http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 11
இதழ் 11 [ மே 15 - ஜூன் 14, 2005 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
பழுவூர்ப் புதையல்கள்
பகைவிடை ஈசுவரத்துத் தேவனார்
முதலாம் ஆதித்தனின் பன்னிரெண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு குறிப்பது போல், முதலாம் இராசராசனின் பதினோராம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் ஒரு பகைவிடை ஈசுவரத்துத் தேவனாரை அறிமுகப்படுத்துகிறது. இக்கல்வெட்டின் சுருக்கும் மட்டுமே கல்வெட்டறிக்கையில் வெளியாகியுள்ளது41. அச்சுருக்கத்தில் பகைவிடை ஈசுவரத்துத் தேவனார் பெயர் இல்லை. டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வுப் பேரவை பழுவூர்க் கோயில்களில் மேற்கொண்ட முழுமையான கள ஆய்வின்போது இக்கல்வெட்டு முற்றிலுமாய்ப் படியெடுக்கப்பட்ட நிலையில் மூன்று பேருண்மைகள் வெளிப்பட்டன.
இம்மூன்று உண்மைகளும் இதுநாள் வரையிலும் பழுவூர் தொடர்பாக வந்துள்ள எந்த ஆய்வுக் கட்டுரைகளிலும், நூல்களிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இக்கல்வெட்டை டாக்டர் பாலாம்பாள் முழுமையாகப் படித்திருப்பார்களேயானால் தம்முடைய கருத்தை மாற்றிக்கொண்டிருக்கக்கூடும். 1 ஸ்வஸ்திஸ்ரீ சாலை கலமறுத்த கோ 2 ராஜகேசரி பன்மர்க்கு யாண்டு 3 பதினொன்னாவது குன்றக் கூற்றத்து தேவ 4 தானம் அவனி கந்தர்ப்ப ஈ 5 சுவர கிரகத்து வடவாயில் ஸ்ரீ கோயில் 6 மகாதேவர்க்கு அடிகள் பழுவேட்ட 7 ரையன் கண்டன் மறவனுக்கு ஸ்ரீ கார்ய 8 மாகின கோயில் கோனடிகள் மே 9 னாயத்து பகைவிடை ஈசுவரத்து தேவ 10 நார் மகள் நக்கன் வீரநானி சந்திராதித்த 11 வல் இரவும்பகலும் எரியும் விளக்கு ஒன்றுக்கு தேவர் உழ 12 க்கால் நிசதம் உழக்கு நெய் எரிய வைத்த நொந்தா விள 13 க்கு ஒன்றினுக்கு குடுத்த என் பங்கரையாவது ப 14 கை(விடை) ஈசுவரத்துத் தளிச்சேரி வடசிறகில் நக்கன் பெற்றமை பங்குக்கு 15 மேற்கு விழா வீதிக்கு வடக்கும் பகைவிடை ஈசுவரத்து தேவர்க்கு நா 16 ன் கொடுத்த பங்கரைக்குக் கிழக்கும் திருவெளி பட்டாலகன் தோட்டத்துக் 17 கு தெற்கு நடுவுபட்ட பங்கரையும் சுட்டி வந்த போகமான நெல்லு 18 மற்றும் இப்பங்கால் வந்தது எப்பேர்ப்பட்டதும் குடுத்து இத்தேவர்க்கு சந் 19 திராதித்தவள் ஒரு நொந்த விளக்கு வைத்தேன் கரிய வீரநானியேன் என்ற முதலாம் இராசராசனின் இக்கல்வெட்டில், பகைவிடை ஈசுவரத்துத் தேவனார் மகளாகும் பெருமை நக்கன் வீரநானிக்குக் கிடைத்துள்ளது. இந்தத் தேவனார் யார்? இவருக்கும் நக்கன் பூதியின் (டாக்டர் பாலாம்பாள் கருத்துப்படி நக்கன்பூதி பழுவேட்டரையன் குமரன் கண்டனின்) தந்தையாகக் கருதப்படும் பகைவிடை ஈசுவரத்துத் தேவனாருக்கும் என்ன தொடர்பு? நக்கன் பூதியின் தந்தையாக ஆதித்தனின் கல்வெட்டால் குறிக்கப்பெறும் பகைவிடை ஈசுவரத்துத் தேவனாரின் காலம் கி.பி. 884. வீரநானியின் தந்தையாக முதலாம் இராசராசன் கல்வெட்டால் குறிக்கப்பெறும் பகைவிடை ஈசுவரத்துத் தேவனாரின் காலம் கி.பி. 996. இப்படி இரண்டு பகைவிடை ஈசுவரத்துத் தேவனார்கள் இருவேறுபட்ட காலங்களில் வாழ்ந்தார்களா? அப்படி வாழ்ந்தார்களென்றால் அவர்களுக்கும் பழுவேட்டரையர்களுக்கும் என்ன தொடர்பு? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் வீரநானியின் கல்வெட்டே பதில் சொல்லிவிடுகிறது. இப்பெருமாட்டி தந்த செய்தி இக்கல்வெட்டிலேயே காணக்கிடைக்கிறது. இந்தச் செய்தியொன்றே பகைவிடை ஈசுவரத்துத் தேவனார், இறைவன் என்பதை உறுதிப்படுத்தப் போதுமானதாகும். பகைவிடை ஈசுவரம் ஒரு கோயில். ஆனால் டாக்டர் பாலாம்பாளும், பேராசிரியர் கோவிந்தசாமியும் பகைவிடை ஈசுவரமென்பது பழுவூரின் மற்றொரு பெயரென்று தவராகக் கருதிக்கொண்டமையால் தடுமாம்றியுள்ளனர் 43. மன்னு'பெரும் பழுவூர்ப் பகைவிடை ஈசுவரத்து மகாதேவர்க்கு' என்று வரும் கல்வெட்டு வரியே 44 இப்பகைவிடை ஈசுவரம் பெரும் பழுவூரிலிருந்த கோயில் என்பதைத் தெள்ளிதின் உணர்த்தியும் பேராசிரியர்கள் தெளிவு காண இயலாது தவிக்கின்றனர். இவர்கள் கல்வெட்டுகளைச் சற்று ஆழ்ந்து படித்திருந்தால் இக்குழப்பங்கள் நேர்ந்திரா. பகைவிடை ஈசுவரத்துத் தேவனார் என்ற கல்வெட்டு வரியிலுள்ள 'தேவனார்' என்ற சொல் அக்கோயில் இறைவனையே சுட்டுகிறது. ஈசுவரத்துக்குத் தேவனார், அந்த ஈசுவரனைத் தவிர வேறு யாராக இருக்கமுடியும்? மேலும் கோயில் இறைவனுக்குத்தானே நிலக்கொடையளிக்க முடியும்! மன்னனுக்கு மக்கள் நிலக்கொடையளித்ததாக எந்தக் கல்வெட்டும் இதுவரை சொன்னதில்லை. வீரநானியின் வடவாயில் கோயில் கல்வெட்டே பகைவிடை ஈசுவரத்துத்தேவனார் இறைவன் என்பதை மெய்ப்பிக்கும் நிலையில், பாலாம்பாள் இத்தேவனார் விசயாலயன் காலத்திலேயே சிற்றரசனாக இருந்ததாகவும், ஆதித்தன் காலத்தில் உடையார்பாளையம் உள்ளிட்ட நிலப்பகுதியை ஆண்டு வந்ததாகவும் எழுதுவது எத்தனை பிழை! இறைவனுக்கு முடிசூட்டி அரசனாக்கியிருக்கும் இத்தவறுக்குக் காரணம் முறையான கல ஆய்வுகளும் அறிவியல் நோக்கும் இல்லாமல் போனமைதான். இனி, பகைவிடை ஈசுவரத்துத் தேவனாரை மறந்து குமரன் கண்டனிடம் வருவோம். திருவையாறு பஞ்சநதீசுவரர் கோயிலில் உள்ள முதலாம் ஆதித்தனின் பத்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் பழுவூர் அவனிகந்தர்ப்ப ஈசுவர கிரகத்திலுள்ள முதலாம் ஆதித்தனின் பதின்மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும், வரலாற்றில் முதல் பழுவெட்டரையனாக வெளிப்படும் முமரன் கண்டனைச் சுட்டுவதைக் கண்டோம். பேராசிரியர் கோவிந்தசாமி இக்கும்ரன் கண்டனைப் பற்றிப் பேசவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது 45. இக்கல்வெட்டுகள் திட்டவடட்மாக வெளிப்படுத்தும் முதல் பழுவேட்டரையனைப் பேராசிரியர் எப்படி மறந்தார் என்பது வியப்பாகவே உள்ளது. இம்மன்னரைப் பற்றி இரண்டே கல்வெட்டுகள் கிடைத்திருக்கும் நிலையில், குமரன் கண்டனைப் பற்றிப் பல சான்றுகள் உள்ளதாகவும், அவர் பல கோயில்களுக்குக் கொடையளித்தவரென்றும் இல்லாததையெல்லாம் எழுதுகிறார் டாக்டர் பாலாம்பாள் 46. பழுவேட்டரையன் குமரன் மறவன் தொடரும்... அடிக்குறிப்புகள்: 41. A.R.E. 384 of 1924 42. இரா. கலைக்கோவன், பழுவூர்த் தளிச்சேரி, கட்டுரை, தமிழரசு, (திங்களிருமுறை) 1-8-1988 43. வெ. பாலாம்பாள், பழுவேட்டரையர்கள், பக். 16, M. S. Govindasamy, The Role of Feudatories in Later Chola History, Annamalai University, 1979, P. 31 44. S. I. I. Vol XIX, Ins. Nos. 140, 266 45. M. S. Govindasamy; The Role of Feudatories in Later Chola History, PP. 30-37 46. வெ. பாலாம்பாள், பழுவேட்டரையர்கள், பக். 17 this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |