http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 84
இதழ் 84 [ டிசம்பர் 16, 2011 - ஜனவரி 15, 2012 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
மாடக்கோயில்கள்
கும்பகோணத்திற்குத் தென்கிழக்கில் குடவாயில் செல்லும் வழியில் திருச்சேறைக்கு அருகில் அமைந்துள்ளது நாலூர்.1 இவ்வூரிலுள்ள மாடக்கோயில் இறைவன் கல்வெட்டுகளில் சம்பரீசுவரத்து மகாதேவர், சம்பரீசுவரத்துப் பெருமானடிகள் என்றழைக்கப்பட்டாலும் தற்போது பலாசவனநாதர் என்றே அறியப்படுகிறார். கிழக்கு நோக்கியுள்ள கோபுரமற்ற வாயிலுள் நுழைந்ததும் வெற்றுத்தளமும் அதன் மேல் அமைந்துள்ள மாடக்கோயிலும் காட்சியாகின்றன.2 வெற்றுத்தளம் 1. 76 மீ. உயரமுள்ள வெற்றுத்தளம் முறையான தாங்குதளம் இன்றிச் சுவர், உத்திரம், வலபி, கபோதத்துடன் காரைக் கட்டுமானமாய் அமைந்துள்ளது. கபோதத்திற்கு மேல் காட்டப் பட்டுள்ள கைப்பிடிச்சுவர் வெற்றுத்தளத்தின் மேல் அமர்ந்துள்ள இறைவன் கோயிலுக்கான சுற்று மதிலாகும். விமானம் அமைந்துள்ள மேற்றளத்தை அடையத் தென்கிழக்கில் ஒன்பது படிகள் அமைந்துள்ளன. படியமைப்பின் தென்புறம் மடைப் பள்ளியும் அதற்கு முன்னால் இறைத்திருமேனியற்ற திருமுன்னும் உள்ளன. இத்திருமுன்னில் முதலாய்வின்போது திருமாலின் சிற்பம் இடம்பெற்றிருந்தது.3 மண்டபங்கள் விமானம், முகமண்டபம், பெருமண்டபம், முன்மண்டபம் என அமைந்துள்ள கோயில் வளாகத்தின் முன்னால் பலித்தளமும் சிறிய அளவிலான நந்திமண்டபமும் உள்ளன. வண்டிக் கூடு கூரை பெற்றுள்ள முன்மண்டபத்தின் தென்வாயில்கள் இரண்டும் எண்முக அரைத்தூண்கள் மீதமர்ந்த வளைவுகளுடன், சுவரின் மேல் கூரையுறுப்புகளும் ஆழமற்ற கூடுகளுட னான கபோதமும் பெற்றுள்ளன. தென்வாயில் போலவே அமைந்துள்ள வடவாயில் வழி வடக்குச்சுற்றை அடையலாம். அம்மன் கோயில் வடக்குச் சுற்றில் ஒருதள வேசரச் செங்கல் கட்டுமானமாய் முறையற்ற தாங்குதளம், வேதிக்கண்டம், நான்முக அரைத் தூண்கள் தழுவிய சுவர், கூரையுறுப்புகள் கொண்டமைந்துள்ள அம்மன் விமானத்தின் முப்புறக் கோட்டங்களும் வெறுமையாக உள்ளன. முன்னுள்ள முகமண்டபம் விமானக் கட்டமைப்பை ஒத்துள்ளது. கருவறையில் சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, தோள், கை வளைகள், பட்டாடை கொண்டுள்ள இறைவி பெரியநாயகியாய்ப் பின்கைகளில் அக்கமாலையும் மலர்மொட்டும் ஏந்தி, வல முன் கையால் அருள் செய்கிறார். இட முன் கை கடியவலம்பிதமாக உள்ளது. பெருமண்டபம் முன்மண்டபத்தின் கிழக்கிலுள்ள பெருமண்டபம் பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, உறுப்பு வேறுபாடற்ற நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், தரங்க வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் கொண்டுள்ளது. அதன் வண்டிக்கூடு கூரையை முச்சதுர, இருகட்டுத் தூண்கள் வெட்டுப் போதிகைகள் துணையுடன் தாங்குகின்றன. பெரு மண்டப வாயில் நிலைகளில் இராஜகேசரியின் 24ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் மதுரை கொண்ட பரகேசரியின் 22ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் வெட்டப்பட்டுள்ளன. முகமண்டபம், கருவறை பெருமண்டபத்தை அடுத்துள்ள முகமண்டப வாயிலருகே தெற்கில் பிள்ளையாரும் வடக்கில் முருகனும் உள்ளனர். வெறுமையாக உள்ள முகமண்டபம் வெளிப்புறத்தே விமானத்தை ஒத்த கட்டமைப்புப் பெற்றுள்ளது. கருவறை வாயிலின் வடநிலையில் உள்ள முதல் பராந்தகரின் 38ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு களஆய்வின்போது கண்டறியப்பட்டது. இறைவன் சதுர ஆவுடையாரும் வேசரபாணமுமாய் இலிங்கத்திருமேனியராய்ப் பலாசவனநாதர் என்ற பெயருடன் எழுந்தருளியுள்ளார். தூங்கானை மாடமாக உள்ள கருவறைக் கூரை தடுப்புகளின்றிப் பொள்ளலாக அமைந்துள்ளது. விமானம் 10. 80 மீ. சுற்றளவுடைய தூய ஒருதளத் தூங்கானைமாடமாக அமைந்துள்ள விமானம் ஜகதி, கண்டம், பட்டிகை, பெருங்கண்டம், பெருவாஜனம், மேற்கம்பு எனும் உறுப்புகள் அமைந்த வளைமுகத் துணைத்தளம், நான்முக அரைத்தூண்கள் தழுவிய வளைமுகமான சுவர், வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், ஆழமற்ற கூடுகளுடனான கபோதம், மேலே வேதிகை பெற்று அமைந்துள்ளது. கிரீவ சுவர் தூண்களற்று உத்திரம், வலபி கொண்டுள்ளது. தெற்கு, மேற்கு, வடக்கு கிரீவ கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. சிகரத்தின் கிழக்கு முகத்தில் கீர்த்திமுக வளைவும் அதன் உட்குழிவில், நிற்கும் யானையின் முன்தோற்றமும் காட்டப்பட்டுள்ளன. விமானத்தின் தென்கோட்டத்தில் வல முன் கையில் சின்முத்திரை காட்டி, இட முன் கையில் சுவடி ஏந்திச் சடைப் பாரத்துடன் வீராசனத்தில் உள்ள ஆலமர்அண்ணலின் பின் கைகளில் அக்கமாலையும் தீச்சுடரும். வலச்செவியில் மகரகுண்டலம். இடச்செவியில் பனையோலைக் குண்டலம். இருபுறமும் முனிவர்கள். சுற்றின் தென்மேற்கு மூலை மண்டபத்தில் பிள்ளையாரும் வடக்கு மண்டபத்தில் சண்டேசுவரரும் இடம் பெற்றுள்ளனர். கல்வெட்டுகள் இக்கோயிலிலிருந்து படியெடுக்கப்பட்ட மூன்று கல்வெட்டுகளுள் ஒன்று முதலாம் ஆதித்தராகக் கொள்ளத்தக்க இராஜ கேசரிவர்மரின் 24ம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது.4 அதில் சேற்றூர்க் கூற்றத்திருந்த பிரமதேயமாக நாலூர் குறிக்கப்பட்டுள்ளது. நாலூர் ஊரவையார் வண்ணக்கனார் அம்பலம் என்ற இடத்தில் கூடி வடசாத்தங்குடியான களரஞ்சேந்த சதுர்வேதிமங்கலத்திலிருந்த 1,150 கமுகு மரங்களுக்கான நிலவரியாகத் தட்டிறையே கொள்வதாகவும் அவ்வரியையும் நிலம் அளந்து அதற்கேற்பக் கொள்வதாகவும் முடிவெடுத்தனர். சபை பணிக்க இந்த ஆவணத்தை எழுதியவராக ஆயிரத்து நானூற்று நாற்பதின்மன் மங்கலாதித்தனாகிய நூற்றிருபதின் காடன் குறிக்கப்படுகிறார். மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மரான முதலாம் பராந்தகரின் 22ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு5 சம்பரீசுவரம் என்றழைக்கப்பட்ட இக்கோயிலில் விளக்கெரிக்க 90 ஆடுகளை ஒருவர் கொடையாகத் தந்ததைக் குறிப்பிடுகிறது. புதிதாகக் கண்டறியப்பட்ட முதற் பராந்தகரின் 38ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு6 முக்கரையைச் சேர்ந்த வியாபாரி நக்கன் ஆதிதின் (ஆதித்தன்?) இத்திருக்கோயிலில் நாள்தோறும் உழக்கு நெய் கொண்டு நந்தாவிளக்கொன்று ஏற்றுவதற்காகக் கோயிலாரிடம் 92 ஆடுகள் கொடையளித்த செய்தியைப் பகிர்ந்துகொள்கிறது. நாலூர்க் கோயிலுக்குப் பக்கத்திலுள்ள நாலூர்த் திருமயானம் கோயிலில் உள்ள கல்வெட்டுகளுள் சில7 நாலூர் மாடக் கோயிலைச் சுட்டுகின்றன. முதற் பராந்தகரின் நான்காம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு, தென்கரைத் திருநறையூர் நாட்டைச் சேர்ந்த அக்கிரமக்கோட்டச் சதுர்வேதி மங்கலத்து ஊரவையார் நாலூர்க் கோயிலுக்கு நிலமொன்றைக் கொடையளித்த தகவலைத் தருகிறது. முதலாம் இராஜராஜரின் 24ம் ஆட்சியாண்டில் வெட்டப் பட்டுள்ள கல்வெட்டு சம்பரீசுவரத்து மகாதேவர் திருக்கோயிலின் முன் இருந்த இராஜராஜன் கூடத்தில் நாலூர் ஊரவை கூடிய தகவலைப் பகிர்ந்துகொள்கிறது. இக்கூடம் கண்டராதித்தர் பெயரைக் கொண்டிருந்தமை முதலாம் இராஜராஜரின் 23ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டால் தெரியவருகிறது.8 மன்னர் பெயரற்ற கல்வெட்டொன்றும் சம்பரீசுவரத்துப் பெருமானடிகளைக் குறிப்பிடுகிறது. வானவன்மாதேவிச் சதுர்வேதிமங்கலமாகவும் நாலூர் அறியப்பட்டமையை விக்கிரமசோழரின் மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டின் வழி அறியமுடிகிறது.9 இவ்வூரில் அகத்தீசுவரம் என்ற பெயரில் ஒரு சிவன் கோயிலும் திருநாராயண விண்ணகரம் என்ற பெயரில் ஒரு பெருமாள் கோயிலும் விளங்கியதாகக் கல்வெட்டுகள் கண்காட்டுகின்றன.10 பதிகம் பெறாத இக்கோயிலை சம்பந்தர் பாடியிருப்பதாக இரண்டு நூல்கள் பிழைபடக் குறிக்கின்றன.11 சம்பந்தர் நாலூர் மயானத்தைப் பாடியுள்ளாரே தவிர, நாலூரை அன்று. அவர் பதிகத்தின் எந்த அடியிலும் நாலூர் மாடக்கோயில் குறிக்கப்படவில்லை. பதிகத்தின் முதல் பாடலிலேயே, 'பாலூரும் மலைப்பாம்பும் பணிமதியும் மத்தமும் மேலூரும் செஞ்சடையான் வெண்ணூல்சேர் மார்பினான் நாலூர் மயானத்து நம்பான்ற னடிநினைந்து மாலூரும் சிந்தையர்பால் வந்தூரா மறுபிறப்பே' என்று தான் பாட எடுத்துக்கொண்ட கோயிலின் பெயரைத் தெளிவுபட மொழிந்துள்ளார்.12 கடவூர், கடவூர் மயானம் எனும் இரண்டு கோயில்கள் தரங்கம்பாடிக்கு அருகிலுள்ளன. கடவூர் மயானம் கடவூரில் இருந்து, நாலூரிலிருந்து நாலூர் மயானம் இருப்பது போல ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சம்பந்தர் கடவூரைத் தனியாகவும் கடவூர் மயானத்தைத் தனியாகவும் பாடியுள்ளார். இரண்டு கோயில்களுக்கும் தனித்தனியே பதிகங்கள் உள்ளன. 'மங்கைமணந்த மார்பர் மழுவாள்வலனொன் றேந்திக் கங்கைசடையிற் கரந்தார் கடவூர்மயானம் அமர்ந்தார்' என்று கடவூர் மயானத்தையும்13 'எரிதரு வார்சடை யானும்வெள் ளையெருது ஏறியும் புரிதரு மாமலர்க் கொன்றைமா லைபுனைந்து ஏத்தவே கரிதரு காலனைச் சாடினா னும்கட வூர்தனுள்' என்று கடவூரையும்14 சம்பந்தர் தனித்தனியே பெயர் சுட்டிப் பாடியிருப்பது கவனத்திற் கொள்ளத்தக்கது. இரண்டு கோயில்களை இணைத்து ஒரே பதிகத்தில் பாட நேர்ந்த காலத்து அப்பதிகத்தில் அவ்விரு கோயில்களின் பெயர்களையும் சேர்க்கவும் சம்பந்தர் தவறியதில்லை. திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும் இணைந்த பதிகம் அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.15 'நாறுசாந்து இளமுலை அரிவையோடு ஒருபகல் அமர்ந்த பிரான் வீறுசேர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள் விக்குடியே' இவ்வாறு சம்பந்தர் தகுந்த எடுத்துக்காட்டுகள் தந்திருந்த போதும் நாலூர் மயானத்தைப் பற்றி மட்டுமே அவர் பாடிய பாடலை நாலூருக்கும் உரியது எனக் கொள்வது பிழையாகும். ஆறைவடதளியைப் பற்றி அப்பர் பாடியிருப்பதையும் இது போலவே, பழையாறைக் கோயிலையும் வடதளிக்கோயிலையும் அவர் இணைத்துப் பாடியிருப்பதாக, 'சிவப்பதிகள் வரலாறு' பிழைபடக் குறித்துள்ளது. தருமபுர ஆதீன வெளியீடான இரண்டாம் திருமுறையில் தலங்களின் வரலாற்றுக் குறிப்புக் கூறுமிடத்தில், திருநாலூர் மயானம் என்று தலைப்பிட்டு, இங்குள்ள இறைவன் பெயர் பலாசவனநாதர், இறைவி பெயர் பெரியநாயகி எனக் குறித்துள்ளனர்.16 இது பிழையாகும். நாலூர் இறைவனே பலாசவனநாதர் என்றும் அவ்வூர் இறைவியே பெரியநாயகி என்றும் அழைக்கப்பெறுகின்றனர். நாலூர் மயானத்து இறை இணை ஞானபுரீசுவரர், ஞானாம்பிகை எனும் திருப்பெயர்களைக் கொண்டுள்ளனர். குறிப்புகள் 1. இக்கோயில் பற்றிய முதல் கட்டுரை, 'நாலூர் மாடக்கோயில்' என்ற தலைப்பில் அமுத சுரபி, ஆகஸ்டு, 1987ம் இதழில் வெளியானது. 2. ஆய்வுநாட்கள் 12. 2. 1983, 26. 1. 2001, 30. 8. 2008, 20. 3. 2010. உடனிருந்து உதவிய அறங்காவலர் திரு. இர. வாசுதேவன் நன்றிக்குரியவர். 3. இத்திருமால் சிற்பம் கருவறையின் மேற்குக் கோட்டத்தில் இருந்ததாகவும் திருப்பணிகளின்போது அகற்றப்பட்டது மீண்டும் அங்கு இடப்பெறாத நிலையில் இங்கு நிறுத்தப்பட்டதாகவும் முதல் ஆய்வின்போது சந்தித்த சிவாச்சாரியார் தகவலளித்தார். 4. SII 13 : 309. 5. ARE 1910: 309. 6. The Hindu ,12. 7. 2010. 7. ARE 1910: 322, 324, 327. 8. ARE 1910: 326. 9. ARE 1910: 317. 10. ARE 1910: 314, 326. 11. சிவப்பதிகள் வரலாறு, ப. 83; எஸ். ஆர். பாலசுப்ரமணியம், முற்காலச் சோழர் கலையும் சிற்பமும், ப. 179. 12. திருமுறை 2: ப. 205. 13. திருமுறை 2: ப. 378. 14. திருமுறை 3: ப. 41. 15. திருமுறை 3: ப. 425. 16. திருமுறை 2: ப. 111. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |