http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[175 Issues]
[1738 Articles]
Home About US Temples Facebook
Issue No. 107

இதழ் 107
[ மே 2014]


இந்த இதழில்..
In this Issue..

கலம் - கப்பல் - வணிகம்
சிவபுரம் இராஜராஜீசுவரமுடைய மகாதேவர் கோயில்
Kudumiyanmalai - 1
புள்ளமங்கலத்துத் திருவாலந்துறையார் கோயில் விமானம் கட்டமைப்பு
தேடலில் தெறித்தவை - 13
புத்தகத் தெருக்களில் - நான், ஆனந்தரங்கம்பிள்ளையின் நாட்குறிப்புகளுடன் - 2
இதழ் எண். 107 > கலையும் ஆய்வும்
தேடலில் தெறித்தவை - 13
மு.நளினி, அர.அகிலா
தவறுகள் திருத்தப்பட்ட காலம்!


அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியரும் ஆய்வு மையத்தின் நண்பருமான திரு. மணமாறன் தாம் படித்த ஒரு கல்வெட்டுக் குறித்துச் சில ஐயங்களை எழுப்பினார். தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி 14இல் பதிப்பிக்கப்பட்டிருக்கும் அக்கல்வெட்டைப் படித்தபோதுதான் (எண் 161) அதற்கு முன்னுள்ள கல்வெட்டும் (எண் 160) அதனுடன் தொடர்புடையதாய் இருந்தமை அறியமுடிந்தது.

இரண்டு கல்வெட்டுகளுமே முதலாம் இராஜேந்திரரின் மகன் சுந்தரசோழப் பாண்டியர் மதுரை மன்னராக இருந்தபோது பதிவானவை. ஒரே கொடை சார்ந்த இரண்டு ஆணைகளாக உள்ள அவற்றுள் முதற் கல்வெட்டு, மன்னரின் 16ஆம் ஆட்சியாண்டிலும் இரண்டாம் கல்வெட்டு 17ஆம் ஆட்சியாண்டிலும் வெட்டப்பட்டுள்ளன. மன்னரின் வாய்மொழி உத்தரவு எழுத்து வடிவம் பெற்று நடைமுறைப்படுத்தலுக்காக வருவாய்த்துறை அடைந்த வரலாற்றை முதற் கல்வெட்டு விரிவான அளவில் பேசுகிறது.

இராஜராஜப் பாண்டிநாட்டு முடிகொண்ட சோழ வளநாட்டு முள்ளிநாட்டு பிரமதேயம் இராஜராஜச் சதுர்வேதிமங்கலத்திருந்த திருவாலீசுவரமுடையார் கோயிலுக்கு இறை வழிபாடு, படையல், திருவிழா ஆகியவற்றுக்காகவும், சிவஅந்தணர்கள் 25 பேர் உணவு கொள்வதற்கும், சிவதர்மம் வாசிப்பார் ஒருவர் வாழ்வூதியம் பெறவும் வாய்ப்பாக ஐந்து வேலி நிலம் கொடையாகத் தர மன்னரின் அம்மான் விழைந்தார். அதற்கான ஆணையை இராஜேந்திரசோழபுர அரண்மனையின் ஆட்டத்துவெளி மேற்கு மண்டபத்தில் இருந்தபோது மன்னர் பிறப்பித்தார்.

சதுர்வேதிமங்கலத்து நிலம் 5 வேலி, எல்லைகள் வரையறுக்கப்பட்டு விலைக்குப் பெறப்பட்டது. இவ்வெல்லைகளுள் ஒன்றாகக் கடிiஞ ஆறு குறிப்பிடப்பட்டுள்ளது. காக்கலூர் என்னும் பழம் பெயரை இழந்து சிவசரணசேகரநல்லூர் என்னும் புதுப்பெயருடன் பிரமதேயக் கணக்கீடுகளிலிருந்து விடுவிக்கப்பட்ட இந்நிலப்பகுதி, வெள்ளான் வகைக்கு மாற்றப்பட்டு, மன்னரின் 16ஆம் ஆட்சியாண்டிலிருந்து அளிக்க வேண்டிய வரி 624 கலமும் குறையுமாக முடிவுசெய்யப்பட்டது. இத்துடன், இருவகையில் பெறும் காசு நாற்பதும் குறையும் இணைக்கப்பட்டது. இந்நெல்லும் இக்காசும் கோயிலுக்கு அளிக்கப்படவேண்டும் என வருவாய்த்துறையினர் திட்டம் செய்து கையெழுத்திட்டனர். சிவசரணசேகரன் முதலாம் இராஜேந்திரரின் சிறப்புப் பெயர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

அரசரின் வாய்மொழி உத்தரவைக் கேட்டு, அதற்கு எழுத்து வடிவம் தந்தவராகத் திருமந்திர ஓலையும் அதைச் சரிபார்த்து இசைவளித்தவர்களாக மூன்று ஓலைநாயகங்களும் அமைய, ஓலைப்படியே வரியில் இட்டுக் கொள்ளுமாறு வருவாய்த்துறைக்கு அறிவித்த அதிகாரிகளாக இருவரும் விடையில் அலுவலர்களாக ஐவரும் நடுவிருக்கையாக ஒருவரும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளனர். உத்தரவைப் பெற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தும் முயற்சிகளைக் கைக்கொண்டமை சுட்ட, வருவாய்த்துறையின் பல படிநிலை அலுவலர்களும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளனர். புரவுவரித் திணைக்களக் கண்காணி, புரவுவரித் திணைக்களம், வரிப்பொத்தகம், முகவெட்டி, வரிப்பொத்தகக் கணக்கு என இவர்கள் பலராவர்.

இது நடந்து ஓராண்டு கடந்த நிலையில் மதுரையின் வடபக்கத்துப் பகல் இருக்கை நந்தவனமான புத்தனில் இருந்த சித்திரக்கூடத்தில் உணவருந்தி, ‘இராஜேந்திரசோழ அதிமூர்க்கச் செங்கீரை’ என்ற பெயர் கொண்டிருந்த இருக்கையில் இருந்தபோது, மன்னரின் இரண்டாம் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல் ஆணைப்படிச் சதுர்வேதிமங்கலத்துச் சபையிடமிருந்து நிலம் விலைக்குப் பெற்றபோது, எல்லை வரையறைகளில் சில தவறுகள் நிகழ்ந்துவிட்டதாகவும், அவற்றைச் சரி செய்த நிலையில், புதிய எல்லை வரையறைகளுடன் நிலத்தைப் பதிவு செய்யவே மன்னரின் இரண்டாம் ஆணை பிறப்பிக்கப்பட்டதாகவும் இரண்டாம் கல்வெட்டுப் பேசுகிறது. ‘முன்பு எல்லை பிழைக்கப் பேசி வரியில் இட்டமையில்’ அது தவிர்த்து, புதிய எல்லைகளை இணைத்து, ‘இவ்விசைந்த பெருநான்கு எல்லையுள் அகப்பட்ட நிலம் ஐவேலியும் என்றேய்’ வரியிலிடுமாறு மன்னர் திருவாய்மொழிந்தருள ஓலை எழுதப்பட்டு, உரியவர்கள் சரிபார்த்து, அதிகாரிகள் ஒப்பமிட்டு, வருவாய்த்துறைக்கு அனுப்பப்பட்டது.

வருவாய்த்துறையில் யார் யார், எவ்வகையில் ஆணையைச் செயற்படுத்தினர் என்பதும் இரண்டாம் கல்வெட்டில் பதிவாகியுள்ளது. ‘இக்கேழ்வி வரியில் இட்டபடி எழுதினேன்’ என்று ஆணை பிறந்து வரிமாற்றப் பதிவுகள் முடிந்த நிலையை வருவாய்த்துறைக் கணக்காளர் உறுதி செய்யக் கல்வெட்டு முடிகிறது. தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்களில் எல்லைக் கணக்கீடுகளில் பிழை நேர்ந்து, அது உடன் சரிசெய்யப்பட்டு, இருவேறு ஆணைகளை ஒரே மன்னர் பிறப்பித்தாற் போல் மிக அரிதாகவே காணமுடிகிறது. தவறுகள் நேர்வதும், அவற்றை நேர்செய்து கொள்வதும் அந்தக் காலத்தில் பதிவு செய்யப்பட்டுப் பலர் பார்வைக்குக் காட்சியாக்கப்பட்டுள்ளது.

இன்றும் தவறுகள் நேர்கின்றன. ஆனால், அவை நியாயப்படுத்தப்படுகின்றன. பிழையை ஒப்புக் கொள்வதும் திருத்திக் கொள்வதும் கல்வெட்டுக் காட்சிகளாக மட்டுமே கண்காட்டும் பண்புகளாக மாறிவிட்டன. this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.