![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 9
![]() இதழ் 9 [ மார்ச் 15 - ஏப்ரல் 14, 2005 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
அனைவருக்கும் வணக்கம்.
சென்ற மாதம் வெளிவந்த "அழிவின் விளிம்பில் ஒரு அரிய வரலாற்றுப் பெட்டகம்" கட்டுரையில் திருவலஞ்சுழி க்ஷேத்திரபாலர் கோயில் அழிவின் விளிம்பில் இருந்ததைப் பற்றியும், இக்கோயிலைச் சீரமைக்கும் பணி, கங்கைகொண்ட சோழபுரத்தைப் புதுப்பித்த கட்டுமானப் பணியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டிருப்பது பற்றியும் தெரிவித்திருந்தோம். க்ஷேத்ரபாலருக்கென்று எழுப்பப்பட்ட முதல் கற்றளி அழிக்கப்படாமல் பாதுகாக்கப் பட வேண்டுமென்ற நம் அனைவரின் பிரார்த்தனையும், முயற்சியும் வீண் போகவில்லை. எங்கள் குழுவின் மதிப்பிற்குரிய அங்கத்தினரான திரு. சுந்தர் பரத்வாஜ் அவர்களின் அயராத உழைப்பும் உற்சாகமும் இதற்கு முக்கிய காரணமாகும். முதலாம் இராஜராஜர் பேரில் தீராத காதல் கொண்ட இவர், இராஜராஜரின் கல்வெட்டுகள் பல உள்ள அக்கோயில் சிதிலமடையாது, கல்வெட்டுகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு படியெடுக்கப்படவேண்டுமென்று எண்ணம் கொண்டது இயற்கையே. ஆனால் அதற்காக தனது பல அலுவல்களுக்கு நடுவிலும் ஒவ்வொரு வார இறுதியிலும் இக்கோயிலுக்குச் சென்று கோயில் நிர்வாகத்தாரிடம் மன்றாடி இழக்கவிருந்த செல்வத்தை அரும்பாடுபட்டு மீட்டு கொடுத்ததைப் பற்றி என்னவென்று சொல்வது! அவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இப்படி ஒரு உற்சாகத்துடன், நம் கோயில்கள் பேரில் அக்கறை கொண்ட ஒரு நூறு பேர் இருந்தார்களானால், கோயில்கள் அழிவுறாமல் காப்பாற்றப்பட்டுவிடும். எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து, அக்கோயிலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தக்க நேரத்தில் ஆவன செய்து கோயில் அழிவுறாமல் காத்த, இக்கோயிலைப் பராமரிக்கும் சுவாமிமலை தேவஸ்தானத்தாற்கும், இந்து அறநிலைய துறை இணை இயக்குனருக்கும் நாங்கள் நன்றி செய்ய கடமைப்பட்டுள்ளோம். மேலும் இக்கோயிலை உரிய முறையில் சீரமைத்துக்கொண்டிருக்கும் கட்டுமானப் பணியாளர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம். இரவு பகலென உழைத்து, நாங்கள் அக்கொயிலுக்கு கல்வெட்டு படியெடுக்கச் செல்வதற்கு முன் மண் அகற்றித் தாங்குதளத்தை முழுமையாய் வெளிக்கொணர்ந்து, கல்வெட்டுகளைப் படிக்கும் வகையில் சுத்தம் செய்து கொடுத்த அவர்களை எத்தனைப் பாராட்டினாலும் தகும். க்ஷேத்திரபாலர் கோயிலின் தாங்குதளப்பகுதி மண்ணில் புதைந்திருந்தது. அதனை கட்டுமானப் பணியாளர்கள் இப்பொழுது சுற்றிலுமுள்ள மண்ணை அகற்றி வெளிக்கொணர்ந்துள்ளனர். உப உபபீடம், உபபீடம், ஜகதி, உருள் குமுதம், பத்மவரியுடன் கூடிய பத்மபந்தத் தாங்குதளத்தில் அரிய பல கல்வெட்டுகளையும் கண்டறிந்துள்ளோம். பல செய்திகளைப் பகரும் அக்கல்வெட்டுகள் அழியும் தருவாயில் இருந்ததை எண்ணும்பொழுது மனநடுக்கமும், அக்கல்வெட்டுகள் காப்பாற்றப்பட்டு படியெடுக்கப்பட்டிருப்பதை எண்ணும்பொழுது மகிழ்ச்சியும் அடைகிறோம். மேலும் சுவர் மற்றும் கூறைப் பகுதியில் பிரிக்கப்பட்டிருந்த கற்களை எண்ணிட்டு சரியான முறையில் அடுக்கியிருக்கின்றனர். அச்சுவர் பகுதியில் இருக்கும் கல்வெட்டுகளிலும் ஒன்றிரண்டே முன்பு படியெடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும் உள்ள முதலாம் இராஜராஜர் மற்றும் இராஜேந்திரரின் கல்வெட்டுகளை இப்பொழுது மா.இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையம் படியெடுத்துக் கொண்டிருக்கிறது. இவை தவிர, அக்கோயிலில் யாருமே கண்டுகொள்ளாமல் அனாதையாகக் கிடந்த தெற்கு வாயில் கோபுரத்தில் பல அழகிய கையளவுச் சிற்பங்களையும் கல்வெட்டுகளையும் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது. இவையெல்லாம் போதாது என, அங்குள்ள வெள்ளைப்பிள்ளையார் (கல்வெட்டில் ஸ்வேத வினாயகர் இவ்வாறு தான் குறிக்கப்படுகிறார்) கோயிலிலும் படியெடுக்கப்படாத பல கல்வெட்டுகளைக் கண்டோம். மேலும் அவ்வெள்ளைப் பிள்ளையார் கோயில் விமானத்தின் தாங்குதளம் மற்றும் சுவர் பகுதியில் உள்ள பல கல்வெட்டுகளும் சுண்ணாம்புப் பூச்சினடியில் மறைந்திருப்பதைப் பார்த்தோம். அச்சுண்ணாம்புப் பூச்சை அகற்றி கல்வெட்டுகளை வெளிக்கொணர்ந்தால் இன்னும் பல வரலாற்றுச் செய்திகளும் வெளிச்சத்திற்கு வரும். ஆக ஐந்து பேர் மாதம் ஐந்து நாட்கள் அக்கொயிலில் கள ஆய்வு மேற்கொண்டால், அங்கு உள்ள கல்வெட்டுகளைப் படியெடுத்து கோயிலை முழுமையாய் ஆய்வு செய்து முடிக்க எப்படியும் ஓராண்டாவது தேவைப்படும். இப்படி எத்தனைக் கோயில்கள் அவற்றில் எத்தனைக் கல்வெட்டுகள், அவற்றில் எத்தனை அழிவின் விளிம்பில் இருக்கின்றன? இத்தனைக் கோயில்களையும் ஆராய்வதென்றால் எத்தனை உழைப்பு தேவைப்படும்? நாம் செய்யவேண்டிய பணிகள் மலையெனக் குவிந்திருக்க, இவற்றை செய்ய விழைந்து முன்வருவோர் மிகச் சிலரே உள்ளனர். இவ்வாறில்லாமல் கல்வெட்டுகள் படிக்கவும், கோயிலை ஆய்வு செய்யவும் பலரும் முன்வர வேண்டும். அப்பொழுது தான் இப்பொக்கிஷங்கள் தொலையாமல் இருக்கும். --ஆசிரியர் குழுthis is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |