http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[177 Issues]
[1753 Articles]
Home About US Temples Facebook
Issue No. 157

இதழ் 157
[ ஆகஸ்ட் 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

கல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 6
புள்ளமங்கை ஆலந்துறையார் விமானம்
பெரிய பெருமாளும் நம்பிராட்டியாரும்
மாமல்லபுரம் குடைவரைகள் - ஒப்பாய்வு - 2
திருவாசி மாற்றுரை வரதீசுவரர் - 3
பதாமி சாளுக்கியரின் கட்டுமானக் கோயில்கள் - பட்டடக்கல் நினைவுச் சின்னங்கள்
இதழ் எண். 157 > கலையும் ஆய்வும்
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 6
பால.பத்மநாபன்

மூன்று அங்கு இலங்கு நயனத்தன் மூவாத
வான் தங்கு தேவர்களும் காணா மலர் அடிகள்
தேன் தங்கி தித்தித்து அமுது ஊறித் தான் தெளிந்து, அங்கு
ஊன் தங்கி நின்று உருக்கும் உத்தரகோசமங்கைக்
கோன் தங்கு இடைமருது பாடிக் குல மஞ்ஞை
போன்று அங்கு அன நடையீர் பொன் ஊசல் ஆடாமோ!

-திருப் பொன் ஊசல் –திருவாசகம்- - மாணிக்கவாசகர்

பொருள்: மரபு வழி வந்த மயில்போல் சாயலையும், அன்னம் போன்ற நடையினையும் உடைய பெண்களே! விளங்குகின்ற மூன்று கண்களையுடையவனும், வானுலகத்தில் வாழ்கின்ற தேவர்களும் காணாத மூவாத மலர்போலும் மெல்லிய திருவடிகள் என் உள்ளத்திற்றங்கி, தேனிறைந்து, தித்தித்து, அமுதம்போலும் இனிமையை மேன்மேலும் கூர்ந்து, தெளிவைப் பிறப்பித்து, ஊனினை உருக்கும் உத்தரகோசமங்கைக் கோனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருவிடைமருதூரைப் பாடிப் பொன்னூசல் ஆடுவோம்.

[இக் கட்டுரையை படிக்கும் முன் கீழ்க்கண்ட விளக்கங்களை புரிந்துகொண்டு படித்தால் எளிமையாய் இருக்கும்]

ஜீவதக் காணி : உயிர் உள்ளவரை அனுபவிக்கும் உரிமை உடைய நிலம்
தேவதானம் : கோயிலுக்கு முழுமையாக்வோ பகுதியாகவோ துய்க்கக் கொடுத்த நிலம்
இறையிலி நிலம் : வரி நீக்கப்பட்ட நிலம்
தேவதான இறையிலி : வரி நீக்கப்பட்ட கோயிலுக்குரிய நிலம்
திருநாமத்துக்காணி : வரி செலுத்தும் கோயிலுக்குரிய நிலம்

சோழமன்னர்களின் வாய்மொழி உத்திரவினை உடன் இருக்கும் திருமந்திரஓலை (1) என்ற அதிகாரி ஓலையில் எழுதிக்கொள்வர். அப்படி எழுதப்பட்ட ஒலைகள் ஓலை நாயகம் (2) என்ற அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு இதர அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுச் செயல்வடிவம் கொடுக்கப்படும். அப்படி எழுதப்பட்ட ஓலையில், மன்னனின் ஆணையில், மன்னன் தன்னைக் கோனரின்மைக்கொண்டான் என்று அறிமுகத்தோடு பெருமைப்படுத்திகொண்டு ஆணையின் செய்தியைத் தெரிவிப்பான். கோனரின்மைக்கொண்டான் என்று தொடங்கும் ஒரு சில ஆணைகளில் மட்டும் மன்னர்கள் தம் பெயரினைத் தெரிவிப்பார்கள். மன்னர்கள் பெயர் அல்லாது வெறும் கோனரின்மைக்கொண்டான் என்று தெரிவிக்கும் கல்வெட்டுகளில் இது எந்த மன்னனுடையது என்பதை, அந்த கல்வெட்டில் வரும் அதிகாரிகளின் பெயரைக் கொண்டும் மற்ற செய்திகள் கொண்டும் ஒருவாறு அறியலாம். இதன் அடிப்படையில் மன்னர்கள் பெயர் அல்லாது வெறும் கோனரின்மைக்கொண்டான் என்று தொடங்கும் கல்வெட்டுகளை எந்த மன்னனுடையது என்பதை ஆராய்வோம்.

1) A.R.E.144/1895-S.I.I. Vol.5 No:708
திருவிடைமருதூர் உள்ளூர், எதிரிலிச்சோழமங்கலம், திருகுடமூக்கு, சுங்கம் தவிர்த்த சோழநல்லூர் ஆகிய ஊர்களிள்ள திருவிடைமருதூர் கோயிலுக்குரிய நிலங்கள் 12 1/2 வேலி 3 மா 1 காணி நிலங்களுக்கு பதிலாகவும் கூடுதலாகவும் நடாரான குலோத்துங்கசோழன் கருப்பூரில் 17 ½ வேலி 4 மா 1 காணி நிலம் பரிவர்த்தணையாக திருவிடைமருதூர் கோயிலுக்கு வழங்கி மன்னன் ஆணையிட்டான். இக் குலோத்துங்க சோழ நல்லூரில் அரசாங்கத்திற்கு துரோகம் செய்தவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களும் இப் பரிவர்த்தணையில் அடங்கும். இவ்வாணையில் கீழ்க்கண்ட அதிகாரிகள் பெயர்கள் காணப்படுகின்றன.
கோயில் கணக்கு ---------------------- ஆதனூருடையான்
திருமந்திர ஓலை ------------------------ மீனவன் மூவேந்த வேளான்

ஓலையில் கையொப்பமிட்ட அரசு அதிகாரிகள் பின் வருமாறு:
காங்கேயராயன்
இலங்கேஸ்வரன்
சேதிகுலராயன்
காலிங்கராயன்
விழுப்பாதராயன்
செரிகுலராயன்

மேற்கண்ட அதிகாரிகளில் பலர் மூன்றாம் குலோத்துக்கனின் ஆட்சிக்காலத்திலும் (3) அதன் பின் ஆண்ட மூன்றாம் இராஜராஜனின் ஆரம்ப ஆட்சியாண்டுகளிலும் (4) பணி புரிந்துள்ளனர். .இக் கல்வெட்டு மன்னனின் 18 – ம் ஆட்சியாண்டு 239 நாளைக் குறிப்பிடுவதால் இக்கல்வெட்டை மூன்றாம் குலோத்துக்கனின் கல்வெட்டாக கருதலாம்.

2) A.R.E.257/1907-S.I.I.Vol.23 No:257

மன்னன் பழையாற்று அரண்மனையில் தன் தாயார் குடியிருப்பிற்கு முன்புறம் உள்ள கூடத்தில் உண்வு அருந்திக்கொண்டிருக்கும்போது, சிறுகுளத்தூருடையான் அரையன் பராந்தகனான செம்பியன் சோழியவரையன் என்பவன், தனக்கு ஜீவத காணியுள்ள திருநறையூர் நாட்டு நல்லாடி கிராமத்தில் உள்ள குத்தகைகாரர்களை நீக்கி, திருவிடைமருதூர் கோயில் தேவதான இறையிலியாக உள்ள சுமார் 5 வேலி நிலத்தை முழுவதும் வேலி ஒன்றுக்கு 120 கலம் வீதம் திருவிடைமருதூர் கோயிலுக்கு அளக்க தனக்கும் தன் வாரிசுகளுக்கும் குடி நீக்கா (குத்தகைதாரரை நீக்காமல்) தேவதான இறையிலியாக வழங்க வேண்டினான். அவன் கோரிக்கையை ஏற்று தன் பிறந்த நட்சத்திரமான விசாகம் தோறும் மாதந்தோறும் திருவிழா எடுக்க மன்னன் ஆணை பிறப்பித்தான்.

இக் கல்வெட்டில் வரும் சிறுகுளத்தூருடையான் அரையன் பராந்தகனான செம்பியன் சோழியவரையன் என்ற படைத்தளபதி முதலாம் பராந்தகனின் 34 –ம் ஆண்டில் சீட்புலி நாட்டை வென்று நெல்லூரை அழித்து திரும்பி தாயகம் திரும்பும்போது திருவொற்றியூர் கோயிலில் நநதா விளக்கு ஒன்றினை ஏற்றி வைத்துள்ளார் முதலாம் பராந்தகனின் இறுதி காலத்தில் வாழ்ந்திருந்திருந்தாலும்,அதன் பின் 36 ஆண்டுகள் கழித்து உத்தம சோழன் காலத்திலும் வாழ்ந்திருக்கிறான்.(5) மேலும் உத்தம சோழனின் தாயார் செம்பியன் மாதேவியார் பழையாற்று அரண்மணையில் வசித்து வந்தார். உத்தம சோழனின் பிறந்த நட்சத்திரம் விசாகம் ஆகும். எனவே இம்மூன்று செய்திகளின் அடிப்படையில் இக் கல்வெட்டினை உத்தம சோழனுடையதாக கருதலாம்.

3) A.R.E.305/1907-S.I.I. Vol.23 No:305.

இது ஒரு மன்னனின் 13 ம் ஆட்சியாண்டில் பிறப்பிக்கப்பட்ட ஆணையாகும். திருவிடைமருதூர் கோயில் கிழக்கு கோபுரத்திற்கு முன்பு ,மூன்றாம் குலோத்துங்கனின் 16 ம் ஆட்சியாண்டில் ஆணையிடப்பட்டு ,புதிதாக உருவாக்கப்பட்ட இராஜாக்கள் தம்பிரான் திருவீதி மற்றும் தீர்த்தக் குளமும், திருத்தோப்புகளும் ,திருநந்தவனங்களும், செங்கழுநீர் ஓடைகளும் உள்ளிட்ட . திருவிடைமருதூர் உள்ளூரிலும் திருவிடைமருதூர் நகரத்திலும், பிராட்டி நங்கை நல்லூரிலும் உள்ள . திருவிடைமருதூர் கோயில் திருநாமத்துக்காணியாக உள்ள நிலங்களிலிருந்து அரசுக்கு வரவேண்டிய வரிகளை நீக்கி மன்னன் ஆணையிட்டான்.

இக் கல்வெட்டில் வரும் இராஜாக்கள் தம்பிரான் திருவீதி மூன்றாம் குலோத்துங்கனின் 16 ம் ஆட்சியாண்டில் ஆணையிடப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்டதாகும். இக் கல்வெட்டில் 13 ம் ஆட்சியாண்டு குறிக்கப்படுவதாலும் இவ்வாணையில் குறிப்படப்படும் அதிகாரிகள் மூன்றாம் குலோத்துக்கனின் ஆட்சிக்காலத்திலும் அதன் பின் ஆண்ட மூன்றாம் இராஜராஜனின் ஆரம்ப ஆட்சியாண்டிகளிலும் பணி புரிந்துள்ளதாலும் இக்க்ல்வெட்டை மூன்றாம் இராஜராஜனுகுரியதாக கருதலாம்4) A.R.E.307/1907-S.I.I. Vol.23 No:307

திரைமூர் நாட்டு இருமரபுந்தூயபெருமாள் நல்லூரில் உள்ள 2 வேலி நிலத்தை திருவிடைமருதூர் கோயில் 4 ம் பிராகாரத்தில் உள்ள யோகிருந்த பரமேஸ்வரி என்ற தெய்வத்திற்கு வேண்டும் நிவந்தங்களுக்கு தேவதான இறையிலியாக வழங்கி ஆணையிட்டான்.

இவ்வாணையில் குறிப்படப்படும் அதிகாரிகள் மூன்றாம் குலோத்துக்கனின் ஆட்சிக்காலத்திலும் அதன் பின் ஆண்ட மூன்றாம் இராஜராஜனின் ஆரம்ப ஆட்சியாண்டிகளிலும் பணி புரிந்துள்ளனர். இக் கல்வெட்டு மன்னனின் 22 ஆட்சியாண்டைக் குறிப்பிடுவதால் இக்கல்வெட்டை மூன்றாம் குலோத்துக்கனுக்குரியதாக கருதலாம்.

5) A.R.E.309/1907-S.I.I. Vol.23 No:309

சோழமன்னன், அருமொழிதேவ வளநாட்டு இராஜராஜ நல்லூரில் உள்ள திருவிடைமருதூர் கோயிலுக்குரிய திருநாமத்துக்காணி நிலங்களையும், குலோத்துங்க சோழ வளநாட்டு கணவதிஅகரம் உலகமுழுதுடைச்சதுர்வேதி மங்கலத்தில் உள்ள இராஜகம்பீரர் மடத்திற்குரிய மடப்புற இறையிலி நிலங்களையும் மாற்றி திருவிடைமருதூர் கோயில் தேவதான இறையிலியாகவும் அக் கோயிலில் உள்ள சுந்தரமூர்த்தி நாயினாருக்கு (ஆளுடைய நம்பி) அர்ச்சனா போக இறையிலியாகவும் திருஞானசம்பந்தருக்கு ( ஆளுடையப் பிள்ளையார்) அர்ச்சனா போக இறையிலியாகவும் மாற்றி ஆணை பிறப்பித்தான்.

இவ்வாணையில் குறிப்படப்படும் அதிகாரிகள் மூன்றாம் குலோத்துக்கனின் ஆட்சிக்காலத்தில் பணி புரிந்துள்ளமையால் இக்கல்வெட்டு மூன்றாம் குலோத்துக்கனுக்குரியது ஆகும்.அடிக்குறிப்புகள்
1) சோழர்கள்- பாகம்-2 –பக்கம் 634 ---K.A. நீலகண்ட சாஸ்திரி
2) சோழர்கள்- பாகம்-2 –பக்கம் 634 ---K.A. நீலகண்ட சாஸ்திரி
3) S.I.I.Vol.23. No ;288
4) S.I.I.Vol.23. No ;310, S.I.I.Vol.23. No ;305
5) S.I.I VOL. 3 No:108
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.