![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 94
![]() இதழ் 94 [ ஏப்ரல் 2013 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
நூல் - மாமல்லபுரம் குடைவரைகள்
ஆசிரியர் - டாக்டர் மு.நளினி / டாக்டர் இரா.கலைக்கோவன் பதிப்பகம் - சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை - 600078. (+91-44-65383000, +91-97890-72478) விலை - ரூ.250/= (புத்தகத்தைப் பெற விழைவோர் புத்தகத் தொகையுடன் அஞ்சல் செலவிற்கென ரூபாய் 50 சேர்த்துக் காசோலை (Cheque) அல்லது வரைவோலையை (DD) மையத்தின் பெயரில் எடுத்து மைய முகவரிக்கு (டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், சி-87, பத்தாம் குறுக்குத் தெரு, தில்லைநகர் (மேற்கு) திருச்சிராப்பள்ளி - 620017) அனுப்பவும். காசோலைகள் எனில் வங்கிக் கழிவிற்கென ரூ.20 சேர்த்து அனுப்பவும்.) மாமல்லபுரத்தைப் பற்றிப் பல நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. கடற்கரைக் கோயில்கள் முதல் பாண்டவர் இரதங்கள் ஈறாகப் பல கட்டுமானங்களை மையப்படுத்திச் சுற்றுலாக் கையேடு, வரலாற்றாய்வு நூல்கள், Coffee table books எனப் பல வகையான நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சென்னைக்கு மிக அருகில் இருப்பதால் இவ்விடம் சுற்றுலா மையமாகப் புகழ் பெற்றிருப்பதோடு, இந்நூல்கள் சென்னையிலுள்ள வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்களால் புரக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை போன்ற ஒரு மேலோட்டமான நூலாக இல்லாமல், மாமல்லபுரத்தில் இருக்கும் குடைவரைகள் பதினைந்தையும் பற்றிய தரவுகளைத் துல்லியமாகப் பதிவு செய்து ஒப்பிட்டிருக்கிறது ஒரு வரலாற்றாய்வு நூல். பல்லவர், சோழர், பாண்டியர்களால் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட குடைவரைகள், ஒற்றைக்கல் தளிகள், கட்டுமானத் தளிகள் ஆகியன காலப்போக்கில் மெல்ல அழிந்து வருகின்றன. பத்தாண்டுகளுக்கு முன்னர் நாங்கள் தொடங்கிய வரலாற்றாய்வுப் பயணத்தின் ஆரம்பத்தில் நாங்கள் கண்ட பல கட்டுமானங்கள் இப்போது உருமாறியிருப்பதைக் காணும்போது நெஞ்சம் வருந்துகிறது. இதே கட்டுமானத்தைப் பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு வரலாற்றாய்வாளர் ஆய்வுக்குட்படுத்தியிருந்தால் வந்திருக்கும் முடிவுக்கும் இப்போது ஆய்வுக்குட்படுத்தினால் வரும் முடிவுக்கும் நிச்சயம் வேறுபாடுகள் இருக்கும். இப்படிக் காலப்போக்கில் அழிந்து வரும் வரலாற்றுச் சின்னங்களை அவை நன்றாக இருக்கும்போதே யாராவது ஆவணப்படுத்தி வைத்தால்தான் அவை அடுத்த தலைமுறைக்கும் பயன் விளைவிக்கும் அல்லவா? வரலாற்றுச் சின்னங்களை ஆவணப்படுத்துதல் என்பது ஒவ்வொரு சின்னத்தின் தற்போதைய நிலை, அளவுகள், இருக்கும் சிற்பங்கள், கல்வெட்டுகள், கட்டடக்கலைக் கூறுகள் ஆகியவற்றைப் பதிவு செய்வதுதான். இன்று இருக்கும் நினைவுச் சின்னங்களை இப்போது இருக்கும் நிலையில் இன்றே ஆவணப்படுத்தி விட்டால், நாளை அவை அழிந்தால்கூட வருங்கால ஆய்வர்கள் இவ்வாவணங்களின் துணைகொண்டு ஆய்வுகளை நிகழ்த்த முடியும் என்ற நல்லெண்ணத்தில்தான் திருச்சிராப்பள்ளி டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்கள் இத்தகைய ஆவணப்படுத்தலைத் தலையாய முயற்சியாகக் கொண்டுள்ளனர். இம்முயற்சியின் ஒரு படிக்கல்லாகத்தான் தமிழ்நாட்டிலுள்ள குடைவரைக் கோயில்கள் அனைத்தையும் ஆவணமாக்க முனைந்திருக்கிறார்கள். அதில் ஒரு பகுதியாக "மாமல்லபுரம் குடைவரைகள்" என்ற நூலைப் படைத்திருக்கிறார்கள். அந்நூலை வரலாறு.காம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு நூலாசிரியர்கள் அளித்துள்ள முன்னுரையின் ஒரு பகுதியே சிறப்பாக இருக்கும் எனக் கருதுகிறோம். "தமிழ்நாட்டுக் குடைவரைகள் பற்றிய எங்களுடைய ஆய்வுகள் மகேந்திரர் குடைவரைகள், தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள், மதுரை மாவட்டக் குடைவரைகள், தென்மாவட்டக் குடைவரைகள், புதுக்கோட்டை மாவட்டக் குடைவரைகள் ஆகிய தலைப்புகளில் ஐந்து நூல்களாக வெளிவந்துள்ளன. அந்தத் தொடரில் இது ஆறாவது நூல். இந்நூலில் மாமல்லபுரத்திலுள்ள பதினைந்து குடைவரைகளும் ஒப்பீட்டு நோக்கில் ஆராயப்பட்டுத் தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதன்முறையாக இங்குள்ள குடைவரைகளை முழுமை, உள்ளீடு ஆகியவற்றின் அடிப்படையில் மூன்று தலைப்புகளின் கீழ்ப் பகுத்துள்ளோம். நிறைவடையாதவை 5, நிறைவடைந்தும் கருவறையில் இறை பெறாதவை 5, கருவறையில் தாய்ப்பாறை இறை பெற்றவை 5 என அப்பகுப்பு அமைய, நூலின் இறுதி இயலாக ஒப்பீடு இடம்பெற்றுள்ளது. மாமல்லபுரம் குடைவரைகளை ஒன்றுடன் ஒன்று ஒப்பு நோக்கியிருப்பதுடன், அவற்றைப் பிற பகுதிகளிலுள்ள பல்லவக் குடைவரைகளுடனும் தமிழ்நாட்டின் பிற அரசுமரபுசார் பகுதிகளில் அகழப்பட்டுள்ள குடைவரைகளுடனும் ஒப்புநோக்கிப் பெறப்பட்ட தரவுகளைக் கொண்டே ஒப்பீடு இயலைக் கட்டமைத்துள்ளோம். தமிழ்நாட்டுக் குடைவரைக் கலைவரலாற்றில் மாமல்லபுரத்தின் பங்களிப்பு, தனித்தன்மையதாகவும் குறிப்பிடத்தக்கதாகவும், செழுமை மிக்கதாகவும் மலர்ந்துள்ள பாங்கை அதன் வளர்ச்சிப் போக்கிலேயே அடையாளப்படுத்தியுள்ளோம். கல்வெட்டுகள், கலைக்கூறுகள், ஒப்புமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பெரும்பாலான குடைவரைகளின் உருவாக்கத்திற்குக் காரணமாக இருந்த சிந்தனையாளரை வெளிப்படுத்தியுள்ளோம். பல்லவர் கலைவரலாற்றை உள்வாங்கிக் கொள்ளவும் தமிழ்நாட்டுக் கலைநீரோட்டத்தில் அவர்தம் திறனும் ஆற்றலும் உருவாக்கியிருக்கும் சிந்தனை மரபுகளை அடையாளம் காணவும் இந்நூல் உதவும்." நூலைப் பற்றிய அறிமுகம் இவ்வாறு அமைந்திருக்கையில், ஆய்வு நோக்கத்தைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றனர். "மாமல்லபுரம் கலைச்செழுமை மிளிரும் பண்பாட்டுக் களம். கலையை உயிராய்க் கருதிய கைவண்ணர்களும் கருத்தாளர்களும் ஒருங்கிணைந்து, மரபுகளைத் தழுவியும் மீறியும் சோதனை முயற்சிகளில் தங்கள் சிந்தனை வளங்களை உரசிப் பார்த்துக்கொண்ட இந்தக் கடற்கரை ஊரில், அந்நாளைய மனித உள்ளங்களின் மேரு நிகர்த்த எழுச்சிகள் காலப் பார்வையில் வார்ப்பாகியுள்ளன. கரைகளைத் தழுவும் அலைகளைப்போல இந்தப் பண்பாட்டுக் கருவூலங்களைக் காணுந்தோறும் களிகொண்டு ஆர்ப்பரித்து எழும் உள்ளம், அப்படைப்புகள் இந்நாளில் எதிர்கொண்டிருக்கும் 'நாகரிக மிரட்டல்களை'ச் சந்திக்கையில், மண்ணில் உடைந்து நுரைத்துச் சிதறும் அலைகளைப் போலவே நொறுங்கிப் போகிறது. வாழ்க்கை, அதோ அந்த மண்ணின் சுவடுகள் போல, அடிக்கும் காற்றில் கலைந்துவிடும் என்றுதானே நெஞ்சில் சுமந்த கலைவளங்களை எல்லாம் தலைமுறைக் கனவுகளுடனும் தளராத நம்பிக்கையுடனும் கல்லில் பதித்துச் சென்றனர் நம் முன்னோர். நாமோ, 'சுற்றுலா, சுக உலா' எனும் பெயர்களில் மாமல்லபுரத்துக் களஞ்சியங்களை மெல்ல மெல்லச் சிதைத்துக் கொண்டிருக்கிறோம். இயற்கையால்கூட அழிக்க முடியாத இந்த வரலாற்றுப் பதிவுகள் இன்று பத்திமையின் பெயராலும் பார்க்க வருபவர்களின் வரலாற்று நோக்கற்ற போக்குகளாலும் அழிவை நோக்கி அகலக்கால் வைத்துள்ளன. கடந்த காலம் எதிர்காலத்திற்கு இருக்குமா என்பதை நிகழ்காலம் முடிவு செய்துவிடும்." சுற்றுலாவாக மாமல்லபுரத்திற்குப் பலமுறை சென்று வந்துள்ளவர்களுக்குக்கூட இங்குப் பதினைந்து குடைவரைகள் இருக்கும் விவரம் தெரியுமா என்பது ஐயமே. இந்தப் பதினைந்து குடைவரைகளையும் இந்நூலாசிரியர்கள் கீழ்க்கண்டவாறு மூன்று தலைப்புகளில் பகுத்துள்ளனர். நிறைவடையாக் குடைவரைகள் 1. இராமானுஜர் மண்டப எதிர்க் குடைவரை 2. கலங்கரை விளக்கக் குடைவரை 3. புலிப்புதர் மண்டபம் 4. கோனேரிச் சிறிய மண்டபம் 5. பஞ்சபாண்டவர் குடைவரை கருவறைத் தெய்வமற்ற குடைவரைகள் 6. தருமராஜர் மண்டபம் 7. கொற்றவைக் குடைவரை 8. கோனேரிப் பெரிய மண்டபம் 9. கழுக்குன்றம் குடைவரை 10. வராகர் குடைவரை கருவறைத் தெய்வம் பெற்ற குடைவரைகள் 11. அதிரணசண்டேசுவரம் 12. இராமானுஜர் மண்டபம் 13. மகிடாசுரமர்த்தினி குடைவரை 14. மும்மூர்த்தி குடைவரை 15. பெருவராகர் குடைவரை இவைதவிர ஒப்பீடு இயல் பதினாறாவதாக இடம்பெறுகின்றது. இந்நூலாசிரியர்கள் எழுதியிருக்கும் கட்டுரைகளை வரலாறு.காம் மின்னிதழில் வாசித்து அனுபவம் பெற்ற வாசகர்களுக்கு இப்பதினைந்து குடைவரைகளின் பதிவுகளும் எத்தனை துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கும் என்பது தெரிந்திருக்கும். இங்குச் சிறப்பாகக் கூறப்படவேண்டியது ஒப்பீடு இயலே. 205 பக்க நூலில் 51 பக்கங்களுக்கு விரிந்திருக்கிறது குடைவரைகளின் ஒப்பீடு. ஒப்பீடு என்பது மிகவும் கடினமான பணி. ஏற்கனவே சில கட்டுரைகளில் கட்டுமானங்களை ஒப்பிட முயன்றவன் என்ற முறையிலும், தற்போது பணிபுரியும் அலுவலகத்தில் இந்திய மென்பொருள் நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒப்பிட்டுத் தலைமையகத்துக்கு அறிக்கை அளிக்கும் பணியில் இருப்பவன் என்ற முறையிலும் இந்த ஒப்பீட்டுப் பணி எவ்வளவு கடினமானது என்பதை நன்கறிவேன். மாமல்லபுரத்திலிருக்கும் இந்தப் பதினைந்து குடைவரைகளின் கீழ்க்கண்ட கட்டடக்கலை மற்றும் சிற்பக் கூறுகளை ஒப்பிட்டு இந்த இயல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் மாமல்லபுரத்தைப் பற்றி ஆய்வு செய்த அறிஞர்கள் மாமல்லன் என்ற பெயரைக் கொண்டு நரசிம்மவர்மரையும் இராஜசிம்மரையும் குழப்பிக் கொண்டார்கள். பல்லவத் தளிகளின் ஆய்வுலகப் பிதாமகராகக் கருதப்படும் முனைவர் கூ.ரா.சீனிவாசன் அவர்களும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பல்லவர் குடைவரைகளையும் மகேந்திரர் மற்றும் மாமல்லர் பணிகளாகக் கருதியிருக்கிறார். இவர் மகேந்திரர் கலைமுறையை மூன்று பருவங்களாகப் பகுத்துக் கொள்கிறார். மகேந்திரர் கலைமுறையில் சில குடைவரைகளை அகழ்ந்த அவரது மகனான மாமல்லர், புதிய கலைமுறையிலும் சில குடைவரைகளை அமைத்ததாகவும் கூறுகிறார். ஆய்வறிஞர் கூ.ரா.சீனிவாசன் அவர்கள் கூறும் கலைமுறை, சம்பிரதாயம் ஆகியவற்றிற்கு இந்நூலாசிரியர்கள் தரும் விளக்கம் என்ன? "எது சம்பிரதாயம்? அந்த சம்பிரதாயம் எப்படி உருவாகிறது? ஒரு பழக்கமே காலப்போக்கில் வழக்கமாகிறது. ஒரு நடைமுறை பல தலைமுறைகளால் தொடர்ந்து பின்பற்றப்படும்போது அது சம்பிரதாயம் என்ற நிலையைப் பெறுகிறது. பொதுவாக, இதுபோன்ற வழக்குகளோ சம்பிரதாயங்களோ எவ்வித மாற்றங்களுக்கும் உட்படுத்தப்படாமல் காப்பாற்றப்படுகின்றன. மாற்றங்கள் ஏற்படின் அவற்றிற்கு உட்படும் நடைமுறைகள் பழைய சம்பிரதாயங்களாகவோ, வழக்குகளாகவோ கொள்ளப்படா. அவை புதிய நடைமுறைகளாகவே கருதப்படும். அதன்படி நோக்கினால் தொண்டைமண்டலத்தில் புதிய சம்பிரதாயத்தை உருவாக்கியவர் மகேந்திரரே. அவர் கண்ணோட்டத்தில் அவரால் உருவாக்கப்பட்ட மண்டகப்பட்டுக் குடைவரையே செங்கல், மரம், சுண்ணாம்பு, உலோகம் இல்லாமல் அவர் பகுதியில் உருவான முதல் இறையகம். அதுநாள் வரையில் கல்லில் இறையகம் காணாதிருந்த வடதமிழ்நாட்டு சம்பிரதாயத்தை உடைத்துப் புதிய சம்பிரதாயத்தைத் தொடங்கி வைக்கிறார் மகேந்திரர். ...... சங்க காலத்திலிருந்தே வழக்கிலிருந்த சுதையில் அல்லது மரத்தில் செய்யப்பட்டதாகவோ, அல்லது வரையப்பட்டதாகவோ அமைந்த இறைவடிவம் கொண்ட மண்டபப் பொதியில்கள்தானே மகேந்திரரால் கல்வடிவம் பெற்றன. ஊடகச் சம்பிரதாயத்தைத்தான் மகேந்திரர் மாற்றினாரே தவிர, அமைப்பு முறையை அன்று. தூண்கள் பெற்ற மண்டபம், அதில் கருவறை என்னும் அடிப்படை அமைப்பு முறையில் தமிழ்நாட்டின் எந்த அரசமரபும் எக்காலத்தும் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தவில்லை. ....... தமிழ்நாட்டுக் குடைவரைகளைக் கூ.ரா.சீனிவாசன் கூறுமாறு மகேந்திரரின் பிரதிகள் என்பது சரியன்று. அவை சங்க இறையகங்களின் பிரதிகள். அந்தப் பிரதிகளில் மகேந்திரர் உட்பட்ட ஆற்றலாளர்கள் அனைவரும் அவரவர் திறனுக்கும் கற்பனைக்கும் ஏற்ப எண்ணற்ற புத்தாக்கங்களை மலர்வித்துள்ளனர். அந்தப் புத்தாக்கங்கள் பலவாகவும் சிறப்பாகவும் ஒருவர் கைவண்ணமாகவும் அமையும்போது அவற்றை அந்தத் தனியரின் கலைமுறையாகவும் அவையே ஒரு மரபின் கைவண்ணமாகப் பதிவாகையில் அவற்றை அந்த மரபின் கலைமுறையாகவும் தொகுத்து அடையாளப்படுத்துகிறோம்." இங்கே கலைமுறையைப் பற்றியும் சம்பிரதாயத்தைப் பற்றியும் இந்நூலாசிரியர்களின் கருத்தை ஏன் இவ்வளவு விரிவாகக் குறிப்பிடுகிறோம் என்றால், கூ.ரா.சீனிவாசன் அவர்கள் தமிழ்நாட்டிலுள்ள பல்லவர் குடைவரைகள் அனைத்தையும் மகேந்திரர் மற்றும் மாமல்லர் ஆகியோரின் கலைமுறைகளின் கீழ் அடக்கியுள்ளார். அவற்றைச் சரியா என்று ஆராயவும் தவறெனில் சரியானதை அடையாளப்படுத்தவும் கலைமுறையையும் சம்பிரதாயத்தையும் வரையறுக்க வேண்டியது அவசியமாகிறது. அவற்றை வரையறுத்தபின் அதனடிப்படையில் மாமல்லபுரம் குடைவரைகள் அனைத்தும் இராஜசிம்மரால் (கி.பி. எட்டாம் நூற்றாண்டு) எடுக்கப்பட்டதாக அடையாளப்படுத்தியிருக்கிறார்கள் இந்நூலாசிரியர்கள். இந்நூலாசிரியர்கள் இத்தனை வலுவான தரவுகளுடன் சந்தேகத்துக்கிடமின்றி இக்கூற்றை நிறுவினாலும் சில ஆய்வாளர்கள் இன்னும் கூ.ரா.சீனிவாசன் அவர்கள் சொன்ன கருத்துக்களையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆய்வுலக மேதையான கூ.ரா.சீனிவாசனை மறுக்க இவர் யார் என்பன போன்ற வறட்டு வாதங்களையே திரும்பத் திரும்ப முன்வைக்கிறார்கள். இந்நூலாசிரியர்கள் கூறும் தரவுகளைப் பார்க்க மறுக்கும் காரணம் என்ன என்பதை அவர்களே அறிவர். ஒரு கூற்று தவறானது எனில், அது டாக்டர். கூ.ரா.சீனிவாசனாக இருந்தாலும் சரி, டாக்டர். மா.இராசமாணிக்கனாராக இருந்தாலும் சரி, டாக்டர். இரா.கலைக்கோவனாக இருந்தாலும் சரி. சரியான கூற்றை எடுத்துரைப்பதில் தவறில்லை. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றம்தான். இதற்குச் சான்றை இந்நூலிலேயே பார்க்க முடியும். இதே நூலாசிரியர்கள் எழுதிய "மகேந்திரர் குடைவரைகள்" என்னும் இன்னொரு நூலில் காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் உள்ள "குரங்கணில் முட்டம்" என்னும் குடைவரையை மகேந்திரர் காலத்தியதாக அடையாளப்படுத்தியுள்ளனர். ஆனால் "மாமல்லபுரம் குடைவரைகள்" நூலின் ஒப்பீடு இயலின் 21வது அடிக்குறிப்பு கீழ்க்கண்டவாறு கூறுகிறது. "இந்நூலாசிரியர்களின் 'மகேந்திரர் குடைவரைகள்' நூலில் குரங்கணில் முட்டத்தை மகேந்திரர் காலக் குடைவரையாகக் குறித்துள்ளமை சரியன்று. அக்குடைவரையை மீளாய்வுக்கு உட்படுத்தியதில் மாமல்லபுரக் கலைமுறைக் காலத்தின் தொடக்கநிலை உருவாக்கமாகவே குரங்கணில்முட்டத்தைக் கருதவேண்டியுள்ளது". ஆய்வுகள் அனைத்துமே மீளாய்வுக்கு உட்பட்டவைதான் எனும்போது, மற்ற ஆய்வாளர்களின் கூற்றுக்களை இவர்கள் மறுப்பது உண்மை என்ற ஒரே உரைகல்லால்தான் என்பதை மேற்கண்ட அடிக்குறிப்பிலிருந்து அறியமுடியும். இவ்வாறு கட்டடக்கலைக் கூறுகள் மட்டுமின்றிச் சிற்பக்கூறுகளையும் கொண்டு இக்குடைவரைகளின் காலநிர்ணயத்தை உறுதிப்படுத்துகிறார்கள். இங்குத் தாய்ப்பாறை இலிங்கத்தைப் பற்றிய கேள்வி ஒன்றையும் எழுப்புகிறார்கள். "முத்தரையர், அதியர் கீழ்ப் பெருவழக்குப் பெற்றிருந்த கருவறைத் தாய்ப்பாறைச் சிற்பம் பல்லவர், பாண்டியர் பகுதிகளில் பெருநிலை கொள்ளாமை, அக்காலகட்டத்தில் அவ்விரு பகுதிகளிலும் நிலவிய சமுதாயக் காரணிகளை ஆராயத் தூண்டுகிறது. முத்தரையர் பகுதியில் பேரளவிலும் பாண்டியர் பகுதியில் ஓரளவிற்கும் என அமைந்த தாய்ப்பாறை இலிங்க வழிபாடு பல்லவர் பகுதியில் மேலைச்சேரி தவிர வேறெங்கும் அமையவில்லை. காலத்தால் பிற்பட்ட சிராப்பள்ளிக் கீழ்க்குடைவரை போன்ற பல்லவர் கருவறைகளில்கூடத் தாய்ப்பாறை இலிங்கம் உருவாகாமை, தாய்ப்பாறையில் சிவலிங்கம் அமைப்பதைப் பல்லவ மரபு விழையவில்லை என்பதையே முன் நிறுத்துகிறது. விஷ்ணுவையும் முருகனையும் தாய்ப்பாறைச் சிற்பங்களாக ஏற்ற பல்லவ மரபு, சிவபெருமானை உருவ வடிவில் தாய்ப்பாறைச் சிற்பமாகக் கொள்ளத் தயங்காத பல்லவ மரபு, ஏன் அவரது அருவ வடிவமான இலிங்கத் திருமேனியை மட்டும் தாய்ப்பாறைச் சிற்பமாகத் தனது பெருமைக்குரிய குடைவரைகள் ஒன்றில்கூடக் கொள்ளவில்லை என்பது வியப்பூட்டும் கேள்வியாகவே விடைதேடி நிற்கிறது." மாமல்லபுரம் குடைவரைகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் விடாமல் பதிவு செய்திருக்கும் இந்நூலைக் குடைவரைகளைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களும் ஆய்வு செய்பவர்களும் மட்டுமின்றி, சுற்றுலாச் செல்லும்போது கையோடு கொண்டுசென்று அங்குள்ள சிற்பங்களையும் கட்டடக்கலைக் கூறுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், நிச்சயம் கோயிற்கலைகள் நம் கைப்பிடித்து வரலாற்று உலகிற்குள் அழைத்துச் செல்லும். இது எங்கள் அனுபவத்தில் கண்ட உண்மை.this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |