http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 145
இதழ் 145 [ மார்ச் 2019 ] இந்த இதழில்.. In this Issue.. |
1982 ஜூன் மாதத்தில் ஒருநாள்! திருச்சிராப்பள்ளி மாவட்டம் எட்டரை ஊரைச் சேர்ந்த திரு. செல்வராஜும் அவர் தம்பி பாலசுந்தரமும் அவர்தம் ஊர்க் குமிழிக்கருகில் புத்தர் சிற்பம் காணப்படுவதாகக் கூற, உடனே சென்று பார்த்தேன். அழகான, ஆனால் சிதைந்த புத்தர் வடிவம். இது போல் கவனிப்பாரற்றுக் கிடக்கும் சிற்பங்களைப் பற்றித் தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுத்துறைக்குத் தகவல் தரவேண்டுமெனப் படித்திருந்தமையால் அடுத்த நாள் சிராப்பள்ளிப் பொன்னகரில் இருந்த தொல்லியல் ஆய்வுத்துறை அலுவலகம் சென்றேன்.
எழுத்தர் திரு. ச. நடராசன் அன்போடு வரவேற்றார். அரசு அலுவலகத்தில் அப்படியொரு வரவேற்பை நான் எதிர்பார்க்கவில்லை. அங்கிருந்த அனைத்து அலுவலர்களும் என்னிடம் அன்பு பாராட்டினர். அவர்களிடம் தகவல் சொன்னபோது பதிவு அலுவலர் இல்லாமையால், அடுத்த நாள் வந்து அவரைச் சந்தித்துத் தகவல் தரலாம் என்றனர். அந்த அடுத்த நாள் ஓர் அன்பான மனிதரை உறவாய்ப் பெற்றுத்தரப் போகிறது என்பதை அறியாமலேயே அடுத்த நாளும் அங்குச் சென்றேன். திரு. அ. அப்துல் மஜீது தனியறையில் தனியாக அமர்ந்திருந்தார். அலுவலகத்தார் வரவேற்று உள்ளனுப்பினார்கள். அறிமுகத்தின்போது என் மூத்த தமையனார் திரு. மா. ரா. இளங்கோ வனையும் தம்பி மா. ரா. அரசுவையும் அவர் முன்பே அறிந்து நட்பு கொண்டிருந்ததை அறிந்தேன். புத்தர் சிற்பம் பற்றிக் கூறியபோது மகிழ்ச்சி தெரிவித்த மஜீது, அதை உடனே சென்னைத் தலைமை அலுவலகத்திற்குத் தெரியப்படுத்த வேண்டினார். நானும் அன்றே ஆர்வத்துடன் எழுதினேன். ஆனால், பயன்தான் விளையவில்லை. புத்தர் சிற்பத்தை எடுத்துப் பாதுகாப்பான இடத்தில் வைக்குமாறு மஜீதிடம் வேண்டியபோது அலுவல் தொடர்பான இடையூறுகளைச் சுட்டிக்காட்டித் தம் இயலாமையை விளக்கினார். அதனால், சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பி. நடேசன், அவரது துணைவியார் திருமதி சாந்தி நடேசன் உதவியுடன் அந்தச் சிற்பத்தை அருங்காட்சியகத்திற்குக் கொணர்ந்தேன். மஜீது நான் கேட்டுக்கொண்டவுடன் புத்தர் சிற்பத்தை அருங்காட்சியத்திற்கோ, தம் அலுவலகத்திற்கோ கொணர்ந்திருந்தால் நான் வரலாற்றின் பக்கமே போயிருக்க மாட்டேன். என்னை வரலாற்று வலைக்குள் தள்ளிய பெருமையும் புண்ணியமும் மஜீதையே சாரும். அவரை இத்துறையில் என் வழிகாட்டியாய்க் கொண்டமைக்கு அதுவும் ஒரு காரணம். புத்தரால் தொடங்கிய எங்கள் தொடர்பு அடிக்கடி நேர்ந்த சந்திப்புகளில் வளர்ந்தது. உறையூர்த் தான்தோன்றீசுவரம் கோயிலைப் பார்வையிட்டபோது அதன் கருவறை நிலைகளில் அதுநாள்வரையிலும் படியெடுக்கப்படாத முற்பாண்டியர் காலக் கல்வெட்டுகள் இருப்பதைக் கண்டறிந்தோம். அங்குதான் முதன்முதலாக முறையான கல்வெட்டுப் பயிற்சி பெற்றேன். அப்துல் மஜீதும் திரு. இராதாகிருஷ்ணனும் கல்வெட்டைப் படித்து விளக்கினர். புதிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதை நாளிதழ்கள் செய்தியாக வெளியிட்டன. அச்செய்தி கண்ட மஜீது தம் பெயரை அதில் இணைத்திருந்தமைக்காக மகிழ்ந்தாலும், அலுவலகத்தால் தொல்லை நேரலாமென்று நினைத்தார். இனி புதிய கண்டுபிடிப்புகளை வெளியிடும்போது தம் பெயரை இணைக்க வேண்டாமென்று அன்போடு அறிவுறுத்தினார். எனக்கு அது ஒப்புதல் இல்லையெனினும் அவருக்கு அதனால் தொல்லை நேரக்கூடாதென்று இணங்கினேன். புலிவலம் கோயிலுக்கு எட்டரை செல்வராஜு எங்களை அழைத்துச் சென்றார். அங்குதான் முள்ளிக்கரும்பூர் பற்றிய கல்வெட்டு கிடைத்தது. அக்கல்வெட்டே முள்ளிக்கரும்பூரை வரலாற்று வெளிச்சத்திற்குக் கொணர உதவியது. ஒரு கோயிலும் ஒன்றிரண்டு கல்வெட்டுகளும் மட்டுமே தொடக்கத்தில் வெளிப்பட்டாலும் தொடராய்வுகள் முள்ளிக்கரும்பூரை ஒரு வரலாற்று விடியலாக விசுவரூபமெடுக்க வைத்தன. நாளிதழ்களில் வெளியான முள்ளிக்கரும்பூர்ச் செய்திகளால் கவரப்பட்ட செல்வி வாணி சந்திரசேகரன் தம் முதுகலை ஆய்வேட்டின் தலைப்பாக முள்ளிக்கரும்பூரைக் கொண்டார். நான் நெறிப்படுத்திய முதல் ஆய்வேடு அதுதான். பலமுறை களஆய்விற்காக முள்ளிக்கரும்பூர் சென்றோம். ஒவ்வொரு முறையும் புதியன கண்டறிந்தோம். மஜீது உடன்வந்து உதவியதால் கல்வெட்டு வாசிப்பில் முன்னேற்றம் கண்டேன். ஒருமுறை அவ்வூர் வாழைத்தோப்புள் புதைந்திருந்த சிற்பத்தை அகழ்ந்தெடுத்தோம். அது யாரைக் குறிக்கிறதென்று எனக்கும் தெரியவில்லை, நண்பர் மஜீதிற்கும் தெரியவில்லை. திரு. டி. ஏ. கோபிநாதராவின் திருவுருவஇயல் நூல்களைக் கலந்தேன். தூய வளனார் கல்லூரி நூலகத்தில் கிடைத்த நூல்களையெல்லாம் பார்த்துக் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் அது இராமராக இருக்கலாம் என்று கருதினேன். அடுத்தநாள் மஜீதிடம் அக்கருத்தைப் பகிர்ந்துகொண்டபோது என் வேகம், ஆர்வம் கண்டு அவர் வியந்து மகிழ்ந்தாலும் சிற்பத்தை இராமராக ஒப்புக்கொள்ளத் துணியவில்லை. 'இன்ன சிற்பம்' என்று அடையாளப்படுத்த முடியாத நிலையில் என் கண்டுபிடிப்பை ஒதுக்கித்தள்ளவும் அவருக்கு மனமில்லை. அதனால், அவர்கள் துறையின் அப்போதைய இயக்குநராக இருந்த முனைவர் இரா. நாகசாமி சிராப்பள்ளி வரும்போது கேட்டுத் தெளிவுசெய்து கொள்ளலாம் என்றார். பின்னாளில் அவ்வாய்ப்பு அமைந்தது. சிற்பத்தை அருங்காட்சியத்தில் பார்வையிட்டவாறே என் கருத்துக்களை எல்லாம் பொறுமையாகச் செவிமடுத்த நாகசாமி, 'இந்தச் சிற்பம் இன்னாரைக் குறிக்கிறதென்று உறுதியாகக் கூறமுடியாதிருப்பதால் தற்போதைக்கு இராமராகவே கொள்வோம்' என்றார். பின்னாளில் அதே போன்றதொரு சிற்பத்தை ஆலம்பாக்கம் மாடமேற்றளியில் காணநேர்ந்தபோது மஜீது என்னைப் பாராட்டியது இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது. முள்ளிக்கரும்பூர் ஆய்வுகள் மஜீதைப் புரிந்துகொள்ள மிகவும் உதவின. தாம் ஓர் அரசு அலுவலர் என்ற நினைப்பு அவருக்கு எப்போதுமே இருந்ததில்லை. எவ்விதமான அலுவலக ஆடம்பரமும் செய்ததில்லை. களஆய்விற்கான பயணங்களின்போது தனிப்பட்ட எதிர்பார்ப்புகளும் இருந்ததில்லை. அவரை ஓர் அரசு அலுவலர் என்று கருதவே முடியாதபடி அத்தனை எளிமை; அத்தனை நேர்மை. மஜீதுடன் பழகிய தொடக்க ஆண்டுகளே, என்னை ஒரு முழுமையான வரலாற்றாய்வாளனாக உருமாற்றின. என் எழுத்தையும் பேச்சையும் மிகவும் ரசிப்பார். நான் அவரது அமைதியான பண்பிலும் உண்மை நிறைந்த அன்பிலும் மனம் குழைவேன். இத்தனை ஆண்டுகளில் ஒரு முறையேனும் நாங்கள் சச்சரவிட்டுக் கொண்டதில்லை. மனம் வேறுபட்டதில்லை. எவ்வளவு கிண்டல் செய்தாலும் ஓர் அன்பான புன்னகையில் அதை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் திறன் அவரிடமிருந்தது. வரலாறு தொடர்பாகத் தமக்குத் தெரிந்த தரவுகளை ஆய்வாளர்களிடம் பகிர்ந்துகொள்ள அவர் தயங்கியதேயில்லை. அது போலவே தமக்குத் தெரியாதனவற்றைத் தெரிந்தன போல் காட்டிக்கொள்ளும் போக்கும் அவரிடம் அறவே கிடையாது. மஜீது சிராப்பள்ளியில் பணியிலிருந்த காலத்தில், மூன்று முறை அவர் அலுவலகம் சார்ந்த கூட்டங்கள் இங்கமைந்தன. அக்கூட்டங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்ய எங்கள் ஆய்வுமையம் துணை நின்றது. மஜீது எல்லாரிடமும் அதிகமாகப் பழகுபவரும் இல்லை. 'இது வேண்டும் அது வேண்டும்' என்று தமக்காக மட்டுமல்ல, துறைக்காகக்கூட யாரிடமும் எதுவும் கேட்கும் பழக்கமும் அவருக்கில்லை. அதனால், அலுவலகக் கூட்டத்திற்கு என் மருத்துவ நண்பர்கள் மு. சிவக்கண்ணு, மீ. சா. அஷ்ரஃப் ஆகியோரை அணுகி இடம்பெற்றேன். முதற் கூட்டம் முனைவர் இரா. நாகசாமி இயக்குநராக இருந்தபோது நடந்தது. அக்கூட்டத்தில்தான் என் முதல் வரலாற்று ஆய்வுக் கட்டுரை அரங்கேறியது. முனைவர் இரா. நாகசாமி கட்டுரையை முழுவதுமாய்க் கேட்டுத் திறனாய்வு செய்து பாராட்டியமை என்றென்றும் என் நினைவிலிருக்கும். மஜீதுடன் இணைந்து பல அரிய பணிகளைச் செய்யும் பேறு எனக்கு வாய்த்தது. முள்ளிக்கரும்பூர், அழுந்தியூர் ஆகிய இடங்களிலிருந்து பல அரிய சோழர் காலச் சிற்பங்களையும் உய்யக்கொண்டான்திருமலை, வாளாடி ஆகிய இடங்களில் இருந்து வீரக்கற்களையும் அகழ்ந்து அருங்காட்சியகம் கொணர்ந்து சேர்த்தோம். முள்ளிக்கரும்பூர், அழுந்தியூர், பனமங்கலம் கோயில்களை, அவை வழிபாடிழந்து பாழடைந்திருந்த நிலைமாற்றி, மாணவர்கள், அரசின் துணையுடன் வழிபாட்டிற்குக் கொணர்ந்தோம். இப்பணிகளில் மாவட்ட ஆட்சியர்களும் காவல்துறை உயர் அலுவலர்களும் அன்புடன் உதவினர். மஜீதுடன் அவர் அலுவலகத் தோழர்கள் திரு. ச. நடராசன், திரு. கிருஷ்ணமூர்த்தி, திரு. கிருஷ்ணன் ஆகியோர் உதவிக்கு வந்தனர். அன்பான ஒத்துழைப்பே எங்களுக்கிடையில் நிலவியதால் ஈடுபாட்டோடு பணியாற்ற முடிந்தது. இதற்கெல்லாம் தலையாய காரணியாய் நின்றவர் மஜீது. எப்போது அழைத்தாலும், எங்கு அழைத்தாலும் கேள்வி கேட்காமல் வந்தவர் அவர். எந்த உணவு கொடுத்தாலும் அது எவ்வளவு எளிமையான உணவாக இருந்தாலும் மகிழ்வோடு உண்டவர். பெரும்பாலும் எங்கள் பயணங்களில் பொதுவாக எலுமிச்சைச்சோறு, தயிர்ச்சோறு, உரிய கறிவகைகள் இருக்கும். எலுமிச்சைச்சோற்றைப் பார்த்தாலே, 'என்ன இன்றைக்கும் மஞ்சள் பிரியாணிதானா? எப்போதுதான் நிஜ பிரியாணி தருவீர்கள்' என்று கேலி பேசியபடியே அதைச் சுவைத்துண்பார். நாங்கள் நடத்திய எந்த அரசு தொடர்புடைய ஆய்வு நிகழ்ச்சிகளிலும் அவர், 'மேடைக்கு முந்தியதை' நான் கண்டதில்லை. தேடிக் கண்டுபிடித்து அழைத்து வந்து அமர்த்தவேண்டும். அத்தனை கூச்சப்படுவார். எதிலும் தாம் முன்நிற்கக்கூடாது. தம் அலுவலகத்தின் பெயரே முன்மொழியப்படவேண்டும் என்பதில் மிகக் கருத்தாக இருந்தார். அவரது அந்தப் பணிநேர்மை எனக்குப் பிடித்திருந்தது. அவரும் நானும் இணைந்து சில வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறோம். 'கோயில்கள் வளர்த்த கலைகள்' என்ற பொதுத் தலைப்பின் கீழ்க் கட்டடக்கலை பற்றி அவர் உரை நிகழ்த்தினார். அரை மணிநேர உரை. நன்கமைந்திருந்த அந்த உரைக்குக் கிடைத்த பாராட்டுக்கள் அவரை மகிழ்வித்தன. பல திருக்கோயில்களை உரைச்சித்திரங்களாக்கிப் 'பாரறியாப் பழங்கோயில்கள்' என்ற தலைப்பின் கீழ் வெளிச்சத்திற்குக் கொணர்ந்தோம். கணீரென்ற குரலில் கல்வெட்டுத் தகவல்களை மஜீது எடுத்துரைத்து, வானொலி ஒலிபரப்பியதில் எனக்குப் பெரும் நிறைவு. இவ்வானொலி நிகழ்வுகளால் கூட்டுறவாகப் பணியாற்ற உகந்தவர் மஜீதென்பதை நன்கறிந்தேன். மஜீது கல்வெட்டு வாசிப்பதே ஓர் அழகு. அந்தக் காலத்துத் தமிழாசிரியர்கள் இசையுணர்வுடன் பாடம் சொல்வது போல இராகத்தோடு படிப்பார். வாசிப்புத் தடுமாறும் இடங்களில் இசை இழுக்கும். எழுத்துக்கள் தெளிவாக இல்லை என்பதை அந்த இசையிழுப்பு எங்களுக்கு உணர்த்தும். இது போன்ற களப்பயணங்கள் தொடர்ந்தமைந்த நிலையில் எங்கள் நட்பு வளர்ந்தது. தொல்லியலின் பன்முகங்களில் ஒன்றான அகழ்வாய்வில் மஜீது வல்லவர். அழகன்குளம் ஆய்வுகள் அவரது திறமைக்குச் சான்று பகரும். திறமை, வல்லமை, ஆங்கிலப் புலமை ஆகியன இருந்தும்கூட, அளவுக்கு மீறிய தன்னடக்கமும் பிரச்சினைகளை விரும்பாத மனப்போக்கும் விட்டுக்கொடுக்கும் பண்பும் அவரை மின்னமுடியாமல் செய்துவிட்டன. அவருடைய கருத்துரைகள், முடிவுகள், கண்ணோட்டங்கள் அவர் பெயரையிழந்து மற்றவர் பெயரில் வெளியான நேரங்களில் என்னிடம் கூறி வருந்தியுள்ளார். ஏன் இதற்கு அநுமதிக்கிறீர்கள் என்று கேட்டால் மெலிதாகப் புன்னகைப்பார். மேலிட அழுத்தங்கள் நசுக்கும்போது புன்னகைதானே பதிலாகமுடியும். எங்கள் மைய ஆய்வர்களிடம் அவருக்கு நிறைந்த அன்புண்டு. நளினி, கல்வெட்டு வாசிப்பில் மஜீதிடம் பாலபாடம் பெற்றவர். தொல்லியல்துறை பட்டயப்படிப்பும் தொடர்ந்த எங்கள் ஆய்வு மையப் பணிகளும் நளினியைச் சிறந்த கல்வெட்டாய்வாளராக உருவாக்கியதில், என்னினும் அதிக மகிழ்ச்சியடைந்தவர் மஜீது. மஜீதின் சிறந்த பண்புகளுள் அதுவும் ஒன்று. தம்மிடம் பயின்றவர்கள் தம்மினும் மேம்பட்டு விளங்கினால் அது கண்டு மகிழ்ந்து பூரிக்கும் நல்ல நெஞ்சம் அவருக்கிருந்தது. அதனால்தான், எந்த இடையூறும் இல்லாமல் நாங்கள் அவருடன் தொடர்ந்து பழகமுடிந்தது. தன்முனைப்பற்றவரென்பதால் அவரது அன்பு நாளும் வளர்ந்ததே தவிர நலிவு காணவில்லை. ஆய்வுக்கட்டுரைகளில், பிறருடைய கருத்துக்களை, அவை பிழையாக இருப்பின் சுட்டிக் காட்டி மறுத்து எழுதும் என் போக்கை அவர் பெரிதும் இரசிப்பார். வரலாறு இதழில் வெளியாகும் மதிப்புரைகள் அவரைக் கவர்ந்திருக்கின்றன. பலமுறை அவரை எழுதத் தூண்டியிருக்கிறேன். பணிச்சுமை காரணமாக அவர் எழுதியவை சிறிதளவே என்றாலும், உரையாடல்களில் அவருடைய தொல்லியல் அநுபவங்கள் பளிச்சிடுவதை நான் பலமுறை கேட்டு அநுபவித்திருக்கிறேன். மஜீது மதுரைக்கு மாற்றலானபோதும் அங்கிருந்து சென்னைக்கு மாறிய போதும் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான்தான். ஓர் அன்பான நண்பரைப் பிரிந்த உணர்வு என்னை ஆழ வருத்தியது. தொலைவு நேர்ந்தாலும், சந்திப்புகள் அருகினாலும் அவை எங்கள் நட்பை மேலும் வளர்க்கவே உதவின. சென்னையிலிருந்தபோதும் எங்கள் ஆய்வுப் பயணங்களில் அவர் ஆர்வத்தோடு பங்கேற்றதுண்டு. ஒவ்வொரு முறையும் எங்கள் முன்னேற்றம் அவரை வியப்பிலாழ்த்தும். பாராட்டி மகிழ்வார். அவருடைய பாராட்டும் பண்பை மிகச் சிலரிடமே கண்டு மகிழ்ந்திருக்கிறேன். பழுவூர்ப் பகுதியைச் சேர்ந்த கீழையூர் அவனிகந்தர்ப்ப ஈசுவர கிருகம் தொல்லியல்துறையின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம். அதற்கொரு காவலர் இருந்தார். நாங்கள் அத்திருக்கோயிலை ஆய்வு செய்த காலங்களில் அம்முதியவரைச் சந்தித்து அளவளாவியுள்ளோம். எப்போதும் உழைத்துக்கொண்டிருக்கும் அவர் அந்த உழைப்பிற்குரிய ஊதியமின்றித் துன்பத்திலிருந்தார். பெருங்குடும்பியான அவருக்கு நியாயமாக வரவேண்டிய ஊதிய விவரங்களைப் பலமுறை சென்னை அலுவலகத்திற்குத் தெரிவித்தும் பயன்விளையாமல் அந்த ஏழை வருந்திக் கொண்டிருந்தார். நிலைமைகளை அறிந்த நான் அவருக்கு உதவ விழைந்தேன். சிற்பி வே. இராமன் கருணை நெஞ்சுடன் உதவினார். மஜீதிற்கு எழுதி அந்த அலுவலருக்கு நீதி கிடைக்குமாறு முனையச் சொன்னேன். மஜீது பெரிதும் ஒத்துழைத்தார். சென்னை சென்று அவரையும் அலுவலக மேலாளரையும் சந்தித்துக் கோப்புகளை நகரவைத்தேன். நகர்த்துவது கடினமாக இருந்தாலும், மஜீதும் அந்த மேலாளரும் தந்த ஒத்துழைப்பால், கோப்பு மெல்ல நகர்ந்து இயக்குநர் மேசைக்குச் சென்றது. திரு. நடன. காசிநாதன் அப்போது இயக்குநராக இருந்தார். அவரைச் சந்தித்து நிலைமைகளை விளக்கினேன். ஏற்கனவே என் வேண்டுகோளையேற்று மஜீது அவருக்கு அனைத்தையும் விளக்கியிருந்ததால் காசிநாதன் என் கோரிக்கையிலிருந்த நியாயங்களைப் புரிந்துகொண்டார். அவர் துறை சார்ந்த அலுவலருக்கு நேர்ந்திருந்த துன்பம் தெரியவந்த நிலையில் முடிவெடுப்பது எளிதானது. பழுவூர் முதியவர் பயன்பெற்றார். மஜீது ஆழ்ந்த இறைப்பற்று கொண்டவர். இஸ்லாத்தில் மெய்யான நம்பிக்கை கொண்டவர். பிற சமயங்களிடம் இணக்கமான நோக்குடையவர். பலமுறை அவரிடம் இஸ்லாம் பற்றிப் பாடம் கேட்டிருக்கிறேன். குர்ரானில் நல்ல புலமையுடையவர். இந்து சமயங்களின் புராணங்களிலும் தமிழிலக்கியங்களிலும் ஓரளவு தேர்ச்சியுடையவர். நிறைய படிக்க விரும்பினாலும் அலுவலகப் பணிகளும் குடும்பப் பொறுப்புகளும் அவரது வாசிப்பிற்குத் தடையாயின. வாசிக்க முடியாமற் போனதால் நிறைய கேட்க விரும்புவார். நானும் அவரும் இணைந்து பல கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளோம். தொல்லியல் சார்ந்த அனைவராலும் விரும்பப்படுவோருள் மஜீதும் ஒருவர். இந்த நேயமான உறவிற்கு மஜீதின் பண்பு நலன்களே காரணம். அவரை விரும்பாதவர்களை, விமரிசிப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மஜீது இயக்குநராக இருந்த காலத்து திரு. வெ. வேதாசலத்தைத் தஞ்சாவூரில் சந்தித்தேன். 'எப்படியிருக்கிறது பணிச்சூழல்?' என்று கேட்டேன். 'அன்புமயமாக இருக்கிறது' என்றார். மஜீது இயக்குநராக இருந்தபோது அலுவலகம் நேர்ப்பட்டதைக் காணமுடிந்தது. என்றாலும், பல்லாண்டுகளாக நலிவுற்றுப் போன நிருவாகத்தை, அவரது முயற்சிகளும் உழைப்பும் சீரமைக்கமுடியவில்லை. பணி ஓய்வுக்குப் பிறகு முழுவதுமாய்க் குடும்பப் பொறுப்புகளில் மூழ்கியவர் எஞ்சிய நேரத்தைக் குர்ரானில் தமக்கிருந்த ஈடுபாட்டின் காரணமாக அது சார்ந்த ஆய்வுகளிலும் ஆர்வமுடையோருக்கு வகுப்பெடுப்பதிலும் பகிர்ந்துகொண்டார். என் மாணவர்களும் நண்பர்களும் எனக்குப் பணிப்பாராட்டு நூல் கொணரக் கருதி அவரை அணுகியபோது அவருக்கேற்பட்ட மகிழ்வும் அதைத் தொலைபேசி வழிப் பகிர்ந்துகொண்ட விதமும் என் மீது அவர் கொண்டிருந்த அன்பின் ஆழத்தை வெளிப்படுத்தின. மிக நெருக்கமான நேரங்களில் அவரை நான் அண்ணாச்சி என்றுதான் அழைப்பேன். உண்மையில் அவர் என் உடன்பிறவாத அண்ணனாகவே இருந்தார். சிராப்பள்ளியில் நிகழ்ந்த 'கலை 66' நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் அவரும் அண்ணியும் கலந்துகொண்டு என்னை வாழ்த்தியமை என்றென்றும் என் நினைவில் இருக்கும். அடிக்கடி இல்லை என்றாலும், அவ்வப்போது தொலைப்பேசி உரையாடல்களில் உளம் நெகிழ்வோம். 2018 டிசம்பரில் வெளியான சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் நான்கு என்ற எங்கள் ஆய்வு நூலை அவரது அன்பிற்கும் வழிநடத்தலுக்கும் காணிக்கையாக்கியிருந்தோம். அவரிடம் பேசி அந்த நூலின் படியை அஞ்சலில் அனுப்பினோம். நூலை முழுவதுமாய்ப் படித்தவர் அரைமணிநேரத்திற்கும் மேலாக என்னிடமும் நளினியிடமும் நெஞ்சம் நெகிழ உரையாடியதே எங்களுக்குள் நிகழ்ந்த இறுதி உரையாடலாகிப் போனது. அவரது இழப்புச் செய்தி எங்களைக் கலங்கவைத்தது. மிகச் சிறந்த ஒரு நண்பரைக் காலம் பிரித்துவிட்டது. மஜீது, அன்புமயமானவர். ஒருவரிடம் நம்பிக்கை கொண்டுவிட்டால் இறுதிவரை அந்த நம்பிக்கையைக் கைவிடாதவர். பழகுவதற்கு மிக இனிமையானவர். அறிவார்ந்த உரையாடல் களுக்கு உகந்தவர். 'அகம்' சற்றும் இல்லாதவர். பதிவு அலுவலர், உதவி இயக்குநர், கண்காணிப்புத் தொல்லியல் அலுவலர், துணை இயக்குநர், இயக்குநர் எனப் படிப்படியாகப் பொறுப்புகள் உயர்ந்தபோதும் தன்னிலை மாறாது நட்புக்கடம் பூண்டிருந்தவர். உழைப்பு மட்டுமே உயர்வு தருமென்ற நம்பிக்கையுடையவர். அணைத்துப் போகும் பக்குவமுடையவர். எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையானவர். அந்த உண்மைத்தன்மைதான், அந்த மனிதரின் அழிக்க முடியாத மனிதமாக, அவருடைய கள்ளங்கபடமற்ற சிரிப்பில் பொலிந்து கொண்டிருந்தது. இனி, மென்மையும் இனிமையும் நட்பும் நிறைந்த அந்தப் புன்னகையைக் காணமுடியாது. 1. திருவாசி மாற்றுரை வரதீசுவரர் கோயில் களப்பணி 2. தொல்லியல் கருத்தரங்கில் திரு. மஜீது வரவேற்புரை 3. முதுகலை வரலாற்று மாணவியருடன் கல்வெட்டு வாசிப்பில் 4. மைய ஆய்வர்கள், பேராசிரியர் வேணிதேவி இல்லத்தாருடன் 5. கல்லூரிக் கருத்தரங்கில் கட்டுரையாளரும் மஜீதும் 6. அழகன்குளம் குறித்த கூ. ரா. சீனிவாசன் அறக்கட்டளைப் பொழிவில் 7. போசளீசுவரத்தில் கட்டுரையாளருடன் மஜீதும் வானொலி சுந்தரமூர்த்தியும் 8. கீழப்பழுவூரில் ஆய்வாளர்களுடன் திரு. மஜீது |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |