http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 138

இதழ் 138
[ அக்டோபர் 2017 ]


இந்த இதழில்..
In this Issue..

THE ORNAMENTAL DOORFRAMES IN SRI RANGANATHA SWAMI TEMPLE, SRIRANGAM – REMNANTS OF EARLY CHOLA ARCHITECTURE
புள்ளமங்கை கோபுரம்
பெரியபுராணமும் கற்சிற்பமும் (காரைக்கால் அம்மையார்)
நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்! - 2
விசலூர் ஆய்வுப்பயணம்
கலைக்கோயில்களில் கல்கியின் கதை மாந்தர்கள்
சந்திரபுரத்து நடுகற்கள்
வெகுமக்கள் இலக்கியத்தில் தமிழ் இலக்கணம் -3
இதழ் எண். 138 > பயணப்பட்டோம்
விசலூர் ஆய்வுப்பயணம்
சு.சீதாராமன்

 



சென்ற இதழின் ஆய்வுப்பயணங்கள் கட்டுரை வாசித்தவர்களுக்கு நெஞ்சில் ஒரு வினா எழுந்திருக்கும்! அது என்னவெனில் அறிவியலின் (GPS)துணைகொண்டு ஊர்களை எளிமையாக அடையலாமே ? இவர் ஏன் இப்படி ஒவ்வொருவராக விசாரித்துக்கொண்டு கஷ்டப்படவேண்டும் என்பதுதான் அந்த வினா! அப்படி அறிவியலின் துணை கொண்டு மேற்கொண்ட பயண அனுபவம் இந்த இதழில்!



திருச்சிராப்பள்ளியில் சிற்றுண்டி அருந்திவிட்டு நான், முனைவர் சுமிதா மற்றும் முனைவர் கோகுல் ஆகியோர் விசலூர் சென்றுவர எண்ணி, 09-07-2017 அன்று காலை சுமார் 8.30 மணியளவில் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம்!



கூகுள் மேப்ஸ் செயலியில் விசலூர் என்று தட்டச்சுச் செய்ய, விசலூர் கிராமத்திற்கு அது வழிசொல்ல ஆரம்பித்தது. ஆனால், சற்று சந்தேகமாகத்தான் இருந்தது. ஏனென்றால், திருச்சியிலிருந்து விசலூர் சுமார் 70 கி.மீ என்றவாறு அது காட்டியது. கொடும்பாளூர் வழியாக ஒரு பாதையை கூகுள் மேப்ஸ் காண்பிக்க, சரி முயற்சிசெய்து பார்க்கலாம் என்று மூவரும் பயணத்தைத் தொடர்ந்தோம்!

திருச்சி - மதுரை விரைவுச்சாலையில் அரைமணி நேரத்திற்குள் கொடும்பாளூரை அடைந்தோம். மூன்று பேருக்குமே ஒரு நப்பாசை! கொடும்பாளூர் மூவர்கோயிலுக்குச் சென்று பிறகு பயணத்தை தொடரலாம் என்று ஒரு கணம் யோசித்து, சரி வரும்போது பார்த்துக்கொள்ளலாம், முதலில் விசலூரை பார்த்து விடுவோம் என்று முடிவுசெய்து கொடும்பாளூரிலிருந்து விசலூர் நோக்கி விரைந்தோம்.



 





 



(விசலூருக்கு கூகுள் மேப் காட்டிய வழி)



 



வழியில் திருமயம் என்ற ஊர் வந்தது. சரியாகத்தான் போகிறோமா என்று சந்தேகம் வர, வண்டியை நிறுத்தி ஊர்மக்களிடம் விசாரித்தோம்!



"நீங்க சொல்ற ஊர் பத்தி தெரில சார்"



"இப்படியே நேர போங்க! வேம்பனூர் வரும் அங்க கேளுங்க!"



மேப்பைப் பார்த்தோம் அது சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறோம் என்றது! மேலும் தொடர்ந்தோம். அவர் கூறிய வேம்பனூர் வந்தது! அங்கும் விசாரிக்கவே,



"நேரே போங்க! பரம்பூர் வரும் அங்க கேளுங்க" என்று பதிலளித்தனர்.



மீண்டும் மேப்பைப் பார்த்தோம். அது சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறோம் என்றது! பரம்பூர் வந்தது.



ஒருவரை விசாரிக்க, "குடுமியாமலை போயி அங்கேர்ந்து ரெண்டு கிலோமீட்டர்ல விசலூர் வரும்" என்று தகவல் கிடைத்தது! இப்பொழுதும் மேப்பைப் பார்த்தோம், அது சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறோம் என்றது!



சரி! ஒரு டீ குடிக்கலாம் என்று முடிவெடுத்து மூவரும் பரம்பூரில் கிடைத்த தேனீரை அருந்திவிட்டுக் குடுமியான்மலை நோக்க்ச் செல்லத்துவங்கினோம். குடுமியான்மலை தாண்டி ஒரு மூன்று கிலோமீட்டர் தொலைவில் விசலூர் என்ற அந்த ஊர் வந்தது! ஊரைச் சுற்றிச் சுற்றித் தேடியும் நாங்கள் தேடிவந்த அந்தக்கோயில் கிடைக்கவே இல்லை! பிறகுதான் புரிந்தது புதுக்கோட்டை மாவட்டத்திலேயே விசலூர் என்கிற பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஊர்கள் இருப்பது தெரிய வந்தது.



இதில் கவனிக்கவேண்டிய விஷயம் முனைவர் சுமிதா ஆரம்பித்திலேயே கூறினார். நான் ஏற்கனவே விசலூர் போயிருக்கிறேன், இந்த வழியெல்லாம் வராதே? என்று கொடும்பாளூர்ப் பாதையில் வண்டி செல்லும் போதே கூறினார்.



நாங்கள் (நான் என்பது சரியாக இருக்கும்) தான் சிவப்பா உள்ளவன் பொய் சொல்லமாட்டான் அப்படிங்கற லாஜிக்ல கூகுள் தப்பா வழிகாட்டாது அப்படின்னு சொல்லி கூகுள் வழி காட்ட வேறொரு விசலூருக்கு வந்து விட்டோம்! சரி, வந்தது வந்துவிட்டோம், குடுமியான்மலையையாவது பார்க்கலாம் என்று ஏகமனதாக முடிவெடுத்து அங்கிருந்து திரும்பிக் குடுமியான்மலைக் கோவிலை அடைந்தோம்!



கோபுரத்துக்கு முன் உள்ள மண்டபத்தில் பிரம்மாண்டமான தூணை ஒட்டியுள்ள சிற்பங்களின் வரவேற்பு வழிதவறிய பயணத்தின் அயற்சியை அறவே துடைத்தெறிந்தது. அதனையடுத்துக் கோபுரவாயில் வழியே உள்நுழைய, ஆஹாகாரம் செய்யும் அளவிற்கு அற்புதமான சிற்பத்தூண்கள் கொண்ட நீண்ட மண்டபம் நம்மை வரவேற்க, விசலூரை மறந்து குடுமியான்மலையில் மனதை ஒன்றச்செய்யும் அற்புதத்தை அச்சிற்பங்கள் செய்தன!

 





 



அதனைக்கடந்து உள்ளே செல்லக் குடுமிநாதர் கோயிலின் திருச்சுற்றின் வடக்குப் பக்கம் அகிலாண்டேஸ்வரியின் சன்னதிக்குச் செல்ல ஒரு வாசல் இருந்தது. அதன்வழியே சென்று பின்பக்க மதிலை அடைந்து மேற்கே செல்ல, அங்கு "மேலக்கோயில்" என்றழைக்கப்படும் குடைவரைக்கோயில் இருந்தது.



 





 



குடைவரையில் உள்ளே நுழைந்தவுடன் கனமான உயரம் குறைந்த தூண்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. அதனைத் தாண்டிக் கருவறையை அடையக் கருவறை நுழைவாயில் மேற்புறத்தில் பூதத்தோரணங்கள் பெற்று அழகுடன் மிளிர்ந்தது. முனைவர் கோகுலும், முனைவர் சுமிதாவும் ஆழமான உரையாடல்களில் ஈடுபட, நான் மட்டும் அங்கிருந்து வெளியே வந்து கோயிலின் வடமேற்குத்திசையில் உள்ள மலையில் செதுக்கப்பட்டுள்ள அறுபத்து மூவர் சிற்பத்தை பார்வையிடச் சென்றேன். 



 







 

அச்சிற்பங்களின் நடுநாயகமாக, தெற்குப்பார்த்து நிற்கும் நந்தியின் மேல் சிவனும் உமையும் அமர்ந்திருக்க இருபுறமும் அறுபத்து மூவர் சிவனையும் உமையையும் வணங்கி நிற்கும் காட்சி அற்புதம்! அப்படியே திரும்பி நோக்க, குடுமிநாதரின் அழகிய இருதள விமானம் கண்களைக் கவர்ந்தது. விமானமும் முகமண்டபமும் மிக நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன. கருவறை விமானத்தின் சாலை மற்றும் கர்ணப்பத்திகளில் பஞ்சரக்கோட்டங்கள் எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளன. சாலை மற்றும் கர்ணப்பத்திகளுக்கு இடையே உள்ள ஒடுக்கங்களில் கும்பப்பஞ்சரம் வடிக்கப்பட்டு விமானம் அழகுடன் மிளிர்கிறது. முகமண்டபத்தில் சாலைப்பகுதியில் மட்டும் பஞ்சரக்கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

 



 





 



பின்னர் குடுமிநாதரையும்,அகிலாண்டேஸ்வரியையும் வணங்கி அங்கிருந்து அன்னவாசலை நோக்கி பயணித்தோம்! 



 





 



அன்னவாசலை அடையுமுன் சாலையின் இடதுபுறத்தில் ஒரு சமணச்சிற்பத்தைக்கண்டு வாகனத்தை நிறுத்தி மூவரும் அதனருகில் சென்று கண்குளிரக்கண்டோம். இதற்குள் திடீரென அவ்வைக்கிழவியின்



"ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்

இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்

என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே

உன்னோடு வாழ்தல் அரிது"



பாடல் ஞாபகத்திற்கு வந்தது! ஆம் வயிற்றின் இடும்பை உணவகத்தை "அன்னவாசலில்" தேட வைத்தது.

 





 



(அன்னவாசல் சமணச்சிற்பம்)



 



அங்குள்ளோரை விசாரிக்க அவர்கள் சித்தண்ணவாசல் சாலையில் ஒரு ஆச்சிமெஸ் உள்ளதாகத் தெரிவிக்க, அங்குச் சென்றோம். ஆனால் அன்று அந்த மெஸ் விடுமுறை என்று அறிவித்தது. சரி ஏதோ கிடைத்ததை அருந்திவிட்டு அடுத்த ஆலயத்திற்குச் செல்லலாம் என்று மீண்டும் விசாரிக்க, அருகில் "ஊராளி மெஸ்" என்ற உணவகம் இருந்தது. அரைமனதுடன் வேறு வழியே இல்லாமல் மூவரும் உணவருந்த முன்வந்தோம். ஆனால் உணவு அற்புதமாயிருந்தது! உணவிற்குப் பின் அங்கிருந்து கீரனூர் புறப்பட்டோம்.

 





 



கீரனூர் உத்தமதானீஸ்வரத்தை அடைந்தோம்! கோயில் நடை சாத்தியிருந்தது.மேலும் வெளியிலுள்ள கோபுரக்கதவும் தாழிடப்பட்டிருந்தது. சரி என்று கோயில் அர்ச்சகரின் வீடு சென்று "ஐயா நாங்கள் தொலைவிலிருந்து வருகிறோம். கோயில் விமானத்தை மட்டும் பார்த்துவிட்டுச் சென்று விடுகிறோம். கோபுர வாயிலை மட்டும் திறந்து விட இயலுமா?" என்று வினவ, அவர் இன்னும் ஒன்றரை மணிநேரத்தில் முழுக்கோவில் வளாகமும் திறக்கப்படும். எனவே, காத்திருந்து பாருங்கள் என்று கூறிவிட்டார்.



மூவரும் நேரத்தைக் காந்திருந்து வீணாக்குவதில் பயனில்லை என்று எண்ணி, விசலூர் சென்று வரும்போது மீண்டும் இவ்வாலயத்தைக் காணலாம் என்று முடிவுசெய்தோம். சரி, திருச்சியிலிருந்து தவறாகக் காட்டிய கூகுள் மேப் இப்பொழுதாவது சரியாகக் காட்டும் என்ற நம்பிக்கையில் "விசலூர்" என்று தட்டச்சு செய்ய,   



 





 



அது கீரனூரிலிருந்து 127 கி.மீ தொலைவிலுள்ள திருவாரூருக்கு  அருகிலுள்ள வேறு ஒரு விசலூருக்கு வழி கூறியது. ஆஹா! சரிதான் இப்பவே கண்ண கட்டுதே! (வடிவேலு மைண்ட் வாய்ஸ்). சரி, இனியும் கூகுள் மேப்பை நம்பினால் நம்மால் இந்த ஜென்மத்துக்கு நாம் தேடிவந்த விசலூரை அடைய இயலாது என்ற உண்மை புத்தியில் உறைக்க "traditional method"ஐப் பயன்படுத்துவதுதான் சாலப்பொருந்தும் என முடிவு செய்தோம். அதென்ன "traditional method"? 



"வாயிலிருக்கிறது வழி" என்ற பழமொழிதான் அந்த வழி.



உடனே சிலரை விசாரிக்க ,



"குன்னாண்டார்கோயில் போய் கேளுங்க!" என்று பதில் கிடைக்க, வேறு வழி இல்லை சென்றுதானே ஆக வேண்டும்! குன்றாண்டார்கோயில் நோக்கிப் பயணம் தொடங்கியது .



குன்றாண்டார்கோயிலை அடைந்ததும் சரி, வந்ததுதான் வந்தோம் இக்கோயிலையும் பார்த்துவிடுவோம் என்று வண்டியை நிறுத்திவிட்டுக் கோயிலுக்குள் செல்ல முனைந்தோம். இங்கும் வெளிக்கதவு சாத்தப்படிருக்கவே, முன்புள்ள மண்டபத்தைப் பார்வையிட்டோம்.

  





 



அருமையான விழாக்கூடமாக அம்மண்டபம் விளங்குகிறது! இப்பொழுது உள்ள நிலையிலேயே ஒரு மிகப்பெரிய நடன நிகழ்ச்சியோ பாட்டுக்கச்சேரியோ தாராளமாக நடத்தலாம் என்றே தோன்றியது. இம்மண்டபத்தைப் பார்த்துவிட்டு அங்கிருந்து விசலூரைத்தேடிச் செங்கிப்பட்டிச் சாலையில் சிறிது தூரம் சென்றவுடன் ஒரு நாற்சந்தி வந்தது. இங்கு விசாரித்தால் சரியாக இருக்கும் என்று தோன்றியது. வண்டியை நிறுத்தி அங்குள்ள வயதில் மூத்த டீக்கடை வைத்திருந்த ஒரு மூதாட்டியிடம் விசலூர் எப்படிப் போவது என்று கேட்க,



"எங்கேர்ந்து வர்ரீக?"



"கீரனூர்லேர்ந்து பாட்டி"



"அங்கனேர்ந்தே போயிருக்கவேண்டியதுதானே"



நாம் திரு திரு என்று விழிக்க,



"கீரனூர் கிள்ளுக்கோட்டை ரோட்டுலதான்யா விசலூர் இருக்கு"



"அப்படியா பாட்டி! இங்கேர்ந்து நாங்க திருப்பியும் கீரனூர் போய்தான் போகணுமா இல்லை வேறு வழியிருக்கா பாட்டி?" என்று கேட்க,



"குன்னாண்டார் கோயில் போயி அங்ஙனர்ந்து கிள்ளுக்கோட்டை போங்க, அப்பறமா மலையடிப்பட்டி வரும். மலையடிப்பட்டி தாண்டிக் கீரனூர் ரோட்டுல விசலூர் வரும்யா"



"சரி பாட்டி எங்க மூணுபேர்க்கும் டீ கொடுங்க"



அம்மூதாட்டி மிகுந்த வாஞ்சையுடன் தேனீர் தயாரித்துக் கொடுத்தார்



அதை அருந்திவிட்டு அவர் கூறிய பாதியில் திரும்ப, குன்றாண்டார் கோயில் வந்து அங்கிருந்து கிள்ளுக்கோட்டை வழியாக மலையடிப்பட்டியை அடைந்தோம். மலையடிப்பட்டியில் இரண்டு குடைவரைகளும் பூட்டியிருக்கவே முனைவர் சுமிதா அவர்கள் இங்கு இந்த மலைக்கு அப்பால் சமணப்படுக்கைகள் உள்ளன. அவைகளைப் பார்க்கலாம் என்று அழைத்துச் சென்றார். மலையடிப்பட்டி சிவன் கோவிலுக்குப் பின்பகுதியில் பெரிதும் சிறிதுமான மலைக்குன்றுகள் இடம் பெற்றிருந்தன. அப்படியான ஒரு பாறைக்குன்றில் இயற்கையாகவே ஒரு மனிதச்சிற்பம் அமைந்த அதிசயம் அற்புதமாயிருந்தது.



 





 



பலமுறை உற்றுப்பார்க்க யாரோ முனைந்து செதுக்கிய சிற்பம் போலும் காட்சியளித்தது. அருகில் சென்று பார்த்தால் ஓர் உருவம் இருந்ததற்கான சுவடே தெரியவில்லை. அதிசயம், ஆச்சர்யம் ஆனால் உண்மை. சற்று தொலைவில் இருந்து பார்த்தால் மட்டுமே ஓர் உருவம் தென்படுகிறது. கீழே உள்ள படம் காண்க! பிறகு மூவரும் ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டோம்

  







 



 





 



அங்கிருந்து சமணப்படுக்கை உள்ள இடத்திற்குச் சென்றோம்.

 





 



அங்கிருந்து சற்றுத்தொலைவில் Megalithic Burial ஒன்றும் புலப்பட்டது. அடடா! மலையடிப்பட்டி எத்தனை வரலாற்றுப்புதையல்களைத் தன்னுள் கொண்டுள்ளது! அருகருகில் சிவன் மற்றும் விஷ்ணுவுக்குக் குடைவரைக் கோயில்கள், சமணப்படுக்கைகள் மற்றும் Megalithic Burials.



 





 



இவைகளை எல்லாம் பார்த்துவிட்டு விசலூர் நோக்கி விரைந்தோம். அந்தப்பாட்டி சொன்ன பாதை கனகச்சிதமாக அமைந்தது. அடுத்து சில நிமிடங்களில் நாங்கள் விசலூரை அடைந்தோம்!

திருச்சியிலிருந்து கீரனூர் வந்து அங்கிருந்து கிள்ளுக்கோட்டை பாதையில் பயணித்திருந்தால் கீரனூரிலிருந்து ஒரு பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த விசலூரை அடைந்திருக்கலாம். கூகுள் மேப் உதவியுடன் திருச்சியிலிருந்து கொடும்பாளூர், திருமயம், பரம்பூர், குடுமியான் மலை, அன்னவாசல், கீரனூர், குன்றாண்டர்கோயில், கிள்ளுக்கோட்டை, மலையடிப்பட்டி வழியாகக் காலையில் கிளம்பி மாலை நான்கு மணிக்கு வந்து சேர்ந்தோம். 



மிகவும் சிறிய கோயில் ஆனால் மிகவும் அழகான கோயில்! இவ்வளவு அலைச்சல்களும் கோவில் வளாகத்துள் சென்றவுடன் நினைவுகளிலிருந்து அகன்றன. திருக்கோயில் நம்மை ஆட்கொள்ளத் தொடங்கியது!

 





 



(விசலூர்)



 



ஏகதள விமானம்! சுமார் ஒரு மணிநேர ஆய்விற்குப்பிறகு அங்கிருந்து விடைபெற்றுக் கீரனூர் விரைந்தோம். 

 





 



(கீரனூர்-உத்தமதானீஸ்வரம்)



 



கோயில்வளாகம் திறந்திருக்கவே, உள்ளே சென்று உத்தமதானீஸ்வரரை வணங்கித் திருக்கோயிலை உள்வாங்கி அங்கிருந்து திருச்சிக்குத் திரும்பினோம். கூகுள் உதவியால் ஒரு கோயில் பார்க்கக்கிளம்பி அன்றைய தினம் அற்புதமான நினைவுகளையும் அனுபவங்களையும் பெற்று இனிதே நிறைவடைந்தது! எல்லாமே நன்மைக்கு என்று இதற்காகத்தான் பெரியவர்கள் கூறுவார்களோ?!



 





 



விசலூர்-அமைவிடமும் வழித்தடமும்



 



திருச்சியிலிருந்து விசலூர் செல்வோர் கவனத்திற்கு:

1)    பாதை ஒன்று – திருச்சி-துவாகுடி-அசூர்-விசலூர்

2)    பாதை இரண்டு – திருச்சி-கீரனூர் - விசலூர்

 


       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.