http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 25
இதழ் 25 [ ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2006 ] இந்த இதழில்.. In this Issue.. |
அன்புள்ள வாருணி,
நேற்று இரவு இப்படியொரு இன்பமான அதிர்ச்சி எனக்கு ஏற்படும் என்று விடியலில் விழித்தபோது நான் நினைக்கவில்லை. இரவு மணி ஒன்பதரை இருக்கும். தொலைபேசி அழைத்தது. எடுத்தால், எதிர்முனையில் வெண்பாப் புலி. 'சிராப்பள்ளிக்கு வந்து நீங்களே உங்கள் கட்டுரையை டாட் காம் இதழில் இணைக்குமாறு வழிமுறைகள் கற்றுத்தருகிறேன்' என்று 'புலி' சொல்லிப் பல திங்கள்கள் பறந்துவிட்டன. 'அவரைப் பிடிப்பது கஷ்டம் சார். வீட்டுக்கு வரவே நள்ளிரவு ஆகிவிடுகிறது' என்று ஒருமுறை, 'புலி'யைப் பற்றி ராம் கூறியதை நான் மறந்துவிடவில்லை. புதுமாப்பிள்ளை! ஏற்கனவே காலத்தாழ்வாக வீடு திரும்புகிறார். திரும்பிய பிறகு அவரைத் திசைதிருப்புமாறு போல எதற்குப் பேசுவதென்று நான் தொடர்பு கொள்வதை, விரும்பியே தவிர்த்துவந்தேன். தொடர்புகொள்ள முடியாதவர் என்றும் தொடர்புக்கருவிகள் இருந்தும் அவற்றை முடிந்தவரை பழுதாகவே வைத்துக்கொள்பவர் என்றும் 'புலி'யைப் பற்றி வருந்துவாரும் உண்டு. அப்படிப்பட்ட பெருமைக்களுக்குரியவர் நேற்றிரவு தொலைப்பேசி, டாட் காம் ஜூலை இதழிற்கு உங்கள் கட்டுரை வரவில்லையே என்று வருந்தியபோது, எனக்குச் சுற்றும் புரியவில்லை; சுழலும் புரியவில்லை. 'யார், கிருபாதானே?' என்று ஒருமுறைக்கு இருமுறை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே பேச்சைத் தொடர்ந்தேன். இந்தத் திங்கள் பல பணிகள் வாருணி. அதனால், பெரிதும் விழைந்தும் டாட்காமிற்கு எழுதக்கூடவில்லை. அடுத்தமுறை எழுதிக்கொள்ளலாம் எனக் கருதியிருந்தேன். ஆனால் 'வெண்பா'வே தொலைபேசிய பிறகு 'கலை' சும்மாயிருக்க முடியுமா? அதனால்தான் இன்று முதல் வேலையாக உனக்கு எழுத அமர்ந்தேன். எழுத எவ்வளவோ இருக்கிறது வாருணி. இருந்தாலும், மிக முக்கியமான ஒன்றை உன்னுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். என் வாழ்வரசியுடன் மேட்டுப்பாளையம் சென்றிருந்தேன். அவர் அங்குள்ள கண்மருத்துவப் பள்ளியொன்றிற்குத் தேர்வாளராக அழைக்கப்பட்டிருந்தார். தேர்வு முடித்துவிட்டு நாங்கள் இருவரும் உதகமண்டலம் சென்றோம். முதுமலை செல்லவேண்டும் எனப் பல காலம் கருதியிருந்ததால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விழைந்தோம். 10 ஜூலை 2006 திங்கள் காலை உதகமண்டலத்திலிருந்து புறப்பட்டுக் 'கல்லட்டி' வழியாக முதுமலை சென்றோம். அருமையான சாலை. கூடலூர் வழியாக முதுமலை செல்வதினும் இது சுருக்கமான, எளிதான வழி. முதுமலைக்குச் சற்று முன்னாலுள்ள பெரிய ஊர் மசினக்குடி. இவ்வூரின் அருகே தனியார் சுற்றுலாக் குடில் வளாகங்கள் பல உள்ளன. நாங்கள் Blue Valleyஇல் தங்கச் சென்றோம். மிக உயரமான மலைகளுக்கு எதிரே காட்டுப்பகுதியில் குடில்கள். அருமையான சூழல். திங்கட்கிழமை என்பதால் எங்களையும் சேர்த்து இரண்டு குடில்களில் மட்டுமே ஆட்கள். குடில் வளாக மேலாளர் தங்களுடைய 'காட்டுச் சுற்றுலா' தெருச்சுற்றுலாதான் என்றும் உண்மையாகவே காட்டுக்குச் செல்ல விழையின் முதுமலை சரணாலயச் சுற்றுலாவை மேற்கொள்ளுமாறும் கூறவே, நாங்கள் மதிய உணவு முடித்து முதுமலை சென்றோம். அங்கே காட்டுத்துறை அலுவலகம் உள்ளது. நாங்கள் சென்றபோது பகல் 2.15. பயணச் சீட்டுத் தரும் இடம் அடைபட்டிருந்தது. அங்கிருந்த காவலரிடம் கேட்டபோது பயணம் புறப்படும் போது சீட்டுத் தரப்படுமென்று கூறி அங்கிருந்த நீள இருக்கைகளுள் ஒன்றில் அமரச்சொன்னார். நாங்கள் அமர்ந்த இடத்திற்கு எதிரில் மைசூர்ச் சாலை. அந்தச் சாலையின் இடப்புறம் ஓட்டல் தமிழ்நாட்டின் கட்டடம். அதன் முன் நதியோட்டம். சூழல் அருமையாக இருந்தது. நான் என் வாழ்வரசியுடன் அங்குச் சென்றேன். முதுமலைத் தங்கும் விடுதியாகச் செயல்பட்ட அந்த ஓட்டலின் அறைகளைக் கான விழைந்தேன். அங்கிருந்த அன்பரும் காட்டினார். 'ஏன் பார்த்தோம்?' என்றாகிவிட்டது. முற்றிலும் நலமற்ற சூழலில் அந்த அறை இருந்தது. அதை வர்ணித்து உன் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அன்பரிடம் கேட்டு வருந்தியபோது, 'விரைவில் சரிசெய்யப்படும்' என்றார். விரைந்து காட்டுத்துறை அலுவலகம் வந்தோம். பயணிகள் பெயர்களைப் பதிவுசெய்வது முதல் நிலையாக அமைந்ததால் நானும் சென்று பெயர்களைப் பதிவுசெய்தேன். பிறகு பெயர்கள் அழைக்கப்பட்டுச் சீட்டுகள் தரப்பட்டன. எதற்கு இதுபோல் இரு நிலைகள் எனக் கேட்டபோது யாரும் மறுமொழி கூறவில்லை. 'இதுதான் இங்கு வழிமுறை' என்பதே விடையாக இருந்தது. சிற்றுந்தில் பயணித்தோம். வழிகாட்டியாகக் காவலர் ஒருவர் வந்தார். 'விருப்பமற்ற பணி' மேற்கொண்டவர் போல் அவர் முகமிருந்தது. தொடக்கவுரை ஒரு நிமிடத்தில் முடிந்தது. மேல் தகவல்கள் பெற ஆர்வம் கொள்ளமுடியாதபடி அவர் முகம் அச்சுறுத்தியது. தொடக்கத்திலேயே தொல்லைகள் வேண்டாமெனப் பயணம் மேற்கொண்டோம். இருபத்தாறு பயணிகளுடன் புறப்பட்ட சிற்றுந்து மைசூர் சாலையில் சற்றுத் தொலைவு ஓடிக் காட்டுக்குள் நுழைந்தது. வழியில் மான்கள் காட்டினார்கள். ஒரு நிமிட நேரமே நிறுத்திக் காட்டினார்கள். சிலர் சரியாகப் பார்க்கவில்லை. பெரும்பாலோர் படமெடுக்கக் கூடவில்லை. 'காமிரா'வுக்குத் தனியே சீட்டுத் தொகை பெற்றுச் சீட்டுத் தருகிறார்கள் என்பதை இங்குக் கூறியாக வேண்டும். காட்டுக்குள் இருந்த வழித்தடத்தில் சென்றோம். எங்குமே ஓரிரு நிமிடங்களுக்கு மேல் வண்டி நிற்கவில்லை. கவுர், காட்டுப்பன்றி, மான்கள், கழுகு பார்த்தோம். திடீரென ஓரிடத்தில் நிறுத்தி மோயாறு நீர்வீழ்ச்சி என்றனர். எழுந்து பார்த்தபோது அழகான நீர்வீழ்ச்சி படமாகியது. படமெடுக்க முயன்றபோது வண்டி புறப்பட்டது. நன்றாகப் பார்க்கக்கூட முடியவில்லை. 'கடுமுடு' என இருந்த வழிகாட்டியின் முகம் எதுவும் கேட்க அநுமதிக்கவில்லை. ஏதோ எங்களுக்குப் பிச்சை போடுவது போலவே நாற்பத்தைந்து நிமிடங்களில் அந்தப் பயணம் முழுவதும் நடந்து முடிந்தது. ஒரு சில மாதங்களுக்கு முன்னால் மைசூருக்கு அருகிலுள்ள Jungle Lodgeன் கீழ்ச் செயல்படும் கபினிக்குடில் வளாகம் சென்றிருந்தோம். அங்கும் காட்டிற்குள் அழைத்துச் சென்றார்கள். இரண்டு மணிநேரப் பயணம். வழிகாட்டி இனிய நண்பராய் விளங்கினார். குழைந்தைகளிடம் குழந்தையாகப் பழகினார். தொடக்கவுரை பத்து நிமிடம் இருந்தது. அந்தக் காட்டைப் பற்றியும் அங்கு வாழ் விலங்குகள் பற்றியும் விரிவான உரை. விலங்குகள் தென்பட்ட இடங்களில் நன்கு பார்க்கவும் படமெடுக்கவும் நிறைய நேரமளித்தனர். விலங்குகளைத் தொல்லை செய்யக்கூடாது என்பது தவிர வேறெந்தத் தடையும் இருக்கவில்லை. அருமையான பயணமாக அது அமைந்தது. அப்பயணத்துடன் முதுமலைக் காட்டுத் துறையினர் பயணத்தை ஓப்பிடவே முடியாது. முதுமலையிலிருந்து விடுபட்டு Blue Valley வந்ததும் அவர்களுடைய விலங்குக் காணலில் கலந்துகொண்டோம். ஜீப்பில் அழைத்துச் சென்றார்கள். இதுவும் இரண்டு மணிநேரப் பயணம்தான். ஓட்டுநர் ஒருவரும் துணைவர் ஒருவரும் இருந்தனர். மிக்க அன்புடன் நடத்தினர். முதுமலை செல்லும் வழியிலேயே பல விலங்குகளைக் காட்டினர். சிங்காரா செல்லும் வழியில் மேலும் சில விலங்குகள் பார்த்தோம். சிங்காராவிலிருந்து வரும் நீரோட்டத்தின் அருகே சற்று நேரம் நிறுத்தினார்கள். இரவு ஏழுமணியாகிவிடவே எங்கும் இருள் சூழத் தொடங்கியிருந்தது. அமைதியான முல்லை நிலம். நிலவொளி. சலசலத்து ஓடும் நீரோடை. மயக்கும் சூழல். பத்து நிமிடங்கள் அங்கிருந்தோம். உடன் வந்த இருவரும் இளைஞர்கள். துடிப்போடும் ஆர்வத்தோடும் பயணத்தை நடத்தித் தந்தார்கள். முதுமலைக் காட்டுத்துறை ஏற்படுத்தியிருந்த ஏமாற்றம் இவர்களால் நன்கு நிறைவு செய்யப்பட்டது. குடிலுக்குத் திரும்பியதும் இரவு உணவு. குடிலின் புறத்தே அமர்ந்து மலைச் சூழலில் காட்டை அநுபவித்தபடி நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். குறிஞ்சி, முல்லை என்ற நிலப்பாகுபாடுகளை மிக நுண்மையாக உணர்ந்தோம். சங்கத் தமிழர்கள் நிலத்தோடும் பொழுதோடும் ஒன்றி வாழ்ந்த வாழ்க்கையே என் உள்ளமெல்லாம் பரவி நின்றது. காலையில் எழுந்து குடில்கள் அமைந்திருந்த காட்டுப்பகுதியில் நடைபயின்றேன். மிக இன்பமாக இருந்தது. உடன்போக்குச் சிந்தனைகளும் தலைவியரின் எதிர்ப்பார்ப்பு அவலங்களும் அந்த முல்லைப் பயணத்தைக் கருத்துள்ளதாக்கின. புதர்கள் நிறைந்த மணற்பாங்கான காடு. ஒரு மணி நேரம் பரவி நடந்து மகிழ்ந்து திரும்பினேன். காலை உணவிற்குப் பிறகு சிங்காரா சென்றோம். நீலமலை அடிவாரத்தில் உள்ள நீர்மின் திட்ட அமைப்பு இது. மசினக்குடியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவு. அங்குச் சென்றபோது திரு. சோமசுந்தரம் அறிமுகமானார். இனிய மனிதர். அவரே உயர் அலுவலர்களிடம் அநுமதி பெற்று உள்ளழைத்துச் சென்றார். கிளென்மார்க் எனப்படும் மலையுச்சிப் பகுதியிலுள்ள நீர்த்தேக்கத்திலிருந்து மலை வழிக் குழாய்கள் மூலம் சிங்காராவுக்கு நீர் வந்து விழுந்து மின்சக்தி தருகிறது. அருமையான சூழல். தேநீருடன் அநுபவித்தோம். அவரிடம் விடைபெற்று மீண்டபோது மணி பத்து. மீண்டும் கல்லட்டி வழியாக உதகமண்டலம் வந்து சிராப்பள்ளித் திரும்பினேன். அன்புடன், this is txt file
இரா கலைக்கோவன். |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |