http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 72

இதழ் 72
[ ஜூன் 16 - ஜூலை 15, 2010 ]


இந்த இதழில்..
In this Issue..

ஆயிரம் ஆக்கங்கள்
மெய்யத்தே பள்ளிகொண்டவரும் நின்றருளியவரும் - 1
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - இனிய பயணம்
நாகப்பட்டினம் வரலாற்று ஆர்வலர்கள் குழு
பங்கேற்பாளன் பார்வையில் செம்மொழி மாநாடு
விதுஷி வித்யா சங்கரின் இரு புத்தகங்கள் – ஒரு பார்வை
நலமிகு கார்த்திகையே!
இதழ் எண். 72 > இதரவை
பங்கேற்பாளன் பார்வையில் செம்மொழி மாநாடு
கோகுல் சேஷாத்ரி
தமிழகம் கோவை கொடிசியா வளாகத்தில் கடந்த 2010 - ஜுன் 23 முதல் 27 வரை தமிழ்நாட்டு அரசால் நடத்தி முடிக்கப்பட்டுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைப் பற்றிய ஊடகப் பரபரப்பும் விறுவிறுப்பும் அடங்கி அவிந்துள்ள இந்த வேளையில் சற்றே நிதானமாக - அந்த மாநாட்டில் பங்குபெற்ற ஒரு கட்டுரையாளன், பங்கேற்பாளன் என்கிற முறையில் - அங்கு நடைபெற்ற நிகழ்வுகளையும் தனிப்பட்ட அனுபவங்களையும் நிதானமாக உங்களுடன் அசைபோடும் உத்தேசத்திலிருக்கிறேன்.

அப்படியே கடிகாரத்தைத் வலமிருந்து இடமாகப் பத்திருபது முறை விறுவிறுவென்று சுழற்றிச் சுழற்றி 2010 ஜுன் 23ம் தேதிக்கு வந்து சேருங்கள். ம்ஹும். 23 கூட வேண்டாம். அன்றுதான் மாநாட்டின் துவக்க விழா. ஏராளமான வண்டிகளில் தொண்டர்களும் பொதுமக்களும் வந்து குவிந்த நாள். அன்று கோவையில் நுழைவதே சாத்தியப்படாது என்று உற்றாரும் சுற்றாரும் ஒரு சேர பயமுறுத்தியதால் துவக்கவிழாக் கொண்டாட்டங்களை சற்றே சிரமப்பட்டுப் புறக்கணித்து வியாழன் 24ம் தேதி காலை எனக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த ஹோட்டலுக்கு (விஜய் பாரடைஸ் - சாய்பாபா காலனி) நண்பர்கள் சீதாராமன் மற்றும் நீலன் (என்கிற விதுரனுடன்) வந்து சேர்ந்தேன். கோவையில் எதற்காக மாநாட்டை நடத்தவேண்டும்? வேண்டுமென்றால் தஞ்சைத் தமிழ்ப்பல்கலை வளாகத்தின் நூறு ஏக்கர் நிலப்பரப்பில் மாநாட்டை நடத்தி முடித்திருக்கலாமே? என்கிற கூக்குரலுக்கு என்னளவில் இருந்த கொஞ்ச நஞ்ச ஆதரவையும் கோவை மண்ணை மிதித்த மறுகணமே அவசரமாக வாபஸ் பெற்றேன். அட்டகாசமான பருவநிலை. அருமையான சாலைகள். அமைதியான வீடுகள். நகரத்தின் பின்னணியில் விரியும் உதகை மலை. மரியாதைக் குறைவாகப் பேசவே தெரியாத கொங்கு மக்கள் என்று மண்ணை மிதித்த மறுகணமே சொர்க்கம் தெரிந்தது.

விடுதியின் வாயிலில் மற்றொரு இன்ப அதிர்ச்சி. விடுதியில் பங்கேற்பாளர்களைக் கவனிக்க நியமிக்கப்பட்டிருந்த அரசாங்க அதிகாரிகள் எங்களை அன்புடன் வரவேற்றதோடு என்னுடைய அடையாள அட்டையையும் கையோடு வழங்கி விட்டார்கள். இந்த அடையாள அட்டை ஒரு முக்கியமான சீசேம் மந்திரம். இதனை வைத்துக்கொண்டுதான் மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்திற்குள் நுழையவே முடியும் என்றார்கள். என்னுடன் வந்திருந்த நண்பர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை. மாநாடு வளாகத்தில் வாங்கிக்கொள்ளலாம் என்றார்கள். பின்னால் மாநாடு வளாகத்தில் அந்த மந்திரத்தைப் பெறுவதற்காக அவர்கள் பட்ட பாடு தனிக்கதை.

