http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 48
இதழ் 48 [ ஜூன் 16 - ஜூலை 17, 2008 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
திரும்பிப் பார்க்கிறோம்
அன்புள்ள வாருணி,
பரங்குன்றத்தில் கோட்டச் சிற்பமாக விளங்கும் சிவபெருமானின் ஆடல்தோற்றத்தை ஆய்வு செய்து ஆங்கிலத்தில் நான் எழுதிய, 'Chaturan of Parankunram' என்ற கட்டுரை இந்தியன் எக்ஸ்பிரஸ் 10. 5. 1986 இதழிலும் ஆலம்பாக்கம் கைலாசநாதர் கோயில் பற்றிய ஆங்கிலக் கட்டுரை, 'Temple in Tears' என்ற தலைப்பில் 28. 6. 1986 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிலும் வெளியாயின. திருவையாறு வளாகத்திலுள்ள வடகயிலாசத்தைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை, 'Vada Kailasam Sculptures' என்ற தலைப்பில் இந்தியன் எக்ஸ்பிரஸ் 13. 9. 1986 இதழில் வெளியானது. அழுந்தூரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளும் தேடல்களும் வெளிப்படுத்திய உண்மைகளின் அடிப்படையில், 'Archaeological Discoveries at Alundur' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை 1. 3. 1986 இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளியாகி அறிஞர் பலருடைய பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது. திருச்சிராப்பள்ளி இலால்குடிச் சாலையில் அமைந்துள்ள வாளாடி என்னும் சிற்றூரில் சாலை ஓரத்தே சிற்பம் ஒன்று இருப்பதாகவும் அதை ஆராயவேண்டும் என்றும் புலவர் தமிழகன் 1986 டிசம்பரில் தொலைப்பேசினார். உடன் நானும் நண்பர் இராஜேந்திரனும் வாளாடி சென்று சிற்பத்தைப் பார்வையிட்டோம். ஒரு வில் வீரருடைய சிற்பமாக இருந்த அதைப் பார்த்தவுடனேயே அது வீரக்கல் என்பதை அறியமுடிந்தது. மரத்தடியில் மார்பளவிற்கு மண்ணில் புதைந்திருந்த அச்சிற்பத்தை வெளிக்கொணர்ந்து சிராப்பள்ளி அருங்காட்சியத்தில் சேர்ப்பதென முடிவெடுத்தோம். அதனால், மாவட்ட ஆட்சித்தலைவரைச் சந்தித்துச் சிற்பத்தை அகழவும் அருங்காட்சியகத்தில் சேர்க்கவும் உதவி கேட்டோம். அவரும் இலால்குடி வட்டாட்சியருக்கு வேண்டியன செய்துதருமாறு தொலைப்பேசினார். டிசம்பர் 15ம் நாள் கி. ஆ. பெ. விசுவநாதம் மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்களின் உதவியுடன் அச்சிற்பத்தை அகழ்ந்தெடுத்தோம். வழக்கம் போல் உள்ளூர் மக்கள் சிற்பத்தை எடுத்துச் செல்லத் தடையாயினர். வட்டாட்சியருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நானும் இராஜேந்திரனும் ஊர் மக்களிடம் அரைமணி நேரத்திற்கு மேலாகப் பேசிப் பார்த்தோம். பயனில்லை. ஒரு மாணவர் பொறுமையிழந்து, 'சார், சிற்பத்தை எடுத்த இடத்திலேயே புதைத்துவிட்டுப் போகலாம்.அவர்களுக்கு அதன் அருமை தெரியவில்லை' என்று வருத்தத்தோடு கூறினார். கூட்டத்திலிருந்த ஊர் மக்களுள் ஒருவரை மாணவரின் வருத்தம் தொட்டிருக்கவேண்டும். 'பையன்கள் எவ்வளவு பாடுபட்டுச் சிற்பத்தைத் தோண்டி எடுத்திருக்கிறார்கள். இவ்வளவு காலமாக அது இங்கேதானே இருந்தது. நம்மில் யாராவது அதை கவனித்திருக்கிறோமா? நம் ஊரைச் சேர்ந்த யாரோ ஒரு வீரருடைய சிற்பமென்று அவர்கள் சொல்கிறார்களே! அது அருங்காட்சியகத்தில் இருந்தால் நமக்குத்தானே பெருமை. எடுத்துச் செல்லட்டுமே' என்று அவர் சொன்னதும் அவர் பக்கம் இருவர் பேச, எதிர்த்துச் சிலர் பேச, நானும் இராஜேந்திரனும் மீண்டும் அவர்களிடம் பக்குவமாகப் பேசிச் சிற்பத்தைச் சிராப்பள்ளிக்குக் கொணர்ந்தோம். 'வாளாடியில் வீரக்கல்' என்ற தலைப்பில் 16. 12. 1986 நாளிதழ்களில் செய்தி வெளியானது. அருங்காட்சியத்தில் அந்தச் சிற்பத்தைப் பார்க்கப் பலர் வந்தனர். அவர்களுள் புலவர் தமிழகன் குறிப்பிடத்தக்கவர். 1987 மார்ச்சுத் திங்களில் திருவரங்கம் இராஜகோபுரப் பணியை முன்னிறுத்தி தினமணி ஒரு சிறப்பிதழ் வெளியிட்டது. அவ்விதழில் என் கட்டுரை ஒன்றை வெளியிட விரும்பினார் நண்பர் அ. கோபாலன். அவர் வேண்டுகோளை ஏற்றுத் திசை விளக்காய்த் திகழ்கின்ற திருவரங்கம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதித் தந்தேன். 25. 3. 1987 அன்று வெளியான அக்கட்டுரைக்காகத் திருவரங்கம் கோயில் முழுவதும் சுற்றி வந்தேன். அப்போதுதான் ஆனந்தத் தாண்டவ விஷ்ணு கண்டறியப்பட்டார். கோயிலின் பலித்தளத்திலும் வெள்ளைக் கோபுரத்தின் கீழ்ப்பகுதியிலும் அமைந்திருந்த விஷ்ணுவின் அந்த ஆனந்தத் தாண்டவக் கோலம் என்னை வியப்படையச் செய்தது. ஆனந்தத் தாண்டவம் சிவபெருமானுக்கு உரியது. புஜங்கத்ராசித கரணத்திலிருந்து வடிவமைக்கப்பட்ட இந்த ஆனந்தத் தாண்டவம் சோழர்கள் காலத்தில் போற்றிக் கொண்டாடப்பட்ட ஆடல் நிலையாக விளங்கியது. புஜங்கத்ராசிதம் மெல்ல மெல்ல ஆனந்தத் தாண்டவமாக மலர்வதைச் சீயமங்கலம் அவனிபாஜன பல்லவேசுவர கிருகத்தில் தொடங்கிக் காணமுடியும். இராஜசிம்மரின் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் சிவபெருமானின் புஜங்கத்ராசித கரணக் கோலங்கள் அற்புதமாய் அமைந்துள்ளன. இதே கோலம் முற்பாண்டியர் பணியாகத் திருப்புத்தூர் திருத்தளிநாதர் திருக்கோயிலில் கபோதக்கூடு சிற்பமாகக் காணக் கிடைக்கிறது. முற்சோழர் காலத்தில்தான் இக்கரணம் ஆனந்தத் தாண்டவமாக மேம்படுத்தப்பட்டது. முதல் ஆதித்தர், முதல் பராந்தகர் கோயில்களில் இச்சிற்பத்தை மகரதோரணச் சிற்பமாகவோ, கண்டபாதச் சிற்பமாகவோ காணமுடிகிறது. சிவபெருமானுக்கு மட்டுமே உரிய ஆடல் நிலையாக ஆகமங்களால் கொண்டாடப்படும் ஆனந்தத் தாண்டவக் கோலத்தில் விஷ்ணுவைப் பார்த்தபோது திருவாசி மாற்றுரை வரதீசுவரர் கோயிலில் கண்டறிந்த பாம்பின் மீதாடும் பரமன்தான் நினைவிற்கு வந்தார். அங்கு விஷ்ணுவின் காளிங்கநர்த்தனம், பாம்பு மட்டுமென சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தோடு இணைக்கப்பட்டிருந்தது. இங்கோ, பாம்பும் கைக்கருவிகளும் வைணவப் பெருமை சுட்ட ஆடற்கோலம் மட்டும் ஆனந்தத் தாண்டவமாகியிருந்தது. பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகளில் சமயப்பொறை கருதிய சமுதாய அறிஞர்களால் உருவாக்கப்பட்ட இவ்வடிவங்கள் சமயங்களை இணைக்கும் பாலங்களாக அமைந்தன. ஆனந்தத் தாண்டவ விஷ்ணு கண்டறியப்பட்ட செய்தி 9. 3. 1987 நாளிதழ்களில் வெளியானது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து இக்கண்டுபிடிப்புப் பற்றி மடல்கள் வந்தன. சில மடல்கள் சமயஞ் சார்ந்த பல வினாக்களைத் தொடுத்திருந்தன. சில மடல்கள் ஆழ்வார்களின் பாசுரங்களில் இருந்து சில செய்திகளைப் பகிர்ந்துகொண்டிருந்தன. அச்செய்திகளைச் சரிபார்ப்பதற்காகப் பிரபந்தத்தில் ஆழ்ந்தேன். திருமுறைகளைப் போல் தேனினும் இனிய தமிழில் ஆழ்வார் பெருமக்கள் பாடியிருந்த பாசுரங்கள் என்னில் ஆழமாகப் பதிந்தன. என்றேனும் பாசுரங்களில் ஆழமாக ஆய்வு செய்யவேண்டும் என்ற எண்ணம் துளிர்விட்டது. திருவரங்கம் திருக்கோயிலில் இந்த ஆய்வின்போதுதான் கரணச் சிற்பங்களைக் கண்டறிந்தேன். ஊரக ஆடல் சிற்பங்களோடு இணைந்த நிலையில் கண்டபாதச் சிற்பங்களாக இவையும் இருந்தன. பின்னாளில் செல்வி வே. கல்பகம் கரண ஆய்வுகளுக்காக என்னிடம் வந்தபோது திருவரங்கம் கரணச் சிற்பங்களை விரிவான அளவில் ஆய்வுசெய்து குறிப்புகள் எடுத்தோம். திருவரங்கம் திருக்கோயிலின் கட்டமைப்பு, சிற்பங்கள் இவை குறித்து ஸ்ரீஹரிராவ் தகுதி சான்ற நூலொன்றை எழுதியுள்ளார். அந்நூலில்கூட இடம்பெறாத பல கட்டமைப்பு நுணுக்கங்களையும் சிற்பங்களையும் எங்கள் ஆய்வின்போது அறிந்து தொகுத்தோம். அவற்றைப் பின்னர் விரிவாகப் பார்ப்போம். 1987 வாழ்க்கையில் மறக்கமுடியாத ஓர் ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டில்தான் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் செனட் பேரவைக்கு மூன்றாண்டு கால உறுப்பினராக என்னை நியமித்து அரசாணை வெளியாகி இருந்தது. மாண்புமிகு கல்வி அமைச்சரிடமிருந்து வந்த மடலில் என் ஆய்வுப் பணிகளைப் பாராட்டி இந்த நியமனம் நிகழ்த்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிருந்தது. பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளரிடமிருந்தும் அரசாணையைச் சுட்டி என் பணிகளைப் பாராட்டி ஒரு கடிதம் வந்தது. அதில் செனட் பேரவை கூடும் நாளைக் குறிப்பிட்டு அந்நாளில் பல்கலைக்கழகம் வந்து பேரவை உறுப்பினராகப் பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்தப் புதிய பொறுப்பு என் வாழ்வரசிக்கும் எங்கள் குடும்பத்தாருக்கும் பெருமகிழ்வை அளித்தது. இந்திய மருத்துவ மன்றத் திருச்சிராப்பள்ளிக் கிளையின் மூத்த உறுப்பினரும் மன்ற நிருவாகக் குழுவின் நெறியாளருமான மருத்துவர் அர. கணேசன், இந்தப் பொறுப்பு மருத்துவ மன்றத்திற்கே கிடைத்த பெருஞ்சிறப்பு எனப் பாராட்டி வாழ்த்தினார். அது போழ்து மருத்துவ மன்றச் செயலாளராக இருந்த உளநல மருத்துவர் க. கோபாலகிருஷ்ணன் மருத்துவ மன்றக் கூட்டமொன்றில் இந்தச் செய்தியை அறிவித்து, என்னைப் பாராட்டிச் சிறப்புச் செய்தது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த செனட் பேரவைக் கூட்டத்திற்குச் சென்ற போது பூண்டி புஷ்பம் கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியர் முனைவர் சிவப்பிரகாசம் அன்போடு வரவேற்றார். அவரை அதற்கு முன் நான் அறியேன் என்றாலும் நாளிதழ்ச் செய்திகள்வழி என்னை அவர் அறிந்திருந்தார். அந்தக் கூட்டத்தில் பல முகங்கள் அறிமுகமானவையாகவே இருந்தமை மகிழ்வளித்தது. கூட்டம் தொடங்கியதும் துணைவேந்தர் முனைவர் அ. ஞானம் பேரவை உறுப்பினர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி, என் பணிகளைக் குறிப்பிட்டுப் பேசி, நான் பொறுப்பேற்குமாறு செய்தார். அப்பெருந்தகையை அதற்கு முன் ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அவருடைய அன்பும் என் பால் அவர் காட்டிய அக்கறையும் என்னைப் பேரூக்கப்படுத்தின. தமிழ்நாடு அரசு தொல்லியல்துறைக்கு மேல் நிலைக்குழு ஒன்று அமைப்பது வழக்கம். அக்குழு உறுப்பினர்களே தொல்லியல்துறையின் செயற்பாடுகளை ஊக்குவித்து வழிகாட்டல்களை வழங்குவர். இக்குழுவில் துணைவேந்தர் முனைவர் அ. ஞானம் உறுப்பினராக இருக்கவேண்டுமெனத் தமிழ்நாடு அரசு அவர் ஒப்புதலைக் கேட்டிருந்தது. துணைவேந்தர் மறுமொழி எழுதியபோது என் பெயரைக் குறிப்பிட்டு அவரினும் இப்பொறுப்பிற்கு நான் தகுதியுடையவன் என்று குறிப்பிட்டு என்னை உறுப்பினராகக் கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தார். அக்கடிதத்தின் படியொன்று எனக்கு வந்தபோதுதான் செய்தி அறிந்து அப்பெருந்தகையின் பேருள்ளத்தை வியந்தேன். அனைத்து வகைகளிலும் அப்பொறுப்பிற்கு அறிவியல் மேதையான அவர் தகுதி உடையவராக இருந்தபோதும் இளையவனான நான் பொறுப்புகளை ஏற்று அனுபவம் பெறவேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாகவே அத்தகு பரிந்துரையை அரசுக்குச் செய்திருந்தார் என்பதை உணர்ந்தேன். பரிந்துரைக்கு நன்றி பாராட்டி எழுதியதுடன், அவரையே அப்பொறுப்பிலிருந்து தொல்லியல்துறையை வளப்படுத்துமாறு வேண்டியிருந்தேன். 1987 மேத் திங்களில் முதுகலைத் தமிழ் முதலாண்டுத் தேர்வுகள் எழுதினேன். மருத்துவப் பணி, கருத்தரங்கங்கள், ஆய்வுக்கட்டுரைகள், களஆய்வுகள் எனக் கால நெருக்கடி மிக்கிருந்தமையால் இக்கால இலக்கியம், தொல்காப்பியம் பொருளதிகாரம் எனும் இரண்டு தாள்களை மட்டுமே எழுதமுடிந்தது. இரண்டிலுமே அறுபதிற்கு மேல் மதிப்பெண்கள் கிடைத்தன. இடைக்கால இலக்கியம், இலக்கியக் கொள்கைகள் எனும் இரண்டு தாள்களையும் அக்டோபர் 1987ல் எழுதித் தேறினேன். முதலாண்டுத் தாள்களில் ஒப்பிலக்கியம் மட்டுமே விடுபட்டிருந்தது. ஒப்பிலக்கியம் எனக்கு முற்றிலும் புதிய துறை என்பதால், தொடக்கத்தில் அதன் அடிப்படைகளைப் புரிந்துகொள்வது எளிதாக இல்லை. முனைவர் இராம. சண்முகத்துடன் நிகழ்ந்த சில உரையாடல்கள் ஒப்பிலக்கியம் எவ்வளவு அருமையான துறை என்பதை நன்கு விளக்கியது. அவர் அறிமுகப்படுத்திய பல ஒப்பிலக்கிய நூல்களை ஆர்வத்தோடு படித்தேன். கருத்துருவாக்கங்களில் பல நாடுகள், மொழிகள், இனங்களைச் சேர்ந்த அறிஞர்கள் எப்படியெல்லாம் ஒருமுகப்படுகிறார்கள் என்பதை நினைத்து, நினைத்து வியந்திருக்கிறேன். வால்ட்விட்மன், உமர்கய்யாம், கலீல்கிப்ரான், பாரதி, ஷெல்லி, கீட்ஸ், சங்கப் புலவர்கள் என எனக்கு நானே படித்து ஒப்பிட்டு மகிழ்ந்திருக்கிறேன். கோயிற்கலைகளை விட்டுவிட்டு இலக்கியங்களுக்குள் நுழைந்துவிடலாமா என்று பலமுறை தடுமாறியிருக்கிறேன். இராஜராஜரும் தஞ்சாவூர் இராஜராஜீசுவரமும் ஆடற்கரணங்களும்தான் என்னைத் தடுத்து நிறுத்தியிருக்கின்றன. 1987 ஏப்ரல் திங்களில் இந்திய கலை பயின்ற அமெரிக்க மாணவர்கள் சிலருக்குக் கோயிற்கலைகள் பற்றி விளக்குவதற்காகத் திருவானைக்காவல் சென்றபோதுதான் அக்கோயில் கோபுர வாயிலில் இருந்த வீரக்கல் கண்ணில் பட்டது. ஓர் ஆடவர் தலைப்பலி தருவது போன்ற சிற்பம் அது. சோழர் காலச் சிற்ப அமைதியில் இருந்த அந்தச் சிற்பத்தைப் பற்றிய தகவல்கள் 16. 5. 1987 நாளிதழ்களில் வெளியாயின. அதைத் தொடர்ந்து திருவாசி மாற்றுரைவரதீசுவரர் கோயிலின் சுற்று மாளிகையில் கவனிப்பாரற்றுக் கிடந்த தலைப்பலிச் சிற்பம் ஒன்றைக் கண்டறிந்தோம். அது பற்றிய தகவல் 1987 ஆகஸ்டு ஏழாம் நாள் தினமணியில் வெளியானது. அதே ஆண்டு நவம்பரில் குழித்தலைப் பேருந்து நிலையத்திற்கு அருகிலும் குழித்தலைச் சிவன் கோயில் வெளிச்சுற்றுப்பகுதியில் இருந்தும் நான்கு தலைப்பலிச் சிற்பங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தோம். குழித்தலைச் சிற்பங்களைக் கண்டறியத் துணைநின்றவர் பேராசிரியர் அமர்ஜோதி ஆவார். சிராப்பள்ளிக் கீழ் அரண் சாலையில் இருக்கும் பூலோகநாதர் கோயிலுக்கு அருகில்தான் என் மருத்துவமனை இருந்தது. சிறிய கோயில் என்பதால் அக்கறை கொள்ளவில்லை. என்னிடம் மருத்துவம் பெற்றவர்களுள் ஒருவர் என்னை அக்கோயிலுக்கு வருமாறு அழைத்தார். அங்குச் சென்றபோதுதான் அக்கோயிலிலும் பல கல்வெட்டுகள் இருப்பதை அறிந்தேன். அவை படியெடுக்கப்படாமல் இருந்த நிலையையும் அறிய முடிந்தது. நானும் நண்பர் மஜீதும் இரண்டு நாட்கள் அரிதின் முயன்று அக்கல்வெட்டுகளைப் படித்துப் படியெடுத்தோம். பல்லாண்டு சுண்ணப்பூச்சில் ஊறி மெருகிழந்திருந்த அந்தக் கல்வெட்டுகளைப் படிக்கும் நிலைக்குக் கொணர்ந்த பெருமை ஆறுமுகத்திற்கே உரியதாகும். அக்கல்வெட்டுத் தரவுகள் 1987 ஏப்ரல் மாதம் 20ம் நாள் செய்தி இதழ்களில் வெளியாயின. குழித்தலையில் மீ. சு. இளமுருகு பொற்செல்வி தமிழ்க் கா. சு. இலக்கிய அமைப்பொன்றைப் பல்லாண்டுகளாக நடத்திக் கொண்டிருந்தார். நேர்மையும் திட்பமும் பேரன்பும் கொண்ட அப்பெருந்தகை ஆண்டு தோறும் தம் அமைப்பின் சார்பில் இலக்கிய விழாக்களை நடத்துவது வழக்கம். 1987 அக்டோபர்த் திங்களில் நிகழ்ந்த விழாவிற்கு என்னை அழைத்திருந்தார். அவர் அமைப்பிற்கு நான் சென்றது அதுதான் முதல் முறை. அவருடைய நூலகத்தைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. பழைமையான நூல்கள் நாளிதழ்கள் எனப் பலவும் அங்கிருந்தன. திராவிடச் சிந்தனையாளரான அவர் முனைப்பான தமிழ்ப் பற்றாளர். அவருடைய துணைவியார் பொற்செல்வி அம்மையார் அவருக்கு நிகரான ஆற்றல் உள்ளவர். இருவரும் இணைந்தே விழாக்களை நடத்தினர். அவர்கள் நடத்திய இலக்கிய விழாக்கள் அவர்கள் வீட்டுத் திருமணங்களைப் போல அமைந்தமை குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்க் கா. சு. இலக்கிய அமைப்பில் பல தமிழறிஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களுள் பெரும்பான்மையானவர்கள் பற்றாளர்களாக இருந்தார்களே தவிர, ஆழமான புலமை பெற்றவர்களாக இல்லை. தமிழை உயர்த்திப் பிடிக்க நினைத்தார்களே தவிர, மொழியின் சால்புகளை வளமைப்படுத்த யாரும் கருதினார் இல்லை. முதல் நிகழ்ச்சியின்போது மட்டுமே முழுநாளும் நான் அங்கிருந்தேன். தொடர்ந்த ஆண்டுகளில் அழைக்கப்பட்டிருந்த போதும் என் உரை நிகழும் நேரம் மட்டுமே கலந்துகொண்டு திரும்புமாறு அமைத்துக் கொண்டேன். என்னிடம் மிகுந்த அன்பு பாராட்டிய இளமுருகு பொற்செல்வி இணையர் என்றென்றும் என் உள்ளத்தில் நிறைந்திருப்பர். குழித்தலை தமிழ்க் கா.சு. முதல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றிருந்தபோதுதான் அங்கிருந்த வருவாய்த்துறை அலுவலர் ஒருவரும் நண்பர் காளத்தீசுவரனும் என்னை மேட்டு மருதூருக்கு அழைத்துச் சென்றனர். பெரிதும் அழிவுற்ற நிலையில் இருந்த சிவன் கோயில் என்னை வரவேற்றது. வாயில் நிலையில் இருந்த முதல் இராஜராஜர் காலக் கல்வெட்டைப் படித்தறிந்ததுடன் நான்முகன் சிற்பம் ஒன்றையும் இடிபாடுகளுக்கிடையில் இருந்து கண்டறிந்தோம். இக்கண்டுபிடிப்புப் பற்றிய செய்தி 11. 10. 1987 நாளிதழ்களில் வெளியாயிற்று. இலக்கியம் பேச வந்த இடத்தில் கல்வெட்டும் சிற்பங்களும் கண்டறியப்பட்டமை இளமுருகு பொற்செல்வி இணையரைப் பெரிதும் மகிழ்வித்தது. சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ளஆலம்பாக்கம் மாடமேற்றளி, கைலாசநாதர் கோயில் இவற்றை ஆராய்ந்தபோதே அவ்வூரின் அருகிலுள்ள திருமழபாடியிலும் ஆய்வு மேற்கொண்டோம். அற்புதமான சோழர் காலச் சிற்பங்களைக் கொண்டுள்ள அத்திருக்கோயிலின் விமானம் முதல் இராஜராஜர் காலப் பணி. வரலாற்றுச் சுரங்கங்களாய் விளங்கும் எண்ணற்ற சோழர் காலக் கல்வெட்டுகள் அக்கோயிலில் உள்ளன. கோயில் ஆய்வின்போது மூன்று அரிய கரணச் சிற்பங்களைக் கண்டறிந்தேன். அவற்றுள் குறிப்பிடத்தக்கது தண்டபட்சக் கோலத்தில் அமைந்திருக்கும் சிவபெருமானின் கரணத்தோற்றம். தமிழ்நாட்டில் தண்டபட்சக் கோலத்தில் சிவபெருமானின் ஆடற்கோலங்கள் பார்வைக்குக் கிடைக்குமிடங்கள் நான் அறிந்தவரையில் இரண்டே இரண்டுதான். ஒன்று புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில். மற்றொன்று திருமழபாடித் திருக்கோயில். தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தின் கரணத் தொடரிலும் இக்கோலம் உள்ளது. மூன்றுமே அழகின் உச்ச வெளிப்பாடுகள் என்றாலும், புள்ளமங்கைச் சிற்பத்திற்கு எதுவும் இணையாகாது. மழபாடிக் கோயிலின் வெளிச்சுற்று மதில் சுவரில் சிவபெருமானின் தனித்த ஊர்த்வஜாநு கரணச் சிற்பம் ஒன்றும் காளியோடும் உமையோடும் இணைந்த கோலத்தில் அதே கரணச் சிற்பமொன்றும் உள்ளன. அவற்றுள் தனித்த சிற்பம் எழிலானது. தமிழ்நாட்டில் பல்லவர் காலத்திலேயே சிவபெருமானின் ஊர்த்வஜாநு கரணக் கோலங்களைக் காணமுடிகிறது. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், திருப்பட்டூர்க் கைலாசநாதர் கோயில் இவற்றைக் குறிப்பிடலாம். முற்சோழர் காலத்தில் சிற்பிகளால் உவந்து கொள்ளப்பட்ட சிவபெருமானின் கரணக் கோலங்களுள் ஊர்த்வஜாநு முதன்மையானது. உடையார்குடி அனந்தீசுவரர் கோயில், சீனிவாசநல்லூர்க் குரங்கநாதர் கோயில், பழுவூர் அவனிகந்தர்வ ஈசுவர கிருகத்துத் தென்வாயில் ஸ்ரீகோயில் எனப் பல கோயில்களில் முற்சோழர் காலச் சிவபெருமானின் ஊர்த்வஜாநு கோலங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும், தென்வாயில் ஸ்ரீகோயில் சிற்பத்திற்கு இணையான ஒன்றை இதுநாள்வரையில் நான் பார்த்ததில்லை. அது போலவே கிடைத்திருக்கும் ஊர்த்வஜாநு சிற்பங்களில் மிகச் சிறியது அனந்தீசுவரம் சிற்பம்தான். காளியோடும் உமையோடும் இணைந்த நிலையில் காணக்கிடைக்கும் ஊர்த்வஜாநு சிற்பம் மழபாடியில் மட்டுமே உள்ளது. இச்சிற்பங்களைப் பற்றிய, 'Karana Sculptures of Thirumalapadi' என்ற கட்டுரை இந்தியன் எக்ஸ்பிரஸ் 27. 11. 1987ம் நாள் இதழில் வெளியானது. திருமழபாடியைப் பற்றி விரிவான அளவில் ஆங்கிலத்தில் நூலொன்றினை வெளியிட்டிருந்த ஈரோடு வாசவிக் கல்லூரி நூலகர் சி.மூக்கரெட்டி அக்கட்டுரையைப் படித்ததும் தம் புத்தகத்துடன் சிராப்பள்ளி வந்து என்னைச் சந்தித்தார். தம்முடைய நூலில் நான் குறிப்பிட்டிருந்த சிற்பங்களைப் பற்றித் தாம் எழுதாமையை மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்துகொண்ட அப்பேராசிரியர், என் கண்டுபிடிப்புகளைப் பெரிதும் பாராட்டியதுடன் தம் நூலையும் எனக்களித்துச் சென்றார். அவருடைய பெருந்தன்மையும் நேர்மையும் என்னைப் பெரிதும் வியப்புக்குள்ளாக்கின. தாம் ஆய்வுசெய்த ஒரு களத்தில் தம்மால் கண்டறிய முடியாமல் போன சில தரவுகளை மற்றோர் ஆய்வாளர் கண்டறிந்து வெளிப்படுத்தினால் அதை அறிய நேரும் அறிஞர்கள் அமைதி காப்பதையே நான் கண்டிருக்கிறேன். ஒரு சிலர், களம் முழுவதும் தாம் ஆராய்ந்து அறிந்த நிலையில் புதியன இருக்க வாய்ப்பே இல்லை என்று சினவயப்படுவதும் உண்டு. இவ்விரண்டு நிலைகளுக்கும் மாறாகத் தம் ஆய்வின் குறைபாடுகளுக்காக வருந்தி, அவற்றைத் தூக்கி நிறுத்தக் காரணங்களேதும் தேடாமல், புதியன கண்டறிந்த ஆய்வாளரை நேரில் வந்து சந்தித்து, விட்டுப்போன தகவல்களுக்காக வருத்தம் தெரிவித்த ஆய்வாளர் நான் அறிந்த வரையில் பேராசிரியர் சி. மூக்கரெட்டி மட்டுமே ஆவார். நெடுங்காலம் எங்கள் ஆய்வு மையத்துடன் தொடர்புடன் இருந்த அப்பெருந்தகை எங்களால் மறக்கமுடியாத பெருந்தன்மையாளர். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகமும் குன்றக்குடித் திருமடமும் இணைந்து திருக்கோயில், சமயம், கலை, சமுதாய ஆய்வு பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கொன்றினைக் காரைக்குடியில் 1988 ஏப்ரல் 9, 10ம் நாட்களில் நடத்தின. அக்கருத்தரங்கில் பாரதிதாசன் பல்கலைக்கழகச் சார்பில் பேராசிரியர் இருவரைப் பங்கேற்கச் செய்யுமாறு வேண்டிக் கருத்தரங்கக் குழுவினர் துணைவேந்தர் ஞானத்திற்குக் கடிதம் எழுதியிருந்தனர். கோயிற்கலை சார்ந்த அக்கருத்தரங்கில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரை வாசிக்கப் பல்கலையில் அத்துறை சார்ந்த பேராசிரியர்கள் இல்லை என்றும் ஆனால், அத்துறையில் குறிப்பிடத்தக்க பணியாற்றியிருக்கும் என் பெயரைப் பல்கலையின் சார்பில் பரிந்துரைப்பதாகவும் நேரடியாக என்னிடம் தொடர்புகொள்ளுமாறும் அவர்களுக்குத் துணைவேந்தர் எழுதியதுடன் அம்மடலின் படியொன்றையும் எனக்கு அனுப்பியிருந்தார். என் ஆய்வுகளின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கை என்னை வியக்க வைத்தது. அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய கடப்பாட்டை நான் உணர்ந்திருந்தேன். அழகப்பா பல்கலையில் இருந்து மடல் வந்ததும், 'படிமங்கள் ஒரு பார்வை' என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை படிக்க ஒப்புக்கொண்டேன். இந்திய தொல்லியல் அளவீட்டுத்துறையின் துணை மேலாண் இயக்குநராக இருந்து ஓய்வுபெற்ற கே. வி. செளந்தரராஜன் தலைமையில் அமைந்த அமர்வில் நானும் சிற்ப அறிஞர் கணபதியும் கட்டுரைகள் படித்தோம். கே. வி. செளந்தரராஜன், கணபதி இருவரையும் அன்றுதான் முதல் முறையாகச் சந்தித்தேன். என் கட்டுரை கரணங்களைப் பற்றி அமைந்திருந்ததால் கேள்விகள் அதிகமில்லை. கே. வி. செளந்தரராஜன் ஊர்த்வஜாநு, பார்சுவஜாநு இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளைக் கேட்டறிந்தார். கணபதி சிற்பி என் கட்டுரையைப் பாராட்டினார். அறிஞர் வ. சுப. மாணிக்கம் இறைவனின் ஊர்த்வதாண்டவத்தை முன் நிறுத்தி ஒரு கேள்வி கேட்டார். 'இறைவன் காளியுடன் ஆடியபோது தம் செவியிலிருந்து கழன்று விழுந்த குண்டலத்தைக் கால் விரலால் பற்றிக் காலை உயர்த்தி அவ்வணியை மீண்டும் செவியில் பூட்டிக்கொண்டதாகக் கூறுகிறார்களே, அவ்வணி ஆட்ட விரைவில் விழுந்ததா, அல்லது காளியைக் கர்வபங்கம் செய்வதற்காக வேண்டுமென்றே இறைவன் குண்டலத்தை நழுவ விட்டு அதை அணிவது போல் காலை உயர்த்தினாரா?' முனைவர் வ. சுப. மாணிக்கத்தின் இந்தக் கேள்விக்கு ஒரு வினாடிகூடச் சிந்திக்காமல், 'அதை அந்த சிவபெருமானிடம்தான் கேட்கவேண்டும்' என்று மறுமொழி கூறினேன். கேட்டவர் யார், அது எத்தகு அவை என்பது பற்றியெல்லாம் நான் சிந்திக்கவேயில்லை. அவையிலிருந்த அனைவரும் அறிஞர் வ. சுப. மாணிக்கம் உட்பட நான் ஏதேனும் விளக்கம் கூறுவேன் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த என் மறுமொழி அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. பின்னால் பலரும் இதைக் குறிப்பிட்டு என்னிடம் பேசினர். சில மாதங்களுக்கு முன்புகூட பாரதிதாசன் பல்கலைக்கழகத் தேர்வாணையர் அமரர் முனைவர் பாலசுப்பிரமணியத்தைச் சந்திக்கும் வாய்ப்பேற்பட்டபோது, கருத்தரங்கு நடந்த காலத்தில் அழகப்பா பல்கலையின் தமிழ்த்துறையில் தாம் இருந்தமையையும் கருத்தரங்கில் நிகழ்ந்த இந்தச் சுவையான கேள்வி பதிலையும் அவர் நினைவுகூர்ந்து, அவையிலிருந்தோர் எப்படி என் மறுமொழியை இரசித்தனர் என்பதை விளக்கிப் பேசியதை நினைத்துப் பார்க்கிறேன். 1988 மே 11ம் நாள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் அ. விசுவநாதன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், தம் துறை முதுகலைப் படிப்பின் பாடத்திட்டத்தில்கோயிற்கலைகள் இணைக்கப்பட்டிருப்பதாகவும் அதன் காரணமாகக் கோயிற்கலைகள் பற்றிய தேசிய கருத்தரங்கொன்று அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஜூலை மாதத்தில் நிகழவிருப்பதாகவும் அதில் நான் பங்கேற்று ஆய்வுக்கட்டுரை ஒன்று வழங்கவேண்டும் என்றும் கேட்டிருந்தார். 'சிவபெருமானின் ஆடல் திருக்கோலங்கள்' என்ற தலைப்பில் அக்கருத்தரங்கில் நான் வழங்கிய ஆய்வுக்கட்டுரை தொடர்ந்து பலமுறை அப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக்கு என்னை அழைக்கும்படிச் செய்தது. அன்புடன், இரா. கலைக்கோவன் this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |