http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 47

இதழ் 47
[ மே 16 - ஜூன் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

பள்ளிப்படைக் குழப்பங்கள்
விழிஞம் குடைவரைக்கோயில்
மகப்பேற்றின் கொண்டாட்டம்
திரும்பிப் பார்க்கிறோம் - 19
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 2
காற்றே! காற்றே! கதை சொல்லாயோ!!
Olipathi Vishnugraham in Malaiyadippatti
அவர் - முதல்பாகம்
கத்திரி வெயிலில் கோடைமழை
ஒரு தழுவலும் இரண்டு மன்னர்களும்
இதழ் எண். 47 > இதரவை
அவர் - முதல்பாகம்
மு. நளினி
தொடர்: அவர்

நான் யார், என் திறமைகள் எத்தகையவை என்பதுகூடத் தெரியாமல் இருந்த எனக்கு என்னை அடையாளப்படுத்தியவர் அவர். சொல்லித்தந்தால் தெரிந்துகொள்வோம் என்று கோயில் ஆய்விற்கு வந்தபோது நான் கூறியதாக அவர் சொன்னார். நான் அப்படிச் சொன்னேன் என்பதுகூட அவர் சொல்லும்வரை எனக்குத் தெரியாது. கடவுள்தான் அந்த நேரத்தில் அப்படி ஒரு பதிலைச் சொல்ல வைத்து அவருடைய ஆய்வுகளுடன் என்னை இணைத்துப் பெருமைப்படுத்தியிருக்கிறார். அதற்காக கடவுளுக்குத்தான் முதலில் நன்றி சொல்லவேண்டும்.

1986 ஜனவரி மாதம் முதுகலைப் பட்ட நிறைவிற்கு ஆய்வேடு சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிலையில், எந்தத் தலைப்பில் ஆய்வு செய்வது என்று புரியாமல் தவித்துக்கொண்டிருந்த என்னை என் ஆய்வு நெறியாளர் பேராசிரியர் திருமதி சீ. கீதா, 'உறையூருக்கு அருகில் சோழன்பாறை என்ற இடத்தில் டாக்டர் கலைக்கோவன் கல்வெட்டொன்று கண்டுபிடித்திருப்பதாகச் செய்தி வந்திருக்கிறது, அது தொடர்பாக ஆய்வு செய்யலாமா என்று கேட்டுப் பாருங்கள்' என்று வழிப்படுத்தினார். உடனே நானும் என் தோழி வளர்மதியும் அவரை வந்து சந்தித்தோம். 'அந்தக் கல்வெட்டு மிகச் சிறியது. ஆய்வு செய்வதற்கு ஏற்றதாக இருக்காது' என்றார் அவர். ஒருவேளை அந்தப் பதிலோடு அன்றைக்கு அவர் எங்களைத் திருப்பி அனுப்பியிருந்திருந்தால் இன்று நான் இல்லை. ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. ஆர்வத்துடன் வந்திருக்கிறார்களே என்று நிறைய ஆய்வுத் தலைப்புகளை எங்களுடன் விவாதித்தார்.

அவர் கூறிய தலைப்புகளை ஆய்வுநெறியாளரிடம் சொன்னபோது, 'நீங்கள் கோயில் பற்றி ஆய்வு செய்வதில் எனக்குத் தடையில்லை' என்று மகிழ்வுடன் அநுமதியளித்தார். அவர் கூறிய தலைப்புகளுள் நான் எறும்பியூர்க் கோயிலையும் வளர்மதி வயலூர்க் கோயிலையும் தேர்ந்து கொண்டோம். பேராசிரியர் கீதாவின் மற்றொரு மாணவியான சரஸ்வதியும் 'கோயில் பற்றி ஆய்வு செய்கிறேன்' என்று எங்களுடன் இணைந்து கொண்டு அழுந்திய்ூர்க் கோயிலை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார்.

தம்மைத் தேடி வருபவர்கள் எதற்காக வருகிறார்களோ அந்த நோக்கத்தை நிறைவேற்றித் தரவேண்டும் என்பதில் அவர் மிகுந்த ஆர்வமாக இருப்பார். கேட்ட கேள்விக்குப் பதில் கூறியதோடு அவர் நின்றிருந்தால், நாங்கள் வேறு தலைப்பைத் தேடிச் சென்றிருப்போம். கோயில் ஆய்வு பற்றி நினைத்திருப்போமா என்பது தெரியவில்லை. தேர்ந்தெடுத்த தலைப்புச் சரியாக இல்லை என்பதை உணர வைத்து, பல தலைப்புகளைச் சொல்லி, விளக்கி, அவற்றின் முக்கியத்துவம், வழிமுறைகள் இவற்றைப் புரியவைத்து, நாங்களே அவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு செய்த அவர் திறமையைப் பின்னாளில் பல முறை நினைத்து வியந்திருக்கிறேன்.

தலைப்புகள் முடிவானதும், 'நீங்கள் மூவரும் அவரவர் கோயிலுக்குச் சென்று செய்தி சேகரித்து வாருங்கள். முடிந்தால் கோயிலின் வரைபடம் வரைந்து வாருங்கள்' என்றார். நாங்கள் மூவரும் கோயில்களுக்குச் சென்று செய்தி சேகரித்து அதை எழுதிக்கொண்டு வரைபடத்துடன் அவரைச் சந்தித்தோம். எங்கள் முயற்சியும் உழைப்பும் நிறைவு தந்ததாகக் கூறிய அவர், ஒரு கோயிலை எப்படி ஆய்வு செய்யவேண்டும், தரவுகள் பெறுவது எப்படி என்றெல்லாம் கூறியதுடன், என் கோயில் மலைமேல் அமைந்திருந்ததால் ஆய்வேட்டின் முதல் இயலாக மலைக்கோயில்கள் பற்றிய வரலாறு அமைந்தால் நன்றாக இருக்கும் என்று குறிப்பிட்டார். ஆங்கிலத்தில் எழுதுவது கடினம் என்றால், தமிழில் எழுதி வந்தாலும் பரவாயில்லை என்று அவர் குறிப்பிட்டபோது எங்களுக்கு நிம்மதி ஏற்பட்டது.

நான் மாவட்ட நூலகம் சென்று பல நூல்களைப் புரட்டிச் செய்திகள் சேகரித்து ஒரு கட்டுரையாக்கி அவரிடம் கொடுத்தேன். என் உழைப்பைப் பாராட்டினார் என்றாலும், அதை அவர் ஆய்வேட்டில் பயன்படுத்தவில்லை. பின்னாளில்தான், ஒரு பயிற்சி ஏற்படவேண்டும் என்பதற்காகவே அதை அவர் எழுதச் செய்திருக்கிறார் என்பது புரிந்தது. நான் புரட்டிய நூல்களிலிருந்து எடுத்திருந்த தரவுகள் எவ்வளவு பிழையானவை என்பதையும் பின்னாளில் புரிந்து கொண்டேன். என் கட்டுரையைப் படித்தபோதே, இந்தப் புத்தகங்கள் எல்லாம் பயனற்றவை என்று அவர் சொல்லியிருந்தால், ஏன் இப்படிச் சொல்கிறார், அவற்றில் கோயில் தொடர்பான செய்திகள் இருக்கின்றனவே என்று நினைத்திருப்பேன். அதுமட்டுமன்று அவரைப் பற்றியும் தவறான கண்ணோட்டம் ஏற்பட்டிருக்கும். ஆனால், அவர் அப்படிக் கருத்துக்கள் ஏதும் கூறாமல் பின்னாளில் நானே புரிந்துகொள்ளும்படிச் செய்தார்.

அவரிடம் வரும் ஒவ்வோர் ஆய்வு மாணவரிடமும் அவர் இது போன்ற அணுகுமுறையையே கையாள்வதைப் பின்னாளில் உணர்ந்தேன். மாணவர்களின் திறமையையும் ஆர்வத்தையும் அவர்களுக்குள் இருக்கும் தேடலையும் அறிந்துகொள்ள அவர் பின்பற்றும் உத்தி இது. யாரையும் ஆய்வின் பெயரால் அச்சுறுத்த அவர் விரும்புவதில்லை. மிகக் கடினமான விஷயங்களைக் கூட எளிமையாக முன்வைப்பதில் அவருக்கு நிகர் அவர்தான். அது போலவே முடியாது என்று அவர் கருதும் விஷயங்களையும் எந்தத் தயக்கமும் இன்றி வெளிப்படுத்திவிடுவார். அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆய்வாளர் ஒருவர் தாராசுரம் கோயிலை முனைவர் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள விரும்பியபோது, அதன் பரிமாணங்களைப் பொறுமையுடன் விளக்கி முனைவர் ஆய்வுக்கு முழுக்கோயிலையும் எடுத்துக்கொள்வது சரிவராது என்று தெளிவாகச் சொல்லி, அந்த முயற்சியை மாற்றிக்கொள்ளச் செய்தார்.

நான் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட எறும்பியூர்க் கோயிலில் பல கல்வெட்டுகள் இருந்தன. அவற்றைப் படிக்க திரு. மஜீது உதவியை நாடினோம். அலுவலகப் பணி அதிகமாக இருந்ததால் அவரால் வார நாட்களில் வரஇயலவில்லை. காலம் மிகவும் குறைவாக இருந்ததால் கல்வெட்டுத் தொகுதிகளில் இருந்து கல்வெட்டுப் பாடங்களை எழுதிக்கொள்ளக் கருதினோம். அப்போது அவரிடம் தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதிகள் இல்லை. எங்கிருந்தோ அவற்றை வரவழைத்திருந்தார். கல்வெட்டுப் பாடங்களைப் படித்து எழுதிக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அந்தப் பாடங்களை ஒருமுறை எழுதியதன் பலனைப் பிறகுதான் உணர்ந்தேன். படிப்பதைவிட எழுதும்போது கூடுதல் கவனம் தேவைப்பட்டது. அதுவே கல்வெட்டுச் சொல்லாட்சிகளில் எனக்கு ஓர் ஈடுபாட்டை ஏற்படுத்தியது. கல்வெட்டு மொழிநடையும் எனக்குள் சிறிது சிறிதாகப் பதிவானது.

அந்தக் கல்வெட்டுகளை எழுதும்போது பின்னாளில் கல்வெட்டாய்வாளராக வரப்போகிறோம், தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் நூற்றுக்கணக்கில் கல்வெட்டுகளைக் கண்டுபிடிக்கப் போகிறோம் என்பதெல்லாம் தெரிந்திருக்கவில்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை எறும்பியூர்க் கல்வெட்டுகளை நான் நேசித்து வாசித்ததும் அந்த வாசிப்பு எனக்குள் பூரிப்பை ஏற்படுத்தியதும். கல்வெட்டுகளை முழுமையாகப் படித்து அனைத்துச் செய்திகளையும் எழுதினால்தான் ஆய்வேடு முழுமைபெறும் என்பதில் அவர் கவனமாக இருந்ததை உணர்ந்தேன். எழுதிய கல்வெட்டுப் பாடங்களின் துணைகொண்டு கோயிலில் கல்வெட்டுகளைப் படிக்க முயன்றேன். அந்த முயற்சி எனக்குள் ஏற்படுத்திய மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் சொற்களால் புரியவைக்க முடியாது. எறும்பியூர்க் கல்வெட்டுகளைப் படித்தேன் என்று அவரிடம் கூறியபோது என்னை மிகவும் பாராட்டி உற்சாகப்படுத்தினார். அன்று விதைக்கப்பட்ட விதைதான் இன்று அவரின் தலைமை மாணவியாக என்னை உருவாக்கியிருக்கிறது.

எறும்பியூர்க் கல்வெட்டுகளில் இடம்பெறும் இராஜகேரி, பரகேசரி என்ற சொற்கள் எனக்குப் புதியனவாக இருந்தன. கல்வெட்டுகளை எழுதியபோது ஒன்றும் புரியாமல் அப்படியே எழுதிக்கொண்டேன். பிறகு, கல்வெட்டுகளைப் படித்து மன்னர் பெயர், ஆட்சியாண்டு, வளநாடு, நாட்டுப் பிரிவுகள் ஊர்ப்பெயர்கள், சமுதாய, பொருளாதாரச் செய்திகள், கோயில் வழிபாடு, படையல், கோயில் நிருவாகம், சிறப்புச் செய்திகள் என்று பல தலைப்புகளின் கீழ் அச்செய்திகளை அவர் சொல்ல நான் எழுதினேன். அவ்வப்போது இதற்குப் பொருள் என்ன, அதற்குப் பொருள் என்ன என்று கேட்டுத் தெரிந்துகொள்வேன். தெரிந்தவற்றிற்கெல்லாம் உடனே விளக்கம் தருவார். தெரியாத சொற்களுக்கு தேடிப் பொருள் அறிந்து சொல்வார். அப்படிச் சொல்லும்போதே, 'பார்த்தாயா, உன்னால் இன்று புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டேன்' என்று மகிழ்வார். எனக்கு வியப்பாக இருக்கும். எவ்வளவு பெரிய அறிஞர் இவர், நம்மால் கற்றுக் கொண்டதாகச் சொல்கிறாரே என்று வியந்துபோவேன். அவரது பெருந்தன்மையும் எளியாரையும் உயர்த்திப்பேசும் பண்பாடும் என்னைப் பெரிதும் ஈர்த்தன.

இராஜகேசரி, பரகேசரி இந்த இரண்டு சொற்களும் புரிவதற்குச் சற்று காலதாமதமானது. இப்பெயர்களை அரியணை ஏறிய சோழ அரசர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் வைத்துக்கொண்டார்கள். அதாவது, அப்பா இராஜகேசரி என்றால் மகன் பரகேசரியாக இருப்பார், அப்பா பரகேசரி என்றால் மகன் இராஜகேசரியாக இருப்பார். சோழ அரசமரபினைக் கூறி, யார் யார் இராஜகேசரி, யார் யார் பரகேசரி என்று விரிவாக அவர் விளக்கினார். இராஜகேசரிகளில், முதல் ஆதித்தர் 36 ஆண்டுகள் ஆட்சி செய்தவர். சுந்தர சோழர் 17 ஆண்டுகள் ஆட்சி செய்தார். கண்டராதித்தர் எட்டு ஆண்டுகளே ஆட்சி செய்தார். முதல் இராஜராஜர் ஆட்சிக் காலத்திலிருந்து மெய்க்கீர்த்தி இடம்பெறுவதால் மன்னர்களை ஓரளவிற்கு அடையாளப்படுத்துவது எளிது என்பன போன்ற அடிப்படைகளைப் புரியவைத்தார்.

ஓர் இராஜகேசரிக் கல்வெட்டு 25ம் ஆட்சியாண்டைச் சேர்ந்ததென்றால் கண்ணை முடிக்கொண்டு அது முதலாம் ஆதித்தர் என்று சொல்லிவிடலாம். 17ம் ஆட்சியாண்டிலிருந்து 36ம் ஆட்சியாண்டு வரை உள்ள இராஜகேசரிக் கல்வெட்டுகள் அனைத்தும் முதல் ஆதித்தருடையனவாகவே இருக்கும். ஒன்பதாம் ஆட்சியாண்டு என்றால் அது முதல் ஆதித்தராகவும் இருக்கலாம் சுந்தரசோழராகவும் இருக்கலாம். அதே போல் ஏழாம் ஆட்சியாண்டு என்றால் முதல் ஆதித்தர், சுந்தரசோழர், கண்டராதித்தர் இவர்களுள் யாருடையதாக வேண்டுமானாலும் அது அமையலாம். அப்படிப்பட்ட சூழலில் உள்ளீடு கொண்டும் எழுத்தமைதி கொண்டும் மன்னர்களை ஓரளவிற்கு அடையாளம் காணமுடியும்.

அதே போல்தான் பரகேசரிக் கல்வெட்டுகளும். முதல் பராந்தகர் நாற்பத்தெட்டாண்டுகளும் உத்தமசோழர் பதினாறு ஆண்டுகளும் அரிஞ்சயர் எட்டு ஆண்டுளும் ஆட்சி செய்துள்ளனர். அதனால், ஆட்சியாண்டு பதினாறுக்கு மேல் உள்ள பரகேசரியானால் அவர் பராந்தகர், எட்டுக்கு மேல் இருந்தால் பராந்தகர் அல்லது உத்தமசோழர். எட்டுவரை இருந்தால் மூவரில் யார் வேண்டுமானலும் அந்தப் பரகேசரிக்குரியவராக இருக்கமுடியும்.

இப்படிப் படிப்படியாகச் சோழர் வரலாற்றையே சில நிமிடங்களில் கற்றுத்தந்தார். முதுகலையில் சோழர் வரலாறு படித்திருந்தபோதும், அவர் சொல்லித் தந்த அந்த எளிமையான முறையினால் எளிதாகச் சோழர் மரபுவழியையும் அரசர்கள் ஒவ்வொருவரும் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தனர் என்பதையும் புரிந்துகொள்ளமுடிந்தது. அடுத்து ஒவ்வொரு மன்னரைப் பற்றியும் விரிவாக அறியும் ஆவல் எழுந்தது. அதனையும் எளிதில் புரியும்படி, கதைசொல்வது போல் ஒவ்வொரு மன்னர் காலத்திலும் நடந்த முக்கியமான போர்கள், திருப்புறம்பியம், தக்கோலம் போர்கள் - அவற்றின் முக்கியத்துவம், சோழ மன்னர்களின் ஆளுமை, சோழநாட்டு மக்கள் வாழ்க்கை, சோழர் கலைத்திறம் என்று கொஞ்சம் கொஞ்சமாக அந்த மூன்று மாத காலத்திற்குள் சோழர் வரலாற்றை அறிந்து கொண்டது அவரிடம்தான்.

அதே போல் பாண்டியர் வரலாற்றையும் எளிமையாக அவர் கற்றுத்தந்தார். எவ்வளவு கடினமான பாடமாக இருந்தாலும் சிறுசிறு கேள்விகளாகக் கேட்டு, மாணவர்களுக்குப் புரியவைத்துப் பின்னர் அந்தப் பதில்களை அவர்களே தொகுக்குமாறு செய்து, விளைவை ஓர் எளிய கட்டுரையாக அமைத்திடும் அவர் பாங்கு சிறப்பானது. அவரிடம் பயின்ற மருத்துவ மாணவர்களுக்கும் கண் தொடர்பான கடினமான பாடங்களைக்கூட இப்படித்தான் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் சொல்லித்தருவார் என்பதையும் கேள்விகளுக்கு உடனே பதில் கூறும் மாணவர்களுக்குச் சிறுசிறு அன்பளிப்புகள் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்துவார் என்பதையும் பின்னாளில் அவர் மாணவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் நான் பேராசிரியராகச் சேர்ந்த பிறகு அவரிடம் கட்டடக்கலை பாடம் படிப்பதற்காக நானும், வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் கோ. வேணிதேவி அவர்களும், பேராசிரியர் திருமதி சீ. கீதா அவர்களும் மாணவிகளை அழைத்துக்கொண்டு ஆய்வு மையத்திற்கு வருவோம். அப்போது மாணவர்களுக்குத் தேவைக்கேற்பச் சிறுசிறு பரிசுகள் வழங்கி அவர்களை ஊக்குவிப்பார். கடைநிலையில் இருக்கும் மாணவிகூடத் தேர்ச்சி பெறும் வகையில் அந்த மாணவியையே பல முறை பதில் சொல்ல வைத்துப் பாடங்களை எளிதாகப் புரிந்துகொள்ளும்படிச் செய்வார்.

பத்து நிமிட, பதினைந்து நிமிடத் தேர்வுகள் நாளும் நடக்கும் அவற்றில் அதிக மதிப்பெண் வாங்கும் மாணவிகள் பரிசுகளைப் பெறுவர். முதல் பரிசு பெறுவதற்குக் கடுமையான போட்டியிருக்கும். அப்படி அதிகமான முதல் பரிசுகளைப் பெற்ற ஒரு மாணவி, 'என் வாழ்நாளில் நான் முதல் மதிப்பெண்ணே வாங்கியதில்லை. அவரிடம் வந்து பாடம் கற்றுக்கொண்ட காலங்களில்தான் என்னாலும் முதல் மதிப்பெண் பெறமுடியும் என்பதை உணர்ந்தேன். இவ்வளவு காலம் அதைப் புரிந்து கொள்ளாமலே வீணாக்கி விட்டேன்' என்று வருத்தப்பட்டதைக் கேட்டிருக்கிறேன். அந்த அளவிற்கு மாணவர்களுக்கு எளிமையாக எதையும் கற்றுத் தருவதில் அவரினும் சிறந்தவரை நான் கண்டதில்லை.

முதுகலை பயிலும்போது கற்றுக்கொண்ட இராஜகேசரி, பரகேசரி தொடர்பான செய்திகள் முதுநிறைஞர் பட்ட ஆய்வுக்காலத்தில் மிகவும் பயனளித்தன. பழுவூர்க் கோயில்களில் உள்ள இராஜகேசரி, பரகேசரிக் கல்வெட்டுகள் யார், யாருடையவை என்று இனம் கண்டறிந்து பழுவேட்டரையர் மரபுவழியை உறுதிசெய்ய அவை மிகவும் பயன்பட்டன.

எறும்பியூர்க் கோயிலில் புதிய கல்வெட்டுகளைக் கண்டுபிடித்தது எனக்குப் புதிய அனுபவமாக அமைந்தது. அக்கோயிலில் இருந்து நான்கு கல்வெட்டுகளைக் கண்டுபிடிக்கும் அரிய வாய்ப்பையும் அவர்தான் ஏற்படுத்தித் தந்தார். ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று திரு.மஜீதுடன் எறும்பியூர்க் கோயிலுக்குச் சென்றிருந்தோம். மலைப்படிகளின் தொடக்கத்தில் பக்கச் சுவரில் ஒரு கல்வெட்டு இருந்ததைப் பார்த்ததும் மஜீது அதைப் படிக்க ஆரம்பித்தார். மன்னர் பெயரை அரியண்ண உடையார் என்று படித்ததும் அவர் இது புதிய கல்வெட்டு என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஏற்கனவே அரசுத்துறையினர் இங்குக் கல்வெட்டுகளைப் படியெடுத்திருக்கிறார்களே, அப்படியிருக்கும்போது புதிய கல்வெட்டு எப்படி இருக்கமுடியும் என்று ஒரே குழப்பமாகவும் இருந்தது. அவர் தன்னிடமிருந்த எறும்பியூர்க் கோயில் கல்வெட்டுகள் வெளியாகியிருந்த நடுவண் அரசின் ஆண்டறிக்கைத் தாளை எடுத்து, அந்த அட்டவணையில் மன்னர் பெயர் பகுதியில் அரியண்ண உடையார் என்ற பெயர் இல்லை என்பதை உறுதிசெய்தபின், இது புதிய கல்வெட்டுதான் என்று தெளிவுபடுத்தினார். அப்போதுதான் புரிந்தது பதிவுசெய்யவரும் மைய அரசின் அலுவலர்கள் சுண்ணாம்புப் பூச்சில் மறைந்திருக்கும் கல்வெட்டுகளைக் கண்டுகொள்வதில்லை என்று. எங்கள் ஆய்வு மையத்தால் கண்டுபிடிக்கப்பட்ட பல புதிய கல்வெட்டுகள் இது போல் சுண்ணாம்புப் பூச்சிலிருந்து வரலாற்று வெளிச்சத்திற்கு வந்தவைதான்.

கோயிலுக்குள் சென்று கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்தபோதுதான் உயரமான இடத்தில் உள்ள கல்வெட்டுகளையும் அரசுத்துறையினர் படியெடுக்கத் தவறிவிடுகிறார்கள் என்பது தெரியவந்தது. திருச்சுற்றின் பின்சுவரில் இருந்து மூன்றாம் இராஜராஜர் கல்வெட்டுகள் இரண்டையும் சுந்தரபாண்டியர் காலக் கல்வெட்டு ஒன்றையும் கண்டறிந்தோம். புதிய கல்வெட்டுகளைக் கண்டறிவது எப்படி என்பதை அப்போதுதான் அறிந்துகொண்டேன்.

அந்த வாரமே புதிய கல்வெட்டுகள் பற்றிய செய்தி நாளிதழ்களில் வெளிவந்தது. என் பெயர் செய்தியிதழில் வந்ததில் என்னைவிட என் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ந்தனர். கல்லூரியிலும் இது குறித்துத் தோழியர் பேசி மகிழ்ந்தனர். என் ஆய்வு நெறியாளரும் என்னைப் பாராட்டினார். ஆனால், அப்போது அதன் அருமை எனக்குத் தெரியவில்லை. பின்னாட்களில் அவருடன் கருத்தரங்குகளில் கலந்துகொள்ள நேர்ந்தபோதுதான் அது புரிந்தது.

கருத்தரங்குகளில் நட்புடைய அறிஞர்களுக்கு எங்களை அவர் அறிமுகப்படுத்துவார். இவ்வளவு பெரிய அறிஞர்களுக்கு நம்மை அறிமுகப்படுத்துகிறாரே என்று வியப்போம். அவர்களுக்கு எங்கே நம்மைத் தெரிந்திருக்கப்போகிறது என்றும் நினைப்போம். ஆனால், அந்த அறிஞர்கள் மிகுந்த மகிழ்வுடன், 'உங்கள் பெயரைச் செய்தி இதழ்களில் பார்த்திருக்கிறோம் உங்கள் பணிகளுக்குப் பாராட்டுக்கள்' என்று வாழ்த்தும்போது, நம்முடைய பெயரை இந்த அறிஞர்களுக்குத் தெரியவைத்தவை நாளிதழ்கள்தானே என்று உணர்ந்து செய்தி இதழ்களுக்கும் அவற்றில் எங்கள் பெயரை இடம்பெறச் செய்த அவருக்கும் உளமார நன்றி பாராட்டி மகிழ்ந்திருக்கிறோம்.

எழில் கொஞ்சும் எறும்பியூர் என்ற தலைப்பில் எறும்பியூர்க் கோயிலைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை செந்தமிழ்ச் செல்வியில் வெளியானபோது அவர் என் பெயரையும் கட்டுரையாசிரியராகச் சேர்த்திருந்தார். அதுவும் எனக்கு ஆச்சரியமான விஷயமாக இருந்தது. நம்முடைய பங்களிப்பு மிகமிகக் குறைவுதானே, இதில் ஏன் நம் பெயரைச் சேர்க்கவேண்டும் என்று நினைத்து, 'நான் பெரிதாக எதுவும் செய்யவ்ில்லையே, ஏன் என் பெயரைக் கட்டுரையில் சேர்த்திருக்கிறீர்களே' என்று கேட்டேன். 'சிறிதளவுதான் என்றாலும் உங்கள் பங்களிப்பும் இருக்கிறதல்லவா? அதனால்தான் உங்கள் பெயரைச் சேர்த்திருக்கிறேன்' என்றார். சிறிதளவேயாயினும், அந்த உழைப்பிற்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று நினைத்த அவர் மனப்பாங்கு என்னை மெய்மறக்கச் செய்தது.

முதுகலை பட்டப் படிப்பு முடிந்ததும் அடுத்து என்ன செய்வது என்று நினைத்தபோது முதுநிறைஞர் பட்டப் படிப்புப் படிக்கலாம் என்று அறிவுறுத்தியவர் அவர்தான். 1986ல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பூண்டி, பொறையார் கல்லூரிகளில் மட்டுமே முதுநிறைஞர் பட்டப் படிப்புப் பயிற்றுவிக்கப்பட்டது. நானும் வளர்மதியும் பொறையார் கல்லூரியைத் தேர்ந்து பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தோம். சில நாட்களில், நாங்கள் பட்டப் படிப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகப் பல்கலையில் இருந்து கடிதம் வந்தது.

நானும் வளர்மதியும் பொறையார் கல்லூரியில் சேர்வதற்காகச் சென்றபோது, கல்லூரி நிருவாகமே முதுநிறைஞர் பட்டப் படிப்புக்கு மாணவர்களைத் தேர்வு செய்துவிட்டதாகக் கூறி எங்களைத் திருப்பியனுப்பினர். எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. 'பல்கலைக் கழகம் உங்களைத் தேர்வு செய்து அதற்கான கடிதத்தையும் அனுப்பியிருக்கிறது, நீங்கள் பயப்படத் தேவையில்லை' என்று என் மாமா சமாதானம் சொல்லி அழைத்துவந்தார்.

திருச்சிராப்பள்ளி வந்ததும் முதலில் அவரைப் பார்த்து நடந்தவற்றை விளக்கினோம். மாமா சொன்னதையே அவரும் சொல்லி, 'கவலைப்படவேண்டாம் நான் கடிதம் தருகிறேன், நீங்கள் பல்கலைக்கழகத்திற்குச் சென்று புலத்தலைவரிடம் கடிதத்தைக் கொடுத்தால் அவர் வேண்டியது செய்வார், இல்லையென்றால் துணைவேந்தரைச் சந்தித்து நியாயம் கேட்கலாம்' என்று தைரியம் கூறி எங்களை அனுப்பிவைத்தார். அவர் கடிதத்தைப் புலத்தலைவரிடம் கொடுத்தோம். புலத்தலைவர் செய்தி அறிந்ததும், 'எங்கோ தவறு நடந்திருக்கிறது, என்ன என்று விசாரித்து உங்களுக்கு விரைவில் கடிதம் அனுப்புகிறோம். டாக்டரிடம் விவரத்தைச் சொல்லுங்கள்' என்று பதிலிறுத்தார். புலத்தலைவர் கூறியது போலவே சில நாட்களில் கடிதம் வந்து, நாங்கள் பொறையார் கல்லூரியில் சேர்ந்தோம்.

கல்லூரியில் சேர்வதில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்ப்பதற்குப் புலத்தலைவருக்குக் கடிதம் தந்ததுடன், முதுநிறைஞர் பட்டப்படிப்புப் படிக்க வாய்ப்பில்லாமல் போய்விடுமோ, ஓராண்டு வீணாகிவிடுமோ என்றறெல்லாம் கவலைப்பட்ட எங்களுக்கு, 'தேவை என்றால் நானே வந்து துணைவேந்தரைச் சந்தித்து ஆவன செய்துதருகிறேன்' என்று தைரியம் தந்து எங்களைத் தேற்றியவர் அவர். இது போல் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அவர்கள் படிப்பதற்கோ, ஆய்வேடு தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்கோ 'நான் இருக்கிறேன் அஞ்சவேண்டாம்' என்று துணையிருப்பது அவர் வழக்கம்.

சிக்கல் எப்படிப்பட்டது, அதை எவ்வாறு தீர்ப்பது என்பன பற்றியெல்லாம் நிதானமாக யோசித்துச் செயற்படுவார். அவரிடம் முதுநிறைஞர் பட்டப் படிப்பிற்காக ஆய்வு செய்த செல்வி லட்சுமிக்கு ஆய்வேடு சமர்ப்பிப்பதில் நெறியாளருடன் சிக்கல்கள் ஏற்பட்டபோது, தம்முடைய தகுதியைப் பற்றிக்கூட யோசிக்காமல், மாணவருக்குத் தொல்லைதந்த நெறியாளரை அவர் கல்லூரிக்கே சென்று சந்தித்து மாணவியின் உழைப்பையும் ஆர்வத்தையும் விளக்கிக்கூறி ஆய்வேடு சிறப்பாக வந்திருப்பதைச் சுட்டிக்காட்டி சிக்கலைத் தீர்த்துவைத்தவர் அவர். அப்போதெல்லாம் ஒரு மாணவருக்காக இவர் இவ்வளவு செய்யவேண்டுமா என்றுகூட நான் யோசித்திருக்கிறேன்.

அதே போல் அவரிடம் ஆடற்கலையில் முனைவர் பட்டம் செய்யவேண்டும் என்று சென்னையிலிருந்து வந்த செல்வி கற்பகத்திற்குப் பல உதவிகள் செய்தார். அந்த மாணவி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆடற்கரணங்களில் முனைவர் ஆய்வுசெய்யப் பதிவு செய்திருந்தார். அதற்கேற்ற நெறியாளர் அங்கு அமையாமையால் அவரை நெறியாளராக இருக்குமாறு வேண்டினார். கற்பகத்தின் ஆர்வத்தை மதித்து அவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்று தேர்வாணையரைச் சந்தித்து உரியன செய்தார். ஆய்வு சிறக்க நடந்துகொண்டிருந்த நேரத்தில், கற்பகத்தின் ஆய்வ்ிற்காகப் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிவுரைக் குழுவிலிருந்த ஆடற்கலைஞர் ஒருவர் கரண ஆய்வுகள் தொடர்பாக டாக்டரிடம் கொண்டிருந்த கருத்துவேறுபாடுகள் காரணமாக கற்பத்தின் நெறியாளராக அவர் இருக்கக்கூடாது என்று நிபந்தனையிட்டார்.

கற்பகத்திற்கு அவரைத் தவிர வேறுயாரிடமும் ஆய்வு செய்ய விருப்பமில்லை. ஓரிரு நாட்களில் வேறு நெறியாளரை தேர்ந்தாகவேண்டும் என்ற சூழல் ஏற்பட்டபோது உடனே மதுரைக்குச் சென்று அங்கு காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த அவருடைய அண்ணன் திரு. சண்முகத்தைச் சந்தித்துச் சிக்கல்களை விளக்கி, 'நீங்கள் பெயரளவிற்கு நெறியாளராக இருங்கள். ஆய்வை நான் பார்த்துக் கொள்கிறேன். ஆடற்கலையில் அளப்பரிய ஆர்வமுள்ள அந்தப் பெண்ணுக்கு நாம் உதவவேண்டும்' என்று சொன்னபோது திரு. சண்முகம் ஒப்புக்கொண்டார். ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்று நினைத்து விட்டால் உயிரைக் கொடுத்தாவது என்று சொல்வார்களே, அது போல் எந்த நிலைக்கு வேண்டுமானாலும் இறங்கிப் போய் உண்மையான விருப்பமும் உழைப்பும் உள்ள மாணவருக்குத் தன்னால் இயன்றதைச் செய்வதில் அவர் ஒரு சிறந்த மனிதர்.

நானும் வளர்மதியும் முதுநிறைஞர் பட்டத்திற்குக் கோயில் ஆய்வுதான் என்று முடிவு செய்திருந்தோம். அதற்கும் அவர்தான் காரணர். முதுகலை ஆய்விற்காகக் கோயில்களை ஆய்வு செய்த நாட்களில் கோயிற் கட்டடக்கலை, சிற்பக்கலை, கல்வெட்டுகள் இவற்றை நாங்கள் புரிந்துகொள்ளும்படி எளிமையாக எங்களுக்குச் சொல்லித்தந்த பாங்கு, இந்தத் துறைகளில் இன்னும் விரிவாக, ஆழமாகக் கற்க வேண்டும் என்ற ஆவலை விதைத்தது. ஆனால் எங்களுடைய நெறியாளர் திரு. எட்மண்ட்ஸ் அமெரிக்க வரலாற்றில் ஈடுபாடு உள்ளவர் என்பதால் தமிழ்நாட்டு வரலாற்றிலோ, கோயில் ஆய்விலோ அவருக்கு ஆர்வமில்லை. அதனால் எங்களைக் கோயில்களைப் பற்றி ஆய்வு செய்ய அனுமதிக்கவில்லை.

எங்கள் முதுகலை ஆய்வேட்டைப் பேராசிரியருக்குக் காண்பித்து எங்கள் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் விளக்கிக் கூறிய பின் இறுதியாக ஒப்புக்கொண்டார். அப்போதே எங்களுக்கு அவர்தான் நெறியாளராக இருப்பார் என்பதையும் கூறியிருந்தோம். திரு. எட்மண்ட்ஸ் அதற்கும் சம்மதித்தார். அனுமதி அளித்த பிறகு எங்கள் ஆய்வேடு எந்த நிலையில் இருக்கிறது, குறிப்பிட்ட காலத்திற்குள் ஆய்வேட்டைச் சமர்ப்பிப்போமா என்றெல்லாம் திரு. எட்மண்ட்ஸ் எதுவும் கேட்கவில்லை. அவரைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டதால்தான், அவரிடம் கோயில் ஆய்வு செய்ய அனுமதித்ததோடு, ஆய்வேடு குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருந்திருக்கிறார் என்பதையும் பின்னாளில் தெரிந்துகொண்டோம்.

(வளரும்)

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.