குளித்துவிட்டு அருமையான பப்பே (Buffet) காலை உணவு. உணவை நிதானமாக ருசி பார்ப்பதற்குள் பேருந்து வந்துவிட்டது என்றார்கள். பேருந்தில் அமர்ந்தால்.. இந்தியாவில் இருக்கிறோமா? இங்கிலாந்தில் இருக்கிறோமா? என்று சந்தேகம் வந்துவிட்டது. அத்தனை அருமையான ஏசி பேருந்து. ஏறக்குறைய மிதந்தபடி சென்ற அந்தப் பேருந்து அடுத்த அரைமணி நேரத்தில் கொடிசியா வளாகத்திற்குள் நுழைந்தது.

பாருங்கள்! எத்தனை அருமையான ஏற்பாடுகள்! அரசும் அரசை நடத்துபவர்களும் மனது வைத்தால் நமது மண்ணில் எதுவும் சாத்தியம் என்பதற்கு இதைவிட சிறந்த சான்று தேவையா என்ன? என்று மனதாரப் புகழ்தேன். நண்பர் எனது உற்சாகத்தை இரசிக்கும் மனோநிலையில் இல்லை. தம்முடைய ஆய்வுக் கட்டுரையை மாநாட்டுக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்காத கடுப்பில்தான் அவர் இன்னமும் இருந்தார். கிடக்கிறது விடுங்கள்! இந்த மாநாடு குடந்தை நாகேஸ்வரன் கோயிலைப்பற்றிய அருமையானதொரு ஆய்வுக்கட்டுரையை இழந்துவிட்டது என்று நினைத்துக் கொள்ளுங்கள்! கட்டுரையைத் தேர்ந்தெடுக்கவில்லையென்றாலும் ஆய்வுச் சுருக்கம் அட்டகாசமாக அமைந்துவிட்டதனால்தானே பார்வையாளராகவாவது வருமாறு உங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பியுள்ளார்கள்? என்றெல்லாம் கூறி அவரைச் சமாதானம் செய்து வைக்க முயன்றேன். என் வாய்ச் ஜாலங்கள் அவரிடம் எடுபடவில்லை. உங்களுடைய கட்டுரையை மட்டும் எப்படித் தேர்ந்தெடுத்தார்கள்? என்று நான்கைந்துமுறை திரும்பத் திரும்பக் கேட்டு விட்டார். சரிதான். விட்டால் இவர் அடிமடியிலேயே கையை வைத்துவிடுவார் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

பேருந்திலிருந்து இறங்கி மாநாட்டுப் பந்தல்களையும் ஆய்வரங்க வளாகங்களையும் பார்வையிட்டோம். ஒரு புறம் பொதுமக்கள் அனைவரும் வந்து போகக்கூடிய வகையில் மிகப்பெரிய மாநாட்டுத் திடல். இங்கு நாள் முழுதும் பொது நிகழ்ச்சிகள் (இவைதான் பிரதானமாகத் தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பப்பட்டன). இன்னொரு புறம் ஆய்வரங்கம் மற்றும் இணைய மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகம். இரண்டுக்குமிடையில்தான் பேருந்து நிறுத்தம்.

நாங்கள் நுழையவேண்டிய கொடிசியா வளாகத்திற்குள் நுழைவதற்கு அடையாள அட்டை தேவைப்பட்டது. நண்பர்களிடம் அது இல்லை. என்ன செய்வதென்று யோசித்தோம். ஒரு கணம் இருபத்தோராம் நூற்றாண்டின் தமிழ்ப் பண்பாட்டைப் பின்பற்றி ‘நீ எப்படிப்போனால் எனக்கென்ன? என்னுடைய அட்டையை வைத்துக் கொண்டு நான் மட்டும் உள்ளே நுழைந்துகொள்கிறேனே?’ என்றொரு ஆபத்தான எண்ணம் வந்து போனது. அதனைச் செயல்படுத்தி முடிப்பதற்குள் ஆபத்பாந்தவராக வந்து சேர்ந்தார் தமிழ்ப்பல்கலை நண்பர் முனைவர் செல்வகுமார். உங்களுக்கு மட்டுமல்ல - பலருக்கும் அடையாள அட்டைப் பிரச்சனை உள்ளது. இந்தாருங்கள். இதனை வைத்துக்கொண்டு உள்ளே செல்லுங்கள்! என்று வேறொரு தற்காலிக அலிபாபா மந்திரத்தைக் கொடுத்தார். அதனை வைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தோம்.

வளாகத்திற்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே நண்பர் கமலிடமிருந்து போன். ‘ஆய்வரங்கத் துவக்கவிழா ஆரம்பமாகி விட்டது. தொல்காப்பியர் அரங்கிற்கு வந்து சேருங்கள்!’. வளாகத்தில் தொல்காப்பியர் அரங்கம்தான் மிகப்பெரியது. ஆகையால் அதனைக் கண்டுபிடிப்பதில் அதிக சிரமங்கள் இருக்கவில்லை.

அரங்கிற்கு அருகில் அடையாள அட்டை இல்லாதவர்கள் புதிய அட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். உள்ளே நுழைந்தால் - அட்டையில்லாத பெருமக்களின் வரிசை அனுமார் வாலாக நீண்டிருந்தது. அரைமணி நேரத்தை வீணாக்கியபின் அம்முயற்சி பாதியில் கைவிடப்பட்டது. இந்த இடைவெளியில் பொன்னியின் செல்வன் குழு நண்பர்கள் - சரித்திரப் புதின எழுத்தாளர் திரு. வி. திவாகரையும் சிங்கப்பூர் அன்பர் - ‘poetry in stone’ புகழ் திரு. விஜய் அவர்களையும் சந்தித்தேன். திவாகரை சென்ற வருட பொன்னியின் செல்வன் விழாவில் நேரில் சந்தித்திருந்தாலும் மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சியாகவே இருந்தது. பொன்னியின் செல்வன் குழுவின் மூல வழி நடத்துனர் SPS முதல்நாள் வரமாட்டார் என்கிற செய்தியும் தெரிவிக்கப்பட்டது. அவரது இருப்பின் இழப்பைக் கணிசமாக உணர்ந்தேன்.தொல்காப்பியர் அரங்கில்


தொல்காப்பியர் அரங்கில் நாங்கள் நுழையும்போது சில முக்கிய அறிஞர்கள் பேசி முடித்து விட்டிருந்தார்கள். பேராசிரியர் வா. செ. குழந்தைசாமி, மாண்புமிகு அமைச்சர் திரு. அன்பழகன், மாண்புமிகு முதல்வர் திரு. மு. கருணாநிதி ஆகியோரின் பேச்சை மட்டும்தான் கேட்க முடிந்தது. இப்பெருமக்களின் பேச்சைத் தற்போது இணையத்தில் வலையேற்றிவிட்டார்கள் (http://www.wctc2010.org).

துவக்கவிழா முடிந்துவிட்டதால் 10.30 மணி முதல் ஆய்வரங்க வளாகத்தில் பல்வேறு கட்டுரையாளர்கள் ஆய்வுக்கட்டுரை வாசிக்கப்போகிறார்கள் என்பதால் தொல்காப்பியர் அரங்கிலிருந்து வெளியேறி அதற்கு எதிரே அமைந்திருந்த ஆய்வரங்க வளாகத்தில் நுழைந்தோம். இந்த ஆய்வரங்க வளாகமென்பது இருபதுக்கும் மேற்பட்ட சிறு அரங்கங்களைக் கொண்டது. ஒவ்வொரு அரங்கிலும் மடிக்கணினி மற்றும் பெருந்திரை (laptop & projector). ஒவ்வொரு அரங்கிற்கும் பண்டைய தமிழ்ப் புலவர் பெருமக்களின் பெயர். திருவள்ளுவர் அரங்கம். ஔவை அரங்கம். பெருஞ்சித்திரனார் அரங்கம். மாங்குடி மருதனார் அரங்கம். கபிலர் அரங்கம். அம்மூவனார் அரங்கம். பரணர் அரங்கம். இளங்கோ அரங்கம் என்று. அரங்கங்களின் அமைப்பிலும் பின்னணியிலும் மாநாட்டு ஏற்பாட்டாளர்களின் மிகக் கடுமையான உழைப்பு தெள்ளத்தெளிவாகப் பரிமளித்தது. International Conference எனும் முழுத்தகுதிக்குமுடைய அரங்கமாய் ஆய்வரங்க வளாகம் திகழ்ந்தது. ஒவ்வொரு வளாகத்திலும் உதவிக்குப் பத்து பதினைந்து கோவைக் கல்லூரி மாணவர்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். மாநாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் இவர்கள் உழைத்த உழைப்பிற்கு வார்த்தைகளால் நன்றி சொல்வது கடினம். வளாகத்தின் நடுப்புறத்தில் அமைந்திருந்த டீ, காபி, சிற்றுண்டிகள் கொடுக்குமிடத்தில் இயல்பாக மனம் இலயித்தாலும் அதனை அடக்கி ஆய்வில் செலுத்தினேன்.ஆய்வரங்கிற்கு வெளியே நண்பர்கள் கமல் மற்றும் நீலனுடன்


மாநாட்டில் முதன் முதலில் நான் கேட்ட கட்டுரை திரு. மணிமாறனின் பழந்தமிழர் ஆயுதமான வளரி பற்றிய கட்டுரை. வளரி மீது எனக்குத் தனி அபிமானம் உண்டு. என் முதல் நாவலான இராஜகேசரியில் முதல் அத்தியாயத்தில் தப்பிக்க முயலும் ஒற்றனொருவனைத் தீயவர்கள் வளரியால்தான் வீழ்த்துவார்கள். அத்தனை மகத்துவம் வாய்ந்த ஆயுதம் அது! (அடடா! எப்பேற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மகத்துவம்!). மணிமாறனைத் தொடர்ந்து வர்மக்கலை பற்றியதொரு கட்டுரை. இக்கட்டுரைத் தலைப்பு என்னைக் கவரக் காரணமும் என்னுடைய சமீபத்திய நாவலான சேரர் கோட்டைதான் (போதும் உந்தன் புராணம் என்று நீங்கள் அலுத்துக்கொள்வது காதில் விழுகிறது). ஆனால் கட்டுரையாளர் அத்தனை தூரம் ஆழமாக வர்மக்கலைக்குள் செல்லவில்லை என்பது கட்டுரை துவங்கிய மறு நிமிடமே புரிந்தது. வர்மக்கலைக்கும் தமிழகத்திற்கும் இருக்கும் தொடர்பைப் பற்றி ஆய்வாளர் எஸ். இராமச்சந்திரன் எழுதிய அருமையான கட்டுரை ஞாபகத்திற்கு வந்தது.

எஸ். இராமச்சந்திரனைத் தொடர்ந்து வேறொரு இராமச்சந்திரன் நினைவிற்கு வந்தார். நாகப்பட்டினம் வரலாற்று ஆர்வலர் குழு என்கிற பெயரில் ஓரு அருமையான மையத்தை நடத்திவரும் இந்த நண்பரின் வரலாற்று நேயமும் நாகப்பட்டினக் காதலும் மிகப்பெரியன. தொலைபேசியில் பலமுறை பேசியிருந்தாலும் நேரில் சந்தித்ததில்லை. அவரும் மாநாட்டிற்கு வந்திருப்பதாக நண்பர் நீலன் (என்கிற விதுரன்) தெரிவித்திருந்ததால் சிற்றரங்கை விட்டு வெளியில் வந்து அவரைச் சந்தித்தேன். சராசரிக்கும் அதிகமான உயரம். உடல் முழுவதும் எந்நேரமும் பொங்கிக் கொண்டிருக்கும் உற்சாகம். வரலாறு பற்றிப் பேசத் துவங்கிவிட்டால் துடிப்புடன் முன்னகரும் ஆர்வம். தன்னைவிடப் பெரியவர்கள் சின்னவர்கள் அனைவரையுமே அண்ணன் என்றழைக்கும் மரியாதை. இராமச்சந்திரனின் ஆளுமை என்னை முழுமையாக வசீகரித்து ஆட்கொண்டது. அவரிடம் நான் இரண்டு வருடங்களுக்கு முன் எழுதிய ஆய்வுக்கட்டுரையான New Perspectives on Nagappattinam எனும் கட்டுரையை வாசிக்கக் கொடுத்தேன்.

அவரைத் தொடர்ந்து நான் இதுவரை நேரில் சந்தித்திராத என் அருமைத்தம்பி - காஞ்சிப் பல்கலை முனைவர் சங்கரநாராயணன் - அவர்களையும் சந்தித்தேன். வரலாறு கொடுத்த கொடைகளில் இவரது இனிய உறவும் ஒன்று. வடமொழியில் விற்பன்னரான இவர் ‘வடமொழியில் பெரியபுராணம்’ எனும் தலைப்பில் கட்டுரை வாசிக்க இருப்பதாகத் தெரிவித்தார். என்ன! வடமொழியில் பெரியபுராணமா? என்று வியந்தேன். இருக்கிறதாம்! சேக்கிழாரைப் பின்பற்றி திருத்தொண்டர் புராணம் வடமொழியிலும் பாடப்பட்டதாம். அதனைப் பற்றிய கட்டுரையே என்னுடைய கட்டுரை என்றார். தொடர்ந்து தாம் புலவர் திரு. மகாதேவனுடன் உருவாக்கி வரும் சோழர் செப்பேடுகள் எனும் புத்தகத்தைப் பற்றியும் பல செய்திகளைக் கூறினார்.

மதியம் 2.00 மணிக்கு முனைவர் திரு. குடவாயில் பாலசுப்பிரமணியத்தின் கட்டுரை அமைந்திருந்ததால் அதற்குள் பகல் போஜனத்தை முடித்துக்கொண்டு வரலாமென்று கிளம்பினோம். வளாகத்தின் மத்தியில் உணவுக்கென்றே பிரத்தேக அரங்கம். ஆய்வாளர்களில் பலர் ‘செவிக்கு உணவு’ இடுவதை சற்றே மறந்து வயிற்றுக்கு உணவிடுவதில் ஈடுபட்டிருந்தார்கள். நாங்களும் ஜோதியில் கலந்தோம். அருமையான உணவு. ஆனால் அமர இடமில்லை. அதனால் நின்றும் இருந்தும் கிடந்தும் அந்தப் பேரின்பத்தைத் துய்த்தோம். பாதி உணவில் பக்கத்தில் ஒரு வெள்ளை வேட்டி தெரிந்தது. யாரென்று பார்த்தால் - மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் ஏ. வேலு! ஏற்பாடுகளை மேற்பார்வையிட நேரில் வந்திருந்தார் போலும். அமைச்சர்களின் நேரடிக் கண்காணிப்பு இருந்ததால்தான் மாநாடு இத்தனை சிறப்பாக நடந்ததோ என்னவோ!

மாநாட்டில் பங்குகொள்ள அதிகாலையிலேயே திருச்சியிலிருந்து கிளம்பிவிட்ட முனைவர்கள் திரு. கலைக்கோவனும் நளினியும் இன்னமும் வந்து சேரவில்லை என்று கவலை ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலில் அவர்கள் மாட்டிக்கொண்டார்கள். வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகலாம் என்றறிந்தோம்.

உணவை முடித்துக்கொண்டு நேராகக் குடவாயில் அவர்களின் கட்டுரையைக் கேட்க ஔவை அரங்கிற்கு விரைந்தேன். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ஒரு கோட்டை இன்றைக்கும் நல்நிலையில் புதுக்கோட்டையில் இருக்கிறது என்றார் அவர்.
பவர் பாயிண்ட் உதவியுடன் நன்றாகவே அமைந்திருந்தது கட்டுரை. (http://www.wctc2010.org தளத்தில் முதல்நாள் ஆய்வரங்க நிகழ்வுகளில் ஔவை அரங்க நிகழ்வில் இவரது கட்டுரையைக் காணலாம். கட்டுரை முடிந்தபின் ஒரு மகானுபாவர் எழுந்து நின்று அந்தக் கட்டுரை தொடர்பாக ஓரிரண்டு வெட்டிக் கேள்விகள் கேட்பதையும் கூடப் பார்க்கலாம். அவரை இன்னாரென்று அடையாளம் காண்பவர்களுக்கு ஆயிரம் பொன் பரிசு.).

குடவாயிலின் கட்டுரை நிகழ்ந்துகொண்டிருக்கும்போதே முனைவர் கலைக்கோவன் நண்பகல் உணவை முடித்துக்கொண்டு அரங்கிற்கு வந்து விட்டார். குடவாயில் அவர்களின் கட்டுரை முடிந்ததும் டீ காபி அருந்தியபடி கலைக்கோவனுடன் சிறிதுநேரம் அரட்டை அடிக்கத் தலைப்பட்டோம். அவருடன் இரண்டு நிமிடம் பேசினாலும் அதில் பயனுள்ள தகவல்கள் இரண்டாயிரம் ஓளிந்திருக்கும். ஆகவே இந்தப் பேச்சை அர்த்தமுள்ள அரட்டை என்றுதான் கொள்ளவேண்டும். பேச்சு அங்கு சுற்றி இங்கு சுற்றி Muttaraiya to Chola Transitional Temples எனும் தலைப்பில் வந்து நின்றது. இத்தலைப்பில் கேள்வி கேட்கப்போய் அவரிடம் வகையாக அன்று மாட்டிக் கொண்டு அவஸ்தையுற்றேன். இறுதியில் நண்பர் நீலன் (என்கிற விதுரன்) உதவியுடன் தப்பித்து வெளியே வருவதற்குள் உன்பாடு என்பாடு ஆகிவிட்டது. விடுதிக்குச் சென்று இரவு படுக்கும் வரைகூட கலைக்கோவனின் கேள்விகள் மனதில் பல்வேறு சிந்தனைகளை எழுப்பிய வண்ணம் இருந்தன.

இந்த அர்த்தமுள்ள அரட்டையில் மனமிழந்து விட்டதால் நான் தவறவிட்ட முக்கியக் கட்டுரைகள் நண்பர்கள் முனைவர் ஜெயக்குமாரின் நாகப்பட்டினம் தொல்லியல் அகழ்வாய்வு மற்றும் முனைவர் செல்வகுமாரின் பிள்ளையார்ப்பட்டி அகழ்வாய்வு. மறுநாள் ஜெயக்குமாரை உணவரங்கில் சந்தித்தபோது - உங்களை நேற்று அரங்கில் காணவில்லையே? என்று ஞாபகமாக வினவினார். இருத்தேனே? ஒரு மாணவனின் இலட்சணத்துடன் பவ்யமாக ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தேன்! என்று கூசாமல் பொய் கூறினேன். இவ்விருவரையும் தவிரக் குமரி மாவட்ட ஆய்வாளர் செந்தீ நடராஜனையும் பார்க்க வேண்டுமென்று நினைத்துக் கடைசிவரை அது கைகூடாமல் போயிற்று.

எத்தனையோ முயன்றும் வியாழக்கிழமை முனைவர் இராஜவேலுவையும் சந்திக்கவே முடியவில்லை. உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் குழுவில் முக்கியப் பங்காற்றி இம்மாநாட்டிற்காக இரவு பகலாக உழைத்தவர்களுள் அவரும் ஒருவர். மறுநாளாவது நேரில் சந்தித்து அவரது உழைப்பைப் பாராட்டவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

வெள்ளிக்கிழமை தொல்காப்பியர் அரங்கில் திரு. ஐராவதம் அவர்களின் பேச்சு. அதனைத் தொடர்ந்து நான் சென்ற முதல் அரங்கு ஔவை அரங்கு. பல சீரிய பேச்சாளர்கள் இருந்தும் அவைத்தலைவர் அவர்களைப் பேசவிடாமல் தாமே பேசிக்கொண்டிருந்ததால் அங்கிருந்து மரத்துக்கு மரம் தாவும் குரங்கைப்போல் அரங்கிற்கு அரங்கம் தாவிக்கொண்டிருந்தேன். ‘பல மரம் பார்க்கும் தச்சன் இறுதியில் ஒரு மரத்தையும் வெட்ட மாட்டான்’ என்று நண்பர் சீதாராமன் உகுத்த பொன்மொழிக்கேற்ப அன்று முழுதுமே எந்தக் கட்டுரையையும் உருப்படியாகக் கேட்காமல் நிம்மதியின்றிக் கழித்தேன். மாமூலனார் அரங்கிர் முனைவர் பத்மாவதியின் வைகரை ஆட்டம் பற்றிய பொழிவு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இசை மற்றும் ஆடல் பற்றிய இப்பொழிவின் இறுதியில் பல கேள்விகள். மதுரை நண்பர் திரு. இராஜா முகம்மது உச்சஸ்தாயியில் பாடியே காட்டிவிட்டார்.

நப்பூதனார் அரங்கிர் சிற்பக்கலை பற்றிய பொழிவுகளுக்கு ஆர்வத்துடன் சென்றேன். ‘சிற்பங்கள் பேசும் சிலப்பதிகாரக் கலைக்கூடம்’ என்கிற ஆய்வுத் தலைப்பில் ஒரு அன்பர் சிற்பங்களையும் சிலப்பதிகாரத்தையும் அம்போ என்று விட்டுவிட்டுப் பூம்புகாரில் சிற்பப்பூங்கா அமைத்த கலைஞரின் சீரிய திறமையை 25 நிமிடங்களுக்கும் மேலாக எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். ஏதோ கலைஞருக்கு மரியாதை செய்வதாய் நினைத்து இவரைப் போன்ற ஒரு சிலர் தாம் நின்றுகொண்டிருக்கும் மேடை ஒரு ஆய்வரங்கம் - அரசியல் அரங்கம் அல்ல - என்பதையும் மறந்து நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தார்கள். இவரது பொழிவை - அங்கிருந்திருந்தால் - முதல்வரே கூட இரசித்திருக்க மாட்டார் என்றுதான் தோன்றுகிறது.

சனிக்கிழமை காலை ஔவை அரங்கில் நான் பெரிதும் மதித்து உளமாறப் போற்றும் பிரம்மாண்டமான வரலாற்றறிஞரின் பொழிவு. அதாவது அடியேனின் சொற்பொழிவு ! எல்லாவற்றையும் கடைசி நிமிடத்திலேயே தயாரித்து வழங்கிப் பழக்கப்பட்டுவிட்டதால் முதல் நாளிரவு விடியற்காலை ஓரு மணி வரை அமர்ந்து பவர் பாயிண்ட் அமர்வைத் தயார் செய்தேன். என்னுடைய பொழிவு நடக்கும் அதே நேரத்தில்தான் நண்பர் கமலின் பொழிவும் நிகழ இருந்தது. அதனால் என்னால் அவரது பொழிவில் கலந்துகொள்ள இயலவில்லை. (பதில் சொல்லமுடியாத கடுமையான கேள்விகளிடமிருந்து இவ்வாறாக அவர் அன்று தப்பித்தார்).ஔவை அரங்கில் கட்டுரை வாசிப்பு


9.30 மணிக்கே அரங்கிற்குச் சென்று கணிப்பொறியைத் தயார் செய்துவிட்டேன். அதே அமர்வில் கட்டுரை வாசிக்க இருந்த மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி முதல்வர் திரு. குணசேகரனுக்கும் கணிப்பொறி அமர்வுத் தயாரிப்பில் சில உதவிகள் செய்தேன். அமர்வின் தலைவரான தமிழ்பல்கலைக்கழகத்தின் சிற்பக்கலைத் தலைவர் திரு. த. சந்திரகுமார் அரங்கிற்கு 15 நிமிடங்கள் முன்னரே வந்து ஏற்பாடுகளைச் சரிபார்த்து விட்டுப் போனார். பொழிவு எவ்வாறு நடக்குமோ? பேச்சு தங்குதடையில்லாமல் வருமோ? சிக்கலான கேள்விகளை எவரேனும் கேட்டு வைப்பார்களோ? என்று ஒரு பொறுப்பான கட்டுரையாளர் மனதில் இயல்பாகவே எழும் கேள்விகள் சிறிதும் எழாமல் முற்றிலும் கவலையின்றி பொழிவை எதிர்பார்த்தேன்.

10.30 மணிக்குச் சரியாக அமர்வுத் தலைவர் அரங்கைத் துவக்கிவிட்டார். என்னுடன் கட்டுரை வாசிக்க இருந்த முனைவர்கள் குணசேகரன் மற்றும் ஜம்புலிங்கம் ஆகியோர் பற்றிய அறிமுகத்தை வழங்கிய தலைவர் என் பெயரைக் குறிப்பிட்டு - இவரைப் பற்றி அதிகம் தெரியாது. ஆகவே அவரைப் பற்றிய அறிமுகத்தை அவரே கட்டுரையின் துவக்கத்தில் வழங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். நல்லவேளை - நமது நாவல்களை அவர் இன்னமும் படிக்கவில்லை போலிருக்கிறது. படித்திருந்தால் அமர்விலிருந்தே விலக்கியிருப்பாரோ என்னவோ என்று தோன்றியது.

முதல் இருவரும் கட்டுரை வாசித்து முடித்தபின் நான் எழுந்து நிற்க - எழுந்தது பாருங்கள் ஒரு கரகோஷம்! ஆய்வரங்க வளாகமே ஐந்து நிமிடம் ஆடிப்போய் விட்டது. அவைத்தலைவர் அனுமதித்ததனால் மூன்று நிமிடங்கள் வரலாறு டாட் காம் பற்றியும் அடியேனுடைய ஜகதலப்பிரதாபங்கள் பற்றியும் எடுத்துரைத்து - அதாவது கூசாமல் பொய்யுரைத்துக் - கட்டுரையைத் துவக்கினேன். அவ்வளவுதான்! அதுவரை தூங்கலாமா வேண்டாமா என்று இரண்டுங்கெட்டான் யோசனையில் இருந்தவர்கள்கூட சட்டென்று முடிவெடுத்துக் கும்பகருணனின் கருணைக்கு இலக்கானார்கள். இவ்வாறு அனைவரையும் உறக்கத்திலாழ்த்தி ஓய்வளித்ததால் அவைத்தலைவரின் பிரத்யேகப் பாராட்டுதல்களுக்கும் உள்ளானேன்.

என் அமர்வை வீடியோ எடுக்கிறேன் பேர்வழி என்று நண்பர் சீதாராமன் அரங்கம் முழுவதையும் சுற்றி வந்தார். இறுதியில் அவர் எடுத்த வீடியோவைப் போட்டுப் பார்த்தால் அதில் தோன்றிய அனைவருமே - நான் உட்பட - டாஸ்மார்க் கடைக்குச் சென்றுவந்த அன்பர்களைப்போல் ஏகத் தள்ளாட்டத்திலிருந்தனர். அதாவது அவர் நடந்துகொண்டே வீடியோ எடுத்ததினால், பதிவான அனைத்துக் காட்சிகளுமே 360 கோணத்தில் தள்ளாட்டத்துடன் அமைந்துவிட்டன. அவர் பேரில் எனக்கு ஏற்பட்ட கோபம் சொல்லுந்தரமன்று... நல்லவேளையாக மாநாட்டு அமைப்பாளர்கள் உடனடியாகப் பொழிவுகளை அரங்கேற்றி விட்டதால் அவரது தள்ளாட்ட வீடீயோவைப் பார்க்கும் துன்பத்திலிருந்து வரலாறு டாட் காம் வாசகர்கள் தப்பித்தார்கள்

அடியேன் நிகழ்த்திய வீரப்பொழிவு முழுவதையும் உறக்கம் வராத வியாதியினால் தவிப்பவர்கள் கேட்டு மகிழ்வார்களாக...

1. பகுதி - 1

2. பகுதி - 2

3. பகுதி - 3

4. பகுதி - 4

5. பகுதி - 5

என்னுடைய பொழிவின் இறுதியில் கேட்கப்பட்ட சிக்கலான கேள்விகளுக்கு விடை தெரியாமல் நான் திருதிருவென்று முழிக்க, பரிதாபப்பட்ட அவைத்தலைவர் பல கேள்விகளுக்கும் தாமே விடையளித்து என்னைக் காப்பாற்றினார். இந்த உதவியை என்றும் நினைத்திருப்பேன்.மருதனார் அரங்கில் திரு. கலைக்கோவனின் கட்டுரை முடிந்தபின் அமர்வுத் தலைவர் திரு. தேனுகாவுடன்..


என் அமர்விலிருந்து தப்பித்து முனைவர் கலைக்கோவன் அமர்விற்குச் செல்வதற்குள் அவரது கட்டுரை பாதி முடிந்துவிட்டிருந்தது. அவரது பொழிவைக்கேட்க விரும்பும் அன்பர்கள் 26ம் தேதி அன்று மாங்குடி மருதன் அவைக்குச் செல்வார்களாக. (இவரது பொழிவை இணையத்தில் ஏனோ கண்டுபிடிக்க முடியவில்லை). நல்லவேளேயாக முனைவர் நளினியின் வெற்றுத்தளங்கள் பற்றிய பொழிவை முழுவதுமாகக் கேட்டேன்.

நான் தவறவிட்ட கமலின் பொழிவு - பெருஞ்சித்திரனார் அரங்கில்.. அனைத்துப் பகுதிகளும்கமலின் கட்டுரை


இன்னும் மாநாடு பற்றிச் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. அருமையான பண்பாட்டுக் கண்காட்சி - சோழர் செப்பேடுகளை நேரில் கண்டமை - புத்தகக் கண்காட்சியில் பழனியப்பா பிரதர்ஸில் என் நாவல்களை கண்ட மகிழ்ச்சி - முனைவர் இராஜவேலுவின் அரும்பணியை மறந்து மாநாட்டு மலர் கொடுக்கவில்லை என்பதற்காக ஒரு சிலர் அவரைக் கெட்ட வார்த்தைகளில் அர்ச்சித்த கொடுமை - மலேசிய எழுத்தாளர்களின் உற்சாகமான பங்கு - சைவ சித்தாந்தத்தில் முதல் மதிப்பெண் வாங்கிய இஸ்லாமியப் பேராசிரியரை சந்தித்தமை - இணைய மாநாட்டின் நிகழ்வுகள்..

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு ஒரு மிகப்பெரிய இயக்கத்தின் வெளிப்பாடு. அதன் நோக்கங்கள் நிறைவேறினவா இல்லையா என்று ஊடகங்களில் பலரும் தத்தம் விருப்பு வெறுப்புக்களுக்கேற்ப எண்ணங்களை வாரி வீசிக்கொள்ளட்டும். என்னளவில் அது நான் ஏற்கனவே உணர்ந்து பெருமிதம் கொள்ளும் அகவயமான ஒரு சில பண்பாட்டுக் கூறுகளின் புறவயமான - பிரம்மாண்டமான - செறிவான - வெளிப்பாடு.

இதெல்லாம் தேவைதானா? என்று கேட்டால்...

மாறிவரும் உலக மயமாக்கச் சூழலில்.. பண்பாட்டு விழுமியங்கள் பற்றிய பார்வை இளைஞர்களைப் புரட்டிப் போடப்படும் சூழலில்..

அவசியம் தேவை என்றே சொல்வேன்.


பின்குறிப்புக்கள்;-

1. நீலன் என்கிற விதுரன் உண்மையில் யார் என்று அறியவிரும்பும் நேயர்கள் சுய விலாசமிட்ட அஞ்சல் உறையுடன் முழு ஸ்டாம்ப் ஒட்டி எனக்குக் கடிதமெழுதினால் பிரத்யேகமாகப் பதில் அளிக்கிறேன்.
2. குடவாயில் கட்டுரை முடிவில் கேள்வி கேட்பவன் அடியேன்தான்.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.