http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 91

இதழ் 91
[ ஜனவரி 2013 ]


இந்த இதழில்..
In this Issue..

சேரர் கோட்டை - ஒரு விமர்சனம்
சேரர் கோட்டை விழா - வீடியோ தொகுப்பு
சேரர் கோட்டை பத்திரிக்கையாளர் சந்திப்பு
சேரர் கோட்டை அறிமுக உரை
சேரர் கோட்டை விழா - புகைப்படத் தொகுப்பு
வரலாற்றை வாசித்தல்
திரும்பிப்பார்க்கிறோம் - 38
பரமேசுவரமங்கலம் திருக்கோயில்கள்
Aayingudi
ஆறைவடதளி
Chola Ramayana 02
டி.கே.ரங்காச்சாரி - நூற்றாண்டு விழா
எத்தனை உறவுகள்! எத்தனை பெயர்கள்!
இதழ் எண். 91 > கதைநேரம்
வரலாற்றை வாசித்தல்
கோகுல் சேஷாத்ரி

(21 ஜூலை மாதம் கும்பகோணம் பேரடைஸ் ரிசார்ட்ஸ் அரங்கில் வரலாற்றை வாசித்தல் எனும் தலைப்பில் ஆற்றிய உரையின் முழுவடிவம்)

இந்த மன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விழாவிற்குத் தலைமை ஏற்றுள்ள எங்களின் ஆசிரியப் பெருந்தகை முனைவர் இரா. கலைக்கோவன் அவர்களுக்கும், அவரது இளவலும் முன்னாள் பச்சயப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியருமான முனைவர் மா.ரா அரசு அவர்களுக்கும் இனிய நண்பரும் கடலூர் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளருமான திரு இராமகிருஷ்ணன் அவர்களுக்கும் ஆதித்யா ஹெரிடேஜ் வில்லாவின் இயக்குனரும் பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவையின் நடத்துனருமான திரு சுந்தர் பரத்வாஜ் அவர்களுக்கும் இந்தப் புத்தகத்தின் பதிப்பாளரும் எஸ்.ஆர் எஸ்டேட்ஸ் நிறுவனத்தின் இயக்குனருமான திரு சீதாராமன் அவர்களுக்கும் கமலம் புக்ஸ் மக்கள் தொடர்பு அதிகாரி திரு.பழனியப்பன் அவர்களுக்கும் மன்றத்தில் வீற்றிருக்கும் எனது வணக்கத்திற்குரிய பெற்றோருக்கும் இனிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாசகர்களுக்கும் பணிவான மாலை வணக்கங்கள்.
இந்த அரங்கில் என்னுடைய உரையை எந்தப் பொருளில் அமைத்துக் கொள்வது என்று யோசித்தபோது ‘வரலாற்றை வாசித்தல்’ எனும் தலைப்பு மனதில் தோன்றியது. கடந்த பத்தாண்டுகளாக நான் செய்து கொண்டிருப்பது அதைத்தான் என்பதால் அந்தத் தலைப்பிலேயே என்னுடைய பொழிவை அமைத்துக் கொள்ள விழைகிறேன்.
இந்த வரலாறு என்றால் என்ன?
அது சென்ற கால நிகழ்வுகளின் தொகுப்பு என்கிற ஒரு அடிப்படைப் புரிதல் நமக்குண்டு. நமக்குப் பல காலங்களுக்கு முன்னால் வாழ்ந்து மறைந்த மன்னர்கள் மற்றும் மனிதர்களின் வாழ்க்கை அது என்று வரலாற்றுக்கு வரைவிலக்கணம் வகுக்கிறோம்.
இந்த அடிப்படை புரிதலிலிருந்துதான் வரலாறு பற்றிய பல தீர்மானங்களை நாம் வந்தடைகிறோம்.
ஆகவேதோன் வரலாறு என்பது இறந்தகாலம் பற்றியது என்றாகின்றது.
ஆகவேதான் வரலாறு என்பது பழைமை பற்றியது என்றாகிறது.
ஆகவேதான் அது கழிந்துபோன வாழ்க்கை பற்றியது என்றாகின்றது.
இப்படி வரலாற்றை இறந்த காலத்தோடு நெருக்கமாகத் தொடர்புபடுத்தும் போது நம்மையுமறியாமல் அதனை நிகழ்காலத்திலிருந்து பிரித்து விடுகிறோம். இறந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் சம்மந்தமில்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிக் கொள்கிறோம். வரலாற்றைப் பற்றிய பேச்சை எவராவது எடுத்தாலே ‘பழங்கதைகளைப் பேசிக் கொண்டிருக்காமல் வேலையைக் கவனி!’ என்று நாம் குறிப்பிடுகிறோம்.
நண்பர்களே, இத்தகைய அடிப்படைப் புரிதலுடன்தான் நானும் வரலாற்றுக்குள் புகுந்தேன்.
பள்ளியில் நான் கற்ற பாடப்புத்தகங்கள் வரலாற்றைப் பற்றிய அடிப்படை இரசனைகளைக்கூடத் தோற்றுவிக்க வில்லை. மற்ற பாடங்களையும் போலவே வரலாற்றையும் தேர்வு நேரத்தில் வாந்தி எடுப்பதற்காகவே படித்தேன்.
தேர்வுக்குப் பத்து நாட்களுக்கு முன்னர் அறிமுகமான அசோகரும் அலெக்சாண்டரும் இராஜசிம்மரும் இராஜராஜரும் தேர்வு முடிந்த கையோடு என்னிடமிருந்து பிரியாவிடை பெற்றுப் போய்ச் சேர்ந்தார்கள்.
இந்த நிலைமையை மீறி வேறொரு வழியில் வரலாறு எனக்கு வந்து சேர்ந்தது.
சிறு வயதிலிருந்தே பத்திரிக்கைகள் படிப்பது எனும் வழக்கம் எனக்கு எப்படியோ ஏற்பட்டிருந்தது. குமுதம் கல்கி ஆனந்த விகடனென்று சகலப் பத்திரிக்கைகளையும் வாசித்துத் தள்ளிக்கொண்டிருந்தேன்.
எனது வாசிப்பு வேகத்தைக் எனது தாய்மாமன் ஒருவர் ‘போய்ப் பொன்னியின் செல்வன் படி!’ என்று அறிவுறுத்தினார்.
ஏறக்குறைய இருபது இருபத்தைந்து முறை அந்த நெடுங்கதையை முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம்வரை தீராத பிரேமையுடன் வாசித்துத் தீர்த்தேன்.
மிக இளம் வயதிலேயே அந்தப் புதினம் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. என்னுடைய முதல் வரலாறு சார்ந்த வாசிப்பாக பொன்னியின் செல்வனைத்தான் முன்னிறுத்த வேண்டியிருக்கிறது
அதன் பிறகு பல ஆண்டுகளுக்கு வரலாற்றின் பக்கம் தலைவைத்துப் படுக்க முடியவில்லை. சிங்கப்பூருக்குச் சென்று பணியாற்றத் துவங்கிய வேளையில்தான் மீண்டும் தீவிரமாகப் படிக்கத் துவங்கினேன். சிங்கை நூலகங்களின் உதவியால் தமிழின் பல முக்கிய இலக்கியவாதிகள் எனக்குப் பரிச்சயமானார்கள்.
அங்கே மீண்டும் ஒரு முறை பொன்னியின் செல்வனை வாசித்தேன். ஆச்சரியப்படத்தக்க வகையில் அதன் தாக்கம் அப்போதும் கணிசமானதாகவே இருந்தது.
முதலாம் இராஜராஜரைப் பற்றி மேலும் படித்தால் என்ன? என்று தோன்றியது. நீலகண்ட சாஸ்திரியாரின் சோழாஸ் என்ற தடித்த புத்தகத்தை சிரமப்பட்டு வரவழைத்துப் படிக்கத் துவங்கினேன். சாஸ்திரியாருக்கு அடுத்தபடியாக பண்டாரத்தார் எஸ் ஆர் பாலசுப்பிரமணியம் என்று இந்த வாசிப்பு தொடர்ந்தது. இந்தக் காலகட்டத்தை எனது வரலாற்று வாசிப்பின் இரண்டாவது பருவமாகக் குறிப்பிடத் தோன்றுகிறது.
நண்பர்களே! எழுத்தாற்றல் எனக்குச் சிறு வயது முதலே வாய்த்திருந்தது. அதனை எனது தந்தையார் எனக்களித்த பரிசு என்பேன். அவர் நிறையப் படிக்கும் பழக்கம் உள்ளவராக இருந்ததால் சிறுவயது முதலே தமிழ் மற்றும் ஆங்கில நூல்களும் நூலகங்களும் எனக்கு அறிமுகமாகியிருந்தன. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் காலத்தில் என்னுடைய முதல் சிறுகதை திரு வலம்புரி ஜான் அவர்கள் நடத்திக்கொண்டிருந்த தாய் வார இதழில் வெளியானது. கல்லூரி நாட்களில் நான் எழுதிய சிறுகதை முதல் பரிசு வென்றது. என்றாலும் அந்த ஆற்றலை வளர்த்துக்கொள்ளவேண்டுமென்று எனக்கு ஒரு போதும் தோன்றியதில்லை.
சிங்கையில் நிகழ்ந்த இரண்டாம் பருவ வரலாற்று வாசிப்பு எனக்குள் இருந்த எழுத்தாற்றல் எனும் அலாவுதீன் பூதத்தை உயிர்ப்பித்து விட்டது. ஏன் செய்கிறேன் எதற்காகச் செய்கிறேன் என்றே தெரியாமல் சில சிறுகதைகளை எழுதத் துவங்கினேன். அனைத்துமே வரலாறு சார்ந்த சிறுகதைகளாகவே அமைந்திருந்தன.
இந்தக் காலகட்டத்தில் இணையம் என்கிற தொழில்நுட்பம் அறிமுகமாகிப் பரவலான பயன்பாட்டுக்கு வரத்துவங்கியிருந்தது. எதைத் தேடினாலும் கிடைக்கும் அலிபாபா குகையாக வர்ணிக்கப்பட்ட இணையத்தில் பொன்னியின் செல்வனைப் பற்றித் தேட முற்பட்ட போதுதான் பொன்னியின் செல்வன் என்கிற பெயரில் ஒரு யாஹு இணையக் குழுமம் இருப்பதை க் கண்டறிந்தேன். அக மகிழ்ந்தேன். அந்த ஜோதியில் அடுத்த நாளே ஐக்கியமானேன்.
அந்தக் குழுமத்தில் பொன்னியின் செல்வனுடன் தொடர்புடைய கதாபாத்திரங்களின் வரலாற்றுப் பின்புலத்தை ஆராயும் வகையில் றிஷீஸீஸீவீஹ்வீஸீ ஷிமீறீஸ்ணீஸீ திணீநீts ணீஸீபீ திவீநீtவீஷீஸீ என்றொரு ஆங்கிலத் தொடரை குழு மடல்களாக எழுதத் துவங்கினேன்.
வரலாறு காட்டும் வல்லவரையன் வந்தியத்தேவன் யார்? குந்தவைப் பிராட்டியார் யார்? நந்தினி என்கிற கதாபாத்திரம் கற்பனையா நிஜமா? என்றெல்லாம் எழுதினேன்.
அந்தத் தொடருக்கு நண்பர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு என்னைத் தொடர்ந்து எழுதத் தூண்டியது.
நாளடைவில் குழும நண்பர்கள் சிலருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அடுத்த இந்திய விடுமுறையின்போது அவர்களுடன் ஒரு வரலாறு சார்ந்த பயணத்தை மேற்கொண்டேன். அப்போதுதான் திருச்சிராப்பள்ளியில் முனைவர் இரா. கலைக்கோவன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பமைந்தது.
வரலாற்றிலேயே தோய்ந்து வரலாற்றிலேயே எந்நேரமும் மூழ்கியிருக்கும் அந்தக் கண்மருத்துவரின் விழிகளின் வழி நாங்கள் உள்வாங்கிக் கொண்ட முதல் திருக்கோயில் புள்ளமங்கை திருவாலந்துறையார் திருக்கோயிலாகும்.
அந்தத் திருக்கோயில் எங்களின் வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாக ஆகிப்போனது.
அந்தத் திருக்கோயில்தான் எனக்குள்ளிருந்த எழுத்தாளனை சரியான முறையில் வெளியுலகிற்கு அடையாளம் காட்டியது. புள்ளமங்கை யாத்திரை பற்றி நான் எழுதிய ‘ஆயிரம் வருடத்துப் புன்னகை’ என்கிற கட்டுரைதான் வரலாறு சார்ந்து நான் எழுதிய முதல் பயணக் கட்டுரை.
அந்தக் கட்டுரை முனைவர் கலைக்கோவனின் பாராட்டைப் பெற்றது பெரிய மகிழ்ச்சியை அளித்தது. புள்ளமங்கையைத் தொடர்ந்து நான் பல பயணக் கட்டுரைகளுக்கும் எழுதுவதற்கு அவரளித்த உற்சாகம் காரணமாக இருந்தது.
அந்தத் திருக்கோயில்தான் சீதாராமன் என்கிற ஆற்றலும் அன்பும் மிக்க நண்பரை அடையாளம் காட்டியது. இன்றைக்கு சேரர் கோட்டையின் பதிப்பாளர் அவர்தான் என்பதைக் கருதும்போது இந்தப் புத்தக வெளியீட்டுக்குப் பின்னால் ஆலந்துறையாரின் அருளைப் பூரணமாக உணர்கிறேன்.
அந்தத் திருக்கோயில்தான் என்னுடைய முதுமுனைவர் பட்ட ஆய்வின் கருவாக அமைந்தது. அதே திருக்கோயில்தான் தற்போது நான் மேற்கொண்டிருக்கும் முனைவர் பட்ட ஆய்வேட்டிலும் முக்கிய இடத்தை வகிக்கிறது.
அம்மையப்பரைச் சுற்றி வந்து ஞானப் பழத்தைப் பெற்று விட்ட கணபதியைப்போல் புள்ளமங்கையை மட்டும் சுற்றிச் சுற்றி வந்து வரலாற்று எனும் பெருங்கடலை அள்ளிக் குடிக்க முயன்று கொண்டிருக்கிறேன்.
புள்ளமங்கையைத் தொடந்து நடந்த பல வரலாற்றுப் பயணங்களை என்னுடைய வரலாற்று வாசிப்பின் மூன்றாவது கட்டமாகச் சுட்டலாம்.
வரலாறு என்பது வெறும் புத்தகங்கள் அல்ல. தகவல்கள் மட்டுமல்ல.
வரலாற்றைத் தொடலாம். பார்க்கலாம். வியக்கலாம். இரசிக்கலாம். அதனுடன் ஒன்றிப் போகலாம். அதற்கென்று ஒரு இடம் இருக்கிறது. அதுதான் திருக்கோயில் என்பதை உணர்த்திய பயணங்கள் அவை.
கலைக்கோவன் அவர்களின் தூண்டுதலின் பேரில் 2004 ஆகஸ்டில் துவங்கப்பட்ட வரலாறு டாட் காம் மின்னிதழ் எங்களை ஆற்றல்களை நெறிப்படுத்தியது. ஆற்றுப் படுத்தியது. நான் ஒரு எழுத்தாளனாக.. வரலாற்றுப் புதின ஆசிரியனாக வளர்வதற்கு வரலாறு டாட் காமும் அதன் குழும நண்பர்களும் உலகந்தழுவிய வாசகர்களுமே காரணம் என்பதை மிகுந்த நன்றியுடன் இங்கே பதிவு செய்கிறேன்.
வரலாறு டாட் காம் பிறப்பதற்கு ஒரு நாள் முன்னர்தான் எனது அருமைச் செல்வனும் பிறந்தான். அவனும் வரலாறு டாட் காமும் ஒரு நாள் வித்தியாசத்தில் பிறந்தநாள் கொண்டாடுவார்கள். அவனுக்கு இப்போது எட்டு வயது நிறைவடையப்போகிறது.
வரலாறு டாட் காம் துவங்கிய இரண்டாவது இதழிலிருந்து இராஜகேசரி என்கிற சரித்திரப் புதினத்தை எழுதத் துவங்கினேன்.
இராஜகேசரி என்னுடைய முதல் புதினமல்ல. அதற்கு முன்னாலேயே முதல் வேட்டை என்கிற பெயரில் ஒரு புதினத்தை எழுதி முடித்திருந்தேன். கலைமகள் பத்திரிக்கை நடத்திய ஒரு நாவல் போட்டிக்காக எழுதப்பட்ட அந்தக் கதை முதலும் இல்லாமல் முடிவும் இல்லாமல் வேட்டையும் ஒழுங்காக நடைபெறாமல் பரிதாபமாக முடிந்தது.
முதல் வேட்டை கொடுத்த கசப்பான அனுபவத்தின் காரணமாக இராஜகேசரியை பத்து அத்தியாயங்கள் கொண்ட குறுநாவலாகவே எழுத நினைத்தேன்.
இராஜகேசரிக்கான கரு பண்டாரத்தாரின் பிற்காலச் சோழர் வரலாற்றைப் படித்துக் கொண்டிருக்கும்போதுதான் தோன்றியது.
முதலாம் இராஜராஜரின் காலத்தில் சுவர்ணன் நாரணபட்டன் என்பவரால் எழுதப்பட்ட இராஜராஜ நாடகம் என்கிற நாடகத்தைச் சுட்டும் திருப்பூந்துருத்திக் கல்வெட்டைப் பற்றிக் குறிப்பிடும் பண்டாரத்தார், அந்த நாடகம் இராஜராஜரின் வாழ்க்கையை ஒட்டி அமைந்திருக்கலாம் என்கிற கருத்தைத் தெரிவித்திருந்தார்.
அந்த வரிகளைப் படித்தவுடன் என் கண்களுக்குள் சில காட்சிகள் தெரியத் துவங்கின. பலவித இசைக்கருவிகளும் முழங்கத் துவங்கின. சகலவிதமான அலங்காரங்களுடனும் இராஜ ராஜராக வேடமேற்றவர் மேடையில் வந்து நின்றார்.
அந்த நாடகம் எப்படி இருந்திருக்கும்? அதனை அந்தக்கால மக்கள் எப்படியெல்லாம் இரசித்திருப்பார்கள்? தமது வாழ்க்க வரலாற்றை விவரிக்கும் அந்த நாடகத்தை இராஜராஜரே நேரில் பார்த்திருந்தால் எப்படி இருக்கும்? என்று கட்டுக்கடங்காமல் கற்பனைகள் சிறகடித்துப் பறந்தன.
அத்தகைய கற்பனைகளின் பின்னணியில்தான் இராஜகேசரி பிறந்தது. நாடகத்தை நடத்துவதற்குத் தகுந்த நாடகாசிரியன் வேண்டுமே? அதற்காக முதலாம் இராஜேந்திரரின் காலத்தில் தஞ்சைப் பெரியகோயிலில் இராஜராஜேஸ்வர நாடகம் என்கிற பெயரில் கூத்துக் கட்டிய ஒரு பெருமகனாரைப் பிடித்தேன். அவர் பெயர் விஜய ராஜேந்திர ஆச்சாரியார். அந்த ஆச்சாரியாரை ஒட்டி விஜயராஜ ஆச்சாரியரை சிருஷ்டித்தேன்.
கதையின் நாயகராக வித்தியாசமான ஒரு மனிதர் அகப்பட்டார். அவருக்கு வயது ஐம்பதுக்கும் மேல். ஏறக்குறைய sமீனீவீ க்ஷீமீtவீக்ஷீமீபீ ஆசாமி. சோழ தேசத்தின் சாதாரணப் பிரஜைகளுள் அவருமொருவர். மிக அப்பாவியான மனிதர். அவ்வளவுதான்.
எனது அனைத்துக் கதைகளிலுமே முதுமைக்கும் முதுமை சுமந்து நிற்கும் அனுபவத்திற்கும் நிறைய மரியாதை கொடுப்பதுண்டு. அதனால்தான் எனது முதல் புதினத்தின் நாயகனாக ஒரு முதியவர் முன்னிறுத்தப்பட்டார்.
எனக்குக் கதாநாயகர்களில் நம்பிக்கையில்லை. கதாநாயகத்துவத்தைத்தான் நான் நம்புகிறேன்.
ஒரு கதையில் குறிப்பிட்ட மனிதரை மட்டும் சகலவிதமான கல்யாண குணங்களும் பொருந்திய நாயகராக நான் முன்னிறுத்துவதில்லை. கதையின் போக்குக்கு ஏற்றவாறு பல்வேறு பாத்திரங்களும் கதாநாயகத்துவத்தை அதாவது ஹீரோயிசத்தை வெளிப்படுத்துவதைத்தான் விரும்புகிறேன்.
கிட்டத்தட்ட வாழக்கை அப்படித்தான் இருக்கிறது.
பிறக்கும்போதே ஹீரோவாக எவரும் பிறப்பதில்லை.
குறிப்பிட்ட சூழ்நிலைகள் உருவாகும்போது ஒருவருக்குள் மறைந்து கிடக்கும் ஹீரோயிசம் தன்னால் வெளிப்படுகிறது.
அதைத்தான் நான் வெளிப்படுத்துகிறேன்.
ஆகவேதான் எனது அனைத்துக் கதைகளிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட நாயகர்களை நீங்கள் காணமுடியும்.
பத்து அத்தியாயங்களுக்குள் எழுதி முடிக்க நினைத்த இராஜகேசரி வாசக நண்பர்கள் கொடுத்த வரவேற்பால் நாற்பத்தியொரு அத்தியாயங்களுக்கு நீண்டது. தமிழ் இணையத்தில் முதன் முதலில் நேரடியாகப் பதிப்பிக்கப்பட்ட நீண்ட வரலாற்றுப் புதினம் இராஜகேசரி தான் என்று நினைக்கிறேன்.
இராஜகேரசிக்கு அடுத்ததாக நான் எழுதிய புதினம் பைசாசம்.
மன்னர்கள் தவிர்த்து ஒற்றர்கள் தவிர்த்து இளவரசிகள் தவிர்த்து அரண்மனை மாட மாளிகைகள் தவிர்த்து மக்களோடு மக்களாகப் புழுதி படிந்த கால்களுடன் மண்ணில் நின்று ஒரு சரித்திரக் கதை சொல்லவேண்டும் என்கிற ஆசை எனக்கு நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது. அந்த ஆசையை மனிதர்கள் மூலம் நிறைவேற்றிக் கொள்ளாமல் ஒரு பைசாசத்தின் மூலம் நிறைவேற்றிக் கொண்டேன்.
பொன்னமராவதிக்கு அருகில் அமைந்துள்ள திருக்கோளக்குடி என்கிற சிறிய கிராமத்தில் முனைவர் கலைக்கோவன் மேற்கொண்ட கள ஆய்வின்போது கண்டறியப்பட்ட ஒரு ஒற்றை வரிக் கல்வெட்டே 400 பக்கங்கள் கொண்ட பைசாசமாக விரிந்தது.
பைசாசத்தில் வர்ணிக்கப்படும் அந்தக் கால கிராமத்து வாழ்க்கை முழுக்க முழுக்க எனது சொந்த கிராமமான பெரமூரின் பின்னணியில்தான் எழுதப்பட்டது. சிறு வயதில் எனது பாட்டியாரின் அன்புக்குரிய அரவணைப்பில் நான் கழித்த கிராமத்து நாட்கள் இன்னமும் பசுமரத்தாணியாய் மனதில் பதிந்திருக்கின்றன. பைசாசம் மட்டுமல்ல - எனது அனைத்து படைப்புக்களிலுமே சிறிதளவாவது அந்த கிராமத்து வாழ்க்கையின் பாதிப்பு உள்ளதென்றே நினைக்கிறேன். எனது பாட்டியாரும் கிராமத்து வாழ்க்கையும் சிறுவயதில் வாய்த்திருக்கவில்லையேல் என்னால் எழுத்தாளன் ஆகியிருக்கவே முடியாதோ என்று கூடத் தோன்றுகிறது.
2007ல் பைசாசம் முடிந்ததும் சேரர் கோட்டையை வரலாறு டாட் காமில் துவங்கினேன்.
மன்னர்கள் தாம் பெற்ற போர் வெற்றிகளை வரிசைப்படுத்தி அகவற்பா வடிவில் கூறும் முறைமைக்கு மெய்க்கீர்த்தி என்று பெயர். இவ்வாறு தாம் பெற்ற வெற்றிகளை அனைத்து கல்வெட்டுக்களிலும் பொறிக்கும் முறையை முதன்முதலில் ஏற்படுத்தியவர் முதலாம் இராஜராஜர் ஆவார்.
இராஜராஜரின் அனைத்து மெய்க்கீர்த்திகளிலும் தவறாமல் இடம்பெறும் ஒரு சொற்றொடர் ‘காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளி’ என்பதாகும். அந்த அளவிற்குக் காந்தளூர்ச் சாலை வெற்றி அந்தப் பெருந்தகையின் மனதில் இடம் பிடித்திருந்தது.
இந்தக் காந்தளூர்ச் சாலை எங்கிருக்கிறது?
அங்கு நடைபெற்ற கலமறுத்தல் என்கிற சம்பவம் என்ன? என்பதைப் பல ஆய்வாளர்கள் பலப்பல வழிகளில் விளக்கியுள்ளார்கள். சமீப காலங்களில் கூட அது தொடர்பாக ஒரு புதிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அத்தனையையும் மீறி அந்தச் சம்பவத்தில் புரிந்துகொள்ள முடியாத சில அம்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
காந்தளூர்ச் சாலையில் கலமறுத்த வேந்தர் இராஜராஜர் மட்டுமல்ல. அவரைத் தொடர்ந்து பலப்பல மன்னர்களும் அதே சாலையில் கலமறுத்து வந்துள்ளனர். இது பிற்காலப் பாண்டிய மன்னர்கள் வரை நீள்கிறது. ஆகவே அந்தக் காலத்தில் இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே கருதப்பட்டு வந்துள்ளது தெரிகிறது.
இந்தக் காந்தளூர்ச் சாலை கலமறுத்த சம்பவம் என் மனதில் புரண்டுகொண்டேயிருந்தது.
இது தொடர்பாக எழுதப்பட்ட பல கட்டுரைகளும் கலமறுத்தல் என்கிற அந்தச் சம்பவம் என்னவாக இருக்கக்கூடும்? என்பதை ஆராயும் கட்டுரைகளாகவே அமைந்திருந்தன.
சாலை என்றால் என்ன?
அங்கு என்ன நடந்தது?
அங்கு யார் யார் இருந்தார்கள்?
காந்தளூர்ச் சாலை என்பது எங்கு அமைந்திருந்தது?
அதற்கும் முதலாம் இராஜராஜருக்கும் என்னவிதமான சம்மந்தம் இருந்தது?
சாலா நிறுவனங்கள் இராஜராஜர் காலத்திற்கு முன்பே இருந்தனவா? அப்படியெனில் ஏன் இராஜராஜர் காலத்திற்கு முந்தைய கல்வெட்டுக்களில் அவை குறிப்பிடப்படவில்லை?
இராஜராஜருக்கும் காந்தளூர்ச் சாலைக்கும் அப்படி என்னதான் பகை? என்று யோசிக்க யோசிக்கப் பல கேள்விகள் என்னைச் சுற்றி வளைத்தன.
இது தொடர்பாக நமக்குக் கிடைக்கும் முக்கியமான ஆவணம் ஆய்வேள் மன்னர் கோக்கருந்தடக்கரின் பார்த்திவசேகரபுரச் செப்பேடுகள் ஆகும். இதில் காந்தளூர்ச் சாலையின் மாதிரியை ஓட்டித் தாம் அமைத்த ஒரு சாலையின் செயல்பாடுகளை மன்னர் விவரித்துச் செல்கிறார்.
இது தொடர்பாகப் படிக்கப் படிக்க சாலை எனும் நிறுவனம் சேரநாட்டில் அதாவது கேரளத்தில் செயல்பட்ட கல்வி நிறுவனங்களுக்கான பெயர் என்பது புரிந்தது. இந்த நிறுவனங்களில் வேதம், வேதாந்தம், வியாகர்ணம், அரசியல் நெறிமுறைகள் மற்றும் தற்காப்புப் பயிற்சி முறைகள் அதாவது மார்ஷல் ஆர்ட்ஸ் - கற்றுக் கொடுக்கப்பட்டன - என்பது புரிந்தது.
மார்ஷல் ஆர்ட்ஸ்!
அந்தத் தகவல் எனக்கு முக்கியமான ஒன்றாக இருந்தது. ஏனெனில் தென்னகத்தில் அந்நாளில் இருந்த தற்காப்புப் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களைப் பற்றிய தகவல்கள் நமக்குக் குறைவான எண்ணிக்கையிலேயே கிடைக்கின்றன.
சாலைகளில் கற்றுக்கொடுக்கப்பட்ட சண்டைப் பயிற்சிகளுக்கும் தென்னகத்தின் அரசர்களுக்கும் ஏதோ தொடர்பிருந்திருக்க வேண்டுமென்று தோன்றியது. அதன் பின்னணியில்தான் காந்தளூர்ச் சாலைக்கும் இராஜராஜருக்கும் ஏற்பட்ட பகையைப் புரிந்துகொள்ள முடியும் என்றும் தோன்றியது.
சாலா நிறுவனங்கள் தொடர்பாகக் கேரள வரலாற்றறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய விரும்பினேன். திரு எம் ஜி எஸ் நாராயணன் அவர்கள் எழுபதுகளில் இது தொடர்பாக எழுதிய மிக முக்கியமான ஒரு கட்டுரையைப் பற்றி அறிய முடிந்தது.
ஙிணீநீலீமீறீஷீக்ஷீs ஷீயீ ஷிநீவீமீஸீநீமீ என்று தலைப்பிடப்பட்ட அந்தக் கட்டுரை காந்தளூர்ச் சாலை பற்றி இதுவரை எழுதப்பட்ட கட்டுரைகளுள் முக்கியமானது. நான் நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த சாலா நிறுவனங்களின் செயல்பாடுகளை விளக்கும் கட்டுரை அது.
அந்தக் கட்டுரை எனது பல சந்தேகங்களையும் உறுதி செய்தது. சீனத்தில் பௌத்த மதம் சார்ந்து தற்காப்புப் பயிற்சிகளைக் கற்பித்த ஷாவொலின் திருக்கோயிலைப்போல சாலைகளும் அந்நாளையக் கேரள நம்பூதிரி அந்தணர்களுக்கு சண்டைப் பயிற்சிகளைக் கற்றுக்கொடுத்திருக்க வேண்டும் என்று தோன்றியது.
காந்தளூர்ச் சாலை தவிர வேறு ஏதாவது சாலைகள் அமைந்திருந்தனவா என்று தேடியதில் பல சாலைகள் அகப்பட்டன. திருவல்லவாயில் ஒரு சாலை, காவியூரில் ஒரு சாலை, நிராணத்தில் ஒரு சாலை, பார்த்திவசேகரபுரத்தில் ஒரு சாலை என்று பல சாலைகள்.
அவற்றுள் கழிக்குடியில் அதாவது கன்னியாகுமரியில் அமைந்திருந்த ஒரு சாலை எனது கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது. கன்னியாகுமரியம்மன் திருக்கோயிலுக்கு சற்றுத் தள்ளி அமைந்துள்ள குஹநாதேஸ்வரம் எனும் திருக்கோயிலில் அந்தச் சாலை பற்றிய கல்வெட்டு காணப்படுகிறது.
ஸ்ரீவல்லபப் பெருஞ்சாலை என்று அழைக்கப்பட்ட அந்தச் சாலைக்கு இராஜராஜப் பெருஞ்சாலை என்கிற பெயரும் உண்டு என்கிற தகவல் எனக்கு மிகுந்த வியப்பை அளித்தது.
ஆக இராஜராஜர் அத்தனை சாலைகளும் கலமறுக்கவில்லை. காந்தளூர்ச் சாலையை மட்டும்தான் குறி வைத்திருக்கிறார்.
கேரளம் - மார்ஷல் ஆர்ட்ஸ் - என்றவுடன் தவிர்க்க முடியாமல் மனதில் கேரளத்தின் களரிப்பயட்டுக்கலை வந்து போனது. இன்றளவிற்கும் பண்டைய அம்சங்கள் பலவற்றையும் தாங்கி நிற்கும் கலையாகக் கேரளத்தின் களரிப்பயட்டை நான் காண்கிறேன். அது ஒரு வகையில் சண்டைப் பயிற்சி. ஆனால் நுணுக்கமான தளங்களுக்குச் சென்றால் அது மருத்துவக் கலையாகவும் தன்னைத் தானறியும் ஆன்மிக முயற்சியாகவும் உருமாருவதை உணரலாம்.
களரிப் பயட்டு மரபுகளின் பின்னணியில்தான் சாலா நிறுவனங்களின் தற்காப்புப் பயிற்சி முறைகளைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அதற்காகக் களரிப்பயட்டு பற்றிய நிறையப் புரிதல்கள் தேவைப்பட்டன. அதற்காக நிறையப் படித்தேன்.
அந்த ஒட்டுமொத்தப் புரிதலும் எனக்குள் பல கதவுகளைத் திறந்தன. கற்பனைகள் சிறகடித்துப் பறந்தன. உற்சாகமாகச் சேரர் கோட்டையை எழுதத் துவங்கினேன்.
சேரர் கோட்டை துவங்கிய ஒரு வருடத்தில் நிகழ்ந்த ஒரு துயரச் சம்பவம் என் வாழ்வைப் புரட்டிப் போட்டது. நான் மிகவும் நேசித்த எனது பாட்டியாரின் மறைவுதான் அந்த நிகழ்வு. ந என் வாழ்வில் பெருமளவிற்கு ஆதிக்கம் செலுத்திய அவரது அன்பின் இழப்பு ஈடுசெய்யமுடியாத ஒன்றாகத்தான் இன்றுவரை இருக்கிறது.
நண்பர் சீதாராமன் ஒரு பதிப்பகத்தைத் துவங்கத் தீர்மானித்தபோது எனது பாட்டியாரின் பெயரை அதற்கு வைத்தீர்களானால் மனதுக்கு மிகவும் நிறைவாக இருக்கும் என்று கூறினேன். அவரும் அதற்கு அன்புடன் இசைந்தார். கமலம் புக்ஸ் பதிப்பகம் பிறந்தது. என்னுடைய பாட்டியாரின் ஆசிகள் இருப்பதினால்தான் இந்தப் புத்தகம் இத்தனை சிறப்பாக வந்திருக்கிறது என்று மனப்பூர்வமாக நம்புகிறேன்.
2008ல் பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனம் என்னுடைய இராஜகேசரியும் பைசாசத்தையும் வெளியிட்டது.
2010ல் அதே நிறுவனத்தால் மதுரகவி என்கிற என்னுடைய கல்வெட்டுச் சிறுகதைத் தொகுப்பும் வெளியானது. அந்தத் தொகுதிக்குத் திருப்பூர் தமிழ்ச் சங்கத்தால் 2010ம் ஆண்டிற்கான இலக்கிய விருது சமீபத்தில் வழங்கப்பட்டது என்பதை நன்றியுடன் பதிவு செய்கிறேன்.
2009ம் ஆண்டு வரலாறு டாட் காம் குழுவினர் இணைந்து தயாரித்த ஐராவதி எனும் பணிப்பாராட்டு மலரின் உருவாக்கத்தில் கடுமையாக மணிக்கணக்காக உழைக்க நேர்ந்ததினால் எனது மணிக்கட்டில் கார்பல் டனல் சிண்ட்ரோம் என்கிற பிரச்சனை உருவானது. கரங்களில் இடைவிடாத வலி ஏற்பட்டது. அதனால் எனது எழுத்துப்பணியை நிறுத்த வேண்டிய சூழல் உருவானது.
சேரர் கோட்டையின் வாசகர்கள் பெருத்த ஏமாற்றமடைந்தார்கள். என்றாலும் அதனைப் பொருட்படுத்தாமல் மீண்டும் நலம்பெற்று எழுத வாருங்கள் என்று எனக்கு மின்னஞ்சல் எழுதினார்கள்.
அந்த அன்பும் அக்கறையும்தான் ஒரு எழுத்தாளனாக நான் இத்தனை வருடப் பணியில் சம்பாதித்த பெருஞ் சொத்து என்பேன். என்னுடைய தொடர்ந்த எழுத்துப் பணியின் பின்னணியில் இருக்கும் அந்த அன்புள்ளங்களுக்கு இதயபூர்வமான நன்றிகளை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரண்டு வருட இடைவெளிக்குப்பின் இப்போதுதான் சேரர் கோட்டையை முடிக்கவே முடிந்தது.
நண்பர்களே! இந்த நீண்ட இடைவெளியில் நான் என்னுடைய முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டேன்.
எனது வரலாற்று வாசிப்பின் மிக முக்கியமான நான்காம் பருவம் இந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்தது.
ஒரு வரலாற்றுப் புதின எழுத்தாளனாக மட்டுமே அறியப்பட்டிருந்த நான் வரலாற்று ஆய்வாளனானதற்கு மிக முக்கியமான காரணம் எனது ஆசிரியர் திரு கலைக்கோவன்தான்.
பல காலமாகத் அவருடன் தொடர்பில் இருந்தாலும் உருப்படியாக ஒன்றுமே கற்றுக்கொள்ளவில்லை என்கிற எண்ணம் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது.
அவரது வழிகாட்டுதலில் ஆய்வை மேற்கொள்வது என்பது கிடைத்தற்கரிய வாய்ப்பாகத் தெரிந்தது.
ஆகவே மனதை திடப்படுத்திக்கொண்டு ஆய்வில் கரைந்தேன்.
நண்பர்களே! நான் வாழ்வில் பல வருடங்களைக் கல்விக்ககூடங்களில் கழித்திருக்கிறேன். ஆனால் கல்வி என்கிற அந்த ஒரு சொல்லின் முழுமையான அர்த்தத்தை எனது ஆய்வுக் காலத்தில்தான் உணர்ந்தேன்.
குரு அல்லது ஆசிரியன் என்பவருக்கும் ஒரு மாணவனுக்கும் என்ன மாதிரியான உறவு அமைய முடியும்? குரு வழி கற்பது என்பது என்ன? என்பதையெல்லாம் இந்த ஆய்வு எனக்குச் சொல்லிக்கொடுத்தது.
கற்க என்று கூறும் வள்ளுவப் பெருந்தகை உடனடியாகக் கசடற என்று அழுந்திக் கூறுவதன் அர்த்தமும் அப்போதுதான் விளங்கியது. அந்தக் கற்றலும் கசடறுத்தலும் நிகழ்ததற்குக் காரணம் கலைக்கோவன் என்கிற மகத்தான ஆசிரியர்தான் என்பதை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். பண்டைய குருகுலக்கல்வி முறை மீது எனக்கிருந்த மரியாதை இப்போது பன்மடங்கு கூடியிருக்கிறது.
இப்போது வரலாற்றைப் பற்றிய எனது பார்வை வேறு.
அது ஒரு நீண்ட தொடர்ச் சங்கிலி.
அது இறந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் எதிர்காலத்தையும் ஒன்றாகப் பின்னிப் பிணைத்து நிற்கிறது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் என்பது இத்தகைய எண்ணிலடங்காத கண்ணிகளால் பிணைந்து நிற்பது என்று தோன்றுகிறது..
இந்தச் சமூகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அத்தனை விசைகளையும் அதன் போக்கையும் அதனைத் தீர்மானிக்கும் சக்கிகளையும் புரிந்து கொள்ள உதவும் மிகப்பெரிய கருவியாக வரலாறு இருக்கிறது.
நாம் யார்? நமது சமூகம் என்பது என்ன? கலாச்சாரம் என்பது என்ன? பண்பாடு என்பது என்ன? மரபு என்பது என்ன? என்பதைப் பற்றியெல்லாம் ஒரு வித தெளிவோடும் தீர்மானத்தோடும் அணுகக் கூடிய ஒரு விசாலமான அறிவுப்பரப்பை வரலாறு ஒருவருக்கு அளிக்கிறது.

இதுதான் வரலாற்றின் கொடை.
இதுதான் வரலாற்றின் மிகப்பெரிய கொடை.
வரலாற்றை வாழ்க்கையுடன் பிரிக்கவே முடியாது. அது எந்நேரமும் நம்முடன் இருந்து வருகிறது. அதனை உணர்வதும் உணராததும் நமது கையில்தான் இருக்கிறது.
ஆகவே வரலாற்றின் கைப்பிடித்து நடப்போம்.
அது நமக்கு வழிகாட்டும்.
அது நம்மோடு கூட வரும்.
நம்முடன் இணைந்து நடக்கும்.
நாம் தடுமாறி விழப்போகும்போதெல்லாம் கரம் கொடுத்து அரவணைக்கும்.
வரலாற்றின் வழி நீங்கள் உங்களைச் சுற்றிலும் உங்களின் மூதாதையர்களின் இருப்பை உணரலாம்.
முன்னோர்களின் இருப்பை உணரலாம்.
இந்த தேசத்தில் வாழ்ந்து மறைந்த ஆயிரமாயிரம் ஞானியரின் இருப்பை உணரலாம்.
இறைவனின் இருப்பையும்கூட உணரலாம்.
நன்றி.
வணக்கம்.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.