http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 24

இதழ் 24 [ ஜூன் 16 - ஜூலை 15, 2006 ]
குடவாயில் பாலு சிறப்பிதழ் ]


இந்த இதழில்..
In this Issue..

ஓய்வு ஏது ஐயா, உங்கள் பணிக்கு ?
எனக்கு இந்தியா வேண்டாம்!
Perspectives On Hindu Iconography
தட்சிண கயிலாயம்
எண்ணியிருந்தது ஈடேற...
உடையார்குடி கல்வெட்டு - ஒரு மீள்பர்வை
கபிலக்கல்
Links of the Month
சங்கச் சிந்தனைகள் - 11
இதழ் எண். 24 > இலக்கியச் சுவை
சங்கச் சிந்தனைகள் - 11
கோகுல் சேஷாத்ரி
பேய்க்காஞ்சி


அந்தி வானத்தின் சிவப்பு தவறிப்போய் தரையில் சிறிதளவு சிந்திவிட்டதைப்போல் அந்த இடம் காணப்பட்டது. கூர்ந்து நோக்கின் அந்தத் தரையின் சிவப்பு அந்திச் சிவப்பாக இல்லாமல் சற்றே அடர்ந்து ...சில இடங்களில் கருத்து....

அது இரத்தம்தான்.

மரங்களோ செடிகொடிகளோ அதிகம் முளைக்காத அந்தப் பகுதியில் நாணல் புதர்கள் ஆங்காங்கே முளைத்தவை போன்று தெரிகின்றன. உற்று நோக்க அவை ஈர மண்ணில் புதைந்து கிடக்காமல் மனித உடல்களில் புதைந்து கிடப்பதைக் காணலாம்.

ஆம். அவை வாள்களும் வேல்களும் ஈட்டிகளும்தான்.

அது வட தமிழ் நாட்டுப் பகுதி. பாலாற்றுக்கும் பெண்ணையாற்றுக்கும் இடைப்பட்ட ஒரு பிரதேசம். அங்குதான் ஒரு கொடிய போர்க்களம் அரங்கேறி ஏறக்குறைய இரண்டு ஜாமங்களுக்கு முன் முடிந்திருந்தது.

ஜெயித்தவன் தோற்ற மன்னனின் சேனாபதியை குனியச் சொல்லி அத்தனை வீரர்களுக்கும் முன்னால் சிரத்தை அறுத்து வீசினான். "ஹாஹூம் ! ஹாஹூம் !" என்று படைவீரர்கள் ஈட்டிகளையும் வேல்கம்புகளையும் தரையில் குத்தி உற்சாகமாகக் கத்தினார்கள். கீழே இறந்து கிடந்த எதிரி நாட்டு வீரர்களின் உடல்களை எட்டி உதைத்தார்கள். ஒரு சிலர் ஈனஸ்வரத்தில் குற்றுயிரும் குலையுயிறுமாக இரணப்பட்டுக் கிடந்தவர்களின் மார்பில் வாளைப்பாய்ச்சி அந்த மரணஓலத்தைக் கேட்டு ஆனந்தித்து ஆவேசமாக நெஞ்சில் அறைந்துகொண்டார்கள்.

எல்லா ஆவேசமும் அடங்க ஒரு ஜாம நேரமானது. தோற்ற மன்னனை வெற்றி பெற்றவன் கட்டி இழுத்துப் போனான்.

இதோ ! இத்தனையும் நடந்து முடிந்தபின்னும் ஏதோ ஒன்றுமே நடவாததுபோல் போர்க்களம் விரிந்துபட்டுக் கிடக்கிறது. கழுகுகள் வானில் வட்டமிட ஆரம்பித்துவிட்டன. சிறிது நேரத்தில் நரிகளுக்கும் கழுதைப் புலிகளுக்கும் செய்திபோய் அவையும் கூடிவிடும்.

அதோ ! கூட்டமாக தீப்பந்தமேந்தி பெண்களும், வயதான ஆண்களும் பதைபதைப்போடு ஓடிவருகின்றனர்.... பெண்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு "ஐயா ! என் இராசா !" என்று கண்ணீரும் கம்பலையுமாக அந்தப் போர்க்களத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றனர். அத்தனை கண்ணீருக்கு மத்தியிலும் தன்னுடைய புருஷன் மட்டுமாவது குற்றுயிறும் குலையுயிருமாகத் தப்பித்திருக்கக்கூடாதா... கையோ காலோ இழந்தாலும் பரவாயில்லை, உயிர் மட்டுமாவது பிழைத்திருக்கக்கூடாதா என்னும் கடைசி நிமிஷ நப்பாசைகளை கண்களில் தேக்கி ஒவ்வொருவரும் தத்தம் கணவன்மார்களை அவர்கள் கடைசியாக அணிந்து வந்த வெட்சி மாலைகளைக்கொண்டும், உடை மற்றும் அணிமணிகளைக்கொண்டும் அடையாளம் காண முயலும் அவலத்தை மேற்கொண்டு எழுதும் சக்தி நமக்கில்லை.

கூதிர்காலமாதலால் நேரம் செல்லச்செல்ல மாலைப்பனி வெண்புகைமூட்டமாக ஆங்காங்கே படர்ந்துகொண்டிருக்கிறது.

அந்த இரண பூமியில் - வெண்புகை மண்டலத்திற்கு மத்தியில் அவை சூட்சுமமாகக் கூடியிருந்தன. பெருந்துறை ஆலமரத்தருகே அமைந்திருந்த மயான பூமிக்கு மாலையில் செய்தி வந்து சேர்ந்த மறுகணம் அவை அங்கே குழுமிவிட்டன.

மனிதர்களின் கண்களுக்கு அவை புலப்படவில்லை. என்றாலும் நுண்பார்வை படைத்த முதியவர்கள் சிலர் அவற்றின் இருப்பை மெல்ல உணர்ந்தார்கள். கூடிவரும் இருட்டில் நெற்றி சுருக்கி எதையோ தேடினார்கள். அப்படிப் பார்ப்பவர்களை ஒருசிலர் வினோதமாகவும் வேறுசிலர் பயத்தோடும் பார்த்தார்கள்.

மரங்களில் திடீர் சலசலப்பில் பிராணிகளின் பயப்பார்வையில் அவற்றின் இருப்பு அனைவரும் உணர்ந்தார்கள்.

அவை பேய்கள். உடலை உகுத்தபின் வெவ்வேறு காரணங்களால் மீண்டும் பிறப்பெடுக்க முடியாமல் அந்த உயிர்கள் பைசாசங்களாகத் திரிந்துகொண்டிருந்தன.

அவை பிணங்களைத் தின்பதற்காக அங்கே கூடியிருந்தன. தின்பதற்காக என்றவுடன் இறந்த உடலைத் தின்பதற்காக என்று கிடையாது. உயிர் போன பிறகும் உடல் ஒரு சில சக்தி நிலைகளைத் தாங்கி நிற்கிறது. நீண்ட நேரம் உட்கார்ந்திருந்த இடத்தில் உடல் அகன்ற பிறகும் உடலின் சூடு மிச்சமிருப்பதைப் போல நீண்ட காலமாக அமைந்திருந்த உயிர் அகன்ற பிறகும் உயிரின் சூடு அந்த உடலில் மிச்சமிருந்தது. அந்தச் சூட்டை அவை புசித்தன. அதனைத்தவிர வேறு எதனையும் அவற்றால் தொட்டு நுகர்ந்து அனுபவிக்க முடியவில்லை.

ஏறக்குறைய வந்திருந்த கூட்டத்தார் அனைவரும் தத்தம் உற்றாரின் உடல்களைக் கண்டடைந்துவிட நிதானமாக ஒரு ஒப்பாரி அங்கே ஆரம்பமானது. கூட்டத்தோடு வந்திருந்த சில வயதான மூதாட்டிகள் ஒப்பாரியைது துவக்கி வைத்தார்கள். நெஞ்சின் நடுமத்தியில் வாளை வாங்கிக்கொண்டு கம்பீரமாக இறந்து கிடந்த தன் மகனின் வீரத்தை ஒரு கிழவி உருக்கமாக நடுங்கும் குரலில் பாடினாள். அவன் பிறந்தபோது நடந்த கொண்டாட்டங்களை, ஐம்படைத் தாலி அணிவித்தபோது அவன் அடித்த கொட்டத்தை, முதன் முதலில் அவனுக்கு வாள் பிடிக்கக் கற்றுக்கொடுத்ததை.. முறையோடு நிதானமாக அழுதுகொண்டே பாடினாள். அந்தப் பாடலை அங்கிருந்தவர்கள் அனைவரும் அழுதுகொண்டே கேட்டனர். ஆங்காங்கே எழுந்துகொண்டிருந்த ஓலம் முற்றிலும் அடங்கிப்போக அந்தக் கிழவியின் ஒற்றைக்குரல் வானளாவ எழுந்தது. மானுடத்தின் அவலங்களையெல்லாம் வானத்தை நோக்கி முறையிடுவதைப்போல் அந்தப் பாடல் அமைந்திருந்தது.

அந்தப் பாடல் மனிதர்களை மட்டுமல்ல - அவற்றையும் உலுக்கியது. ஒரு சில மெளனமாக கண்ணீர் சிந்தின - அவற்றுக்குத் தத்தம் தாயார் ஞாபகம் வந்தது போலும்.

கூடியிருந்த உடல்களுக்கு மத்தியில் ஒரு உடல் மட்டும் அனாதையாகக் கிடந்தது. அவன் ஒரு இளைஞன். அகவை இருபத்தொன்று இருக்குமா ? மீசை அப்போதுதான் முளைத்ததுபோல் கருகருவென்று வளர்ந்துள்ளது. அவனுடைய கழுத்தில் ஒரு வெட்டு ஆழமாக விழுந்திருந்தது. உடலில் வேறு காயங்கள் எதுவுமின்றி ஒரு ஷணப் பொழுதில் வாளொன்று ஆவேசமாக இடது பக்கத்திலிருந்து இறங்க அந்த ஆச்சரியம் முடிவதற்குள் இறந்துவிட்டான்.

எவரும் அவனைச் சுற்றிக் கூடவில்லை. எந்தப் பெண்டும் அவன் தலையை மடியில் வைத்துக்கொண்டு புலம்பவில்லை. அவன் அனாதை போலும்.

கூடியிருந்தவைகளில் ஒரு சிலவற்றுக்கு அவன் உடலைப் பார்த்ததும் ஆசை பிறந்தது. ஒரு சில அந்த உடலின் பக்கம் நகர ஒரு மூத்த பேய் "ஹூம் !" என்று அதட்டியது. "எவராவது அவன் இருக்கும் இடம் நெருங்கினால் நடப்பதே வேறு !" என்று எச்சரித்தது. அது ஒரு பெண்பேய். இறந்து கிடந்தவன் முகம் ஒரு கோணத்தில் அதன் மகனாக அதற்கத் தெரிந்தது. "ஐயா ! ஐயா !" என்று விசும்பிற்று. அந்த உடலின் பக்கம் அமர்ந்துகொண்டு வேறு எந்தப் பேயும் அந்த இடத்தை அண்டவிடாமல் செய்தது.

அந்நாளின் பல்வேறு ஆச்சரியமான நம்பிக்கைகளை....நடப்புக்களை.... தைரியமாக முன்வைக்கும் நூல் தொல்காப்பியம். அது தீட்டும் தீவிரப் படிமங்களைக் கொண்ட பாடல்களில் கீழ்க்காண்பதும் ஒன்று.



"....ஏமம் சுற்றம் இன்றிப் புண்ணோர்
பேஎய் ஓங்கிய பேஎய்ப் பக்கமும்..."

(தொல்காப்பியம் / பொருளதிகாரம் - புறத்திணையியல் - எண் 1023)


உறவு இருப்பவன் உடலை உறவு காக்கிறது. உறவில்லாத அனாதைகளின் உடலை கடிக்கவந்த பேய்களே காக்கின்றன ! ஆக இறந்து கிடந்தவன் உடலை பேய்கள் தின்பது என்பது நடக்காத அல்லது நடக்கக்கூடாத காரியம்.

ஒரு நம்பிக்கையின் பாற்பட்ட படிமமாக இருந்தாலும் அந்தப் படிமத்திலும் இறந்து கிடக்கும் அனாதை வீரனை தின்ன வந்த பேய்களே காக்க முற்படுவதாக முன்னிறுத்தும் தொல்காப்பியரின் அந்நாளைய தமிழ்ச்சிந்தனை பிரமிக்க வைக்கிறது. பேய்களும் பிசாசங்களும் நிஜமாகவே அந்நாளில் இருந்தனவா என்பது நமக்கு தெரியாது. ஆனால் வானளாவிய மனித நேயம் அந்நாள் தமிழன் நெஞ்சில் இருந்தது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

(மேலும் சிந்திப்போம்)
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.