http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 51

இதழ் 51
[ செப்டம்பர் 16 - அக்டோபர் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

வரலாறு கொடுக்கும் பாடங்கள்
காவற்காட்டு இழுவை!
தொட்டான்! பட்டான்!
திரும்பிப் பார்க்கிறோம் - 23
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 5
Virtual Tour On Kundrandar Koil - 3
அவர் - ஐந்தாம் பாகம்
கடமை... முயற்சி... பெருமிதம்... நெகிழ்வு...
மான்விழியே!! அள்ளும் அழகே!!
சொற்கள்தான் எத்தனை பொய்யானவை!
இதழ் எண். 51 > இதரவை
அவர் - ஐந்தாம் பாகம்
மு. நளினி
தொடர்: அவர்


மதுரையில் பட்டயப் படிப்புப் படித்தபோது மதுரையைச் சுற்றியுள்ள பல ஊர்களுக்கு நேரில் சென்று தமிழ் பிராமிக் கல்வெட்டுகளைப் படித்தோம். வட்டெழுத்துக் கல்வெட்டுகளைப் படித்தோம். ஆனால், கோயில்களின் அமைப்பு, வளர்ச்சி இவை பற்றி விரிவாக படித்ததாக நினைவில்லை. ஒவ்வொரு கோயிலுக்குச் சென்ற போதும் பொதுவாகச் சில செய்திகளை அறிந்துகொண்டோமே தவிர கட்டடக்கலை, சிற்பக்கலை இவை பற்றிய தெளவான அணுகுமுறைகளை அறியக்கூடவில்லை. நான் ஏற்கனவே மூன்றாண்டு காலம் அவருடன் களஆய்வுகளுக்குச் சென்றிருந்தமையால் அந்த அநுபவம் கோயில் கட்டட உறுப்புகளை அடையாளம் காணவும் அவற்றில் இருந்த மாறுபாடுகளை அறிந்துகொள்ளவும் பெரிதும் உதவியது.

மதுரையில் நாங்கள் சென்ற கோயில்களின் வரைபடத்தை வரைந்து கொண்டு வந்து, இந்தக் கோயிலில் இதைப் பார்த்தேன், அந்தக் கோயிலில் சிற்பம் அப்படி இருந்தது என்றெல்லாம் கூறிப் பல கேள்விகள் கேட்பேன். என்னுடைய ஐயங்களைப் புரிந்துகொண்டு அவரும் பொறுமையாக விளக்குவார். சில சமயம் இந்தக் கோயிலை நான் பார்த்தில்லை. அங்குப் போகும்போது அதைப் பற்றி நேரில் விளக்குகிறேன் என்பார். திருப்பரங்குன்றம் குடைவரையைப் பார்வையிட்டபோது அதன் அமைப்புமுறை, தோற்றக் காலம் இவை குறித்துப் பல ஐயங்கள் எனக்கு ஏற்பட்டன. அக்குடைவரையைத் தாம் முழுமையாகப் பார்த்ததில்லை என்று கூறிய போதும், பெரும்பாலான ஐயங்களை அவரால் தெளிவுசெய்ய முடிந்தது. அப்போது நான் நினைக்கவில்லை, பின்னாளில் அவருடன் சேர்ந்து மதுரை மாவட்டக் குடைவரைகள் அனைத்தையும் விரிவாக ஆய்வு செய்து நூல் எழுதுவோம் என்று.

மதுரையில் நாங்கள் கோயில்களுக்குச் சென்ற காலத்தில் சோழர் கல்வெட்டுகளைப் படிக்கும் வாய்ப்பமைந்தால் அவற்றை விரைவாகப் படித்து முடித்துவிடுவேன். அதற்கு முதுகலை, முதுநிறைஞர் படிப்புக் காலத்திலேயே கல்வெட்டுப் படிக்கக் கற்றுக்கொண்டதுதான் காரணம். கல்வெட்டுகளைப் படியெடுப்பதென்றால் நேரில் பார்த்துப் படிப்பதைத்தான் விரும்புவார் அவர். அதற்குக் காரணம், எவ்வளவுதான் கவனத்துடன் கல்வெட்டுகளைப் படியெடுத்தாலும் பல சமயங்களில் கல்வெட்டுப் பகுதியில் தாளை வைத்து நைலான் பிரஷ்ஷில் அடிக்கும்போது எழுத்துக்களில் தாள் சரியாகப் பதியாமல் எழுத்துக்கள் மாறிவிடும் அல்லது விட்டுப்போகும் வாய்ப்புண்டு.

உதரணமாக 'த' எழுத்து சரியாகப் பதியாமல் இருந்தால் அது 'ந' போலத் தெரியலாம். அதனால், சில சமயங்களில் கல்வெட்டின் பொருளே மாறிவிடும். இது போன்ற தவறுகளைத் தவிர்ப்பதற்குக் கல்வெட்டுகளை நேரில் படிப்பதுதான் சிறந்த வழி என்பார் அவர். அதனால்தான், தளிச்சேரிக் கல்வெட்டை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டபோது, ஹூல்ஷ், இரா. நாகசாமி என இருவர் அதைப் பதிப்பித்திருந்தபோதும் நாங்கள் களத்திற்குச் சென்று அக்கல்வெட்டைப் படிக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நானும் அகிலாவும் 55 மீ. நீளமுள்ள அந்தக் கல்வெட்டைப் படித்து முடிக்க ஐந்து முறை தஞ்சாவூர் சென்றோம். ஒவ்வொரு வரியையும் ஒவ்வொரு சொல்லையும் மிகுந்த கவனமுடன் படித்தபோதுதான் அவர் சொல்வதில் இருந்த உண்மையை விளங்கிக்கொள்ள முடிந்தது. முன்னவர்களின் பதிப்புகளிலிருந்து இருபத்தேழு பாடவேறுபாடுகளை எங்களால் கண்டறிய முடிந்தது. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை மெராவியம், காணபாட, கோயின்மை எனும் சொற்களாகும்.

மதுரையில் எனக்குக் கிடைத்த புதிய அநுபவமாக மசிப்படி படித்த அனுபவத்தைத்தான் குறிக்கவேண்டும். ஏற்கனவே படியெடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு மசிப்படிகளைக் கொண்டு கல்வெட்டுகளைப் படித்து எழுதும் பயிற்சி பெற்றேன். எழுத்துக்கள் ஆழமாக வெட்டப்பட்டிருக்கும் கல்வெட்டுகளைத்தான் மசிப்படியெடுத்து பயிற்சிக்கென்றே வைத்திருந்தார்கள். அவற்றில் தமிழ்பிராமி, தமிழ், வட்டெழுத்துக் கல்வெட்டுகளின் மசிப்படிகளே அதிகம். அவை படிப்பதற்கு எளிதாக இருந்தன. பூலாங்குறிச்சி, ஆனைமலைக் கல்வெட்டுகளையும் செங்கம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிம்மவிஷ்ணு, முதலாம் மகேந்திரவர்மர், நரசிம்மவர்மர் ஆகிய பல்லவ மன்னர்கள் கால நடுகற்களின் மசிப்படிகளையும் பல்லவர்களின் சமகாலத்தவர்களாக விளங்கிய முற்பாண்டியர்களின் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் சிலவற்றையும் படித்தேன்.

அதனால், தமிழ் எழுத்துக்களின் தோற்றம், வளர்ச்சி இவற்றை விளங்கிக் கொள்ளமுடிந்தது. எங்கள் மையத்தில் தமிழ்க் கல்வெட்டுகள் படிக்க மட்டுமே வாய்ப்பிருந்தது. மதுரைக் கல்வி பல வகை எழுத்துக்களையும் படிக்கும் வாய்ப்பைத் தந்தது. அவர் அறிவுரைப்படி கல்வெட்டுகளை ஆழ்ந்து கற்க முயன்றேன். நேரடிப் படிப்பும் மசிப்படிப் படிப்பும் அவற்றிற்கிடையே இருந்த நன்மைகளையும் குறைகளையும் நன்கறிய வாய்ப்பளித்தன. என் அளவிற்கு மசிப்படிப் படிப்பு இல்லாதிருந்தபோதும் மசிப்படிப் படிப்பைவிட நேரடிப்படிப்புதான் சிறந்தது என்று அவர் எடுத்திருந்த முடிவு எத்தனைச் சரியானது என்பதை என் கல்வெட்டுக் கல்வி மிகத் தெளிவாக உணர்த்தியது.

அகழாய்வு தொடர்பாகச் சில செய்திகளையும் அங்குப் படித்தபோது தெரிந்துகொண்டேன். அகழப்பட்ட பொருட்களின் காலத்தைக் கார்பன் வழி நிர்ணயிப்பது, மண் அடுக்குகள் பற்றிய செய்திகள் இவற்றைத் திரு. சு. இராஜகோபால் விளக்கினார். அவற்றை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்குக் கொடுமணல் அகழ்வாய்வு உதவியது. தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் எ. சுப்பராயலு தலைமையில் கொடுமணலில் நடந்த அகழாய்வுப் பணியைப் பார்வையிட அங்குச் சென்றதால் அகழாய்வு தொடர்பான பல செய்திகளைத் தெரிந்து கொள்ளமுடிந்தது. ஆய்வுப் பணி நடந்துகொண்டிருந்ததால், மண்ணை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக நீக்கிப் பழம் பொருட்களை கவனத்துடன் எடுக்கிறார்கள், பின்னர் அவை எவ்வாறு தூய்மை செய்யப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன என்பதை எல்லாம் நேரில் கண்டோம். அந்த சமயத்தில்தான் ஒரு குழியிலிருந்து சூதுபவழ மணிகளும் ஒரு வாளும் எடுக்கப்பட்டிருந்தன. வாள் இருந்ததால் அது ஒரு வீரனின் கல்லறையாக இருக்கலாம் என்று பேராசிரியர் திரு. எ. சுப்பராயலு கூறினார். அன்றுதான் பேராசிரியர் சுப்பராயலுவை முதன் முறையாகப் பார்த்தேன்.

பட்டயப்படிப்பிற்கும் ஆய்வேடு வழங்கவேண்டியிருந்ததால் ஆய்வுக்காக ஒரு கோயிலைத் தேர்வு செய்யவேண்டியிருந்தது. திரு. சு. இராஜகோபால் திருப்பைஞ்ஞீலித் திருக்கோயிலை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளுமாறு கூறினார். நான் அவரிடம் கலந்துபேசி முடிவுசெய்வதற்காக சிராப்பள்ளி வந்தேன். 'நீ அந்தக் கோயிலைப் பார்த்திருக்கிறாயா?' என்று அவர் கேட்டார். எனக்கு வெட்கமாகப் போய்விட்டது. அவரைப் பற்றித் தெரிந்திருந்தும் அவர் அணுகுமுறைகளை மூன்றாண்டுகள் அருகிருந்து பார்த்திருந்தபோதும் ஒரு கோயிலைப் பார்க்காமலேயே அதை ஆய்வு செய்ய விழைந்த என் போக்கு எனக்கே வருத்தமாக இருந்தது. நாங்கள் ஏற்கனவே பார்த்திருந்த வேறேதேனும் கோயிலை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளலாமா என்றுகூடக் கருதினேன். ஆனால், அவர் ஒப்புக்கொள்ளவில்லை. 'உன் உள்ளத்தில் பைஞ்ஞீலி எனும் விதை விழுந்துவிட்டது. போய்ப் பார்ப்போம். வாய்ப்பான கோயிலாக இருந்தால் உழைப்போம்' என்று கூறியதுடன், அடுத்த நாளே திருப்பைஞ்ஞீலிக்கு அழைத்துச் சென்றார். கோயிலைப் பார்த்ததுமே எங்கள் இருவருக்கும் அது சரியான களமாக அமையும் என்று தோன்றியதால் பைஞ்ஞீலி ஆய்வுக்கு உட்பட்டது.

முதுகலையின்போதும் முதுநிறைஞர் ஆய்வின்போதும் அவர், திரு. அப்துல் மஜீது இவர்களின் முழுமையான பார்வையின் கீழ்தான் என் ஆய்வு அமைந்தது. ஆனால், பைஞ்ஞீலி முழுமையும் என் பணியாக அமைந்தது. முதலில் நான் பெரிதும் தயங்கினேன். அவர்தான் ஊக்கமளித்தார். உன்னால் முடியும் என்று பலமுறை சொன்னார். அவருடைய வழிகாட்டல்களும் ஊக்கமொழிகளுமே துணையாகக் கொண்டு என் முதல் ஆய்வில் ஈடுபட்டேன். அவ்வப்போது தளர்ச்சி ஏற்படும். அச்சம் வரும். சரியாகச் செய்கிறோமா? என்று அடிக்கடித் தயங்குவேன். என் நாடி பார்த்து எது வேண்டுமோ அது செய்யும் அதிசய மருத்துவராக அவர் இருந்தார். அதனால்தான் என் பைஞ்ஞீலி ஆய்வு சிறக்கத் தொடங்கிச் செழிக்க நடந்தது.

அந்தக் கோயிலை ஆய்வு செய்வது என்று முடிவான பிறகு அந்தக் கோயிலில் நடுவண் அரசால் படியெடுக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளைக் குறித்துக் கொண்டு அவருடன் கோயிலுக்குச் சென்றேன். ஐந்து கல்வெட்டுகளுக்கு மட்டுமே பாடங்கள் பதிப்பிக்கப்பட்டிருந்தன. மற்ற நாற்பத்தொன்பது கல்வெட்டுகளின் பாடங்களையும் கோயிலில் படித்துப் படியெடுக்க அறிவுறுத்தினார். ஒவ்வொரு முறை கல்வெட்டுப் படிப்பதற்குச் செல்லும் போதும் அவரால் வரமுடியாது என்பதால் அக்கோயிலில் பணியாற்றிய திரு. ஆறுமுகம் வழி என் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆறுமுகம் அவ்வூரைச் சேர்ந்த சரோஜா அம்மா என்பவரை எனக்குத் தேவையான சிறு சிறு பணிகளைச் செய்வதற்கும் என் பாதுகாப்பிற்கும் பணியமர்த்தினார்.

தொடர்ந்து மூன்று மாத காலம் அந்தக் கல்வெட்டுகளைப் படிப்பதற்காகக் கோயிலுக்குச் சென்றேன். அப்படிச் சென்ற காலங்களில் காலை பத்துமணிக்கு சரோஜா அம்மா கோயிலுக்கு வந்து எனக்குத் தேவையான உதவிகளைச் செய்வார். நான் கல்வெட்டுகளைப் படித்துக் கொண்டிருப்பேன். சரியாக பதிணொரு மணிக்குத் தேனீர் வந்துவிடும். 'மதிய உணவு கொண்டுவந்திருக்கிறீர்களா? ஏதாவது வாங்கித் தரவேண்டுமா? எங்கள் வீட்டிற்கு வந்து சாப்பிடுகிறீர்களா?' என்று ஏதாவது ஒரு கேள்வியுடன் ஆறுமுகம் வந்து உதவுவார்.

மண்ணை வெட்டி எடுத்தால்தான் படிக்க முடியும் என்ற நிலையில் பல கல்வெட்டுகள் பூமிக்குள் மறைந்திருந்ததால் அவற்றைப் படிப்பதற்கு ஏதுவாக மண்ணை நீக்கித் தருவதற்குக் கோயில் நிருவாக அலுவலர் திரு. சுந்தரேசன் உதவியை நாடினோம். பைஞ்ஞீலிக் கோயில், கல்வெட்டுத் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்த திரு. சுந்தரேசன் வேண்டிய உதவிகளைச் செய்து தந்தார். நான் கல்வெட்டுகளைப் படிக்கும்போதே கோயில் நிலங்கள் எந்தெந்த ஊரிலிருக்கின்றன, எதற்காக அவை கொடுக்கப்பட்டன, கொடை கொடுத்தவர் யார் என்பதையெல்லாம் விசாரித்துத் தெரிந்து கொள்வார். பின்னர் அந்த ஊரில் இப்போதும் கோயில் நிலம் இருக்கிறதா என்பதைக் கோயில் கணக்குகளைப் புரட்டிப்பார்த்து தெரிந்து கொண்டு, நிலங்களை கோயிலுக்கு மீட்டுத் தரவேண்டும் என்ற எண்ணத்தில் முயலுவார். அந்த முயற்சியால் சில நிலங்கள் மீட்கப்பட்டன. இது எனக்கும் அவருக்கும் பெருமகிழ்வளித்தது.

பைஞ்ஞீலிக் கோயிலில் இருபதுக்கும் மேற்பட்ட புதிய கல்வெட்டுகளைக் கண்டுபிடித்தேன் ஒவ்வொரு கல்வெட்டுக் கண்டறியப்பட்டபோதும் என்னைவிட அவர்தான் பெரிதும் மகிழ்ந்தார். முதலாம் இராஜராஜரின் இருபத்தேழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுக் கண்டறியப்பட்டபோது, அதைப் பார்ப்பதற்காகவே அவர் பைஞ்ஞீலி வந்தார். அவருக்கு இராஜராஜரை மிகவும் பிடிக்கும். இராஜராஜரின் ஆளுமை குறித்து அடிக்கடிப் பேசுவார். ஏற்கனவே படியெடுக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளுள் இராஜாதிராஜரின் கல்வெட்டுதான் காலத்தால் பழைமையானதாக இருந்தது. இந்தப் புதிய கண்டுபிடிப்பால் இக்கோயில் இராஜராஜர் காலத்திலேயே கற்றளியாக இருந்த உண்மை தெளிவானது.

இராஜராஜர் கல்வெட்டில் அக்கோயில் இறைவனின் படையலுக்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், அவற்றின் அளவுகள் பற்றியும் கோயிலில் பணியாற்றிய பல பணியாளர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் குறித்தும் விரிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னாளில் அது போல் பல கல்வெட்டுகளை ஆய்வு செய்திருக்கிறோம் என்றாலும் இராஜராஜீசுவரத்துத் தளிச்சேரிக் கல்வெட்டு மிக முக்கியமானது. அக்கல்வெட்டை விரிவாக ஆராய்ந்தபோது 138 ஆடல், இசைக்கலைஞர்கள் பற்றியும் 79 கோயில் பணியாளர்கள் பற்றியும் தெரியவந்தது.

இவ்வூர்க் கல்வெட்டுகளில் திருவெள்ளறை, திருத்தியமலை, தொடையூர், பாச்சூர், திருவாசி, மன்றச்சநல்லூர் (மண்ணச்சநல்லூர்), பழுவூர் போன்ற பல ஊர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அதனால் அவ்வூர்க் கோயில்கள் அனைத்தையும் சென்று பார்வையிட்டோம். அப்போதுதான் திருவாசியில் பாம்பின்மீதாடும் சிவபெருமான் செப்புத் திருமேனியையும் பாச்சூர், தொடையூர்க் கோயில்களில் சிற்றுருவச் சிற்பங்களையும் திருத்தியமலைக் கோயிலில் நன்செய், புன்செய்க் கோல்கள் வெட்டப்பட்டிருந்ததையும் முதன் முதலாகப் பார்த்தேன். பின்னாளில் பல ஊர்க்கோயில்களில் இருந்து முப்பதிற்கும் மேற்பட்டநிலமளந்த கோல்கள், தச்சக் கோல்கள் இவற்றைக் கண்டறிய இந்த அநுபவமே அடிப்படையாக அமைந்தது.

பைஞ்ஞீலிக் கோயிலில் இருந்த பிற்சோழர், பிற்பாண்டியர் கல்வெட்டுகள் பல அரச ஆணைகளாக அமைந்திருந்தன. அவற்றில் மன்னர் பெயர் சுட்டாமல் கோனேரின்மை கொண்டான் என்ற சொல்லாட்சி மட்டுமே இருந்தது. கோனேரின்மை கொண்டான் என்றால் என்ன பொருள் என்று எனக்குப் புரியவில்லை. அவரிடம் கேட்டேன். 'தனக்கு நிகரில்லாத அரசன் என்பதுதான் அதன் பொருள்' என்று கூறியதுடன், எந்த அரசரின் காலத்திலிருந்து கோனேரின்மை கொண்டான் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கண்டறியுமாறு அறிவுறுத்தினார். அதற்காகக் கல்வெட்டறிக்கைகளைப் படிக்கவேண்டியிருந்தது.

கோனேரின்மை கொண்டான் கல்வெட்டுகள் அரச ஆணைகளாக அமைந்திருந்ததால் அவற்றில் பல அரசு அலுவலர்களின் பெயர்கள் கிடைத்தன. கோனேரின்மை கொண்டான் என்ற தொடக்கத்துடன் உள்ள கல்வெட்டுகளில் பொதுவாக மன்னர் பெயர் இருக்காது என்பதால், அதைக் கண்டறியக் கல்வெட்டுகளில் இருக்கும் செய்திகள், அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் அரசு அலுவலர்களின் பெயர்கள் இவற்றை ஆராய்ந்து கிடைக்கும் தரவுகளின் வழியேதான் அக்கல்வெட்டு எந்த மன்னருடையது என்பதைத் தீர்மானிக்க முடியும். பைஞ்ஞீலி வழி அறிமுகமான இந்தப் புதிய செய்தி பின்னாளில் என்னுடைய முனைவர் பட்ட ஆய்வின் போது குறிப்பாகத் திருவரங்கம் கோயில் கல்வெட்டுகள் பலவற்றின் மன்னர்களைக் கண்டறியப் பெரிதும் உதவியது.

பைஞ்ஞீலியில் கோனேரின்மை கொண்டான் என்று தொடங்கும் கல்வெட்டுகளில் நெறியுடைச் சோழ மூவேந்த வேளான், மீனவன் மூவேந்த வேளான் ஆகிய திருமந்திர ஓலைகளின் பெயர்களும் சோழகோன், வாணதராயன் எனும் அரசு அலுவலர்களின் பெயர்களும் இருந்தன. மூன்றாம் குலோத்துங்கருடைய மெய்க்கீர்த்தியுடன் அமைந்த கல்வெட்டுகளில் இந்த நான்கு அரசு அலுவலர்களின் பெயர்களும் இருந்தமையால் கோனேரின்மை கொண்டான் கல்வெட்டுகளுக்குரிய அரசராக மூன்றாம் குலோத்துங்கரைத் தேர்வு செய்ய முடிந்தது.

இதே போல் கோனேரின்மை கொண்டான் கல்வெட்டுகள் மூன்றில் குறிக்கப்பட்டிருந்த மைத்துனர் அழகப் பெருமாள், அண்ட நாட்டுப் பெருமணலூர் மந்திரி பல்லவராஜன், திருமல்லி நாட்டுத் தடங்கண்ணிச் சிற்றூருடையான் சோறந் உய்யநின்றாடுவானான குருகுலராயன் ஆகிய அரசு அலுவர்களின் பெயர்கள் அவை மாறவர்மன் சுந்தரபாண்டியரின் கல்வெட்டுகள் என்பதை உறுதிசெய்ய உதவின.

கல்வெட்டுகளில் புதிய சொற்கள் பயின்று வரும்போது அதன் பொருளைப் பல்வேறு கோணங்களில் அணுகும் முறையை அவரிடமிருந்துதான் பயின்றேன். அத்தகு சொற்களுக்கு இலக்கிய வழக்கு உள்ளதா? என்பதைக் கண்டறியும் பார்வையும் அவரிடமிருந்துதான் கிடைத்தது. எந்த ஒரு புதிய சொல்லையும் முழுமையாக விளங்கிக் கொள்ள அதன் காலநிரலான ஆட்சி தெரியவேண்டும் என்று அவர் அடிக்கடி சொல்வார். முதுகலையிலும் முதுநிறைஞர் காலத்திலும் புரிந்ததைவிட, பட்டயக்கல்விக் காலத்தில் அவர் கூறிய கருத்துக்கள், நிகழ்த்திய விவாதங்கள் இவை நன்கு விளங்கின. எதைப் பற்றிச் சொன்னாலும் அது குறித்து என் கருத்துக்களையும் கேட்பார். நான் சொல்லி முடித்த பிறகு, அந்தக் கருத்தின்மீது அதன் நிறை, குறைகள் குறித்த விரிவான உரை நிகழும். அத்தகு உரைகளே என் வளர்ச்சிக்கு பெரும் அடிப்படையாய் விளங்கின. என்னைச் சிந்திக்க வைத்து வளர வைத்தவர் அவர். இப்போது நினைத்துப் பார்க்கும்போதுதான் அவருடைய பாடுகளும் அதன் வழி நான் பெற்ற பயன்களும் தெளிவாகத் தெரிகின்றன.

பைஞ்ஞீலிக் கல்வெட்டுகளில் சுந்தரபாண்டியன் சந்தி, இடைத்தூப சந்தி, கோதரண்டராமன் சந்தி, கலியுகராமன் சந்தி போன்ற மன்னர்களின் விருதுப்பெயர்களில் அமைந்த சந்திகள் பற்றிய குறிப்புகள் காணப்பட்டன. இவை போல் மன்னர் பெயர்களில் சந்தி வழிபாட்டுகளை அமைப்பது குறித்துப் பல கல்வெட்டுகள் தமிழ்நாடு முழுவதும் இருப்பது பின்னர் தெரியவந்தது. மலைமண்டலத்துக் குதிரைச் செட்டிகள், வாணிய நகரத்தார், சித்திரமேழிப் பெரிய நாட்டார் போன்ற வணிகர்கள், வணிகக் குழுக்கள் தொடர்பான செய்திகள் பலவற்றையும் இக்கோயில் கல்வெட்டுகள் வழி அறியமுடிந்தது. சித்திரமேழிப் பெரிய நாட்டார் பற்றி அறிந்துகொள்ள கல்வெட்டு அறிஞர் திரு. கே. ஜி. கிருஷ்ணனின் கட்டுரையைப் படிக்குமாறு அவர்தான் கூறினார். முதல் முறை அவ்வணிகக் குழுவைப் பற்றித் தெரியவந்தபோது வியந்தேன். பின்னாளில் அவ்வணிகக் குழுச் சார்ந்த பல கல்வெட்டுகளை நானே கண்டறியும் வாய்ப்பமைந்தபோது இறைவன் எனக்களித்த பேறு அது என மகிழ்ந்தேன்.

பைஞ்ஞீலி ஆய்வுகள் ஆடற்கலை பற்றிய அறிவை வளர்த்தன. கோபுர வாயிலில் அமைக்கப்பட்டிருந்த ஆடற் சிற்பத்தொகுதிகளை நானும் அவருமாக ஆராய்ந்தோம். என் முடிவுகளில் இருந்த நிறைகளையும் குறைகளையும் காரண காரியங்களோடு அவர் விளக்கியபோது ஆடற்கலையில் அவர் பெற்றிருந்த அறிவின் உச்சம் என்னை வியக்க வைத்தது. அவரிடமிருந்து எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. நிறையப் படிக்கவேண்டும் அப்போதுதான் அனைத்தைப் பற்றியும் பரவலான அறிவு பெறமுடியும் என்பது அவர் கொள்கை. எவ்வளவோ முயன்றும் படிக்கும் பழக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள என்னால் முடியவில்லை. அதற்குக் காரணமும் இருந்தது. பல நூல்களைப் படிப்பதைவிட அவரிடம் ஒரு மணிநேரம் பேசினால் போதும். நாம் எது பற்றிக் கேட்கிறோமோ அதைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் கால நிரலாக நமக்கு விளங்குமாறு எடுத்துச் சொல்வதில் அவருக்கு இணை அவர்தான். அவருக்குத் தெரியாத விஷயமாக இருந்தால், தெரியவில்லை என்று சொல்வதுடன், தேடிப் பார்த்துச் சொல்கிறேன் என்று கூறி நம்மையும் தேடச் செய்வார். இந்தத் தேடல்கள் பல நேரங்களில் பல அற்புதமான விஷயங்களை நான்அறியுமாறு செய்துள்ளன.

(வளரும்)
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.