http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 11
இதழ் 11 [ மே 15 - ஜூன் 14, 2005 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
கல்வெட்டாய்வு
சென்ற மாதம் கொடுக்கப்பட்ட கல்வெட்டுப் புகைப்படத்தின் வரிகள்:
1) ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் 2) சக்கரவத்திகள் ஸ்ரீரா 3) ஜ ராஜ தேவர்க்கு யா 4) ண்டு யசு வது அ 5) (ய்)ப்பழி மாஸத்து 6) (கச்) சிப் பேட்டு திருக் 7) (க)ற்றளி ஆன ராஜஸிம்ஹ 8) வர்மீஸ்வரமுடைய நாயந 9) ¡ர்க்கு நாளொன்றுக்கு 10) ஸந்தி விளக்கு_க்கும் 11) பிள்ளையார் காமா 12) __முதல___கள்ளி உங்களுக்காக இதோ ஒரு கேள்வி. இக்கல்வெட்டு எந்த மன்னருடையது, எந்த ஆட்சியாண்டு என்பதை உங்களால் சொல்ல முடியுமா? கண்டுபிடிப்பதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? சென்ற இதழில் உள்ள புகைப்படத்தை பெரிது படுத்திக் கொண்டு அதில் உள்ள எழுத்து வடிவங்களை சற்று உன்னிப்பாக கவனிக்கவும். இக்கல்வெட்டில் திரிபுவனச் சக்கரவ்த்திகள் ஸ்ரீராஜராஜ தேவர் என்று வருகிறது. எனவே உங்களுக்கு இது முதலாம் இராஜராஜரின் கல்வெட்டோ என்ற ஐயம் தோன்றும். அதனால், இதுவரை வரலாறு இதழ்களில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துக் கல்வெட்டுகளையும் ஒன்றன் பின் ஒன்றாக இக்கல்வெட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும். சென்ற மாதங்களில் வந்த மெய்க்கீர்த்திப் பற்றிய கட்டுரைகளையும் ஒருமுறை நன்றாகப் படித்துப் பார்க்கவும். இப்பொழுது இக்கல்வெட்டு எந்த மன்னருடையது என்று நீங்களே சுலபமாகக் கண்டுபிடித்துவிடுவீர்கள். கண்டுபிடித்து உள்ளீட்டுப் பகுதியிலிடவும். கச்சிப்பேட்டில் இருக்கும் திருக்கற்றளி ஆன ராஜஸிம்ஹவர்மீஸ்வரமுடைய நாயனார்க்கு நாளொன்றுக்கு ஸந்தி விளக்கெரிக்க விடுத்த கொடை பற்றிய கல்வெட்டு இது. இக்கல்வெட்டில் பதினொரு வரிகளே தெளிவாக இருக்கின்றன. மேலும் உள்ள வரிகள் சிதைந்திருப்பதால், யார் என்ன கொடை கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. கச்சிப்பேட்டு என்பது இப்பொழுதுள்ள காஞ்சீபுரத்தைக் குறிக்கும். கல்லால் ஆன அக்கோயிலின் பெயர் ராஜஸிம்ஹவர்மீஸ்வரம். அக்கோயில் சிவபெருமானை, ராஜஸிம்ஹவர்மீஸ்வரமுடைய நாயனார் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. கல்வெட்டில் உள்ள வரிகளையும், எழுத்து வடிவங்களையும் கொண்டு கல்வெட்டுக் காலத்தை அறியமுடியும். அதற்கு ஒரு சிறந்த உதாரணம், திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள குமாரவயலூர்க் கோயில் கல்வெட்டுகள். மருத்துவர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினர் அக்கோயில் கல்வெட்டுகளை ஆராய்ந்துள்ளனர். முனைவர். இரா. கலைக்கோவன் அவர்களும், முனைவர் மு. நளினி அவர்களும் எழுதி வெளியாகியுள்ள 'தளிச்சேரிக் கல்வெட்டு' என்ற புத்தகத்தில், குமாரவயலூர்க் கல்வெட்டுகளைப் பற்றிய கட்டுரை வெளிவந்துள்ளது. மன்னர் பெயரின்றி 'இராஜகேசரிவர்மன்' என்ற விருதுப்பெயரைக் குறிப்பிடும் கல்வெட்டுகளை அவர்கள் எவ்வாறு ஆராய்ந்து, காலத்தை அறிந்தனர் என்று தெளிவாகக் கொடுத்துள்ளனர். கட்டுரைவரிகளை காணுமுன் இராஜகேசரிவர்மன் என்ற விருதுப் பெயரைப்பற்றி இங்கு குறிப்பிடவேண்டும். சோழ மன்னர்கள் இராஜகேசரிவர்மன் அல்லது பரகேசரிவர்மன் என்ற விருதுப்பெயர்களில் ஒன்றை தங்கள் பெயருக்கு முன் இணைத்துக்கொண்டனர். ஒரு மன்னர் இராசகேசரி என்ற விருதுப்பெயர் கொண்டால் அடுத்து ஆட்சிக்கு வருபவருக்கு பரகேசரி என்ற விருதுப்பெயரமையும். முதலாம் இராசராசரின் கல்வெட்டுகள் அவரை "கோவி ராஜகேசரிபன்மரான ஸ்ரீராஜராஜத்தேவர்" என்று குறிப்பிடுவது உங்களுக்கெல்லாம் தெரியும். முதற்பராந்தகர் கல்வெட்டு "ஸ்வஸ்திஸ்ரீ மதிரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரிபந்மற்கு யாண்டு" என்று தொடங்கும். அவர் பரகேசரி என்ற விருதுப்பெயரை ஏற்றார். குமாரவயலூர் கட்டுரையிலிருந்து சில வரிகளையும், அக்கோயிலில் உள்ள சில கல்வெட்டுகளின் வரிகளையும் இப்பொழுது பார்க்கலாம். கட்டுரை வரிகள்: "குமாரவயலூர்க் கோயிலில் உள்ள இருபத்துமூன்று கல்வெட்டுகளுள் காலத்தால் பழமையானது முதலாம் ஆதித்தரின் முப்பத்தோராம் ஆட்சியாண்டுக் கல்வெட்டாகும்" என்று தொடங்கும் கட்டுரையின் கல்வெட்டுப்பகுதி, இக்கோயிலில் உள்ள முதற் பராந்தகர், சுந்தர சோழர், உத்தம சோழர், முதலாம் இராசராசர், முதலாம் இராசேந்திரர் மற்றும் முதலாம் குலோத்துங்கன் காலக் கல்வெட்டுகளைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு பின்வருமாறு தொடர்கிறது. "இராஜகேசரிவர்மன் என்ற விருதுப் பெயருக்குரிய மன்னரொருவர் காலத்துக் கல்வெட்டுகள் ஏழு இங்குள்ளன. இவற்றுள் ஐந்து, இவரது ஏழாம் ஆட்சியாண்டிலும் ஒன்று ஆறாம் ஆட்சியாண்டிலும் வெட்டப்பட்டுள்ளன. ஒரு கல்வெட்டில் ஆட்சியாண்டு சிதைந்துள்ளது. மன்னர் பெயரற்ற கல்வெட்டுகள் மூன்றுள்ளன. இவற்றுள் ஒன்று மன்னரொருவரின் ஏழாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. ஏனைய இரண்டிலும் ஆட்சியாண்டுப்பகுதியும் இல்லை. இவற்றை எழுத்தமைதியின் அடிப்படையில் பத்தாம் நூற்றாண்டினவாகக் கொள்ளலாம். இராஜகேசரிவர்மர் காலக் கல்வெட்டுகள் ஏழும், யாரோ ஒரு மன்னரின் ஏழாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டொன்றும் ஆக இவையெட்டும் எழுத்தமைதியில் ஒன்றுபோல உள்ளன. இவை முதலாம் ஆதித்தர் காலக் கல்வெட்டின் எழுத்தமைதியிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றன. எனவே இந்த எட்டுக் கல்வெட்டுகளுக்கும் உரிய இராஜகேசரிவர்மர் முதலாம் ஆதித்தருக்குப் பிற்பட்டவர் என்பது உறுதி. முதல் சாளுக்கிய சோழரும் இராஜகேசரிவர்மருமான முதற் குலோத்துங்கரின் இரண்டு கல்வெட்டுகள் இங்குள்ளன. அவற்றின் எழுத்தமைதியிலிருந்து இவ்வெட்டு இராஜகேசரிக் கல்வெட்டுகளும் பெரிதும் வேறுபடுகின்றன. குலோத்துங்கர் கல்வெட்டுகளில், 'ந', 'த' ஆகிய எழுத்துக்களின் கீழ் வளைப்புகள் நன்கு தாழ இறங்கியுள்ளன. 'அ', 'டு', 'று' ஆகிய மூன்றெழுத்துக்களிலும் கூடத் தலைப்பிலும் சுழிப்பிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. எனவே இவ்வெட்டுக் கல்வெட்டுகளையும் ஆதித்தருக்குப் பிற்பட்ட, குலோத்துங்கருக்கு முற்பட்ட ஓர் இராஜகேசரியின் கல்வெட்டுகளாகக் கொள்ள வேண்டியுள்ளது. முதலாம் இராசராசர், முதலாம் இராசாதிராசர், வீரராசேந்திரர் ஆகிய மூவருமே குலோத்துங்கருக்கு முற்பட்ட இராஜகேசரிகள் என்றாலும் இம்மூவருடைய கல்வெட்டுகளும் மெய்க்கீர்த்திகள் கொண்டவை. இராசராசரின் தொடக்கக் காலக் கல்வெட்டுகள் சில மட்டுமே மெய்க்கீர்த்தியின்றிக் காணப்படுகின்றன. வயலூர்த் திருக்கற்றளிப் பரமேசுவரர் கோயிலில் உள்ள முதலாம் இராசராசரின் ஐந்து கல்வெட்டுகளுள் நான்கு மெய்க்கீர்த்தியுடன் உள்ளன. காலத்தால் முற்பட்ட இவரது மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு மட்டுமே மெய்க்கீர்த்தியின்றி உள்ளது. எனினும் இக்கல்வெட்டை இராசராசருடையது என்று உறுதிபடக் கூறுமாறு, இக்கல்வெட்டின் தொடக்கம், 'ராஜராஜகேசரிபன்மற்கு யாண்டு மூன்றாவது' என்றமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலில் உள்ள பெயரற்ற இராஜகேசரிக் கல்வெட்டுகள் எட்டும் இக்கல்வெட்டோடு எழுத்தமைதியில் பெருமளவில் ஒன்றுபட்டாலும், அவற்றின் தொடக்கம் 'ராஜகேசரி' என்று மட்டுமே அமைந்திருப்பதால், அவற்றை இராசராசருடையதல்லவென எளிதாக ஒதுக்கலாம். அதனால் முதலாம் ஆதித்தருக்கும் முதலாம் இராசராசருக்கும் இடைப்பட்ட இராஜகேசரி ஒருவரின் கல்வெட்டுகளாக இவை அமைவது கண்கூடு. இவ்விரு வேந்தர்க்கும் இடைப்பட்டவர்களாகச் சோழநாட்டையாண்ட இராஜகேசரிகள் கண்டராதித்தரும், சுந்தரசோழரும் ஆவர். இவ்விருவருள் ஒருவர் காலக் கல்வெட்டுகளாக இவற்றைக் கொள்வதே சாலப்பொருந்தும்." பார்த்தீர்களா! எவ்வாறு கல்வெட்டுக் காலத்தை ஆராய்ந்துள்ளனரென்று. சரி கல்வெட்டு வரிகள் சிலவற்றை இப்பொழுது பார்ப்போம். முதல் இராசராசரின் 3ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி 988): 1) ஸ்வஸ்திஸ்ரீ கொவிராஜராஜகேஸரி_ _ _____ 2) ண்டு 3 ஆவது உறையூர்க் கூற்றத்து வயலூர் ஊராய் 3) யிசைந்த ஊரோம் சிற்றம்பரில் விண்ணக[ற்]ப்புரத்து வியா 4) [பாரி] பெருமாந்விடங்கனு[க்]கு எங்களூர் மந்றத்தே எடுப்பித்த 5) மண்டபம் ஐஞ்ஞூற்றுவனுக்கு விளக்குப்புறமாக நீர்நிலமாக விற்றுக் 6) குடுத்த நிலத்துக்கு கீழ்ப்பாற்கெல்[லை]. . . . நோக்கிப் போந வாக்காலுக்கு மே[ற்*]க்கும் மீ[பாற்] 7) கெல்லை வடக்கு நோக்கிப் போன வாக்காலுக்கும்_ _ 8) கெல்லை பாற்மதி வ[¡*]ய்க்க[¡*]லாந வடவாய் வாக்காலுக்கும் வடக்கு 9) மேக்கினுக் கெல்லை வயலூர் எட்டி [ஊரோமி]டை ஒற்றியா 10) ள்கின்ற தோட்டத்துக்கும் மன்றன் அரங்கன் ஒற்றியாள்கின்ற து 11) டவைக்கு கிழக்கும் வடக்கினுக்கு எல்லை பறையர் பேற்றுச் செய்க்கு 12) தெற்க்கும் இவ்விசைத்த பெருநான்கெல்லையிலகப்பட்ட நிலம் உண் 13) ணில மொழிவின்றி எம்மிலிசைந்த விலைப்பொருள் கைய்யிலே 14) எடுப்பிச்சுக்கொண்டு இஞ்ஞிலத்தால் வந்த இறையெச்சொறும் ஊ 15) ரோமே இறுத்துக்குடுப்போமாக இசைந்து விற்றுக்குடுத்தோம் சந்திராதித்[த*] 16) வல் [ஊராய்] இசைந்த ஊ[ரோ*]ம் கல்மெல் வெட்டிக்குடுத்தோம் பெருமாந் 17) விடங்கனுக்கு __________________ இராஜகேசரிவர்மரின் ஏழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி. பத்தாம் நூற்றாண்டு) 1) ஸ்வஸ்திஸ்ரீ கொவிராஜகேசரிபந்மர்க்கு யாண்டு 7 ஆவது உறையூ 2) ர்க் கூற்றத்து வயலூர் ஊராய் இசைந்த ஊரோம் எங்களூர்த் திருக்கற்றளிப் பெ 3) ருமானடிகளுடைய மேலைத் திருச்சுற்றாலையின் மேலைத் திருநந்த வானமும் இத்திருக் 4) கோயிலின் வட[பக்க] திருநந்தவானமுந் திருத்துவார்க்கும் திருப்பொரிதேவன்குடி மே 5) லைத் திருநந்தவானன் திருத்துவார்க்கும் நிவந்தஞ்செய்துகுடுப்பதாக எங்களூர்ப் 6) பக்க நக்கன் மகன் நக்கன் கருப்பாலை இடை 31/2 முக்கழஞ்சரை பொன் [கொ]ண்டு இப்பொன்னு 7) க்கு தே3வதானமாக விற்றுக்குடுத்த நிலமாவது திருப்பொரிதேவன்[குடி]த் திருக்கோயிலின் 8) கீழை கணவதி வயக்கலுக்கு கிழக்கு சூரன்சேன்தி விளக்குப் புறத்துக்கு வடக்கு விரிவு நிலன் 9) ஒரு மாவரையால் வந்த குழி நூற்றைம்பதும் விற்றுக்குடுத்தோம் இதனில் திருப்பொரிதே 10) வன்குடி நந்தவானத்துக்கு முக்காணியும் திருக்கற்றளிப் பெருமான் நந்தவானத்துக்கு 11) முக்காணியுமாக நிவந்தஞ் செ[ய்*]து இவை திருத்துவாரே பள்ளித்தாமம் பறிச்சுத் தொடுக்க 12) கடவாராகவு[ம்*] இஞ்ஞிலத்தால் வந்த இறை எப்பேர்பட்டதும் ஊரோமே இறுத்துங் காத்து 13) ங் குடுப்பதாகவும் இறைநீக்கி தேவதானமாக சந்திராதி3த்தவல் நிவந்தஞ் செ[ய்*]து கு 14) டுத்தோம் வயலூர் ஊரா இசைந்த ஊரோம் இது பன்மாஹேச்0வர ரக்ஷை. சரி இந்த இரண்டு கல்வெட்டுகளும் கூறும் செய்தி என்னவென்று தெரிகிறதா? சென்ற இதழில் வெளியான கல்வெட்டு எந்த மன்னருடையது என்பதையும், மேலே கொடுக்கப்பட்டிருக்கும் இரு கல்வெட்டுகளும் கூறும் செய்தியினையும் உள்ளீட்டுப் பகுதியில் இடவும்.this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |