http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 10
இதழ் 10 [ ஏப்ரல் 15 - மே 14, 2005 ] இந்த இதழில்.. In this Issue.. |
முதல் தளத்தை விட இரண்டாவது தளத்தின் சுற்றளவு சற்று குறைவாக இருக்குமல்லவா? முதல் தளத்தின் கூரை உறுப்புகளில் இரண்டு கர்ண கூடுகளுக்கு நடுவில் ஒரு சாலை, சாலைக்கும் கூடுகளுக்கும் நடுவில் ஒவ்வொரு பஞ்சரம் என ஐந்து உறுப்புகளைக் காட்டியிருந்த சிற்பி, இரண்டாவது தளத்தின் கூரை உறுப்புகளில் அந்த இரண்டு பஞ்சரங்களை நீக்கிவிட்டு, சாலையை இரண்டாகப் பிரித்து, இடமின்மையை அழகாகக் கையாண்டிருந்தான். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பின்புறமிருந்து ஒரு கூக்குரல். 'சார்! இங்கே யாரோ யானை மேலே அமர்ந்திருக்கிறார்கள்!' வேறு யாருமல்ல. தளத்தைச் சுற்றி அமைந்திருந்த சிற்பங்களை வீடியோ எடுக்கச் சென்ற பூங்குழலியின் உற்சாகத் துள்ளல்தான் அது. 'யானை மீது என்றால் அது முருகனாக இருக்கும்' - இது டாக்டரின் மறுமொழி. 'ஆனால் நெற்றியில் சென்னி இல்லையே?' நளினி மேடமின் இந்தக் கேள்வியைக் கொண்டு அது இந்திரன் எனவும், அந்த யானை ஐராவதம் எனவும் முடிவுக்கு வந்தோம். டாக்டரும் பின்புறம் வந்து அதை உறுதி செய்தார். ஆனால், ஐராவதத்திற்கே உரித்தான அந்தச் சிறப்புத் தந்தம் சரியாகக் காட்டப்படவில்லை. இவ்வாறு சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோதே சூடான சுவையான தேநீர் வந்து சேர்ந்தது. கங்கை கொண்ட சோழபுரத்தின் உச்சியில் சிகரத்தில் அமர்ந்து கொண்டு இளநீர் அருந்தி மகிழ்ந்ததை நினைவு கூர்ந்து களிப்புற்றோம்.
பின்னர் இரண்டாவது தளத்தின் மீது ஏற ஆரம்பித்தோம். முதல் தளத்தைப்போல் அனற்பிதாவாக இல்லாமல், அற்பிதாவாக இருந்ததால், நேரே நந்தியின் மீது ஏறி அமர்ந்து கொண்டோம். வட்ட வடிவிலிருந்த அத்தளத்தின் வெளிப்புறத்தில் நீண்டிருந்த கருங்கல்லின் மீது நடந்து சிகரத்தையும், அதைச் சுற்றியிருந்த சிற்பங்களையும் ரசித்தோம். நந்தியின் ஒரு காதைப் பிடித்துத் தொங்கியவாறு அதற்குக் கீழே பிரம்மரந்திரக்கல் போன்று இருந்த கல்லின் மீது ஒரு காலை வைத்துக்கொண்டு, இன்னொரு காலை எங்கு வைப்பது எனத் தடுமாறிக் கொண்டிருந்தபோது, கிருபா கேட்ட அந்தக் கேள்வி (திருச்சியிலிருந்து சென்னைக்கு பஸ் டிக்கெட் எவ்வளவு?) எங்களை விழாமல் சிரிக்க வைத்தது. ஆகா! எந்த மாதிரியான தருணத்தில் எந்த மாதிரியான கேள்வி!! கிருபா, உனக்கு மட்டும் எப்படி இவ்வாறெல்லாம் தோன்றுகிறது? பிறகு, கீழே இறங்கி வந்து, கருவறை வாசலுக்கு இரண்டு புறமும், இரு வேறு காலகட்டங்களில் செய்தது மாதிரி இருந்த வாயிற்காவலர்களைப் பார்த்து வியந்தவாறே உள்ளே சென்றோம். ஆகா! இதற்காகவல்லவா காத்திருந்தோம்! முதல் தளத்திலிருந்த போது உதித்த ஐயத்திற்கு விடை கிடைத்து விட்டது. உங்களால் ஊகிக்க முடிகிறதா? ஆம். வட்ட வடிவிலான கருவறை. தமிழ்நாட்டின் எந்த ஒரு கலைக்கோயிலிலும் காண முடியாத அரிய கலை வடிவம். ஆனால் நான்கு புறமும் நான்கு தூண்கள். அப்படிப்போடு!! இப்பொழுது புரிகிறது. நான்குமுனைகள் கொண்ட வட்டமும், நான்கு வளைந்த பக்கங்கள் கொண்ட சதுரமும் அமைக்கப்பட்டதன் சூட்சுமம். சதுரத்தின் முனைகளைத் தாங்கத் தூண்கள்! வளைந்த பக்கங்களைத் தாங்க வட்ட வடிவில் சுவர்! அடேங்கப்பா! என்ன ஒரு சிந்தனை வளர்ச்சி இருந்திருந்தால் இவ்வாறெல்லாம் யோசித்துக் கருங்கல்லில் சாதனை படைத்திருக்க முடியும்? அதுபோக, சுவற்றில் சில ஓவியங்களும் காணப்பட்டன. தஞ்சாவூரிலுள்ள ஓவியங்களைப் போலில்லாவிட்டாலும், ஓவியத்திலிருந்த உருவங்கள் எல்லாம் இயல்பான முக பாவங்களைக் கொண்டிருந்தன. ஒரு சில ஓவியங்களில் outline drawing எனப்படும் கோட்டு உருவங்கள் மட்டுமே வரையப்பட்டிருந்தன. அவற்றில் கூடக் கண்களும் உதடுகளும் மிகச் சிறப்பாக காட்டப்பட்டிருந்தன. வெளியில் வந்த பிறகு கோஷ்டங்களில் இருந்த சிற்பங்களைச் சிலாகித்துப் பேசிக்கொண்டிருக்கையில், கிருபா, நாயக்கர் காலச் சிற்பங்கள் கூட அழகாகத்தான் இருக்கின்றன என்றார். சோழ, பல்லவர் காலச் சிற்பங்களை விடவா நாயக்கர் சிற்பங்கள் அழகு? என்ற எஸ்பியின் கேள்விக்கு, 'ஆமாம். கை கால்கள் எல்லாம் நன்றாக உள்ளன' என்று மறுமொழி தந்தார். 'என்னது? கை கால்களா? பாவம். கல்யாணமாகாத பையன். என்ன தெரியும்?' எனக் கலாய்த்தார். எஸ்பி கிருபாவின் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என வியந்தவாறே, அதற்கு எதிரில் இருந்த குடைவரைக்குள் நுழைந்தோம். ஆ! கருவறைக்குள் இருந்த லிங்கம் எங்கே போயிற்று? லிங்கம் இல்லாமல் குடைவரை அமைத்திருக்க வாய்ப்பில்லை. அப்படியானால் யாராவது அதை அகற்றியிருக்க வேண்டும். யார் அகற்றியிருப்பார்கள்? அகற்றப்பட்டதற்கான அடையாளங்கள் உள்ளனவா? ஆம். இருக்கின்றன. அடியோடு வெட்டி எடுத்திருக்கிறார்கள். அருகே சில சமணப்படுக்கைகள் உள்ளனவே. அப்படியானால் சமணர்கள்தான் அகற்றியிருப்பார்களோ? டாக்டரை நோக்கிப் பார்வையைத் திருப்பினோம். அவரும் அப்பார்வையைப் புரிந்துகொண்டு, வாய்ப்புகள் உள்ளன. ஆனால் ஆதாரம் இல்லை என்ற சர்வ ஜாக்கிரதையான பதிலை அளித்தார். இக்குடைவரையின் முகப்பு மேடையிலுள்ள பூதவரியில்தான் மனித முகமும் சிங்க உடலும் கொண்ட ஸ்பிங்க்ஸ் போன்றதொரு பூதகணம் காணப்படுகிறது. இந்த பூதவரியிலுள்ள பூதங்களின் சேட்டைகளை இரசிக்க, வாழ்நாள் முழுக்க அங்கேயே தவமிருக்கலாம். அந்த உணர்ச்சிகளை வார்த்தைகளில் வடிப்பது கடினம். உள்ளே நுழைந்ததும், வரிசையாக வைக்கப்பட்டிருந்த 12 விஷ்ணு சிலைகளை நோட்டமிட்டோம். ஒரு சிற்பக்கல்லூரியில் பயின்ற மாணவர்களுக்கு ஒரு போட்டி வைத்து, அவற்றில் சிறந்த 12 சிற்பங்களை இங்கே கொண்டு வைத்தாற்போல இருந்த அவற்றைப் பார்க்கும்போது, சிவன் கோவிலின் வாயிற்காப்பாளர்கள் போல விஷ்ணுவை ஏன் நிறுத்தியிருக்கிறார்கள்? என்ற கேள்வி தோன்றியது. ஒருவேளை இது ஆழ்வார்க்கடியானுக்கு பதிலடி கொடுப்பதற்கான ஈசான பட்டரின் வேலையாக இருக்குமோ? என்றெல்லாம் நினைத்துக் கொண்டு, கடம்பர் மலைக்குச் செல்வதற்காகக் குன்றை விட்டுக் கீழே இறங்க ஆரம்பித்தோம். கடம்பர் மலைக்குச் செல்லும் வழியில் தாகசாந்தி செய்து கொள்வதற்காக ஒரு சோடாக் கடையில் நிறுத்தலாமா என்ற எஸ்பியின் கேள்விக்கு, ஒரு பீடாக் கடையில் நிறுத்தலாமே என்ற கிருபாவின் தில்லானா மோகனாம்பாள் பாணியிலான பதிலுக்குப் பின், சோடா, பீடா இரண்டுமே கிடைக்கும் ஒரு கடையின் முன் வண்டி நிறுத்தி, வேலையை முடித்துக்கொண்டு வண்டியைக் கடம்பர் மலையை நோக்கிச் செலுத்தினார் எஸ்பி. காரிலிருந்து இறங்குவதற்குள்ளாகப் பரந்து விரிந்த அந்தக் கல்வெட்டைக் கண்டு பரவசப்பட்டுப் போனோம். பூங்குழலிக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. முதல் ஆளாக இறங்கி ஓடினார். சிற்சில இடங்களில் சிதைந்திருந்தாலும், சுந்தரபாண்டியன் மற்றும் பிற மன்னர்களின் கல்வெட்டுக்களை ஓரளவுக்கு நன்றாகவே படிக்க முடிந்தது. வழியில் குளத்திலிருந்த ஒரு ஒற்றை அல்லியை ரசித்தவாறே மற்றவர்களும் இணைந்து கொண்டோம். கல்வெட்டு இருந்த இடத்தையும் அந்தக் குளத்தையும் இணைத்த பாறை ஒரு சறுக்கு விளையாட்டு விளையாடும் இடம் போல அமைந்திருந்தது. இளவரசியும் அவளது தோழிகளும் இவ்வாறுதானே அக்காலத்தில் சறுக்கி விளையாடியிருப்பார்கள் எனக் கூறியவாறே இராம் சறுக்க ஆரம்பித்தார். ஆனால் அது அவ்வளவு எளிதானதாக இல்லை. அங்கிருந்த ஆடு மேய்க்கும் பாட்டியிடம் வாழைப் பழங்களைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, கோவிலுக்குள்ளே சென்றோம். கோவில் கட்டடம் ஒரு பெரிய பாறையை ஒட்டி அமைந்திருந்தது. அப்பாறையில் கூட ஒரு பெரிய கல்வெட்டு இருந்தது. கூடவே சண்டேச அனுக்கிரஹ மூர்த்தியும் அழகாகக் காட்சியளித்தார். இங்கு கட்டாயமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் இக்கட்டுமானக் கோவிலின் சிகரம். இதற்கு முன் நார்த்தாமலையில் நாங்கள் கண்டு ரசித்த தளிக்கு வடபுறத்திலிருந்த ஏகதள விமானத்தின் சிகரம் அரைக் கோள வடிவில் செதுக்கப்பட்டிருப்பதைக் கண்டு வியந்து போன நாங்கள், இந்தச் சிகரத்தைக் கண்டதும் அடைந்த ஆச்சரியத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அப்பப்பா! என்னவொரு perfect semisphere and soft surface? இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் இவ்வரைக்கோளம் ஒரே கல்லால் ஆனதல்ல. பல கற்களை proper alignment உடன் இணைத்து உருவாக்கப்பட்டது. எப்படி இவ்வளவு கச்சிதமாக உருவாக்க முடிந்தது? என்ன விதமான உளிகளையும் சுத்தியலையும் உபயோகித்திருப்பார்கள்? கீழே செதுக்கி, மேலே எடுத்து வைத்திருப்பார்களா? அல்லது நேரடியாக மேலேயே வைத்து செதுக்கி இருப்பார்களா? ஒரு கரடுமுரடான கல்லை எடுத்துக் கொண்டு, அதைக் கோள வடிவில் செதுக்குவதென்றால், பரப்பைச் சமன்படுத்த உபயோகிக்கப்படும் சதுர வடிவிலான உளியைக் கொண்டு ஒருவாறு சிரமப்பட்டுச் செய்து முடித்து விடலாம். ஆனால் பல கரடுமுரடான கற்களை வைத்து, அவற்றை இணைத்து, ஒரு அரைக்கோளமாக ஆக்க வேண்டுமென்றால்? அதற்கு எவ்வளவு திட்டமிடுதல் வேண்டும்? தலைமைச் சிற்பி அந்த உத்தியைத் தன் உதவியாளர்களுக்கு எந்த உபகரணங்களைக் கொண்டு விளக்கியிருப்பார்? எப்படியிருப்பினும், அது போற்றத்தக்கதே. இதையே மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்ததால், மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த இயலவில்லை. அங்கிருந்து திருச்சிக்குத் திரும்பும் வழியில் எங்களை ஈர்த்த இடம், மெகா லித்திக் பரியல் எனப்படும் பெருங்கற்காலப் பண்பாடு காலத்திய இடுகாடு. ஏற்கனவே சொல்லியிருப்பது போல், ஆதிச்சநல்லூரை விடப் பெரிய இடம்தான். நாங்கள் யாரும் ஆதிச்சநல்லூரை நேரில் பார்த்ததில்லை. கிருபாவைத்தவிர. இறந்தவர்களை அடக்கம் செய்யும்போது, அவர்களின் உடலைக் குழிக்குள் வைத்து, அவர்கள் உபயோகித்த பொருள்களையும் அதற்குள் போட்டு மூடி விடுவார்களாம். இதற்குப் பெயர்தான் முதுமக்கள் தாழி. ஆறாம் ஏழாம் வகுப்புகளில் சிந்து சமவெளி நாகரிகம், ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ பற்றிப் படித்த போது கேள்விப்பட்ட ஞாபகம். புதைத்த பிறகு, தரைக்கு மேல் நான்கு கருங்கற்களை சதுர வடிவில் வைத்து விடுவார்கள். கல்லறை மாதிரி. அது சரி, பொதுவாக, மனிதர்களைப் புதைக்க வேண்டுமென்றால், ஆறடிக்கு மூன்றடி குழி வெட்டித்தான் புதைப்பது வழக்கம். ஆனால் இங்கு இருப்பதோ இரண்டடிக்கு இரண்டடி அளவிலான சதுரங்கள் மட்டுமே. ஒருவேளை நின்ற நிலையிலேயே அப்படியே உள்ளே இறக்கியிருப்பார்களோ? ஆமாம். அப்படித்தான் என்றார் டாக்டர். எங்கோ தூரத்தில் இருக்கும் ஆதிச்சநல்லூரில் தொல்லியல் ஆய்வை மேற்கொண்டிருக்கும் தொல்லியல் பரப்பாய்வுத் துறை (ASI) மூன்று பெரிய தொல்லியல் மையங்களுக்கு (திருச்சி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர்) நடுவில் அமைந்துள்ள இந்த இடத்தை இன்னும் தோண்டாமலிருப்பது ஆச்சரியமே என்றார். சரி, நேரமாகிவிட்டது. கிளம்பலாம் என்று வண்டியை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று ஆரம்பித்தது அந்தப் பேய்க்காற்று. இடுகாட்டில் பேய்க்காற்று! நினைக்கவே பயங்கரமாக இருந்தது. கிருபாவுக்கு அன்று இரவெல்லாம் பயத்தினால் தூக்கமே வரவில்லையாம். எங்கே வழக்கம்போலக் காய்ச்சல் வந்துவிடுமோ என்று பயந்து கொண்டிருந்தோம். நல்லவேளையாக, கிருபாவுக்கு வந்தது கணிப்பொறியோடு போயிற்று. ஐய்யய்யோ!! வண்டி போகுதே!! எங்கே எஸ்பி எங்களை எல்லாம் பேய்களிடம் மாட்டிவைத்து விட்டு, அவர் மட்டும் சென்னைக்குச் செல்கிறாரா என்று திரும்பிப் பார்த்தால், அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தார் எஸ்பி. அப்படியானால் வண்டியை யார் ஓட்டுவது? உள்ளே பார்த்தால் யாருமில்லை. ஆஹா! பேய் வேலையைக் காட்டி விட்டது என்று நினைத்துக் கொண்டே, ஓடிப்போய் ஹேண்ட் ப்ரேக்கைப் போட்டார் எஸ்பி. இங்கு இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். எல்லோருக்குமே ஒரு சந்தேகம் உதித்தது. சாலைக்கு இந்தப்பக்கம் இடுகாடு உள்ளது. அந்தப்பக்கம் ஏரிக்கரை போலிருக்கும் சுவருக்குப் பின்னால் என்ன இருக்கிறது? யார் கதவருகில் அமர்ந்திருப்பது? பூங்குழலியா? இறங்கிப் போய் என்ன இருக்கிறது எனப் பார்த்து விட்டு வாருங்கள். அதற்குள் வண்டியைத் திருப்பிக் கொண்டு வந்து விடுகிறேன் என்றார் எஸ்பி. நாங்களும் துணைக்கு வருகிறோம் என்று இராமும் நானும் இறங்கினோம். பாதிக்கு மேல் ஏறியவுடனே, தெரிந்து விட்டது. குவாரியில் கல் உடைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று. சரி, இறங்கலாம் என்று திரும்பியவுடனே திடீரென்று எங்கிருந்தோ இன்னொரு பேய்க்காற்று ஆரம்பித்தது. அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஆ!! என்ற அலறலுடன் கீழே சறுக்கினார் பூங்குழலி. ஆஹா! பேய்கள் நம்மை ஃபுட்பால் ஆடுகின்றனவே! என்று அதிர்ச்சியுடன் செயலற்று நிற்கும்போதே இன்னொரு அலறல். என்னடாவென்று திரும்பிப் பார்த்தால், இந்தப்பக்கம் இராம் சறுக்கிக் கொண்டிருந்தார். ஏதாவது அடிபட்டு விட்டதா என்று விசாரித்தால், ஹி! ஹி!. வேறொன்றுமில்லை. கடம்பர் மலையில் எளிதாகச் சறுக்க முடியவில்லை அல்லவா? அதுதான். என் ஆசையைப் பேய் நிறைவேற்றி விட்டது எனச்சொல்லிச் சிரித்தார். பிறகென்ன! ஒருவித பயத்துடனே திருச்சி நோக்கிக் கிளம்பினோம். (முற்றும்) this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |