http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 157
இதழ் 157 [ ஆகஸ்ட் 2021 ] இந்த இதழில்.. In this Issue.. |
மண்டபம் மண்டபம் உருவாகியுள்ள மாமல்லபுரம், கழுக்குன்றம் குடைவரைகள் பதின்மூன்றனுள், பஞ்சபாண்டவர், தருமராஜர், கோனேரிப் பெரிய மண்டபம், கழுக்குன்றம், பெருவராகர் ஆகிய ஐந்தும் இரண்டாம் வரிசைத் தூண்களின் இருப்பால் மண்டபப் பகுதியை முகமண்டபம், அர்த்தமண்டபம் என இரண்டு பிரிவுகளாகக் கொண்டுள்ளன. புலிப்புதர், கோனேரிச் சிறிய மண்டபம், கொற்றவை, வராகர், அதிரணம், ராமானுஜர், மகிடாசுரமர்த்தினி, கலங்கரை விளக்கக் குடைவரை ஆகிய எட்டும் அத்தகு பிரிவினை இல்லாத நிலையில் ஒரே மண்டபத் துடன் உள்ளன. இருமண்டப அமைப்பு முகப்பொத்த தூண்கள், போதிகைகள், கூரையுறுப்புகள் பெற்ற அர்த்தமண்டபத்தை தருமராஜர், கழுக்குன்றம் ஆகிய இரண்டில் மட்டுமே காணமுடிகிறது. பெருவராகர், பஞ்ச பாண்டவரின் இரண்டாம் வரிசைத் தூண்கள் விலங்கடியற்ற எண்முகமாகப் பாலி, பலகை பெறாதனவாய் உள்ளன. பெருவராகர் தூண்களில் அனைத்து உறுப்புகளும் நன்கமைய, பஞ்ச பாண்டவரில் அவை ஒதுக்கீடுகளாக உள்ளன. பெருவராகர் கூடுதலாக இடைக்கட்டும் பெற்றுள்ளதுடன், அதன் போதிகைகள் வளைமுகத் தரங்கமாக உள்ளன. பஞ்சபாண்டவரின் போதிகைகள் தரங்கம் கொள்ளவில்லை. கூரையுறுப்புகளில் உத்திரம் மட்டுமே உருவாகியுள்ளது. ஆனால், பெருவராகர் முழுமையான கூரையுறுப்புகளை நிறைவாகப் பெற்றுள்ளது. அங்கு, வலபியின் கிழக்கு முகம் கொடிக்கருக்கும் மேற்கு முகம் அன்னவரியும் பெற்றுள்ளன. கோனேரிப் பெரிய மண்டபத்தின் அர்த்தமண்டபத் தூண்கள் முகப்புத் தூண்களின் சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டு உருளைப்பாதம், இடைக்கட்டு பெற்ற இந்திரகாந்தமாக உள்ளன. பாலி, பலகை தவிர, பிற உறுப்புகள் பெற்றுள்ள இத்தூண்களின் மேலுள்ள போதிகைகளின் கைகள் முகப்பினின்றும் மாறுபட்ட நிலையில் வளைமுகத் தரங்கமாய் உள்ளமையுடன், கூடுதலாகப் பட்டை பெற்றுள்ளன. முகப்பு வலபி அன்னவரி கொண்டுள்ள நிலையில் அர்த்தமண்டப வலபி வெறுமையாக உள்ளது. முகமண்டபம் இருமண்டபக் குடைவரைகளில் மிக நீளமானதும் உயரமானதுமான முகமண்டபம் பஞ்சபாண்டவரில் அமைய, மிக அகலமானது தருமராஜரில் உள்ளது. பஞ்சபாண்டவரிலும் கோனேரிப் பெரிய மண்டபத்திலும் முகமண்டபம் வெறுமையாகவும் முழுமையுறாமலும் அமைய, தருமராஜரில் முகமண்டபச் சுவரொன்று பல்லவ கிரந்தத்தில் வெட்டப்பெற்ற சம°கிருதச் செய்யுள் கல்வெட்டைக் கொண்டுள்ளது. கழுக்குன்றத்திலும் பெருவராகரிலும் இரண்டு முகமண்டபச் சுவர்களுமே நெடிதுயர்ந்த சிற்பங்கள் பெற்றுள்ளன. முகமண்டபச் சுவர்களில் சிற்பம் அமைக்கும் இப்பாங்கினை மகேந்திர மரபின் (இலளிதாங்குரம் - கங்காதரர்) தொடர்ச்சியாகக் கொள்ளலாம். கழுக்குன்றத்தில் முகமண்டபச் சிற்பங்கள் அடியவர்களாய் அமைய, பெருவராகரில் கங்காதரரும் நான்முகனும் காட்டப் பட்டுள்ளனர். இருமண்டபக் குடைவரைகளில் முகமண்டபச் சுவர்கள் பக்கத்திற்கொரு அடியவர் பெறும் பாங்கினைக் கழுக்குன்றம் மட்டுமே கொண்டுள்ளது. எனினும், தமிழ்நாட்டளவில் சிராப்பள்ளிக் கீழ்க் குடைவரை, கோளக்குடி ஆகியவற்றின் முகமண்டபத்திலும் இது போல் அடியவர்கள் காட்டப்பட்டுள்ளமை இங்கு நினைக்கத்தக்கது.12 பஞ்சபாண்டவர் தவிர்த்த ஏனைய நான்கு இருமண்டபக் குடைவரைகளிலும் முகமண்டபக் கூரையை வாஜனம் அணைத்துள்ளது. பெருவராகரில் மட்டும் முகமண்டபக் கோட்டங்களின் கீழ்ப்பகுதியில் பாதபந்தத் தாங்குதளமும் மேற்பகுதியில் வலபி தவிர்த்த பிற கூரையுறுப்புகளும் உள்ளன. அர்த்தமண்டபம் இருமண்டபக் குடைவரைகளுள் மிக நீளமான, உயரமான அர்த்தமண்டபத்தைப் பஞ்சபாண்டவரும் அகலமானதை தருமராஜரும் கொண்டுள்ளன. பெருவராகர் தவிர்த்த ஏனைய நான்கிலும் அர்த்தமண்டபப் பக்கச்சுவர்கள் வெறுமையாக உள்ளன. பெருவராகரில் கோட்டம் பெற்று, அரசர், அரசியர் சிற்பங்களை உரிய கல்வெட்டுகளுடன் கொண்டுள்ள இந்தச் சுவர்கள் கீழ்ப்பகுதியில் பாதபந்தத் தாங்குதளமும் மேற்பகுதியில் பூமிதேசம் உள்ளிட்ட கூரையுறுப்புகளும் பெற்றுள்ளன. ஐந்து இருமண்டபக் குடைவரைகளிலுமே அர்த்தமண்டபப் பின்சுவரில் கருவறைகள் உள்ளன. பஞ்சபாண்டவர், பெருவராகர், கழுக்குன்றம் ஆகிய மூன்றிலும் பின்சுவரின் நடுப்பகுதி யில் குடைவரைக்கு ஒரு கருவறை என்ற அமைப்பைக் காணமுடிகிறது. பஞ்சபாண்டவரில் மட்டும் அர்த்தமண்டபத்தின் தொடர்ச்சியாகக் கருவறைக்குச் சுற்று அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு முழுமையுறாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது. தருமராஜரில் மூன்று கருவறைகளும் கோனேரிப் பெரிய மண்டபத்தில் ஐந்து கருவறைகளும் உருவாகியுள்ளன. பஞ்சபாண்டவர், பெருவராகர் தவிர்த்த ஏனைய குடைவரைகளின் அர்த்தமண்டபக் கூரைகளை வாஜனம் சூழ்ந்துள்ளது. கோனேரிப் பெரிய மண்டபத்தின் அர்த்தமண்டபப் பின் சுவரில் வடக்கு, தெற்குக் கருவறைகளை அடுத்து வடபுறத்தே 45 செ. மீ. அளவிற்கும் தென்புறத்தே 42 செ. மீ. அளவிற்கும் விடப்பட்டுள்ள இடைவெளி ஐந்து கருவறைகள் பெற்றுள்ள வேறெந்தக் குடைவரையிலும் காணமுடியாத காட்சியாகும். கழுக்குன்றத்தின் அர்த்தமண்டபப் பின்சுவர் தமிழ்நாட்டின் வேறெந்தக் குடைவரையிலும் காணக்கிடைக்காத காட்சியைக் கொண்டுள்ளது. இங்குள்ள வலக்கோட்டத்தில் நான்முகனின் சிற்பமும் இடக்கோட்டத்தில் விஷ்ணுவின் சிற்பமும் பேரளவினவாக அமைந்துள்ளன. கருவறையின் இருபுறத்தும் மும்மூர்த்திகளுள் இருவர் காட்டப்பட்டிருக்கும் பாங்கு, கருவறைத் தெய்வத்தை சோமாஸ்கந்தராக ஊகிக்கத் தூண்டுகிறது.13 இவ்வமைப்பின் வளர்நிலைகளையே மாமல்லபுர சோமாஸ்கந்தர் தொகுதிகள் கொண்டுள்ளதாகக் கருதலாம். கழுக்குன்றத்தில் கருவறையின் இருபுறத்தும் உள்ள அர்த்தமண்டபப் பின்சுவர்ப் பகுதிகளில் கீழே உபானமும் அதைத் தொடர்ந்து சதுரப்பட்டியும் அமைய, மேலே, கருவறையின் கபோதத்திற்கு இணையான அளவில் பலகையும் அதை அடுத்துக் கூரை தழுவிய வாஜனமும் காட்டப்பட்டுள்ளமை ஆழ்ந்து எண்ணத்தக்கது. இவ்வமைப்புகளின் வளர்நிலையாகவே பெருவராகர், வராகர், இராமானுஜர் கருவறைகளின் இருபுறத்தும் உள்ள அர்த்தமண்டபப் பின்சுவர்களில் காணப்படும் தாங்குதளத்தையும் கூரையுறுப்புகளையும் காணமுடிகிறது.14 பெருவராகர் அர்த்தமண்டபப் பின்சுவரில் கருவறையின் இருபுறத்தும் பேரளவிலான கோட்டங்களுடன் சிற்பத்தொகுதிகள் உள்ளன.15 கோட்டங்களின் கீழ்ப் பாதபந்தத் தாங்குதளமும் மேற்பகுதியில் பூமிதேசம் உள்ளிட்ட கூரையுறுப்புகளும் உள்ளன. ஒரு மண்டபக் குடைவரைகள் மாமல்லபுரத்திலுள்ள ஒரு மண்டபக் குடைவரைகள் எட்டனுள் நிறைவடையாத கோனேரிச் சிறிய மண்டபம், புலிப்புதர், கலங்கரை விளக்கக் குடைவரை ஆகியவற்றின் முகமண்டபப் பக்கச் சுவர்கள் வெறுமையாக உள்ளன. கோனேரிச் சிறிய மண்டபப் பின்சுவரில் ஒரு கருவறையும் புலிப்புதரில் நான்கு கருவறைகளும் உருவாகியுள்ளன. எஞ்சிய ஐந்தனுள் எளிய மண்டப அமைப்புப் பெற்றனவாய்க் கொற்றவை, அதிரணம் குடைவரைகளைக் குறிக்கலாம். இரண்டிலுமே மண்டபப் பக்கச்சுவர்கள் வெறுமையாக அமைய, பின்சுவர், நடுப் பகுதியில் ஒரு கருவறை மட்டும் பெற்றுள்ளது. அதிரணத்தில் கருவறையின் இருபுற மண்டபப் பின்சுவர்கள் கோட்டம் பெற்றுச் சிற்பம் கொண்டுள்ளமை அதனைக் கொற்றவையினின்று வேறுபடுத்துவதாய் உள்ளது. இவ்விரு குடைவரை மண்டபங்களின் கூரைகளும் வாஜனத்தால் சூழப்பட்டுள்ளன. வராகர், இராமானுஜர், மகிடாசுரமர்த்தினி மண்டபங்களின் பக்கச்சுவர்கள் சுவரளாவிய கோட்டங்களில் சிற்பத்தொகுதிகளைக் கொண்டுள்ளன. மூன்றிலுமே சுவர்களின் கீழ்ப் பாதபந்தத் தாங்குதளமும் மேற்பகுதியில் பூமிதேசம் உள்ளிட்ட கூரையுறுப்புகளும் இடம்பெற்றுள்ளன. வராகரின் பின்சுவரில் ஒரு கருவறை அமைய, அதன் இருபுறத்தும் பேரளவிலான கோட்டங்களுடன் சிற்பத்தொகுதிகள் காட்சியாகின்றன.16 கோட்டங்களின் கீழ்ப் பாதபந்தத் தாங்குதளமும் மேலே பூமிதேசம் உள்ளிட்ட கூரையுறுப்புகளும் உள்ளன. இராமானுஜரில் மண்டபப் பின்சுவர் மூன்று கருவறைகளுடன் இருந்தமைக்கான எச்சங்களைக் காணமுடிகிறது. முன்றில் பெற்ற ஒரே குடை வரையான மகிடாசுரமர்த்தினியின் பின்சுவரில் மூன்று கருவறைகள் அமைய, நடுக்கருவறையின் முன் முன்றில் உள்ளது. முன்றில் கருவறைக்கு முன்னால் முன்றில் அமைக்கும் மரபு மகேந்திரர் காலத்திலேயே தொடங்கிவிட்டபோதும் தமிழ் நாட்டுக் குடைவரைகளில் மிக அருமையாகவே முன்றிலைக் காணமுடிகிறது. மகேந்திரரின் சஜூமல்லேசுவரம், மகிடாசுரமர்த்தினி தவிர்த்த நிலையில் அதியரின் சிங்கப்பெருமாள், கரூர்த் தான்தோன்றி, சிராப்பள்ளிக் கீழ்க்குடைவரை ஆகிய மூன்றில் மட்டுமே முன்றில் காணப்படுகிறது. அவற்றுள்ளும் சிராப்பள்ளிக் கீழ்க்குடைவரை இரண்டு கருவறைகளின் முன்பும் முன்றில் பெற்றுள்ளது. இம்மூன்றிலுமே முன்றில் தூண்கள் விலங்கடி பெறவில்லை. மகேந்திரரின் சஜூமல்லேசுவர முன்றில் தூண்களும் விலங்கடி கொள்ளவில்லை. மாறாக, மகிடாசுரமர்த்தினியின் முன்றில் விலங்கடித் தூண்களுடன் விளங்குவதைக் காணமுடிகிறது. அவ்வகையில் மகிடாசுரமர்த்தினியின் முன்றில் தமிழ்நாட்டுக் குடைவரைகளின் பிற முன்றில்களிலிருந்து தனித்து விளங்குகிறது. இத்தகு விலங்கடி முன்றில்கள் மாமல்லபுரம் ஒருகல் தளிகளான நகுலசகாதேவர், தருமராஜர் ரதங்களில் இடம் பெற்றுள்ளமை எண்ணத்தக்கது. கருவறை மாமல்லபுரம், கழுக்குன்றம் பகுதியிலுள்ள 15 குடைவரைகளுள் கலங்கரைவிளக்கத்தின் கீழுள்ள குடைவரையும் இராமானுஜர் மண்டபத்திற்கு எதிரிலுள்ள குடைவரையும் தொடக்க நிலையிலேயே கைவிடப்பட்டுள்ளமையால் அவற்றில் கருவறை உருவாகவில்லை. பிற பதின்மூன்றனுள் பஞ்சபாண்டவரிலும் வராகரிலும் கருவறை முறையே அர்த்தமண்டபத்திலும் முகமண்டபத்திலும் முழுமையுற அமைந்துள்ளது. புலிப்புதர் கருவறைகள் முகமண்டபப் பின்சுவர் ஒட்டியே உருவாகியுள்ளன. மும்மூர்த்தி, மண்டபம் பெறாவிட்டாலும் அங்கு அமைந்துள்ள மூன்று கருவறைகளுள் நடுவிலுள்ள சிவபெருமானின் கருவறை பிற இரண்டினும் சற்று முன்தள்ளி உள்ளது. இவை தவிர்த்த ஏனைய ஒன்பதில், மூன்று கருவறைகள் பெற்றுள்ள இராமானுஜர், தருமராஜர், மகிடாசுரமர்த்தினி ஆகியவற்றிலும் நடுக்கருவறைகள் பிதுக்கமாக உள்ளன. ஐந்து கருவறைகள் உள்ள கோனேரிப் பெரிய மண்டபத்திலும் முதல், இடை, கடைக்கருவறைகள் பிதுங்கியுள்ளன. ஒரே கருவறை பெற்றுள்ள பெருவராகர், கொற்றவை, கழுக்குன்றம், கோனேரிச் சிறிய மண்டபம், அதிரணம் ஆகியவற்றிலும் கருவறைகள் பிதுக்கமாகவே காட்டப்பட்டுள்ளன. இதனால், புலிப்புதர் தவிர்த்த ஏனைய பன்னிரண்டு குடைவரைகளில் முதன்மைக் கருவறைகளைப் பிதுக்கமாகக் காட்டும் மரபு மேலோங்கியிருந்தமையை உணரமுடிகிறது. பெரும்பாலான கருவறைகள் முறையான தாங்குதளம், படியமைப்பு, கூரையுறுப்புகள் பெற்றுள்ளன. கொற்றவை, கோனேரிப் பெரியமண்டபம், கழுக்குன்றம், வராகர், அதிரணம், இராமானுஜர், மகிடாசுரமர்த்தினி, பெருவராகர், மும்மூர்த்தி ஆகிய ஒன்பதில் அனைத்து உறுப்புகளும் பெற்ற பாதபந்தத் தாங்குதளம் கருவறையைத் தாங்குகிறது. தருமராஜரில் ஜகதி, எண்முகக் குமுதம், கம்பு மட்டுமே பெற்ற தளஅமைப்பின் மேல் கருவறைகள் எழுகின்றன. கோனேரிச் சிறிய மண்டபம், பஞ்சபாண்டவர் கருவறைகளின் கீழ்த் தாங்குதளத்திற்கான ஒதுக்கீடு அமைய, புலிப்புதரின் நான்கு கருவறைகளும் உபானம் மட்டுமே பெற்றுள்ளன. முறையான படியமைப்புடன் விளங்கும் கருவறைகளைத் தருமராஜர், கொற்றவை, கழுக்குன்றம், வராகர், கோனேரிப் பெரிய மண்டபம், மகிடாசுரமர்த்தினி ஆகிய ஆறு மட்டுமே கொண்டுள்ளன. மகிடாசுரமர்த்தினியின் வட, தென்கருவறைகள் படியமைப்புக் கொள்ள, நடுக்கருவறை முன்றில் அமைப்பால் படித்தொடர் பெறவில்லை. கோனேரிப் பெரிய மண்டபத்தில் பிதுக்கமாக உள்ள வட, நடு, தென்கருவறைகளுக்கு முன் மட்டுமே படித்தொடர் உள்ளது. பிற இரண்டின் படித்தொடர்கள் சிதைக்கப்பட்டுள்ளன. குறைந்த படிகளை (2) வராகரும் அதிக அளவிலான படிகளை (4) தருமராஜரும் பெற்றுள்ளன. பெரும்பாலான படித்தொடர்கள் யாளித் துளைக்கைப் பிடிச்சுவருடன் உருவாகியுள்ளன. தருமராஜர், கொற்றவை ஆகியவற்றின் படித்தொடரில் கீழ்ப்படி நிலவுக்கல்லாக அமைய, வராகரில் கீழ்ப்படி தாமரைத் தளமாகி உள்ளது. மும்மூர்த்தியில் மூன்று படித்தொடர்களும் எண்ணிக்கையில் மூன்று படிகள் பெற்றிருந்தபோதும், அமைப்பில் வேறுபாட்டைக் காணமுடிகிறது. முருகன் கருவறைப் படிகளில் கீழ்ப்படி உயரமானதாக அமைய, விஷ்ணுவில் கீழ்ப்படி மெலிதான நிலவுக்கல்லாக உள்ளது. சிவபெருமான் கருவறைப் படிகள் பெருந்தாமரை மேலமர் பிறைநிலாப் படிகளாய் உருவாக்கப்பட்டுள்ளன. நன்கு வடிவமைக்கப்பட்ட செழுமையான கருவறைப் படித்தொடர்களை வராகரிலும் மும்மூர்த்தியிலும்தான் காணமுடிகிறது. கருவறை பெற்றுள்ள 13 குடைவரைகளுள் கோனேரிப் பெரிய மண்டபத்தில் ஐந்து கருவறைகளும் புலிப்புதரில் நான்கு கருவறைகளும் அமைய, தருமராஜர், மகிடாசுரமர்த்தினி, இராமானுஜர், மும்மூர்த்தி ஆகிய நான்கும் தலைக்கு மூன்று கருவறைகள் கொண்டுள்ளன. எஞ்சிய ஏழு குடைவரைகளிலும் குடைவரைக்கு ஒரு கருவறையே அமைந்துள்ளது. மகேந்திரர் காலத்திலேயே ஐந்து (பல்லாவரம்), மூன்று (மண்டகப் பட்டு), ஒன்று என்ற எண்ணிக்கையில் கருவறைகள் இடம்பெற்றமையை நினைவில் இருத்தினால், கருவறை எண்ணிக்கையில் மாமல்லபுரம் குடைவரைகளில் பெரிய மாற்றங்கள் நிகழாமையை உணரலாம். ஐந்து என்ற எண்ணிக்கையைத் தாண்டிக் குரங்கணில்முட்டத்திலும் விளாப்பாக்கத்திலும் ஏழு கருவறை ளும் மாமண்டூர் மூன்றாம் குடைவரையில் ஒன்பது கருவறைகளும் அமைந்துள்ளமையையும் அவை மூன்றும் பல்லவர் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளமையையும் இங்கு நினைவுகூரின் குடைவரைக் கலையில் பரவலான சோதனைகள் நிகழ்த்தப்பட்ட களம் பல்லவக் களமே என்பது தெளிவுறும். மாமல்லபுரம், கழுக்குன்றம் குடைவரைகளில் கழுக்குன்றம் கருவறையே பிற கருவறைகளினும் நீளத்திலும் அகலத்திலும் பெரிதாக உள்ளது. உயரமான கருவறையைப் பஞ்சபாண்டவர் கொண்டுள்ளது. நிறைவு பெற்றுள்ள கருவறைகளுள் தருமராஜர் மண்டபத்தின் வட, தென்கருவறைகளும் மகிடாசுரமர்த்தினியின் மூன்று கருவறைகளும் வாயில்களை ஒட்டியோ, சுவர்ப் பகுதிகளிலோ தூண்கள் பெறவில்லை. ஏனைய அனைத்துக் கருவறைகளும் அரைத்தூண்கள் தழுவிய சுவரும் கூரைஉறுப்புகளும் கொண்டுள்ளன. இவ்வரைத்தூண்கள் அனைத்துக் கருவறைகளிலும் நான்முகமாகவே அமைந்தபோதும், தருமராஜரின் நடுக்கருவறை, கொற்றவை, கழுக்குன்றம், அதிரணம், பெருவராகர் ஆகியவற்றில் உறுப்பு வேறுபாடற்றும் கோனேரிப் பெரியமண்டபம், வராகர், இராமானுஜர், மும்மூர்த்தி ஆகிய நான்கில் பலகை உள்ளிட்ட அனைத்து உறுப்புகளுடனும் காட்சிதருகின்றன. சில தூண்களில் தாமரைப்பாதமும் வராகரில் இடைக்கட்டும் அமைய, கோனேரிப் பெரியமண்டபம், வராகர் கருவறைகளின் வாயில்களைச் சட்டத்தலை பெற்ற நான்முக அரைத்தூண்கள் அணைத்துள்ளன. கருவறைத் தூண்கள் பாலி, பலகை பெறுவது மகேந்திரர் கருவறைகளில் காணமுடியாத காட்சியாகும். கருவறைச் சுவர்த்தூண்களுக்கு இடைப்பட்டுக் கோட்டங்களும் அவற்றில் காவலர்கள், அல்லது அடியவர்களின் சிற்பங்களும் அமையும் மகேந்திரர் கால மரபு மாமல்லபுரத்திலும் பின்பற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் (திருத்தங்கல், தென்பரங்குன்றம், மலையக்கோயில்) காணுமாறு போலக் கோட்டங்களற்ற, சிற்பங்களற்ற கருவறைச் சுவர்களை இப்பகுதியின் நிறைவுற்ற குடைவரைகளில் காணமுடிவதில்லை.17 அது போலவே பூமிதேசம் தவிர்த்த பிற கூரையுறுப்புகளை முழுமையுறப் பெற்றுள்ளமையிலும் மாமல்லபுரம் குடைவரைகளின் கருவறைகள் மகேந்திரர் மரபைப் பின்பற்றியுள்ளன. உத்திரம், வாஜனம், வலபி, கபோதம் ஆகியன நிறைவுற்ற குடைவரைகளின் பெரும்பான்மையான கருவறைகளில் உள்ளன. தருமராஜர், கொற்றவை, கழுக்குன்றம் தவிர்த்த பிற கருவறைகளில் பூமிதேசம் இணைக்கப்பட்டுள்ளமை மாமல்லபுரக் கலைமுறையின் முதன்மையான உத்திகளுள் ஒன்றாகும். தளவானூர் சஜூமல்லேசுவரத்தின் முகப்புக்கு மேற்பட்ட பாறைப்பகுதியில் பூமிதேசத்திற்கான முன்னோட்டச் செதுக்கல்களைக் காணமுடிந்தாலும், மகேந்திரரின் கல்வெட்டுப் பெற்றுள்ள குடைவரைகளின் கருவறைக் கூரைகள் எவற்றிலும் அவ்வுறுப்பு இடம்பெறாமை இங்குக் கருதத்தக்கது. அது போலவே மகேந்திரரின் இரண்டு குடைவரைக் கருவறைகளில் மட்டுமே காட்சிதரும் வலபி, மாமல்லபுரம் குடைவரைக் கருவறைகளில் பெருவளர்ச்சியுற்ற உறுப்பாய் பூத, அன்னவரியுடன் திகழ்வது மகேந்திரருக்கு அடுத்து அமைந்த பல்லவர் காலக் கட்டமைப்பு வரலாற்றின் மிக முக்கியமான கூறாகும். கருவறைக் கூரையுறுப்புகளைப் பொருத்தமட்டில் மகேந்திரர் காலத்தில் இல்லாத குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மாமல்லபுரக் காலத்தில் வளர்நிலைகளாய்த் தோற்றம் கொண்டமையைத் தெளிவாகக் காணமுடிகிறது. 1. வலபி முதன்மையான உறுப்பாக வளர்ச்சியுற்று அன்ன, பூதவரிகளால் அழகூட்டப் பெற்றது. 2. கபோதக்கூடுகளில் மகேந்திரர் காலக் கந்தருவத்தலைகள், கொடிக்கருக்கு அலங்கரிப்புகள், பூப்பதக்கங்கள் ஆகியவற்றுடன் மகரங்களையும் காணமுடிகிறது. அவை தாமரை, எழுகதிர் போன்ற அமைப்புகளைக் கொள்வதும் மாமல்லபுரம் குடைவரைகளில்தான். 3. பலகைகள் அல்லது வேதிகைகளில் கால்பதித்துக் கபோதம் அல்லது சிகரம் தாங்கும் தாவுயாளிகளை முகப்புத் தூண்களிலும் ஆரஉறுப்புகளிலும் காண முடிவது போலவே கருவறை, முன்றில் பகுதிகளிலும் (வராகர், கோனேரிப் பெரியமண்டபம், மகிடாசுர மர்த்தினி) பார்க்கக் கூடுவதும் இங்கு மட்டும்தான். 4. போதிகைகள் சில கருவறைகளில் வளைமுகமாகவும் சிலவற்றில் விரிகோணத்திலும் தரங்கம் பெற்றும் பெறாமலும் அமைந்துள்ளன. ஆனால், ஒன்றிலேனும் கொடிக்கருக்கு அலங்கரிப்பைக் காணக்கூடவில்லை. அதிரணம், கொற்றவை ஆகியவற்றில் மட்டுமே போதிகைகள் இடம்பெறவில்லை. 5. பெரும்பாலான கருவறைகளில் தளமுடிவு சுட்டும் பூமிதேசம் முதன்முறையாக இணைக்கப்பட்டுள்ளது. கருவறைப் புறச்சுவர்ச் சிற்பங்கள் நிறைவடைந்துள்ள 1க்ஷூ குடைவரைகளுமே கருவறை முன்சுவர்களில் சிற்பங்கள் கொண்டுள்ளன. மகேந்திரர் காலத்தி லேயே இச்சிற்பங்களை ஒருக்கணிப்பில் அமைக்கும் பழக்கம் (மகேந்திரவாடி) மலர்ந்துவிட்டது என்றாலும், முழுமையான ஒருக்கணிப்பில் இவை அமைந்துள்ள பாங்கினை மாமல்லபுரத்தில் காணமுடிகிறது. அடியவர் சிற்பங்கள் சிவபெருமான் கருவறைகளில் சூலத்தேவராகவும் மழுவடியாராகவும் விஷ்ணு கருவறைகளில் சங்காழ்வாராகவும் சக்கரத்தாழ்வாராகவும் அமையும் பாங்கு மகேந்திரர் காலப் பழைமையது. இப்பழக்கம் தமிழ்நாடு முழுவதும் கைக்கொள்ளப்பட்டிருந்தமைக்குக் கணக்கற்ற குடைவரைகளின் கருவறை அடியவர் சிற்பங்கள் சான்று பகர்கின்றன. மகேந்திரர் காலத்தினும் இறுக்கம் தளர்ந்தவர்களாய்த் திரிபதாகம், சிம்மகர்ணம், தர்ஜனி, போற்றி, சுட்டு, காப்பு, தியானம், கர்த்தரி, கபித்தம் முதலிய மாறுபட்ட கை முத்திரைகளுக்குச் சொந்தக்காரர்களாய் மாமல்லபுரம் காவலர்களும் அடியவர்களும் தோற்றம் தர, கொற்றவைக் கருவறை பல்லவர் கலைவரலாற்றின் முதற் காவற்பெண்டுகளைக் காட்சிப்படுத்துகிறது. வடக்கர் கொடுவாளும் கேடயமும் கொள்ள, தெற்கர் வில் பிடித்துள்ளார். உருள்பெருந்தடி மட்டுமே கொண்டு காட்சியளித்த மகேந்திரர் காலக் காவலர்களிடமிருந்து வேறுபட்டுப் போர்க்கருவிகளுடன் தோற்றம் காட்டும் இக்காவற்பெண்டுகள் சங்கப் பழைமையர். காவலர், அடியவர் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுள்ள கை முத்திரைகளுள் கபித்தமும் திரிபதாகமும் மிக அரிதானவை. தமிழ்நாட்டின் வேறெந்த அரச மரபு சார்ந்த குடைவரைகளிலும் காணமுடியாத இவ்விரு பல்லவ முத்திரைகளும் மாமல்லபுர ஒருகல் தளிகள் இரண்டின் (தருமராஜர், அருச்சுனர் ரதங்கள்) சிற்பங்கள் சிலவற்றிடம் சிறைப்பட்டுள்ளன. காவலர், அடியவர் சிற்பங்களில் அவர்கள் மீது தவழுமாறோ, அவர்கள் கொண்டுள்ள உருள்பெருந்தடிகளைத் தழுவியுள்ளாற் போலவோ பாம்புகளைக் காட்டும் பண்பும் மகேந்திரர் காலத்ததே. மாமல்லபுரக் குடைவரைக் காவலர்கள் சிலரிடம் காணப்படும் இவ்வமைப்புத் தமிழ்நாட்டின் பிற அரச மரபுசார் குடைவரைகளில் புதுக்கோட்டைப் பகுதியில் நான்கிலும் மதுரைப் பகுதியில் இரண்டிலும் தென்மாவட்டங்களில் இரண்டிலும் என அரிதாகவே காணப்படுகிறது. தமிழ்நாட்டின் வேறெந்தக் குடைவரைக் கருவறையிலும் இடம்பெறாத சிறப்பமைப்பாக மாமல்லபுரம் வராகர் குடைவரைக் கருவறையின் பக்கச்சுவர்கள் அடியவர் சிற்பங்களைப் பெற்றுள்ளமையைக் குறிக்கலாம். மண்டபத்திற்குள் பிதுக்கமாய் அமைந்துள்ள கருவறைகளைத் தமிழ்நாட்டின் பல குடைவரைகள் பெற்றிருப்பினும் பக்கச்சுவர்ச் சிற்பங்களை வராகரில் மட்டுமே காணமுடிகிறது. மதுரை மாவட்டக் குடைவரைகளுள் ஒன்றான பரங்குன்றம் குடைவரையின் சிவபெருமான், விஷ்ணு கருவறைகளின் வடசுவர்கள் நான்முகத் தூண்களின் தழுவலில் கோட்டங்களாக்கப்பட்டுச் சிற்பங்கள் பெற்றுள்ளபோதும் இவ்வமைப்பு, கருவறைப் புறச்சுவர்களுள் ஒன்றில் மட்டுமே உள்ளமையால், இருசுவர்களிலும் சிற்பங்கள் பெற்றுள்ள வராகர் தனித்து நிற்கிறது. கருவறை வாயிலின் இருபுறத்தும் அமையுமாறு இரண்டுக்கு மேற்பட்ட கோட்டங்கள் காட்டும் பழக்கத்தைப் பெருவராகர் தவிர, தமிழ்நாட்டின் வேறெந்தக் குடைவரையிலும் காணமுடியவில்லை. பெருவராகரில் வாயிலின் இருபுறத்தும் பக்கத்திற்கு மூன்றென ஆறு கோட்டங்கள் இடம்பெற்றுள்ளமை மாமல்லபுரத்தின் தனித்த சிறப்பாகும். கருவறை முன்சுவர்க் கோட்டங் களில் பொதுவாக அடியவர், காவலர் சிற்பங்களை அமைப்பதே தமிழ்நாட்டின் மரபாக அமைந்துள்ளது. அம்மரபு மீறிய நிலையையும் மாமல்லபுரத்தின் பெருவராகர் கொண்டுள்ளது. இங்குதான் அடியவர், காவலர் சிற்பங்களுடன் விஷ்ணு, AரிAரர் சிற்பங்களும் இடைமிடைந்துள்ளன. நிறைவடைந்துள்ள மாமல்லபுரம் குடைவரைகளுள் தருமராஜர், கொற்றவை, மகிடாசுரமர்த்தினி தவிர்த்த ஏனைய அனைத்துக் கருவறைகளும் கூரை தழுவிய வாஜனம் பெற்றுள்ளன. சிலவற்றில் பின்சுவர் ஒட்டிய தளமும் தரையில் சதுர அல்லது வட்டமான குழியும் காணப்படுகின்றன. பின்சுவரில் இறைத்திருமேனி கொண்டுள்ள கருவறைகள் சிலவற்றுள்கூட இத்தகு குழிகள் உள்ளன. சில கருவறைகளில் (கோனேரிப் பெரிய மண்டபம்) குழியைச் சுற்றிலும் ஆவுடையாரைச் சுட்டுமாறு போல ஒரு வளையம் வெட்டப்பட்டுள்ளது. மகிடாசுரமர்த்தினி வடகருவறைப் பின்சுவரையெhட்டியுள்ள மூன்று செவ்வகத் தளஅமைப்புகள் மாமல்லபுரத்தில் வேறெங்கும் காணமுடியாத காட்சியாகும். கருவறை இறைவடிவங்கள் மாமல்லபுரம், கழுக்குன்றம் கருவறைகளுள் பல்லவர் கால இறைத்திருமேனிகளைக் கொண்டிருப்பவை ஐந்தேயாகும். அவற்றுள், பேரளவினதான இறைத்திருமேனிகள் மகிடாசுர மர்த்தினியின் நடுக்கருவறையிலும் பெருவராகரிலும் மும்மூர்த்தியிலும் காணப்படுகின்றன. அதிரணத்திலும் இராமானுஜரின் நடுக்கருவறையிலும் காணப்படும் சுவர்ச் சிற்பங்கள் அவ்வக் கருவறைகளின் அளவுகளோடு ஒப்பிடும்போது அளவில் சிறியவை. சுவரின் மேற்பகுதியை மட்டுமே பின்புலமாகக் கொண்டு அமைந்தவை. இரண்டில், அதிரணம் சோமாஸ்கந்தர் சிற்பத்தொகுதியைக் கொண்டுள்ளது. இராமானுஜரில் சிற்பம் சிதைக்கப்பட்டிருந்தாலும் எஞ்சியிருக்கும் சுவடுகள் கொண்டு அதை சோமாஸ்கந்தராக ஊகிக்கலாம். கருவறை இறைத்திருமேனிகள் உருவாகியிருக்கும் ஐந்து குடைவரைகளில் மூன்றில், தமிழ்நாடு தவிர இந்தியாவின் வேறெந்த மாநிலக் குடைவரைகளிலும் இடம்பெறாத சோமாஸ்கந்தர் காணப்படுவது இக்குடைவரைகள் உருவான காலத்தில் பல்லவச் சமுதாயத்தில் எழுச்சியுடன் இருந்த இறைச் சிந்தனைகளை அடையாளப்படுத்துவதாய் அமைந்துள்ளது. அதிரணத்தில் கருவறை, முகமண்டபப் பின்சுவர்க் கோட்டங்கள் என மூன்றிடத்திலும் சோமாஸ்கந்தர் விளங்குவதும் மகிடாசுரமர்த்தினியின் நடுக்கருவறையில் பேரளவினதாக அவ்விறைத்தொகுதி அமைந்திருப்பதும் பல புத்தமைப்புகளுடன் விளங்கும் இராமானுஜர் மண்டபத்திலும் நடுக்கருவறையின் சுவர்க்கோட்டத்தில் அத்திருமேனி இடம்பிடித்திருப்பதும் இம்மூன்று குடைவரைகளின் காலத்தையும் ஒருங்கிணைத்துச் சிந்திக்கத் தூண்டுகின்றன. ஐந்து குடைவரைகளில் மூன்றினைச் சைவம், சாக்தம், கெளமாரம் இணைந்த சோமாஸ்கந்தர் தொகுதிக்கு அளித்திருக்கும் பல்லவ மரபு, ஒன்றை, மகேந்திரர் காலத் தொடர்ச்சியாக மும்மூர்த்திகளுக்கும் மற்றொன்றை மகேந்திர விஷ்ணு கிருகத்தின் அடியெhற்றி வைணவத்திற்கும் தந்திருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. தமிழ்நாட்டுக் குடைவரைகளில் பூவராகர் முதன்மை இறையாகக் காட்சிதருவது மாமல்லபுரத்துப் பெருவராகரில் மட்டும்தான். 5:1 என்ற விகிதத்திலேயே மாமல்லபுரத்தில் விஷ்ணு காட்சிதருகிறார். ஆனால், சிவபெருமான் 5:3 என்ற நிலையில் உள்ளமை கருதத்தக்கது.18 மகேந்திரரின் மும்மூர்த்தி மரபு மாமல்லபுரத்தில் பின்பற்றப்பட்டிருந்தபோதும், அந்த மூன்று இறைவடிவங்களில் ஒன்றாக மண்டகப்பட்டுக் கல்வெட்டில் காட்சிதரும் நான்முகன், மாமல்லபுரத்தில் முதன்மை நிலையிலிருந்து இடம்பெயர்ந்திருப்பதையும் அந்த உயரிய இடத்திற்கு முருகன் முன்னேறியிருப்பதையும் காணும்போது, முருக வழிபாட்டில் மலர்ச்சி ஏற்பட்ட காலத்திலேயே மும்மூர்த்தி குடைவரை உருவாகியிருத்தல் வேண்டுமென்ற உண்மையை உணரலாம்.19 படங்கள் மகிஷாசுரமர்த்தினி குடைவரைக் கருவறைகள் மகிஷாசுரமர்த்தினி சிற்பத்தொகுதி முன்றில் சோமாஸ்கந்தர் பள்ளிகொண்டபெருமாள் இராமானுஜர் மண்டபம் திருக்கழுக்குன்றம் குடைவரைக் கருவறை திருக்கழுக்குன்றக் குடைவரை அடியார்கள் திருக்கழுக்குன்ற நான்முகன் திருக்கழுக்குன்ற விஷ்ணு குறிப்புகள் 12. மு. நளினி, இரா. கலைக்கோவன், சிராப்பள்ளிக் கீழ்க் குடைவரை, வரலாறு 1க்ஷூ, பக். 134, 144. மு. நளினி, இரா. கலைக் கோவன், தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் தொகுதி 1, பக். 88-89. 13. இலிங்கோத்பவர் திருமேனியின் இருபுறத்தும் இது போல் திருமாலையும் நான்முகனையும் அமைக்கும் பழக்கம் உண்டெனினும், அத்தகு அமைப்பு பாண்டியர் பகுதியில் குன்றக்குடி மூன்றாம் குடைவரையில் இடம்பெற்றுள்ளது எனினும், பல்லவ மண்ணில் விளைந்த குடைவரைகளிலோ, ஒருகல் தளிகளிலோ இலிங்கோத்பவர் வடிவம் இடம்பெறாமையும் அவர்தம் கற்றளிகளிலும் அவ்வடிவம் பரவலாக வழக்குப் பெறாமையும் மாறாக, சோமாஸ்கந்தர் வடிவம் தொடர்ந்து பல்லவர்களின் குடைவரைகளிலும் தருமராஜரதத்திலும் பல கற்றளிகளிலும் இடம்பெற்றுள்ளமையும் கழுக்குன்றத்துக் கருவறை வடிவத்தை சோமாஸ்கந்தராகவே கொள்ள வழிகோலுகின்றன. இக்கருத்து ஏற்புடைத்தாயின் சோமாஸ்கந்தரின் தோற்றம் முதலாம் நரசிம்மவர்மர் காலத்திலிருந்து தொடங்குவதாகக் கொள்ளவேண்டும். 14. இவ்வமைப்புகளின் இருப்பும் அர்த்தமண்டபப் பின்சுவர்ச் சிற்பங்களும் கழுக்குன்றம் குடைவரை மகேந்திரர் கலைமுறையில் இருந்து மாறிப் புதிய பாதையில் அடியெடுத்து வைப்பதை உணர்த்துகின்றன. இத்துடன் கருவறை சோமாஸ்கந்தரையும் இணைத்துச் சிந்திக்கலாம். முதலாம் நரசிம்மர் காலத்தில் தொடங்கிய இம்மாற்றங்கள், இராஜசிம்மர் காலத்தில் முழு வீச்சுடன் பல புத்தாக்கங்களைப் பெற்று மாமல்லபுரக் கலைமுறையாக மலர்வதை அங்குள்ள வளர்நிலைக் குடைவரைகள் நன்கு புலப்படுத்துகின்றன. 15. பாண்டியர் பகுதியிலுள்ள இருமண்டபக் குடைவரைகளுள் வடபரங்குன்றம் கொற்றவைக் கருவறையின் இருபுறத்தும் முருகன், பிள்ளையார் சிற்பத்தொகுதிகள் உள்ளன. மு. நளினி, இரா. கலைக்கோவன், மதுரை மாவட்டக் குடைவரைகள், ப. 125. 16. மலையடிக்குறிச்சி, குன்றக்குடி மூன்றாம் குடைவரை, மலையடிப்பட்டி ஒளிபதி விஷ்ணு கிருகம், நாமக்கல் அதியர் குடைவரைகள் ஆகியவற்றில் இவ்வமைப்பைக் காணலாம். 17. தருமராஜர் மண்டபத்தின் வட, தென்கருவறைச் சுவர்கள் கோட்டங்களோ, சிற்பங்களோ கொள்ளவில்லை. எனினும், அதன் நடுக்கருவறை அவற்றைப் பெற்றுள்ளது. 18. மும்மூர்த்தி குடைவரையில் விஷ்ணு, முருகன், சிவபெருமான் ஆகிய மூவருக்கும் தனித்தனிக் கருவறைகள் இருந்தபோதும், சிவபெருமானின் கருவறை பிற இரண்டினின்றும் முன்னிழுக்கப்பட்டிருக்கும் பாங்கு, அம்மும்மூர்த்திகளுள் அவரே முதன்மை மூர்த்தியாய்க் கருதப்பட்டார் என்பதை நிறுவுவதால், சைவக் குடைவரையாகவே மும்மூர்த்தியைக் கொண்டாலும் அது பிழையாகாது. – 19. கல்வெட்டொன்றில் முருகனோடு இராஜசிம்மர் தம்மை ஒப்பிட்டுக் கொள்வதை இங்கு இணைத்துச் சிந்திக்கலாம். நுஐ 19: 18 B. - வளரும் |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |