http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 89

இதழ் 89
[ நவம்பர் 16 - டிசம்பர் 17, 2012 ]


இந்த இதழில்..
In this Issue..

திரும்பிப்பார்க்கிறோம் - 36
Mangudi
Kulalakottaiyur
நல்லூர் மாடக்கோயில்
சேக்கிழாரும் அவர் காலமும் - 4
இதழ் எண். 89 > கலையும் ஆய்வும்
நல்லூர் மாடக்கோயில்
இரா.கலைக்கோவன், மு.நளினி
கும்பகோணம் வட்டம் பாபநாசத்தை அடுத்த சுந்தரப் பெருமாள்கோயிலில் இருந்து 3 கி. மீ. தொலைவில் வலங்கைமான் செல்லும் பாதையில் அமைந்துள்ளது நல்லூர்.1 அப்பர், சம்பந்தரால் பாடப்பெற்ற2 இவ்வூருடன் தொடர்புடைய நாயன்மார் அமர்நீதிநாயனார் ஆவார். திருக்குளமும் ஐந்து தளக் கோபுரமும் பெற்றுள்ள கோயிலின் வாயிற் கதவுகள் ஆடற்பெண், கோலாட்டம், விலங்குகள், இறைவடிவங்கள், அமர்நீதிநாயனாரின் வரலாறு3 முதலான மரச்சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. உயரமான துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் என அமைந்துள்ள கோபுரக் கீழ்த்தளம் கருங்கல் பணியாக உள்ளது. ஆரஉறுப்புகளும் மேற்றளங்களும் செங்கல் கட்டுமானமாய்க் குறைவான சுதையுருவங்களுடன் உள்ளன.



வெளிச்சுற்று

வாயிலுள் நுழைந்ததும் காட்சியாகும் வெளிச்சுற்றில் தென்கிழக்கில் மடைப்பள்ளியும் தெற்கில் எண்கைக் காளியின் ஒருதளச் சாலைத் திருமுன்னும் வடகிழக்கில் பின்னாளைய மண்டபம் ஒன்றும் அமைந்துள்ளன. மேற்கிலும் கோபுரம் பெற்றுள்ள இத்திருச்சுற்றின் வெளிப்புறத்தே தெற்கு, மேற்கு இரு திசைகளிலும் நந்தவனம் அமைந்துள்ளது. முதல் வாயிலுக்கும் மூன்று தளங்கள் பெற்றுள்ள இரண்டாம் கோபுர வாயிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் முன்றிலுடனான ஒருதள வேசரத் திருமுன்னில் பிள்ளையாரும் அடுத்துக் கொடிமரமும் பலித்தளமும் நந்தி மண்டபமும் அமைந்துள்ளன.

இரண்டாம் கோபுரம்

கபோதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, எண்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் எனக் கருங்கல் பணியாகக் கீழ்த்தளம் பெற்றுள்ள இரண்டாம் கோபுரத்தின் 4 ஆரஉறுப்புகளும் மேற்றளங்களும் செங்கல் கட்டுமானமாய் உள்ளன. கீழ்த்தள ஆரஉறுப்புகள் ஆறங்கம் பெற்றுள்ளன. இவ்வாயிலை ஒட்டி வடபுறத்தே வண்டிக்கூடு கூரையுடன் பிற்கால மண்டபம் ஒன்று அமைந்துள்ளது.



மண்டபச் சுற்று

இரண்டாம் வாயிலை அடுத்துக் கிழக்கில் மண்டபமாய்த் தொடங்கி முப்புறத்தும் விரியும் இடைச்சுற்றில் வாயிலுக்கு எதிரிலுள்ள ஒருதள வேசரத் திருமுன்னில் காசிப் பிள்ளையார் காட்சிதருகிறார். கோபுரத்தை ஒட்டிய பாதபந்தத் தாங்குதளம் பெற்ற தென்கிழக்கு அறைகளில் இலிங்கத்திருமேனிகள் உள்ளன. வடகிழக்கில் பைரவர், சூரியன், அம்மன் சிற்பங்கள் காணப்படுகின்றன. கரண்டமகுடம், மகரகுண்டலங்கள், பட்டாடை அணிந்து சமபங்கத்தில் இருக்கும் கதிரவனின் கைகளில் தாமரைகள்.

ஆடவல்லான்

வடக்கில் கபோதபந்தத் தாங்குதளம் பெற்ற மண்டபத்தில் ஆடவல்லானும் உமையும் காட்சிதருகின்றனர். சடைமகுடமும் விரிசடையுமாய் வலக்காலை முயலகன் மீது இருத்தி, இடக் காலை வலப்புறம் வீசி ஆனந்தத்தாண்டவமிடும் இறைவனின் பின்கைகளில் உடுக்கை, தீயகல். வல முன் கை காக்கும் குறிப்பில் இருக்க, இட முன் கை வேழ முத்திரையில் உள்ளது. கொக்கிறகும் பிறையும் உள்ள தலையின் முகப்பில் மண்டையோடு. வலச் செவியில் மகரகுண்டலம், இடச்செவியில் பனையோலைக் குண்டலம், தோள், கடக, கை வளைகள், புலித்தோலாடை, முப்புரிநூல், உதரபந்தம் அணிந்து ஆடும் இறைவனின் விரி சடையில் வலப்புறம் கங்கை, இடப்புறம் பாம்பு. முடிச்சிட்ட உதரபந்தத்தின் முனைகளும் முப்புரிநூலாய்ப் போர்த்தியுள்ள துணியின் தோள் மடிப்பும் ஆட்ட விரைவிற்கேற்ப, இடப்புறம் பறக்கின்றன.

ஆடவல்லான் தளத்தின் கீழே சிற்றாடையும் வணங்கிய கையுமாய்க் காட்சிதரும் அடியவர் இதைச் செய்தளித்தவராகலாம். தனித் தளத்திலுள்ள உமை சடைமகுடம், மகரகுண்டலங்கள், சரப்பளி, தோள்மாலை, பட்டாடை அணிந்து வலக்கையைக் கடகத்திலிருத்தி, இடக்கையை நெகிழ்த்தியுள்ளார். மழித்த தலையும் நீள்செவிகளுமாய் முப்புரிநூல், சிற்றாடை அணிந்து வலப்பாதத்தைத் திரயச்ரத்திலும் இடப்பாதத்தைப் பார்சுவத்திலும் இருத்தி ஆடவல்லான் அருகே நிற்கும் மாணிக்கவாசகரின் வலக்கை சின்முத்திரை காட்ட, இடக்கையில் சுவடி.

சுற்றுமாளிகை

சுற்றின் தெற்கிலும் மேற்கிலும் வடக்கிலும் கபோதபந்தத் துணைத்தளத்தின் மீதமைந்துள்ள சுற்றுமாளிகையின் கூரையை முச்சதுர, இருகட்டுத் தூண்கள் பூமொட்டுப் போதிகைகளுடன் தாங்குகின்றன. மாளிகையில் தென்புறத்தே வணங்கிய நிலையில் அமர்நீதிநாயனார், இடுப்பில் ஏந்திய பிள்ளையுடன் அவர் துணைவியார், வணங்கிய நிலையில் உழவாரப்படையுடன் அப்பர், தாளங்களுடன் சம்பந்தர், துணைவியுடன் சுந்தரர் சிற்பங்கள் உள்ளன.

சோமாஸ்கந்தர் திருமுன்

தென்மேற்கில் சோமாஸ்கந்தருக்கான இருதளத் திராவிட விமானம் முகமண்டபத்துடன் அமைந்துள்ளது. பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் கொண்ட விமானக் கீழ்த்தளத்தின் முப்புறத்தும் உள்ள கோட்டப் பஞ்சரங்கள் வெறுமையாக உள்ளன. ஆர உறுப்புகள், இரண்டாம் தளம், கிரீவம், சிகரம் இவை செங்கல் கட்டுமானமாய் உள்ளன. விமானத்தை ஒத்த கட்டமைப்புடன் விளங்கும் முகமண்டபக் கோட்டங்களும் வெறுமையாக உள்ளன. கருவறைக்கும் முகமண்டபத்திற்கும் இடைப்பட்ட ஒடுக்கங்களில் குடப்பஞ்சரங்கள். முகமண்டபம் வெறுமையாக அமைய, கருவறையில் உள்ள மேடையில் சோமாஸ்கந்தர் எழுந்தருளியுள்ளார்.

சடைமகுடம், வலச்செவியில் மகரகுண்டலம், இடச்செவியில் பனையோலைக் குண்டலம், முப்புரிநூல், உதரபந்தம், சிற்றாடை, வலக்காலில் வீரக்கழல் அணிந்து சுகாசனத்தில் உள்ள இறைவனின் பின்கைகளில் மான், மழு. முன்கைகளில் வலக்கை காக்க, இடக்கை கடகத்திலுள்ளது. இடப்புறம் கரண்டமகுடம், மகரகுண்டலங்கள், பட்டாடை, தோள்மாலை அணிந்து சுகாசனத்திலுள்ள உமை வலக்கையைக் கடகத்தில் இருத்தி, முழங்கையளவில் மடங்கிய இடக்கையை முன் நோக்கி நீட்டியுள்ளார். இருவருக்கும் இடையிலுள்ள முருகன் சடைமகுடராய் இரண்டு கைகளில் மலர்கள் ஏந்தி நிற்கிறார்.

சுற்றாலைத் திருமுன்கள்

தென்மேற்கு மூலையில் பிள்ளையாரும் மேற்கில் தெய்வானை வள்ளியுடன் முருகனும் வடமேற்கில் யானைத் திருமகளும் இடம்பெற்றுள்ளனர். வடக்கு மாளிகையில் அமர்நீதிநாயனாரின் நெடிய சிற்பமும் குழந்தை ஏந்திய அவர் துணைவியார் சிற்பமும் இலிங்கத்தை வணங்கும் அடியவர் ஒருவர் சிற்பமும் உள்ளன. வடக்குச் சுற்றில் ஒருதள விமானத்தில் சண்டேசுவரர் வலக்கையில் மழுவேந்தி, இடக்கையைத் தொடையிலிருத்தி சுகாசனத்தில் உள்ளார்.

வெற்றுத்தளம்

4. 58 மீ. உயரம் கொண்ட வெற்றுத்தளம் முழுமையும் கருங்கல் பணியாக உள்ளது. உபானம், ஜகதி, உருள்குமுதம், பிரதிவரி, கண்டம், கபோதம் எனக் கபோதபந்தத் தாங்குதளமும் வேதிகையும் அமைய, சுவர் அனைத்து உறுப்புகளும் பெற்ற நான்முக அரைத்தூண்களால் தழுவப்பெற்றுள்ளது. மேலுள்ள வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் உத்திரம், வாஜனம், தாமரையிதழ்களாலான வலபி இவற்றை அடுத்து நீளும் கூரையின் வெளியிழுப்பான கபோதம் ஆழமற்ற கூடுவளைவுகளைப் பெற்றுள்ளது. மேலே பூமிதேசம். இக்கட்டமைப்பு வடக்கில் அம்மன் விமானம் வரை தொடர்கிறது.

வெற்றுத்தளச் சுவரில் மேற்கில் ஆறு கோட்டங்களும் தெற்கில் ஒன்பது கோட்டங்களும் வடக்கில் எட்டுக் கோட்டங்களும் காட்டப்பட்டுள்ளன. நான்முக அரைத்தூண்களுக்கு இடைப்பட்டு விளங்கும் ஆழமான இக்கோட்டங்களைச் சட்டத்தலை பெற்ற நான்முக அரைத்தூண்கள் அணைத்துக் கூரையுறுப்புகள் பெற்று, கிரீவம், சாலை சிகரம் கொண்டு கோட்டப் பஞ்சரங்களாக்கியுள்ளன.

கோட்டச் சிற்பங்கள்

தென்புறக் கோட்டங்களில் இரண்டு ஆலமர்அண்ணல்களும் உச்சிஷ்டகணபதியும் விளங்க, வடகோட்டங்களுள் ஒன்றில் கொற்றவையின் சிற்பம் உள்ளது. முன்றில் பெற்றுள்ள ஆலமர்அண்ணல் கோட்டத்தில் முயலகன் முதுகின்மீது வலக் காலை ஊன்றிப் பின்கைகளில் அக்கமாலையும் தீயகலும் கொண்டுள்ள இறைவன் வீராசனத்தில் உள்ளார். சடைப்பாரம், உதரபந்தம், முப்புரிநூல், சவடி, தோள், கை வளைகள் அணிந்து நீள்வெறுஞ்செவியராய் உள்ள அவரது வல முன் கை சின்முத்திரை காட்ட, இட முன் கை சுவடியுடன் தொடை மீது உள்ளது. வலக்காலில் வீரக்கழல். இறைவன் அமர்ந்துள்ள இருக்கையின் கீழ்ப்பகுதியில் பக்கத்திற்கிருவராக நான்கு முனிவர்கள் காட்டப்பட்டுள்ளனர். முன்றில் தூணொன்றின் பாதத்தில் அதை எடுத்தவரின் உருவமும் 'மாதாநமங்கலமுடையான் ஸ்ரீமாஹேச்வரப் பிரியன் உளியின்றி வந்தான்' என அவருடைய ஊரும் பெயரும் உள்ளன.5

கரண்டமகுடம், உதரபந்தம், சிற்றாடை அணிந்து இலலிதாசனத்தில் உள்ள உச்சிஷ்டகணபதியின் வல முன் கை மோதகம் கொள்ள, பின்கையில் அங்குசம். அவரது துளைக்கை இடத்தொடையில் அமர்ந்துள்ள தேவியின் தொடைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ளது. இடப் பின் கைகளுள் ஒன்று பாசம் கொள்ள, மற்றொன்று தேவியை அணைத்துள்ளதாகக் கொள்ளலாம். கரண்டமகுடம், கழுத்தணி கொண்டுள்ள தேவி இடக்கையில் மலர்மொட்டு ஏந்தியுள்ளார். வலக்கை பிள்ளையாரின் ஆணுறுப்பைப் பிடித்துள்ளது.

கரண்டமகுடம், மகரகுண்டலங்கள், சவடி, சரப்பளி, தோள் வளை, ஸ்வர்ணவைகாக்ஷம், இடைக்கட்டுடனான பட்டாடை, பட்டை வளை, அடுக்குச் சிலம்பு அணிந்து பின்கைகளில் சங்கு, சக்கரம் ஏந்திக் காட்சிதரும் கொற்றவையின் பாதங்கள் தளம் ஒன்றின் மீது சமபங்கத்தில் உள்ளன. தேவியின் வல முன் கை காக்கும் குறிப்பில் அமைய, இட முன் கை கடியவலம்பிதமாக உள்ளது.

வெற்றுத்தளம் ஒட்டித் தென்புறத்தே காணப்படும் 25 படிகள் கொண்ட படிவரிசை கீழிருந்து தளமுடிவுவரை தொடர்கிறது. மேலே உள்ள வாயில் முச்சதுர, இருகட்டுத் தூண்கள் தாங்கும் மண்டபத்திற்கு வழிவிட, மண்டபத்தில் வடபுறத்தே கிரிசுந்தரி அம்மன் திருமுன்னும் அதையடுத்துப் பள்ளியறையும் மேற்கில் இறைவன் திருமுன்னும் அமைந்துள்ளன. தூணொன்றில் அடியவர் வடிவம் இடம்பெற்றுள்ளது.

அம்மன் விமான வெற்றுத்தளம்

அம்மன் விமானம் தாங்கும் வெற்றுத்தளக் கட்டமைப்பு உபானம், தாமரைஉபானம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத் தொகுதி, எண்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், வெட்டுத் தரங்கப் போதிகை தாங்கும் கூரையுறுப்புகள் பெற்றுப் பொலிகிறது. சுவரிலுள்ள சாலைப்பத்திக் கோட்டப் பஞ்சரங்களும் பத்திகளுக்கு இடைப்பட்ட கோட்டங்களும் வெறுமையாக உள்ளன.

இறைவன் விமானம்

மண்டபச்சுற்று, முகமண்டபம், விமானம் என அமைந்துள்ள இறைக்கோயில் வளாகம் கிழக்குப் பார்வையில் உள்ளது. மண்டபச்சுற்றின் கிழக்குப்பகுதியில் உள்ள முச்சதுர, இருகட்டுத் தூண்கள் வெட்டுப் போதிகைகளால் கூரையுறுப்புகள் தாங்குகின்றன. தென்மேற்குத் தூணின் மேற்சதுரத்தில் காணப்படும் கல்வெட்டு அத்தூணை எடுத்தவராகப் பழையனூரைச் சேர்ந்த திருப்பெருமணமுடையான் பெயரைத் தருகிறது.6 தெற்கிலும் மேற்கிலும் வடக்கிலும் முகமண்டபம், விமானம் இவற்றைச் சுற்றி விரியும் உட்சுற்றின் புறச்சுவர் முத்திசைகளிலும் பக்கத்திற்கு இரண்டு சாளரங்கள் கொண்டுள்ளது.



இருதளத் திராவிடமாக அமைந்துள்ள விமானத்தின் கீழ்த்தளம் பாதபந்தத் தாங்குதளத்தின் மீது எழுகிறது. 5 மீ. பக்கமுடைய சதுரமாக அமைந்திருக்கும் இக்கீழ்த்தளத்தின் பட்டிகைக்கு மேல் வேதிகைத்தொகுதியும் எளிய நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவரும் கூரையுறுப்புகளும் உள்ளன. போதிகைகள் விரிகோணத்தில் கிளைக்க, வலபி வெறுமையாக உள்ளது. சுற்றின் சுவரும் விமானத்தின் சுவரும் முத்திசைகளிலும் படிப்படியாக ஒன்றிணைக்கப்பட்டுப் பலகைகளால் மூடப்பட்டுள்ளன. கதலிகாகரண முறையை நினைவூட்டும் இக்கட்டுமானமும் விமானத்தைச் சூழ அமைந்திருக்கும் சுற்றின் அமைப்பும் இவ்விமானத்தைச் சாந்தார விமானமாகக் கொள்ள வழிவகுத்தாலும், இச்சாந்தார அமைப்பு விமானத்தின் கிழக்கில் இடம்பெறாமையும் வெளிச்சுவர் பெறவேண்டிய தாங்குதளம் போன்ற தளக்கூறுகளை விமானச் சுவர் பெற்றிருப்பதும் அக்கருதுகோளுக்குத் தடையாகின்றன.

9. 15 மீ. பக்கமுடைய சுற்றுச்சுவரின் உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளப்பகுதி மட்டும் கருங்கல்லால் ஆனது. நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவரும் கூரையுறுப்புகளும் செங்கல் கட்டுமானங்களாகவே உள்ளன. சுவரின் தென்கோட்டத்தில் சட்டைநாதர் இடம்பெற்றுள்ளார். கபோதம் கூடுவளைவுகள் அற்ற காரைக் கட்டுமானமாகக் காட்சிதருகிறது. கபோதத்தின் மேல் வடிவம் பெறாத பூமிதேச அமைப்பும் வேதிகைத் தொகுதியும் ஆரஉறுப்புகளும் அமைந்துள்ளன.

ஆரஉறுப்புகள் விமானத்தின் இரண்டாம் தளத்திலிருந்து விலகி அமர்ந்து அனர்ப்பிதமாக உள்ளன. தென்கிழக்கு, வடகிழக்கு ஆரச்சுவர்ப் பகுதிகள், அவற்றை அடுத்துள்ள கர்ண கூடங்கள் இவற்றின் கீழுள்ள சுவர் தெற்கிலும் வடக்கிலும் புறந்தள்ளி உள்ளது. ஆரச்சுவரினும் நன்கு பிதுக்கமாக உள்ள கர்ணபத்திச் சுவர் மேலே ஆரஉறுப்பாகப் பஞ்சரம் பெற்றுள்ளது. அவற்றின் விரிவிற்கேற்ப கீழுள்ள வெற்றுத்தளம் வடக்கில் முன்னிழுக்கப்பட்டுள்ள போதும் தெற்கில் அத்தகு விலகல் இல்லாமை குறிப்பிடத்தக்கது. தெற்கில் வெற்றுத்தள உள்ளடங்கல் விமானத்தின் சாலைப்பகுதியை ஒட்டியே காணப்படுகிறது. கிழக்கு ஆரவரிசையின் இருமூலைகளிலும் எளிய கர்ணகூடங்கள் உள்ளன.

இரண்டாம் தளம்

விமானத்தின் முதல் தள ஆரஉறுப்புகள் விமானத்தின் இரண்டாம் தளத்திலிருந்து விலகி அமைந்திருப்பதால் கீழ்த்தளம் போலவே விமானத்தின் இரண்டாம் தளத்தையும் சுற்றிவர இடைவெளி அமைந்துள்ளது. முதல் தளக் கூரையின் மீதுள்ள கிழக்குச் சாலை இரண்டாம் தளத்திற்கான நுழைவாயிலாக அமைந்துள்ளது. வேதிகையின் மீதெழும் உயரமான நான்முக அரைத்தூண்கள் அணைத்துள்ள இரண்டாம் தளத்தின் நாற்புறத்தும் திசைக்கு இரண்டெனச் சுவர்ப் பஞ்சரங்கள் காட்டப்பட்டுள்ளன. இப்பஞ்சரங்கள் ஒவ்வொன்றும் நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர்ப்பகுதி, விரிகோணப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், வேதிகை, கிரீவம் பெற்று இரண்டாம் தளக் கபோதக்கூட்டைச் சிகரமாகக் கொண்டு முடிகின்றன. இவற்றின் கிரீவபகுதிகளில் ஆடற்பெண்கள் காட்டப்பட்டுள்ளனர்.

பஞ்சரங்களுக்கிடையில் திசைக்கொன்றாகக் காட்சிதரும் வெறுமையான கோட்டங்கள் நான்முக அரைத்தூண்களின் அணைப்பும் வடிப்பற்ற மகரத்தலைப்பும் பெற்றுள்ளன. தளச் சுவரின் கூரையுறுப்புகளில் வலபி பூதவரி பெற்றுள்ளது. கபோதத்தின் மீதுள்ள பூமிதேச யாளிகள் நடக்கும் பாவனையில் காட்டப்பட்டுள்ளன. கிரீவம், சிகரம் இவை திராவிடமாக உள்ளன. சாலைகளிலும் கிரீவத்திலும் தெற்கில் ஆலமர் அண்ணலும் வடக்கில் நான்முகனும் உள்ளனர். மேற்கில் சாலையில் தேவிகளுடன் மகாவிஷ்ணுவும் கிரீவத்தில் தேவியுடன் நரசிம்மரும் காட்சிதருகின்றனர். கிரீவத்தின் கிழக்குக் கோட்டத்தில் தேவியுடன் சிவபெருமான்.

முகமண்டபம்

முகமண்டப வாயிலின் தென்புறத்தே திண்ணை ஒன்றின் மீது காட்சிதரும் பிள்ளையார் பின்கைகளில் பாசம், அங்குசம் ஏந்தி, வல முன் கையில் தந்தமும் இட முன் கையில் மோதகமும் கொண்டு இலலிதாசனத்தில் உள்ளார். கருவறை வாயிலை நோக்கியவாறு பெருமண்டபத்தில் ஆண்பாவை விளக்கு ஒன்று காட்சிதர, முகமண்டபத்தின் வடமேற்கு மூலையில் இன்பவல்லி அன்னையின் செப்புத்திருமேனி இடம்பெற்றுள்ளது. சடைமகுடம், மகரகுண்டலங்கள், தோள்மாலை, சரப்பளி, அரும்புச்சரம், முப்புரிநூல், தோள், கை வளைகள், பட்டாடை அணிந்து சுகாசனத்தில் உள்ள இவ்வம்மையின் வலக்கை கடகத்தில் உள்ளது. இடக்கை அருள் தருகிறது.

கருவறை

கருவறையில் சதுர ஆவுடையாரின் மீது மெல்லிய நீளமான உருளைப்பாணம் துளைகளுடன் காட்சிதருகிறது. கருவறையின் தென்சுவரில் நான்முகனும் வடசுவரில் விஷ்ணு வும் பேருருவினராய் நிற்க, பின்சுவரில் தளமொன்றின் மீது சிவபெருமானும் உமையும் சுகாசனத்தில் சுதையுருவங்களாய் வண்ணப்பூச்சில் மின்னுகின்றனர். சடைமகுடம், மகரகுண்டலங்கள், முப்புரிநூல், உதரபந்தம், சிற்றாடை பெற்றுள்ள இறைவனின் பின்கைகளில் மானும் மழுவும். முன்கைகளில் வலக்கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை கடகமாக உள்ளது. கரண்டமகுடமும் மகரகுண்டலங்களும் அணிந்துள்ள இறைவி, வலக்கையில் மலரேந்தி, இடக்கையைக் காக்கும் குறிப்பில் வைத்துள்ளார்.

கிரீடமகுடம், பட்டாடை அணிந்து பின்கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியுள்ள விஷ்ணு இறைவனையும் இறைவியையும் வணங்க, சடைமகுடம், பட்டாடை, அக்கமாலை, குண்டிகை கொண்டுள்ள நான்முகன் முன்கைகளில் காப்பும் அருளும் காட்டி, இறையிணையை வாழ்த்துகிறார். இத்தகு இறைக்காட்சி தமிழ்நாட்டின் வேறெந்தக் கருவறையிலும் இல்லை எனலாம். அப்பருக்கு இறைவன் இங்குத் திருவடி சூட்டியமையைக்7 கொண்டாடும் விதமாக வழிபாட்டின்போது பத்திமையாளருக்கு இறைவனின் திருவடி சூட்டும் சிறப்புச் செய்யப்படுகிறது. வேறெந்த சைவக் கோயிலிலும் இல்லாத இப்புதுமையான அருளல் நல்லூரின் தனிச் சிறப்பாகும்.

அம்மன் கோயில்

இருதளத் திராவிடமாய் வெற்றுத்தளத்தின் மேல் தென் பார்வையாய் அமைந்துள்ள அம்மன் விமானம் பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் பெற்றுக் காட்சிதருகிறது. புறந்தள்ளியுள்ள அதன் சாலைப்பத்தியை நான்முக அரைத்தூண்கள் தழுவச் சாலைக் கோட்டங்கள் முப்புறத்தும் வெறுமையாக உள்ளன. கருவறையில் இறைவி சமபங்கத்தில் கரண்டமகுடராய்ப் பட்டாடை அணிந்து பின்கைகளில் மலர்மொட்டேந்தி, முன்கைகளைக் காக்கும் குறிப்பிலும் அருட்குறிப்பிலும் கொண்டு காட்சிதருகிறார். வெறுமையாக உள்ள முகமண்டபம் பிற்காலக் கட்டுமானமாகும்.



செப்புத்திருமேனிகள்

தனி உமை

திரயச்ர பாதங்களுடன் கரண்டமகுடம், மகரகுண்டலங்கள், தோள், கடக, கை வளைகள், சரப்பளி, அரும்புச்சரம், பட்டாடை, குறங்குசெறி அணிந்துள்ள உமையின் வலக்கை கடகத்திலிருக்க, இடக்கை நெகிழ்ந்துள்ளது.

பள்ளியறை நாச்சியார்

கரண்டமகுடம், மகரகுண்டலங்கள், கழுத்தணிகள், பட்டாடை அணிந்து திரயச்ர பாதங்களுடன் வலக்கையைக் கடகத்தில் இருத்தி நிற்கும் இறைவியின் இடக்கை நெகிழ்ந்துள்ளது.

சண்டேசுவரர்

சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், மரமேறி ஆடை அணிந்து நிற்கும் சண்டேசுவரரின் இரண்டு கைகளும் வணக்கமுத்திரையில் உள்ளன.

கல்வெட்டுகள்

இக்கோயில் வளாகத்திலிருந்து இருபத்து மூன்று கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு அவற்றின் சுருக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன.8 கோயில் வளாகத்தின் பல பகுதிகளில் படியெடுக்கப்படாத கல்வெட்டுகள் சிதைந்தும் கட்டுமானங்களில் சிக்கிய நிலையிலும் காணப்படுகின்றன. அவற்றுள் மூன்று கல்வெட்டுகள் களஆய்வின்போது படித்தறியப்பட்டன.9 படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் காலத்தால் பழைமையானதாக விளங்கும் முற்சோழ அரசர் ஒருவரின் இருபத்து மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு மிகச் சிதைந்த நிலையில் உள்ளது.10

உத்தமசோழர், முதல் இராஜராஜர், இரண்டாம் இராஜாதிராஜர், மூன்றாம் குலோத்துங்கர், மூன்றாம் இராஜராஜர், மூன்றாம் இராஜேந்திரர், வீரராமநாதன் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அவற்றுள் மூன்றாம் இராஜராஜர் கல்வெட்டுகள் பன்னிரண்டாகும்.

வளநாடு, நாடு, ஊர்

நல்லூர்க் கல்வெட்டுகள் நித்தவிநோத வளநாடு, முடிகொண்ட சோழ வளநாடு, உய்யக்கொண்டார் வளநாடு பாண்டிகுலாசனி வளநாடு ஆகிய நான்கு வளநாடுகளின் பெயர்களையும் நல்லூர் நாடு, துண்டநாடு எனும் இரண்டு நாடுகளின் பெயர்களையும் தருகின்றன. இக்கல்வெட்டுகளில் இருந்து முப்பத்தொரு ஊர்ப்பெயர்கள் கிடைத்துள்ளன. மங்கலம் என்ற பின்னொட்டோடு முடியும் ஊர்ப்பெயர்கள் ஏழாக அமைய,11 நல்லூர் என்ற பின்னொட்டுடன் மூன்று ஊர்கள்12 உள்ளன. ஊர் என்ற பின்னொட்டுடன் பதின்மூன்று ஊர்களும்13 பல்வேறு பின்னொட்டுகளைப் பெற்றனவாய் எட்டு ஊர்களும்14 கிடைத்துள்ளன.

வேளாண்மை

நல்லூர்க் கல்வெட்டுகளில் குறிக்கப்பெறும் நிலத்துண்டு கள் தரம், தரமிலி என இரண்டு வகைப்பட்டனவாய் அமைந்துள்ளன. விளைவுக்குக் கொணரப்பெற்ற தரிசு நிலங்கள் மயக்கல் என்ற பின்னொட்டுடன் பெயரேற்றன. நந்தி மண்டலி என்று ஒரு நிலத்துண்டு அழைக்கப்பட்டது.15 பஞ்சவன்மாதேவி, மும்முடிசோழன், கோதண்டராமன் வாய்க்கால் களும் மாதேவன், பஞ்சவன்மாதேவி, வளவன், திருநாராயணன், இருமுடிசோழன் எனும் வதிகளும் நீர்ப்பாசனத்திற்கு உதவின.16

வழிபாடு, படையல்

பெரும்பாலான கல்வெட்டுகள் இக்கோயில் இறைவனின் வழிபாடு, படையல் இவற்றிற்கு நிலக்கொடை அளிக்கப்பட்ட தகவலைத் தருகின்றன. கோயில் திருமடைவளாகத்தில் கும்பிட்டிருக்கும் திருமேனியாகக் குறிக்கப்பெறும் அகோரதேவர் திருநாமத்துக்காணியாக நிலம் வழங்கினார்.17 சிதைந்திருக்கும் கல்வெட்டொன்றும் கோயிலுக்குத் திருநாமத்துக்காணியாக நிலம் வழங்கப்பட்ட தகவலைத் தருகிறது. இறைவனுக்குச் செங்கழுநீர்ப்பூ மாலை சூட்டவும் மாசித் திருநாள் விழாச் செலவினங்களுக்காகவும் நிலத்துண்டுகள் வழங்கப்பட்டன.18 இறைவனின் மேற்பூச்சு, திருப்பாவாடை அமுது, விளக்கெண்ணெய் இவற்றிற்காகப் பண்டாரத்தில் இருந்து நெல் அளக்கப்பட்டது.19 இராஜராஜப் பெருவிலையில் சிவபிராமணக்காணி யாகப் பெறப்பட்ட நிலம் இறைவனுக்கு வழங்கப்பட்டது.20 இறைவன், இறைவி (பெரியநாச்சியார்) இவர் தம் இரவு, அர்த்தசாம அமுதிற்காக நிலத்துண்டொன்று கொடையளிக்கப்பட்டது.21 இறைவன் உச்சிச்சந்தி அமுது கொள்கையில் மாகேசுவரருக்கு ஒடுக்கு அளிக்க வாய்ப்பாக 5,250 காசுக்கு நிலமொன்றை வாங்கிய திருநீறு பரமனார் அ
தைக் கோயிலுக்குத் தந்தார்.22 மன்னர் மூன்றாம் இராஜேந்திர சோழரின் நலம் கருதி ஆளவந்த சதுர்வேதிமங்கலம் உருவாக்கப்பட்டது. அங்குக் குடியேறிய அந்தணர்களுக்கு நிலமும் வழங்கப்பட்டது.23

புதிய கட்டுமானங்கள்

நாராயணன் கவிரன் என்பார் கோயில் வளாகத்தில் மண்டபமொன்றை எடுப்பித்தார்.24 கோயில் சிவபிராமணர் மன்றம் உடையார் நெற்றிக்கண் பட்டர் கோயில் நிருவாகிகளிடம் பல பணி நிவந்தக்காரர்களான அவர்தம் பெயரால் அகம்படிப் பிள்ளையாரை எழுந்தருளுவித்து அவருக்குக் கோயில், முற்றம், நந்தவனம் இவற்றை அமைப்பதுடன், வழிபாடு நிகழ்த்துவாருக்குக் குடியிருப்பு மனையும் தந்து, பிள்ளையார் எழுந்தருளும்போது அவருக்கு அமுதளிக்கவும் திருப்படிமாற்று உள்ளிட்டவைகளை மேற்கொள்ளவும் வாய்ப்பாக நிலக் கொடை அளிக்குமாறு கேட்டுக்கொள்ள, கோயிலாரும் அதற்கு ஏற்ப விவஸ்தாபத்திரம் செய்தளித்தனர். 4,000 காசு விலை பெறும் நூறு குழி நிலமும் 600 காசு விலை பெறும் காய்த் தெங்கு நான்கும் 400 காசு விலை பெறும் காயாத் தெங்கு நான்கும் கோயிலாரால் அகம்படிப் பிள்ளையாருக்கு அளிக்கப்பட்டன.25

நல்லூரில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டு, கோயில் விமானக் கீழ்த்தளப் பெருமண்டபத் தூண் ஒன்றில் பொறிக்கப்பட்டுள்ளது. அம்மண்டபத்தைக் கட்டித் தந்தவராகப் பழையனூர் உடையான் திருப்பெருமணம் உடையானைச் சுட்டும் அக்கல்வெட்டு, தூணையும் அவரே தந்ததாகக் கூறுகிறது. கல்வெட்டுக் குறிப்பிடும் பெருமணம் சம்பந்தர் இறைவனோடு கலந்த இடமாகும்.26

விளக்குக் கொடை

இறைவன் திருமுன் நந்தாவிளக்குகள் எரிக்க வாய்ப்பாக ஏகவாசகன் உலகு கண்விடுத்த பெருமாளான வாணகோவரையர் 240 காசும் இரண்டு நிலை விளக்குகளும் அளித்தார். கோயில் சிவாச்சாரியார் ஒருவர் இரண்டு நந்தாவிளக்குகள் ஏற்றுமாறு 200 காசு கொடையளித்தார். உத்தமசோழபுரத்து வணிகர் வேட்டனாறன் 90 ஆடுகள் அளித்து விளக்கேற்றினார்.27

நில விற்பனை

பாண்டி மண்டலச் சோழக் கோனார் அடிபடி முதலி பொன்னன் இராசனான விக்கிரமசிங்க தேவனுக்குக் கோயிலார் நிலமொன்றை விற்றுத் தந்தனர். நாமன்றமுடையான் 1,400 காசு பெற்றுக்கொண்டு நிலத்துண்டு ஒன்றை இறையிலி நத்தமாகக் கோயிலுக்கு விற்றார்.28

சிறப்புச் செய்திகள்

நல்லூர்க் கோயில் இரண்டாம் கோபுரத் தாங்குதளத்தில் காணப்படும் இரண்டாம் இராஜாதிராஜரின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, நித்தவிநோத வளநாட்டின் கீழ் இருந்த பிரமதேய ஊரான நல்லூரின் நிருவாகத்தைக் கவனித்து வந்த பெருங்குறி மகாசபையினர், நல்லூர்க் கோயில் திருவிழாவின்போது கோவண நாடகம் நடத்த இக்கோயில் தேவரடியாள் நெற்றிக்கண் நங்கைக்குக் காசு கொள்ளா இறையிலியாக இரண்டு மா முக்காணி நிலம் கோவண நாடகப்புறமாகக் கொடையளித்தமையைத் தெரிவிக்கிறது.

நெற்றிக்கண் நங்கை இக்கோவண நாடகத்தை வேறு யாரிடமிருந்தோ கற்று ஆடியதாகக் கூறும் கல்வெட்டில், நங்கையின் மறைவுக்குப் பிறகும் அந்நாடகம் அவரது வழித் தோன்றல்களால் தொடர்ந்து நடத்தப்பெற வேண்டும் என்று பெருங்குறி மகாசபை அறிவுறுத்தியதை அறியமுடிகிறது. வழித் தோன்றல்களால் இந்நாடகம் நடத்த முடியாத நிலை உருவாகுமானால் அவர்கள் வேறு ஆடற்கலைஞர்களை ஏற்பாடு செய்து இந்நாடகத்தைத் தொடர்ந்து நடத்திட வேண்டும் என்ற நிபந்தனையையும் மகாசபை விதித்திருந்தது.

'கற்றாடுதல்', ஆடமுடியாத நிலை ஏற்படின், 'பிரதி கொடுத்தாடுதல்' போன்ற கல்வெட்டுச் சொல்லாட்சிகள் குறிப்பிடத்தக்கன. தமிழ்நாட்டு ஆடற்கலை வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெறும் இந்தக் கல்வெட்டு, அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரும் இவ்வூருடன் தொடர்பு உடையவருமான அமர்நீதிநாயனாரின் வரலாற்றையே, 'கோவண நாடகம்' என்று குறிப்பிடுகிறது. இந்நாடகத்தை நடிக்க நெற்றிக்கண் நங்கைக்குத் தரப்பட்ட நிலம் நாடகத்தின் பெயராலேயே கோவண நாடகப்புறம் என்று வழங்கப்பட்டமையும் சிறப்பிற்குரிய தரவாகும். தமிழ்நாட்டில் இருவரையிலும் கிடைத்திருக்கும் ஆடற்கலை சார்ந்த கல்வெட்டுகள் எவற்றிலும் இது போல் கொடையளிக்கப்பட்ட நிலம் நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் பெயரால் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வூர்க் கோயில் திருமடைவளாகத்துக் கும்பிட்டிருக்கும் திருவிடைமருதைச் சேர்ந்த மாளிகை மடத்து முதலியார் சந்தானத்து தத்தனுடையார் ஈசானதேவருக்குச் சந்தானத்தைக் கும்பிட்டிருக்கும் துறைஉடையார் ஈசானதேவர் மனையாள் மன்றேறு சான்றாட்டி 15 குழி நிலமொன்றை விலைக்குப் பெற்றுக் கொடையளித்தார். நிலத்தின் எல்லைகளைச் சுட்டும்போது அகோரதேவர் மடம், ஒக்கநின்றான் நந்தவனம், திருவீதி ஆகியன எல்லைகளாகச் சுட்டப்பட்டுள்ளன. இந்த ஆவணத்தில் கையெழுத்திட்டவர்களாகத் திருமடைப்பள்ளிக் கண்காணி அரசதேவனும் மெய்க்காவல் மணலூர்க் கிழவனும் இடம்பெற்றுள்ளனர். திருஈங்கோய்மலை ஜீயர் பிள்ளைகளில் தவப் பெருமாள் என்பார் 22 குழி நிலத்தில் தவப்பெருமாள் மடம் அமைத்த தகவலையும் சான்றாட்டியின் கல்வெட்டு தருகிறது.29

நிலமளக்கப் பயன்பட்ட குழிக்கோல், வானிளம் கோல் என்றழைக்கப்பட்டது.30 மக்கள் பெயர்களுள் பெண் அமருந் திருமேனி உடையான் எனும் பெயர் குறிப்பிடத்தக்கது. சிதைந்திருக்கும் கல்வெட்டொன்றில் இடம்பெற்றுள்ள பெரியாழ்வார் திருமேனி எதைக் குறிக்கிறது என்பதை அறியக்கூடவில்லை.31

குறிப்புகள்

1. ஆய்வு நாட்கள் 10. 09. 1982, 26. 11. 2000, 9. 9. 2007.
2. சம்பந்தர் 1 : 86, 2 : 57, 3 : 83; அப்பர் 4 : 97, 6 : 14.
3. அப்பரின் பதிகத்தில் இவ்வரலாறு இடம்பெற்றுள்ளது. 'நீட்கொண்ட கோவணம் காவென்று சொல்லி கிறிபடத்தான் வாட்கொண்ட நோக்கி மனைவியொடும் அங்கோர் வாணிகனை ஆட்கொண்ட வார்த்தை உரைக்கும்'
4. இக்கோபுரத்தின் வடகிழக்குப் பகுதியில் கோவண நாடகக் கல்வெட்டு, பேராசிரியர் முனைவர் மு. நளினியால் கண்டறியப்பட்டது. உடனிருந்து உதவியவர் பேராசிரியர் முனைவர் அர. அகிலா. விரிவான தரவுகளுக்குக் காண்க: மு. நளினி, 'கோவண நாடகம்', பாதைகளைத் தேடிய பயணங்கள், பக். 140-146.
5. இக்கல்வெட்டும் சிற்பமும் பேராசிரியர் முனைவர் மு. நளினியால் கண்டறியப்பட்டன. உடனிருந்து உதவியவர் பேராசிரியர் முனைவர் அர. அகிலா.
6. இக்கல்வெட்டு பேராசிரியர் முனைவர் மு. நளினியால் கண்டறியப்பட்டது.
7. 'நல்லருளால் திருவடி என் தலைமேல் வைத்தார்.' அப்பர் 6 : 14; இரா. கலைக்கோவன், 'நல்லூருக்கு வா', மாலை முரசு, 13. 11. 1982. 'பூவார் அடிச்சுவடு' கலைமகள், ஜனவரி 1985.
8. ஹசுநு 1911 : 40- 62.
9. மு. நளினி, 'கோவண நாடகம்', பாதைகளைத் தேடிய பயணங்கள், பக். 144 - 146.
10. ஹசுநு 1911 : 40.
11. பஞ்சவன்மாதேவிச் சதுர்வேதிமங்கலம், மனுகுலமெடுத்த பெருமாள் சதுர்வேதிமங்கலம், தூயபெருமாள் சதுர்வேதிமங்கலம், ஆளவந்த சதுர்வேதிமங்கலம், இராஜகேசரிச் சதுர்வேதிமங்கலம், மாதானமங்கலம், மன்னைமங்கலம்.
12. மருந்தாழ்வார் நல்லூர், காஞ்சை நல்லூர், பொன்மேய்ந்த பெருமாள் நல்லூர்.
13. நல்லூர், விழியூர், இராஜராஜப் புங்கனூர், பெரும்பன்றூர், சேந்தலூர், கூத்தூர், மணலூர், கிளியூர், சேய்ஞலூர், பெரும்பற்றப்புலியூர், நாங்கூர், ஆவூர், விரலூர்.
14. பனந்தரம், திருவிடைமருது, திருமழபாடி, ஈங்கோய்மலை, வலஞ்சுழி, திருவையாறு, சிற்றம்பலம், இருள்நீக்கி.
15. ARE 1911 : 43, 51, 59.
16. ARE 1911 : 43, 48, 50, 51, 52.
17. ARE 1911 : 43.
18. ARE 1911 : 51, 52.
19. ARE 1911 : 53.
20. ARE 1911 : 55.
21. ARE 1911 : 56.
22. ARE 1911 : 59.
23. ARE 1911 : 60.
24. ARE 1911 : 42.
25. ARE 1911 : 57, 58.
26. மு. நளினி, 'கோவண நாடகம்', பாதைகளைத் தேடிய பயணங்கள், பக். 144 - 146.
27. ARE 1911 : 40, 45, 47, 54.
28. ARE 1911 : 44, 50.
29. ARE 1911 : 49.
30. ARE 1911 : 49.
31. ARE 1911 : 46, 43.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.