http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[182 Issues]
[1805 Articles]
Home About US Temples Facebook
Issue No. 182

இதழ் 182
[ மார்ச் 2025 ]


இந்த இதழில்..
In this Issue..

நகரி மாடக்கோயில்
அல்லூர் நக்கன் கோயில்
Indian Museum, Kolkata – A Summary
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் - 4
இம்மைச் செய்தது மறுமைக்கு எனும் அறவிலை வணிகர்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 94 (ஊருக்கும் தனிமை துயரமே)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 93 (காலமென்ற தேரே, ஓடிடாமல் நில்லு!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 92 (உலராப் பாறையன்ன தீராத்துயரம்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 91 (உடைகளும் சுமையடி தனிமையிலே!)
இதழ் எண். 182 > இலக்கியச் சுவை
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் - 4
மு. சுப்புலட்சுமி

ஆசிரியர்: www.glorioustamils.com; www.attraithingal.com
வலையொலி/ podcast- அற்றைத்திங்கள்…. வலையொலியில் தமிழொலி

இராவணன்- நெடுமுடியுடைய அரக்கர் கோமான்!

எண்மரின் ஆணவம் அடக்கிய சிவபெருமானுடைய வீரச்செயலுக்குத் தனிப்பெருமையும், அந்நிகழ்வுகள் அரங்கேறிய வீரட்டானத் தலங்களுக்குப் பெருஞ்சிறப்பும் தந்து வழிபடுவது தமிழர் பத்திமை மரபுகளுள் ஒன்று.

அவர், திருக்கண்டியூரில் பிரம்மனின் முகங்களுள் ஒன்றைக் கொய்து நான்முகனாக்கினார்; திருக்கோவலூரில் அந்தகாசுரனை மிதித்துத் தள்ளி, சூலம் பாய்ச்சிக் கொன்றார்; திருவதிகையில் திரிபுராந்தகர்களைப் போரில் வென்று முப்புரங்களையும் எரித்தார்; திருப்பறியலூரில் தட்சனின் தலையைக் கொய்தழித்தார்; திருவிற்குடியில் சலந்தரன் தலைவெடித்துச் சிதறச் செய்தார்; திருவழுவூரில் தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய யானையைக் கொன்றும் தோலுரித்தும், குருதி தோய்ந்த ஈரமுலராத அத்தோல் போர்த்தாடினார்; திருக்குறுக்கையில் காமனைச் சாம்பலாக்கினார்; திருக்கடவூரில் வெகுண்டெழுந்து, காலனை உதைத்துச் சாய்த்தார்.

செருக்கைப் பொறாத கடுஞ்சினமும் செருக்குற்றோரை அழிக்கும் பேராற்றலும் கொண்ட இறைவனின் இவ்வடிவங்களுக்கு நாயன்மார் சொல்லுருவம் தர, அதனைக் கல்லுருவாகச் சிற்பக் கலைஞர்கள் மெருகேற்றிப் படைத்தனர். பதிகங்களைப் பாடிப் பரவுவோர் குறைந்துவரும் இன்றைய சூழலில், பதிகங்களையொற்றிச் செதுக்கப்பட்ட சிவனாரின் உளியோவியங்களால் இன்றுவரை நிலைத்துநிற்கிறது அவருடைய ஆற்றலின் பேரொளி.

சிவனுடைய கோபத்துக்காளாகி மாய்ந்தோருக்கிடையில், இறைவனின் கயிலை மலையை அசைத்துப் பார்த்த இராவணனுக்குக் கிடைத்ததோ பேரின்பமிகு இறையருளென்றால் அது வியப்பான ஒன்றுதானே? தம்மிருப்பிடமான கயிலையில் உமையுடன் சிவன் அமர்ந்திருக்க, அம்மலையசைத்து உமையை நடுங்கச் செய்த இலங்கை மன்னன் இராவணனை, சிறிதே துன்பப்படவைத்துப் பெரிதாக அருளிய தனிப்பெருஞ்செயல், அப்பரைப் பெரிதும் பாதித்திருக்கவேண்டும். அதனால்தான், இராவணன் வாழ்வோடு தொடர்புடைய சைவச்சிறப்பு நிகழ்வுகளைத் திருநாவுக்கரசர் தம் பாடல்களில் வழங்கியுள்ளதைப்போல் வேறெந்த நாயன்மாரும் அளிக்கவில்லை.

