http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 32

இதழ் 32
[ பிப்ரவரி 15 - மார்ச் 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

தேமதுரத் தமிழோசை
பழுவூர் - 13
தளிச்சேரிக் கல்வெட்டு - வினாக்களும் விளக்கங்களும்
திரும்பிப் பார்க்கிறோம் - 4
சோழதேசத்தில் ஒரு சேரர் கோயில் - 2
சங்ககாலத் தமிழகத்தில் முதல் அறிவொளி இயக்கம் - 2
Links of the Month
சங்கச்சாரல் - 15
இதழ் எண். 32 > ஐராவதி சிறப்புப் பகுதி
சங்ககாலத் தமிழகத்தில் முதல் அறிவொளி இயக்கம் - 2
ஐராவதம் மகாதேவன்
இக்காலகட்டத்தில் தமிழகத்தின் அரசியல்நிலை முற்றிலும் வேறாக இருந்தது. தமிழகம் நந்த - மௌரிய பேரரசுகளின் கீழ் ஒருபோதும் அடங்கியிருக்கவில்லை. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் மட்டுமின்றி அதியமான்கள் போன்ற குறுநில மன்னர்களும் தமிழகத்தில் சுதந்திரமாக ஆட்சி செய்து வந்தார்கள். அசோக மாமன்னர் தம்முடைய 2-வது சாசனத்தில் சேர, சோழ, பாண்டிய வேந்தர்களையும் சதிய புத்திரர் எனப்படும் அதியமான்களையும் தம்முடைய 'அண்டை நாட்டுக்காரர்' என்றே குறிப்பிடுகிறார். தமிழகம் அப்போது பெற்றிருந்த அரசியல் சுதந்திரத்தினால் தமிழ்நாடெங்கும் தமிழே ஆட்சிமொழியாகவும், கல்விமொழியாகவும், மற்றும் சமயம், வாணிபம் போன்ற எல்லாத் துறைகளிலும் பொதுமொழியாகவும் விளங்கி வந்தது. தமிழ்மக்கள் தமிழை எழுத பிராமி எழுத்துமுறையை ஏற்றுக்கொண்டபோதும் பிராகிருத மொழியை ஆட்சிமொழியாகவோ, பொதுமொழியாகவோ ஏற்றுக் கொள்ளவில்லை. பிராமி எழுத்துமுறையை மாற்றியமைத்துத் தமிழுக்குத் தேவையான எழுத்துகளைக் கூட்டியும், தமிழுக்குத் தேவையில்லாத எழுத்துகளை நீக்கியும், மேலும் சில மாறுதல்களைச் செய்தும் தமிழுக்கென ஒரு தனியான எழுத்துமுறையைப் படைத்தனர். இதையே இன்று நாம் "தமிழ்-பிராமி' என்று குறிக்கிறோம்.

முற்காலத்தில் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட சமண, பவுத்த சமய நூல்களில் தமிழகத்தின் பண்டைய எழுத்து முறையை "திராவிடி" அல்லது "தாமிளி" என்று குறித்தனர். அக்காலத்தில் தமிழகத்தில் சமயத் தொண்டாற்ற வந்த சமண முனிவர்களும் பவுத்த முனிவர்களும் தமிழைக் கற்றுக்கொண்டு தங்கள் சமயப்பணியையும் தமிழ்ப்பணியையும் ஒருங்கே ஆற்றினார்கள். பிற்காலத்தில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து கிறிஸ்தவ மதபோதகர்கள் தமிழகத்துக்கு வந்தபோது சமயத்தொண்டையும் தமிழ்த்தொண்டையும் ஒருங்கே ஆற்றினார்கள் என்ற வரலாற்று உண்மையையும் இங்கு குறிப்பிடலாம்.

மற்ற தென்மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் மிக முன்னதாகவே எழுத்தறிவு பரவியதற்கு அரசியல் சுதந்திரமும் தமிழ் ஆட்சிமொழியாகவும் பொதுமொழியாகவும் இருந்தமையும் முக்கிய காரணங்கள். இவற்றைத் தவிர தமிழகத்தில் முதல் அறிவொளி இயக்கம் வேகமாகவும் ஆழமாகவும் பரவியதற்கு மேலும் சில காரணங்கள் இருந்தன. அவற்றையும் இங்கு சுருக்கமாக ஆராயலாம்.

1. புலமைக்கு மதிப்பு

தமிழகத்தில் புலவர்களும் வாய்மொழியாகப் பண்ணிசைத்த பாணர்களும் வெகுவாகப் போற்றப்பட்டார்கள். வேந்தர்களும் குறுநில மன்னர்களும் தமக்குள் போரிட்டுக் கொண்டபோதும் புலவர்களும் பாணர்களும் ஓர் அரசவையிலிருந்து மற்றொரு அரசவைக்குப் போக எந்தத் தடையும் இருக்கவில்லை. தமிழ் மக்களுக்கு வாய்மொழிப் பாடல்களிலும் இசையிலும் இருந்த ஈடுபாடு எழுத்துமுறை வழக்கிற்கு வந்த பிறகு இலக்கியங்கள் வெகுவிரைவில் தோன்ற ஒரு நல்ல களமாக அமைந்தது. தமிழ் வேந்தர்களாலும் குறுநில மன்னர்களாலும் புலவர்கள் பெரிதும் போற்றப்பட்டதால், தமிழகத்தில் எழுத்திலக்கியம் சங்க காலத்தில் பெரிதும் வளர்ச்சி பெற்றது.

2. குருமார்களின் எதிர்ப்பின்மை

வடநாட்டில் குருமார் வேதங்களை வாய்மொழியாகவே கற்கவேண்டும் என்றும் அவற்றை எழுதுவது கூடாது என்றும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். இதனாலேயே வேதங்களை "எழுதாக்கிளவி" (சுருதி) என்று அழைத்தார்கள். இச்சூழ்நிலையில்தான் வடநாட்டில் எழுத்துமுறை தோன்றி ஏறத்தாழ 400 ஆண்டுகள் வரை சமஸ்கிருத மொழியில் கல்வெட்டுகளே காணப்படவில்லை. எல்லாக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் நாணயங்களும் இலச்சினைகளும் பிராகிருத மொழியிலேயே எழுதப்பட்டன. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ள முதல் முக்கியமான கல்வெட்டு கி.பி. 2ம் நூற்றாண்டில் ஆண்ட ருத்ரதாமன் என்ற மன்னனுடையதாகும்.

தமிழகத்தில் கல்வி எந்த ஒரு குழுவிடமோ சாதியிடமோ கட்டுண்டு கிடக்கவில்லை. மேலே குறிப்பிட்டபடி சங்கப் பாடல்களை எழுதிய புலவர்களும் அதற்கு முன்னரே பானைக்கீறல்கள் மூலம் எழுதிய பொதுமக்களும் சமுதாயத்தின் அனைத்துத் தளங்களிலும் இருந்துள்ளனர்.

3. தமிழகத்தின் ஊராட்சி முறை

சங்கத்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் அம்பலம், பொதியில், மன்றம் போன்ற அமைப்புகளும் தமிழ்-பிராமிக் கல்வெட்டுகள் குறிப்பிடும் நிகமம் போன்ற அமைப்புகளும் தமிழகத்தில் முற்காலத்திலேயே ஊராட்சி முறை ஆழமாக வேரூன்றி இருந்தது என்பதற்குச் சான்றுகளாகும். மக்கள் பேசும் மொழியான தமிழ் மொழியே பல்வேறு ஆளும் மன்றங்களுக்கு ஆட்சிமொழியாக அமைந்திருந்தது. இந்தச் சூழ்நிலையில் எழுத்தறிவு ஓர் அறிவொளி இயக்கமாகவே தமிழகத்தின் கிராமப் புறங்களில்கூடப் பரவியிருந்தது என்பதற்கு எங்கு தோண்டினாலும் கிடைத்துவரும் பானைக்கீறல்களையே சான்றுகளாகக் காட்டலாம்.

4. சமண, பவுத்த சமயத்தொண்டு

மேலே குறிப்பிட்டபடி ஏறத்தாழ 3ம் நூற்றாண்டில் சமணமும் பவுத்தமும் தமிழகத்தில் பரவியபோதுதான் இங்கே எழுத்துமுறை முதன்முதலாக உருவாகியது. இவ்விரு சமயங்களுமே வைதீக இந்து மதத்திற்கு எதிராக எழுந்தவை. இச்சமயங்கள் சமஸ்கிருதத்திலுள்ள வேதங்கள் முதலாகிய நூல்களில் நம்பிக்கை கொள்ளவில்லை. இவ்விரு சமயத்தவர்களும் தம்முடைய சமயப்பணியை முதல் காலகட்டத்தில் சமஸ்கிருதத்தில் பதிவு செய்யாமல், வடநாட்டில் மக்கள் பேசிய மொழியாகிய பிராகிருதத்திலேயே எழுதியும் பிரச்சாரம் செய்தும் வந்தார்கள். சமண, பவுத்த முனிவர்கள் சமயத் தொண்டிற்காகத் தமிழ்நாட்டுக்கு வந்தபோதும் அதே மரபைப் பின்பற்றினார்கள். அதாவது, மக்கள் பேசும் மொழியான தமிழ் மொழியிலேயே தம்முடைய சமய நூல்களை இயற்றி சமயத் தொண்டாற்றினார்கள். இச்சூழ்நிலையில், தமிழகத்தில் சமணமும் பவுத்தமும் தமிழ்மொழிக்கு மிகப்பெரிய தொண்டாற்றியுள்ளன என்பதில் ஐயமில்லை.

இதே காலகட்டத்தில், ஆந்திர-கர்நாடக மாநிலங்களில் பிராகிருதம் ஆட்சிமொழியாகவும் பொதுமொழியாகவும் இருந்ததால், அந்த மாநிலங்களில் பிராகிருத மொழியையே சமணர்களும் பவுத்தர்களும் சமய நூல்களை இயற்றவும், சமயப் பிரச்சாரம் செய்யவும் பயன்படுத்தினார்கள் என்று கல்வெட்டுகளிலிருந்தும், செப்பேடுகளிலிருந்தும் அறிய முடிகிறது. மாநிலங்களில் நிலவிய அரசியல், சமுதாயச் சூழ்நிலை, சமயப்பிரச்சாரம் மக்களின் பேச்சு மொழியில் அமைய உகந்ததாக இல்லை.

5. தமிழகத்தில் வெளிநாட்டு வாணிபம்

சங்ககாலத்திற்கு முன்னரே தமிழ் மக்கள் "திரைகடல் ஓடியும் திரவியம் தேடும்" பொருட்டு மேலைநாடுகளுடனும், கீழைநாடுகளுடனும் கடல் மூலமாக வாணிபம் செய்து வந்தார்கள். சங்க காலத்தில் தமிழகத்துடன் நடந்த ரோமானிய வாணிப அளவு எவ்வளவு பரந்தது என்பதை தமிழகத்தில் கிடைத்துள்ள ரோமானிய நாணயங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த வாணிகத்தின் மூலமாகத் தமிழ்நாட்டுக்குப் பெரும் செல்வம் கிடைத்ததுடன், மேலைநாட்டுச் சமுதாயத்தின் எழுத்துமுறையைப் பற்றியும் கிடைத்தது. அண்மையில், எகிப்து நாட்டில் செங்கடல் கரையில் அமைந்துள்ள க்வெசிர் அல்காதிம், பெரெனிகே ஆகிய துறைமுகங்களில் தமிழ்மொழியில் தமிழ்-பிராமி எழுத்துகளில் எழுதப்பட்டுள்ள பானைக்கீறல்கள் அகழ்வாய்வுகள் மூலமாகக் கிடைத்துள்ளன. இப்பானைக்கீறல்களில் சா[த்]தன், க[ண்]ணன், கொ[ற்]ற[ப்] பூமான் ஆகிய தமிழ்ப்பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. வியன்னா நகரத்து அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு பாப்பிரஸ் ஏட்டில் கி.பி 2ம் நூற்றாண்டில் முசிறியிலிருந்த ஒரு தமிழ் வாணிகனுக்கும் எகிப்து நாட்டு அலெக்சாந்திரிகா நகரிலிருந்த ஒரு ரோமானிய வாணிகனுக்கும் இடையே ஏற்பட்ட கடல வாணிகா ஒப்பந்தம் எழுதப்பட்டுள்ளது. இந்த ஆவணம் கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ள போதிலும், சங்க காலத்தில் தமிழகத்தில் கடல் வாணிபம் எவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. அண்மையில், தாய்லாந்து நாட்டில் ஓர் அருங்காட்சியகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கல்லில் பெரும்ப[த்]தன் கல் என்று தமிழ்-பிராமி எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கல் பொன்னின் தரத்தைக் கண்டறிய உதவும் உரைகல் ஆகும் என்று அதை நேரில் பார்வையிட்ட ப.சண்முகம் கூறுகிறார்.

6. தமிழ் எழுத்துகளின் எளிமை

தமிழ்-பிராமி எழுத்துமுறையில் எட்டு உயிரெழுத்துக்களும் 18 மெய்யெழுத்துகளும் ஆக மொத்தம் 26 எழுத்துக்களே உள்ளன. எழுத்துக்களின் அமைப்பும் கற்பதற்கு மிக எளிமையாகவே இருந்தது. எழுதுவதற்காகப் பயன்படுத்திய பனையேடுகளும் தமிழகமெங்கும் ஆண்டு முழுவதும் தேவையான அளவிற்கு மேலாகவே தாராளமாகக் கிடைத்தன. இரும்பினால் ஆன எழுத்தாணியைக் கிராமப்புறங்களில் கொல்லர்கள் மிக எளிதாக உருவாக்கியிருக்க முடியும். குறைந்த எண்ணிக்கையில் எழுத்துகள், எளிய முறையிலமைந்த எழுத்துருக்கள், தாராளமாகக் கிடைத்த எழுத்தாணியும் ஏடும் அமைந்திருந்த நிலையில், தமிழகமெங்கும் இவ்வெழுத்துமுறை மிக விரைவில் பரவியதில் வியப்பில்லை.

இலங்கையில் எழுத்தறிவு

தமிழகத்திலும் வட மாநிலங்களாகிய ஆந்திரம் மற்றும் கர்நாடகத்திலும் எழுத்தறிவு தோன்றிய சூழ்நிலை மிகவும் மாறுபட்டிருந்தது என்பதை இதுவரை பார்த்தோம். இதே காலகட்டத்தில் தமிழகத்திற்குத் தெற்கே உள்ள இலங்கையிலும் பவுத்த மத போதகர்கள் மூலமாகப் பிராமி எழுத்துமுறை பரவியபோது அங்கு நிலவிய சூழ்நிலையையும் சுருக்கமாக ஆராயலாம்.

அரசியல் நிலைமையைப் பொறுத்தவரை, இலங்கையும் அக்காலத்துத் தமிழகத்தைப் போலவே ஒரு சுதந்திர நாடாக இருந்தது. அதனால், அங்கு இந்தியாவிலிருந்து சென்ற எழுத்துமுறை ஒரு அறிவொளி இயக்கமாகவே மலர்ந்தது. சிங்கள அரசின் ஆதரவிலும், பவுத்த பிட்சுக்களின் ஆதரவிலும் பிராமி எழுத்துமுறை சிங்கள எழுத்துமுறையாக மாற்றியமைக்கப்பட்டது. பழைய சிங்களமும் ஒரு பிராகிருத மொழிதான் என்றாலும், அதன் ஒலியமைப்பு இந்தியப் பிராகிருத மொழிகளிலிருந்து வேறுபட்டிருந்தது. பழைய சிங்கள மொழியின் ஒலியமைப்புக்கு ஏற்றவாறு பிராமி எழுத்துமுறையிலிருந்து நெடில் உயிரெழுத்துகளும் மூச்சொலி மெய்யெழுத்துகளும் வேறு சில ஒலிகளும் நீக்கப்பட்டன. இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட எழுத்துமுறையை, "சிங்கள-பிராமி" என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். இக்காலகட்டத்தில் இலங்கையில் பொறிக்கப்பட்டுள்ள குகைக்கல்வெட்டுகள் அனைத்தும் பழைய சிங்கள மொழியிலும் சிங்கள-பிராமி எழுத்துமுறையிலும் அமைந்தவையே. தமிழகத்தைப் போலவே, இலங்கையிலும் சிங்களத்தைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களிடம் கல்வியறிவு மிகப்பரவலாக இருந்தது என்று ஊகிக்க முடிகிறது.

அக்காலத்தில் இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்து வந்த தமிழ் மக்களின் நிலை வேறுவிதமாக இருந்தது. சிங்களமே ஆட்சிமொழியாகவும் பொதுமொழியாகவும் இருந்ததால், தமிழ் மக்களும் அங்குப் பொது அறிவிப்புகளுக்கு சிங்களத்தையே பயன்படுத்த வேண்டியிருந்தது. ஆகையால்தான் இலங்கையில் குகைக்கல்வெட்டுகளில் தமிழ் வணிகர்களும் சிங்கள மொழியையே பயன்படுத்தினார்கள். ஆயினும், யாழ்ப்பாணம் போன்ற தமிழ்ப் பகுதிகளில் தமிழ் மக்கள் தமக்குள் தமிழ் மொழியையும் தமிழ்-பிராமி எழுத்துமுறையையும் கையாண்டனர் என்பது அண்மையில் பூநகரி, கந்தரோடை ஆகிய பகுதிகளில் கிடைத்துள்ள பானைக்கீறல் எழுத்துகளிலிருந்து தெரியவருகிறது.

தமிழகத்தில் முதல் அறிவொளி இயக்கத்தின் விளைவுகள்

தொன்றுதொட்டு பேச்சுமொழியாக இருந்த தமிழ்மொழி, எழுத்துமொழியாக மாறிய காலத்தில் தமிழ்ச் சமுதாயத்தில் மிகப்பெரிய மாறுதல்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். இம்மாறுதல்களைப் பற்றி வரலாற்றாய்வாளர்கள் இன்றும் ஆழ்ந்து கணிப்பு செய்யவில்லை என்பது என் கருத்து. அக்காலத்தில் நிகழ்ந்த பெரும் மாறுதல்களில் முக்கியமான சிலவற்றை மட்டும் இவ்வாய்வுரையின் முடிவில் குறிப்பிடுகிறேன்.

1. இனக்குழுக்களின் தலைவர்கள் பேரரசர்களாக வளர்ந்தனர். எழுத்தறிவின் மூலமாகக் கணக்கு வைத்துக் கொள்ளும் முறை வளர்ந்து, பல்வகையான வரிகள் போடும் சூழ்நிலை உருவாகியது. வெளிநாடுகளுடன் அரசியல், வாணிப உறவுகள் எழுதப்பட்ட ஒப்பந்தங்களின் மூலம் வலுப்பெற்றன.

2. அரசின் தலைமையகங்களும் துறைமுகங்களும் வணிக மையங்களும் பெருநகர்களாக வளர்ச்சியுற்றன.

3. பெரும் கோயில்கள் எழுப்பப்பட்டு அவையே ஊர்களின் பள்ளிகளாகவும், வங்கிகளாகவும், ஆவணப்பதிவகங்களாகவும், சமய மையங்களாகவும் ஊராட்சி நிலையங்களாகவும் பன்முனை வளர்ச்சி பெற்றன.

4. மேலை நாடுகளுடனும் கீழை நாடுகளுடனும் கடல் வாணிகம் பெருகியது.

5. தமிழே ஆட்சிமொழியாகவும், பொதுமொழியாகவும் இருந்ததாலும், தமிழின் எழுத்துமுறை கற்பதற்கு மிகவும் எளிதாக அமைந்ததாலும் எல்லோருக்கும் கல்வி வாய்ப்பு பெருகி, ஊராட்சியில் பொதுமக்கள் அதிகமாகப் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைத்தன.

6. தொன்றுதொட்டு வாய்மொழியாக இருந்தபோதே மிகவும் வளமடைந்திருந்த தமிழ்மொழி, எழுத்துமுறை உருவாகியபிறகு மேலும் வளர்ந்து, இலக்கியங்கள் தோன்றி ஓர் உயரிய செம்மொழியாகப் பரிணாம வளர்ச்சியடைந்தது. இதையே "சங்ககாலம்" என்று குறிக்கிறோம். தமிழ்மொழியில் ஏற்பட்ட இந்த வளர்ச்சி, மற்ற தென்மாநிலங்களைக் காட்டிலும் ஏறத்தாழ ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது என்பது வரலாறு காட்டும் உண்மையாகும்.

பின்குறிப்பு : இக்கட்டுரை 1996 ஆம் ஆண்டு டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் வெளியீடான வரலாறு ஆய்விதழுக்காக எழுதப்பட்டது. தமிழில் மொழிபெயர்த்தவர் : ஜயந்தி நாராயணசுவாமி.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.