http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 133

இதழ் 133
[ மார்ச் 2017 ]


இந்த இதழில்..
In this Issue..

The Importance of Rajaraja Chola I and his son Rajendra Chola I in Southeast Asian Tamil Links
TEMPLES IN AND AROUND THIRUCHIRAPPALLI - 6
உலகப் பார்வைக்கு உதயம் - 1
பெருங்குடித் தோரணம்
திருவையாற்று தென்கயிலாயம்
கருந்துளைக் குழலும் வில்யாழும்
இதழ் எண். 133 > கலையும் ஆய்வும்
பெருங்குடித் தோரணம்
மு.நளினி, அர.அகிலா

 



சிராப்பள்ளி மாவட்டம் சோமரசம்பேட்டை வயலூர்ச் சாலையில் சோமரசம் பேட்டைக்கு வடக்கில் 2 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது, கல்வெட்டுகளில் பெருமுடி என்றழைக்கப்படும் தற்போதைய பெருங்குடி. இங்கு முற்சோழர் காலத்தில் எழுப்பப்பட்ட ஒருதளக் கலப்பு வேசரக் கற்றளியான பெருமுடிப் பரமேசுவரர் கோயில் தற்போது தமிழ்நாடு அரசின் பராமரிப்பில் உள்ளது. இத்தளியின் விமானம், முகமண்டபம் இரண்டும் சிறப்பான கட்டமைப்புடையவை. இக்கோயிலில் ஆய்வு மேற்கொண்டபோது இதன் முகமண்டப வாயில் தோரணம் தனித்தன்மையதாய்ப் பல சிறப்புக்களுடன் திகழ்வதை அறியமுடிந்தது. 



வழக்கமான வாயில் தோரணங்களிலிருந்து மாறுபட்டு விளங்கும் இத்தோரணத்தின் கீழ்வளைவில், முழுமையுறாத நிலையில் இலலிதாசனத்தில், பிள்ளையாரைக் காணமுடிகிறது. வளைவின் மேற்பகுதியில் அவரைச் சுற்றியிருக்குமாறு மூன்று பூதங்கள் ஆடற்கோலத்தில் காட்சிதருகின்றன. பிள்ளையாரின் வலப்புறம், இடப்புறம், மேற்பகுதி எனத் தோரணத்தை மூன்று பிரிவுகளாக்கி ஒவ்வொன்றையும் கொடிக்கருக்குகளால் பல உட்பிரிவுகளாகப் பகுத்துச் சிற்பக் காட்சிகளைப் படைத்துள்ள சோழர் கற்பனைத் திறன் போற்றற்குரியதாகும். 



 





 



 





 



வலப்பிரிவில் ஐந்து காட்சிகள். பிள்ளையாரை அடுத்துள்ள முதல் காட்சியாகப் பாம்பொன்று படமெடுக்க, அதைப் பிடிக்குமாறு இரு கைகளையும் விரித்த நிலையில் உதரபந்தமணிந்த சடைமகுடப் பூதமொன்று எச்சரிக்கையுடன் நிற்கிறது. அதனருகே மானொன்று புல்மேய, அதை வேட்டையாட விழைந்தவராய் வில்லும் அம்புமாய் ஆலீடத்தில் நிற்கும் வீரரின் காட்சி. இவ்விரு படப்பிடிப்புகளுக்கும் மேலே ஒன்றன் மீது ஒன்றென அமைந்த கருக்குவளைகளில் சிம்மங்களின் மேல் கத்தி, கேடயத்துடன் அமர்ந்து போரிடும் வீரர்கள். பாம்பு பிடிக்கும் பூதத்தின் மேலிருக்குமாறு சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, சன்னவீரம், கைவளைகள், இடைக்கட்டுடனான சிற்றாடை அணிந்த வீரர் ஒருவர் வலக்கையில் வாளேந்தி, இடக்கைக் கேடயத்துடன் தாவியாடும் ஒள்வாள்அமலைக் காட்சி.



 





 



இடப்பிரிவிலுள்ள ஐந்து காட்சிகளுள் நான்கு, சிவபெருமானின் தண்டபட்சக் கரணத்தைக் கண்களுக்கு விருந்தாக்குகின்றன. வலமுழங்காலை இடுப்பிற்கு மேல் உயர்த்தி, இடப்பாதத்தைப் பார்சுவ உத்கட்டிதத்தில் இருத்தி, வல முன் கையில் காக்கும் குறிப்புக் காட்டி, இட முன் கையை அர்த்தரேசிதத்தில் வீசித் தலையை வலச்சாய்வாக்கியுள்ள சிவபெருமானின் பின்கைகளில் வலப்புறம் உடுக்கை, இடப்புறம் நீண்ட முத்தலைஈட்டி. விரைவும் வீச்சுமாய் நிகழும் இக்கரணத்திற்குக் குடமுழவை இசைத்துத் தாளம் தரும் கருவிக்கலைஞர் இருக்கையில் அமர்ந்தவராய் வலப்புறம் இருக்க, அவருக்குக் கீழே இலைத்தாளம், சங்கு ஏந்திய பூதங்கள். 



 





 



சிவபெருமானின் இடப்புறம் இரண்டு முனிவர்கள் எளிதாக அமர்ந்த நிலையில் இறையாடலை இரசிக்கின்றனர். ஆடலருக்காய் ஒருக்கணித்து ஈரடுக்குத் தளத்தின் மேல் அமர்ந்திருப்பவர் இடக்கையைத் தொடைமீதிருத்தி, வலக்கையால் போற்ற, கால்களைக் குறுக்கீடு செய்து நேர்ப் பார்வையாய்ப் பின்னிருப்பவர் வலக்கையைத் தொடைமீதிருத்தி, இடக்கையைக் கடகத்தில் கொண்டுள்ளார். இவர்களுக்கு மேலுள்ள வளைவில் ஐயனின் ஆடல் காண்பவராய், வலக்கையைப் பின் நிற்கும் நந்தியின் கழுத்தின் மீதிருத்தி, இடக்கையை மேலுயர்த்திய பதாகமாகக் கொண்டு, ஒல்கி ஒசிந்து எழிலுற நிற்கிறார் உமை. இறைவியின் வல வளைவில் சிம்மத்தின் மேல் வலக்கையில் கத்தியும் இடக்கையில் கேடயமுமாய்ப் போரிடும் வீரர். 



பிள்ளையாருக்கு மேலுள்ள மூன்றாம் பிரிவில் வலமும் இடமுமாக மேலும் கீழுமாய்ப் பக்கத்திற்கு இரு சிம்மப் போர்வீரர்கள். வளைவை ஒட்டி இருவரின் போர்க்காட்சி. அவர்களுள் ஒருவர் வாளும் கேடயமும் ஏந்திப் போரிட, இடப்புறத்தார் இருகைகளாலும் கத்தியைப் பிடித்தபடி வீரம் காட்டுகிறார். தமிழ்நாட்டுக் கோயில்களில் பல்லவர், சோழர் காலத்தே அமைக்கப்பட்ட தோரணங்கள் பற்றிய விரிவான ஆய்வு தேவை என்பதை இந்தப் பிள்ளையார் தோரணம் உறுதிப்படுத்துகிறது. தோரணக் காட்சிகளை சமூக, தொன்மப் படப்பிடிப்புகளாய் ஒருங்கிணைக்கும் நேர்த்தியைச் சில கோயில்களிலேயே காணமுடிந்தாலும் அவை வழங்கும் வரலாற்றுத் தரவுகள் இந்த மண்ணின் வேர்களை அடையாளப்படுத்த பேருதவி செய்கின்றன.

 


       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.