http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 29
இதழ் 29 [ நவம்பர் 16 - டிசம்பர் 15, 2006 ] ஓவியர் சில்பி சிறப்பிதழ் ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
திரும்பிப் பார்க்கிறோம்
அன்புள்ள வாருணி,
இந்த ஆண்டு (2006) நம் ஆய்வு மையத்தின் வெள்ளிவிழா ஆண்டு. இதுகாறும் வரலாற்றாய்வில் பெற்ற என் அனுபவங்களையெல்லாம் இந்த வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டாவது பதிவுசெய்யக் கருதுகிறேன். முன்பே விழைந்ததுதான் என்றாலும் வாய்ப்பு இப்போதுதான் அரும்பியிருக்கிறது. இவற்றை என் அனுபவங்கள் என்று சொல்வதினும் ஒரு குழுவின் பயணச் சுவடுகளாய்க் கொள்வதுதான் பொருந்தும். தொடக்கத்தில்தான் தனிப் பயணம். அதுவும்கூட ஒரு சில ஆண்டுகளே. கண் மருத்துவனாய்ச் சிராப்பள்ளியில் காலூன்றியது 1975ல். 1980வரை கண் மருத்துவமே முழுநேரப் பணியாக இருந்தது. இந்திய மருத்துவ மன்றத் திருச்சிராப்பள்ளிக் கிளையின் செயலாளர், பொருளாளர், கலைப்பிரிவுச் செயலாளர் எனத் தொடர்பொறுப்புகள். திருச்சிராப்பள்ளிக் கண் மருத்துவர்கள் மன்றத்திலும் செயலாளர், பொருளாளர் எனப் பொறுப்புகள். தமிழ்நாடு கண் மருத்துவர்கள் மன்றக் காலாண்டு இதழின் ஆசிரியராகவும் இருந்தமையால் வேறெந்தச் சிந்தனைக்கும் இடமில்லாதபடி பணி நெருக்கடி இருந்தது. 1978ல் உல்கக் கண் மருத்துவர்கள் மாநாட்டிற்காக ஜப்பான் பயணம். 1978-79ல் சிராப்பள்ளி மருத்துவ மன்றக் கட்டடம் இடிக்கப்பெற்றுப் புதுக் கட்டுமானம் உருப்பெற்றது. அப்போது நான் செயலாளர் பொறுப்பில் இருந்தமையால், என் பணிப் பொறுப்புக் கூடியது. ஐந்தாண்டுகள் முழுமையும் கண் மருத்துவனாய் இருந்த என்னை அசைத்துப் பார்த்த ஆண்டு 1981. அந்த ஆண்டில்தான், ஜூலையா, ஆகஸ்டா என்பது நினைவில் இல்லை. உறையூர்ப் பஞ்சவர்ணசாமி கோயில் சிவாச்சாரியார் கண்ணில் விழியாடி வெளுப்பிற்காக அறுவை செய்தேன். இழந்திருந்த பார்வையைப் பெற்ற அவர் தம் கோயிலுக்கு வருமாறு வேண்டினார்; சென்றேன். சிறப்பு வழிபாடு முடிந்ததும் கோயிலைச் சுற்றிப் பார்த்தேன். அம்மன் கோயிலைச் சுற்றிவந்தபோது அதன் கருவறைச் சுவரில் கிழக்குப் பக்கத் தூணொன்றில் அதிசயமானதொரு சிற்பம் பார்த்தேன். வேட்டியை மடித்துக் கட்டிய நிலையில் இளைஞரொருவர் காலணியுடன் (Shoe) மிதிவண்டி ஓட்டுவது போன்ற சிற்பம். அதிர்ந்து போனேன். சிவாச்சாரியாரை அழைத்து அந்தச் சிற்பம் குறித்து வினவினேன். அவர் உரியவாறு மறுமொழி கூறியிருந்தால், நான் ஒரு கண் மருத்துவனாகவே வாழ்க்கையைத் தொடர்ந்திருப்பேன். காலம் அந்தச் சிற்பத்தின் வடிவில் என்னைக் கைப்பிடித்தது. சிவாச்சாரியார் அந்தச் சிற்பத்தை அப்போதுதான் முதன்முறையாகப் பார்ப்பதாகக் கூறினார். நிர்வாக அதிகாரியிடம் விவரம் கேட்கலாம் என்றார். சென்றோம். நிர்வாக அதிகாரி உடன் வந்து சிற்பத்தைப் பார்த்து வியந்தார். தாம் அண்மையில்தான் வேறொரு ஊரிலிருந்து மாற்றலாகி இக்கோயில் பொறுப்பிற்கு வந்ததாகவும், அதனால், இதுபற்றித் தமக்கொன்றும் தெரியவில்லை என்றும் கூறியவர், கோயில் தலவரலாற்றுப் புத்தகத்தை என் கையில் தந்தார். தலவரலாறு எழுதிய திரு.அ.வெ.ரா.கிருஷ்ணசாமியைப் பார்த்து விளக்கம் பெற்றுக் கொள்ளுமாறு வழிகாட்டினார். அன்று மதியமே திரு.கிருஷ்ணசாமியைக் கண்டேன். தலவரலாறு எழுதியிருந்த அவருக்கும் அச்சிற்பம் பற்றித் தெரிந்திருக்கவில்லை. இல்லம் திரும்பியதும் தலவரலாறு நூலைப் படித்தபோது மூன்று முக்கியமான தரவுகளைப் பெறமுடிந்தது. 1. இக்கோயில் சம்பந்தரால் பாடப்பட்டது. 2. இங்கிருந்து ஒன்பது கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. 3. 4-5-1922ல் தேவகோட்டை சித். முரு. முருகப்பச் செட்டியார் இக்கோயிலைத் திருப்பணி செய்தார். சம்பந்தர் திருமுறை என் மாமனாரும் கண்மருத்துவ மேதையுமான திரு. தி. வ. அரங்கநாதனின் நூலகத்தில் இருந்தது. எடுத்துப் படித்தபோது, இக்கோயிலைச் சம்பந்தர், 'செம்பியன் ஆக்கிய' என்றும் 'வேந்தன் மூக்கீச்சரம்' என்றும் குறிப்பிட்டிருப்பதையும் இத்தொடர்களின் பின்னணியில் இக்கோயிலைக் கோச்செங்கட்சோழன் செய்த மாடக்கோயிலாகத் தருமபுர ஆதீனக் குறிப்புரையாளர் சுட்டியிருந்தமையையும் அறியமுடிந்தது. 'கோச்செங்கட்சோழன்', 'மாடக்கோயில்' என்ற இரண்டு சொற்களுமே எனக்குப் புதியன என்பதால் தெரிந்துகொள்ள விழைந்து நூல்களைத் தேடினேன். என் இளவலும் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியரும் இதழியல் அறிஞருமான முனைவர் மா. ரா. அரசு, நான் கேட்ட நூல்களைப் பெற்றுத் தந்தார். தூயவளனார் தன்னாட்சிக் கல்லூரி நூலகர் திரு. அருளும் துணைநின்றார். மூன்று திங்கள்கள், நேரம் கிடைத்த போதெல்லாம் படித்தேன். அதன் விளைவாகக் கோச்செங்கட்சோழனிடம் நெருங்கமுடிந்தது. பல அறிஞர்கள் இம்மன்னரைப் பற்றி எழுதியிருந்தபோதும் அவற்றில் ஒத்திசைவு இல்லை. என் தந்தையார் முனைவர் மா. இராசமாணிக்கனாரின் பெரியபுராண ஆராய்ச்சி ஓரளவிற்குத் தெளிவு தந்ததுடன், ஆய்வு நெறிகள் பற்றிய அறிமுகத்தையும் அளித்தது. கோச்செங்கட்சோழன் - கழுமலப்போர் - கணைக்கால் இரும்பொறை எனத் தொடர்ந்த படிப்பும் சிந்தனையும் கணைக்கால் இரும்பொறை ஒரு கற்பனை உருவாக்கம் என்பதை விளங்கவைத்தது. களவழிநாற்பது மேலும் பல உண்மைகளை உணர்த்தியது. என்றாலும் 'மாடக்கோயில்' புதிராகவே இருந்தது. முனைவர் திரு. இரா. நாகசாமியின் 'தமிழகக் கோயிற் கலைகள்' நூலைப் படித்த பிறகும் மாடக்கோயிலைப் பற்றித் தெளிவான வழிகாட்டல்கள் கிடைக்கவில்லை. அதனால் மாடக்கோயில்களாக அறியப்பட்ட கோயில்கள் அனைத்தையும் நேரில் சென்று பார்ப்பதென முடிவெடுத்தேன். என் திடீர் ஆய்வுகளால் சற்றே குழம்பிப்போயிருந்த என் வாழ்வரசி என்னைத் தனியே அனுப்ப விழையாமல் தாமும் உடன்வந்தார். 'பயணம்' என்பதால், மகளும் மகனும் இணைந்துகொண்டனர். எங்கள் உறவினர் திரு. ஆறுமுகம் உதவியாளராகப் பயணித்தார். பதிகங்களில், 'மாடக்கோயில்' என்று சுட்டப்பட்டிருந்த கோயில்களை நோக்கியே எங்கள் பயணங்கள் அமைந்தன. அம்பர், ஆக்கூர், நன்னிலம், தலைச்சங்காடு, குடவாயில், நாலூர், திருநல்லூர், வைகல், ஆவூர், ஆறைவடதளி எனப் பல கோயில்களைப் பார்த்தோம். வழக்கமான கோயிலுக்கும் மாடக்கோயிலுக்கும் உள்ள வேறுபாடு ஒன்றே ஒன்றுதான் என்பது ஒப்பாய்வில் விளங்கியது. வெற்றுத் தளம் ஒன்றின் மீது அமைக்கப்படும் கோயிலே மாடக்கோயில். 'தளம்' என்ற சொல்லின் உண்மையான பொருளை அப்போது நான் அறிந்திருக்கவில்லை என்றாலும், சரியான பொருளில் சரியான சொல்லைப் பயன்படுத்தியமை வியப்பளிக்கிறது. தொடக்கக் காலத்தில் எனக்கு வழிகாட்டி நூல்களாக அமைந்தவை திரு. எஸ். ஆர். பாலசுப்ரமணியத்தின் Early, Middle, Later Chola Temples தொகுதிகளும் Middle Chola Art, Four Chola Temples நூல்களுமே. 'முற்காலச் சோழர் கலையும் சிற்பமும்', 'சோழர் கலைப்பாணி', எனும் இவருடைய தமிழ் நூல்களும் கோயில்களைப் பற்றிய அறிமுகத்தைத் தந்தன. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் வெளியீடுகளான, 'கல்வெட்டு ஓர் அறிமுகம்', 'கல்வெட்டியல்', 'தமிழகக் கோயிற் கலைகள்' ஆகிய நூல்கள் கல்வெட்டு, கோயில் பற்றிய சிந்தனைகளை உருவாக்கின. திரு. எஸ். ஆர். பாலசுப்ரமணியத்தின் நூல்கள் மிகச் சிறந்த அறிமுக நூல்கள் என்றாலும், கோயிற் கட்டடக்கலை, கல்வெட்டியல், சிற்பக்கலை இன்ன பிற கோயில் சார்ந்த கலைகள் பற்றிய அறிவு பெற விரும்புவோருக்கு அவை பயன்படா. கோயில்களின் இருப்பிடம், அவை பற்றிய ஒரு முன்னோட்டம், சில கல்வெட்டுப் பாடங்கள், சிற்பங்களின் பெயர்கள் இவை மட்டுமே இவர் நூல்கள் வழிப் பெறக்கூடியன. சிற்பவியல் அறிய, டி. ஏ. கோபிநாதராவின் Elements of Hindu Iconography நான்கு தொகுதிகள் உதவின. கணபதி ஸ்தபதியின் 'சிற்பச் செந்நூல்' பல கதவுகளைத் திறந்தது. இந்நூல்களின் வழி நான் பெற்ற தெளிவும், தந்தையார் பெற்று வைத்திருந்த கல்வெட்டுத் தொகுதிகளின் உதவியும் கோயில்கள் பற்றிக் கட்டுரை எழுதும் துணிவை எனக்குத் தந்தன. என் முதல் கட்டுரை, நான் பார்த்த முதல் கோயிலைப் பற்றியதாகவே அமைந்தது. 'திருமூக்கீச்சரம்' என்ற தலைப்பிலமைந்த அந்தக் கட்டுரையைச் 'செந்தமிழ்ச்செல்வி' திங்கள் இதழிற்கு அனுப்பினேன். அவ்விதழின் ஆசிரியர் திரு. இரா. முத்துக்குமாரசாமி, வைச சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் உரிமையாளர். தந்தையாரின் நூல்களை வெளியிட்ட அந்நிறுவனத்தின் இதழில் என் முதற் கட்டுரை வெளியானமை எனக்குப் பேருவகை அளித்தது. கட்டுரையை அனுப்பியபோது அது வெளியாகுமென்ற நம்பிக்கை எனக்கில்லை. செந்தமிழ்ச்செல்வி ஏப்ரல் 82ம் இதழ் என் இல்லம் வந்தபோது நான் அடைந்த மகிழ்விற்கு அளவே இல்லை. என் கட்டுரையைச் சொல் மாற்றாமல் வெளியிட்டிருந்தார்கள். கட்டுரையை இரண்டு பிரிவுகளாக்கி முதல் பிரிவை ஏப்ரல் இதழிலும், இரண்டாம் பிரிவை மே இதழிலும் வெளியிட்டமையுடன், கட்டுரையைப் பாராட்டி மடலொன்றும் எழுதித் தொடர்ந்து எழுத ஊக்கமளித்திருந்தார் திரு. முத்துக்குமாரசாமி. ஒருவேளை, என் கட்டுரை செந்தமிழ்ச்செல்வியில் வெளியிடப் பெறாதிருந்திருப்பின் நான் தொடர்ந்து எழுதியிருப்பேனா என்பது தெரியவில்லை. என்றாலும் உறுதியாக முயற்சிகளில் தளர்ந்திருப்பேன். அப்படி நிகழாமல் என் ஆர்வத்தை அன்புடன் அரவணைத்து ஊக்கி என்னை வளரச் செய்த திரு. முத்துக்குமாரசாமி என்றென்றும் என் நன்றிக்குரியவர். தொடக்கக் காலத்தில் என் ஆய்வுகளுக்கு அணைவாக இருந்த மற்றொருவர் என் இளவல் அரசு. சிராப்பள்ளி நூலகங்களில் கிடைக்காத எந்த நூலையும் எப்படியாவது எங்கிருந்தாவது பெற்றுத் தந்து என் ஆய்விற்குத் துணைநின்றவர் அரசு. இலக்கியங்களில் எனக்குப் புலமையில்லாதிருந்த நிலையில் தம்மிடமிருந்த இலக்கியங்கள் அனைத்தையும் தந்து என்னை ஆழங்கால் கொள்ளச் செய்தவர். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினர் ஆண்டுதோறும் நடத்தும் கல்வெட்டுத் தொடர்பான சான்றிதழ் வகுப்பில் பயின்றிருந்தமையும் வரலாற்றில் இயல்பாகவே இருந்த நாட்டமும், அரசுவை என் புதிய பார்வைக்குப் பெருந்துணையாக்கின. என் தொடக்கக் கால ஆய்வுப் பயணங்கள் சிலவற்றிலும் ஆர்வம் காரணமாகவே அவர் பங்கேற்றிருக்கிறார். அவருடன் சென்ற பயணங்கள் மறக்கமுடியாதவை. இயல்பாகவே நகைச்சுவை பொங்கப் பேசவல்ல அவர், கடுமையான விஷயங்களைக்கூட வாழைப்பழத்தில் ஊசி இறக்குமாறு போல நேருக்குநேர் மிக எளிதாகக் கூறிவிடுபவர். என்னுடன் பயணப்பட்ட பலரும் அவரிடம் சிக்கித் திக்குமுக்காடியுள்ளனர். யாரையும் புண்படுத்தாமல் ஆனால், அதே சமயம் எவரையும் விட்டுவிடாமல் கருத்துப் போர் செய்யும் ஆற்றல் அவருக்கிருந்தது. அரசு தந்த நூல்களுள் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியின், 'சோழர்கள்' நூலும் பேராசிரியர் கே. கே. பிள்ளையின் 'தமிழக வரலாறும் பண்பாடும்' நூலும் எனக்குப் பெரிதும் உதவின. இவ்விரண்டு நூல்களின்வழித் தமிழ்நாட்டின் வரலாற்றை ஓரளவிற்கு விளங்கிக்கொள்ள முடிந்தது. சாஸ்திரியின் சோழர்கள் படித்த பிறகு அவருடைய அனைத்து நூல்களையும் படிக்க வேண்டுமெனக் கருதினேன். அரசு வழி, Foreign Notices, History of South India இரண்டும் கிடைத்தன. திருமதி மீனாட்சியின் பல்லவர் நிர்வாகம் பற்றிய நூலும், திரு. கோபாலனின் பல்லவர் வரலாறும் தந்தையாரின் பல்லவர், சோழர் வரலாறு நூல்களும் பெற்றுப் படித்தேன். திரு. சதாசிவ பண்டாரத்தாரின் 'பிற்காலச் சோழர் வரலாறு' நூலை நான் பெற்ற விதம் குறிப்பிடத்தக்கது. சிராப்பள்ளியின் சிறந்த மருத்துவர்களுள் தலையாயவரான மருத்துவர் கோ. விசுவநாதன் எனக்கு மனைவி வழி உறவினர். அவருடைய புதல்வர்கள் இருவரும் மருத்துவர்கள். நான் கண் மருத்துவனாகச் சிராப்பள்ளி வந்தபோது, முதுபெரும் மருத்துவர் திரு. கோ. விசுவநாதத்திடம் ஒரு மாதம் பயிற்சிபெறப் பணித்தார் என் மாமனார். அரசு மருத்துவமனை போல் கூட்டம் வழியும் விசுவநாதம் மருத்துவமனையில் பயிற்சி பெற்றபோது, அவரது புதல்வர்கள் திரு. ஜெயபால், திரு. கனகராஜ் இருவரிடமும் நட்பேற்பட்டது. திரு. வி. ஜெயபால் சிறந்த அறுவை மருத்துவர். மிக அன்பானவர். திரு. வி. கனகராஜ் குழந்தை நலம், காது மூக்குத் தொண்டை இரண்டிலும் பட்டங்கள் பெற்ற அருமையான மருத்துவர். அவர்தம் நட்பு எனக்கு மருத்துவத்துறையில் முன்னேறப் பெரிதும் உதவியது. அந்த மருத்துவமனையில் பணியாற்றிய திரு. இரா. மகாலிங்கம் தமிழ்ப் பற்றாளர். நல்ல சிந்தனையாளர். தமிழுக்கென்று தகுதியுடைய சிறந்த அமைப்பு ஏதும் சிராப்பள்ளியில் இல்லாமையை நன்கு உணர்ந்திருந்த அவர், 'முத்தமிழ்க் கலை மன்றம்' என்ற பெயரில் அமைப்பொன்று நிறுவ ஆர்வம் கொண்டார். அது குறித்து எங்களிடம் பேசினார். நான் அப்போது தந்தையார் பெயரில்,' டாக்டர் மா. இராசமாணிக்கனார் இலக்கிய மன்றம்' என்றோர் அமைப்பை நிறுவி மாணவ மாணவியர்க்குச் சொல்லாற்றல் திறன் வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். அதற்குத் திரு. ஜெயபால் நடுவர்களுள் ஒருவராக வந்திருக்கிறார். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேரமின்றி இருந்த அவரை நான்தான் வற்புறுத்தி அழைத்து வந்தேன். என் இலக்கிய மன்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்த அநுபவம் திரு. மகாலிங்கத்தின் ஆர்வம் இவ்விரண்டும் மரு. வி. ஜெயபாலை முத்தமிழ்க் கலைமன்றம் உருவாக்க உதவின. மருத்துவர் வி. ஜெயபால் தலைவராகவும் மருத்துவர் சி. கேசவராஜ் (பல் மருத்துவர் - திரு. ஜெயபாலின் சிறிய தந்தை திரு. சிற்றம்பலத்தின் மகன்) செயலாளராகவும் நான் இணைச் செயலாளராகவும் மருத்துவர் சி. கருணாநிதி (பல்மருத்துவர் - திரு. சி. கேசவராஜின் இளவல்) பொருளாளராகவும் அமைய, முத்தமிழ்க் கலை மன்றம் பிறந்தது பேராசிரியர் சோ.சத்தியசீலன் நெறியாளராக இருந்து உதவினார். திங்கள் தோறும் சிராப்பள்ளியில் சிறந்த தமிழ்க் கூட்டங்கள் அமைத்த இம்மன்றத்தின் வழிப் பிறந்த இரண்டாம் அமைப்பு, 'இராமாயண வகுப்பு'. வாரந்தோறும் ஒரு நாள் இரவு இராமாயணம் முறைப்படிப் படிக்க முடிவானது. நானும் திரு. சி.கேசவராஜும் திரு. சி. கருணாநிதியும் இவ்வமைப்பில் இணைந்தோம். திரு. மகாலிங்கமும் இருந்தார். திரு. வி. ஜெயபால் மருத்துவப் பணிச்சுமையால் வரக்கூடவில்லை. பேராசிரியர் சத்தியசீலன் வகுப்பெடுத்தார். இவ்வகுப்பில் பயில்வதற்காக, 'இராமாயணம்' வாங்க முனைந்தபோது திரு. சத்தியசீலன், 'வை. மு. கோ.' உரை நன்றாக இருக்கும், அது அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பு, அதைப் பெற்றுப் பயில்வோம் என்று வழிகாட்டினார். அவர் கருத்துப்படியே செயற்பட்டோம். எங்கள் அனைவருக்கும் நூல்களைப் பெற, சத்தியசீலன் அண்ணாமலைப் பல்கலைக்கு எழுதினார். நூற்படிகள் வந்தன. அவற்றுடன், சதாசிவ பண்டாரத்தாரின் பிற்காலச் சோழர் வரலாறும் எப்படியோ தவறுதலாக இடம்பெற்று வந்திருந்தது. அதை அனுப்பிவிடலாமென்று சத்தியசீலன் கூறியபோது, அந்நூலை எடுத்துப் புரட்டிப் பார்த்த நான், அது எனக்குப் பயன்படும் என்பதை உணர்ந்தமையால் தேடிவந்து சரண்புகுந்த அந்த நூலை எடுத்துக்கொண்டேன். இன்றளவும் அந்த நூல் என் எழுத்துக்கு வலிமை சேர்த்து வருவதை நன்றியோடு நினைவுகூர்கிறேன். அன்புடன், இரா. கலைக்கோவன் (தொடரும்) this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |