஒருவனுக்கும், ஆதி எனும் தாழ்ந்த குலப் பெண் ஒருத்திக்கும் நால்வர் பெண்களும் மூவர் ஆண்களுமாக எழுவர் மக்களாகப் பிறந்தனர் எனவும், அவர்கள் முறையே ஊத்துக்காட்டில் வண்ணர் அகத்தில் உப்பையும், காவிரிப்பூம்பட்டினத்தில் சான்றார் வீட்டில் உறுவையும், பாணர் ஒருவர் வீட்டில் ஓளவையாரும், மலைக்குறவர் வீட்டில் வள்ளியும், மயிலையில் பறையர் வீட்டில் வள்ளுவரும், வஞ்சியில் அதிகன் வீட்டில் அதியமானும், ஆருரில் அந்தணர் ஒருவர் வீட்டில் கபிலரும் என வளர்ந்தனர் எனவும் கூறுகின்றது. இக்கூற்று கற்பனை எனினும் கபிலன் எனும் தண்டமிழ்ச் சான்றோனின் குடும்பம் சாதிகள் அடிப்படையில் உயர்வு தாழ்வு இல்லாமல் எல்லா இனத்துக் குடும்பங்களிலும் வளர்ந்தது என்ற கருத்தை கூறி நிற்கின்றது. தமிழின் வளர்ச்சி எல்லாவிடத்தும் என்பது தான் நூல் யாத்தோனின் உள்ளக்கிடக்கையாக இருந்திருத்தல் வேண்டும்.

இந்நூல் போன்ற மேலே குறிப்பிட்ட பல நூல்களும் கபிலரின் பிறப்பு, வாழ்வு பற்றிய கற்பனைக் கதைகளையே கூறுகின்றன. ஒரு நூலில் அவர் சோழநாட்டு ஆருரில் பிறந்தவர் என்றும், மற்றொரு நூலில் பாண்டி நாட்டுத் திருவாதவூரில் பிறந்தவர் என்றும் கூறப்பெற்றுள்ளன. கி.பி. 14ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 19ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்டத்தில் தமிழ்மக்கள் கபிலர் பற்றி இக்கதைகளையே அறிந்திருந்தனர்.

20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் திருக்கோவலூர் (திருக்கோவிலூர்) வீரட்டானேசுவரர் திருக்கோவிலில் காணப்பட்ட சோழர்காலக் கல்வெட்டு ஒன்றினைத் தொல்லியல் அறிஞர்கள் தமிழகத்திற்கு எடுத்துக்கூறினர். அதனைக் கல்லில் எழுதியவன் முதலாம் இராஜராஜசோழனின் அவையில் அறங்களை எடுத்துக் கூறும் உயர்நிலை அலுவலனான சோழநாட்டு ஆலங்குடியினனான கம்பன் ஆதிவிடங்கன் என்பவனாவன். இவன் கோவலூர் வீரட்டத்து இறைவனுக்கு நிலக்கொடை வழங்கினான். அதனைக் கூறுமிடத்துத் திருக்கோவலூரின் பெருமைக்காக இரண்டு வரலாற்று நிகழ்வுகளைக் குறித்துள்ளான். இராஜராஜனின் தாயும் கோவலூர் மலையமான் மகளுகாகிய வானவன் மாதேவி தன் கணவன் உயிர்நீத்தபோது ஈமத்தீயில் இறங்கி உயிர்நீத்தவள் என்று முதல் நிகழ்வைக் குறிப்பிட்டுள்ளான். இரண்டாம் நிகழ்வாக அவனுக்கு ஆயிரம் ஆண்டுகள் முற்பட்ட கபிலரின் வரலாறு கூறியுள்ளான்.

முத்தமிழ் காவலனாகிய செஞ்சொற்கபிலன் தன்னிடம் அடைக்கலமாக இருந்த பாரி வள்ளலின் மகளைத் திருக்கோவிலூர் மலையமானுக்கு மணம் முடித்து விட்டுப் பெண்ணையாற்றில் உள்ள கல்லின் மேல் தீமூட்டி அதில் புகுந்து வீடுபேறு அடைந்தான் என்றும், அந்தக்கல்லே "கபிலக்கல்" என்றும் அக்கல்வெட்டு கூறுகின்றது.

மூவேந்தர்களால் பாரி கொலையுண்ட பிறகு, சிறுகுடிலில் பாரி மகளிர் இருவர் வாழவேண்டிய அவலநிலை ஏற்பட்ட போது கபிலர் ஒருவரே தந்தையாக இருந்து உதவியுள்ளார். "அற்றை திங்கள் அவ் வெண்நிலவில்...." என்ற அவலம் மிகுந்த பாடலைப் பாடிய அம்மகளிர்க்கு நல்வாழ்கை அமைத்துத் தர விரும்பிய கபிலர் விஞ்சிக்கோன், இருங்கோவேள் போன்ற மன்னர்களிடம் திருமணும் செய்து கொள்ள வேண்டியபோது அவர்கள் மறுக்கவே பார்ப்பார் ஒருவரிடம் அவர்களை அடைக்கலப்படுத்தினார் என்றும், ஆரிய அரசன் பிரகத்தனுக்கு தமிழ் அறிவுறுத்தக் குறிஞ்சிப்பாட்டு பாடினார் என்றும், இறுதியாக வடக்கிருந்து உயிர் துறந்தார் என்றும் பல செய்திகளைச் சங்கப்பாடல்கள் வாயிலாகவும், பாடல் குறிப்புகள் வாயிலாகவும் அறியமுடிகிறது.

