![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 142
![]() இதழ் 142 [ ஆகஸ்ட் 2018 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
சிராப்பள்ளித் துறையூர்ச் சாலையில் புலிவலத்தை அடுத்த இடத்திருப்பத்தில் 5 கி. மீ. பயணித்தால் கண்ணனூரை அடையலாம். கல்வெட்டுகளில் காவிரியின் வடகரையிலுள்ள கரிகாலக்கன்ன வளநாட்டு மேல்வள்ளுவப்பாடி நாட்டுப் பெரியகண்ணனூராக அடையாளப்படும் இவ்வூரில் மூன்றாம் இராசராசசோழரின் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீகோபாலன் அழகியான் உலகனான வளவக்கோன் எடுப்பித்த திருமேற்கோயிலே அழகியசேம விண்ணகரம்.
சிங்களாந்தகபுர ஆய்வின்போதே மாணவி ஒருவரின் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேட்டிற்காக இக்கோயிலைத் தேர்ந்திருந்தேன். இக்கோயில் வளாகத்திலிருந்து படியெடுக்கப்பட்டு 1936 ஆம் ஆண்டுக் கல்வெட்டறிக்கையில் பதிவாகியிருந்த 5 கல்வெட்டுச் சுருக்கங்களே இக்கோயிலின் இருப்பை அறிய உதவின. கல்வெட்டுப் பாடங்களைப் பெறுவதற்கும் கோயில் கட்டுமான அமைப்பை அறிவதற்கும் 3.3.2018இல் நானும் ஆய்வுமாணவி கவிதாவும் அங்குச் சென்றோம். கதவுகளும் காவலுமற்ற வாயில் வழி உள்நுழைந்த எங்கள் பார்வையில் அழகியசேம விண்ணகரத்தின் முழுக் காட்சியும் படமாகியது. ஒருதள நாகர விமானம், முகமண்டபம், பெருமண்டபம் என விளங்கும் அவ்விண்ணகர வளாகத்தின் தனிமை கோயிலின் தற்போதைய நிலையை விளக்கியது. பெருமண்டபக் கதவுகள் பூட்டப்பட்டிருந்தமையால் கல்வெட்டுகளைப் படிக்கலாம் எனக் கோயிலின் புறப்பகுதியைப் பார்வையிட்டோம். ![]() ![]() ![]() பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நாகபடப் பாதம் பெற்ற எண்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், தரங்க வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் என அமைந்திருந்த விமானத்தின் தளமும் முகமண்டபமும் சாலைப்பத்தி முன்தள்ளலுடன் இருந்தன. விமானச் சாலைப்பத்தி முன்னிழுக்கப்பெற்ற பல கட்டுமானங்களில் முகமண்டபச் சுவர் அத்தகு அமைப்புப் பெறாது ஒரே நேர்க்கோட்டில் அமைவதுண்டு. இப்பிற்சோழர் கட்டுமானத்தில் முகமண்டபத்திலும் சாலை முன்தள்ளல் இருந்தமை சிறப்பான கட்டுமானக் கூறாகத் தெரிந்தது. விமானத்திலும் முகமண்டபத்திலுமாய்ச் சட்டத்தலை பெற்ற உருளைத்தூண்களின் தழுவலில் 5 ஆழமான கோட்டங்கள் இருந்தபோதும் ஒன்றில்கூட இறைவடிவம் இல்லை. கோட்டங்களைத் தலைப்பிட்டுள்ள மகரதோரணங்களிலும் வெறுமை. பூதவரியற்ற வலபியில் தாமரையிதழ்கள். கபோதத்தில் கூடுவளைவுகள் உள்ளன. ஆனால், சிற்றுருவச் சிற்பங்கள் இல்லை. வளாகத்தைப் போலவே கட்டுமானத்திலும் வெறுமைதான். அலங்கரிப்போ, அழகூட்டலோ அழகியசேம விண்ணகரத்தின் எப்பகுதியிலும் அறவே இல்லைதான் என்றபோதும் அடிப்படை உறுப்புகளே அணிகலன்களாய் அமைந்தாற் போல் அந்த வெறுமையிலும் தனிமையிலும்கூட விண்ணகரம் பார்வையை நிறைத்தது. கட்டடச் சிந்தனைகளைக் கலைத்தது கோயிலில் வழிபாடு நிகழ்த்துபவர் பெருமண்டபக் கதவைத் திறக்கும் ஒலி. விண்ணகரப் பெருமாளைக் காண விரைந்தோம். கருவறையில் திருமகள், நிலமகள் துணையுடன் திருமேற்கோயிலின் அழகப்பெருமாள் சுந்தரவரதராஜப் பெருமாளாய்ப் பெயர்மாற்றம் பெற்று நின்றகோலத்தில் காட்சிதந்தார். அவரது முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில் விளங்க, பின்கைகளில் சங்கு, சக்கரம். பெருமண்டப மேடையொன்றில் விஷ்ணுவும் அவருக்குத் துணையாகச் சில ஆழ்வார்களும். வழிபாடு முடித்துக் கல்வெட்டுக் களத்தில் மூழ்கினோம். கட்டுமானக் கல்வெட்டுத் தவிர ஏனைய நான்கு கல்வெட்டுகளும் ஆங்காங்கே தொடர்களையும் எழுத்துக்களையும் இழந்திருந்தபோதும் முயற்சியும் உழைப்பும் தகவல்களைத் தந்தன. அரசின் அங்காடிச் செட்டிகளில் ஒருவரான ஏத்தக்குடியான் பரிந்துரையேற்று மூன்றாம் இராசராசர் பிறப்பித்த அரசாணை இக்கோயில் இறைவனுக்கு அழகியான் உலகன் அளித்த திருநாமத்துக்காணி நிலத்தைத் தேவதான இறையிலியாக்கியது. சேதப்பட்டிருந்த ஊர்க் குளத்தைத் திருத்தவும் அதைச் சுற்றி மண்டியிருந்த காட்டை அகற்றவும் நிலவருவாய் பயன்பட்டது. இந்த அரசாணையைத் திருமந்திர ஓலை நாராயண மூவேந்த வேளான் எழுத உயர் அலுவலர்கள் சிலர் கையெழுத்திட்டுள்ளனர். திருவரங்கத்து உற்சவர் போலவே கண்ணனூர்ப் பெருமாளும் இசுலாமியப் படையெடுப்பின்போது மறைத்து வைக்கப்பட்டிருந்து இராக்கத ஆண்டுச் சித்திரை 12ஆம் நாள் ஸ்ரீகிரிநாதரின் தம்பி வீரணனால் மீளவும் இக்கோயிலில் எழுந்தருளச் செய்யப்பட்டார். வீரணன் இறைவழிபாட்டிற்காக இறையிலித் திருவிடையாட்டமாக நிலமும் அளித்தார். தொடர்ந்து புரப்பார் இல்லாமையின் காலச்சூழலில் கோயில் வழிபாடிழந்தது. பொ. கா. 1427இல் தேவராய மகாராயர் ஆட்சிக் காலத்தே பதிவாகியிருக்கும் கல்வெட்டு, இக்கோயில் நெடுங்காலம் வழிபாடிழந்து இருந்ததாகவும் மகாசாமந்த அதிபதியாக இருந்த கோட்டை பொம்மய நாயக்கர் தம் ஜீவிதமான சிறுக்கள்ளிக்குடி எனும் ஊரை கோயிலுக்களித்து, அதன் வருவாய் கொண்டு வழிபாட்டைத் தொடங்கச் செய்ததாகவும் கூறுவதுடன், கோயிலிலுள்ள கல்வெட்டுகள் சுட்டும் கோயில் நிலங்களை அவரே மீட்டளித்ததாகவும் தெரிவிக்கிறது. பாடங்களைத் தேடிப் படித்த உழைப்பிற்குப் பயனாக மூன்றாம் இராஜராஜரின் புதிய கல்வெட்டொன்று புதையலாய்க் கிடைத்தது. திருமேற்கோயிலை எழுப்பிய வளவக்கோன் மேல்வள்ளுவப்பாடி நாட்டில் சிற்பாசிரியக் காணி கொண்டிருந்த அழகியநாயன் பெருமாள் என்பவருக்கு அளித்த சிறப்பைக் கூறும் இக்கல்வெட்டும் இங்குள்ள பிற கல்வெட்டுகள் போலவே சிதைந்துள்ளது. நாங்கள் அங்கிருந்த காலத்தே பூஜை செய்தவரைத் தவிர வேறு யாரும் வராத சூழலில் கோயில் தனித்திருந்தது. புறப்படும் முன் வளாக வாயிலில் நின்று அழகியசேம விண்ணகரத்தை நெஞ்சில் நிறைத்துக் கொள்ளும் ஆவலோடு விழைந்து பார்த்தோம். கட்டியவரின் பெயரிலிருக்கும் வளமை வளாகத்தில் இல்லையென்றாலும், அந்த மனிதரின் பெயரிலுள்ள அழகு விண்ணகரத்தின் ஒவ்வோர் அங்குலத்திலும் பரவியிருக்கக் கண்டோம். எளிமையும் தனிமையும்கூட அழகாய் இருக்கமுடியும் என்பதற்கு அழிவின் முதற் படியில் இருக்கும் விண்ணகரமே சான்று. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |