http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 42

இதழ் 42
[ டிசம்பர் 16 - ஜனவரி 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

கோயில்தோறும் வரலாறு
ஆண்டிச்சிப்பாறைக் குடைவரை
கதை 12 - அரிகண்டம்
திரும்பிப் பார்க்கிறோம் - 14
பழியிலி ஈசுவரம்
வாரணமாயிரம்
முதல் பார்வையில் பாண்டியர் குடைவரைகள்
அங்கும் இங்கும் (டிச. 16 - ஜன. 15)
Silpis Corner (Series)
Silpi's Corner-04
Links of the Month
கல்கி வழியே முத்தொள்ளாயிரம்
அலர் எழுந்தது! அவர் பிரிந்தார்!
இதழ் எண். 42 > பயணப்பட்டோம்
முதல் பார்வையில் பாண்டியர் குடைவரைகள்
ச. கமலக்கண்ணன்

'இந்த மாதம் என்ன கட்டுரை எழுதலாம்?' என்று ஒவ்வொரு மாதமும் ஆசிரியர் குழுவினரையும் முனைவர் கலைக்கோவனையும் கேட்டுக்கேட்டு நச்சரித்து எனக்கே ஒரு மாதிரியாகப் போய்விட்டது. இதற்கு ஏதாவது தீர்வு கண்டாக வேண்டுமே! என்ன செய்யலாம்?

சென்ற வருடம் இந்தியா வந்திருந்தபோது வாங்கிய புத்தகங்களையே எத்தனை நாட்களுக்குத்தான் திரும்பத் திரும்பப் படித்துக்கொண்டே இருப்பது? புதிய புத்தகங்களை வாங்குவது எப்போது?

ஜப்பானுக்கு வருவதற்குமுன் கண்டு களித்த பல்லவர் மற்றும் சோழர் கலைமுறைகளை ஆராயக் கற்றுக்கொள்ள விழைந்தபோது தடையேதுமில்லாமல், நினைத்தவுடன் தஞ்சாவூர்/கும்பகோணத்திற்கோ, மாமல்லபுரம்/காஞ்சிபுரத்திற்கோ பயணம் மேற்கொள்ள முடிந்தது. ஆனால் இங்கு வந்தபின் ஆரம்பித்த பாண்டியர் கலைமுறை பற்றிய புரிதல்களுக்கு, நினைத்த நேரத்தில் பயணங்கள் மேற்கொள்ள முடியாமை ஒரு பெரும் தடையாக இருந்து வருகிறது. இதை எப்படி அகற்றுவது?

இப்படி வரலாறு.காம் தொடர்பாகவும், இதர சொந்த அலுவல்கள் காரணமாகவும் ஏற்படும் சில குறைகளை/தேவைகளை அடுத்த இந்தியப் பயணத்தின்போது தீர்த்துவிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். இதற்கு உதவியாக அமைந்தது போல், அலுவலகப்பணி தொடர்பாக இந்தியாவிலிருக்கும் தலைமையகத்திற்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதே நேரத்தில் உறவினரின் திருமணமும் அமைய, இரண்டையும் ஒரே வாரத்தில் வருமாறு திட்டத்தைச் சற்று மாற்றியமைத்து, நவம்பர் மூன்றாம் வாரம் இந்தியாவில் ஒரு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். எண்ணிச் சரியாகப் பத்தே நாட்களில் இந்த இரண்டு பணிகள் தவிர, மேற்சொன்ன பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முயன்றேன்.

முதல் பிரச்சினைக்கான தீர்வு சற்று சிக்கலானது. அதை எப்படிச் சமாளித்தேன் என்பதை நான் இப்போது கூறப்போவதில்லை. இனிவரும் மாதங்களில் மின்னிதழைப் பார்த்து வாசகர்களே ஊகித்துக் கொள்ளலாம்.

இரண்டாவது பிரச்சினை எளிதாகத் தீர்க்கப்படக்கூடியது. சென்னையில் ஒரு அரைநாள் தி.நகர் புதிய புத்தக உலகம் மற்றும் சில பதிப்பகங்களுக்குச் சென்று வந்தாலே போதுமானது. இந்தமுறை வாங்கியவற்றில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நூல், விகடன் பிரசுரத்தின் வெளியீடான 'கல்கி வளர்த்த தமிழ்' கட்டுரைத் தொகுப்பு. 1928 லிருந்து 1938 வரை ஆனந்த விகடனில் கல்கி எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து அருமையான நூலாக வெளியிட்டுள்ளனர். கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளைப் பற்றியும் அவருக்கே உரிய நகைச்சுவை கலந்த நடையில் எழுதியிருக்கிறார். அதிலும் குறிப்பாகப் பயணக்கட்டுரைகள் மிக அருமை. மாமல்லபுரம், தஞ்சை பெரியகோயில், மைசூர், இலங்கை முதலிய இடங்களுக்கு ஓவியர்கள் மணியம், மாலி மற்றும் விகடன் நிருபர்கள் குழுவுடன் பயணம் மேற்கொண்டிருக்கிறார். 1950களில் பொன்னியின் செல்வன் எழுதுவதற்கான தகவல்களைச் சேகரிக்க, 1930களிலேயே தஞ்சை மற்றும் இலங்கைப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். அல்லது பயணம் முடிந்தபிறகு சரித்திர நாவல் எழுதவேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கவேண்டும்.

மூன்றாவது பிரச்சினையும் ஓரளவுக்கு எளிதாகத் தீர்க்கப்படக்கூடியதுதான். ஆனால் அதற்கு வரலாறு.காம் ஆசிரியர் குழு மற்றும் முனைவர் கலைக்கோவன் ஆகியோரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். இந்த விடுமுறையைச் சிறிதும் வீணாக்காமல், நோக்கம் சிதறாமல், பாண்டியர் குடைவரைகளை மட்டுமே காண்பது என முடிவு செய்தோம். கோகுலும் இலாவண்யாவும் தற்போது அமெரிக்காவில் வசிப்பதாலும் விடுமுறை எடுப்பது முடியாத காரியமாதலாலும் அவர்கள் இல்லாமலேயே இப்பயணத்தைத் தொடங்க வேண்டியதாயிற்று. பயண அனுபவங்களைப் பிறகு தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் விரிவாக விளக்கியது அவர்களுக்குச் சற்று ஆறுதல் அளித்தது. கிருபாசங்கரும் பால.பத்மநாபனும் சென்னையில் இருந்தாலும், அவர்தம் குடும்பச் சூழ்நிலைகளால் கடைசி நேரத்தில் இதில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. கடந்த முறை பழுவூருக்கு எங்களுடன் வர பால.பத்மநாபன் பெருவிருப்புக் கொண்டிருந்தபோதும், அவரது பணிச்சூழல் அதற்குத் தடைவிதித்திருந்தது. இம்முறையும் வரமுடியாமல் போனதற்காக அவர் வருந்தியது எங்களுக்குத் துன்பத்தைத் தந்தாலும், அது அவர் எங்கள்மீது கொண்டிருந்த உண்மையான அன்பை முழுவதுமாகப் புரிந்துகொள்ள வழிவகுத்தது.

ஆக, கடைசியில் நான், லலிதாராம், சீதாராமன், முனைவர் கலைக்கோவன் மற்றும் முனைவர் நளினி ஆகியோர் மட்டும் பாண்டியர் குடைவரைகளைக் காணப் புறப்பட்டோம். முனைவர்கள் இருவரும் தற்போது 'மதுரை மாவட்டக் குடைவரைகள்' மற்றும் 'தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் தொகுதி 2' என்ற நூல்களை எழுதிக் கொண்டிருப்பதால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் சாத்தியமாயிற்று. குடைவரைகளுக்குச் செல்லும்முன், வரலாறு.காம் வாசகர்கள் மற்றும் எங்கள் குழுவின் நலம் விரும்பும் நண்பர்களுடன் நிகழ்ந்த சந்திப்புகளையும் தொலைபேசி உரையாடல்களையும் சுருக்கமாகப் பதிவுசெய்து விடுகிறேன்.

கடந்த ஆண்டு தஞ்சை இராஜராஜீசுவரத்தின் சிகரத்தை நோக்கிய பயணத்தின் பயணக்கட்டுரையில் தொடங்கி, பிற பயணக்கட்டுரைகளுக்கும் தொடர்ந்து பின்னூட்டம் மற்றும் தனிமடல்கள் வழியாகத் தன் கருத்துக்களைப் பறிமாறிக்கொண்டு எனது நட்பு வளையத்துக்குள் நுழைந்தவர், சென்னையைச் சேர்ந்த இல்லத்தரசி திருமதி. கு.சித்ரா. பல்வேறு தமிழ் இணையத் தளங்களில் சமூகக் கட்டுரைகளை எழுதும் இவர், ஓய்வு நேரங்களில் சென்னையிலிருந்து வரும் ஒரு சிற்றிதழிலும் பணியாற்றி வருகிறார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குப் பல பயணங்களை மேற்கொண்டு வரும் இவரிடம் பகிர்ந்து கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் முதல் தத்துவ இயல், வரலாற்றுப் புதினங்கள் வரை பரந்துபட்ட துறைகள் தொடர்பான நூல்களை நிறைய வாசிப்பவர். எங்கள் இருவருக்கும் ஒத்த ரசனையுள்ள துறைகளில் தற்போது புதிதாக வந்திருக்கும் புத்தகங்கள் பற்றி இவரிடமிருந்து தெரிந்துகொண்டேன். சில புத்தகங்களை அன்பளிப்பாகவும் தந்துள்ளார். அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது அருணனின் 'சரயூ' என்ற புதினம்.

'இராவண காவியம்' போல் இராமனுடைய எதிரியின் பக்கம் நின்று அவனது பலம் - பலவீனத்தைச் சித்தரிப்பது ஒருவகை இலக்கியம் என்றால், அவன் பக்கமே நின்று, அவனது சகோதரன் பக்கமே நின்று அதே காரியத்தைச் செய்கிறது இப்புதினம். இராமாயணத்தில் அதிகம் பேசாத, பேசப்படாத ஒரு கதாபாத்திரமான மாண்டவியின் (பரதனின் மனைவி) பார்வையில் இராமாயண நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன. பரதனின் முதலிரவில், இராமனின் தம்பியாகப் பிறந்ததால் சீதையின் தங்கையாகிய என்னை எவ்விதக் கஷ்டமுமின்றி அடைந்தீர்கள் என்று குத்திக்காட்டும் விதமாக, "சுவாமி, நீங்கள் எந்த தனுசை உடைத்தீர்கள் அல்லது வளைத்தீர்கள்?" என்ற மாண்டவியின் கேள்வியில் கதை சூடுபிடித்துப் பறக்க ஆரம்பிக்கிறது. இதுதான் வரலாற்று நாவலாசிரியர்களுக்கு உள்ள சுதந்திரம். வந்தியத்தேவனைப்பற்றி ஒரேயொரு கல்வெட்டு மட்டும் குறிப்பிடுகிறதென்றால், அதில் குறிப்பிடப்பட்ட செயலைத்தவிர வேறெதையும் செய்திருக்கமாட்டான் என்பது பொருளல்ல. அதேபோல், இராமாயணத்தில் மாண்டவி அதிகம் பேசாததால் வாழ்க்கையில் பேசாமலே இருந்தாள் என்று சொல்லமுடியாது. பரதனுடனும் சத்ருக்னன் மனைவி சுருதகீர்த்தியுடனும் கட்டாயம் பேசியிருப்பாள். என்ன பேசினாள் என்று வெளியில் தெரியாத அந்த உரையாடல்களைத் தனது கற்பனை மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தப் பயன்படுத்தியுள்ளார் ஆசிரியர். கல்கி பயன்படுத்தியதும் இந்த உத்தியைத்தான்.

மற்ற புத்தகங்களை இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை. தி.நகர் புதிய புத்தக உலகத்திற்கு என்னுடன் வந்த இவர்மூலம் அறிமுகமானவர் அதன் உரிமையாளரான திரு.சீனிவாசன். இவரும் நிறைய வாசிப்பவர் என்பது, பல்வேறு புத்தகங்களைப் பற்றி விளக்கிக்கூறி நிறை குறைகளை எடுத்துரைத்ததிலிருந்து புரிந்தது. இனிமையான மனிதர். ஏறத்தாழ அனைத்துத் துறைகளையும் சார்ந்த நூல்களின் தொகுப்பு, இவரது புத்தக வியாபாரி என்ற முகத்தையும் மீறிப் புத்தகங்களின் மீதான காதலைக் காட்டுகிறது. வரலாற்றுக்கென்று தனிப்பகுதி இருக்கிறது. அதிலிருந்து முனைவர் இரா.நாகசாமியின் 'உத்திரமேரூர்', அமரர் கொடுமுடி சண்முகத்தின் 'பழந்தமிழர் பொறியியல் நுட்பத்திறன்', இராகுல சாங்கிருத்தியாயனின் 'வால்காவிலிருந்து கங்கை வரை', கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட மதனின் 'வந்தார்கள் வென்றார்கள்', 'கி.மு - கி.பி' ஆகிய ஒலிப்புத்தகங்கள் மற்றும் சங்க இலக்கியம் தொடர்பான சில நூல்களையும் வாங்கினேன். அடுத்தமுறை செல்லும்போது வாங்குவதற்கான பட்டியல் தயாராகிக் கொண்டிருக்கிறது.

எங்கள் ஊருக்கு அருகிலேயே வசிக்கும் ஒருவர் வரலாறு.காமைத் தொடர்ந்து வாசிக்கிறார் என்று தெரியவந்ததும் மிகவும் அகமகிழ்ந்துபோனேன். அடுத்தமுறை ஊருக்குச் செல்லும்போது அவரைச் சந்திக்கவேண்டும் என்று நெடுநாட்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டேன். ஊருக்குச் செல்வதற்குச் சில நாட்களுக்கு முன் சந்திக்க விரும்பியதைத் தெரிவித்ததும் உடனே மகிழ்வுடன் ஒப்புக்கொண்டார், திருப்பூரில் பின்னலாடைத் தொழிற்சாலையை நடத்திவரும் திரு.ஜெகதீஷ் அவர்கள். சிலசமயங்களில் வரலாறு.காம் இதழ் வெளியாகத் தாமதமானால், ஏன் இன்னும் இதழ் மலரவில்லை? எத்தனை நாட்கள் எங்களைக் காக்க வைப்பதாக உத்தேசம்? என்று செல்லமாகக் கோபித்துக்கொள்வார். இவரது மனைவிக்கும் வரலாற்றிலும் வரலாறு.காம் படிப்பதிலும் ஆர்வம் இருந்தாலும், அன்று வரமுடியவில்லை. ஜெகதீஷுக்குத் தமிழக வரலாற்றின்மீது காதலை ஏற்படுத்தியது பெரும்பாலான வாசகர்களைப்போல் 'பொன்னியின் செல்வன்'தான். அதைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள வரலாறு.காம் உதவி வருகிறது என்று அவர் சொன்னபோது, ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தாயைப்போன்ற மனநிறைவு ஏற்பட்டது. நான்கு ஆண்டுகள் தொடர்ந்து உழைத்து வருவது வீண்போகவில்லை என்பது மீண்டும் ஒருமுறை உறுதிப்பட்டது. தொழிற்சாலையை நிர்வகிக்கும் சுமைமிகுந்த பணிச்சூழலுக்கு மத்தியிலும் மாதந்தோறும் இதழ் வெளியானவுடன் படிக்கவும் என் இல்லத்திற்கே நேரில் வந்து சந்தித்ததற்கும் நேரம் ஒதுக்கியதற்காக மீண்டும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை செல்லும்போதெல்லாம் கட்டாயம் சந்திக்கும் நண்பர்களின் வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் மா.ரா.அரசு. முனைவர் கலைக்கோவன் அவர்களின் இளவல் என்ற அறிமுகமும், இதழியல் துறையில் அவருக்கிருந்த ஆய்வனுபவமும் எங்களுக்குத் தக்க நேரத்தில் தக்க ஆலோசனைகளை வழங்கி ஊக்குவித்து நட்பை வளர்த்தன. எங்கள் கட்டுரைகளைப் பாரபட்சமில்லாமல் விமர்சனம் செய்து, எழுத்துக்களைக் கூர்மை செய்து கொள்ள உதவியவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் சன் டி.வியின் வணக்கம் தமிழகத்தில் என் நேர்காணல் வெளியானதற்குக் காரணமாக இருந்தவர். மற்றும் பல்வேறு நேரங்களில் காலத்தினால் செய்த உதவிகளுக்காக என்றென்றும் எங்கள் நன்றிக்குரியவர். ஒவ்வொரு முறை இவரைச் சந்திக்கச் செல்லும்போதும் இன்னின்ன விஷயங்கள் பற்றி இவரிடம் பேசவேண்டும் என்று பட்டியலுடன் செல்வோம். ஆனால் திரும்பி வரும்போது அவற்றில் பாதியைக்கூட நிறைவு செய்திருக்கமாட்டோம். சிந்தனையைத் தூண்டும் விதமான இவரது பதில்களால் பல்வேறு கிளைக்கேள்விகள் முளைத்தெழுந்து அடுத்துக் கேட்க இருந்த பொருளை மறக்கச் செய்துவிடும். இப்படித்தான் இந்த தடவையும் ஆயிற்று. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியைப் பற்றி முனைவர் பட்ட ஆய்வு செய்திருந்ததால், வ.உ.சியின் பேரன் திரு.காளிராஜன் அவர்கள் டோக்கியோவில் பேராசிரியராகப் பணியாற்றும் தகவலை இவருடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்து, உரையாடல் பல்வேறு திசைகளுக்குச் சென்றதால் முடியாமல் விட்டுப்போயிற்று.

சென்னையிலிருக்கும் மற்றொரு முக்கியமான நண்பர் எங்கள் பெரியண்ணன் சுந்தர் பரத்வாஜ். பொ.செ குழுவின் முதல் யாத்திரையில் தொடங்கிய எங்கள் நட்பு திருவலஞ்சுழி ஆய்வுப் பயணங்களின்போது நெருக்கமாகி, தற்போது அடிக்கடி நேரில் சந்திக்க முடியாவிட்டாலும், கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் போல் மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் வளர்ந்து வருகிறது. இந்தமுறை இவரைச் சந்திக்கச் சென்றபோது இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய சென்னைப் போக்குவரத்தை மனதில் கொண்டு திட்டமிட்டதால், மூன்று மணிநேரங்கள் சுருங்கி ஒரு மணிநேரம் மட்டுமே சாத்தியப்பட்டது. வரலாற்றாய்வு, தொல்லியல், பழங்கோயில் சீரமைப்பு என்று பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசினோம். சில உரையாடல்கள் எங்கள் இருவருக்கும் அந்தரங்கமானவை, சில பொதுவானவை. எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் வெளிப்படையாக நாங்கள் பேசிக்கொள்வதால்தான், சிலர் எங்களது நட்புக்கு இடையூறு ஏற்படுத்த முயன்றபோதும் அதை முறியடிக்க முடிந்தது. வரலாறு.காம் இதழைத் தொடர்ந்து படித்து, தேவைப்படும்போது தம் கருத்துக்களை எந்தத் தயக்கமுமின்றிப் பகிர்ந்துவரும் நண்பர் சதீஷுடன் தொலைபேசியில் பேசினேன். கடந்த ஐந்தாறு மாதங்களாக பொ.செ மடலாடற்குழுவின் மின்னஞ்சல்களைப் படிக்கவில்லை. அதில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள இந்தத் தொலைபேசி உரையாடல் உதவியது. முன்பே சொல்லியிருந்தால், பெரியண்ணனைச் சந்திக்க நானும் வந்திருப்பேனே என்றார். சென்னையில் மழைபெய்தால், எப்போது என்ன காரியத்தைச் செய்யமுடியும் என்பது அவரவருக்கே நிச்சயமில்லாததால் முன்கூட்டியே தெரிவிக்க முடியவில்லை.

நமது மின்னிதழில் புதிதாகத் துவங்கப்பட்டிருக்கும் வாசகர் சிறப்புக்கட்டுரை பகுதியில் கடந்தமாதம் அறிமுகமான ரிஷியா அவர்களுடனும் தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பமைந்தது. ஏற்கனவே மின்னஞ்சலில் தொடர்பு கொண்டிருப்பினும், தொலைபேசியில் உரையாடியபோது மேலும் இவரைப்பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. 7, 8ஆம் வகுப்புகளில் படிக்கும்போதே இராஜராஜருக்கும் இவருக்கும் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. காதலாகிக் கசிந்துருகி, இராஜராஜீசுவரம் செல்லும்போதெல்லாம் கண்ணீர் மல்கி, இராஜராஜருடன் தனிமையில் உரையாடி, தற்போது ஓரளவுக்குத்(தான்!!) தேறியிருக்கிறார். இன்றும் சிலர் எண்ணிக் கொண்டிருப்பதைப்போல், இராஜராஜர் பெரியகோயில் விமான உச்சியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டார் என்றுதான் ஆரம்பத்தில் நம்பியிருக்கிறார். பிறகு இது உண்மையல்ல என்று தெரியவந்தபோது பெரும் நிம்மதியடைந்தார். MBA படிக்கும்போது, வெளிநாட்டு அறிஞர்களின் மேலாண்மை தொடர்பான தியரிகளைவிட வள்ளுவரின் மேலாண்மைக் கருத்துக்களும் இராஜராஜரின் நிர்வாக நுணுக்கங்களும் எந்த விதத்திலும் குறைந்ததல்ல என்று கண்டுகொண்டார் கண்டுகொண்டார். அதுமட்டுமல்ல, இவை நம் நாட்டின் சூழலுக்கு வெகுவாகப் பொருந்திவரும் என்றும் உணர்ந்து, அது தொடர்பாக மேலதிக விவரங்களைச் சேகரித்து வருகிறார். வருங்காலத்தில் இராஜராஜரின் நிர்வாக இயலை மாணவர்கள் ஒரு பாடமாகப் படித்துப் பயன்பெற வழிவகை செய்யவேண்டும் என்பது இவரது வாழ்க்கை இலட்சியங்களில் ஒன்று. இவரைப்பற்றி இங்கே மேலும் கூறுவதைவிட, இனிவரும் இதழ்களில் இவரது கட்டுரைகளை வைத்துத் தெரிந்து கொள்வதே பொருத்தமானதென்று நினைக்கிறேன்.

சந்திக்க விரும்பிய நண்பர்கள் பட்டியலில் இன்னும் எண்ணற்றோர் இருந்தாலும், காலதேவனின் கடிகாரத்தில் ஒரு நாளைக்கு 24 மணிநேரங்கள் மட்டுமே இருந்ததாலும், எனது மேலதிகாரி விடுப்பாகப் பத்து நாட்களை மட்டுமே அளித்திருந்ததாலும், தொடர்புகொள்ள முடியாமல் போயிற்று. அடுத்தமுறை நிச்சயம் தொடர்புகொள்ள அல்லது சந்திக்க முயற்சி செய்வேன்.

பாண்டிய நாட்டிற்குச் செல்வதற்காக நான் கொங்கு நாட்டிலிருந்து புறப்பட்டு, சோழநாடு வந்து முனைவர் கலைக்கோவனையும் முனைவர் நளினியையும் அழைத்துக்கொண்டு, ஏற்கனவே ஹொய்சள நாட்டிலிருந்தும் சோழநாட்டிலிருந்தும் வந்து, பாண்டிய நாட்டில் முகாமிட்டிருக்கும் லலிதாராமையும் சீதாராமனையும் சேர்த்துக்கொண்டு குடைவரைகளை நோக்கிப் பயணிப்பதென்று திட்டம் தயாரானது. சோழநாட்டில் நுழையும்போது மாலை மணி மூன்றரை ஆகியிருந்தது. ஐந்து மணிக்குத்தான் டாக்டர் மருத்துவமனைக்கு வருவார். அதுவரை விசித்திரசித்தரின் இலளிதாங்குர பல்லவேசுவரகிருகத்தை ஒரு பார்வை பார்த்துவிடலாம் என்றெண்ணி, உச்சிப் பிள்ளையாரை நோக்கி ஏறத் தொடங்கினேன். கிட்டத்தட்ட மலையுச்சிக்கு வெகு அருகில் இருக்கும் குடைவரைக்குள் நுழைந்ததும் நான் கண்ட காட்சி ஒன்றும் விசித்திரமானதல்ல. காவலர் நடமாட்டம் அதிகமில்லாத பொது இடங்களில் காணக்கூடியதுதான். ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார். இருவர் கொஞ்சிக் கொண்டிருந்தனர்.

இவர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, கங்காதரரை நோக்கிப் பார்வையைத் திருப்பினேன். சட்டென்று மூளையில் ஒரு விஷயம் உதயமானது. பார்த்திபன் கனவு நாவலில் ஒரு நிகழ்வு வரும். விக்கிரமனைப் பார்த்திபர் ஓவியங்களைக் காட்ட அழைத்துச் சென்றிருக்கும்போது, பொன்னன் வள்ளியிடம் திருச்சி (கதையில் உறையூர் என்று வரும்) மலைக்கோட்டையைக் காட்டி, இக்குன்றின் மத்தியிலிருக்கும் ஒரு குகையில்தான் ஓவியங்கள் இருப்பதாகக் கூறுவான். கல்கி நிச்சயம் இதைத்தான் அப்படிக் குறிப்பிட்டிருப்பார் என்று நினைக்கிறேன். இங்கு ஓவியங்கள் இல்லாவிடினும், அழகிய கங்காதரர் சிற்பத்தொகுதி இருக்கிறது. கங்கையின் கொட்டத்தை அடக்கும் கதையை விளக்கும் நிகழ்ச்சியை அப்படியே 3D புகைப்படம் எடுத்து வைத்ததுபோல் இருக்கிறது. பல்வேறு அறிஞர்கள் இச்சிற்பத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். ஆனால் யாருமே, இத்தொகுதியில் இடம்பெற்றிருக்கும் நாயைப் பற்றி விளக்கிக் கூறியதில்லை. நாய்க்கும் கங்கையின் கொட்டம் அடக்கப்பட்ட கதைக்கும் என்ன தொடர்பு என்பது இன்னும் புரியாத புதிராகத்தான் இருக்கிறது.

இதன்முன் நான் நின்று பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு பெண் (கைடாக இருக்கவேண்டும்) இரண்டு வட இந்தியர்களை அழைத்து வந்திருந்தார். இச்சிற்பத்தைப் பற்றி விளக்கிக் கொண்டே வந்தவர், இதிலிருக்கும் சிவபெருமான் பாம்பு முப்புரிநூலை அணிந்திருக்கிறார் என்றதும், தூக்கிவாரிப்போட்டது எனக்கு. நான் இடைமறித்து, பாம்பு தனியாகக் கையில் இருக்கிறது. முப்புரிநூல் துணியாலானது. இதோ பிரம்ம முடிச்சு இருக்கிறது என்று சுட்டிக்காட்டினேன். உடனே, 'வாருங்கள் உச்சிப் பிள்ளையாரைப் பார்க்கலாம்' என்று மேலே அழைத்துக் கொண்டு போய்விட்டார். அவர்களும் நன்றி கூறிச் சென்றுவிட்டனர். ஏற்கனவே மாமல்லபுரத்தில் தர்மராஜரதத்திலும் கடற்கரைக்கோயிலிலும் இதுபோன்ற கைடுகளின் 'சரடு'களை ஏராளமாகக் கேட்டிருக்கிறோம். உண்மையிலேயே தெரிந்து கொள்ளவேண்டும் என்று ஆர்வம் இருப்பவர்களுக்குப் புத்தகங்கள்தான் பெரும்துணை. இப்படித்தான் முதல்முறை நானும் லலிதாராமும் இங்குச் சென்றிருந்தபோது முனைவர் கலைக்கோவனின் 'மகேந்திரர் குடைவரைகள்' நூலை எடுத்துச் சென்று இக்குடைவரையின் கட்டடக்கலையையும் சிற்பங்களையும் விளங்கிக் கொண்டோம்.







கங்காதரர் சிற்பத்தொகுதி



கங்கையும் அவளை இரண்டு முடிக்கற்றைகளில் தாங்கிப் பிடித்தவரும்



இந்த நாய் எதற்காக இங்கே?



கர்வம் அடக்கப்பட்ட கங்கை



பழங்கால வாயிற்காவலர்களும் இக்கால வாயிலும்





பட்டையுடன் கூடிய தரங்கப் போதிகைகள்





இதற்குள் மணி ஐந்தரையைத் தொட்டுவிடவே, தென்னூரை நோக்கி விரைந்தேன். அங்கு டாக்டரிடம் சிறிதுநேரம் நலம் விசாரித்துவிட்டு, அவருடன் வெளியில் சென்று சொந்த அலுவல் ஒன்றை முடித்துக்கொண்டு, மீண்டும் அவரது அறையில் உரையாட அமர்ந்தோம். வரலாறு.காம் மின்னிதழ், வரலாறு ஆய்விதழ், ஐராவதி, விகடன் தீபாவளி மலர்க் கட்டுரைகள், உடையாளூர், திருப்பரங்குன்றம், பல்லவர்-பாண்டியர் குடைவரைகள் ஒப்பீடு என்று கலந்து கட்டி அடித்தோம். அதாவது, வழக்கம்போல நான் கேள்வி கேட்டேன். டாக்டர் பதில் கூறினார். ஆனால் கடைசிக் கேள்விக்கு மட்டும் பதில் கூற மறுத்துவிட்டார். இன்று மாலைதான் பல்லவர் குடைவரை ஒன்று பார்த்திருக்கிறீர்கள். நாளை பாண்டியர் குடைவரைகள் சில பார்க்கப் போகிறீர்கள். அதன்பின் நீங்களே ஒப்பிடுங்கள். நான் உங்கள் மனதில் முன்கூட்டியே எந்தப் பிம்பத்தையும் வரைய விரும்பவில்லை என்றார். அதுவும் சரியென்று படவே, சம்மதித்தேன். என்னுடைய புரிதலை இக்கட்டுரையில் உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். அதற்காகவே அவரது 'தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் தொகுதி 1' நூலை இன்னும் படிக்காமல் வைத்திருக்கிறேன். பல்லவர் மற்றும் சோழர் கட்டடக்கலையைக் கற்றுக்கொள்ளும்போது இத்தகைய வாய்ப்பு அமையவில்லை. கோயில்களுக்குச் சென்று பார்ப்பதற்கு முன் புத்தகங்களில் படித்தோம். படித்தபோது ஒன்றும் புரியவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் இப்போது முதலில் குடைவரையைப் பார்த்துப் புரிந்து கொண்டுவிட்டு, பிறகு புத்தகத்தைப் படித்துச் சந்தேகங்களைத் தெளிவு படுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்.

23-நவம்பர் காலை 6 மணிக்கே திருச்சியை விட்டுக் கிளம்பி, மதுரையில் லலிதாராமையும் சீதாராமனையும் அழைத்துக்கொண்டு நாங்கள் முதலில் சென்ற இடம் செவல்பட்டி. மதுரையிலிருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் கோவில்பட்டி தாண்டி அமைந்துள்ள இக்குடைவரைக்குச் சென்று சேர்வதற்குள், சுற்றுப்பட்டி பதினெட்டு கிராமங்களில் இருந்தவர்களுக்கும் நாங்கள் அங்கு செல்வது தெரிந்துவிட்டது. மெயின் ரோட்டிலிருந்து வயல் வரப்புகளினூடாகச் செல்லும் ஒரு மண் சாலையில் திரும்பி ஒரு மரத்தடியில் வண்டி நின்றபிறகு அனைவரின் முகத்திலும் ஒரு வெற்றிப்புன்னகை தோன்றியது. ஆனால், அடுத்தநாள் வாடிக்கோட்டைக் குடைவரையைத் தேடியலைந்தபோது, செவல்பட்டிக்கு அவ்வளவாகக் கஷ்டப்படவே இல்லை என்று தோன்றியது. நவரசங்களும் கலந்த அந்த வெற்றிக்கதையை லலிதாராமின் கட்டுரையில் காணலாம். குடைவரைக்குச் செல்லப் பாதை ஏதுமில்லை. குத்துமதிப்பாக மேலே குடைவரையைப் பார்த்துக்கொண்டே, முட்கள் இல்லாத இடத்தில் கால்வைத்து முன்னேற வேண்டியதுதான். கருவறையில் இறைத்திருமேனி ஏதும் இல்லையாதலால் வழிபாடு இல்லை. வழிபாடில்லாததால் அதை அடைவதற்கான பாதையும் இல்லை. ஆனால் சுவர்களுக்குச் சுண்ணாம்பு அடித்து, கோட்டச் சிற்பங்களுக்கு எண்ணெய் பூசப்பட்டிருந்தது. அதுதான் எதற்கென்று தெரியவில்லை.







செவல்பட்டி குடைவரைப் பிள்ளையாரைப் படம்பிடிக்கும் முனைவர் இரா.கலைக்கோவன்





உள்ளே நுழைந்ததுமே, முந்தையநாள் பார்த்த பல்லவர் குடைவரைக்கும் இதற்கும் என்னென்ன வித்தியாசங்கள் இருக்கின்றன என்று மனம் ஒப்பிட ஆரம்பித்தது. கீழ்க்கண்ட வித்தியாசங்கள் மனதில் பட்டன. பொதுவாகப் பல்லவர் குடைவரைகளில் தாங்குதளம் மற்றும் கூரை உறுப்புகள் (தளவானூருக்குப் பிறகு) முழுமையாக இல்லாவிடினும், முற்றுப்பெறாமலாவது இருக்கும். ஆனால் பாண்டியர் குடைவரைகளில் அதற்கான முயற்சிகளே மிக அரிதாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான பல்லவர் குடைவரைகளில் முகப்பு, முகமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என்று இருக்கும். இங்கு பெரும்பாலும் அர்த்தமண்டபம் காணப்படுவதில்லை. முக்கியமாகக் கவனிக்க வேண்டியது வாயிற்காவலர்களின் உருவ அமைப்பு. பல்லவ வாயிலோர்களுக்கு இருப்பதுபோல் இயல்பான உடல் ஓரளவுக்கு இருந்தாலும், ஒரு விறைப்புத்தன்மை காணப்படுகிறது. முக அமைப்பை வைத்து இரு நாட்டவர்களையும் வேறுபடுத்தி இனங்கண்டு கொள்ளலாம்.







செவல்பட்டி குடைவரைக் காவலர்கள்





மேலே உள்ள பல்லவநாட்டு வாயிலைக் காத்தவர்களுக்கும் பாண்டியநாட்டு வாயிலைக் காத்தவர்களையும் சற்று ஒப்புநோக்குங்கள்!!!

இப்படிச் சில வித்தியாசங்களை டாக்டரிடம் சொன்னதும், 'இவையெல்லாம் ஓரளவிற்குச் சரிதான். பார்த்தவுடனேயே ஒரு வித்தியாசம் தோன்றவேண்டுமே?' என்றார். பார்த்தவுடனேயா? அது என்ன அப்படிப்பட்டது? என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, 'யோசித்துக்கொண்டே கட்டுரையைச் சரிபார்த்துவிடலாமா?' என்றார். ஒரு விஷயத்தை வாசகர்களுக்கு இங்கே தெளிவுபடுத்தி விடுகிறேன். டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்திலிருந்து வெளிவரும் எந்தவொரு கட்டுரையாயினும், புத்தகமாயினும் வரிக்குவரி சரிபார்த்த பிறகே வருகிறது. ஒரு கோயிலை ஆய்வு செய்ய எவ்வளவு சிரத்தை எடுத்துக்கொள்கிறார்களோ, அதைவிட அதிக கவனம் கட்டுரையாக்கத்திலும் தரவுகளின் உண்மைத்தன்மையிலும் இருக்கும். ஏதோ நாங்களும் ஒரு புத்தகம் எழுதினோம் என்று எதையும் இவர்கள் எழுதுவதில்லை. கடந்த இருபது ஆண்டுகளில் நான்கைந்து தடவைகள் இங்கு வந்து ஆய்வு மேற்கொண்டு குறிப்புகளை எடுத்து வைத்திருந்தாலும், தற்போது 'மதுரை மாவட்டக் குடைவரைகள்' நூலுக்காக அக்குறிப்புகளைக் கட்டுரையாக்கி இந்தமுறை செல்லும்போது கட்டுரையை அங்கேயே ஒருமுறை வாசித்து, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று உறுதிப்படுத்துவதாகத் திட்டம். கட்டுரையை நான் படிக்க, டாக்டர் ஒவ்வொரு இடமாகச் சரிபார்க்க, நளினி வேறு ஏதாவது புதிய தகவல் கிடைக்கிறதா என்று தேட, லலிதாராமும் சீதாராமனும் நான் படிப்பதையும் டாக்டர் பார்க்குமிடத்தையும் ஒப்பிட்டுக் குடைவரை அமைப்பைப் புரிந்துகொள்ள முயற்சிக்க, அந்த இடமே ஒரு பயிற்சிக்கூடம் போலக் காட்சியளித்தது.

கீழேயிருந்து இதைப் பார்த்த வாகன ஓட்டுநர், 'இந்த மொட்டைப்பாறைக்கு நடுவில் நின்றுகொண்டு இவர்கள் அப்படி என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள்' என்று குழம்பிக் கொண்டிருந்தார். அடுத்தநாள் திரும்பி வரும்போது வாய்விட்டுக் கேட்டேவிட்டார். வழக்கமாகத் திருச்சி, மதுரைப்பக்கம் போகவேண்டுமென்று வாடகைவண்டி எடுப்பவர்கள், மீனாட்சியம்மன் கோயிலுக்கோ அல்லது சுற்றுலாத்தலங்களுக்கோ செல்வதுதான் வழக்கம். இந்த இரண்டுங்கெட்டான் இடங்களுக்கு வந்து என்ன செய்கிறீர்கள் என்றார். நாங்களும் இத்தகைய கேள்வியை எதிர்கொள்வது முதல்முறை அல்ல என்பதால், அவர் திருப்திப்படும் விதமாக ஒரு பதிலைச் சொல்லிவைத்தோம்.

கட்டுரையைப் படித்து முடித்தவுடன், டாக்டர் திருத்தங்களைச் சொல்ல, நளினி அவற்றைக் குறிப்பெடுக்க ஆரம்பித்தார். இந்த இடைவெளியில், குடைவரைக்கு வெளிப்புறத்தில் ஒரு கல்லில் கல்வெட்டும் சிற்பமும் இருக்கும். எங்கே இருக்கிறதென்று தேடிப்பாருங்கள் என்று எங்களைப் பணித்தார். நாங்களும் வெளியே சென்று தேடிக்கொண்டிருக்கையில், சுற்றிலும் விரிந்த பச்சைப்பசேல் என்ற இயற்கைக் காட்சியைப் பார்த்து வியந்துபோய்ப் புகைப்படக்கருவியில் பத்திரப்படுத்த ஆரம்பித்தோம். சிறிதுநேரம் அரட்டையடித்தபடி தேடிவிட்டு, 'ஒன்றும் காணோம் சார்!!' என்று டாக்டரிடம் சென்று கூறினோம்.

'ஒன்றும் காணோமா? இவ்வளவு கூலாகச் சொல்கிறீர்கள்?' என்று கடிந்து கொண்டார். 'நளினிக்கும் அகிலாவுக்கும் இருக்கும் கடமையுணர்ச்சி இவர்களுக்கு வர இன்னும் கொஞ்ச காலமாகும்' என்று எண்ணியிருப்பார்.

'அடுத்தமுறை இதுபோல் மீண்டும் நிகழக்கூடாது' என்று எங்களை நாங்களே எச்சரித்துக் கொண்டோம்.

'பார்த்தவுடனேயே தோன்ற வேண்டிய வித்தியாசம் தோன்றியதா?' என்றார்.

'எவ்வளவு யோசித்தும் தோன்றவில்லை சார்!' என்றோம்.

'இலளிதாங்குரம் எத்தனை பெரிது? அதனுடன் ஒப்பிடும்போது இது பாதியளவுகூட இல்லை' என்றார்.

உண்மைதான். பல்லவர் குடைவரைகள் சற்று பிரம்மாண்டமாகத்தான் இருக்கும். ஒன்பது கருவறைகள் கொண்ட மாமண்டூர்க் குடைவரை கண்ணில் தோன்றி மறைந்தது. இக்குடைவரையைப் பார்த்ததுமே இந்த வித்தியாசம் புலப்பட்டது என்றாலும், இது அவ்வளவு முக்கியமானது என்று படவில்லை. நாங்கள் பார்த்த பாண்டியர் குடைவரைகள் அனைத்துமே அளவில் மிகச்சிறியனவாகவே இருந்தன. எங்களை மிகவும் வியக்கவைத்த ஒரு விஷயம் கட்டடக்கலை தொடர்பானது. வடதமிழ்நாட்டில் மகேந்திரர் காலத்தில் குடைவரைகள் குடையப்படும் முன்னர், செங்கல்லாலும் சுதையாலும் ஆன கட்டுமானங்கள் கட்டப்பட்டு வந்தன. அவற்றில் கையாளப்பட்டு வந்த தாங்குதளம், போதிகை, கூரை உறுப்புகள் போன்ற கட்டடக்கலைக் கூறுகள் படிப்படியாகக் குடைவரைகளிலும் சோதனை முயற்சியாக நுழைக்கப்பட்டு வந்தன. போதிகைகளின் அமைப்பும் காலந்தோறும் மாறிவந்தன. இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவெனில், வடதமிழ்நாட்டிலும் தென்தமிழ்நாட்டிலும் எப்படி இவை ஏறத்தாழ ஒரே மாதிரியாக மாற்றம் பெற்று வந்திருக்கின்றன என்பதுதான். அல்லது இன்னும் பல குடைவரைகளைப் பார்த்திருந்தால், அப்படி இல்லை என்று தோன்றலாமோ என்னவோ!! இப்போதைக்கு எங்களுக்கு இது புதிராகத்தான் இருக்கிறது.

குடைவரையின் முகப்பு நடுவில் இரண்டு முழுத்தூண்களையும் ஓரத்தில் இரண்டு அரைத்தூண்களையும் பெற்று மூன்று அங்கணங்களைத் திறப்புகளாகவும் நடு அங்கணத்தின் கீழே படிகளுடனும் அமைந்துள்ளது. படிகளின் மீதேறிச் சென்றவுடன் நம்மை வரவேற்பது நடுக்கோட்டத்திலிருக்கும் விஷ்ணு. விஷ்ணுவிற்கு இடதுபுறம் பிள்ளையார், வலதுபுறம் ஆடல்நாயகன். முகப்புத் தூண்களில் அமைந்துள்ள தரங்கப் போதிகைகள் உத்திரம் தாங்க, அதற்குமேல் வாஜனம். வலபியோ, அதில் பூதவரியோ இல்லை. இவைதவிர, இரு கைகள் மட்டும் கொண்ட கோட்டப் பிள்ளையார், ஆடல்நாயகன் மற்றும் விஷ்ணு சிற்பங்களின் அமைப்பு, கைமுத்திரைகள், கால் மற்றும் ஆசன அமைப்பு ஆகியவற்றைப் பற்றி ஆராய்ந்து சந்தேகங்களைப் போக்கிக்கொண்டு, கீழே இறங்க ஆரம்பித்தோம்.







இரண்டு கைகளையுடைய பிள்ளையார்



ஆடல்நாயகன்



மகாவிஷ்ணு



குடைவரைக்கு வெளியே விரியும் இயற்கைச்சூழல்





குழப்பத்தில் ஆழ்ந்திருந்து நித்திராதேவியைத் துணைக்கழைத்திருந்த ஓட்டுநரை எழுப்பி, வண்டியைச் சங்கரன்கோவில் நோக்கி விடச்சொன்னோம். அதற்குள், காலையில் மீனாட்சிபவனில் சாப்பிட்டிருந்த பொங்கல், வடை, தோசை எல்லாம் ஜீரணம் ஆகிவிட்டிருக்க, மலையடிக்குறிச்சி குருக்கள் திரு.ஜி.சுப்பிரமணிய அய்யர் அவர்கள் வீட்டில் எங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் மதிய உணவை நோக்கி நாலுசக்கரப் பாய்ச்சலில் அந்த டொயோட்டா இன்னோவா பறந்து கொண்டிருந்தது. வண்டியின் எஞ்சின் ஓடத் தொடங்கியதுமே, விட்ட இடத்திலிருந்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எங்கள் அரட்டைக் கச்சேரியும் தொடர்ந்தது. நல்லவேளையாக, முனைவர் நளினி முன் இருக்கையில் அமர்ந்து, மலையடிக்குறிச்சிக்கு வழிகேட்டுச் சொன்னதால், மலையடிக்குறிச்சியை அடையும்வரை எங்கள் அரட்டைக் கச்சேரி தொய்வின்றி நடந்து முடிந்தது. மலையடிக்குறிச்சியை அடைந்து, சுப்பிரமணிய குருக்கள் இல்லத்துக்கு வழிகேட்டு விரைந்து சென்று பசியாசுரனுக்குச் சுவையான தீனி படைத்து, அவர்தம் குடும்பத்தார்க்கு வயிறார்ந்த நன்றியைத் தெரிவித்துவிட்டு, குடைவரையை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

கடந்த நவம்பர் 2006 மாத இதழில் தேவை வாசகர்கள் சேவை என்ற தலைப்பில் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருந்தோம். மெயின் ரோட்டிலிருந்து குடைவரையை அடையும் பாதை முறையான பராமரிப்பின்றி அணுகுவதற்குக் கடினமாக இருக்கிறது. இதன் வழியாகத்தான் அர்ச்சகர்கள் தினமும் குடைவரைக்குச் சென்று பூஜை செய்து வருகிறார்கள். இரவு நேரங்களில் விஷஜந்துக்களின் நடமாட்டமும் உண்டாம். பாதி தூரத்தைக் கடந்ததும் நம் கண்ணில் முதலில் படுவது பிற்காலக் கட்டுமானமான முன்மண்டபம். முன்மண்டபத்தில் நுழைந்ததும், இங்கு இதற்குமுன் வந்திருக்கிறோமா? ஏதோ பழகிய இடம்போல் தெரிகிறதே! என்று ஒரு கணம் குழம்பிப் போனோம். பிறகு, புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோயில் குடைவரையும் இதுவும் கிட்டத்தட்ட ஒரே அமைப்பில்தான் இருக்கிறது என்று டாக்டர் சொல்லியதும்தான், அதுவேறு, இதுவேறு என்று குழப்பம் தெளிந்தது. இங்குள்ள கல்வெட்டு இக்குடைவரை எடுப்பிக்கப்பட்டது கி.பி 737 என்று தெரிவிக்கிறது. அது எப்படி மிகச்சரியாக கி.பி 737? இக்குடைவரை வெட்டப்பட்டது பாண்டியமன்னன் கோமாறன் சேந்தன் என்பவனின் 17ம் ஆட்சியாண்டில். இவனது ஆட்சிக்காலம் கி.பி 720 முதல் கி.பி 750 வரை என வரலாற்றறிஞர்களால் வரையறுக்கப்பட்டுள்ளது.

முகப்பிலிருக்கும் இரண்டு அரைத்தூண்கள் மற்றும் இரண்டு முழுத்தூண்களில் சிலவற்றில் தாமரைப்பதக்கங்களும் சிலவற்றில் கொடிக்கருக்குப் பதக்கங்களும் இடம்பெற்றுள்ளன. இரண்டுக்கும் என்ன வித்தியாசமா? கீழேயுள்ள படத்தைப் பாருங்கள்!! இந்தத் தூண்களில் இன்னும் இரண்டு சிறப்பம்சங்களும் இருக்கின்றன. ஒன்று, இக்குடைவரையை வெட்டியவரின் பெயர் சொல்லும் கல்வெட்டு. அடுத்தது போதிகைகள். பல்லவர்கள் குடைவரை குடைய ஆரம்பித்த காலத்திலிருந்து தரங்கப்போதிகைகள் இருக்கின்றன. இங்கு ஒரு வித்தியாசம் என்னவெனில், சுருள் சுருளாக இருக்கும் தரங்கங்கள் எதிரெதிர் எழுச்சியைக் கொண்டிருக்கின்றன. படத்தைப் பார்த்தீர்களானால், 'ஓ' என்ற எழுத்தின் மேல்பாதி போல இருக்கும்.







பட்டையுடன் கூடிய தரங்கப் போதிகை



தாமரைப் பதக்கம்



கொடிக்கருக்குப் பதக்கம்





அடுத்துக் கருவறைக்குச் சென்றோமானால், அது பாதபந்தத் தாங்குதளத்தைக் கொண்டிருப்பதைக் காணலாம். இவ்வளவு எளிய பாதபந்தமா? சிற்பி சரியான கஞ்சனாக இருந்திருப்பான் போலிருக்கிறது என்று எண்ணிக்கொண்டே, சற்றே நிமிர்ந்தேன். தலைசுற்றிப் போனேன். ஆஹா! அவனே வள்ளலென்று உணர்ந்தேன். நான்கு மகரங்களும் அவற்றின் வாய்களிலிருந்து வாளுடனும் கேடயத்துடனும் தோன்றும் வீரர்கள், அவற்றின் தோகைகளை அழகான கலையம்சத்துடன் அனுபவித்துச் செதுக்கியிருக்கிறான். குடைவரைகளில் மகரதோரணம் அமைக்கப்படுவது மிகவும் அரிது. தளவானூர் சத்ருமல்லேசுவராலயத்தில் இருக்கிறது. நடுவில் முருகன் சிற்பம் வடிக்கப்பட்டிருப்பதால், பாண்டியர்கள் முருக பக்தர்களா என்று கேட்காதீர்கள். கருவறையில் இருப்பது லிங்கம். இவ்வளவையும் பார்த்துவிட்டு, வீட்டிற்கு வந்து பார்த்தால்தான் தெரிகிறது, இம்மகரதோரணத்தைப் படம் எடுக்கவே இல்லை என்பது. இப்போதுதான் டிஜிடல் கேமிரா வாங்கியிருப்பதால், பழைய SLRல் எடுத்துக் கொண்டிருந்தபோது இருந்த கஞ்சத்தனம் இன்னும் முற்றிலுமாக விலகவில்லை. டிஜிடலின் தாராள மனப்பான்மை வர இன்னும் சிறிது காலமாகும். மூன்று பேரும் போட்டி போட்டு எடுத்துக் கொண்டிருந்ததால், பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்றெண்ணி, பிறகு விட்டுப்போய்விட்டது. இன்னொரு முக்கியமான விஷயமும் இங்குண்டு. கருவறை வாயிலுக்கு இருபுறமும் இருக்கும் வாயிற்காவலர்களை யாரோ கொலை செய்திருக்கிறார்கள். அதாவது, உருவத்தைச் சிதைத்திருக்கிறார்கள். என்ன காரணமென்று தெரியவில்லை. இதைக் காரணமாக வைத்து ஒரு ஆய்வாளர், சமணக்குகையாக இருந்து பின்னாளில் சைவக் குடைவரையாக இது மாற்றப்பட்டிருக்கவேண்டும் என்கிறார். அது உண்மையாக இருக்குமென்று தோன்றவில்லை.







மகரதோரணம் - முகமண்டபத்திற்கு வெளியிலிருந்து



மகரதோரணத்தைப் படமெடுக்கப் போட்டிபோடும் குழு





சிதைக்கப்பட்ட வாயிற்காவலர்கள்





கீழே இறங்கி வரும்போது, 'அதோ! அந்தக் கிணற்றுக்கருகில் சுந்தரபாண்டியன் கல்வெட்டு இருக்கிறது' என்று டாக்டர் கூறியதும், குறுக்குவழியில் கிணற்றை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். கிணற்றைச்சுற்றி ஈரமாக இருந்ததால், ஓடிப்போய் ஒரு கல்லின்மீது ஏறி நின்றுகொண்டு, சுந்தரபாண்டியன் கல்வெட்டைத் தேட ஆரம்பித்தார் சீதாராமன். கடைசியில்தான் தெரிந்தது அவர் ஏறி நின்றதே கல்வெட்டின் மீதுதான் என்று. பிறகு ஈரத்தையும் பொருட்படுத்தாது கீழே குதித்து அதைப் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தால், அடக்கடவுளே!! இந்தத் தண்ணீரையா ஊர்மக்கள் குடிப்பதற்குப் பயன்படுத்துகிறார்கள்?







கல்வெட்டு உள்ள கல்லின்மீது நின்று கொண்டிருக்கும் சீதாராமன்



சுந்தரபாண்டியன் கல்வெட்டு புகைப்படக் கருவிக்குள் சிறைப்படுகிறது



ஊர்மக்கள் பயன்படுத்தும் கிணற்றுநீர்





இவற்றுடன் இன்றைய பயணத்தை முடித்துக்கொள்வோம் என்றெண்ணி, குருக்களிடம் விடைபெற்றுக்கொண்டு, திரும்பவும் சங்கரன் கோவிலுக்கே திரும்பினோம். வரும் வழியில் சூரியன் அஸ்தமனமாகி, சந்திரன் உதயமாகிக் கொண்டிருந்தது. புதிய டிஜிடல் கேமிராவில் இருக்கும் ஒரு வசதியைச் சோதனை செய்து பார்க்க எண்ணி, கீழேயுள்ள புகைப்படங்களை எடுத்துப் பார்த்தேன். நன்றாக வந்திருக்கிறதா என்று சொல்லுங்கள்!!







தூரப்பார்வையில் சூரியன்



கிட்டப்பார்வையில் சூரியன்



தூரப்பார்வையில் சந்திரன்



கிட்டப்பார்வையில் சந்திரன்





அருகிலிருந்த காட்டில் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்த மயிற்கூட்டத்தையும் புகைப்படம் எடுத்துக்கொண்டு, வண்டியில் ஏறி அமர்ந்தோம். சிறிது தூரம் வந்ததும், வித்தியாசமான ஒரு பலகை புளியமரத்தில் கட்டப்பட்டிருந்தது. சற்று கூர்ந்து கவனித்துப் பார்த்தால், ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டிருந்தது. பாண்டிய நாட்டில் ஒரு குக்கிராமத்தில் ஜப்பானிய மொழியா? இதை அதிசயித்து முடிப்பதற்குள் அதைக் கடந்து வந்திருந்த ஓட்டுனரை நிறுத்தச்சொல்லி, திரும்பிவந்து முழுதாகப் படித்துப் பார்த்தேன். இங்கு ஒரு புத்தர் கோயில் இருப்பதாகவும், ஒரு அம்புக்குறியும் போட்டிருந்தது. உடனே அம்புக்குறியிருந்த திசையில் வண்டியைச் செலுத்தினோம். வயல்வெளிக்குள் தன்னந்தனியாக ஒரு புத்தவிகாரை இருந்தது. அதிலிருந்து 'டம் டம்' என்று முரசறையும் சத்தம் வந்துகொண்டிருந்தது. உள்ளே நுழைந்து பார்த்தால், இரண்டு ஜப்பானியர்கள் உலக அமைதிக்காக வழிபாடு நடத்திக் கொண்டிருந்தார்கள். ஆச்சரியமாக இருந்தது. அந்த இடத்தின் உரிமையாளர் ஜப்பானைச் சுற்றிப்பார்க்க வந்தபோது புத்தமதத்தில் சேர்ந்து அந்த இடத்தைத் தானமாக அளித்துவிட்டாராம். நாங்கள் உள்ளே நுழைந்தபோது பஜனையில் ஈடுபட்டிருந்ததால், தொந்தரவு செய்ய வேண்டாம் என்றெண்ணி, சற்று நேரம் அமர்ந்திருந்தோம். உடனே அங்கே இளந்துறவி போலிருந்தவர் விசிறி போலிருந்த இசைக்கருவியை ஆளுக்கொன்றாக எடுத்துவந்து கொடுத்து அடிக்கச் சொன்னார். பிறகு அவர்களுடன் சிறிதுநேரம் ஜப்பானிய மொழியில் உரையாடிவிட்டுக் கிளம்பினோம்.







ஜப்பானிய மொழியில் கல்வெட்டு





முதல்நாள் பயணத்தை இனிதாக முடித்துக்கொண்டு, திருநெல்வேலி ஜானகிராம் ஹோட்டலை நோக்கிப் பயணமானோம். இரண்டாவது நாள் பயண விவரங்களை லலிதாராம் அடுத்த இதழில் உங்களுடன் பகிர்ந்து கொள்வார். பயணங்களின்போது நாங்கள் பார்க்கும் கோயில்கள் மற்றும் குடைவரைகள் அளவுக்கு அனுபவத்தையும் மகிழ்ச்சியையும் மனத்திருப்தியையும் பயனையும் சுவாரசியத்தையும் ஒருங்கே தரவல்லது நாங்கள் நடத்தும் அரட்டைக்கச்சேரி. இதுபோன்ற பேச்சுக்களில் பெரும்பாலும் பாரதியும் இராஜராஜரும் மகேந்திரரும் ஒவ்வொரு பயணத்தின்போதும் இடம்பெறுவார்கள். நாங்கள் பேசும் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளமுடியா விட்டாலும், அங்கங்கே இதைப்பற்றிக் குறிப்பிட்டு வந்திருக்கிறேன். சுருங்கச் சொன்னால், இப்படிப்பட்ட ஒரு அர்த்தமுள்ள அரட்டையின்போதுதான் வரலாறு.காம் மின்னிதழுக்கான கரு உருவானது.

ஒத்த இரசனையுள்ள நண்பர்கள் குழு!!

எத்தனைமுறை பேசினாலும் அலுக்காத விஷயங்கள்!!

பிரச்சினைக்குரிய விஷயத்தைப் பற்றி விவாதித்தாலும், அதை நிறுத்திக் கொள்ள வேண்டிய எல்லை எது என்பதில் உள்ள தெளிவு!!

ஒருவர் பேச்சில் மற்றவர் மனம் புண்பட வாய்ப்பிருந்தாலும், தன்னைப் புண்படுத்துவதற்காக இப்படிப் பேசவில்லை என்பதைப் புரிந்துகொள்ளும் மனப்பாங்கு!!

இதைவிட வேறென்ன வேண்டும் அரட்டையை அர்த்தமுள்ளதாக்க? தயக்கமின்றி எந்த விஷயத்தை வேண்டுமானாலும் பகிர்ந்துகொள்ளும் இப்படிப்பட்ட வெளிப்படையான பேச்சில் உள்ளத்தில் குடிகொண்டிருந்த கவலைகள் எல்லாம் பறந்தோடி, இதயமே இறக்கை கட்டிப் பறக்கும் நிலையை அடைவோம். எப்போதோ பார்த்த ஒரு தொலைக்காட்சி நாடகத்தில், நாயகனுக்கும் நாயகிக்கும் இடையே நடந்த ஒரு உரையாடல் நினைவுக்கு வருகிறது. ஒருவருக்கொருவர் அனுசரணையாக அன்பைப் பரிமாறிக்கொண்டு வாழும் ஒரு கட்டத்தில், "சந்தோஷமா இருக்கியா?" என்று நாயகன் கேட்பான். நாயகி அதற்கு, ஆம் என்று வெளிப்படையாகச் சொல்லாமல், "அப்படியே செத்துடலாம் போல இருக்கு!!" என்பாள். அதைவிட உச்சகட்ட சந்தோஷம் உலகத்தில் வேறு எதுவும் இல்லை என்பது போன்ற பொருள் தொனிக்கும். உண்மையில் சொல்லப்போனால், இந்தப் பயணத்திலிருந்து திரும்பும்போதும் அத்தகைய உணர்வே எங்களுக்கு மேலோங்கியிருந்தது. வாழ்க்கை முழுவதையும் இப்படியே ஏதாவதொரு பயணத்திலேயே கழித்துவிடலாமா என்றுகூடத் தோன்றும்.

என்ன பெரிய கடமைகள்? வாழ்க்கை வாழ்வதற்குத்தானே? இதுபோன்ற சந்தோஷங்களைத் தொலைத்துவிட்டு வாழ்வதில்தான் என்ன பயன் இருக்கிறது? என்றெல்லாம்கூடத் தோன்றியது. இன்னும் சுமார் ஒரு வருடத்திற்கு இத்தகைய பயணம் எதுவும் மேற்கொள்ளும் வாய்ப்புகள் மிகக்குறைவு என்ற நிதர்சனம் மனதில் தோன்றும்போது, அப்படியே, மனதில் இருள் சூழ்ந்து கொள்கிறது. விரைவிலேயே தாய்நாடு திரும்பிவிட வேண்டும் என்ற எண்ணம் இதுபோன்ற பயணங்களைப் பற்றி எண்ணும்போதெல்லாம் வலுப்பட்டுக் கொண்டே வருகிறது. இந்தப் பயணத்தின்போது தஞ்சை இராஜராஜீசுவரம் தொடர்பான எங்களின் அடுத்த ஆய்வுக்கான விதை விழுந்துள்ளது. அதற்கான ஆயத்தங்களை ஓரளவிற்குத்தான் வெளிநாட்டிலிருந்தபடி செய்யமுடியும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இந்தியா திரும்பி ஆய்வை முழுவீச்சில் தொடங்கவேண்டும் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன். தற்போது எடுத்துக்கொண்டுள்ள கடமைகளை விரைந்து முடிக்கப் பெருவுடையார் அருளுவாராக!!!

this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.