கயிலை மலையை எடுக்க முயன்ற இராவணன் செயலைத் தமிழிலக்கியங்களில் முதன்முதலில் உரைப்பது கலித்தொகையே.

இமைய வில்வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமையமர்ந்து உயர்மலை இருந்தனன் ஆக,
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையின் கீழ்புகுத்து, அம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் உழப்பவன் போல (1-5)

(கபிலர், குறிஞ்சிக்கலி, கலித்தொகை 38)

மேருவை வில்லாகவும் கங்கையைத் தலைமுடியிலும் வைத்த சிவபெருமான், உமையுடன் உயர்ந்த மலையில் அமர்ந்திருக்க, தலைகள் பத்துடைய அரக்கர் கோமான் பொலிவுடைய வளையணிந்த பெரிய கையை, மலையின்கீழ்ப் புகுத்தி எடுக்கமுயன்று முடியாமல் போராடியதாகச் சொல்கிறார் கபிலர்.


இராவணன், முக்தேசுவரம்

“இராவணன் யார், அவர் ஏன் கயிலைமலையை அகற்ற முயன்றார், அம்முயற்சியின் விளைவுகள் எப்படியிருந்தன என்ற கேள்விகளுக்கெல்லாம் கலித்தொகையில் விடையில்லை. தேவாரமூவரில் காலத்தால் மூத்த அப்பர் பெருமானும் சம்பந்தருமே தங்கள் பதிகங்களில் இவ்வினாக்களுக்கான விரிவான விளக்கங்களைத் தருகின்றனர். என்றாலும், சம்பந்தரினும் அப்பர் பெருந்தகையே கயிலை அசைத்த இராவண வாழ்க்கையைப் படக்காட்சிகளெனப் புலப்படுத்தி மகிழ்கிறார்” என்ற டாக்டர் இரா. கலைக்கோவனின் கட்டுரை வரிகள் (டாக்டர் இரா. கலைக்கோவன், இராவணப் பதிவுகள்), அப்பர் குறிக்கும் இராவணனைத் தேடிச் செல்ல வைத்தன.

சொல்ல வருவனவற்றைக் கோவையாக, முறையாக வரிசைப்படுத்தி, தெளிவாகக் குறிப்பெடுக்கும் வண்ணம் தம் பதிகங்களை அருளுவது அப்பருடைய தனிச்சிறப்பு. இந்தத் தெளிவான சுட்டலே நம் தேடலை எளிதாக்கிவிடுகிறது. சிவனின் வீரச்செயல்களையும் திருவுரு வடிவங்களையும் ஆங்காங்கே தெளித்துச் சென்றாலும், திருவாரூர் திருப்பதிகத்தில் (6.034) இறைவனின் பல்வேறு திருச்செயல்களை வரிசையாக அளிக்கிறார் அவர்.

காலனைக் காய்ந்ததும், காமனைக் கண்ணழலால் விழித்ததும், அலைகடல் நஞ்சுண்டதும், சிலையால் (வில்) முப்புரமெரித்ததும், பார்த்தனது பலத்தைக் காண வேடனாய் வில்வாங்கி எய்ததும், தில்லையம்பலத்தே கூத்தாடியதும், தக்கன் பெருவேள்வி தகர்த்ததும், நீர்த்தாமரையானும் நெடுமாலும் ஏத்தியதும், தாருகாவனத்து முனிவர் மயக்கந்தீர்த்து அருள்செய்ததும், பிரமன் தலைகையேந்திப் பிச்சையேற்றுண்டுழன்றதும், வாசுகியால் வெளிப்பட்ட விடத்தை உண்டதும், சலந்தரனைக் கொன்றதும், பாதத்தால் முயலகனைப் பாதுகாத்து வைத்ததும், இராவணனின் வலிமையை அழித்ததும், மதயானையுரிபோர்த்து மகிழ்ந்ததும், மலர்மாலையைச் சண்டிக்குக் கொடுத்ததும்… அப்பப்பா! இந்த ஒற்றைப் பதிகத்தைப் படிக்கப் படிக்கச் சிவபெருமானின் எழில்நிறை எழுச்சிமிகு பேருரு படிப்போர் கண்முன் எழுந்துவிடும். ‘இத்தனைச் செயல்களால் தேசமுன்னை அறிவதற்கு முன்னோ பின்னோ நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்?,’ என்று இறைவனிடம் குழைவுடன் வினவுகிறார் அப்பர்.

இப்படி, அப்பர் பதிகங்களில் இறைவனால் அடக்கப்பெற்றோரும் அருளப்பெற்றோரும் இடம்பெற்றாலும், இராவணனுடைய சிறப்பிடத்தை வேறெவரும் பெறவில்லை. சிவனின் பெருமையை நாட்டுமக்கள் அறிவதே பதிகங்களின் தலையாய நோக்கம். அப்படியிருக்க, இராவணனின் பெருவலியைப் பெரிதாகப் போற்றிப் பாராட்டி, அத்தகையோனைக் கால்விரலால் அடக்கிய இறைவன் என்று இறையாற்றலைக் குறிக்கிறார் நாவுக்கரசர். இராவணன் என்ற ஆளுமையின்பால் அப்பரின் ஈர்ப்பு நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.

நான்காம் திருமுறையின் திருக்கயிலாயம் (4.047) மற்றும் திருமறைக்காட்டுப் பதிகங்களின் (4.034) பாடல் ஒவ்வொன்றும், இராவணன் கயிலைமலையை எடுக்கமுயன்ற கலித்தொகைச் செய்தியைத் திரும்பத் திரும்ப இயம்புகின்றன. அதுபோக, ஏனைய பதிகங்களின் இறுதிப் பாடலை இராவணனுக்காய் ஒதுக்கியிருக்கும் அப்பர், தென்னிலங்கை மன்னன் சார்ந்த குறுங்காட்சிகளை அவற்றில் படைத்தளிக்கிறார். அக்குறுங்காட்சிகளை இணைத்துப் பார்க்கையில், சுருங்கக் கண்ட கலித்தொகைச் செய்தி மெள்ள மெள்ள விரிய, இராவணன் குறித்த பற்பலச் செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன.

இராவணக் காட்சியில் அப்பரைப் பாதித்த மற்றொன்று, உமையின் அச்சம். திருக்கயிலாயப் பதிகத்தில், கயிலையைப் பெயர்க்கமுயலும் இராவணனின் செயலால் உமையாளஞ்ச, அரிவைதானஞ்ச, மங்கையஞ்ச, மங்கை வெருவ, நேரிழையஞ்ச, ஏந்திழையஞ்ச, சேயிழையஞ்ச என்று பலவாறாகக் குறிக்கிறார்.

சிவனாருக்கும் இராவணனைச் சினத்துடன் பின்னெழாது அழிக்கும் வேகமோ நோக்கமோ இருந்ததாகத் தெரியவில்லை. அதையும் அப்பரே நமக்குரைக்கிறார். திருக்கயிலாயப் பதிகத்தின் இரண்டு பாடல்களில், கண்சிவந்து கயிலையைக் கையால் அவனெடுக்க, உமையஞ்ச, வானவரிறைவனோ சிறிதே நகைக்கிறார்; கைநொடிப்பொழுதில் விரலையூன்றியழுத்துகிறார்; பெரியமலைபோல் இராவணன் வீழ்கிறான். போகிறபோக்கில் மலையசைத்து ஆணவம் காட்டியமைக்கு, இறைவன் குறுநகைபுரிந்தது வேறுபட்ட உணர்வல்லவா? சிறுநகையோடு நிற்கவில்லை சிவன். பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும், இன்னும் அழுத்தமாக அவர் ஊன்றியிருந்தால், இராவணன் மீண்டும் கண்விழித்திருக்கவே இயன்றிராது (‘மறித்திறை யூன்றினானேன் மறித்துநோக் கில்லையன்றே’) என்கிறார் வாகீசர்.

தண்டிப்பதென்று முடிவாகிவிட்டது; பரந்த தோள்களும் பத்துத் தலைகளும் நெரிய வாய்விட்டலறி அவன் வீழ்ந்திட, கால்விரலையும் அழுத்தியாகிவிட்டது; ஆயினும், நிலைதடுமாறி அலறிவிழுபவன் மீண்டும் எழும்வகையில் அழுத்தியது ஏனோ? அரக்கர் கோமான் என்று அப்பர் சிறப்புடன் விளிக்கும் இராவணன், அழிவே தண்டனையாகப் பெற்ற பிற அசுரர்களுடன் ஒப்புநோக்கக்கூடியவர் அல்லர் என்பதையுணர்த்தவே எதிர்வினையாற்றிய இறைவனும், அதையுணர்ந்து பதிகம்பாடிய நாவுக்கரசரும் இராவணனை நீடுபுகழ் விளங்கச் செய்திருக்கிறார்கள்போலும்.


இராவணன், மதங்கீசுவரம்

அரக்கர் கோமான்

பதிகங்களின் இறுதிப்பாடலை இராவணனுக்கென்று தந்து, கயிலை மலையசைத்ததற்கு முன்னும் பின்னும் நடந்த நிகழ்வுகளை உலகறியச் செய்கிறார் அப்பர். சுருக்கமான அறிமுகமாக ‘அரக்கன்’ என்று முதலில் அழைப்பவர் (அரக்கனாற்ற லழித்தவன்), அடுத்தநிலையில் ‘அரக்கனார்’ என்று குறிப்பிடுகிறார் (அரக்கனார்தலை பத்துமழிதர); சற்று நேரத்திற்கெல்லாம், ‘முடியுடை அரக்கர் கோன்’ என்றும் ‘வேந்தன் நெடுமுடியுடைய அரக்கர் கோமான்’ என்றும் சிறப்புப் பெயர்களைத் தந்துவிடுகிறார். இப்பெயர்க் குறிப்புகளோடு நின்றுவிடவில்லை நாவுக்கரசர்.

'ஆரையும் தனக்கு மேலுணராத ஆண்மையான்’, ‘ஆண்மையான் மிக்க அரக்கன்’, என்று இராவணன் செருக்கைச் சொல்லி வலிமையை மெச்சுவதையும் காணமுடிகிறது. தன் தேரைச் செலுத்துகையில் கயிலைமலை ‘தடுக்கவுந் தாங்க வொண்ணாத் தன்வலியுடையனாகி’, “இது என்ன பண்டம்? கையிருபதுகளாலும் எடுப்பேன்யான்,” என்று கேட்பதாகக் காட்சியை மேலும் சுவைபட விளக்குகிறார்.

புட்பகத் தேருடையான்

‘புட்பகத் தேருடையானை யடரவூன்றி ஒறுத்துகந்தருள்கள் செய்தார் ஒற்றியூருடைய கோவே’ (4.45.10), என்று இராவணன் புட்பகத் தேருடையான் என்று அறிமுகப்படுத்துகிறார். அவனுக்குப் புட்பகத்தேர் கிட்டியது எப்படி என்பது அடுத்து எழக்கூடிய வினா. ‘பொருண்மன்னனைப் பற்றிப் புட்பகங்கொண்ட மருண்மன்னன்’ (4.17.11) என்று விடையுமளிக்கிறார். பொருள் மன்னனான குபேரனைப் பிடித்துக் கைப்பற்றிய புட்பகத்தேர் அது.

இந்த இரு பாடல்களுள் சிவபெருமான், ஒன்றில் தேருடைய இராவணனைக் காலையூன்றித் தண்டித்து, பின் உகந்தருள் செய்கிறார்; மற்றொன்றில், வருத்தியபின் வாளையீந்து அருள்மன்னுகிறார்.

கயிலைக் காட்சி

கடுகிய தேர்செலாது கயிலாயமீது கருதேலுன்வீர மொழிநீ
முடுகுவ தன்றுதன்ம மெனநின்றுபாகன் மொழிவானைநன்று முனியா
விடுவிடு வென்றுசென்று விரைவுற்றரக்கன் வரையுற்றெடுக்க முடிதோள்
நெடுநெடு விற்றுவீழ விரலுற்றபாத நினைவுற்றதென்றன் மனனே (4.14.11)

இங்கு, கயிலைக் காட்சி கைசொடுக்கும் நேரத்துள் நடந்தேறுவதுபோலப் பாடலமைக்கிறார் அப்பர். விரைந்து செல்லும் தேர், கயிலை மலைமீது செல்லாதென்று எடுத்துரைக்கும் தேர்ப்பாகனின் மொழிகேளாமல் இராவணன், ‘விடுவிடுவென்று சென்று’ மலையைப் பெயர்க்க, இறைவன் விரலூன்ற, ‘முடிதோள்கள் நெடுநெடுவென’ இற்றுவீழ்ந்தனவாம்.

இறைவன் தன் கால்விரலையழுத்த, மலையைத் தூக்கமுயன்ற தோளாற்றலும் வாளாற்றலுமுடைய அரக்கனின் கைகள் நெரிந்தன; கண்களில் நீர்த்துளிகள் பொடிக்க அவன் துடிதுடித்தான் (5.032.10). தன் மார்பில் பால்வெண்ணீற்றுச் சாந்தணிந்த சிவபெருமான், வாளரக்கனின் கண்ணில் குருதிவழியச் செஞ்சாந்தணிவித்தமையும் குறிக்கப்படுகிறது (4.019.11).

மற்றுமொரு பாடலில், மூர்த்திதன் மலையின்மீது தேர் செல்லாதென்று சொன்ன தேரோட்டியை வெகுண்டுநோக்கிய இராவணன், தேரிலிருந்து பூமியில் குதித்து கயிலையைப் பெயர்க்கமுயன்று ஆரவாரம் செய்தபோது, தலைகள் பத்தையும் விரலால் இறைவன் நசுக்கிட, வருந்திய அவன் ‘தேத்தெத்தாவென’ இசைபாட (4.32.10) அதை அவர் கேட்டு மகிழ்ந்தாராம்.

வாளரக்கன் - இசையும் பரிசாகப் பெற்ற வாளும்

கயிலைமலை அவனை நெருக்குமாறு தம் திருவிரலை அழுத்திய ஈசன், வலிமையான தோள்களுடைய வாளரக்கனைத் தண்டித்து ஒடுக்குகிறார். வலியால் துடித்தலறியவன், இறைவனின் இசைநாட்டத்தைப் புரிந்துகொண்டு தன் கை நரம்புகளையே வீணை இழைகளாகக் கொண்டு இருக்கு வேதத்துடன் இசைப்பாடல்களும் இசைத்திட, அவரும் பெருவிருப்புடன் திளைத்திருந்தார் (புரிந்து கைந்நரம்போடிசை பாடலும் பரிந்தனைப் பணிவார் வினை பாறுமே- 5.34.10).

அடுத்த காட்சியாக நாவுக்கரசர் காட்டுவது, இராவணன் வாள் பெறும் நிகழ்வை. அங்கும், மின்னல் போன்ற ஒளிவீசும் வெண்பற்களையுடைய இராவணன் என்று உவமைகொண்டு அவனைப் போற்றாமல் அவர் தொடர்வாரில்லை.

……………………… மீண் டவன்றன் வாயில்
இன்னிசைகேட் டிலங்கொளிவா ளீந்தோன் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே (6.065.10)

விரலால் மலையை அழுத்தியதன்பின், அவன் வாயால் பாடிய இன்னிசை கேட்டு, ஒளிபொருந்திய வாளினை ஈந்தான் கச்சி ஏகம்பன். அந்த வாள் எப்படிப்பட்டது? ‘கூன்றிகழ் வாளரக்கன்’ என்று சுட்டுகிறார் அப்பர். சிவனிடமிருந்து இராவணன் பெற்றது வளைந்த வடிவிலான வாளாம்.

இராவணன் என்று பெயர் சூட்டல்

பராபரனென் பதுதமது பேராக் கொண்டார்
பருப்பதங் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி
இராவணனென் றவனைப்பேர் இயம்பக் கொண்டார் (6.96.11)

பராபரன் என்பதைத் தம்பெயராகக் கொண்டவரும், மேருமலையை வில்லாகக் கொண்டவருமான சிவனார், பலவாறாக அச்சமேற்படுத்தி அரக்கர் கோனை அலறச் செய்தார். பலத்த குரலெலுப்பி அலறுபவனுக்கு வடமொழியில் ‘இராவணன்’ என்று பெயர். இதைக்கொண்டே, ‘பயங்கள் பண்ணி இராவணன் என்று அவன் பெயர் பெறுமாறு செய்தார்’, என்று அப்பர் தெளிவுபடுத்துகிறார்.

தம்மை ஈர்த்த இராவணனெனும் ஆளுமையையும் அவன் வாழ்வின் சைவப்பெருநிகழ்வையும் சொற்களால் விரிவாகக் காட்சிப்படுத்திய அப்பர், வாளரக்கனின் சிவனருளால் தாம் கற்றுக்கொண்டதைப் பகிரவும் தவறவில்லை.

இறவாமே வரம்பெற்றே னென்று மிக்க
இராவணனை யிருபதுதோள் நெரிய வூன்றி
உறவாகி யின்னிசைகேட் டிரங்கி மீண்டே
யுற்றபிணி தவிர்த்தருள வல்லான் தன்னை (6.20.10)

சாகாவரம் பெற்றதனால் செருக்குற்ற இராவணனின் தோள்கள் இருபதும் நொறுங்குமாறு திருவடி விரலால் ஊன்றிய இறைவன், பின்னர் அவன் ஆணவம் தணிந்து உறவாகி வழங்கிய ‘இன்னிசை கேட்டிரங்கி அவனுற்ற பிணி தவிர்த்தருள வல்லான்’, என்கிறார். பெருந்தவறிழைத்தபோதும், செய்த தவறுணர்ந்து திருந்துவோரையும், இசையால் அவனைத் துதிப்போரையும் காக்கும் தன்மையுடையவர் சிவபெருமான் என்பதை உலகோரறியச் செய்கிறார் அவர்.

இறைவனையே சீண்டி, பின் அருளப்பெற்று நாவுக்கரசர் மனதில் சிறப்பிடம் பிடித்த இராவணன், அவருடைய பாடல்களின் தாக்கத்தால் தமிழகக் கோயில்களிலும் பெரியதோரிடம் பெற்றுவிடுகிறார்.

ஏழாம் நூற்றாண்டுத் தமிழகப் பத்திமையரங்கில், இராவணன் என்ற வல்லோனின் சிவத்தொடர்பை விளக்கிய அப்பரின் அறிமுகத்தால்தான் இன்றும் இராவணக் காட்சி தொடர்ந்து பேசப்பட்டுவருகிறது. அவர் பாடல்கள் வெளிப்படுத்திய இராவணனின் கயிலைக் காட்சியும் இறைவனின் அருட்செயலும் அன்றைய மக்கள் மனதில் பதிந்ததோடு, தமிழகத்தைத் தொடர்ந்தாண்ட மன்னர்களையும் கவர்ந்தது.

வாகீசரால் சைவந்தழுவிய மகேந்திரவர்மர், கோயில் கட்டடக்கலையில் புதுமைகள் படைத்தார்; இரண்டாம் நரசிம்மரான இராஜசிம்மரோ, அப்பர் காட்டிய இராவணனுக்குக் கோயில்களில் நிலைபெற்று விளங்கும் அழகுருவை அளித்தார். இராஜசிம்மரின் காஞ்சிக் கற்றளிகளான கயிலாசநாதர், முக்தேசுவரம், மதங்கீசுவரம் ஆகியவற்றில், கயிலையில் உமையுடன் அமர்ந்துள்ள இறைவன், மலையை அசைக்கமுயலும் பத்துத்தலைகளுடைய இராவணனைத் தன் கால்விரலையழுத்தி அடக்கும் காட்சி சுவைபட அமைக்கப்பட்டுள்ளது. சிவனையும் உமையையும் காட்டிலும் கண்கவர் பேருருவாக இராவணன் வடிக்கப்பட்டிருப்பது அக்காட்சியின் வீச்சை நமக்குணர்த்தும். இந்நிகழ்வின் நீட்சியான, நரம்பை வீணையிழையாக்கி இசைக்கும் இராவணச் சிற்பத்தை முக்தேசுவரம் காட்டுகிறது.

தம் தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஓவியங்களில் இடம்பெறுமாறு பேரரசர் இராஜராஜர் தேர்ந்தெடுத்த இறைச்செயல்களுள் இராவணனுக்கு அருளலும் இடம்பெற்றுள்ளமை, நூற்றாண்டுகள் கடந்தும் கவர்ந்திழுத்த அக்காட்சியின் தன்மையை உணர்த்தும். கடல்கடந்த கம்போடியாவில், ஆடவல்லானின் அடிக்கீழிருக்குமாறு அமைக்கப்பெற்ற காரைக்கால் அம்மையின் சிற்பம் அமைந்துள்ள ‘பந்தாய் சிரி’ கோயிலிலும், மனதை மயக்கும் இராவணக்காட்சி வடிக்கப்பட்டிருப்பது இங்கு கூடுதல் செய்தி.


இராவணன், பந்தாய் சிரி, கம்போடியா

முன்னரே கூறியதுபோல, பதிகங்களையொற்றிச் செதுக்கப்பட்ட சிவனாரின் உளியோவியங்களால் இன்றுவரை நிலைத்துநிற்கிறது அவருடைய ஆற்றலின் பேரொளி.

ஆயிரமாயிரமாண்டுகள் கழித்தும் கண்விரிய வியப்பிலாழ்த்தும் ‘இராவணனுக்கருளியமூர்த்தி’யின் சிற்பவடிவை உருவாக்கி, சிவனருள் பெற்ற இராவணனுக்குத் தமிழ்மண்ணில் நிலைபேறு வழங்கிய பெருமை இராஜசிம்மருக்கெனில், இத்தனைச் செய்திகளைத் தம் பதிகங்களில் வழங்கி அவரையூக்கிய தனிப்பெருமை அப்பருடையது.

நன்றி: டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், திருச்சிராப்பள்ளி.

துணைநூல்கள்

1. டாக்டர் இரா. கலைக்கோவன், இராவணப் பதிவுகள்
2. திருநாவுக்கரசர் தேவாரம், திருமுறைகள் 4,5,6
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.