http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 19

இதழ் 19
[ ஜனவரி 16 - பிப்ரவரி 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

அன்பினால் நினைந்தார் அறிந்தார்களே!
இராஜகேசரி-வாசகர் எண்ணங்கள்
இராஜகேசரி - புத்தக வெளியீடு
பழுவூர் - 8
பிரதிமாலட்ஷணம்
யசுகுனி ஜிஞ்ஜா
Gopalakrishna Bharathi - 5
மஹாவைத்தியநாத சிவன்
சங்கச் சிந்தனைகள் - 7
இதழ் எண். 19 > பயணப்பட்டோம்
யசுகுனி ஜிஞ்ஜா
ச. கமலக்கண்ணன்
"வீட்டுக்குத் தேவையான சாமான்கள் எல்லாம் இப்பவே வாங்கி வெச்சுக்குங்க. நியூ இயருக்கு முன்னால் இரண்டு நாட்கள், பின்னால் இரண்டு நாட்களுக்கு எந்தக் கடையும் இருக்காது"

"ஒசாகாவிலேயே ஷின்சாய்பாஷி யில்தான் அதிக அளவில் உணவகங்கள் இருக்கும். அங்கே இருக்கிற மக்கள்தொகையை விட உணவகங்களின் எண்ணிக்கைதான் அதிகம். ஆனால் நியூ இயர் விடுமுறையில் ஊரே வெறிச்சோடிக் கிடக்கும்"

"இந்த நியூ இயர் லீவில் உடம்புக்கு எதுவும் வராமப் பாத்துக்குங்க. மருத்துவமனை எல்லாம் நாலைஞ்சு நாளைக்கு லீவு"

"நாலைஞ்சு நாளைக்குத் தேவையான பணத்தை இப்பவே எடுத்து வெச்சுக்குங்க. வங்கிகள் மட்டுமல்ல. ஏ.டி.எம் கூட வேலை செய்யாது"

என்னடா இது! ஓவரா பயமுறுத்தறாங்களே! நிஜம்தானா? அலுவலகங்களுக்கு விடுமுறை விடுவது சரி! அத்தியாவசியப் பணியான மருத்துவமனைக்குக் கூடவா? வங்கி ஊழியர்களுக்குச் சரி! எதற்காக தானியங்கி இயந்திரங்களுக்கு ஓய்வு? என்னதான் எல்லாத் துறைகளிலும் உலகில் முதலிடத்தில் இருந்தாலும், வங்கிச் சேவைகளில் ஜப்பான் சற்றுப் பின் தங்கித்தான் இருக்கிறது. காசோலைகள் கிடையாது. இரவு எட்டு மணி வரைதான் ஏ.டி.எம்மில் பணம் எடுக்க முடியும். இந்திய வங்கிகள் இதைவிடப் பலமடங்கு சேவைகள் அளிக்கின்றன. சரி. அதை விடுவோம்! நம்ம வேலையைக் கவனிப்போம்.

பத்து நாட்கள் புத்தாண்டு விடுமுறையை எப்படிக் கழிப்பது என யோசித்துக் கொண்டிருந்தபோது, நண்பர் செந்தில் வினாயகம், 'டோக்கியோ வாருங்களேன்!' என்றார். சரிதான்! விடுமுறைக்கு விடுமுறையும் ஆச்சு! டோக்கியோவைப் பார்த்த மாதிரியும் ஆச்சு! ஒரே கல்லுல ரெண்டு மாங்கா' எனப் பாடிக்கொண்டே ஷிஞ்ஜுக்கு ரயில் நிலையத்தில் போய் இறங்கினேன்! நெடுநாட்களாகப் பார்க்க வேண்டும் என ஆவலுடன் கண்டு கொண்டிருந்த கனவு அன்று நிறைவேறியது. இரவில்தான் ஷிஞ்ஜுக்கு மிகவும் அழகு. எழுத்தாளர் தி.ஜானகிராமன் அவர்கள் தனது உதயசூரியன் பயணக்கட்டுரையில் 'ஷிஞ்ஜுக்குவுடன் ஒப்பிடும்போது நியூயார்க் நகரத் தெருக்கள் உறை போடக் காணாது!!' என எழுதியிருப்பார். அது முற்றிலும் உண்மை என அன்று உணர்ந்தேன். நீங்களே பாருங்களேன்! இந்தப் புகைப்படம் எடுப்பதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்புதான் இருமுறை அழையா விருந்தாளி வந்து போனார் என்றால் நம்ப முடிகிறதா? நிலநடுக்கத்தைத்தான் இவ்வூரில் அழையா விருந்தாளி என்கிறார்கள். திடீரென வந்தவரைக் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டால் தானாகவே சென்று விடுவார் அல்லவா? அதேபோலத்தான். நிலநடுக்கமா? வருகிறாயா? வா? எங்களுக்குக் கவலையில்லை. வந்தவழியே போய்விடு என்கிறார்கள். அதுவும் சேதம் எதுவுமின்றிப் போய்விடுகிறது.





நான்கைந்து நாட்கள் டோக்கியோவை வலம் வந்த பிறகு, ஒசாகா திரும்புவதற்கு முந்தைய நாள் எங்கள் ஜப்பானிய நண்பர் திரு. யூஜி நொகுச்சி அவர்கள், செந்திலின் செல்பேசியில் சிணுங்கினார். விடுமுறைக்குச் சொந்த ஊருக்குச் சென்றிருந்தவர், அடுத்த நாள் காலை டோக்கியோ திரும்புவதாகக் கூறினார். நான் டோக்கியோவில் இருப்பதை அறிந்ததும், நாம் மூவரும் சேர்ந்து எங்காவது செல்லலாம் என்றார். அதற்கென்ன போனால் போச்சு, எங்கே போகலாம் எனக்கேட்டோம். நம் வரலாற்று ஆர்வத்தைப் பற்றி அவருக்குத் தெரியுமாதலால், யசுகுனி என்ற இடத்தில் ஒரு பழங்காலக் கோயில் இருக்கிறது. போகலாமா? என்றவுடன் நமக்கு மூளையில் பல்பு எரிந்தது. ஆஹா! பலபேர் பலதடவை இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். கடைசியில் எத்தனை வருடப் பழமை என்று கேட்டால், அதெல்லாம் ஐம்பது அறுபது வருடங்களுக்கு மேல் இருக்கும் என்றோ, நான் பிறப்பதற்கு முன்பிருந்தே இருக்கிறது என்றோ வியந்து கூறுவர், ஏதோ ஆயிரம் வருடம் வாழ்ந்தது போல! எங்களுக்கெல்லாம் பழமை என்றால், முதலாம் இராஜேந்திரர் வரைதான். மூன்றாம் குலோத்துங்கர் வரை ஓரளவுக்குப் பழமை என ஏற்றுக்கொள்வதுண்டு என்பது பலருக்குத் தெரியாது என்பதால்தான் இப்படிப்பட்ட பதில் கிடைக்கிறது. எனவே, முன்னெச்சரிக்கையாக, எப்பொழுது கட்டப்பட்டது என்பதையும் கேட்டு வைத்தேன். ஆயிரம் வருடங்களுக்கு மேல் என்றார். அட்ரா சக்கை! சோழர் கைவண்ணத்தைத்தான் காணமுடியாது! ஜப்பானியர்களின் கலைத்திறமையைக் கண்டுவரலாம் எனப் புறப்பட்டோம். அப்படியே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அஸ்தி வைக்கப்பட்டுள்ள இடமும் ஷிஞ்ஜுக்கு அருகில் உள்ளது. முடிந்தால் அதையும் பார்த்துவிட்டு வரலாம் என இன்னொரு பழத்தையும் பாலில் நழுவவிட்டார்.

ஹன்சமோன், ஷிஞ்ஜுக்கு மற்றும் தோசாய் லைனில் இருக்கும் குதான்ஷிடா என்ற ரயில் நிலையத்தில் இறங்கி, முதலாவது வாயிலின் வெளியே (இதெல்லாம் ஜப்பானில் வசிக்கும் நேயர்கள் வசதிக்காக) வந்ததும் கண்முன்னே விரியும் பூங்காவின் நடுவில் இருக்கிறது கோயில். புத்தாண்டுக்கு அடுத்த நாளாகையால், கூட்டம் நிரம்பி வழிந்தது. ஸ்டேஷனிலிருந்து கோயிலுக்குப் போகும் வழியெங்கும் கடைகள்தான்! எதற்காக உணவகங்களுக்கெல்லாம் நான்கைந்து நாட்கள் விடுமுறை என இப்போதுதான் புரிந்தது. குழந்தைகளுக்கான விளையாட்டுச் சாமான்களிலிருந்து பெண்களுக்கான அலங்காரச் சாதனங்கள் வரை அனைத்தையும் குவித்து வைத்து, கூவிக்கூவி விற்றுக் கொண்டிருந்தார்கள். வந்தியத்தேவனும் தயிர்க்காரியும் ஓடிப்பிடித்து விளையாடிய தஞ்சாவூர் அரண்மனைக் கடைத்தெருவை நினைவூட்டியது. சற்று தூரம் நடந்ததும், 'பை' (22/7) வடிவில் இருந்த ஒரு வளைவு வரவேற்றது. அதுதான் இந்நாட்டுக் கோபுரம். தோரீ என அழைக்கிறார்கள். தமிழகத்துக் கோபுரவளர்ச்சியின் ஆரம்பகட்ட வடிவம் என திரு.குடவாயில் பாலு அவர்கள் தனது கோபுரக்கலை மரபு நூலில் குறிப்பிட்டிருப்பார்.



இந்து மதத்தைப் போலவே, இவர்களின் ஷிண்டோ மதத்திலும், அரசர்களைக் கடவுளின் அம்சமாகக் காண்கிறார்கள். கோயிலைச் சுற்றி வந்ததில் சுவாரசியமான பல விஷயங்கள் கண்ணில் பட்டன. நம் வழிபாட்டு முறைக்கும் ஜப்பானியர்களின் வழிபாட்டு முறைக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

1. உண்டியல். காணிக்கை போடுவதற்கும் உண்டியல் இருக்கிறது. வீட்டிற்கு வாங்கிப்போய்ச் சேமித்து வைக்கவும் அதிர்ஷ்ட உண்டியல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு படம் போட்ட உண்டியலும் ஒவ்வொரு விலை. அதிக விலைக்கு அதிக அதிர்ஷ்டம் ;-)

2. ஊதுபத்தி. கற்பூரம் மற்றும் எண்ணெய் விளக்கேற்றுவதில்லையானாலும், ஊதுபத்தி ஏற்றி வழிபடுகிறார்கள். 100 யென் கொடுத்து ஒரு கட்டு வாங்கி, அதற்கென்று தனியாக உள்ள இடத்தில் பற்றவைக்கலாம்.

3. தெப்பக்குளத்தில் காசு போடுதல். நம்மூர் அளவிற்குப் பெரியதாக இல்லாவிட்டாலும், மதுரை பொற்றாமரைக்குளத்தைப் போல், நடுக்குளத்தில் ஒரு சிறு அறை இருக்கிறது. குளத்தினுள் இறங்கி யாரும் கைகால் அலம்புவதில்லை. குழாய் வழியாக வரும் தண்ணீரில் வெளியேதான் எல்லாம். இதிலும் காணிக்கையாகக் காசை வீசி எறிகிறார்கள்.

4. வேண்டுதல். நம் ஊரில் மரத்தில் தாலியைக் கட்டி எண்ணிய காரியம் முடிய வேண்டுவது போல் இங்கும் சீட்டு கட்டுகிறார்கள். திருமணம், அதிக சம்பளம், உடல்நலமில்லாத உறவினர் தேறுதல் எனப் பலவகையான வேண்டுதல்கள் சீட்டு வடிவில் கட்டப்பட்டிருக்கின்றன.



இது ஒரு புறமிருக்க, இன்னொரு புறத்தில் பீரங்கிகளும் போர் விமானங்களும் இருந்தன. அமெரிக்காவின் விமானப் படைத்தளம் நகோயாவில்தானே இருக்கிறது? மற்ற நாடுகளுக்கு விற்பது போதாதென்று திருவிழாக்களிலும் கடைகளை வைத்து அமெரிக்கா விற்க ஆரம்பித்து விட்டதா! என யோசித்துக்கொண்டே நொகுச்சியைப் பார்த்தேன். இது இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் பயன்படுத்திய ஆயுதங்களின் மாதிரிகள், உதிரிகள் மற்றும் மீதிகள். சீட்டு வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தோம். அற்புதமான அரிய பொருட்கள். உலகப்போர்கள் மட்டுமல்ல. ஜப்பானின் 2000 வருட வரலாறுமே ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்கிறது. நாம் தமிழகத்தைச் சங்ககாலம், சங்கம் மருவியகாலம், பல்லவர், சோழர், பாண்டியர் காலம் எனப் பிரிப்பதைப் போல, ஜப்பானையும் பிரித்து வைத்திருக்கிறார்கள்.



கி.மு 3 ஆம் நூற்றாண்டு வரை கற்காலம். இக்காலகட்டத்தில் ஆதிவாசிகள் வேட்டையாடுதல் மற்றும் மீன் பிடித்தல் ஆகியவற்றையே முக்கியத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர். இதை ஜோமோன் காலம் என்கின்றனர்.

கி.மு 3 முதல் கி.பி. 3 வரை (நம் சங்க காலம்) நிலப்பிரபுக்கள் காலம். இக்காலத்தில்தான் விவசாயம் அறிமுகப்படுத்தப்பட்டது. அரிசி பயிரிடும் முறை கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. உலோகங்களைப் பயன்படுத்த ஆரம்பித்ததும் இப்போதுதான்.

கி.பி 3 முதல் கி.பி 6 வரை கோஃபுன் காலம். கி.பி 4 ஆம் நூற்றாண்டில்தான் ஆயிரக்கணக்கான குட்டித்தீவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஜப்பான் என்ற முழு நாடு உருவானது. நரா என்ற இடம் தலைநகராகத் தேர்வு செய்யப்பட்டது.

கி.பி 6 முதல் கி.பி 8 வரை யமாதோ காலம். இதை ஜப்பான் வரலாற்றில் ஒரு திருப்புமுனை எனக்கூறலாம். புத்த சமயம் பரவ ஆரம்பித்தது. சீனாவிடமிருந்து எழுத்துருக்கள் கடன் வாங்கப்பட்டன. இக்காலகட்டத்தின் வளர்ச்சியில் ஷோதொக்கு என்ற இளவரசருக்குப் பெரும் பங்கு உண்டு.

கி.பி 8 முதல் கி.பி 11 வரை ஃபுஜிவாரா காலம். ஷோதொக்கு அமைத்துக் கொடுத்த வளர்ச்சிப்பாதையில் ஃபுஜிவாரா வம்சம் ஜப்பானை முன்னேற வைத்தது. தலைநகரம் கியோட்டோவுக்கு மாற்றப்பட்டது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் கியோட்டோ தலைநகராக இருந்தது.

கி.பி 11 முதல் கி.பி 13 வரை சமுராய் காலம். ஃபுஜிவாரா வம்சம் சரியத் தொடங்கியதையடுத்து, நிலப்பிரபுக்கள் தங்களைக் காத்துக்கொள்ள படைவீரர்களை வேலைக்கு அமர்த்திக்கொண்டனர். இப்படைவீரர்கள்தான் சமுராய் எனப்படுபவர்கள். ஒரே அரசரின் கீழ் பணிபுரிந்த படைவீரர்கள் பல நிலப்பிரபுக்களிடம் சென்று விட்டதால், பிரபுக்களுக்கு இடையிலான சண்டை உள்நாட்டுப் போர்களாக உருவெடுத்தது.

கி.பி 12ம் நூற்றாண்டின் இறுதியில் கெம்பெய் போர் என்ற பங்காளிச் சண்டையின் முடிவாக ஷோகன் வம்சம் கமகுரா என்னுமிடத்தில் ஏற்பட்டது.

கி.பி 14 முதல் கி.பி 18 வரை ஏகப்பட்ட உள்நாட்டுப்போர்கள் நடைபெற்றன. லட்சக்கணக்கானோர் பலியாயினர். 16ம் நூற்றாண்டின் மத்தியில் கிறிஸ்தவ மதம் நுழைந்தது. தமிழ்நாட்டில்தான் உள்நாட்டுப் போர்கள் நடைபெற்றன என்றில்லை. ஜப்பானிலும் உண்டு. ஒரு மன்னனை இன்னொரு மன்னன் சீனர்களிடம் காட்டிக்கொடுத்த எட்டப்பத்தனமும் இங்குண்டு.

கி.பி 18 முதல் 2ம் உலகப்போர் வரை தனது இணையற்ற படைவலிமையால் மற்ற நாடுகளின் மீது படையெடுத்து ஆடாத ஆட்டமெல்லாம் ஆடத்தொடங்கியது. சீனா, ரஷ்யா முதலிய நாடுகளின் மீது படையெடுத்தும் சிங்கப்பூர் போன்ற சிறுநாடுகளைக் கைப்பற்றியும் வல்லரசாக வளரத்தொடங்கியது.

2ம் உலகப்போருக்குப்பின் ஜப்பானின் நடவடிக்கைகள் அடியோடு மாறிவிட்டன. ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அணுகுண்டு வீச்சில் நிலைகுலைந்து போனது. கலிங்கத்துப்போரின் விளைவால் போரை வெறுத்த அசோகர் போல் ஜப்பானியரும் போரை வெறுக்கத் தொடங்கினர். பொருளாதாரத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். Made In Japan என்ற வார்த்தைக்குப் புது அர்த்தம் பிறந்தது.

இதையெல்லாம் பார்த்துவிட்டு, நண்பர் நொகுச்சியைத் தேடினால், ஒரு அறையில் நின்று அழுது கொண்டிருந்தார். என்னவென்று பார்க்கப்போக, இரண்டாம் உலகப்போரின்போது இறந்த வீரர்களின் புகைப்படங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அந்த அறையினுள் நுழையும் ஜப்பானியர்கள் ஒவ்வொருவருமே வெளியே வரும்போது கலங்கிய கண்களுடன் தான் வருகின்றனர். இன்றைய எங்களின் வாழ்க்கைப்பயிர் இம்மாவீரர்களின் உடல்களை உழுது இரத்தத்தைப் பாய்ச்சி விளைவிக்கப்பட்டது என்று நெகிழ்ந்து போகிறார்கள். அவரை ஒருவாறு தேற்றி, வெளியில் அழைத்து வந்து, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவிடத்துக்குச் சென்றோம்.

குதான்ஷிடாவிலிருந்து ஷிஞ்ஜுக்கு சென்றடைந்து, டாக்ஸி டிரைவர், பெட்டிக்கடை, பெட்ரோல் பங்க் என வழி கேட்டு அலைந்து, ஒரு வழியாக ஷிஞ்ஜுக்கு சாஞ்சோமே ரயில் நிலையத்தின் மேற்கு வாயிலின் அருகில் கண்டுபிடித்தோம். வாசலிலேயே எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் கோயில்தான் பூட்டியிருந்தது. கேட்டால், நியூ இயர் விடுமுறையாம். ஜனவரி 5ம் தேதிதான் திறப்பார்களாம். கோயிலுக்குக் கூடவா? அடப்போங்கடா! நீங்களும் உங்க விடுமுறையும்!

நேதாஜி இறந்தது எப்படி என்கிற விஷயமே பல சர்ச்சைகளுக்குள்ளாகி இருக்கும்போது, அவர் அஸ்தி இருக்கிற இடத்தைக் காண ஆவலாய் இருந்த எங்கள் ஆசை தோசையாகி விட்டது. இது நேதாஜியின் அஸ்திதான் என்பதற்கு என்ன சான்று எனக்கேட்டால், தெரியவில்லை. உள்ளே பார்த்தால் தெரியும் என்றார். நேதாஜியின் மனைவி, மகள் மற்றும் உறவினர்களும் அவரது பிறந்தநாளன்று இங்கு வந்து போகிறார்களாம். ஜவஹர்லால் நேருவும் இந்திராகாந்தியும் பிரதமர்களாக இருந்தபோது இங்கு வந்திருக்கிறார்கள். இன்னும் நம் அரசாங்கம் அஸ்திக் கலசத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறதாம்.

என்ன நடக்கிறதோ! ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!!

அடுத்தமுறை டோக்கியோ செல்லும்போது, பார்த்துவிட்டு வந்து அதைப்பற்றி எழுதுகிறேன். நேதாஜியின் பிறந்தநாளன்று (ஜனவரி 23) போகலாம் என்றால், விடுப்பு கிடைக்கவில்லை. முடிந்தால் டோக்கியோவில் இருக்கும் நண்பர்கள் யாராவது சென்று பார்த்து editor@varalaaru.com க்கு ஒரு மின்னஞ்சல் தட்டவும்.

this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.