http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 17

இதழ் 17
[ நவம்பர் 16 - டிசம்பர் 15 ]


இந்த இதழில்..
In this Issue..

கருத்தரங்குகள் - சில கருத்துக்கள்
பழுவூர் - 6
சிற்பக்கலை ஆய்வு - ஓர் அறிமுகம்
கல்வெட்டாய்வு - 12
ஸ்ரீநிவாச நல்லூர் பயணம் - 3
தக்கோலம் ஜலநாதீஸ்வரம்
Gopalakrishna Bharathi-3
சங்கச் சிந்தனைகள் - 5
இதழ் எண். 17 > கலையும் ஆய்வும்
கல்வெட்டாய்வு - 12
மா. இலாவண்யா
வீரசோழன் செல்லூர் என்னும் இடத்தில் இருந்த விஷ்ணு ஆலயத்திற்கு அளித்த கொடையைப் பற்றிக் குறிப்பிடும் "செல்லூர் செப்பேடு" என்று அழைக்கப்படும் செப்பேடு சர். எல்லியட் அவர்களின் சேகரிப்பாக பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது. இச்செப்பேட்டில் கீழை சாளுக்கியர்களின் வம்சாவளி கொடுக்கப்பட்டிருப்பதை சென்ற இதழில் பார்த்தோம். பல செப்பேடுகளில் கீழை சாளுக்கியர்களின் வம்சாவளி குறிக்கப்பட்டிருப்பினும், இச்செப்பேடு தனித்துவம் வாய்ந்தது. கீழை சாளுக்கியர்களின் வம்சாவளியுடன், முக்கியமாக கீழை சாளுக்கியர்களுக்கும் சோழர்களுக்குமிடையே இருந்த திருமண உறவைப் பற்றிய செய்தி இச்செப்பேட்டில் இடம்பெற்றுள்ளது. இதனை ஆராய்வது மூலம், சோழ வரலாற்றில் மன்னர்களின் காலங்களைப் பற்றிய குழப்பங்களில் ஒரு தெளிவு பிறந்தது.

இச்செப்பேட்டின் முதல் பாகம் முழுவதும் கீழை சாளுக்கியர்களின் இதிகாச அல்லது புராண வம்சாவளியைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இரண்டாம் பாகம் விஜயாதியன் I முதல் கீர்த்திவர்மன் வரையிலான முற்கால சாளுக்கிய மன்னர்கள் ஐவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. மூன்றாம் பாகம் விஷ்ணுவர்த்தனன் முதல் விமலாதித்யன் வரையிலான வேங்கியை ஆண்ட கீழை சாளுக்கிய மன்னர்களின் பெயர்களையும் அவர்கள் ஆண்ட காலம் மற்றும் உறவுமுறையைப் பற்றியும் குறிப்பிடுகிறது. இதில் விமலாதித்யன் ஏழு வருடங்கள் ஆட்சியில் இருந்ததைக் குறிப்பிடும் செப்பேடு, விமலாதித்யன் இராஜராஜத் தேவரின் மகளான குந்தவையை மணந்த செய்தி இடம்பெறவில்லை. இச்செய்தி முதலாம் இராஜராஜ சோழர் கொடுத்த கொடை ஒன்றில் குறிப்பிடப்படுகிறது.

இச்செப்பேட்டின் நான்காம் பாகமே கீழை சாளுக்கியர்கள் கொண்டிருந்த சோழர்களுடனான உறவுமுறையைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. விமலாதித்யனை அடுத்து கி.பி.1021ல் முடிசூடப்பட்டு, 41 ஆண்டுகள் ஆட்சி புரிந்த அவர் மகன் இராஜராஜன் I (சாளுக்கியன்), இராஜேந்திர சோழரின் மகளான அம்மங்கா தேவியை மணம்புரிந்தான். அவர்கள் இருவருக்கும் பிறந்த மகன் இராஜேந்திர சோழன், இராஜநாராயணன் என்னும் பெயர் கொண்ட குலோத்துங்க தேவன். குலோத்துங்கன் முதலில் வேங்கியின் மன்னாக முடிசூடிக்கொண்டு, கேரளம், பாண்டிய நாடு முதலிய நாடுகளைக் கைப் பற்றினான். அதன் பிறகு அவன் சோழநாட்டின் மன்னனாக்கப்பட்டான். அவன் சோழர் குலத்தில் வந்த இராஜேந்திர சோழன் என்பவனின் மகளான மதுராந்தகியை மணந்தான். இந்த இராஜேந்திரன், முதலாம் இராஜராஜர் மகனான இராஜேந்திர சோழனுக்குப் பின் வந்த அதிராஜேந்திரன் அல்லது வீர இராஜேந்திரனாக இருக்கலாம். குலோத்துங்கனுக்கும் மதுராந்தகிக்கும் ஏழு மகன்கள் பிறந்தனர். குலோத்துங்கன் சோழ நாட்டின் மன்னாக முடிசூடிக்கொண்ட பொழுது, வேங்கி நாட்டின் ஆட்சியை தனது சிறிய தந்தையான விஜயாதித்யனிடம் ஒப்படைத்தான். விஜயாதித்யன் 15 ஆண்டுகள் ஆட்சி புரிந்து இறந்த பின்னர், குலோத்துங்கனின் மகன் இராஜராஜன் (II) வேங்கியின் அரசனானான். இராஜராஜன் II ஒரு வருடம் வேங்கியை ஆண்டு திரும்பியவுடன், அவனின் தம்பி வீரசோழனிடம் அவ்வாட்சி ஒப்படைக்கப்பட்டது. வீரசோழன் ஜனநாதநகரம் என்ற இடத்தில் கி.பி.1078ம் ஆண்டு வேங்கி நாட்டின் மன்னனாக முடிசூடப்பட்டான். சாளுக்கிய இராஜராஜன் I முடிசூடிக்கொண்ட 1021க்கும் 1078க்கும் நடுவில் சரியாக 57 வருடங்கள் இருக்கின்றன. இது இராஜராஜனின் 41 ஆண்டுகள், விஜயாதித்யனின் 15 ஆண்டுகள் மற்றும் சாளுக்கிய இரண்டாம் இராஜராஜனின் ஓராண்டு ஆட்சியைக் கூட்டினால் வரும் வருடங்கள் 57 உடன் சரியாக பொருந்துகிறது. இதனால் குலோத்துங்க தேவன், தான் வேங்கியின் அரசாட்சியைப் பெற்ற உடனே அதை தனது சிறிய தந்தை விஜயாதித்யனிடம் ஒப்படைத்திருக்க வேண்டும்.

இச்செப்பேட்டினையும் மற்ற செப்பேடுகள் மற்றும் கல்வெட்டிலிருந்து கிடைத்துள்ள தகவல்களையும் இணைத்துப் பார்த்து, சோழ வரலாற்றின் ஒரு பகுதியைப் பற்றிய செய்தி தெளிவாகப் புலப்படுகிறது. முதலாம் இராஜராஜ சோழனின் கொடையைப் பற்றிக் குறிப்பிடும் "லெய்டன் செப்பேடு" என்று வழங்கப்படும் செப்பேடும், மற்றும் சில கல்வெட்டுகளும் மூன்று சோழ மன்னர்களும் அவர்கள் காலத்தில் மேலை சாளுக்கிய மன்னர்களாக இருந்த மூவருக்கும் இடையில் இருந்த பகைமையை சுட்டுகின்றது.

1. இராஜராஜ தேவன், சத்யாஸ்ரயன் என்ற மன்னனை போரில் வெற்றிகொண்டதை லெய்டன் செப்பேடு குறிப்பிடுகின்றது. இந்த சத்யாஸ்ரயன் மேலை சாளுக்கிய மன்னன் சத்யாஸ்ரயன் II (கி.பி.990-1007) ஆக இருக்கலாம். இதிலிருக்கும் இராஜராஜன் சோழ மன்னனான முதலாம் இராஜராஜனாகக் கொள்ளலாம். முதலாம் இராஜராஜ சோழனின் மகளான குந்தவை கி.பி. 1014/5 முதல் 1021 வரை கீழை சாளுக்கிய நாட்டை ஆட்சி புரிந்த மன்னனான விமலாதித்யனை மணந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது.

2. இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தி அவன் ஜயசிம்மன் என்ற மன்னனை வெற்றிகொண்டதைக் குறிப்பிடுகிறது. இது அவனின் ஏழாம் ஆட்சியாண்டு வரை இருக்கும் கல்வெட்டுகளில் இடம்பெறவில்லை. ஆகையால் இராஜேந்திர சோழனின் 7-8ம் ஆட்சியாண்டில் அவன் ஜயசிம்மனுடன் போர் புரிந்து வெற்றி கொண்டிருக்கலாம். இந்த ஜயசிம்மன், "இராஜேந்திர சோழன் என்ற யானையின் முன்னே தான் ஒரு சிங்கம்" என்று ஒரு கல்வெட்டில் தன்னைப் பற்றிக் குறித்துக் கொண்ட மேலை சாளுக்கிய மன்னன் ஜயசிம்மன் III (கி.பி.1017-1041). இந்த இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்காதேவி கி.பி. 1022 முதல் 1061 வரை ஆட்சி புரிந்த கீழை சாளுக்கிய மன்னனான முதலாம் இராஜராஜனை மணந்தாள்.

3. விரிஞ்சிபுரம் என்னுமிடத்தில் உள்ள துண்டுக்கல்வெட்டொன்றும், மாமல்லபுரத்தில் உள்ள கல்வெட்டொன்றும், இராஜேந்திர தேவன் என்னும் சோழ மன்னன் ஆஹவமல்லன் என்னும் அரசனை வெற்றிகொண்டதைக் குறிப்பிடுகிறது. இந்த ஆஹவமல்லன், இரண்டாம் ஆஹவமல்லன் மற்றும் முதலாம் சோமேச்வரன் (கி.பி.1041-1067) என்ற பெயர் கொண்ட மேலை சாளுக்கிய மன்னனாக இருக்கலாம். இந்த மன்னனின் சில கல்வெட்டுகள் இவன் சோழர்களுடன் கொண்டிருந்த பகைமையை சுட்டுகின்றது. இந்த இராஜேந்திர தேவன், கி.பி.1062 முதல் 1111 முதல் ஆட்சி புரிந்த கீழை சாளுக்கிய மன்னனை மணம் புரிந்த மதுராந்தகியின் தந்தையான இராஜேந்திர தேவனாகக் கொள்ளலாம்.

இப்படியாக பல கல்வெட்டுகளில் உள்ள செய்திகளையும் ஆராய்ந்து, ஆய்வாளர்கள் மன்னர்கள் ஆண்ட காலத்தை உறுதிபடுத்திக் கூறுகிறார்கள். இப்படித்தான் முதலாம் இராஜராஜ சோழன் கி.பி.985 முதல் கி.பி.1014 வரை அரசாண்டான் என்ற செய்தியும், இராஜேந்திரன் மற்றும் பல மன்னர்களின் ஆட்சியாண்டுகளும் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

சரி மன்னர்களை விடுத்து கல்வெட்டில் இடம்பெற்றுள்ள சமூகம் பற்றிய செய்தி ஒன்றினை இப்பொழுது பார்க்கலாம்.

விரிஞ்சிபுரம் என்னும் இடத்தில் உள்ள கோயிலொன்றில் உள்ள கிரந்தம் மற்றும் தமிழ் எழுத்துகள் கலந்த கல்வெட்டு பின்வருமாறு.


1. ஸுபமஸ்து
2. ஸ்வஸ்தி ஸ்ரீமன்மஹா இராஜாதிராஜபரமேஸ்வரான ஸ்ரீ[வீ]ரபிரதாப தேவராய மஹாராஜ பிரு
3. த்விராஜ்யம் பண்ணி அருளானின்ற ஸகாப்தம் (1347*)ன் மெல்செல்லானி[ன்]ற விஸ்வாவஸு
4. வருஷம் பங்குனி மீ 3* நாள்* ஷஷ்டியு[ம்] புதன் கிழமையும் பெற்ற அநிழத்து நாள் படைவிட்டு இராஜ்யத்து
5. அஸெஷவித்யமஹாஜநங்களும் அக்கபுஷ்கரணி கோபிநாதஸந்நிதியி[லே]
6. தம்மஸ்தாபநஸமயபத்ரம் பண்ணி குடுத்தபடி இற்றை நாள் முதலாக இந்த
7. ப்படைவீட்டு ராஜ்யத்து பிராமணரில் கன்ன[டி]கர் தமிழிர் தெலுங்கர் இலாளர் முதலா
8. ன அஸெஷகொத்ரத்து அஸெஷஸூத்ரத்தில் அஸெஷஸா[¨]கயிலவர்களும் விவாஹம் பண்
9. ணுமிடத்து கந்யாதாநமாக விவாஹம் பண்ணக்கடவராகவும் | கந்யாதாநம் பண்ணாமல்
10. பொன் வாங்கிப்பெண் குடுத்தால் பொன் குடுத்து விவாஹம் பண்ணினால் இராஜதண்டத்துக்கும் உட்பட்டு
11. பிராஹ்மண்யத்துக்கும் புறம்பாகக்கடவாரென்[று] பண்ணி[ந] தம்மஸ்தாபனஸமயபத்ரம் || இப்படிக்கு அஸெஷவித்யம
12. ஹாஜநங்கள் எழுத்து ||


* வருடம் மற்றும் நாள் தமிழ் எழுத்துகளிலும், நாள் என்ற குறியீடு கொண்டும் குறிக்கப்பட்டிருக்கிறது.

கல்வெட்டுக் காலம்: சக வருஷம் 1348 அதாவது கி.பி.1426ம் வருடம். விஜயநகர மன்னன் வீரபிரதாப தேவராய மஹாராஜன் ஆட்சிபுரிந்த காலம்.

கல்வெட்டு செய்தி: விஜயநகர மன்னன் வீரபிரதாப தேவராய மஹாராஜன் ஆட்சிபுரிந்து கொண்டிருக்கும் ஸகாப்தம் 1347ம் வருடத்திற்கு அடுத்து வரும் விஸ்வாவஸு வருடம் பங்குனி மாதம் ஷஷ்டியும் புதன்கிழமையும் அநுஷ நட்சத்திரமும் கூடிய 3ம் நாளில் படைவீட்டு இராஜ்யத்தை சேர்ந்த அநேகவித்யையில் தேர்ந்த மஹாஜநங்கள் (மக்கள்) அக்கபுஷ்கரணி கோபிநாதர் (கடவுள் பெயர்) சந்நிதியில் தர்மவிதியாக ஒரு சட்டம் இயற்றி எல்லோரும் சம்மதித்து கையெழுத்தும் இட்டிருக்கிறார்கள். அச்சட்டம் கூறுவது என்னவென்றால் அப்படைவீட்டு இராஜ்யத்தில் இருக்கும் தமிழ், தெலுங்கு, கந்நட மற்றும் இலாட (குஜராத்தின் அன்றைய பெயர்) பிராமணர்கள், எந்த கோத்ரம், சூத்ரம் மற்றும் ஸாகையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கந்யாதானமாகவே பெண்ணை திருமணம் செய்துகொடுக்க வேண்டும். அதாவது பணம் பெற்றுக்கொண்டோ அல்லது பணம் கொடுத்தோ பெண்ணை திருமணம் செய்துகொடுக்கக்கூடாது. அப்படியில்லாமல் பணம் பெற்று அல்லது கொடுத்து பெண்ணைத் திருமணம் செய்விப்பவர்களை ராஜ தண்டனைக்கு உள்ளாக்கி, பிராமண சமூகத்திலிருந்து விலக்கப்படுவார்கள் எனவும் அச்சட்டம் கூறுகிறது. இதிலிருந்து அந்நாளிலும் வரதட்ஷிணை கொடுக்கும் அல்லது வாங்கும் வழக்கம் (இப்பொழுது போல் அல்லாமல் பெண்ணைப் பெற்றவர்களுக்கு பணம் கொடுத்திருக்கிறார்கள்) இருந்திருக்கிறது. அப்படி இருக்கக்கூடாது என்பதற்காக சட்டமியற்றியதையும் இக்கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.

this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.