![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 66
![]() இதழ் 66 [ டிசம்பர் 15 - ஜனவரி 15, 2009 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
ஒவ்வொரு மாதமும் வாரமும் நாளும் கிடைக்கும் சிறு ஓய்வு நேரத்தில் இணையத்திலும் தாளிலும் எத்தனையோ செய்திகள், கதைகள், கட்டுரைகள் முதலானவற்றைப் படிக்கிறோம். அவற்றில் வரலாறு தொடர்பானவைகளும் அடக்கம். அவ்வப்போது வாசித்து உடனே மறந்து போய்விடாமல், ஒத்த ரசனையும் சிந்தனையும் உடையவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே என்ற யோசனையின் விளைவுதான் இப்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்த வாசிப்பில் வந்த வரலாறு தொடர். இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தியா சென்று வந்தபோது என்னுடன் சேர்ந்து ஒரு புத்தக மூட்டையும் ஜப்பான் வந்திறங்கியது. நண்பர்கள் பரிந்துரைத்த சில சரித்திர நாவல்களை முதலில் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். அவற்றில் சிலதான் தலைப்பிலுள்ள பாலகுமாரனின் கடலோரக் குருவிகள் மற்றும் சுஜாதாவின் காந்தளூர் வசந்தகுமாரன் கதை ஆகியவை. கடலோரக் குருவிகளைப் பற்றி முதலில் தெரியவந்தது நண்பர் குடந்தை சீதாராமனிடமிருந்துதான். எங்கள் வரலாற்றுப் பயணங்களின்போது தவறாது இடம்பெறும் ஒரு பேசுபொருள் நாவல்கள். ஏனெனில், எங்கள் குழுவினர் அனைவருமே வாசிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள். தனது வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்பட்டபோது, அதிலிருந்து மீண்டுவர இந்த நாவல் உத்வேகத்தைக் கொடுத்தது என்று சீதாராமன் கூறியபோது ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஒரு நாவல் எப்படி வாழ்க்கையில் முன்னேற உதவமுடியும் என்ற கேள்வியே மேலோங்கி இருந்தது. பிறகு இணையத்தில் தமிழ்மணம் மூலமாக திரு. ஜாக்கிசேகர் என்ற வலைப்பதிவரின் கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. அவரும் சீதாராமன் சொன்னதையே சொல்லியிருந்தார். புத்தகத்தில் வெளியிடப்பட்டிருக்கும் கடிதம் ஒன்றில் திரைப்பட இயக்குனர் சங்கரும் இதையே சொல்லியிருக்கிறார். இந்தியன் படத்தின் இடையே தொய்வு ஏற்பட்டபோது சோர்ந்திருந்த மனதுக்கு இந்த நாவல் புத்துணர்ச்சி கொடுத்தததாக எழுதியிருக்கிறார். வாசிப்பில் வந்த வரலாற்றில் ஓர் இடைச்செருகலாக எனது வாசிப்பு வரலாற்றைப் பற்றி ஒரு சிறு சுயபுராணம். கல்லூரிக் காலங்களில் விடுதி நண்பர்கள் மூலமாக மெர்க்குரிப்பூக்கள் போன்ற நாவல்களைப் படித்தபோதுதான் கம்யூனிச சிந்தனைகள் அறிமுகமாயின. அதுவரை மர்ம மற்றும் துப்பறியும் நாவல்களின் வாசகனாக இருந்த என்னைச் சமூக நாவல்கள் சிறிது சிறிதாக ஈர்க்க ஆரம்பித்தன. மோகமுள் பாதி முடிவதற்குள் இறுதியாண்டுத் தேர்வுகள் வந்துவிட்டன. கிட்டத்தட்டப் பதினைந்து வருடங்கள் ஆகியும் இன்னும் முடியாமலேயே இருக்கிறது. வரலாற்று நாவல்கள் அறிமுகமானதும் கல்லூரி முடித்த பிறகுதான். பின்னர் வேலை தேடும் படலமும் பொருளாதாரத்தை உறுதியாக்கும் முயற்சிகளும் வாசிக்கும் பழக்கத்தைச் சற்றுப் பின்னுக்குத் தள்ளின. வாழ்க்கைப் போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் மீண்டும் வாசிக்க ஆரம்பித்தேன். பொன்னியின் செல்வன் மூலமாக வரலாற்றுத் துறையில் காலடி எடுத்து வைத்தபிறகு, எதிர்பாராதவிதமாக எழுத்தாளர் பாலகுமாரனுடன் அறிமுகம் ஏற்பட்டது. அவர் உடையார் எழுதிக்கொண்டிருந்த நேரம். ஜப்பான் வந்தபிறகு ஒருநாள் திரு. மோகன்தாஸ் என்பவர் பயணிகள் கவனிக்கவும் பற்றி எழுதியிருந்தார். அடுத்த இந்தியப் பயணத்தில் தியாகராய நகர் புதிய புத்தக உலகத்தில் அந்நாவலைப் பார்த்தபோது வாங்கிப் படித்தேன். அவ்வளவுதான். உடனே பாலகுமாரனின் விசிறியாகிவிட்டேன். அதில் இருபக்க நியாயங்களையும் கதாபாத்திரங்கள் அலசும் விவாதங்கள் வெகுவாக ஈர்த்தன. அவரது மற்ற நாவல்களையும் வாசிக்கவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. கடந்த பயணத்தின்போது சில புத்தகங்களை வாங்கினேன். அவற்றில் முதலில் படித்தது கடலோரக் குருவிகளைத்தான். இதற்கும் வரலாற்றுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? இதோ, விஷயத்துக்கு வருகிறேன். நாவலின் கதாநாயகன் மாதவனின் வாழ்க்கைப்பாதையைத் தஞ்சைப் பெரியகோயில் புரட்டிப்போடும். மாதவன் மற்றும் அவனது தந்தை வாயிலாகப் பெரியகோயில் பற்றிப் பல தகவல்களை ஆங்காங்கே அள்ளித் தெளித்திருப்பார் பாலகுமாரன். இது ஒன்று போதாதா நம்மைப் போன்றவர்களைக் கவர? 2003 ஆம் ஆண்டின் மத்தியில் பொன்னியின் செல்வன் குழுவினர் மேற்கொண்ட இரண்டாம் யாத்திரையின் இறுதியில் திருச்சியில் முனைவர் இரா.கலைக்கோவன் அவர்களைச் சந்தித்தபோது, பெரியகோயில் பற்றிப் பல கேள்விகளைக் கேட்டுப் பதில்களைப் பெற்றோம். அவற்றை அப்படியே கடலோரக் குருவிகளில் மாதவனும் அவனது தந்தையும் சொல்லியபோது வியப்பு மேலிட்டது. பிறகு அவரிடம் தொலைபேசியில் பேசியபோது எங்கள் கேள்விகளும் அவரின் பதில்களும் பல ஆண்டுகளுக்கு முன்பே பாலகுமாரனுடனான சந்திப்பிலும் இடம்பெற்றிருந்தது தெரியவந்தது. அப்போதுதான் ஒரு நாவலாசிரியரின் தாக்கம் விளங்கியது. ஒரு வரலாற்றாய்வாளரைச் சந்தித்துச் சந்தேகங்களைக் களைந்து கொள்பவர்கள் மிகக்குறைவு. ஆனால், அக்கேள்விகளை அதுவரை கேட்டிருக்காதவர்களுக்கும் யோசித்திருக்காதவர்களுக்கும் சேர்த்து உடனடி உணவாகத் தட்டில் வைத்துப் பரிமாறுவது நாவலாசிரியரின் திறமை. எத்தனையோ பேரை அது சென்றடையும். அவர்களின் மௌனக் கேள்விகளுக்கு விடையளிக்கும். இதுவரை அதைப் பற்றிச் சிந்தித்திருக்காதவர்களைச் சிந்திக்க வைக்கும். வாளின் முனையைவிடப் பேனாவின் முனைக்கு வலிமை அதிகம் என்று குறிப்பிடுவது இதையும்தான். இதன்மூலம் எழுத்தாளர்கள் புரிந்துகொள்ள வேண்டியது இன்னொன்று இருக்கிறது. பொறுப்புணர்ச்சி. இவ்வளவு பேரைச் சென்றடையும் தகவல்கள் உண்மையானதாக இருக்கவேண்டும் என்ற நினைப்பு மனதில் நிரந்தரமாக இருக்கவேண்டும். இந்த விஷயத்தில் பாலகுமாரனைத் தாராளமாகப் பாராட்டலாம். தனது சரித்திர நாவல்களுக்கு அவர் எத்தனை வரலாற்றாய்வாளர்களைக் கலந்தாலோசித்திருக்கிறார் என்று நிறையக் கேள்விப்பட்டிருக்கிறோம். சரித்திர நாவல்கள் மட்டுமின்றி, பயணிகள் கவனிக்கவும் விமான நிலையம், மெர்க்குரிப்பூக்கள் தொழிற்சங்கம், அகல்யா ஆரம்பப்பள்ளி என்று சமூக நாவல்களுக்கும் தொழில் சார்ந்த தகவல்களைச் சேகரிக்க அவர் மெனக்கெட்டது அந்நாவல்களை வாசிப்பவர்களுக்கு நிச்சயம் புரியும். பாலகுமாரனின் விசிறியாகி விட்ட பிறகும் கடலோரக் குருவிகளின் சில பகுதிகள் சரியாக மனதில் ஒட்டவில்லை. அதிலும் குறிப்பாக இறுதிப்பகுதி. மாதவனின் அப்பா மாதவனுக்கும் மீனாட்சிக்கும் உபதேசம் செய்யும் பகுதி. கீதையை அளவுக்குமீறித் தூக்கிப் பிடிக்கிறாரோ என்று எண்ண வைத்தது. சமூக நாவலாசிரியர் என்ற பிம்பத்திலிருந்து ஆன்மீகவாதி என்ற நிலைக்குத் தன்னை உயர்த்திக்கொள்ள முயன்றுகொண்டிருந்த தொண்ணூறுகளின் மத்தியில் இந்நாவல் எழுதப்பட்டதால் இவ்வாறு இருக்கலாம் என்று நினைக்கிறேன். கர்ப்பிணி உதாரணமும் குருவிக் கதையும் மிகவும் அருமை. ஆனால் குருவிக் கதையின் நீதியைப் பற்றி விளக்கும் இடத்தில், 'நீ உன் கடமையைச் செய்' என்ற கீதை வாசகத்துடன் முடித்திருப்பது சற்றே நெருடுகிறது. 'தெய்வத்தால் ஆகாதெனினும்' குறள் கீதையைவிட இவ்விடத்தில் அழகாகப் பொருந்துமே என்று தோன்றியது. அதனால் என்ன? பாலகுமாரனின் எழுத்துக்குத்தானே விசிறி. அவரது எல்லாக் கருத்துக்களுக்கும் உடன்பட்டே ஆகவேண்டுமா என்ன? என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன். அவரது தாயுமானவன் படிக்கவிருக்கும் நாவல்கள் வரிசையில் அடுத்துக் காத்திருக்கிறது. அடுத்து ஒரு வரலாற்று நாவல் படித்தேன். அதில் ஒரு குறும்புக்கார இளைஞன் குதிரைமேல் வந்துகொண்டிருப்பான். வழியில் சில வீரர்கள் ஒரு பல்லக்கைச் சுமந்து கொண்டு செல்வார்கள். அதன்மீது குதிரையைக்கொண்டு மோதியதும் ஓர் அழகான இளவரசி வெளிப்படுவாள். பின்னர் அவளைச் சந்திக்க இரவு அரண்மனைக்கு ரகசியமாகச் செல்வான். இரவு தங்குமிடத்தில் ஒரு சதியை ஒட்டுக்கேட்பான். இருங்கள். பொன்னியின் செல்வனை இப்போதுதான் படிக்கிறாயா என்றுதானே கேட்கிறீர்கள்? அதுதான் இல்லை. இது காந்தளூர் வசந்தகுமாரன் கதை. பொன்னியின் செல்வனின் டெம்ப்ளேட்டிலேயே எழுதப்பட்ட இன்னொரு சோழதேசத்துக்கதை. சுஜாதாவின் ஆஸ்தான கதாபாத்திரங்கள் கணேச பட்டராகவும் வசந்த குமாரனாகவும் மாறியிருக்கிறார்கள். குமுதத்துடன் ஏற்பட்ட சண்டையில் கதை பாதியிலேயே நின்று போயிருக்கிறது. காந்தளூரே இல்லாமல் வெறும் வசந்தகுமாரன் மட்டுமே இருக்கிறான். தொடர்கதையாக வந்ததால், ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் மர்மம் (சஸ்பென்ஸுக்குத் தமிழில் என்ன?) தொக்கி நிற்கிறது. முன்னுரையில் கல்கி, சாண்டில்யன் போன்று கதாபாத்திரங்களை கட் அவுட் பாத்திரங்களாகப் படைக்கவில்லை என்று கூறியிருந்தாலும், இராஜராஜரின் கதாபாத்திரம் கட் அவுட்டையும் தாண்டி வானளாவ உயர்ந்து நிற்கிறது. இது சுஜாதாவின் குறை அல்ல. இராஜராஜரின் ஆளுமை அப்படி. இன்றைய நிலையில், அவரை ஒரு சாதாரண குணம் கொண்ட மனிதனாக உருவகிக்க முயன்றாலும், அவரது பண்புகளையும் வெற்றிகளையும் புகழுரைகள் ஏதுமின்றிப் பட்டியலிட்டாலே, எங்கோ ஓர் உயரத்துக்குச் சென்றுவிடுவார். தனியாக அவரைப் புகழ வேண்டியதில்லை. இந்நாவலில் சுஜாதா அவர்கள் முன்னுரையை எழுதியிருக்கவே வேண்டியதில்லையோ என்று தோன்றுகிறது. 'லேசான சரித்திர ஆதாரங்கள்; நிறையச் சரடு; நீண்ட வாக்கியங்கள் - இவைகளின் உள்ளே ஒரு நவீனக் கதைதான் மறைந்திருக்கும்' என்று கூறி, அவற்றிலிருந்து விலகிச்செல்ல விரும்புவதாகவும் எழுதியிருக்கிறார். ஆனால் காலம் நீண்ட வாக்கியங்களைத் தவிர மற்றவற்றிலிருந்து அவரை விலக அனுமதிக்கவில்லை போலும். 'இதில் தெரியும் சரித்திர சம்பவங்கள் அனைத்தும் ஆதாரமுள்ளவை' என்று கூறிவிட்டு, 'எந்தக் காலத்திலும் பொறாமை, சதி, அரசியல் காரணங்களுக்காகத் திருமணங்கள் எல்லாம் இருக்கும். இந்த நாவலில் கணேசபட்டர் என்ற பிரம்மதேயக்காரரும், வசந்தகுமாரன் என்னும் இளைஞனும் அந்தப் பெயரில் இல்லாவிட்டாலும், வேறு பெயர்களில் வாழ்ந்திருக்கலாம். அதுபோலத்தான் அபிமதி. அரசவையில் எத்தனையோ ராணிகளில் ஒருத்தியின் மகளாக இருக்கலாம்' என்று பல லாம் லாம்-கள் ஏன் என்று தெரியவில்லை. இருப்பினும், வரலாற்றுப் புதினம் என்ற எண்ணத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், ஒரு நல்ல துப்பறியும் கதையை அவரது வழக்கமான பாணியில் வாசித்த திருப்தி இருக்கிறது. நல்லவேளையாக அவரது 'வினைத்தமிழ்' இதில் இல்லை. எங்கள் கல்லூரியில் சுஜாதா விசிறி ஒருவன் இருந்தான். அளவுக்குமீறி அவரது கதைகளைப் படித்ததால், அவரது வினைத்தமிழிலேயே சில சமயம் உரையாடுவான். அவரது தூரத்து உறவினனும்கூட. 'ஏண்டா ஜொள்ளுகிறாய்?', 'கொஞ்சம் மூவ்ங்க (விலகுங்க)', 'நான் ரைட்டுகிறேன் (எழுதுகிறேன்)' என்று கடுப்பேற்றுவான். 'ஒருநாள் பாம்பைப் பார்க்கும்போது, கொல்லுங்க என்று சொல்வதற்குப் பதிலாக, கில்லுங்க என்று சொல்லிவிடாதே. யாராவது கிள்ளிவிடப் போகிறார்கள்' என்று நாங்கள் அவனைக் கலாய்ப்போம். மீண்டும் அடுத்த வரலாற்று வாசிப்பில் சந்திப்போம். this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |