http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 28

இதழ் 28
[ அக்டோபர் 16 - நவம்பர் 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

இமயத்துக்கே மகுடமா?
கதை 8 - தேவன் தொட்ட சுனை (இறுதிப் பகுதி)
Valanchuli - Interesting Observations
உடையாளூர்க் கயிலாசநாதர் கோயில்
ஜப்பானில் தமிழும் பரதமும்
திரு. ஐராவதம் மகாதேவன் - அறிமுகம்
இரண்டாண்டு நிறைவு வாழ்த்துச்செய்திகள் - II
Links of the Month
இதழ் எண். 28 > கலையும் ஆய்வும்
உடையாளூர்க் கயிலாசநாதர் கோயில்
மு. நளினி
கும்பகோணம் வட்டத்தில் பட்டீசுவரத்திலிருந்து மாடக்குடி வழியாக வலங்கைமான் செல்லும் சாலையில் பட்டீசுவரத்திற்கு ஏறத்தாழ நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மிகப் பின்தங்கிய சிற்றூரே உடையாளூர். 'சிவபாதசேகரமங்கலம்' என்று சோழர் காலக் கல்வெட்டுகள் அழைக்கும் அந்தணர் குடியிருப்புப் பகுதியாக விளங்கிய இவ்வூர், எந்தக் காலத்தில் 'உடையாளூர்' எனப் பெயர் மாற்றம் பெற்றது என்பதை அறியக்கூடவில்லை. சிவபெருமானையும் திருமாலையும் முதன்மைத் தெய்வங்களாகக் கொண்டுள்ள சோழர் காலக் கற்றளிகள் இரண்டு இவ்வூரின் பழம்பெருமைகளைப் பதிவு செய்திருக்கும் வரலாற்று ஏடுகளாய் உடையாளூருக்கு அடையாளம் தந்து நிற்கின்றன.

கயிலாசநாதர் கோயில் என்றழைக்கப்படும் சிவன் கோயில் தெற்கு நோக்கிய இரு எளிய வாயில்களைப் பெற்றுள்ளது. முதல் வாயில் அம்மன் கோயிலுக்கு நேரெதிரே அமைய, இரண்டாம் வாயில் கயிலாசநாதர் கோயிலுக்கு வழிவிடுகிறது. இவ்வாயில் வழியே உள்நுழைவாரை எதிரிலுள்ள ஊர்தி மண்டபம் எதிர்கொள்கிறது. வாயிலின் மேற்கில் விமானம், முகமண்டபம், பெருமண்டபம் பெற்று விளங்கும் கயிலாசநாதர் கோயில், இதை நோக்கியபடி வளாகத்தில் சிறிய அளவிலான மணிமண்டபம், நந்திமண்டபம், பலித்தளம் உள்ளன. இம்முதன்மைக் கோயிலின் மேற்கில் தெற்கு மூலையில் பிள்ளையார் திருமுன். விமானத்தின் நேர் பின்னே முருகன் திருமுன். வடக்கு மூலையிலுள்ள மண்டபத்தில் லிங்கத்திருமேனிகளும் வேறு சில இறைத்திருமேனிகளும் உள்ளன. வடக்குச் சுற்றில் கொற்றவைத் திருமுன்னும் சண்டேசுவரர் திருமுன்னும் அடுத்தடுத்து அமைய, பெருமண்டபத்தின் கிழக்கில் அம்மன் கோயில்.

இறைவன் விமானம்

கீழ்த்தளம் கருங்கல்லாலும் மேற்றளம், ஆரஉறுப்புகள், கிரீவம், சிகரம் இவை செங்கல்லாலும் ஆன இறைவன் விமானம், இருதளக் கலப்பு வேசரமாய்த் துணை உபானத்தின்மீது எழுகிறது. அதையடுத்துக் கம்பும் தாமரை உபானமும் மற்றொரு கம்பும் அமைய, ஜகதி காட்டப்பட்டுள்ளது. ஜகதியின் மேற்பரப்பை மேனோக்குத் தாமரை இதழ் வரி அலங்கரிக்க, அடுத்த உறுப்பான உருள் குமுதத்தின் கீழ்ப் பரப்பைக் கீழ் நோக்குத் தாமரை வரி தழுவியுள்ளது. உருள் குமுதத்தின் மேல் மற்றொரு மேனோக்குத் தாமரை வரி. இப்பிரதிபந்தத் தாங்குதளத்தின் மேலுறுப்பாகப் பிரதிவரி, திருப்பங்களில் மகரத்தலைகளுடன் எழுச்சியுறக் காட்டப்பட்டுள்ளது. மேலே துணைக்கம்பும் வேதிகைத் தொகுதியும். இத்தொகுதியின் கண்டபாதங்கள் சிற்பங்கள் பெறாமை இழப்பே. தொகுதியை அடுத்துத் துணைக்கம்புப் படர, மேலே சுவர். உபானத்திலிருந்தே சாலைப்பத்தி முன்னிழுக்கப்பட்டுள்ளதால், இதை அணைக்கவும் சுவர்த் திருப்பங்களை அழகூட்டவும் இடம்பெற்றுள்ள எண்முக அரைத்தூண்கள் கர்ணபத்திகளிலும் பக்கத்திற்கொன்றாய் நிற்கின்றன.

இவ்வெண்முகத் தூண்கள் அனைத்தும் சதுரபாதம், எண்முக உடல், (ஒன்றிரண்டில் மட்டும் மாலைத் தொங்கல்) தாமரைக்கட்டு, கலசம், தாடி, கும்பம் பெற்றுள்ளன. இவற்றுள் கலசத்தின் கீழ்ப்பரப்புப் பூவிதழ் அலங்கரிப்புப் பெற்றுள்ளது. பாலியும் பலகையும் மேலே தொடர, வீரகண்டமும் போதிகையும் அடுத்தமைந்துள்ளன. போதிகை தரங்கம் பெற்றுக் குளவு காட்டிக் கட்டுமானக் காலம் சொல்ல, மேலே கூரையுறுப்புகளாய் உத்திரம், வாஜனம், கணவரி பெற்றுள்ள வலபி, கபோதம். கணவரியில் மோதக விரும்பிகளாய் விநாயகரும் உதரமுகனும். ஒரு பூதத்தின் மடியில் தலை சாய்த்த நிலையில் இன்னொரு பூதம். தந்தைப் பூதத்தின் தோள் மேல் அமர்ந்த நிலையில் குட்டிப் பூதம், குடை பிடித்த பூதம், ஊதுகுழல், சங்கு, பறை இவற்றை வாசிக்கும் கருவிக் கலைஞர்களாய்ச் சில பூதங்கள். எளிய கூடுவளைவுகள் பெற்றுள்ள கபோத முகப்பின் கீழ்ப்பகுதி சந்திரமண்டல அலங்கரிப்பும் கொண்டுள்ளது. மேலே பூமிதேசம்.

முன்னிழுக்கப்பட்டுள்ள சாலைப்பத்திகள் தெற்கு, மேற்கு, வடக்கில் கோட்டம் பெற்றுக் கிழக்கில் வாயில் காட்டி நிற்கின்றன. தாங்குதளத் துணைக்கம்புவரை நீளும் கோட்டங்களை சட்டத்தலை பெற்ற உருளை அரைத்தூணகள் அணைத்துள்ளன. செவ்வகப் பாதம், உருளை உடல், தாமரைக்கட்டு, கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை, வீரகண்டம் பெற்றுள்ள இவற்றின் மேல் கூரையுறுப்புகளாய் உத்திரம், வாஜனம், தாமரை வலபி காட்டப்பட்டுள்ளன. கோட்டங்களின் தலைப்பில் எளிய மகரதோரணங்கள்.

விமான முதல் தளக் கூரை மீது பஞ்சரம் தவிர்த்த பிற ஆர உறுப்புகள் நாசிகைகளுடன் அமைய, அவற்றை இணைக்கும் ஆரச்சுவரும் நாசிகை காட்டுகிறது. இநநாசிகைகளில் சுதையாலான பல்வேறு தெய்வ உருவங்கள் காட்டப்பட்டுள்ளன. சாலை நாசிகைகளில் தென்புறம் ஆலமர் அண்ணலும், மேற்கில் விஷ்ணுவும் வடக்கில் நான்முகனும் உள்ளனர். முதல் தள ஆர உறுப்புகளின் பின்னே இரண்டாம் தளம் அமைய, மேலே வேசர கிரீவம், சிகரம், தூபி. கிரீவ கோட்டங்களைப் பெருநாசிகைகள் அலங்கரிக்கின்றன. இக்கோட்டங்களில் தென்புறம் ஆலமர் அண்ணல், மேற்கில் விஷ்ணு, வடக்கில் நான்முகன் உள்ளனர். கோணத்திசை நாசிகைகளும் சுதையுருவங்கள் பெற்றுள்ளன. விமானச் சுவர்க் கோட்டங்களில் தென்புறம் ஆலமர் அண்ணலும், மேற்கில் லிங்கோத்பவரும் வடக்கில் நான்முகனும் உள்ளனர்.

முகமண்டபம்

விமானத்தின் கட்டமைப்பிலேயே, அதன் முன் அமைந்திருக்கும் முகமண்டபம் தெற்கிலும் வடக்கிலும் சுவர்ப்பகுதியில் பக்கத்திற்கு மூன்று கோட்டங்கள் பெற்றுள்ளது. இக்கோட்டங்கள் அமைப்பிலும் அணைப்பிலும் விமானக் கோட்டங்களை ஒத்துள்ளன. கோட்டங்களில் தெற்கில் மேற்கிலிருந்து கிழக்காக அகத்தியர், பிச்சைத்தேவர், ஆலமர் அண்ணல் இடம்பெற, வடக்கில் காளைத்தேவர், அம்மையப்பர் உள்ளனர். வெறுமையாக உள்ள நடுக்கோட்டத்தின் முன் ஒரு திருமுன் எழுப்பிக் கொற்றவையை இருத்தியுள்ளனர். விமானத்திற்கும் முகமண்டபத்திற்கும் இடையிலான ஒடுக்கத்தில் தென்புறம் கல் சன்னலொன்று இடம்பெற்றுள்ளது. முகமண்டபத்தை ஒட்டியுள்ள செங்கல்லாலான ஒருதள வேசர சண்டேசுவரர் திருமுன் பிற்காலக் கட்டமைப்பிலுள்ளது.

பெருமண்டபம்

முகமண்டபத்தின் முன் விரியும் பெருமண்டபமும் சோழர் பணியே. தாமரை உபானத்தின் மீதெழும் பாதபந்தத் தாங்குதளம் வேதிகைத்தொகுதி பெற்றுச் சுவர் தாங்குகிறது. நான்முக அரைத்தூண்களால் அணைக்கப்பெற்றுள்ள சுவரில் தெற்கிலும் வடக்கிலும் சிற்பமற்ற ஐந்து கோட்டங்கள் அமைய, கிழக்கில் நான்கு உள்ளன. கிழக்குக் கோட்டங்களுள் இரண்டில் பிற்காலப் பிள்ளையார் வடிவங்களும் ஒன்றில், மாலை அணிவிக்கப்பெற்ற சிவலிங்கத்தை வணங்கிய நிலையில் ஓர் ஆண்வடிவமும் காட்டப்பெற்றுள்ளன. நடுக்கோட்டம் வாயிலாகியுள்ளது. சுவர்த் தூண்கள் உடல், தாமரைக்கட்டு, கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை, வீரகண்டம் பெற்று வெட்டுத்தரங்கப் போதிகைகளால் உத்திரம் தாங்க மேலே வாஜனம், தாமரை வலபி, கபோதம்.

கோட்டத்தூண்கள் சட்டத்தலைபெற்ற நான்முக அரைத்தூண்களாய் அமைந்து வீரகண்டத்துடன் உத்திரம் தாங்க, மேலே வாஜனம், தாமரை வலபி. கோட்டங்களின் தலைப்பில் அலங்கரிப்பற்ற மகரதோரணம். பெருமண்டபக் கிழக்கில் அமைந்துள்ள வாயில் நாகபந்தம் பெற, கிழக்குச் சுவரின் வாயிலடுத்த தளங்களில் தெற்கில் தமிழம் கொண்டையுடன் ஒரு பெண் வடிவமும் வடக்கில் ஓர் ஆண் வடிவமும் அஞ்சலியில் காட்டப்பட்டுள்ளன. சமபாத ஸ்தானகத்திலுள்ள பெண் பட்டாடையணிந்து, செவிகளில் பனையோலைச் சுருள்கள் பெய்துள்ளார். ஆடவர் கிரீட மகுடம் அணிந்து, செவிகளில் பனையோலைச் சுருள்கள் மிளிர, அரையாடையும் இடைக்கட்டுமாய்க் காட்சி தருகிறார். இவர் கழுத்தில் சரப்பளி; இடையில் குறங்குசெறி.

பெருமண்டபத்தின் உட்பகுதியை மூன்று சதுரங்களும் இரண்டு கட்டுகளும் பெற்ற தூண்கள் தாங்குகினறன. முதலிரண்டு சதுரங்களில் நாகபந்தங்கள் பெற்று (சில தூண்களில் கீழ்ச்சதுரம் மட்டும்) மேலே, பூமொட்டுப் போதிகைகள் காட்டும் இத்தூண்களின் மேல் உத்திரம், வாஜனம், வலபி, கூரை. கம்பிக் கதவுகளால் இருபிரிவுகளாக்கப்பட்டுள்ள இம்மண்டபத்தில் முதல் பகுதியில் தென்புறம் ஒரு கொற்றவையும், தேவிகளுடனான அய்யனார் செப்புத்திருமேனியும் உள்ளன.

வடபுறம் ஒன்பான் கோள்களுக்கான மேடை. வடசுவரின் அருகே உள்ள திண்ணையில் ஆடவல்லான். முன்கைகள் சிதைந்துள்ள போதும் வலமுன்கையின் காக்கும் குறிப்பை அடையாளப்படுத்தலாம். இக்கையைப் பாம்பொன்று சுற்றியுள்ளது. இடமுன்கையை வேழக் கையாக ஊகிக்கலாம். பின்கைகளில் உடுக்கையும் தீயகலும். வலச்செவியில் மகரகுண்டலமும் இடச்செவியில் பனையோலைச் சுருளும் பெற்றாடும் இறைவனின் வலக்கால் முயலகன் மீது ஊன்றியிருக்க, இடக்கால் வலப்புறம் வீசப்பட்டுள்ளது. நெற்றிக்கண்ணும் விரிசடையும் தோள்களில் ஸ்கந்தமாலையும் கொண்டிலங்கும் இறைவனின் கொக்கிறகு சூடிய திருமுடியில் பாம்புகள் பிணைத்த மண்டையோடும் பிறையும்.

திருவாசியில் வலப்புறம் கூப்பிய கைளுடன் கங்கை. உதரபந்தமும் முப்புரிநூலும் சிற்றாடையும் கொண்டுள்ள இறைவனின் வலக்காலில் வீரக்கழல். இறைவன் காலின் கீழுள்ள முயலகன் இடச்செவியில் பனையோலைச் சுருள் பெற்றுத் தலையைக் குனிந்தபடி காட்சிதர, இறைவனின் வலப்புறம் விசாலாட்சி; இடப்புறம் சிவகாமசுந்தரி. இம்முதற் பகுதியின் கிழக்குச் சுவரருகே பிள்ளையார், பைரவர், கொற்றவை, சூரியன், சந்திரன் சிற்பங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

தெற்கிலும் ஒரு திறப்புப் பெற்றுள்ள பெருமண்டபத்தின் இரண்டாம் பகுதி கதவுகள் பெற்றுள்ளது. இதன் தென்புறம் உள்ள மேற்குப் பார்வையிலமைந்த மேடையில் முருகன், பிள்ளையார், சோமாஸ்கந்தர் செப்புத்திருமேனிகள் உள்ளன. வடபுறம் கிழக்கில் பள்ளியறையும் அடுத்துள்ள மேடையில் பள்ளியறைச் சொக்கர், ஆடவல்லான், உமை திருமேனிகளும் உள்ளன. இம்மண்டபத்தின் நடுவே பலித்தளம், நந்தி காட்டப்பட்டுள்ளன.

முகமண்டபம்

தாமரை வரியும் நாகபந்தமும் பெற்றுள்ள நிலைகளுடனான முகமண்டப வாயிலின் இருபுறமும் பக்கத்திற்கொருவராக வாயிற்காவலர்கள். சதுர பாதமும் எண்முக உடலும் கொண்ட ஆறு தூண்கள் பட்டையும் குளவும் உடைய தரங்கக் கைகள் பெற்ற போதிகைகளால் உத்திரம் தாங்க, மேலே வாஜனம், வலபி, கூரை. இம்மண்டபத்தின் வடபுறம் சமபாதஸ்தானகத்தில் தாமரைத்தளத்தில் போகசதயாம்பாள். சடைமகுடமும், மகரகுண்டலங்களும் பெற்றுள்ள அம்மையின் பின்கைகளில் அக்கமாலையும் தாமரையும் உள்ளன. முன்கைகள் காக்கும் குறிப்பும் அருள்குறிப்பும் காட்டுகின்றன. சட்டத்தலைத் தூண்களால் அணைக்கப்பெற்ற கருவறை வாயில் முகமண்டப வாயிலை ஒத்துள்ளது. கருவறையில் எளிய வேசர லிங்கத்திருமேனியராய் கயிலாசநாதர்.

அம்மன் கோயில்

மையக் கோயிலின் வடகிழக்கில் தெற்குப் பார்வையாய் அமைந்துள்ளது அம்மன் விமானம். ஒருதளக் கலப்பு வேசரமாய்க் கட்டப்பட்டுள்ள இதன் தாங்குதளம் உபானத்தின் மீதெழும் பாதபந்தமாக உள்ளது. வேதிகைத் தொகுதியும் எண்முக அரைத்தூண்கள் அணைவு செய்யும் சுவரும் அடுத்தமைய, மேலே கூரையுறுப்புகள். கருங்கல்லாலான இக்கீழ்த்தளத்தின் மீது செங்கல்லாலான கிரீவம், சிகரம், தூபி. விமானத்தின் முன் சிறு முகமண்டபமும் செங்கல்லால் ஆன பெருமண்டபமும் முன்றிலும் காட்டப்பட்டுள்ளன.

பெருமண்டபத்தின் தென்கிழக்கில் சிறிய மடைப்பள்ளி அறை. அம்மன் திருமுன் கிழக்கில் வெளியுலகத் தொடர்பு கொள்ளத் தனிவாயில் பெற்றுள்ளது. எளிய இவ்வாயில் நிலைகளில் நாகபந்தங்கள். வாயிலின் மேலமைப்பில் சுதை வடிவில் நடுவில் இறைவியும் பக்கங்களில் யானைத்திருமகள், கலைமகள் வடிவங்களும் உள்ளன. சங்கரபார்வதி எனறழைக்கப்படும் இறைவி, சமபாதஸ்தானகத்தில் பட்டாடை அணிந்தவராய்ச் சடைமகுடமும் பனையோலைக் குண்டலங்களும் ஸ்கந்தமாலையும் கைவளைகளும் பெற்று, முன் கைகளைக் காக்கும் குறிப்பிலும் அருட்குறிப்பிலும் அமைத்து, பின்கைகளில் அக்கமாலை, தாமரை ஏந்திக் காட்சிதருகிறார்.

சிற்பங்கள்

விமானக் கோட்டங்கள

ஆலமர்அண்ணல்

செவிகளில் வலப்புறம் மகரகுண்டலமும் இடப்புறம் பனையோலைச் சுருளும் கொண்டு கழுத்தில் சரப்பளியும் முத்துமாலையும் அணிசெய்ய, வலக்காலை முயலகன் மீதிருத்தி வீராசனத்தில் இருக்கும் இறைவனின் பின்கைளில் வலப்புறம் அக்கமாலையும் பாம்பும்; இடப்புறம் நெருப்பு. முன்கைகளில் வலக்கை சின்முத்திரை காட்ட, இடமுன்கை முழங்கால் மீது நெகிழ்த்தப்பட்டுள்ளது. இறைவனின் சடைபாரத்தில் கொக்கிறகும் பூரிமங்களுடனான நெற்றிப்பட்டமும் காட்டப்பட்டுள்ளன. சிற்றாடையுடன் குப்புறப் படுத்துள்ள முயலகனின் செவிகளில் பனையோலைக் குண்டலங்கள். வலக்கையின் மீது தலையை இருத்தியுள்ள இவர் இடக்கையில் பாம்பு..

இலிங்கோதபவர்

இலிங்கோதபவர் சிற்பத்தில் மேற்புறம் அன்னமும் கீழ்ப்புறம் வராகமும் அடிமுடிதேடும் முயறசியில் காட்டப்பட்டுள்ளன. கோளவடிவான திறப்பில் வெளிப்பட்டிருக்கும் சிவபெருமானின் வலமுன்கை காக்கும் குறிப்பில் இருக்க, இடமுன்கை கடியவலம்பிதமாக உள்ளது. பின்கைகளில் மழுவும் மானும். செவிகளில் வலப்புறம் மகரகுண்டலம்; இடப்புறம் பனையோலைச் சுருள். உபவீதமாய் முப்புரிநூலும் சிற்றாடையும் அணிந்துள்ள பெருமானின் தொடைகளைக் குறங்குசெறி தழுவியுள்ளது. உதரபந்தம் பெற்றுள்ள இவர் கைகளில் வளைகள், கங்கணங்கள்.

நான்முகன்

முன்கைகளைக் காக்கும் குறிப்பிலும் கடியவலம்பித்ததிலும் காட்டிப் பின் கைகளில் அக்கமாலையும் குண்டிகையும் ஏந்தியுள்ள நான்முகனின் தலையில் சடைமகுடம். சமபாதஸ்தானகத்திலுள்ள இவர் இடையைப் பட்டாடை அலங்கரிக்க, கழுத்தில் சரப்பளி. செவிகளில் பூட்டுக் குண்டலங்கள். முப்புரிநூல் உபவீதமாய் உள்ளது.

அகத்தியர்

வலக்காலைக் கீழிறக்கித் தனித் தாமரைத் தளத்தில் இருத்தியபடி கல்மேடையில் சுகாசனத்திலிருக்கும் அகத்தியரின் இடையைப் பட்டாடை அலங்கரிக்கிறது. வலக்கை சின்முத்திரையில் அக்கமாலை கொள்ள, இடக்கையில் குண்டிகை. மகுடமாய்க் கட்டப்பெற்ற சடைமுடியும், தாடியும் மீசையுமாய்க் காட்சிதரும் இம்முனிவரின் தோள்களில் ஸ்கந்தமாலை படர்ந்துள்ளது. இடப்புறம் முடியப்பெற்ற உதரபந்தமும் உபவீதமாய் முப்புரிநூலும் கொண்டுள்ள இவர் கைகளில் கங்கணங்கள். நீள்செவிகளில் அணிகலனகள் இல்லை. அகத்தியர் சிற்பத்தில் அவர் வலக்காலின் பின்புறமுள்ள பகுதியில் அஞ்சலி முத்திரையில் ஆடவர் ஒருவர் முழங்கால்களை உள்நோக்கி மடித்து அமர்ந்துள்ளார். கழுத்திலும் தலையைச் சுற்றிலும் ருத்திராக்கமாலைகள் அணிந்துள்ள இவர், இச்சிற்பத்தை எழுந்தருளுவித்தவராகலாம்.

பிச்சைத்தேவர்

இலேசான இடஒருக்களிப்பில் கழலணிந்த திருவடிகளில் மிதியடிகளுடன் நிற்கும் பிச்சைத்தேவரின் பின்கைளில் வலப்புறம் உடுக்கை. இடப்புறம் நீண்ட தண்டு. இடமுன்கை பிச்சைப் பாத்திரமாய்த் தலையோடு தாங்க, வலமுன்கை பின்வரும் மானுக்குப் புல்லளிக்கிறது. கைகளில் வளையலகள், கங்கணங்கள். சடைபாரத்துடன் வலச்செவி நீள்செவியாக, இடச்செவியில் பனையோலைக் குண்டலமணிந்து, கழுத்தில் சரப்பளியும் சவடியும் இலங்க, முப்புரிநூலணிந்து உதரபந்தத்துடன் காட்சிதரும் பெருமானின் இடப்புறம் பூதமொனறு தலையில் பாத்திரம் சுமந்தபடி பிச்சைக்கு நிற்கிறது. நிர்வாணியாய் நிற்கும் சிவபெருமானின் இடையில் அரைஞாணாய்ப் படமெடுத்த பாம்பு. இதன் தலை மீது இறைவனின் இடமுன்கை தாங்கலாய் இருத்தப்பட்டுள்ளது.

காளைத்தேவர்

கால்களில் வளைகளும் தலையில் நெற்றிச்சுட்டியும் பின்பகுதியிலும் கழுத்திலும் மணிமாலைகளும் கழுத்தில் நீளக் குஞ்சலமும் கொண்டிலங்கும் காளையின் தலைமீது இடக்கையை நெகிழ்த்தியிருக்கும் இறைவனின் வலக்கை கடியவலம்பிதமாக உள்ளது. வலப் பாதத்தை சமத்திலும் இடப்பாதத்தை அக்ரதலசஞ்சாரத்தில் ஸ்வஸ்திகமாகவும் நிறுத்தியிருக்கும் இறைவனின் காலகளில் தாள்செறிகள். இடக்காலில் வீரக்கழலும் சேர்ந்துள்ளது. இடுப்பில் குறங்குசெறி. பிரம்மமுடிச்சுடன் அமைந்தள்ள முப்புரிநூல் உபவீதமாக அமைய, உதரபந்தமும் காட்டப்பட்டுள்ளது.
கழுத்தில் சரப்பளி. செவிகளில் வலப்புறம் மகரகுண்டலம் இடப்புறம் பனைச்சுருள். சடைமகுடரான இவர் கைகளில் மும்மூன்று வளைகள், கங்கணங்களுடன், முழங்கை வளைகளும் அணிசெய்கின்றன. விரல்களில் மோதிரங்கள். தோள்களில் ஸ்கந்தமாலை. இடையில் தொடைகளைத் தழுவிய அரையாடையும் இடைக்கட்டும். இச்சிற்பத்தளத்தின் இடப்புறம் கைகளை அஞ்சலித்த நிலையில் முழங்கால்களை மடித்தமர்ந்தபடி காட்டப்பட்டுள்ள ஆடவர் இச்சிற்பத்தை எடுத்தவராகலாம்.

கொற்றவை

கொற்றவை சமபாதஸ்தானகத்தில் இருபாதங்களையும் மகிடத்தலை மீது இருத்திக் கரண்டமகுடத்துடன் காட்சிதருகிறார். வலக்கைகளில் முன்கை காக்கும் குறிப்புக்காட்ட பிறகைகளில் குறுவாளும், சக்கரமும் உள்ளன. இடக்கைகளில் முன்கை கடியவலம்பிதத்தில் இருக்கப் பின்கைகளில் கேடயமும் சங்கும் உள்ளன. பட்டாடையும் இடைக்கட்டும் மார்புக்கச்சும் பெற்றுள்ள அம்மையின் கைகளில் வளைகள், கங்கணங்கள். செவிகளில் பனையோலைச் சுருள்கள். தோள்களில் ஸ்கந்தமாலை. கழுத்தில் முத்துமாலைகள். கொற்றவைச் சிற்பத்தின் கீழ் இடப்புறத்தே கொண்டையணிந்தவராய் அஞ்சலியில் காட்சியளிக்கும் பெண் இச்சிற்பத்தின் கொடையாளராகலாம்.

அம்மையப்பர்

சமபாதஸ்தானகத்தில் காட்சிதரும் அம்மையப்பரின் வலப்பகுதியைச் சிற்றாடையும் இடப்பகுதியைப் பட்டாடையும் அணிசெய்கின்றன. சடைமகுடமும் நெற்றிக்கண்ணும் கொண்டிலங்கும் இறைவனின் வலச்செவியில் மகரகுண்டலம். இடச்செவியில் பனைச்சுருள். கழுத்தில் சரப்பளி. இடக்கையில் நீலோத்பலம். வலக்கைகளில் முன்கை நந்தி தலைமீது அமர, இடக்கையில் மழு. முப்புரிநூல், ஸ்கந்தமாலை, வளைகள், கங்கணங்கள் கொண்டிலங்கும் இறைவனின் இடுப்பில் குறங்குசெறி. வலக்காலில் வீரக்கழல். இரு பாதங்களிலும் தாள்செறிகள்.

வாயிற்காவலர்கள்

இருபுறக் காவலர்களுமே நெடிய திருமேனியர்களாய்ச் செவிகளில் பனையோலைக் குண்டலங்கள் அணிந்து, முப்புரிநூல், உதரபந்தம் பெற்றுக் கோரைப்பற்களுடன் இலேசாக ஒருக்களித்த நிலையில் காட்சிதருகின்றனர். இருவருக்குமே கீரத்திமுக முகப்புடனான சடைமகுடந்தான் எனறாலும் தெற்கரின் முடிச்சுருள்கள் திருவாசிச் சுடரகள் போல் காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இருவருமே தாள்செறிகள், விரல் மோதிரங்கள் அணிந்து இடைக்கட்டுடனான சிற்றாடை அணிந்துள்ளனர்.

வலப்பாதத்தை மழுவின் கத்திப் பகுதியின் மீது இருத்தி இடப்பாதத்தை கருவறைக்காய்த் திருப்பியுள்ள தெற்கரின் இடக்கை மழுமீது அமர, வலக்கை எச்சரிக்கிறது. மழுவின் வடபுறத்தே கீழ்ப்பகுதியில் அஞ்சலித்த கைகளுடன் அடியார் ஒருவர் முழங்காலளவில் கால்களை உள்நோக்கி மடக்கி அமர்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளார். துணியை மடித்து முப்புரிநூல் போல் அணிந்து தலைப்பாகையுடன் காட்சிதரும் இவருக்குத் தாடியும் மீசையும் காட்டப்பட்டுள்ளன. இவர் இவ்வாயிற்காவலர் சிற்பத்தை உருவாக்கக் கொடையளித்தவராகலாம்.

இடப்பாதத்தைத் தாம் பிடுங்கி நிறுத்தியிருக்கும் மரத்தின் கிளையொனறில் இருத்தியபடி, வலப்பாதத்தைக் கருவறை நோக்கித் திருப்பியிருக்கும் வடக்கர், வலக்கையைச் சுட்டு முத்திரையிலும் இடக்கையை மரத்தில் இருத்தியபடியும் காட்சிதருகிறார். பாம்பொன்று இம்மரத்தைச் சுற்றியுள்ளது. இவர் இடப்பாதத்தின் கீழப்பகுதியில் மழித்த தலையும் நீள்செவிகளும் சிற்றாடையுமாய் அஞ்சலியில் காணப்படும் அடியவர் வடக்கரின் கொடையாளியாகலாம்.

சண்டேசுவரர்

சண்டேசுவரரின் சிற்பம் சுகாசனத்தில் உள்ளது. சடைப்பாரத்துடன் சடைநுனிகள் சுருள்களாக்கப்பட்டுக் காட்சிதரும் சண்டேசுவரரின் வலக்கையில் பரசு. இடக்கை தொடைமீது இருத்தப்பட்டுள்ளது. செவிகளில் பனையோலைச் சுருள்கள். முப்புரிநூலும் உதரபந்தமும் ஸ்கந்தமாலையும் சரப்பளியும் அணிந்துள்ள சண்டேசுவரரின் இடையைச் சிற்றாடையும் இடைக்கட்டும் மறைத்துள்ளன.

வாயிற்காவலர், கொற்றவை, அகத்தியர், காளைத்தேவர் சிற்பங்களின் கீழ்ப்பகுதியில் காணப்படும் அடியவரகள் இச்சிற்பங்கள் உருவாகக் காரணமாக இருந்தவர்களாகலாம். இவர்தம் இருப்பும் சிற்ப அமைதியும் இச்சிற்பங்கள் அனைத்தையும் ஒரு காலத்தனவாகக் காட்டுகின்றன. அம்மையப்பர், ஆலமர்அண்ணல், இலிங்கோதபவர், நான்முகன், பிச்சைத்தேவர், சண்டேசுவரர் வடிவங்கள் பிற்சோழர் காலத்தின் கடைப்பகுதியினவாகலாம். முகமண்டபத் தென்கோட்டத்திலுள்ள ஆலமர்அண்ணல் அண்மைக் காலத்தவர். இக்கோயிலில் உள்ள செப்புத் திருமேனிகளுள் ஒனறு கூடச் சோழர் காலத்தவை அன்று.

இக்கோயில் வளாகத்திலிருந்து நடுவணரசின் கலவெட்டுத்துறையால் பன்னிரண்டு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டிருந்தபோதும் அவற்றின் சுருக்கங்கள் மட்டுமே 1927ம் ஆண்டுக் கலவெட்டறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன. இக்கோயிலில் தொடராய்வு மேற்கொண்டிருக்கும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் இக்கல்வெட்டுகளை விரிவான அளவில் ஆராய்ந்து வருகிறது. புதிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.