பிராகிரதம், தமிழ் ஆகிய இருமொழிகளில் காசுகளை வெளியிட்டவர்களும், கடைச்சங்க காலத்தில் ஆந்திரப் பகுதியை ஆட்சி செய்தவர்களும், புறநானூறு போன்ற காதாசப்தசதி எனும் அகஇலக்கியத்தை தொகுத்தவர்களுமாகிய சாலிவாகன அரசமரபில் வந்த ஒருவனே பிரகத்தனாக இருத்தல் கூடும் என்பது, அவனுக்குப் பாரி மகள் கபிலர் மணமுடித்திருக்கலாம் என்பதும் அண்மைக்கால வரலாற்று ஆய்வுகள் மூலம் ஊகம் கொள்ள முடிகிறது.

தென்பெண்ணையாற்றில் கோவலூர் வீரட்டானேசுவரர் கோவிலுக்கு வடக்காக நீரின் நடுவே உள்ள கபிலர் பாறை மீது சிறுகோவில் அமைந்துள்ளது. அதில் உள்ள இலிங்கத் திருமேனியின் பெயர் கபிலேசுவரர் என்பதாகும். அது சோழர் காலத்தில் சங்கத்தமிழ்ப்புலவன் கபிலனுக்காக எடுக்கப்பெற்ற பள்ளிப்படை கோயிலாக இருந்திருக்க வேண்டும். கி.பி. 14ஆம் நூற்றாண்டில் தமிழகம் சந்தித்த கலைப் பண்பாட்டுச் சரிவிற்குப்பின்பு 15ஆம் நூற்றாண்டில் மறுமலர்ச்சி ஏற்பட்ட நாளில் கபிலக்கல்லுக்குப் பரான அடிப்படையில் புதிய கதை முகிழ்த்தது. அது கபிலச்சருக்கம் என்ற தலைப்பில கோவலூர் புராணமாக மலர்ந்தது. கபிலன் எனும் தவமுனி ஒருவன் தான்பெற்ற இடர் களைவதற்காகத் திருக்கோவலூர் பெண்ணையாற்றில் உள்ள பாறை மீது இலிங்கம் தாபித்து வழிபட்டுப் பின்னர் சிவகதி பெற்றதாக அப்புராணம் கூறுகின்றது.

இப்புராணக்கதைக்கு, 150 ஆண்டுகளுக்கு முன்பு ஓவியம் தீட்ட முயன்றான் ஒருவன். அவன் கோவலூர்ப் புராணக் காட்சிகள் பலவற்றை திருக்கோவலூர்க் கோபுர விதானத்தில் தீட்டினான். அதில் ஒரு காட்சியாக பெண்ணையாறு காட்டப்பெற்று அதில் உள்ள கற்பாறை மீது காணப்படும் சிறு கோவிலில் உள்ள இலிங்கத்தை கபில முனிவர் பூசிப்பது போன்று காட்டியுள்ளதோடு கபில முனிவர் பூசிப்பது போன்று காட்டியுள்ளதோடு கபிலமுனி சருக்கத்தின் குறிப்பையும் தமிழில் எழுதியுள்ளான். இதற்கு அருகில் ஓளவையார் பாரி மகளிர் திருமணத்திற்காக விநாயாகப்பெருமான் முன்பு வணங்கும் காட்சியோடு கோவலூர்ப் புராணக் காட்சிகள் பலவற்றையும் குறிப்புகளுடன் இடம்பெறுமாறு செய்துள்ளான்.

கோவலூர்ப் புராணத்தில் தெய்வீக அரசன் கதை கூறுமிடத்துப் பாரி என்ற சிங்கள நாட்டு அரசனுக்கு அங்கவை, சங்கவை என்ற புதல்வியர் இருந்ததையும் அவனது இறப்புக்குப் பிறகு ஓளவையார் அப்பெண்களைத் திருக்கோவலூர் மன்னன் தெய்வீகனிடம் அழைத்து வந்து அவனுக்கே திருமணம் செய்து வைத்தார் என்றும் கூறுகின்றது.

இராஜராஜனுடைய கல்வெட்டுக் கூறும் கபிலர் வரலாறு அறியப்படாத நிலையில் கி.பி.15 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 19ஆம் நூற்றாண்டு இறுதிவரை திருக்கோவலூரில் கபிலக்கல் மீது கோவில் இருந்தமை, அதில் உள்ள இலிங்கத்திற்கு கபிலேசுவரர் என்ற பெயர் வழங்கியமை, பாரி மகளிருக்கு அவ்வூரில் தான் திருமணம் நடந்தது என்ற கதை வழக்கு ஆகியவற்றை மக்கள் அறிந்திருந்தனர்.

கோவலூர்க் கோபுர விதானத்தில் காணப்பெறும் ஓவியத்தில் உள்ள கபிலக்கல்லின் அமைப்பும், கோவிலும், கபிலமுனியின் உருவமும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். புராண வரலாறு எப்படி இருப்பினும் சங்கப்புலவன் தீப்பாய்ந்த இடத்தில் எடுக்கப்பட்ட நினைவாலாயம் (பள்ளிப்படை) அது என்பதில் கருத்து வேறுபாட்டிற்கு இடமே இல்லை.

தமிழக அரசின் தொல்லியால் துறை கபிலாக்கல்லை பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவித்து நன்கு பராமரித்து வருவது ஆறுதலான செய்தியாகும். ஆனால் தமிழ் மக்களின் பார்வையிலிருந்து இக்கல் விலகியே இருப்பது வேதனைக்குரியதுதான். கபிலக்கல்லுக்குப் புராணம் கற்பித்து கோபுர விதானத்தில் தீட்டப்பெற்ற ஓவியத்தின் மீது அண்மையில் திருப்பணி எனும் பெயரால் மஞ்சள் காவியினைப் பூசி முற்றிலுமாக அழித்திருப்பது கொடுமையிலும் கொடுமையானதாகும்.



this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.