http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 84

இதழ் 84
[ டிசம்பர் 16, 2011 - ஜனவரி 15, 2012 ]


இந்த இதழில்..
In this Issue..

தமிழில் தந்தால் என்ன குறைந்தா போய்விடும்?
திரும்பிப்பார்க்கிறோம் - 31
சேக்கிழாரும் அவர் காலமும் - 2
பொய்யாமை அன்ன புகழில்லை - 2
புத்தகத் தெருக்களில் - ஆனைக்கா கதாநாயகனும் நானும் - 2
நாலூர் மாடக்கோயில்
கண்டறியாதன கண்டேன்
இதழ் எண். 84 > இதரவை
கண்டறியாதன கண்டேன்
மா.இரா. அரசு


முன்குறிப்பு

வரலாறு.காம் மின்னிதழ் மற்றும் பிற இதழ்களில் வாசகர்கள் பல்வேறு நூல்கள் மற்றும் முயற்சிகளின் பின்னணிகளை வாசித்திருக்கலாம். இக்கட்டுரையும் அத்தகைய ஒன்றே. இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் வீரகேசரி இதழில் வ.உ.சி எழுதிவந்த 'திலக மகரிஷி' என்ற தொடரைச் சில ஆண்டுகளுக்கு முன்பு நூலாகப் பதிப்பித்தபோது முனைவர் மா.ரா.அரசு அவர்கள் எழுதிய முன்னுரைதான் இது. இதுபோன்ற நூல்கள் உருவான வரலாற்றைப் பதிவு செய்வதை மிக முக்கியமானதாக வரலாறு.காம் கருதுகிறது. கடின உழைப்பால் ஒரு நூல் உருவானது என்ற ஒருவரிச் செய்திக்குப் பின்னால் எத்தகைய உழைப்பு அடங்கியிருக்கிறது, எத்தனைபேர் இதற்காகப் பாடுபட்டார்கள் போன்ற செய்திகள் வாசகர்களுக்கு இருக்கும் நூலாக்கத்தைப் பற்றிய கண்ணோட்டத்தை விரிவுபடுத்தும் என்ற நோக்கிலேயே இதை வெளியிடுகிறோம்.

இனி, முனைவர் மா.ரா.அரசு அவர்களின் முன்னுரை தொடர்கிறது.




வ.உ.சிதம்பரனார் ஆய்வுச் சிந்தனை என்னுள் முகிழ்த்த நாள்முதல் மனம் திட்டமிடுதலில் ஆழ்ந்தது. அவருடைய தமிழ்ப்பணிகள் பற்றிய ஆய்வினை விரிவாக நிகழ்த்தவேண்டும் என்ற எண்ணம் நிலைத்தது. வ.உ.சியின் படைப்புகள் அனைத்தையும் தேடித் தொகுத்தல் முதல் பணியாகக் கொள்ளப்பெற்றது.

வ.உ.சியின் படைப்புகளுள் பெயரளவில் மட்டுமே அறியப்பெற்றவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று, அவர் எழுதிய திலகரைப்பற்றிய கட்டுரைத்தொடர். இலங்கை இதழான வீரகேசரியில் 'பாரதஜோதி ஸ்ரீதிலக மகரிஷியின் வரலாறு' என்ற தலைப்பில் வெளியானது அந்தத்தொடர்.

திலகர் வரலாற்றை வ.உ.சி தொடராக எழுதியுள்ளார் என்பதும், அத்தொடர் 'வீரகேசரி'யில் தொடர்ந்து வெளிவந்துள்ளது என்பதும் ஒரு செவிவழிச் செய்தியாக வ.உ.சி ஆய்வு வட்டத்தில் உலவி வந்தது. அதுவரையில் அதைப் பார்த்ததாகவோ, அதுபற்றிய பிற விவரங்களை அறிந்ததாகவோ ஆய்வாளர் எவரும் எதையும் பதிவு செய்யவில்லை.

வ.உ.சியின் படைப்புகளை ஆய்வு செய்யும் விருப்பத்தோடு இருந்த எனக்கு அதைக் கண்டறியும் ஆர்வம் எழுந்தது. அதுவரையில் எவருடைய பார்வைக்கும் கிடைக்காத வ.உ.சி எழுதிய திலகர் வரலாற்றை முயன்று கண்டறிந்து பதிவு செய்யவேண்டும் என்ற வேட்கை நிறைந்தது.

