http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 57

இதழ் 57
[ மார்ச் 24 - ஏப்ரல் 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

அழிவின் விளிம்பில் தொல்லோவியங்கள்
Killing - with a difference
திருமுன் நிற்கும் திருமலை
திரும்பிப்பார்க்கிறோம் - 29
Thirumeyyam - 4
கங்கையின் மறுவீட்டில் - 3
கழுகுமலை பயணக் கடிதம் - 2
அவர் - பகுதி 9
Silpi's Corner-09
தாமிர சாஸனம்
வடமொழிக் கல்வெட்டுக்கள் – 2
எரிகிறதடி நெஞ்சம்! எங்கே அவர்?
இதழ் எண். 57 > இலக்கியச் சுவை
வடமொழிக் கல்வெட்டுக்கள் – 2
க.சங்கரநாராயணன்
இரண்டாம் ஹரிஹரனின் காஞ்சீபுரக் கல்வெட்டு


கல்வெட்டு அமைந்துள்ள இடம்

காஞ்சீபுரத்தில் நடுநாயகமாக வீற்றிருக்கும் கொக்கின் கீழமர்ந்த கருங்குயிலாளான அன்னை காமாக்ஷியின் கோயிலில் இரண்டாம் பிராகார கோபுரச் சுவற்றில் இந்தக் கல்வெட்டு இடம் பெற்றுள்ளது.

கல்வெட்டின் நிலை

பொதுவாகவே விஜயநகர கல்வெட்டுக்கள் சோழக் கல்வெட்டுக்களைப் போலல்லாமல் ஆழம் குறைந்ததாகவே இருக்கும். இந்தக் கல்வெட்டைப் பொறுத்தவரை இதன் மீது சுண்ணாம்பு வேறு பூசப்பட்டிருப்பதால் பரமேச்வரனின் திரோதான கிருத்யத்தைப் போல இருந்தும் இல்லாமல் இருக்கிறதாய்த் தெரிகிறது.

கல்வெட்டின் காலமும் அரசனும்

கல்வெட்டின் வரிகள் ஸங்கேத முறையில் சக ஆண்டு 1315 ஐக் குறிப்பிடுகின்றன. ஆகவே இந்தக் கல்வெட்டின் காலம் கி.பி.1393 ஆகும். இதனை வெளியிட்ட அரசனின் பெயர் ஹரிஹரன் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இவன் விஜயநகர அரசர்களில் ஒருவனான இரண்டாம் ஹரிஹரன் ஆவான். இவன் மற்றைய கல்வெட்டுக்களில் இராஜவ்யாஸன் என்றும் இராஜவால்மீகி என்றும் குறிப்பிடப்படுவதால் நல்ல பண்டிதனாகத் திகழ்ந்ததை அறியமுடிகிறது. வேத-பாஷ்ய-ப்ரகாசகன் என்னும் விருதின் மூலம் இவன் காலத்தில் ஸாயணாசார்யாரால் வேதங்களுக்குப் பாஷ்யம்(உரை) எழுதப்பட்டது தெளிவாகிறது. இவன் கி.பி.1377 முதல் கி.பி.1404 வரை ஆண்டவன். இந்த கல்வெட்டு அவனுடைய 16 ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டதாகும்.

எழுத்தியல்

விஜயநகர கால கிரந்த எழுத்துக்களின் துவக்க நிலை என்பதனால் பின்னர் காணப்படுவது போல பெரிதும் சிறிதுமான எழுத்துக்கள் இல்லாமல் சற்றே சீரான எழுத்துக்களே காணப் படுகின்றன. குறிப்பாக श, न्ध, ख என்னும் எழுத்துக்கள் மிகவும் வளர்ச்சியுற்றுத் தற்காலத்துப் பயன்பாட்டை ஒத்துள்ளது. क என்னும் எழுத்து முழுவளர்ச்சியை எட்டவில்லை. தற்போதைய பயன்பாட்டில் உள்ள கீழ் வளைவிற்குப் பதிலாக கீழ்வரை இரு கோடுகள் உள்ளன.

பதிப்பு வரலாறு

இந்தக் கல்வெட்டு 1890 ஆம் ஆண்டறிக்கையின் 28 ஆம் எண்ணாக குறிப்பிடப் பட்டிருந்தது. அதன் பின்னர் தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி நான்கில் 352 ஆம் எண்ணாகப் பதிப்பிக்கப் பட்டது.

குறிப்புரை தரும் தகவல்கள்

இந்தக் கல்வெட்டிற்குக் குறிப்புரை ஏதும் இடம் பெறவில்லை.

கல்வெட்டு வரிகள்

(வரி 1) शक्त्यालोके शकाब्दे परिणमति शुभेश्श्री(*श्री)मुखा
(வரி 2) षाढमासे शुद्धे पक्षे दशम्यां रविसुतदिवसे मित्र
(வரி 3) भे जैत्रतेजाः।। काञ्च्यां कल्याणशोभी हरिहर
(வரி 4) नृपति(:) प्राणबन्धु(:) प्रजानां कामाक्ष्याश्श्रीविमान(नं) व्यतनुत
(வரி 5) सुक्र(*कृ)ताम्भोनिधिस्ताम्रबन्धम्।।
(* - இக்குறியிட்டவை என்னுடைய திருத்தங்கள்)

பொருள்
शक्त्यालोके शकाब्दे परिणमति शुभेश्श्री(*श्री)मुखाषाढमासे
शुद्धे पक्षे दशम्यां रविसुतदिवसे मित्रभे जैत्रतेजाः।
काञ्च्यां कल्याणशोभी हरिहरनृपति(:) प्राणबन्धु(:) प्रजाऩां
कामाक्ष्याश्श्रीविमान(˙) व्यतनुत सुक्र(*कृ)ताम्भोनिधिस्ताम्रबन्धम्।।
ஶக்த்யாலோகே சகாப்தே பரிணமதி ஶுபே ஸ்ரீமுகாஷாட-மாஸே
ஶுத்தே பக்ஷே தஶம்யாம் ரவி-ஸுத-திவஸே மித்ர-பே ஜைத்ர-தேஜா:
காஞ்ச்யாம் கல்யாண-சோபீ ஹரிஹர-ந்ருபதி: ப்ராணபந்து: ப்ரஜானாம்
காமாக்ஷ்யா: ஸ்ரீவிமானம் வ்யதனுத ஸுக்ருதாம்போ-நிதி: தாம்ரபந்தம்

வ்ருத்தம் (பாவகை) - ஸ்ரக்தரா (வரிக்கு 21 எழுத்துக்கள்)

சக்த்யாலோகம்(சக்தியாகிய விளக்கு) என்ற ஸங்கேதமுடைய சுபமாக மாறிவரும் சகாப்தத்தில் ஸ்ரீமுக வருடம் ஆஷாட (ஆடி) மாதம் சனிக்கிழமை, அனுஷ நக்ஷத்திரத்தில் வெல்லும் வலிமையுடையவனும் மங்களத்தால் திகழ்பவனும் மக்களுக்கு உயிரைப்போன்ற துணைவனும் அறங்களின் கடலுமான ஹரிஹரன் என்னும் மன்னன் காஞ்சியில் காமாக்ஷியின் ஸ்ரீவிமானத்தை செப்புக் கவசம் கொண்டு வேய்ந்தான்.

விளக்கம்

வடமொழியில் எண்களை ஸங்கேதமுறையில் குறிக்க சில வழிமுறைகளைக் கையாள்வர். இதற்கு ஸங்க்யா என்று பெயர். இவ்வாறு பூதஸங்க்யா, கடபயாதி ஸங்க்யா, ஸித்தமாத்ருகா, ஆர்யபடீயஸங்க்யா என்று பலவகைகள் காணப்படுகின்றன. இவற்றுள் கடபயாதிஸங்க்யாவும் பூதஸங்க்யாவும் மட்டுமே கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. கடபயாதி ஸங்க்யையும் ஸித்தமாத்ருகையும் தென்னிந்தியாவிற்கே உரியதாக முனைவர்.பர்னல் கருதுகிறார். (தென்னிந்திய ப்ராசீன லிபி பக்கம் 79). பொதுவாக எண்முறைகளில் எண்களை இடமிருந்து வலமாகக் கொள்வர். ஆகவே மீண்டும் ஸங்கேதத்திலிருந்து எண்களைக் கொண்டு வந்த பின்னர் அவற்றைத் தலைகீழாகத் திருப்பவேண்டும். தற்காலத்தில் இராணுவம் முதலான துறைகளில் பயன்படும் Encryption எனப்படும் தொழில்நுட்பம் இதனைப்போன்றதே.

பூதஸங்க்யா

எல்லோரும் அறிந்த பொருளைக் கொண்டு எண்களை உணர்த்தும் முறையை பூதஸங்க்யா என்பர். எடுத்துக்காட்டாக இரண்டு என்பதற்கு கண்கள், தம்பதி போன்ற சொற்களை உபயோகிப்பது.

கடபயாதிஸங்க்யா

வடமொழி எழுத்துக்களை எண்களாகப் பயன்படுத்தும் முறை. இம்முறையில் உயிரெழுத்துக்களுக்கு மதிப்பு கிடையாது. மெய்யெழுத்துக்களில் க, ட, ப, ய முதலான எழுத்துக்களுக்கு 1 என்று ஆரம்பித்து மதிப்பளிக்கப்படுவதால் கடபயாதி எண்முறை எனப்படுகிறது. தமிழிலும் இதேபோன்று ஔவையாரால் கூறப்பட்டதாகக் கூறப்படும் எட்டேகால் லட்சணமே போன்ற பயன்பாடுகள் இதனோடு ஒப்பிடத்தக்கவை. எண்களின் மதிப்புக்களாவன

1 2 3 4 5 6 7 8 9 0
क ख ग घ ङ च छ ज झ ञ
ट ठ ड ढ ण त थ द ध न
प फ ब भ म
य र ल व स श ष ह ळ

இப்படி நமக்கு வேண்டும் எண்களுக்கான எழுத்துக்களை வைத்து ஒரு சொல்லை உருவாக்க வேண்டும். அந்தச் சொல்லும் பயன்படுத்தப்போகும் சூழலுக்குப் பொருத்தமானதாக இருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக 2008 என்ற ஆண்டிற்கு ஸங்கேதச் சொல்லை உருவாக்க முதலில் இடமிருந்து வலமாக ஆக்கி பின்னர் பட்டியலிலிருந்து தகுந்த எழுத்துக்களைக் கொண்டு சொல்லை உருவாக்க வேண்டும். 8-க்கு ज என்னும் எழுத்தையும் 0-க்கு न என்னும் எழுத்தையும் 2-க்கு र என்னும் எழுத்தையும் பயன்படுத்தலாம். சொல்லில் உள்ள உயிர் எழுத்துக்களுக்கு மதிப்பில்லை. கூட்டெழுத்தானால் இறுதி எழுத்திற்கு மட்டுமே மதிப்பு. ஆகவே 8002 என்னும் எண்ணிற்கு जनिनक्रः(ஜனிநக்ர:) என்னும் ஸங்கேதச் சொல்லை உருவாக்கலாம். பிறவியாகிய முதலை என்பது இதற்குப் பொருள். இப்படி மேலுள்ள கல்வெட்டில் உள்ள ஸங்கேதச் சொல் शक्तयालोकः என்பதாகும். இந்தச் சொல்லில் श, क्त्या, लो, क என்று நான்கு எழுத்துக்கள் உள்ளன. உயிர் எழுத்துக்களை நீக்கிக் கூட்டெழுத்துக்களில் இறுதி எழுத்துக்களை மட்டும் எடுத்தால், श य ल क என்ற சொற்கள் கிடைக்கும். இதற்கான எண்களை எடுத்தால் 5 1 3 1 என்று கிடைக்கும். முன்னர் பார்த்தபடி எண்களைத் திருப்பினால் 1315 என்னும் ஆண்டு கிடைக்கும். இது சக ஆண்டு என்பதனால் இதனோடு 78-ஐக் கூட்டினால் கிறித்துவ ஆண்டு கிடைக்கும். ஆகவே இந்தக் கல்வெட்டின் காலம் கிபி 1393-94 என்றாகிறது. இங்கு ஸ்ரீமுக வருடம் ஆஷாடமாதம் (ஆடிமாதம்) வெட்டப்பெற்றிருப்பதால் 1393 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதன் காலம் எனக் கிடைக்கிறது.

குறிப்பு

1. திரு.கே.ஆர். வெங்கடராமன் அவர்கள் தமது “Devi Kamakshi in Kanchi – A short historical study” என்னும் நூலில் இந்தக் கல்வெட்டைக் குறிப்பிட்டு இரண்டாம் ஹரிஹரனே ஸ்ரீவிமானத்தையும் எடுப்பித்து செப்புக்கவசத்தையும் சார்த்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் வ்யதனுத என்னும் வினைச்சொல்லிற்கு பரப்பினான் என்னும் பொருளே பொருத்தமானது. ஸ்ரீவிமானத்தை எடுப்பித்துக் கவசத்தைப் பரப்பினான் என்று பொருள் கொள்ளத்தக்க சொற்கள் இல்லை.
2. தற்போது ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகளால் வேயப்பட்ட தங்கக் கவசமே ஸ்ரீவிமானத்தை அலங்கரிக்கிறது. இந்தக் கல்வெட்டு குறிப்பிடும் தாமிரகவசத்தைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

சில சிறப்புச் சொற்கள்

1. சுத்தபக்ஷம் – சுக்கிலபக்ஷத்தின் மறுபெயர்.
2. ரவிஸுததிவஸே - ரவி – கதிரவன், ஸுத – மகன்,
திவஸம் - நாள்
கதிரவன் மகனின் கிழமை – சனிக்கிழமை
3. மித்ரபே - மித்ரன் – மித்ரன் என்னும் பன்னிரு
ஆதித்யர்களில் ஒருவன், பம் – நக்ஷத்திரம்
மித்ரனின் நக்ஷத்ரமான அனுஷம்

இங்கு ப்ராணபந்து: ப்ரஜானாம் என்னும் ஒரு சொல் ஒரு அரசனுக்கு வேண்டிய அனைத்துக் குணங்களையும் ஒருமித்துத் தருவதாகக் காணலாம். மக்களுக்கு உயிரைப்போன்ற துணைவனாய் இருப்பவனே சிறந்த அரசன். இந்த ஒரு சொல் அரசனின் இலக்கணத்தை வரையறுப்பதாகக் கொள்ளலாம். புவியை வலிமையால் ஆள்வது பெரிதல்ல. மக்களின் மனத்தில் வீற்றிருப்பது அருஞ்செயல். அத்தகைய செயலை இந்தச் சொல் குறிப்பிடுகிறது.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.