http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 3

இதழ் 3
[ அக்டோபர் 15 - நவம்பர் 14, 2004 ]


இந்த இதழில்..
In this Issue..

தலையங்கம்
மத்தவிலாச அங்கதம் - 1
வாசி வாசியென்று வாசித்த தமிழின்று ...
கதை 2 - காரி நங்கை
வாருணிக்குக் கலைக்கோவன்
என்றைக்கு விழிப்பது?
கட்டடக்கலை ஆய்வு - 3
கல்வெட்டாய்வு - 2
வல்லமை தாராயோ?
கருங்கல்லில் ஒரு காவியம் - 3
சங்கச்சாரல் - 3
கோச்செங்கணான் யார் - 1
இதழ் எண். 3 > இலக்கியச் சுவை
சங்கச்சாரல் - 3

இது காதல்

காதலின் ஆழத்தைப் புலப்படுத்தும் உயர்ந்த பாடல்கள் சிலவாகவேனும் காலந்தோறும் உருவாகிக்கொண்டுதான் உள்ளன. 'நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று, நீரினும் ஆரளவின்றே' என்று தலைவியின் காதல் அளவிடமுடியாத நிலையிலுள்ளதைக் குறுந்தொகைத் தோழி கூறுவாள்.

நற்றிணைத் தலைவியோ தன் காதலுக்குப் புதிய பரிமாணங்கள் காட்டுகிறாள் (39). 'இறப்பு எல்லோருக்கும் வருவதுதான். அதனால் நான் சாவதற்கு அஞ்சவில்லை. ஆனால் அப்படி இறந்து, அடுத்துவரும் பிறப்பு மனிதப்பிறப்பாக இல்லாது வேறொரு உயிரினமாய்ப் பிறந்தால் என் காதலனை மறந்துவிடும் நிலையேற்படுமோ என்றுதான் இறப்பிற்கு அஞ்சுகிறேன்'. பிரிந்து சென்ற தலைவன் குறித்த நாளில் வராமையின் உடலும் உள்ளமும் தளர்ந்தேங்கும் தலைவியின் காதலேக்கப் பெருமூச்சு இது.

குறுந்தொகைத் தலைவி ஒருபடி மேலே போகிறாள். அவள் நம்பிக்கையே நம்பிக்கை. 'இம்மை மாறி மறுமையாயினும் நீரே என் கணவர். நானே நின் நெஞ்சு நேர்பவளே'. காதல்தான் எத்தனை வலிமையானது! இல்லாமலா காலங்காலமாக் இதயங்களைப் பிணைத்துவந்துள்ளது!




கொஞ்சல் ஒப்பந்தமும் காதல் கொள்கையும்

ஊர் முகப்பில் பொய்கைத்துறை. அதன் கரையருகே கடவுள் குடியிருப்பதாக ஊராரால் கருதப்படும் முதுமரம். துறை வரும் ஊர்மக்களுக்குப் பழகிப்போன கூகையொன்று அம்முதுமரத்தில். அதற்குத் தேயாத, வளைந்த வாய்; தெளிந்த கண்கள்; கூரிய நகங்கள். அதன் வலிமை ஊரறிந்த உண்மை. அது வாய் திறந்தாலோ பறையோசையெனப் பேரொலி. அந்தக் கூகைக்குப் பிடித்த உணவு இல்லம் வாழ் எலி.

நற்றிணைத் தலைவி ஒருத்தி (83), ஆட்டிறைச்சியோடு கலந்து சமைத்த நெய்ச்சோற்றுடன் வெள்ளெலியின் சூட்டிறைச்சியும் சேர்த்து அந்தக் கூகைக்குத் தருவதாகச் சொல்கிறாள். இந்த வழங்கலுக்குக் காரணம் பாசமா? அதுதான் இல்லை. தன் நெஞ்சுக்கினிய காதலர் இரவில் தன்னைக் காணவரும்போது கூகை குரலெழுப்பி உறங்கும் ஊராரை, வீட்டாரை எழுப்பிடக்கூடாதல்லவா! அந்நோக்கில் நிகழ்வதுதான் இந்த விருந்தும் இதன் பின்னணியிலமைந்த கொஞ்சல் ஒப்பந்தமும். குரலெழுப்பக்கூடாதென்று கூகைக்கே கையுறை கொடுத்த காலம் சங்க காலமென்று சிலர் அங்கலாய்க்கலாம்.

இப்பாடலில் மிக முக்கியமானது தலைவ்¢யால் சுட்டப்படும் தலைவனின் காதல்தன்மைதான். 'எஞ்சாக் கொள்கை எம் காதலர்' என்ற தலைவியின் கூற்றுக்கு, 'எம்பால் அன்பிற் குறைவுபடாத கோட்பாட்டுடனே வரும் எம் காதலர்' என்று உரையாசிரியர் பொருள் கண்டுள்ளார். தலைவனின் காதல் கொள்கையில் தலைவிக்குத்தான் எத்தனை நம்பிக்கை!




பெண்மனம்

தம் கணவன் மற்றொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதறிந்ததும் எதிர்ப்பு தெரிவிப்பதும், அவ்வுறவை விலக்க முயற்சிப்பதும் மனைவியர் இயல்பே. இது மனித இனம் மண உறவுகொண்டு வாழத் தலைப்பட்ட நாள் தொட்டே இருந்துவரும் நிலையெனக் கொள்ளலாம்.

தம் கணவரின் முறையற்ற உறவுக்கும் தொடர்பிற்கும் மனைவியர் காட்டும் எதிர்ப்பு பல்வகைத்தது. பரணரின் படப்பிடிப்பில் ஒரு காட்சி (நற்றிணை 350). பரத்தையோடு கூடி மகிழ்ந்த தலைவன் ஒருவன் தன்னில்லம் திரும்புகிறான். வாயிலிலேயே தடுத்து நிறுத்துகிறாள் மனைவி. 'உனக்காகவே எனக்களிக்கப்பட்ட என் அழகு கெடுவதானாலும் சரியே. உன்னை என்னருகில் நெருங்கவிடமாட்டேன். ஒருவேளை நெருங்கவிட்டேனாயின் என்னையும் மறந்து என் கைகள் பழக்கத்தினால் உன்னை அணைக்க முயற்சிக்கலாம். நீயோ பரத்தையை அணைத்து அவள் மார்புச் சந்தனத்தை உன் மார்பில் ஏற்றவன். அந்த அணைப்பால் உன் மார்பணி மாலை கசங்கிய நிலையினன். உன்னை இனித் தீண்டுதல், பாத்திரத்திலிருந்து தேவையற்றதென எறிந்த மிச்சம் மீதியைத் தொடுவதற்கொப்பாகும். அதனால் என் இல்லத்துள் வராதே. யாரை அணைத்து மகிழ்ந்தாயோ அந்தப் பரத்தையுடனேயே நெடுங்காலம் வாழ்க!'

மனைவியின் இந்த எதிர்ப்புரையில் அவள் அவன் மீது வைத்திருக்கும் அன்பின் பரிமாணம் அவளையும் அறியாமல் வெளியாவது நெஞ்சைத் தொடுகிறது. 'உன்னை வாயிலில் நிறுத்தியதால் துணிந்து என்னால் உன்னை மறுக்கமுடிகிறது. நீ இல்லத்துள் நுழைந்தாலோ, சொற்களால் எதிர்த்தாலும், பழக்கம், ஈர்ப்பு, அன்பு காரணமாக என் கைகள் உன்னைத் தழுவவே முற்படும். அது என் அன்பின் பலவீனம்' என்று தலைவி சில சொல்லிப் பல விளக்குவது பண்பாட்டுப் பலகணியாய்க் காணக்கிடைக்கிறது.

இரப்போர்க்குத் தேர் தரவல்ல செல்வவளம் மிக்க விரான் என்ற கொடை வள்ளலின் செழிப்பு மிக்க இருப்பையூர் எனும் மருதநில ஊரைத் தன் அழகுக்கு உவமையாக்குமிடத்தில் தலைவியின் வழி பரணர் வரலாற்றுக் கீற்றொன்றையும் வழங்கிச் செல்கிறார்.




தகவல் உபயம் : வரலாறு ஆய்விதழ் 9 & 10.

this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.