http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 121

இதழ் 121
[ ஜுலை 2015 ]


இந்த இதழில்..
In this Issue..

வாழ்க்கை வாசமிழப்பதில்லை வாருணி
புகைப்படத் தொகுப்பு - தளவானூர் சத்ருமல்லேசுவராலயம்
சத்ருமல்லேசுவராலயம்
To Sacred Shrines.. with Sacred Hymns..- 2
Rituals, Special occasions and Festivals at the Temples of Thiruchirappalli District
சிராப்பள்ளி முசிறிச் சாலையில் சில கண்டுபிடிப்புகள்-4
அழிவின் விளிம்பில்.. கரும்பூர் பெருந்தோட்டத்து ஆழ்வார்
திருப்பரங்குன்றத்துத் திருவிழா
இதழ் எண். 121 > கலைக்கோவன் பக்கம்
வாழ்க்கை வாசமிழப்பதில்லை வாருணி
இரா. கலைக்கோவன்
அன்புள்ள வாருணிக்கு,

நலந்தானே? நீண்ட இடைவெளிக்குப் பிறகு எழுதுகிறேன். எழுத நினைத்தாலும் பல்வேறு பணிகளுக்கிடையில் வாய்ப்பு அமைவதில்லை. ஒவ்வொரு பயணத்தின்போதும் உன்னோடு பகிர்ந்துகொள்ளச் செய்திகள் உண்டெனினும், எழுத விரும்பி, இயலாமையினால், அவை தேங்கியிருக்கும் நிலைக்குக் காலத்தை நோவதா, கலைக்கோவனை நோவதா எனக்கே தெரியவில்லை. இந்த முறை எப்படியாவது எழுதிவிட வேண்டும் என்ற முடிவுக்கு என்னைக் கொணர்ந்தது கெளுந்தகத்தில் நான் கண்ட சிற்பமொன்று. அதைப் பற்றிப் பேசும் முன் அதைக் காண நேர்ந்த கதையைக் கேள்.

ஓராண்டுக்கு முன் மதுரை சிருங்கேரி சங்கராச்சாரியார் மடத்து அன்பர் திரு. எஸ். சங்கரநாராயணன் வத்தலக்குண்டுக்கு அருகிலுள்ள குன்றுவரன்கோட்டை கிராமத்தின் புறத்தே சிதைந்த நிலையிலுள்ள பழங் கோயிலிலிருந்து தொடர்பற்ற நிலையில் உள்ள கல்வெட்டொன்றின் படங்களை அனுப்பி அவற்றைப் பார்த்துக் கல்வெட்டைப் படித்துச் செய்தி தெரிவிக்குமாறு வேண்டியிருந்தார். நானும் நளினியும் அக்கல்வெட்டைப் படித்துச் செய்தியை அனுப்பினோம். ஆனால், அவரிடமிருந்து மறுமொழி ஏதுமில்லை. குன்றுவரன்கோட்டை சென்று அக்கோயிலைப் பார்க்க விரும்பியும் வாய்ப்பமையவில்லை. இச்சூழலில்தான் சில நாட்களுக்கு முன் கொடைக்கானல் வானொலி நிலைய துணை இயக்குநர் திரு. நடராசன் கோடைப் பண்பலையின் 15ஆம் பிறந்த நாள் விழாவும் மருத்துவர் நாள் விழாaவும் இணைந்து ஒரே நாளில் அமைவதால் அவ்விழாவில் நான் பங்கேற்றுப் பண்பலை நேயர்களுடன் உரையாடுவது உகந்ததாக இருக்கும் என்று அழைத்தார். வத்தலக்குண்டு வழியாகத்தான் கொடைக்கானல் செல்ல முடியும் என்பதால் மகிழ்வோடு அழைப்பை ஏற்றேன்.

சிராப்பள்ளியின் மூத்த எலும்பு மருத்துவ வல்லுநரும் என் இனிய நண்பருமான ஜான் கருப்பையா வத்தலக்குண்டு லியோனார்டு மருத்துவமனையில் சிறப்புப் பணியேற்று அங்குச் சென்றிருந்தமையால் குன்றுவரன்கோட்டையை அவர் உதவியுடன் கண்டறிய முடிந்தது. வத்தலக்குண்டு உசிலம்பட்டிச் சாலையில் குன்றுவரன்கோட்டை எனும் சிற்றூர் இருப்பதாகவும் ஆனால், அங்குக் கோயிலேதும் இல்லையென்றும் தம் உதவியாளர் தந்த தகவலை ஜான் கருப்பையா என்னிடம் பகிர்ந்துகொண்டார். ஊரையடைந்து கோயிலைத் தேடிக் கொள்ளலாம் என்று நான் கூறியபோது தாமும் ஆய்வுக்கு உடன் வருவதாக மருத்துவர் தெரிவித்தார்.

நானும் நளினியும் காலை 10. 30 மணியளவில் லியோனார்டு மருத்துவமனை சென்று ஜான் கருப்பையாவுடன் உசிலம்பட்டிச் சாலையில் குன்றுவரன்கோட்டைக்குப் பயணமானோம். ஊர் அறிவிப்புப் பலகைக்கு அருகிலிருந்த தேநீர்க் கடையில் அமர்ந்திருந்த பெரியவர்களிடம் கோயில் பற்றி உசாவியபோது ஊரில் கோயிலேதும் இல்லை என்றே அனைவரும் ஒன்று போல் கூறினர். பாழ்பட்ட அல்லது இடிந்த கோயில் ஏதும் அருகில் உள்ளதா என்று கேட்டதும் அவர்களுள் ஒருவர், ‘இடிந்த கோயிலா’ என்ற கேள்வியுடன் தமக்கு இடப்புறத்திருந்த மண் சாலையைக் காட்டி இதில் நேரே சென்றால் அந்தக் கோயிலை அடையலாம் என்றதும் கோயிலைப் பார்த்த மகிழ்வே ஏற்பட்டது. ஏறத்தாழ ஒரு கிலோ மீட்டர் சென்றதும் பரந்து படர்ந்திருந்த அரச, ஆலமரங்களின் நிழலில் இடிந்து சிதறிக் கிடந்த ஒரு கட்டமைப்பைக் கண்டோம். அதைக் கோயிலென்று எப்படிச் சொல்வது?


கோயிலின் சூழல்



கோயிலின் எஞ்சிய பகுதி


கருவறை, முகமண்டபம் இரண்டின் தாங்குதளமும் கருவறையின் சிறிய அளவிலான சுவர்ப் பகுதியுமே கோயில் என்ற அமைப்பை அடையாளப்படுத்திக்கொண்டு எஞ்சியிருந்தன. அக்கட்டமைப்பின் நான்கு திசைகளிலும் கற்கள் சிதறியிருந்தன. காட்டுச் செடிகளின் தழுவலும் புதர்களின் அடர்த்தியும் கட்டமைப்பை நெருங்கத் தடையாக இருந்தபோதும் அனுபவ உதவியோடு முகமண்டப வாயிலாக இருந்த பகுதியை அடைந்தோம். ‘இப்படிப்பட்ட இடத்திலா ஆய்வு செய்கிறீர்கள்’ என்று பரிவோடு கேட்ட மருத்துவ நண்பர் செடி, கொடிகளை அகற்றத் துணைநின்றார். வாயில் மேல்நிலையெனக் கொள்ளத்தக்க கருங்கல் பலகை கீழே விழுந்திருந்தது. அதில் சிற்ப வடிப்பைக் கண்டதும் அதைத் தூய்மை செய்யும் பணியில் நளினி முனைந்தார். பத்து நிமிடங்கள் போராடியது பயனளித்தது. யானை காலால் மிதித்து அழிக்கும் நிலையில் ஒரு மனிதனும் அந்தத் தண்டனையைக் கொண்டாடுவது போல் இசையும் ஆடலுமாய்க் கலைஞர்கள் மூவரும் அச்சிற்பத்தில் பதிவாகியிருந்தனர். யானை காலால் மிதித்து மனிதனைக் கொல்லும் சிற்பங்களை மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஏற்கனவே நாங்கள் கண்டறிந்திருந்தபோதும் அத்தகு தண்டனையை இசையும் ஆடலுமாய்க் கொண்டாடும் சமூகப் போக்கு இச்சிற்பத்தில் புதிய பதிவாக எதிர்கொண்டது.


தண்டனையும் கொண்டாட்டமும்


சிற்பத்தில் ஓர் ஆடவரை ஆண் யானை கால்களால் மிதித்து அழிப்பது காட்சியாக்கப் பட்டுள்ளது. அதன் துளைக்கை கீழே விழுந்து கிடக்கும் ஆடவரின் கழுத்தைச் சுற்றி இறுக்க, முன் கால்களுள் ஒன்று நீட்டப்பட்டிருக்கும் அவரது கைமீதழுந்த, பின் கால்களுள் ஒன்று அவரது தொடைப்பகுதியை அழுத்தியுள்ளது. யானையின் இந்தச் செய்கையைக் கொண்டாடுவது போல் மூன்று ஆண் கலைஞர்கள் ஆடுவதை அடுத்துக் காணமுடிகிறது.

முதலாமவரும் மூன்றாமவரும் இருமுக முழவு கொட்டியபடியே ஆடல் நிகழ்த்தும் கருவிக்கலைஞர்களாக அமைய, இடையிலுள்ளவர் முதன்மை ஆடலராய் இடக்கையில் கடகமுத்திரை காட்டி, வலக்கையில் செண்டேந்தி ஆடுகிறார். கருவிக் கலைஞர்கள் ஒன்று போல் தலையலங்காரம் கொண்டிருந்தாலும் முதலாமவர் கைகளில் கங்கணங்கள் உள்ளன. மூன்றாமவரின் இடையாடை பக்க விரிப்புகளும் முன்மடிப்பும் கொண்டமைய, ஆடற்கலைஞர் செவிகளில் குதம்பைகளும் தலையில் விசிறி மடிப்பாய் அமைந்த அலங்காரமும் கொண்டுள்ளார். கலைஞர்களின் தோற்ற அமைவும் ஆடையணிகளும் கொண்டு சிற்பத்தைப் பதின்மூன்று அல்லது பதினான்காம் நூற்றாண்டினதாகக் கொள்ளலாம்.

பழங்காலங்களில் பெருங்குற்றம் செய்தவர்களுக்கு யானையின் காலால் இடறப்படும் மரணதண்டனை வழக்கில் இருந்ததை இது போன்ற சிற்பங்கள் உறுதிப்படுத்துகின்றன. போர்க்களங்களில் எதிரிகள் தோல்வியுற்றபோது பொருநர்கள் என்றழைக்கப்பட்ட இசைக் கலைஞர்கள் தங்கள் கருவிகளை இயக்கியபடியே வென்றவர்களை ஆடிப்பாடிக் கொண்டாடிய சங்க மரபின் ஒரு தொடரிழையாக இச்சிற்பக் காட்சியைக் கருத வாய்ப்புள்ளது. கலைஞர்கள் கொண்டுள்ள தோலிசைக் கருவிகள் பல்லவர், பாண்டியர் காலத்திலிருந்தே வழக்கிலிருந்து வருவதைப் பல கோயில்களின் பூதவரிகள் கொண்டு உறுதிப்படுத்தலாம்.


சுவரிலும் தாங்குதளத்திலும் கல்வெட்டுக்கள்


சங்கரநாராயணன் படங்களாக அனுப்பியிருந்த தொடர்பற்ற கல்வெட்டு, பாதபந்தத் தாங்குதளமும் வேதிகைத் தொகுதியும் பெற்றுள்ள விமானத்தின் சுவர்ப்பகுதியில் எளிதாகப் படிக்குமாறு இருந்தது. பதின்மூன்று அல்லது பதினான்காம் நூற்றாண்டு எழுத்தமைதியிலிருந்த அத்தமிழ்க் கல்வெட்டில் அரசர் பெயரோ, ஆட்சியாண்டோ இடம்பெறவில்லை. கல்வெட்டு முழுமையாக இல்லாதபோதும் பதினெண் விஷயத்தார் என்றழைக்கப்பட்ட வணிகக் குழுவினர் இங்கிருந்த மதுரைஉதைய ஈசுவரம் என்ற சிவன் கோயிலுக்கும் கண்ணுடை விண்ணகர் என்றழைக்கப்பட்ட விஷ்ணு கோயிலுக்கும் அளித்த வரி பற்றிப் பேசுவதை அறிந்துகொள்ள முடிந்தது. இவ்விரண்டு கோயில்களின் படையல், வழிபாட்டுச் செலவினங்களுக்காக வணிகர்கள் வாழ்ந்த இவ்வூரிலிருந்து கிழக்குத் திசை நோக்கிப் போகும் வணிகப் பொதிகளுக்கு சிவன் கோயிலுக்குப் பொதிக்கு ஒரு புதுக் காசும் விஷ்ணு கோயிலுக்குப் பொதிக்கு அரைப் புதுக் காசும் வரியாகத் தருவதெனப் பதினெண் விஷயத்தார் முடிவெடுத்தமையைக் கல்வெட்டுப் பதிவு செய்துள்ளது. மதுரைஉதைய ஈசுவரம் என்பதை மதுரோதய ஈசுவரம் என்றும் கொள்ளலாம்.

இக்கல்வெட்டுள்ள சுவர்ப்பகுதிக்குக் கீழே தாங்குதளத்தின் குமுதப்பகுதியிலும் எழுத்துக்கள் இருப்பதைக் கண்ணுற்ற நிலையில் அங்கிருந்த மண்ணை அகற்றிப் படிக்க முயற்சித்தோம். புதிய கண்டுபிடிப்பாக அமைந்த அக்கல்வெட்டு முகமண்டபத்திலிருந்து தொடங்குவதை அறிந்தோம். முகமண்டபத்தின் தாங்குதளம் குமுதம் வரை மண்ணில் புதையுண்டிருப்பதால் கல்வெட்டின் தொடக்கத்தைப் படிக்கக்கூடவில்லை. மண்ணை அகழ்ந்து படிப்பதற்கு அங்குக் கருவிகளோ, ஆள் துணையோ இல்லாத நிலையில் இயன்றவரை நாங்கள் மூவரும் ஓட்டுநர் துணையுடன் மரக்குச்சிகளின் உதவியோடு விமானப் பகுதியிலிருந்த மண்ணை அகழ்ந்து கல்வெட்டைப் படித்தோம்.

1 நெல்குப்பை நாட்டு தேசிய்விளங்கு பட்டணமான கெளுந்தகத்து உடையார் மருதை உதைய இச்சரம் உடைய நாயனார்க்கும் கண்ணுடைய விண்ணகர்க்கும் இறையிலி தேவதானமாகப் பெற்ற திருமுகப்படி

2 ல்லை இட்டலுக்கு கிழக்கும் பெருங்காலுக்குத் தெற்கும் இவ்விசைந்த பெருநான் கெல்லைக்குள்பட்ட குளமும் புரவும் புன்செய்யும் இவர்கள் இறையிலித் தேவதானமாகப் பெற்ற திருமுகப்

தொடக்கமும் முடிவுமற்ற இவ்விரு கல்வெட்டு வரிகளின் வழி சிவன் கோயிலும் விஷ்ணு கோயிலும் இருந்த ஊரின் பெயரைத் தேசிய்விளங்கு பட்டணமான கெளுந்தகம் என்றறிய முடிகிறது. இவ்வூர் நெற்குப்பை நாட்டில் இணைக்கப்பட்டிருந்தது. இவ்விரண்டு கோயில்களுக்கும் குளம், புரவு, புன்செய் உள்ளிட்ட நிலப்பகுதி இறையிலித் தேவதானமாக அரசாணை வழி வழங்கப்பட்டமையை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது.

இவ்விரு வரிகளின் தொடக்கங்களும் மூன்றாவது வரியும் உள்ள தாங்குதளப் பகுதி மண்ணில் புதையுண்டுள்ள போதும் தேவையான செய்தி கிடைத்த நிலையில் பின்னொரு நாளில் மண்ணை அகழ்ந்து எஞ்சிய கல்வெட்டைப் படிக்கலாம் என்ற முடிவுடன் கெளுந்தகத்துக் கோயிலிடம் விடைபெற்றோம்.

பதினெண்விஷயத்தாரின் வாழிடமான கெளுந்தகம் குன்றுவரன்கோட்டையாகிப் பழம் பெருமையை இழந்துள்ளாற் போலவே அவர்கள் விரும்பி வழங்கிய கொடைகளைப் பெற்ற ஈசுவரமும் விண்ணகரும் காற்றில் கலந்துவிட்டன. எஞ்சியிருக்கும் கட்டமைப்பை எந்தக் கோயிலுக்குரியதாகக் கொள்வதென்பதே தெரியாத நிலையிலும் வரலாறு தன் திருவடிகளை அந்த கிராமத்து மண்ணில் சற்று அழுந்தவே பதித்திருப்பதைக் கல்வெட்டுகளும் சிற்பங்களும் காட்டிக்கொடுக்கின்றன.

வாழ்க்கை வாசமிழப்பதில்லை வாருணி.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.