தேடல் முயற்சி தொடங்கியது. என் பணிகள் அனைத்திலும் உடனிருந்து உதவும் இனிய நண்பர் திருமிகு செ.கி.கோவிந்தராசுவிடம் செய்தியைப் பகிர்ந்து கொண்டேன். அவர் அப்போது இலங்கைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்.

இலங்கையில் அவருக்கு நண்பர்கள் இருந்தனர். அவர்களிடம் நேரிலேயே விவரம் கூறி, வ.உ.சியின் வீரகேசரி கட்டுரைகளைப் பெற முயன்றார். பழைய வீரகேசரி இதழ்களைப் பெறுவது அவர்கள் நினைத்தது போன்று எளிதாக இல்லை. என் - எங்கள் முதல் முயற்சி பயனளிக்கவில்லை.

காரைக்குடி அருகில் உள்ள கோட்டையூரில் மிகப்பெரியதும் அரியதுமான நூலகம் ஒன்றை உருவாக்கி, ஆய்வாளர் பலருக்கும் பயன்படுமாறு நடத்தி வந்தவர் திருமிகு ரோஜா முத்தையா. என்னுடைய வ.உ.சி ஆய்விற்கும் இதழியல் தேடல்களுக்கும் பெருமளவில் துணைநின்ற பெருந்தகை அவர். திலக மகரிஷியின் வரலாற்றைத் தேடும் முயற்சியிலும் எனக்கு உதவ முன்வந்தார். வீரகேசரி இதழ் தொடங்கப்பெற்ற காலத்தில் அவ்விதழோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்தார் அப்போது காரைக்குடியில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மூலம் வீரகேசரியின் தொடக்க ஆண்டுகளுக்கு உரிய இதழ்களைப் பெற்றுத் தருவதற்குப் பெரிதும் முயன்றார். ஆனால், அந்த முயற்சியும் ஈடேறவில்லை. எண்பதுகளின் முற்பகுதியில் இந்த முயற்சிகள் நடந்தன.

எண்ணியதை அடைய இயலவில்லையே என்ற கவலையும் வருத்தமும் நெஞ்சில் நிலைத்தன என்றாலும், முயற்சி தொடர்ந்தது. என்னுடைய இயலாமையைக் கண் மருத்துவரும் தொல்லியல் அறிஞருமான என் அண்ணன் இரா. கலைக்கோவனிடம் பகிர்ந்து கொண்டேன். 'கவலைப்பட வேண்டியதில்லை; தொடர்ந்து தேடினால் எப்படியும் கிடைக்கும். இலங்கையில் பலரை அறிந்த என் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் மூலம் முயன்றால் பெற இயலும் என்று நம்புகிறேன்' என்று கூறி, அவருடைய நண்பரிடம் என்னை ஆற்றுப்படுத்தினார். நான் சென்று அவரைக் காணும் முன்பாகவே தொலைபேசியில் அவரிடம் அனைத்து விவரங்களையும் கூறி, எப்படியும் பெற்றுத் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நான், வ.உ.சியின் கட்டுரைத் தொடர் பற்றி அவரிடம் பேசினேன்; என்னிடமிருந்த அது தொடர்பான - தேடுவதற்கு உதவும் குறிப்புகளை அவரிடம் கொடுத்தேன். பெரும்பாலும் கிடைக்கும் என்று அந்நண்பர் நம்பிக்கை ஊட்டினார்.

காலம் நெகிழ்ந்தது; ஆண்டுகள் சில கரைந்தன. 1998ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒருநாள் அந்த நண்பர் என் இல்லம் வந்தார். தன்னிடம் இருந்த காகிதக் கட்டை என்னிடம் தந்து பிரித்துப் பார்க்கச் சொன்னார். அவர் சொன்னதைச் செய்தேன். அதனுள் வ.உ.சி இருந்தார் - வ.உ.சியின் திலக மகரிஷி தொடரின் சில பகுதிகள் இருந்தன. வியப்பும் மலைப்பும் என்னை ஆட்கொண்டன. செய்வதறியாத நிலை. என்னை மறந்தேன். நெடிய கனவின் ஒரு துளி நனவாகக் கண்முன்னே.... பேச்சு வரவில்லை; அவர்தான் பேசினார். 'எஞ்சியவற்றையும் தேடி எடுத்துவிடலாம்; உங்கள் ஆய்வில் பதிவு செய்து விடுவோம்' என்றார்.

வீரகேசரி இதழில் பத்து வாரங்கள் வெளிவந்த திலகமகரிஷி தொடரின் பக்கங்கள் என் கரங்களில் படபடத்தன. என் மனமும்கூட அப்படித்தான் இருந்தது. அரிய வரலாற்று ஆவணம்; கிடைத்தற்கரிய தொடரின் ஒருபகுதி. எஞ்சியதையும் பெற்று ஆய்வில் வெளிப்படுத்த வேண்டும் என்ற பேரவா என்னுள் முழுமையாக நிறைந்தது.

2000ம் ஆண்டின் பிற்பகுதியில் ஒருநாள், கையில் காகிதக்கற்றையோடு மீண்டும் அந்த நண்பர் என் முன்னே தோன்றினார். இம்முறை ஏழு வாரங்களுக்கு உரிய இதழ்ப் பக்கங்கள் கிடைத்தன.

"பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு இடையே இவற்றை நண்பர்கள் தேடியும் இவ்வளவுதான் பெறமுடிந்தது. காலம் கனிந்தால் விடுபட்ட பகுதிகளையும் பெற முயலலாம், அதுவரையில் பொறுத்திருப்பது தவிர, வேறு வழியில்லை" என்றார் நண்பர். தலைப்பை மட்டுமே அறிந்திருந்த எனக்கு, வ.உ.சியின் திலகமகரிஷி தொடரின் பதினேழு வாரங்களுக்கான நகலைப் பெற்றுத்தந்த அந்த நண்பரை எப்படிப் பாராட்டுவது? எப்படி அவருக்கு நன்றி சொல்வது? தெரியவில்லை. எந்தவிதமான விளம்பரத்தையும் விரும்பாத அந்த மதிப்பிற்குரிய நண்பரின் பெயர் திருமிகு தேவமணி ரஃபேல். மிகச்சிறந்த ஒளிப்படக் கலைஞரும் கலை ஆர்வலருமான அவர் தமிழகத்துக் கோயில்களின் கலை உன்னதங்களைத் துல்லியமான கோணங்களில் ஒளிப்படங்களாகத் தொகுத்து உயரிய - மேன்மையான தொகுப்பாக வெளியிட்டுள்ளார். மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற அத்தொகுப்பு அவருடைய உழைப்பை வரலாற்றில் பதிவு செய்யவல்லது.

எனக்குக் கிடைத்த இதழ்கள் பற்றிய விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

1933 : 28 மே, 11 ஜூன், 2 ஜூலை, 16 ஜூலை, 30 ஜூலை, 24 செப், 8 அக், 12 நவ
1934 : 11 மார்ச், 6 மே, 3 ஜுன், 1 ஜூலை, 15 ஜூலை, 22 ஜூலை, 5 ஆக, 14 அக்

1933ல் எட்டு வாரங்களுக்கு உரிய பகுதிகளும் 1934ல் ஒன்பது வாரங்களுக்கு உரிய பகுதிகளும் கிடைத்துள்ளன.

திலகரின் பிறப்பு முதல் 1919ல் இலண்டன் சென்று அங்குப் பல்வேறு பணிகளில் தம்மை அவர் ஈடுபடுத்திக் கொண்டது வரையிலான செய்திகள் அடங்கிய பகுதிகள் இங்கு இடம்பெறுகின்றன.

ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு உரிய கட்டுரைப் பகுதிகளே கிடைக்காமல் போயிருக்கக்கூடும். 1-ஆக-1920ல் திலகர் காலமாகிறார். ஏறக்குறைய ஓராண்டுக்குரிய திலகர் வாழ்க்கைச் செய்திகளே விடுபட்டிருக்கலாம்.

'வ.உ.சிதம்பரனாரின் தமிழ்ப் பணிகள்' என்ற தலைப்பில் ஜூன் 2002ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்காக அளிக்கப்பெற்ற என்னுடைய ஆய்வேட்டில் வ.உ.சி எழுதிய - அதுவரையில் பெயரளவில் மட்டுமே அறியப்பெற்றிருந்த திலகர் வரலாற்றுக் கட்டுரைத் தொடர் பற்றிய விரிவான செய்திகள் முதன்முறையாக உரிய சான்றுகளுடன் என்னால் பதிவு செய்யப்பட்டன. 'வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள்' என்ற தலைப்பில் ஏறக்குறைய இருபது பக்கங்களில் (பக். 75 - பக். 95) அந்த ஆய்வு அமைந்தது. ஆய்வேட்டின் இறுதியில், திலகமகரிஷியின் வீரகேசரி இதழின் இருபக்கங்களின் நகல்கள் (28 மே 1933, 11 மார்ச் 1934) பின்னிணைப்பாகத் தரப்பெற்றுள்ளன.

சாகித்திய அகாதெமிக்காக - இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் வ.உ.சிதம்பரனார் பற்றி எழுத நேர்ந்தபோது, 'வ.உ.சிதம்பரனார்' என்ற தலைப்பில் அமைந்த அந்த நூலில் பக். 39 முதல் 47 வரையில் திலகமகரிஷி பற்றிய செய்திகள் இடம்பெற்றன. அந்நூல் 2005ல் வெளிவந்தது.

தற்போது, வ.உ.சி எழுதிய திலகர் வரலாறு (எனக்குக் கிடைத்த வரையில் - பதினேழு வாரங்களுக்கு உரிய பகுதிகள் மட்டும்) நூலாக வெளிவருகின்றது.

ஓட்டத்துக்கு இடையே தடைகளா அன்றித் தடைகளுக்கு இடையே ஓட்டமா என்று அறிய இயலாத வாழ்க்கைச் சூழலில் காலம் அனுமதிக்கும்போது மட்டுமே மனதுக்கு உகந்த இதுபோன்ற பணிகளை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. 2002லும் 2005லும் ஆய்வு அடிப்படையில் ஓரளவு அறிமுகம் செய்யப்பெற்ற வ.உ.சியின் திலகமகரிஷி கிடைத்த வரையில் முழுமையான நூலாக இன்று வெளிவருகிறது.

இந்த நூல் மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில் வ.உ.சியின் திலகமகரிஷி (17 வாரங்கள் வெளிவந்தவை) இடம்பெற்றுள்ளது. பகுதி இரண்டில் 2002ல் என்னுடைய முனைவர் பட்ட ஆய்வேட்டில் இடம்பெற்றிருந்த திலகமகரிஷி நூல் பற்றிய ஆய்வின் ஒரு பகுதி அமைந்துள்ளது. இறுதியாக வீரகேசரியில் வெளிவந்த திலகமகரிஷியின் நகல்படிகள் முழுமையாகத் தரப்பெற்றுள்ளன.

இரண்டாம் பகுதியில் அமைந்துள்ள திலகமகரிஷி பற்றிய ஆய்வு, வாழ்க்கை வரலாறு எழுதுவதில் வ.உ.சிக்கு இருந்த ஆற்றல், வரலாற்று உண்மைகளைத் துல்லியமாகத் தரும் நேர்த்தி, தம்முடைய சமகால வரலாற்றைப் பதிவு செய்வதில் இருந்த ஈடுபாடு, தாம் குருவாகப் போற்றிய திலகரின் வாழ்க்கை வரலாற்றை முறையாக வரலாற்றுக் குறிப்புகளோடு பிழையில்லாமல் தரவேண்டும் என்ற வரலாற்றுணர்வு ஆகியவற்றைப் புலப்படுத்துகிறது. அத்துடன், வ.உ.சியின் தமிழ்நடையையும், தமிழ் ஆளுமையையும் வெளிப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது.

திருமிகு தேவமணி ரஃபேல் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்ததோடு, தொடர்ந்து அவரைத் தொடர்புகொண்டு, தூண்டி, வீரகேசரி இதழின் நகல்படிகளை எனக்குப் பெற்றுத்தந்தவர் என் அண்ணன் மருத்துவர் இரா.கலைக்கோவன். அவருடைய முழு ஒத்துழைப்பில்தான் திலகமகரிஷி நூல்வடிவம் பெற்றுள்ளது. கட்டுரைத் தொடரின் படிகளைப் பெற்றுத் தந்ததோடு நூலாக்கத்திலும் துணை நின்ற அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி உரியது.

யாரைப் பார்த்தார்? எப்படி முயன்றார்? எத்தனை நாள்கள் திட்டமிட்டார்? என்ன செலவு செய்தார்? எதுபற்றியும் தெரியாது! இலங்கைக்குத் தம் சொந்தப் பணிக்காகச் சென்ற போதெல்லாம் மறவாது இதற்காகவும் முயன்றவர். இயன்ற வரையில் பெற்றுத் தந்த பிறகும்கூட, கைம்மாறு எதையும் எதிர்பாராதவர். 'கொடுத்துப் பழகிய நெஞ்சம்; தமிழ் ஆய்வுக்குத் தம்முடைய அன்பான பங்களிப்பாக இதைக் கருதிய பேருள்ளம் கொண்டவர்.

செய்யும் தொழில் வணிகம் என்றாலும், கலையே - கலைத்தேடலே வாழ்வாகக் கொண்டவர் - திருமிகு தேவமணி ரஃபேல். அவருக்கு என்ன சொல்லி என் நன்றியைப் புலப்படுத்துவது? தெரியவில்லை. என்றென்றும் அவர் என் நினைவில் இருப்பார்.

இந்நூலை விரைவில் வெளியிட வேண்டும் என்று தொடர்ந்து பல ஆண்டுகளாக என்னை வற்புறுத்தித் தூண்டியவர் திருமிகு பெ.சு.மணி. அவர் நன்றிக்குரியவர்; என்றும் மறக்க இயலாதவர். இந்நூலைக் கொண்டுவரும் முயற்சியில் பள்ளிப்பணி, இல்லப்பணி இவற்றுக்கிடையே இயன்றது அனைத்தும் செய்து உதவிய என் இல்லத்தரசி திருமதி திரிபுரசுந்தரிக்கு என்றென்றும் கடப்பாடுடையேன்.

நூலாக்கத்திற்குப் பெரிதும் உதவிய சீதாலட்சுமி இராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர், முனைவர் மு.நளினி சிறந்த ஆற்றலாளர். அவருடைய மெய்ப்புத் திருத்தம் இந்நூலைப் பிழையின்றிக் கொணரத் துணைநின்றது. அவருக்கும் கணினி அச்சுச் செய்தளித்த முத்துக் கணினியக உரிமையாளர் முனைவர் கி. ஜெயக்குமாருக்கும், இந்நூலைச் சிறந்த முறையில் அச்சிட்டு வெளிக்கொணர்ந்திருக்கும் 'ஆர்ஜி அச்சகம்' உரிமையாளர் திரு. ஞானசேகரனுக்கும் என் உழுவல் நன்றி உரியது.

'பாரத ஜோதி ஸ்ரீதிலக மகரிஷியின் வரலாறு' என்பது வ.உ.சி தந்த தலைப்பு. நீளம் கருதி அது இந்நூலில் 'திலகமகரிஷி' என்று சுருக்கப்பெற்றுள்ளது. வ.உ.சி தந்த தலைப்பு நூலின் முகப்புப் பக்கத்தில் மட்டும் அடைப்புக் குறிக்குள் தரப்பெற்றுள்ளது.

வ.உ.சியின் கட்டுரைகள் நீண்ட பத்திகளாக அமைந்துள்ளன. எளிமை கருதி அவை சிறுசிறு பத்திகளாகத் தரப்பெற்றுள்ளன.

கால இடைவெளிகளில் பல்வேறு இதழ்களில் வெளிவந்திருந்த வ.உ.சியின் கட்டுரைகளைத் தொகுத்து, 1989ல் வெளியிடும் வாய்ப்பைக் காலம் அளித்தது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது (2009) வ.உ.சியின் 'திலகமகரிஷி'யின் வரலாற்றை நூல் வடிவில் கொண்டுவரும் அரிய வாய்ப்பைக் காலம் எனக்கு வழங்கியுள்ளது. மனம் நிறைந்துள்ளது.

தன்னை மறந்து, தன் நாமம் கெட்டு, நாட்டுக்குழைத்தலே முதன்மைப் பணியென எண்ணி வாழ்ந்தவரான வ.உ.சிதம்பரனாரின் அரிதாய படைப்பு ஒன்றை முதன்முறையாக அச்சில் பதிவுசெய்வதை அணிலின் முயற்சியாகக் கருதுகிறேன்.

மா.ரா.அரசு

5-டிசம்பர்-2009
சென்னை.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.