http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 136

இதழ் 136
[ ஆகஸ்ட் 2017 ]


இந்த இதழில்..
In this Issue..

Intensive, Pragmatic and Insitu study?
TEMPLES IN AND AROUND THIRUCHIRAPPALLI - 8
புள்ளமங்கை - திருவாலந்துறையார் கோயில் - 2
OLOGAMADEVI ISWARAM – THIRUVAIYARU - 2
உலகப் பார்வைக்கு உதயம் - 4
வெகுமக்கள் இலக்கியத்தில் தமிழ் இலக்கணம் - 1
இதழ் எண். 136 > கலைக்கோவன் பக்கம்
Intensive, Pragmatic and Insitu study?
இரா. கலைக்கோவன்

அன்புள்ள வாருணிக்கு,



நலந்தானே. நீண்ட இடைவெளிக்குப் பிறகு எழுதுகிறேன். சில திங்கள்களாகவே உன்னிடம் பகிர்ந்துகொள்ளப் பல செய்திகள் இருந்தபோதும் நூலாக்கப் பணிகளால் அது கூடவில்லை. சிராப்பள்ளி மாவட்டக் கோயில்களைப் பற்றிய எங்கள் முதல் நூல், 'தவத்துறையும் கற்குடியும்' என்ற தலைப்பில் 2016இல் வெளியானதைத் தொடர்ந்து இப்பகுதிக் கோயில்கள் பத்தின் வரலாற்றை ஒருங்கிணைத்துப் 'பாச்சில் கோயில்கள்' என்ற தலைப்புடன் நூலாக்கியுள்ளோம். கடந்த ஆறு திங்கள்களாக அந்நூல் பணியே மடலெழுத இயலாதபடி தடையாக இருந்தது.



மார்ச்சுத் திங்களில் முற்பாண்டியர் குடைவரைகளைப் பற்றிய பல்கலைப் பேராசிரியர் ஒருவரின் ஆங்கில நூலைப் படிக்க நேர்ந்தது. பல்கலைக்கழக நல்கைக் குழுவின் உதவியுடன் மூன்றாண்டுகள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பதிவு அந்நூல் என நூலாசிரியர் தம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். 2012இல் வெளியாகியிருக்கும் அந்நூலுக்கான தம் ஆய்வை intensive study, pragmatic study, insitu study என்றெல்லாம் விதந்து குறிப்பிடும் ஆசிரியர், இந்தியத் தொல்லியல் துறையோ, தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையோ இக்குடைவரைகளின் சரியான பட்டியலைக் கொண்டிருக்கவில்லை என்பதோடு அவர்கள் அளித்த பட்டியலில் குடைவரைகளின் இடம் குறித்த பல பிழைகள் உள்ளதாகவும் சுட்டியுள்ளார்.



சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 69 இடங்களுக்குக் களப்பயணம் சென்றதாகவும் அவற்றுள் 41 இடங்களில் 55 குடைவரைகளை ஆய்வு செய்ததாகவும் கூறும் நூலாசிரியர் கழுகுமலை (தூத்துக்குடி மாவட்டம்), பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்), மாங்குடி, ஆய்ங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்), கூத்தம்பூண்டியான்வலசு (திண்டுக்கல் மாவட்டம்) குடைவரைகளைத் தம் நூலில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அவருடைய குடைவரைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் திருவெள்ளறை ஜம்புநாதசாமி கோயில் குடைவரை, குடைவரைகளைப் பற்றிய விளக்கப் பகுதியில் இடம்பெறவில்லை. நூலின் தொடக்கத்தில் அவர் இணைத்துள்ள இரண்டு அட்டவணைகளில் முதலாவதான குடைவரைகளுக்கான வழிகாட்டு அட்டவணையில் இடம்பெற்றுள்ள திருமெய்யம் மேல் குடைவரை, முற்பாண்டியர் குடைவரைப் பட்டியலான இரண்டாம் அட்டவணையில் விடுபட்டுள்ளது.



ஆய்வின் முடிவுரையில், தாம் ஆய்வு தொடங்குவதற்கு முன் முற்பாண்டியர் அகழ்ந்த குடைவரைகளின் சரியான எண்ணிக்கையோ, அவை இருக்கும் இடங்களோ அறியப்படாதிருந்ததாகக் குறிப்பிடும் நூலாசிரியர், இனி, முற்பாண்டியர், முத்தரையர் அகழ்வுகள் பற்றி அறிய authoritative and dependable source ஆகத் தம்முடைய நூலில் இடம்பெற்றுள்ள அட்டவணை எண் 1ஐப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் எழுதியுள்ளார் (ப. 156). 



முற்பாண்டியர் குடைவரைகளைப் பற்றியும் இவர் இந்நூலில் இணைத்துள்ள முத்தரையர் குடைவரைகள் பற்றியும் இவரது ஆய்வு (2006) தொடங்குவதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்னரே பல நூல்கள் வெளிவந்துள்ளன. பாண்டிச்சேரி பிரஞ்சு இந்திய நிறுவனம் தமிழ்நாடு, கேரளக் குடைவரைகள் பற்றிய வழிகாட்டு நூல் ஒன்றை 1975இல் வெளியிட்டுள்ளது. பேராசிரியர் கணபதி சுப்பையா 1976இல் பாண்டியர் குடைவரைகளை உள்ளடக்கிய Early Pantiyan Architecture ஆய்வேட்டை அளித்திருக்கிறார். திரு. தி. இராசமாணிக்கம் 1980இல் நெல்லைக் குடைவரைக் கோயில்கள் பற்றியும் 1984இல் தமிழகக் குடைவரைக் கோயில்கள் குறித்தும் 1989இல் தென்னகக் குடைவரைக் கோயில்கள் தொடர்பாகவும் நூல்களைப் பதிப்பித்துள்ளார். 2000இல் திரு. சு. இராசவேல், திரு. அ. கி. சேஷாத்திரி ஆகியோர் தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள் என்ற நூலை வெளியிட்டுள்ளனர். நூலாசிரியரின் நூல் வெளியாவதற்கு முன் (2011) மு. நளினி, இரா. கலைக்கோவனின் தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் (2007), மதுரை மாவட்டக் குடைவரைகள் (2007), தென்மாவட்டக் குடைவரைகள் (2009), புதுக்கோட்டை மாவட்டக் குடைவரைகள் (2010) ஆகிய நூல்கள் வெளியாகியுள்ளன. இந்நூல்களுள் ஒன்றேனும் நூலாசிரியரது 'Bibliography' பகுதியில் இடம்பெறவில்லை. 



அப்பகுதியில் இடம்பெற்றுள்ள திரு. சிவராமமூர்த்தியின் கழுகுமலை உள்ளிட்ட முற்பாண்டியர் குடைவரைகள் பற்றிய ஆங்கில நூல் 1961லும் திரு. கே. வி. சௌந்தரராஜனின் பாண்டியர் குடைவரைகள் பற்றிய ஆங்கில நூல் 1998லும் வெளியானவை. இவ்வளவு நூல்கள் வெளியாகி இருந்தும் 'தாம் ஆய்வு தொடங்குவதற்கு முன் முற்பாண்டியர் அகழ்ந்த குடைவரைகளின் சரியான எண்ணிக்கையோ, அவை இருக்கும் இடங்களோ அறியப்படாதிருந்ததாக' நூலாசிரியர் எழுதியிருப்பது ஆய்வு நெறிமுறைக்கு இயைபுடையதன்று. 



இந்நூலில் உள்ள கருத்துப் பிறழ்வுகளையும் பிழையான சுட்டல்களையும் விரிவாகப் பார்ப்பதற்கு முன் அவர் 'authoritative and dependable source' ஆகக் குறிப்பிடும் அட்டவணை எண் 1ஐப் பார்ப்போம். இந்த அட்டவணையில் (பக். 2-8) 8 பிரிவுகளின் கீழ் முற்பாண்டியர் குடைவரைகளின் இடமும் அவற்றுக்கான வழியும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. முதல் பிரிவு குடைவரைக்கான எண்ணையும் 2-4ஆம் பிரிவுகள் முறையே குடைவரை இருக்கும் மாவட்டம், ஊர், வட்டம் குறிக்க, ஐந்து, ஆறாம் பிரிவுகள் அக்குடைவரை பாதுகாக்கப்பட்ட இடமா அல்லது பாதுகாக்கப்படாத இடமா என்பதைச் சுட்ட, பிரிவு ஏழு குடைவரை பற்றிய முதன்மைத் தரவுகளையும், பிரிவு எட்டு குடைவரைக்கான வழியையும் முன் வைக்கின்றன. இம்முதல் அட்டவணையிலுள்ள அதே ஏழு பிரிவுகளுடன், எட்டாம் பிரிவாக அவ்வக் குடைவரைகளிலுள்ள கல்வெட்டுகளின் இருப்பைக் கொண்டுள்ள இரண்டாவது அட்டவணையும் (பக். 9-14) இந்நூலில் உள்ளது. இரண்டாம் அட்டவணையின் எட்டாம் பிரிவை முதல் அட்டவணையின் ஒன்பதாம் பிரிவாகக் கொண்டால் ஓர் அட்டவணையே போதும் என்றாகும். 



இந்த அட்டவணைகளில் சிராப்பள்ளிக் குன்றிலுள்ள கீழ்க் குடைவரை முதலிடத்திலுள்ளது. இக்குடைவரை பற்றிய முதன்மைத் தரவுகள் பிரிவில் (ஏழாம் பிரிவு) இங்கு சிவபெருமான், துர்க்கை, முருகன், சூரியன், கணேசர் வடிவங்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இக்குடைவரையில் சிவபெருமானின் வடிவம் இல்லை. மாறாகக் குடைவரையின் பின்சுவரில் நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கும் துர்க்கை, முருகன், சூரியன், கணேசருடன் நான்முகனே காட்சிதருகிறார். குடைவரைக் கருவறைகளுள் ஒன்றில் நூலாசிரியர் இப்பிரிவில் குறிப்பிடாத விஷ்ணு உடன்கூட்டத்தாருடன் உள்ளார். நூலாசிரியரின் authoritative and dependable source இல்லாததை (சிவபெருமான்) இருப்பதாகக் கூறுவதுடன், இருப்பதை (விஷ்ணு தொகுதி) கூறாமலும் விட்டுள்ளது. 



சிராப்பள்ளிக் கீழ்க் குடைவரையிலுள்ள இரண்டு கல்வெட்டுகளாக இந்த அட்டவணையில் ARE 1941: 221, ARE 1904: 414, SII 14: 10 ஆகிய பதிவுகள் சுட்டப்பட்டுள்ளன. அவற்றுள் முதல் கல்வெட்டுப் புதுக்கோட்டை மாவட்டம் மலையக்கோயில் சீவரமுடையார் குடைவரையில் உள்ளதாகும். இரண்டாம் கல்வெட்டுச் சிராப்பள்ளிக் குன்றின் மேற்பகுதியிலுள்ள முதல் மகேந்திரப் பல்லவரின் குடைவரையில் உள்ளது. அதன் பாடமே தென்னியந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 14இல் எண் 10இன் கீழ்ப் பதிவாகியுள்ளது. 



Dependable source ஆக எடுத்துக் கொள்ளுமாறு நூலாசிரியர் குறிப்பிடும் அட்டவணையின் நிலையை இப்போது நீ புரிந்து கொண்டிருப்பாய். அவர் இக்குடைவரை சார்ந்து குறித்துள்ள இரண்டு கல்வெட்டுகளுமே இதனுடன் தொடர்பில்லாதவை. இக்குடைவரை முகப்புத் தூண்களில் சில கல்வெட்டுகள் உள்ளன. அவை பற்றி 2000இல் வரலாறு 10ஆம் தொகுதியில் பதிவான 'சிராப்பள்ளிக் கீழ்க் குடைவரை' கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது (ப. 169). முனைவர் திரு. தயாளன் தம்முடைய, 'Cave Temples in the regions of the Pandya, Muttaraiya, Atiyaman and Ay dynasties in Tamilnadu and Kerala' என்ற நூலில் இது பற்றிக் குறித்துள்ளார் (ப. 75). நூலாசிரியர் களஆய்வின்போது இக்கல்வெட்டுகளைப் பார்க்கவில்லை போலும்! 



இனி, அட்டவணையின் இரண்டாவது இடத்தில் உள்ளவற்றைப் பார்ப்போம். திருவெள்ளறையிலிருக்கும் குடைவரையாக ஜம்புநாதசாமி கோயிலும் புண்டரீராக்ஷ (?) கோயிலும் இடம்பெற்றுள்ளன. இவ்விரண்டனுள் ஜம்புநாதசாமி கோயில் மட்டுமே குடைவரை. புண்டரீகாட்சப் பெருமாள் கோயில் கட்டுக்கோயில் வகையது. 



நூலின் குடைவரை விளக்கப் பகுதியில் (ப. 51) திருவெள்ளறை என்ற தலைப்பின் கீழ் அட்டவணையிலுள்ள ஜம்புநாதசாமி கோயில் இடம்பெறவில்லை. மாறாக அட்டவணையில் இல்லாத திருவெள்ளறைப் பல்லவர் குடைவரை பற்றிய பிழையான தரவுகளும் புண்டரீகாட்சப் பெருமாள் கோயில் பற்றிய பொருத்தமற்ற கூற்றுகளும் மங்கையாழ்வார் பாசுரச் சொல்லாட்சிகள் பற்றிய தவறான பொருள் கொள்ளலும் கட்டுரையாகியுள்ளன. 



நூலாசிரியர் கூற்றுப்படி,



1. முற்றுப்பெறாத இவ்வெள்ளறைக் குடைவரை அர்த்த மண்டபமும் அதன் இருபுறத்தும் சிவபெருமானுக்கும் விஷ்ணுவுக்குமான கருவறைகள் இரண்டும் கொண்டுள்ளது.



2. அர்த்தமண்டபப் பின்சுவரில் நான்முகன், முருகன், சூரியன், கணேசர், துர்க்கை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. (2000இல் வெளியிடப்பட்ட தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள் என்ற நூலிலும் இதே செய்தி உள்ளது. ஆனால், அந்நூல் முற்பாண்டியர் குடைவரைக் கோயில்களின் நூலாசிரியர் தந்துள்ள Bibliography பகுதியில் இடம்பெறவில்லை.) 



3. பின்னாளில் குடைவரையுடன் ஒரு கட்டுமானக் கோயில் சேர்க்கப்பட்டது. 



4. வெள்ளறைப் பாசுரத்தில், வெள்ளறையில் கல்லறை மேல் இருக்கும் விஷ்ணுவாக மங்கையாழ்வார் குறிப்பது குடைவரை விஷ்ணுவே.



5. இரண்டாம் வரகுணரின் கல்வெட்டுள்ள பலகை இக்குடைவரைக்கு அருகிலுள்ளது. அதிலுள்ள கல்வெட்டுப் பொதுக்காலம் 874ஐச் சேர்ந்தது. அதன் அடிப்படையில் குடைவரை 9ஆம் நூற்றாண்டினது. 



நூலாசிரியர் எழுதியுள்ள இத்தரவுகள் அனைத்துமே பிழையாக இருப்பதால், அவர் வெள்ளறையில் களஆய்வு மேற்கொண்டாரா என்ற அடிப்படைக் கேள்வி எழுகிறது. உண்மைகளைப் பார்ப்போம்.



1. வெள்ளறைக் குடைவரையின் அர்த்தமண்டபத்தில் இரண்டு கருவறைகள் உள்ளன எனினும், அவை வெறுமையாகவும் அவற்றின் வெளிச்சுவர்கள் காவலர்கள் கொள்ளாமலும் இருப்பதால் அவை எத்தெய்வங்களுக்காக அகழப்பட்டன என்பதைக் கூறவியலாது.



 





படம் 1 - வெள்ளறைக் கருவறையின் உள்தோற்றம்



 



2. குடைவரையின் அர்த்தமண்டபப் பின்சுவர் வெறுமையாக உள்ளது. நூலாசிரியர் குறிப்பிடும் சிற்பங்களுள் ஒன்றேனும் அங்கில்லை. (படம் 2, 3)



 





படம் 2 - வெறுமையான அர்த்தமண்டபப் பின்சுவரும் கருவறையும்



 



 





படம் 3 - வெறுமையான அர்த்தமண்டபப் பின்சுவரும் மற்றொரு கருவறையும்



 



3. வெள்ளறையிலுள்ள கட்டுமானக் கோயிலான பெரிய ஸ்ரீகோயில் (புண்டரீகாட்சப் பெருமாள் கோயில்) குடைவரைக்குக் காலத்தால் முற்பட்டது. அக்கோயிலின் துணைத்தளத்தில் பல்லவர் காலச் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. வளாகத்தின் நடுவில் விளங்கும் அக்கோயில் நூலாசிரியர் கூறுமாறு போலக் குடைவரையுடன் சேர்க்கப்பட்ட கட்டுமானம் அன்று.



4. குடைவரையில் விஷ்ணுவின் சிற்பமே இல்லாத நிலையில், மங்கையாழ்வார் எப்படி இல்லாத இறையைப் பாடியிருக்க முடியும்? அவர் பாடியது, கல்வெட்டுகளில், பெரிய ஸ்ரீகோயில் என்றழைக்கப்படும் புண்டரீகாட்சப் பெருமாள் கோயில் இறைவனையே. இங்குதான் விஷ்ணு கல்லறை மேல் நிற்கிறார். இக்கோயில் மாடக்கோயில் வகையைச் சேர்ந்தது என்பதால் இதன் விமானம் வெற்றுத்தளத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றுத்தளத்தையே மங்கையாழ்வார் கல் அறையாகச் சுட்டுகிறார். 'மாடமதில் வெள்ளறையுள் கல்லறை மேல்' என்ற பாடலடி நோக்கத்தக்கது. 



5. இக்குடைவரைக்கு அருகில் கல்வெட்டுப் பலகைகள் ஏதுமில்லை. குடைவரையிலுள்ள கல்வெட்டுகளோ வரகுணரைக் குறிக்கவில்லை. மாறாக, வரகுணர் காலக் கல்வெட்டு வெள்ளறையிலுள்ள மற்றொரு குடைவரையான, கல்வெட்டுகளில் 'திருவானைக்கல் பெருமானடிகள் கோயில்' என்றழைக்கப்படும் வடஜம்புநாதர் குடைவரைக்கு முன்னுள்ள பாறையில் வெட்டப் பட்டுள்ளது. (நூலாசிரியர் இக்குடைவரை பற்றிய தரவுகளைத் தம் நூலில் தரவில்லை) இந்நிலையில், இல்லாத கல்வெட்டின் அடிப்படையில் வெள்ளறைக் குடைவரையின் காலத்தை 9ஆம் நூற்றாண்டாகக் கொண்டுள்ளார் நூலாசிரியர்.



அட்டவணை இரண்டில் இக்குடைவரைக்கான கல்வெட்டுகள் பிரிவில் ARE 1905: 512-543, ARE 1910: 81-91 ஆகிய பதிவுகளைச் சுட்டியுள்ளார். அவற்றுள் 512-530, 81-91 ஜம்புநாதர் குடைவரையிலும் 531-540 வெள்ளறைக் குடைவரையிலும் உள்ள கல்வெட்டுகள். 541, 542 இரண்டும் வெள்ளறையிலுள்ள ஸ்வஸ்திகக் கிணற்றில் உள்ளன. 543 சிதைவுற்ற கோயில் ஒன்றில் இருந்து பதிவானது. 



வெள்ளறையில் இரண்டு குடைவரைகள் உள்ளபோதும் அட்டவணைப் பட்டியல்களில் ஜம்புநாதசாமி கோயில் மட்டுமே இடம்பெற்றுள்ளது. விளக்கப் பகுதியில் வெள்ளறைக் குடைவரை மட்டுமே காணப்படுகிறது. முதல் அட்டணையில் இக்குடைவரைகளின் பாதுகாப்பு நிலை பற்றி ஏதும் குறிப்பிடாதவர் இரண்டாவது அட்டவணையில் இந்து அறநிலையத் துறையின் பெயரைக் குறித்துள்ளார். வெள்ளறைக் குடைவரையின் இன்றியமையாத முகப்புப் பகுதி பற்றியோ, அதன் விரிவுச் சுவர் ஒன்றில்செதுக்கப்பட்டுள்ள காவலர் வடிவம் குறித்தோ நூலாசிரியரின் யீசயபஅயவiஉ ளவரனல ஏதும் சுட்டவில்லை. அந்த முகப்புத் தூண்களிலும் உத்திரத்திலும்தான் வெள்ளறைக் குடைவரையின் பல்லவர், சோழர் காலக் கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன.



அட்டவணையில் மூன்றாவதாக இடம்பெற்றுள்ள குடைவரை பைஞ்ஞீலியில் நீலிவனேசுவரர் கோயில் வளாகத்தில் உள்ளது. இக்குடைவரைக்குப் பெயரேதும் இல்லை. ஆனால், நூலாசிரியர் details of rock cuts பிரிவில் நீலிவனேசுவரர் கோயில் என்ற பெயரைத் தந்துள்ளார். இக்குடைவரை பாதுகாப்பிலில்லை என்றே தம் இரண்டு அட்டவணைகளிலும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், நீலிவனேசுவரர் கோயிலும் அவ்வளாகத்துள்ள இக்குடைவரையும் இந்து சமய அறநிலையத்துறையின் காப்பில் உள்ளன. இக்குடைவரைக்கான கல்வெட்டுகளாக ARE 1892: 91, SII 6: 177 எனும் இரு பதிவுகளைத் தந்துள்ளார். 



அவற்றுள் முதல் கல்வெட்டு நீலிவனேசுவரர் கோயிலுக்குரியது. அக்கல்வெட்டின் பாடம் தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 4இல் (538) வெளியாகியுள்ளது. அவர் குறிப்பிட்டுள்ள இரண்டாம் கல்வெட்டு தெலுங்குக் கல்வெட்டாகும். அது குண்டூர் மாவட்டம் பாபட்லாவைச் சேர்ந்த பவநாராயணர் கோயிலிலிருந்து படியெடுக்கப்பட்டது. பைஞ்ஞீலிக் குடைவரைக்காக அவர் தந்திருக்கும் இரண்டு கல்வெட்டுகளுமே குடைவரை சார்ந்தவை அன்று. இக்குடைவரை பற்றிய விளக்கப்பகுதியில் (ப. 51) இங்குக் கல்வெட்டுகளே இல்லை என்று எழுதியுள்ளவர் அட்டவணையில் ஏன் இக்கல்வெட்டுகளைக் குறித்துள்ளார் என்பது விளங்கவில்லை. 



இக்குடைவரையில் சோமாஸ்கந்தர் வடிவம் இடம்பெற்றுள்ளது. உமை வலப்புறமும் சிவபெருமான் இடப்புறமும் என மாறி அமர்ந்துள்ள இத்தொகுதி தமிழ்நாட்டுக் குடைவரைகளில் இங்கு மட்டுமே இந்நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது (பைஞ்ஞீலி ஒத்த சோமாஸ்கந்தக் காட்சி தச்சூர் சிற்பத் தொகுதியிலும் படமாகியுள்ளது). பல்லவர் குடைவரைகளிலும் பரங்குன்றக் குடைவரையிலும் காணப்படும் சோமாஸ்கந்த வடிவங்களில் இறைவன் வலப்புறமும் இறைவி இடப்புறமும் அமர்ந்துள்ளமை எண்ணத்தக்கது. மாறி அமைந்துள்ள இவ்வரிய தோற்றம் குறித்து நூலாசிரியர் தம் விளக்கப் பகுதியில் ஏதும் சுட்டவில்லை. சிவபெருமானின் நான்கு கைகளில் முன்கைகள் அபயத்திலும் கடிமுத்திரையிலும் உள்ளதாகவும் பின்கைகள் பரசும் மானும் கொண்டுள்ளதாகவும் எழுதியுள்ளார். ஆனால், சிற்பத் தொகுதியில் சிவபெருமானின் வல முன் கை கடக முத்திரையில் அமைய, இட முன் கை மடியில் இருத்தப்பட்டுள்ளது. பின்கைகளில் வலப்புறம் மானும் இடப்புறம் அக்கமாலையும் உள்ளன. நூலாசிரியர் குறிப்பிடும் பரசு இத்தொகுதியில் இடம்பெறவில்லை.



 





படம் 4 - பைஞ்ஞீலி சிவபெருமான்



 



சிவபெருமானின் அமர்வுக் கோலத்தைச் சுட்டியுள்ளவர் உமை, முருகன் பற்றி ஏதும் எழுதவில்லை. உத்குடிகாசனத்தில் இங்கு உமை அமர்ந்துள்ள கோலம் இணையற்றதாகும்.



 





படம் 5 - உமையும் முருகனும்



 



இத்தொகுதியின் கீழ்ப்பகுதியில் சிவபெருமானின் வலப்பாதத்தைத் தம் கைமீது தாங்கும் முயலகன் இடம்பெற்றுள்ளார். இம்முயலகனை நூலாசிரியர் தம் களஆய்வின்போது காணமையின் போலும் நூலில் முயலகன் இடம்பெறவில்லை. 



 





படம் 6 - முயலகன்



 



நீலிவனநாதர் கோயில் பாடல் பெற்ற தலமாகும். அப்பர் பெருமான் வாழ்க்கையோடு அவ்வூருக்கிருந்த தொடர்பைச் சேக்கிழார் நன்கு விளக்கியுள்ளார். நூலாசிரியர் இந்நீலிவனநாதர் கோயிலைக் குடைவரையோடு பின்னாளில் இணைக்கப்பட்ட கட்டுமானக் கோயிலாகச் சுட்டுவதுடன், அப்பர், சம்பந்தர், சுந்தரர் இக்கோயிலைக் காண வந்தபோது குடைவரை அங்கிருந்ததாகவும் அதன் அடிப்படையில் இக்குடைவரையை 7ஆம் நூற்றாண்டாகக் கொள்ளவேண்டும் என்றும் எழுதியுள்ளார். அப்பர், சம்பந்தர், சுந்தரர் பைஞ்ஞீலி வந்தபோது குடைவரை அங்கிருந்தமை நூலாசிரியருக்கு எப்படித் தெரியவந்தது என்பதற்கு நூலில் விளக்கமில்லை. 



சிராப்பள்ளிக் குன்றின் கீழ்ப்பகுதியில் அகழப்பட்டுள்ள பேரளவுக் குடைவரை பற்றிய விளக்கப் பகுதியில் நூலாசிரியர் தெரிவித்துள்ள கருத்துக்களை அடுத்த மடலில் விரிவாகப் பார்ப்போம். 



அன்புடன்,

இரா. கலைக்கோவன்.



 


இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.